Wednesday, 28 August 2013

இஸ்லாத்தின் நிழலில் .....
பேறு பெற்ற பெண்ணினம்!
CONSERVATIVE FEMINISM– கன்ஸர் வேட்டிங் ஃபெமினிஸம் இது இன்றைய மேலை நாட்டு சிந்தனையாளர்களின் ஒட்டு மொத்த குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதை ஊடகத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
CONSERVATIVE FEMINISM – என்றால் என்ன என்பதை பிரபல தமிழ் பெண் எழுத்தாளர் சிவசங்கரி 6-20-1992 இந்தியா டுடே இதழில் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.

பழமை எண்ணங்களில் நம்பிக்கை கொண்ட பெண்ணரிமை
அவசியம் என்பது தான் அதன் பொருள்.
அதாவது, மனிதாகளில் ஆண் என்ன? பெண் என்ன? இருவருமே ஒன்றுதான் என  - (எண்ணுவதை)- (பெண்ணியம் பேசுவதை) விட்டு விட்டு, இயற்கையின்படி ஆணும், பெண்ணும் வெவ்வேறு இயல்புடையவர்களே
இதை ஏற்று, எனக்கென்று குடும்பத்திலும், சமுதாயத்திலும் உள்ள பொறுப்புகளை உதறித் தள்ளாமல் அதே சமயம் நான் நானாக இருக்க அவசியமான தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு, எனக்குரிய இடம் மரியாதைப்பெறுவேன்! என்பதே! CONSERVATIVE FEMINISM – என்பதின் சித்தாந்தம் என்று விரிவாக விளக்கம் கூறியிருந்தார்.
ஒரு காலத்தில் பெண்ணியம், பெண் சம உரிமை என்று முழங்கியவர்களாலேயே இந்த புதிய கோஷமும் முன்வைக்கப்படுவதின் பிண்ணனியில் இருப்பது இதுதான்
பெண்ணிமை என்பது ஆண்களைப் போன்றே பெண்களும் எல்லாத்தன்மையும் பெற்றவர்கள் என்கிற எண்ணம் உருவாகி, சமுகத்தில் அதனால் உண்டான விளைவுகளின் தாக்கமே!
பெண்ணுடன் பெண் உடலுறவு (லெஸ்பியன்)
விரும்பிய ஆண்களுடன் உடலுறவு
குழந்தை பெற மறுக்கும் சூழ்நிலை
திருமணம் தேவையில்லை என்கிற முழக்கம்
சிகரெட், கஞ்சா, மது, ஹெராயின் போன்ற போதை பழக்கத்திற்கு அடிமைபட்டு கிடப்பது.
-என பெண்களின் இந்த அவல நிலைகளைக்கண்டு பதறியதன் விளைவே இந்தப்புதிய கோஷம்.
ஆனால்,
     இஸ்லாத்தின் நிழலில் இந்தப் பெண்ணினம்
     பெற்ற பேறுகள் தான் எத்தனை?
இஸ்லாம் பேசிய அளவு, வழங்கிய அளவு, வேறெந்த மதமும் பெண்ணுரிமை குறித்து பேசிடவுமில்லை, பெண்ணுரிமையை வழங்கிடவுமில்லை – என்றபோதிலும்

இந்த இஸ்லாம் குறித்த மாற்றுக் கருத்து கொண்ட ஆரோக்கியமற்ற விமர்சன சமூகம் காலம் காலமாய் இஸ்லாம் பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதில்லை, வழங்கியதுமில்லை. பெண்களின் உணர்வுகளை அது மதிப்பதில்லை.
     பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் உயர்வுக்கு திரையாகவும் இருக்கிறது என்கிற அவதூறு மலங்களை அள்ளி வீசுகின்றனர்.
     ஒரு பறவையின் உயிர் கூட அதன் உரிமையைப் பேணி அறுக்கப்பட வேண்டும் என உரிமைகளை உயர்வாய் வலியுறுத்துகிற உன்னத மார்க்கம் இஸ்லாம். பெண்களின் உரிமையை தர மறுக்கிறது என்று சொல்வது எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு. இஸ்லாம் அனைத்து விஷயங்களிலும் அனைவாகளின் உரிமைகளையும் நேர்மறை எண்ணத்தோடு வழங்கியுள்ளதையும், உலகில் வேறெந்த மதமும், கொள்கையும் கொடுக்காத உரிமைகளையெல்லாம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கி, கண்ணியம் சேர்த்திருப்பதையும், இந்த விமர்சன வியாபாரிகளுக்கு நினைவுட்ட முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

