Friday 25 October 2013

நிலை மாற வேண்டும்!

நிலை மாற வேண்டும்!
ஒரு மனிதன் தன் குடும்பத்தார்களின் இயல்புகள் மாற வேண்டும்!
             தன் சுற்றத்தார்களின் குணம் மாற வேண்டும்!
             தன் சமூகத்தின் நிலை மாற வேண்டும்!
அவர் மாற வேண்டும்! இவர் மாற வேண்டும்!
என நிறைய மாற்றங்களை எதிர் பார்க்கின்றான்;  விரும்புகின்றான்.

ஆனால், தான் மாற வேண்டும், தன் இயல்புகளில் மாற்றம் வரவேண்டும் என ஒருபோதும் நினைப்பதில்லை. தன் இயல்புகளை மாற்றிக் கொள்ள முன்வராத ஒருவனால், தன் சமூகம், குடும்பம் தன்னை சுற்றியுள்ளவர்கள் என எவரிடத்திலும் மாற்றத்தைக்காண இயலாது.
என இஸ்லாம் இயம்புகின்றது.
அல்லாஹ் கேட்கின்றான்:
     பிற மனிதர்களை நன்மை செய்யும்படி ஏவிவிட்டு
      உங்களை நீஙகள் மறந்து விடுகின்றீர்களா?

அண்ணல் காந்தி இப்படிச் சொன்னார்கள்:
“இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்திரத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் அமைகிறபோது தான் சுவைக்க முடியும்.”

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு பின்னால் வாழ்ந்த அண்ணல் காந்து கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பற்றி இப்படிச் சொன்னார்

ஆனால்,
உமர் முஸ்லிமாக தன்னை அடையாளப் படுத்தும் முன் அன்றைய அரபுலகமும், உமரின்  சக காலத்து மக்களும் இப்படிச் சொன்னார்கள்.
“கத்தாப் வளர்க்கும் கழுதை ஒருவேளை சரியாகிவிடும் ஆனால் கத்தாபின் மகன் ஒருபோதும் சரியாக மாட்டார்
ஒருபடி மேலாக,
கத்தாப் தன்மகன் உமரைப் பார்த்து நீ ஒட்டகம் மேய்க்க கூட லாய்க்கு இல்லைஎன்பார்.

உலகமே கண்டு வியக்கும் மனிதராக,
உலக அரசியல், ஆட்சியாளர்களே வியந்து போற்றும் புனிதராக உமர் மாறியது எப்படி?
உமர் (ரலி) அவர்கள் என்று இறை நம்பிக்கையுள்ள அனைவராலும் அழைக்கப்பெற்றது எப்படி?

     வாருங்கள்! உமரின் வரலாற்றுப் பக்கங்களில் மறு பக்கத்தை
     கொஞ்சம் வாசித்துவிட்டு வருவோம்.
உக்காழ்இது எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்காவின் பிரபல்யமான சந்தை (வணிக கேந்திரம்) அன்றைய உலக நாடுகளின் அறியப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்களின் சரக்குகளோடு வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தஙகி பொருளீட்டி செல்வார்கள்.
ஆனால்,
அங்கே போடப்பட்டுள்ள ஒரு (பெஞ்ச்) இருக்கையில் சதா ஒரு பெரிய மதுக் கோப்பையை கையில் ஏந்தியவாறு, போதை இறங்கியதும் மீண்டும் வாயில் ஊற்றி போதை ஏற்றியவாறு அமர்ந்திருப்பார் கத்தாபின் மகன் உமர்.
அபுஜஹ்ல், உத்பா போன்ற பெருந்தலைகள் கூட உமரைக்கண்டு அஞ்சுவார்கள்.
தனக்கு ஏதேனும் பணம் தேவைப்பட்டால் வந்திருக்கும் வியாபாரிகளை நாளு தட்டு தட்டி பறித்துக்கொள்வார்.
ஏதாவது பெண் தேவைப்பட்டால் வீதியில், சந்தையில் என கண்ணில் படும் பெண்களை அழைத்துச் சென்றுவிடுவார்.
மதுவிற்கு அடிமை, பெண் சுகத்திற்கு அடிமை, ரோம, பாரசீக வியாபாரிகள் பொழுது போக்கிற்காக மல்யுத்த வீர்ர்களை அழைத்து வந்து சண்டை நடத்தி பரிசுகள் வழங்குவார்கள்.
அப்படி ஒருமுறை ஒரு மல்யுத்த வீரன் தன்னோடு சண்டையிட்ட அனைவரையும் வென்று
     என்னை ஜெயிக்க மக்காவில் யாரடா இருக்கின்றான்? என அறைகூவல் விடுத்தான்.
சந்தையில் கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் பெஞ்ச்-சின் மீது அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த உமரின் மீது விழுந்தது.