உயிர் வாழும் உரிமை
     பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொன்று வந்த இந்த சமூகம் தற்போது கருவிலேயே கொன்றொழிக்கும் முறையை, பெண்ணுரிமை பெரிதாய் பேசப்படுகிற இந்தக் காலத்திலும் நடைபெற்று வருவதை காணலாம்.
     இஸ்லாம் தன் அறிவொளியை வீச ஆரம்பித்த காலக்கட்டம் மடமைத் தனத்தின் உச்சத்தில் பயணித்து கொண்டிருந்த அரபுலக மாந்தர்களும் இந்த ஈவு இரக்கமற்ற பெண்சிசுக் கொலையை சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருந்த வேளையில்.....

     நபியே! அம்மக்களை அழைத்துக் கூறிவிடும். வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகின்றேன். (அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். மேலும் பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும் வறுமைக்கு பயந்து உங்கள் (பெண்) குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிப்போம்.
அல்குர்ஆன் 6-151
     எனும் இறைவசனத்தின் மூலம் அவர்களின் இதயத்தில் நிறைந்திருந்த பெண் குழந்தைகளின் மீதான இறுக்கத்தை தளர்த்துமாறு அறிவுறுத்துகின்றான். இரண்டாம் கட்டமாக.....

     மேலும் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் நாமே உங்களுக்கும் உணவளிப்போம் அவர்களுக்கும் உணவளிப்போம் திண்ணமாக அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.
அல்குர்ஆன் 17-31
     எனும் இறைவசனத்தின் மூலம் பெரும் பாவமென பிரகடனப்படுத்தி எச்சரிக்கிறான்.
அடுத்த கட்டமாக.........

     உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் அவள் எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? என வினவப்படும்போது?
அல்குர்ஆன் 81-8,9
     மறுமை நாளின் பயங்கரத்தை விவரிக்கும்போது சிசுக் கொலை இறைவனால் மஹ்ஷா பெருவெளியில் விசாரிக்கப்படும் மாபாதகச் செயல் என அவசியத்தை முற்றிலுமாக மனித சமூகம் விலகிச் செல்ல வேண்டியதன் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

     எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவன் அதை அறியாமைக்கால வழக்கபடி உயிரோடு புதைக்கவில்லையோ அதனை இழிவாக்க் கருதவில்லையோ அதைக் காட்டிலும் ஆண் மக்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லையோ அத்தகைய மனிதனை அல்லாஹ் சுவனத்தில் நுழையச்செய்வான்.
நூல் – அபுதாவுத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்     எந்த மனிதன் மூன்று பெண்மக்களை அல்லது மூன்று சகோதரிகளைப் பராமரித்து கல்வியும், ஒழுக்கப்பயிற்சியு அளித்து அவர்களை தன்னிறைவு உடைய்வர்களாய் அல்லாஹ் ஆக்கிவிடும் வரை அவர்களுடன்  கருணையுடன் நடந்து கொள்கின்றானோ அத்தகைய மனிதனுக்கு அல்லாஹ் சுவனத்தை விதித்துவிட்டான். இதனைக் கேட்ட ஒருவர் இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? என்று வினவினார். ஆம்! இரண்டு பெண் மக்களைப் பராமரித்தாலும் இந்த சோபனம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
     அறிவிப்பாளா- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஒரே ஒரு பெண்ணை பராமரித்து ஆளாக்கினாலும் இந்த சோபனம் கிடைக்குமோ என கேட்டிருந்தால் அப்போதும் அண்ணல் நபிகளார் இதே சோபனத்தை தான் கூறியிருப்பார்கள்.
நூல்-மிஷ்காத்
     ஆக விஞ்ஞான வளர்ச்சியாலும் அறிவியல் பயன்பாட்டினாலும் உச்சத்தை அடைந்திருக்கின்ற நாகரீக உலகத்தில் பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்திட இயலாத போது 1400 ஆண்டுகளுக்கும் முன்பாகவே பெண்கள் உயிர்வாழும் உரிமையை பெற்றுத் தந்து உயிருக்கு உத்தரவாதம் அளித்த உன்னத மார்க்கம் இஸ்லாம் தான்.
     ஆண்களுக்கு சரிநிகராக கல்வி கற்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறுனார்கள்
     கல்வியை (அறிவை) தேடி பெற்றுக் கொள்வது முஸ்லிமின ஆண்க்களின் மீதும் பெண்களின் மீதும் கட்டாயக் கடமையாகும். எனக்கூறி கல்வியறிவின் அவசியத்தை மாநபி (ஸல்) அவர்கள் கடமையென அறிவுறுத்திகிறார்கள்.
     இஸ்லாமிய வரலாற்றில் பெரும் கல்வியாளர்களாக பெண்களும் வலம் வந்திருக்கின்றார்கள், மாபெரும் சட்டப் பிரச்சனைகளின் போதும், முக்கிய ஆலோசனைகளின் போதும் அவர்களின் பங்கு முக்கியமாய் அமைந்திருந்த்தை பார்க்க முடிகிறது. அவர்களின் முதன்மையானவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே.
     கிட்டத்தட்ட நபி (ஸல்) அவர்கள்டமிருந்து 2210 ஹதீஸ்களை அறிவித்து பெண்களில் அதிக நபிமொழிகளை அறிவித்த பெருமை அவர்களை போய்ச்சேரும்.
     மேலும் நபி (ஸல்) அவர்களுக்குப்பின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலீஃபா பெரும் மக்களும், உயர் பெரும் மூத்த ஸஹாபாக்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள் மேலும் இமாம் ஜு ஹ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள்
     நபி (ஸல்) அவர்களின் அத்துணை மனைவிமார்களின் கல்வியறிவையும் அனைத்து பெண்களின் கல்வியறிவையும் ஒன்று சேர்த்தாலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வியறிவுக்கு ஈடாக முடியாது.
    
இமாம் அதாஃ இப்னு அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
     மக்களில் மிகச் சிறந்த சட்ட ஞானமும், கல்வியறிவும், மருத்துவ அறிவையும், கவித்திறமையும் கொண்ட மிகச் சிறந்த பெண்மணியாகவே நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை கண்டேன்.
நூல் – இஸ்திஆப், பாகம் – 3,  பக்கம்-237
இன்னும் அன்னை ஸஃபிய்யா (ரலி) அன்னை உம்மு ஸலமா (ரலி) உம்முத்தர்தா (ரலி) போன்ற பெண்மணிகளும் கல்வியறிவில் ஆண்களுக்கு நிகரான அறிவினை பெற்று திகழ்ந்த்தாக காணப்பெறுகிறோம்.