உமர் எழுந்தார், நடையில் தள்ளாட்டம் இல்லை.
மல்யுத்த வீரரின் அருகே வந்தார்,
மக்களின் ஆரவாரம், பலத்த கரகோஷம்
முன்நெற்றியில் ஒரு அடி விட்டார்.
பலபேரை பந்தாடிய வீரன் சப்த நாடிகளெல்லாம் அடங்கி உமரின் காலில் வீழ்ந்து கிடந்தான்.
வீரனின் நெஞ்சின்மீது காலை வைத்துக் கொண்டு
என்னை வீழ்த்த இந்த உலகத்தில் யாரடா இருக்கிறார்கள் என்று கர்ஜித்தார் உமர்.
இப்படி தன் உடல பலத்தால் மக்காவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தவர் தான்
கத்தாபின் மகன் உமர்.
இஸ்லாமிய ஜோதி மக்காவின் இருளை விரட்டிக் கொண்டிருந்த நேரம்.
ஆம்! ஏகத்துவ அழைப்பை மாநபி (ஸல்) அவர்கள் அந்த முரட்டி மக்களிடையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த தருணம் அது.
ஒருநாள் மக்கமாநகரின் பிரபல்யமான ஒரு தெருவில் உமர் குதிரையின் மீது சென்று கொண்டிருக்கின்றார்.
ஒரு குடிசை வீட்டிலிருந்து
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வத்தூர் வகிதாபிம் மஸ்த்தூர் எனும் அத்தியாயத்தின் வசனங்கள் ஓதப்படும் ஓசையை கேட்டார்.
குதிரையின் மேலிருந்து இறங்கி அதை கேட்க ஆரம்பித்தார்.
தலையசைத்து ரசித்து கேட்டார்.
ஓரிடம் அங்கே அந்த வார்த்தையை கேட்டதும் உமர் மயங்கி கீழே சாய்ந்து விட்டார்.
மாபெரும் மல்யுத்த வீரனை சாய்த்த உமரை அல்லாஹ்வின் வசனம் ஒன்று சாய்த்து விட்டது.
ஆம் அந்த வசனம் இது தான்
இன்ன அதாப ரப்பிக்க லவாகிஃ
மா லஹூ மின்  தாபிஃ
நிச்சயமாக உமதிறைவனின் வேதனை அது நிகழ்ந்தே தீரும்.
அதிலிருந்து காப்பாற்றுபவர், தடுப்பவர் யார் இருக்கின்றார்?
மயங்கினார் இரண்டு மாதம் கடுமையான ஜுரம் ஆனால், அந்த வசனம் அடிக்கடி அவரின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது உமர் மாறினார், உமரின் செயல்பாடுகள் மாறியது
மறு அருந்துவதை நிறுத்தினர், உக்காழ் சந்தையை உதறித் தள்ளினார், அடாவடித்தனத்தை அடியோடு கைவிட்டார்.

மாநபி (ஸல்) அவர்கள் ஏற்றிவைத்த ஏகத்துவ தீபத்தை அணைத்திட அத்துனை வழிகளும் முயற்சி மேற்கொண்டு தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள் இறுதியாக நபி (ஸல்) அவர்கள் இறந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இப்போது முஹம்மது இறந்து போவது சாத்தியமில்லை எனவே, முஹம்மதின் இறப்பை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆம்! கொலை செய்திட வேண்டும்.
அறிவிப்புச் செய்தார்கள்.
100- செந்நிற ஒட்டகம் முஹம்மதின் தலையை கொய்து வருபவருக்கு….
நவூது பில்லாஹ்….
மக்கத்து தலைவர்களை சந்தித்தார் உமர்!
100- ஒட்டகங்களை தயார் செய்து வையுங்கள்!
இதோ! திரும்பி வரும்போது அறிவிப்பை உண்மை யாக்கிடுவேன்!
-என்று முழங்கியவாறு உருவிய வாளுடன் புறப்பட்டார்!

அப்போது உமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவர் செல்லும் பாதை ஏகத்துவ அருளை நோக்கி என்று….