அரசியல் உரிமை
லிஹ்ஹாக் இப்னு கைஸ் (ரலி) எனும் நபித் தோழரின் சகோதரி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவாகள் உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாகிவிட்ட பிறகு அவர்களின் வீட்டில் நடைபெற்ற நபித்தோழர்கள் ஒன்று கூடியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் பயனுள்ள் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினா என சுபா (ரஹ்) அவாகள் கூறுகிறார்கள்
நூல் – இஸ்திஆப், பாகம் – 3,  பக்கம்-248
மேலும், இப்னு அப்தில் பா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் ஹிஜ்ரத் செய்த பெண்மணியாவர், நல்ல அழகும், சிறந்த அறிவாற்றலும் , சிறப்புத் தகுதியும், கண்ணியம் நிறைந்த பெண்மணியும் ஆவார் என தமது இஸ்தீ ஆப் எனும் நூலில் குறிப்பிடுகின்றா.
முக்கியமான கட்ட்டித்தில், இக்கட்டான சூழ்நிலையில் நபித் தோழர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்த ஒரு சபையில் இப்பெண்மணி அரசியல் குறித்த விவகாரத்தில் பங்கேற்ற தோடு பயன்மிக்க உரையும் நிகழ்த்தினார். அதை அனைத்து நபித் தோழர்களும் கேட்டுக்கொண்டிருந்தார்களென்றால் அவருடைய அறிவாற்றல் மீதும், விவகாரங்களைக் கையாளும் திறன் மீதும் நபித் தோழர்களுக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையை இது வெளிப்படுத்துகின்றது.
உமைய்யா கலீஃபாக்களில் ஒருவரான அப்துல் மாலிக் பின் மர்வான் அவர்கள் கூறுகின்றார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பரீரா (ரலி) என்ற பணிப்பெண் நபித்தோழி ஒருநாள் அவரின் சபைக்கு நான் சென்றிருந்தேன். அப்போது நான் அவர் என்னிடம் அப்துல் மாலிக் அவர்களே! உங்களிடம் சில நல்ல பண்புகளைப் பார்க்கின்றேன். ஆதலால் உமக்கு அரச பதவியும் கிலாஃபத் பொறுப்பும் வழங்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அப்படி ஆட்சிப் பொறுப்பிற்கு நீர் வந்தால் இரத்தம் சிந்த வைக்கும் காரியங்களிலிருந்து நீர் விலகி இருக்கவும். ஏனெனில் சுவனத்தின் அருகே சென்று விட்ட பிறகும் ஒருவர் அப்புறப்படுத்தப்படுவார் காரணம் அவர் அநியாயமாக முஸ்லிம் ஒருவரின் இரத்தம் சிந்தப்பட காரணமாய் அமைந்திருப்பார் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் எனவே, எச்சரிக்கையாய் இருப்பீராக! என்று என்னிடம் கூறினார்.
நூல் – இஸ்திஆப், பாகம் – 3,  பக்கம்-188-189
மேற்கூறிய இரு நிகழ்வுகளும் அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றில் பங்கெடுத்து ஆலோசனைகளும், கருத்துகளும் வழங்கும் உரிமையை இஸ்லாம் மேலான பெண்ணினத்திற்கு வழங்கியதையே எடுத்துக் காட்டுகின்றது.

கருத்துரிமை & பேச்சுரிமை
     ஹிஜ்ரி – 6, துல்கஅதா மாதம் கஃபாவை உம்ரா செய்ய நபி (ஸல்) 1400 அல்லது 1500 தோழர்களோடு புறப்பட்டு வந்தார்கள்.
     இறுதியில் உம்ரா செய்யவிடாமல் நபியும், நபித் தோழர்களும் தடுக்கப்பட்டனர் ஒப்பந்தம் கையெழுத்தானது பிரபல்யமாக பேசப்படுகிற ஹு தைபிய்யா ஒப்பந்தம் தான் அது.
     பின்பு நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று தோழர்கள நோக்கி குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள் என்றார்கள். ஆனால் தோழர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபியவர்கள் மூன்று முறை கூறியும் யாரும் முன் வராத போது தமது கூடாரத்தில் நுழைந்து துணைவியார் உம்முஸலமா (ரலி) அவர்களிடம் தோழர்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். சற்றும் தாமதிக்காமல் அல்லாஹ்வின் தூதரே மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களாமுதலில் நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்துவிட்டு தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அன்னை உம்முஸலமா (ரலி) அவர்கள் சொன்னது போன்றே நடந்து கொண்டார்கள். இதைக் கண்ணுற்ற தோழர்களும் தமது பிராணிகளை பலியாக்கிவிட்டு சிலர் மொட்டையடித்தும், சிலர் தலை முடியை குறைத்தும் கொண்டனர்.
     நூல்: தமிழ் ரஹீத்: பக்கம் -419
     நான் அல்லாஹ்வின் தூதர் என்னிடமே கருத்து சொல்கிறாயா? எனக்கே ஆலோசனை சொல்கிறாயா? என்று நபி (ஸல்) அவாகள் ஆவேசப்படவில்லை மாறாக அவர்களின் கருத்தை அங்கீகிக்கிறார்கள்.
     ஒருமுறை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் மிம்பர்-மேடை மீது நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பேச்சினூடே மக்களே! பெண்களுக்கு மஹர் தொகையை அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் நபிகளின் காலத்திலேயே அதிகப்படுத்திக் நபிதோழர்கள் 400 திர்ஹம் வரை தான் கொடுத்துள்ளார்கள். இதற்கும் அதிகமாக யாரும் கொடுத்த்தாக நான் கருதவில்லை என்று கூறிவிட்டு மிம்பரை விட்டும் உமர் (ரலி) கீழே இறங்கினார்கள். அப்போது குறைஷிப் பெண்மணியொருவர் உமர் (ரலி) அவர்களை இடைமறித்து 400 திர்ஹங்களுக்கும் மேலதிகமாக பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டாமென அமீருல் முஃமீனின் அவர்களே நீங்கள் சொன்னீர்களா? ஆம்! என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். அப்படியென்றால் நீங்கள் குர்ஆனில் நீங்கள் பெண்ணுக்கு பொற்குவியலையே (மஹராக) கொடுத்தாலும்எனும் பொருள்படி உள்ள வசனத்தை அல்லாஹ் இறக்கியருளியுள்ளதாக கேள்விப்பட்டதில்லையா? என்றார் அப்பெண்.
     உடனே உமர் (ரலி) அவர்கள்
     உமரை அல்லாஹ் மன்னிப்பானாக மக்களெல்லாம் உமர (ரலி) விட மார்க்க சட்டத்தை அறிந்து விழிப்புணாவோடு தான் இருக்கின்றார்கள்.
நூல் ; இப்னுகஸீர் ; பாகம் -1, பக்கம் ; 609
மற்றொரு அறிவிப்பில்
     ஒரு பெண் நேர்வழி நின்றாள் ஒரு ஆண் தவறிழைத்துவிட்டார் என்று உமர் (ரலி) அவர்களே கூறினார்கள்.
நூல் ; இப்னுகஸீர் ; பாகம் -1, பக்கம் ; 610
நூல் ; குலஃபாவுர்ரஸுல்(ஸல்) பக்கம் ; 143
     ஓர் ஆட்சியாளருக்கு முன்னாள் இன்று இவ்வாறு துணிந்து பேசமுடியுமா? இஸ்லாம் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் வழங்கி பெண் சமூகத்தை மாண்பு படுத்தியிருப்பதைத் தான் மேற்கூறிய இரு நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

சமய வழிபாட்டுரிமை
அல்லாஹ் கூறுகின்றான்
     ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எவர் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அவர்களை (இவ்வுலகில்) மணமான வாழ்வு வாழச்செய்வோம் மேலும் (மறுமையில்) அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலி வழங்குவோம்.
                                (அல்குர்ஆன்; 16;99)
அல்லாஹ் கூறுகின்றான்
     கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவணங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் நிரந்தரமாய் தங்கி வாழ்வார்கள் மேலும் அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன அனைத்திற்கும் மேலாக உயர்வான அல்லாஹ்வின் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன்; 9;72)
     ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன் பணிபவர்களாகவும், தர்ம்ம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களின் மறைவிடங்களை பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களாகவும் இருக்கின்றார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்காக மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
(அல்குர்ஆன்; 33;35)
அல்லாஹ்  கூறுகின்றான்
     ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா – தான தர்மங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழிகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்கு பன்மடங்கு பகரம் வழங்கப்படும். அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு
(அல்குர்ஆன்; 57;18)
     ஒழுக்க விஷயங்கள் ஆகட்டும், ஆன்மீக வழிபாடாகட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எவ்வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. மேலும் சமயக்கடமைகள் ஆகட்டும், சுமத்தப்பட்ட பொறுப்புகளாகட்டும் அங்கேயும் இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அல்லாஹ் வழங்குகின்ற இவ்வுலக பாக்கியங்களும் மறுஉலக சுவனமும் ஆண், பெண் என்ற பாகுபாட்டினைக் கொண்டு கொடுக்கப்படுதில்லை. மாறாக நல்லறங்களைச் செய்கிற முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கின்றது என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சேர நமக்கு உணாத்துகின்றன.