ஆம்! வழியில் பனீ ஜஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரை சந்தித்தார்!
உமரிடம் அவர் கேட்டார்!
உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்?
முஹம்மதின் தலையை கொய்துவர…..
முஹம்மதை கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நிம்மதியாக நடமாடமுடியும்?
பனூ ஹாஷிம் குலம் விட்டு விடுவார்களா?
இல்லை எங்கள் பனூ ஜஹ்ரா குலத்தார்கள்தான் விட்டுவிடுவார்களா?
என்றார் அவர்.
உம்முடைய பேச்சை சரியில்லையே!
நீரும் மதம் மாறிவிட்டீரா?
உம்மை தான் முதலில் முடிக்க வேண்டும் என்றார் உமர்.
உமரே! அது இருக்கட்டும்! உமக்கொரு அதிர்ச்சியான தகவலை சொல்லட்டுமா?
உமரின் சகோதரி பாத்திமாவும் அவரின் கணவரும் மதம் மாறிவிட்டனர்.
முதலில் அவர்களை முடித்துவிட்டுவாரும்!
புயலென கிளம்பினார். தம்வீட்டை நோக்கி
அங்கே….
தாஹா அத்தியாயத்தின் 14-ம் வசனம் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது.
தின்னமாக! நான் தான் அல்லாஹ்! என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை.
எனவே எனக்கு அடிபணிவீராக!
என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!

பொறுமையாக நின்று கேட்டார்!
மாறினார் உமர்! மாற்றினார் தன் முழு நிலையையும்
அன்றிலிருந்து இஸ்லாம் எழுச்சியடைவதற்காக தன் முழு வாழ்க்கையையும் மாற்றினார்.
அவர் மாறினார்,
இஸ்லாமிய அழைப்புப் பணியின் நிலை மாறியது!
முஸ்லிம்களின் நிலைமாறியது.
நபிகளார் வாழும் போது சரி!
நபிகளார் இவ்வுலகைவிட்டு மறைந்த பின்னரும்சரி
சமூக கட்டமைப்பின் பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் ஹள்ரத் உமருல் ஃபாரூக் (ரலிஅவர்களே!
இஸ்லாமிய உலகின் ஆரம்ப காலம் அது
ஒரு நாள் நபிகளாரின் வீட்டில், உமர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.
மூவரும் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் எதேச்சையாக உமர் (ரலி) அவர்களின் கரம், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தில் இலேசாக பட்டுவிட்டது.
அவ்வளவுதான் உமர் துடித்துப் போய்விட்டார்.
அல்லாஹ்வே! இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மத்தியில் ஒரு திரை இருந்தால் நன்றாக இருக்குமே! என்று தன் ரப்பிடம் முறையிட்டார் ஹிஜாப்சட்டம் இறங்கியது.