சமூக உரிமை
     சமூகத்தில் பெண் என்பவள் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக, உறவினராக என பல்வேறு பெயர்களில் வலம் வருகிற போதும் அத்தனை இடங்களிலும் அவளது உரிமைகளை வழங்கி அவைகளை முழுமையாக கையாளுமாறு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளதை குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம்.
     என்னதான் அறிவியல் யுகமாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கான சமூக உரிமைகளை இந்த 21-ம் நூற்றாண்டிலும் கூட எந்த ஒரு மத்த்தாலும் அரசியல் ஆட்சியாளர்களாலும் முழுமையாக வழங்கிட முடியவில்லை. தற்போது அன்னை கதிஜா (ரலி) அவர்கள் பெரும் வணிகராக இருந்தும் அவரின் சொத்துக்களை, பொருளாதாரத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் இஸ்லாம் வழங்கி பெண்ணினம் சமூகத்தில் மதிக்கப்பட காரணமாக அமைந்த்தை வரலாற்றில் காண முடிகிறது.
சொத்துரிமை
     பெண் சமூகத்தை மோகப்பொருளாகவும், இயந்திரமாகவும், அடிமையாகவும் பயன்படுத்திக் கொண்டிருந்த அறியாமைக்காலம் பெண்ணினத்தை பாதுகாக்கவும், மதிக்கவும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் இயற்றப்படாத, வலியோன் வகுத்த்து தான் சட்டம் என காட்டிமிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில் தான் இஸ்லாம் ஏகத்துவ கொள்கையால் அந்த பாழடைந்த இதயங்களை சீராக இயங்க வைத்த்து.
     மானுடத்தின் மதிப்பையும், யதார்த்தத்தையும் உணர ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றிக் கொண்டிருந்த வேளை அது....
     ஒருநாள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களின் முன்வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே என் கணவர் இறந்துவிட்டார். என் கணவரின் சகோதரர் எங்களுக்கு என் கணவரின் சொத்தில் எந்தப் பங்கும் இல்லை எனக்கூறி விரட்டிவிட்டார். இதோ பாருங்கள் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என பரிதாபத்துடன் கூறி நின்றாள்.
     ஆம் ஸஅதுப்னு ரபீஃ (ரலி) என்கிற நபித்தோழரின் மனைவி தான் அவர்கள். உஹத் களத்திற்குச் சென்ற ஸஅத் அங்கேயே வீர மரணமடைந்து போவார் என்று அப்பெண்மணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.
     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹத் யுத்தம் முடிந்த பிறகுத ஸஅத் இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் தியாகம் குறித்து அல்லாஹ் ஸஅதுக்கு அருள்புரிவானாக! அவர் வாழும் போதும் இறக்கும் போதும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடுபவராகவே அமையப் பெற்றிருந்தார்என சிறப்பித்து துஆ செய்தார்கள்.
     அந்த சிறப்பிற்கு சொந்தமான ஸஅதின் மனைவிதான் தன் இரண்டு பெண்மக்களோடு நபிகளார் முன் வந்து நின்று தனது அவலத்தை கூறிநின்றார்.
     நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உன் விஷயத்தில் தீர்வை தரும் வரை பொறுமையாக இரு என்று கூறி ஸஅது (ரலி) அவர்களின் மனைவியை அனுப்பிவைத்தார்கள்.
பின்பு தான் அல்லாஹ்...

     உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகிறான். ஓ ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்கு சம்மானது (இறந்து போனவருக்கு) இரண்டுக்கும் மேற்பட்ட பெண்மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அர்களுகுரியதாகும். மேலும் ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில் ) பாதி அவளுக்கியதாகும் இறந்து போனவருக்கு குழந்தை இருப்பின் அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு அவருக்கு குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே இருப்பின் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும். அவருக்கு சகோதர, சகோதரிகளிருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு இறந்து போனவர் செய்த மரண சாசனம் (வஸிய்யத்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும் தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்) உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக சமீபமாக  இருப்பா என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் (இப் பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.                                          (அல்குர்ஆன்; 4;11)
இவ்வசனத்தை இறக்கியருளினான்.
     இவ்வசனம் அருளப் பெற்றதும் ஸஅத் (ரலி) அவர்களின் சகோதரரை நபிகளார் சபைக்கு அழைத்து வரச் செய்து
     ஸஅதின் பெண்மக்களுக்கு மூன்றில் இரு பங்கையும் ஸஅதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை நீ எடுத்துக்கொள் எனக் கூறினார்கள்.
     நூல் உஸ்துல்காபா, பாகம் -2, பக்கம்- 277
இஸ்தீஆப், பாகம் -1, பக்கம் -323
     கடந்த இருபதாம் நூற்றாண்டில்  தான் பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு என்பதையே கண்டுபிடித்துள்ளார்கள் நவீன பெண்ணியவாதிகள். ஆனால் இஸ்லாம் அன்றே மகளிருக்கான சொத்துரிமையை உறுதி செய்தும், வழங்கியும் கண்ணியப்படுத்தியது.
     இஸ்லாம் பெண்களிள் உரிமைகளை வழங்குவதில்லை எனக்கூறுவோருக்கு இன்னும் எண்ணற்ற பல சான்றுகள் வராற்றில் ஒளி வீசக் கொண்டிருப்பதை உணர்வுகளை காயப்படுத்துகிறது மானப்படுத்துகிறது என்பதையும் முன்வைக்கிறாகள்.
     ஆனால் இஸ்லாமோ பெண்களின் உணர்வுகள் நியாயமானதாகவும், உயர்ந்ததாகவும் உயர்ந்த லட்சியத்துக்காகவும் அமைந்திருக்குமேயானால் உலக மாந்தருக்கெல்லாம் முன்னுதாரணமாக ஆக்கி உரிய மரியாதையை வழங்குகிறது.
     ஃபிர்அவ்னுடைய மனைவியை இறை நம்பிக்கையாளர்களின் வாழ்க்கைக்களுக்கான உதாரணமாக எடுத்துக் காட்டுகிறான்  ஒரு சமயம் அவர் இறைஞ்சினார். என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும் பிர்அவ்னை விட்டம் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும் கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!     
(அல்குர்ஆன்; 66;11)
     கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா (ரலி) அவர்களின் உணர்வுகளை பதிவு செய்து அதன் மதிப்பை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திக் காண்பிக்கிறான்.
     உயிரோடு இருக்கிறபோது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத உலக சமூகம் செத்த பிறகு வீரப் பெண்மணி என பட்டம் வழங்குவதை பார்க்கிறபோது நகைப்பு தான் ஏற்படுகிறது.
     மிகப்பெரிய மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளான பெண்மணி நபிகளார் முன் வந்து நிற்கிறார். அவரது முகத்தில் படபடப்பும், ஒரு விதமான ரோஷமும் படர்ந்திருப்பதை நபி (ஸல்) அவர்களால் உணரமுடிந்த்து.
     அந்தப் பெண்மணியை மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உண்டாக்கியது. உண்மையில் சாதாரண காரணமாக இருக்க வாய்ப்பில்லை அறியாமைக் காலத்தில் ஒரு கடுஞ்செயலால் அப்பெண்மணி பாதிக்கப்பட்டிருந்தார்
     அதாவது அன்றைய அரபுலகத்தில் தந்தை இறந்துவிட்டால் தந்தையின் முதல் தாரத்தை இரண்டாம் தாரத்தின் மகன் திருமணம் செய்து கொள்ளும் கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்து வந்த்து. தற்போது அப்பெண்மணியின் கணவர் அபுகைஸ்-ஸைஃபிய் இப்னு அல்-அஸ்லதில் அன்ஸாரி (ரலி) அவர்கள் இறந்து விட்டார். அவரின் இரண்டாம்  மனைவியின் மகன் கைஸ், கப்ஷா பின்த் மஅன் இப்னு ஆஸிம் எனும் அப்பெண்மணியை திருமணம் செய்ய முயற்சித்து வருவதை அதற்கான சில அறிகுறிகளை வைத்து அறிந்துகொண்ட கப்ஷா (ரலி) அவர்கள் அடுத்து அண்ணலாரின் முன்வந்து நிற்கிறார்கள்.
     அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் அபுகைஸ் இறந்து விட்டார் அவரின் மகன் கைஸ் என்னை திருமணம் செய்ய முயற்சிப்பதாக நான் அறிகிறேன். மேலும் நான் அவரை மகனாகத்தான கருதுகிறேன். என் விஷயத்தை – பாதிப்பை உங்களிடம் உணர்த்திவிட்டேன் என தன் உள்ளத்து உணர்வுகளை மாநபி (ஸல்) அவர்களிடம் வந்து கொட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் சிறிது நேரத்தில் அல்லாஹ்.
     மேலும், உங்கள் தந்தையா மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணம் முடித்துக் கொள்ளாதீர்கள் முன்னால் நடந்த்து நடந்துவிட்டது. யதார்த்தத்தில் இது ஒரு மானக்கேடான, தண்டனைக்குரிய செயலாகும், மேலும் கீழ்த்தரமான செயலுமாகும்.          (அல்குர்ஆன்; 4;22)
எனும் இறைவசனத்தை இறக்கியருளினான்.
     இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை எந்தளவிற்கு மதித்த்து என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
     இதன் பின்னா துணிந்து ஒருவர் தனது தந்தையின் மனைவியை திருமணமஇ செய்துவிட்டதாக நபிகளாருக்கு தெரிவிக்கப்ட்ட போது அவரின் தலையை கொய்துவருமாறும் அவரின் சொத்துக்களை பொதுச் சொத்தில் சேர்த்துவிடுமாறும் ஹாரிஸ் இப்னு அம்ரு எனும் நபித் தோழரை அனுப்பி வைத்தார்கள் என பர்ரா இப்னு ஆஸிப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     நூல் – இப்னு கஸீர், பாகம்-1, பக்கம் – 611
     எனவே இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது, கொடுமை படுத்துகிறது, பெண்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது, உரிமைகளை வழங்காமல் பாழ்படுத்துகிறது என்றெல்லாம் பெண்ணியம் குறித்து பேசுகிற உலக சமூகத்திற்கு நாம் சொல்வதெல்லாம் உலகில் இஸ்லாம் மாத்திரமே, மகளிரின் உரிமைகளை வழங்கி பெண் சமூகத்திற்கு பெருமை சேர்த்த்து. மகளிரின் உணர்வுகளுக்கு மாண்பளித்து பெண் சமூகத்திற்கு கண்ணியம் சேர்த்தது. இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கிய உரிமைகளை வழங்கியும், மாண்பளித்தும் உணர்வுகளை மதித்தும் வாழ்கிற இஜ்லாமியனாக வாழ அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமின்.

வஸ்ஸலாம்

தொகுப்பு

 N.S.M.பஷீர் அஹ்மத் உஸ்மானி