மாநபி (ஸல்) அவர்களின் வஃபாத்க்குப்பின்னால் மக்களின் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கண்டார் உமர் (ரலி) அவர்கள்.
அண்ணார் ஆட்சிப் பொறுப் பேற்றதும் அதை சரிசெய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சில நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு வைகறைப் :பொழுதில் மக்களின் செயல் குறித்து கவலை கொண்டனர்.
அது இதுதான்
நபிகளார் காலத்தில் ஒரு மரத்தின் கீழ் நபிகளார் நபித்தோழர்களிடத்தில் பை அத் பெற்றார்கள்.
அல்லாஹ்வும் அந்த மரம் குறித்து குர்ஆனில் இப்படிப் பேசுவான்:
இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திலிருந்துக் கீழே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான்.
அவர்களுடைய உள்ளங்களின் நிலமைகளை அவன் அறிநிதிருந்தான். இதனால் அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.
அல்குர்ஆன்:48:18)
அம் மேன்மக்களை கவலையில் ஆழ்த்தியது இதுதான்.
அந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் எத்தகைய கவலையும், கஷ்டமும் நீங்கிவிடுவதாக மக்கள் கருதி அங்கே குழும ஆரம்பித்தனர்.
உமர் எழுந்தார், மரத்தருகே சென்றார். மரத்தை வெட்டினார் வேரோடு பிடுங்கி எறிந்தார்.
மக்களின் மனதினில் குடியிருந்த தவறான எண்ணங்களையும் சேர்த்துதான்.
ஆகவே, மாற்றம் என்பது தன்னில் ஏற்படாத வரை சமூகத்தில் ஏற்படுத்த முடியாது.
உமரும் மாறினார், சமூகத்தின் நிலைகளையும் மாற்றினார், ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதா் (ஸல்) அவா்கள் தமது மனைவி யார்களில் சிலரோடு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமா் (ரலி) அவா்கள் நபிகளார் வீட்டில் ஸலாம் சொல்லி உள்ளே வர அனுமதி கேட்டார்கள் ஒளிந்து கொண்டனா். அனுமதி பெற்று உள்ளே வந்த உமரிடம்உமரே! அல்லாஹ்வின் தூதரின் குடும்பத்தினர்கள் உமரின் குரலைக் கேட்டதும் பயந்து ஓடி ஒளிந்துவிட்டார்கள் என்று புன்னகைத்தவாரே கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! பயப்படுவதற்கு அதிகம் தகுதியுடையோர் அல்லாஹ்வும், தாங்களும் தானே என்றார் உமா் (ரலி) அவா்கள். அப்போது நபி (ஸல்) அவா்கள்உமரே! நீா் ஓா் வழியில் சென்றால் ஷைத்தான் வேறு வழியில் செல்வான்உம்மைக் கண்டு ஷைத்தான் விரன்டோடுவான்என்று கூறினார்கள்.
                           நூல் . இஸ்தீ ஆப் மனாகிப் உமா்,
                                     இப்னுல் ஜவ்ஸீ,
                                     அல் ஃபாரூக்.
உஸ்மான் (ரலி) அவா்களின் ஆட்சிக்காலம் பல இடங்களில் ஒட்டுப் போட்ட சட்டை யணிந்த நிலையில் அபூதா் (ரலி) அவா்களை கண்டா்கள் உஸ்மான் (ரலி) அவா்கள். அபூதரே! தங்களுக்காக ஏதேனும் வசதிகள் செய்து தரட்டுமா? என்று உஸ்மான் (ரலி) அவா்கள் கேட்ட போது. ”உங்களின் உலகத்திலே எனக்கு எந்தத் தேவையும் இல்லைஎன்று பதில் தந்தார் அபூதா் (ரலி). இந்த அபூதா் யார் தெரியுமா?
ஒரு காலத்தில் மாபெரும் வழிப்பறி கொள்ளையா். தனி நபராக இருப்பினும், 100 பேர் கொண்ட குழுவாக இருந்தாலும் சரி தனி ஆளாக நின்று அடித்து அத்தனை பொருட்களையும் கொள்ளையடித்து வந்திடுவார். மனம் விரும்பியவாறு வாழ்ந்துவந்தார்.
எல்லோரையும் வென்ற இஸ்லாம் அவரையும் வென்றது. ஆம்! இஸ்லாத்தில் இணைந்தார்.
அடியோடு மாறிப் போனார். தம் கோத்திரம். தம் அண்டை கோத்திரம் என 1000 க்கும் மேற்பட்ட மக்களை முஸ்லிம்களாக மாற்றினார்.
நபிகளாரோடு வாழ்ந்து கொண்டிருந்த போது. ”அவா்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யயாமலிருக்கின்றார்களோ, அவா்களுக்கு துன்புருத்தும் தண்டனை இருக்கிறது எனும் நற்செய்தியை நீா் அவா்களிடம் அறிவித்து விடுவீராக!
ஒரு நாள் வரும் . அந் நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்பட்டு, அவற்றால் அவா்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்இவைதாம் நீங்கள் சேகரித்து வைத்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்.
                                           (அல்குா்ஆன்  9. 35)
இந்த வசனம் இறங்கப் பெற்றதும்,அல்லாஹ்வின் தூதரே! இந்தாருங்கள்! இதோ என் செல்வங்கள். இவைகள் நான் முஸ்லிமாக மாறும் முன் சம்பாதித்தவை, தவறான வழிகளில் சம்பாதித்தவை, உழைத்து சம்பாதித்து சேமித்து வைத்த பொருளுக்கே இந்த தண்டணை என்றால்,
நினைக்கவே பயமாய் இருக்கின்றது அல்லாஹ்வின் தூதரே! இதோ! இதைப் பெற்றுக்கொண்டு என்னை நரகின் நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
நான் முஸ்லிமாகி சம்பாதித்த, ஒரு சிறிய வீடு, ஒரு ஒட்டகம் சிறு விவசாய நிலம் இதை மட்டும் நான் வைத்துக் கொள்கிறேன் தூதரே!
என்று பற்றி துடித்தவாறு நின்றார்,
இஸ்லாம் முன் சென்ற பாவங்களை அழித்து விடுகிறது, எனும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தும் கூட தான் மாற வேண்டும், தன் நிலை மாற வேண்டும்.
என்று விரும்பினார்
அப்போது நபி (ஸல்) அவர்கள்
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின்  துறவறத்தைக்காண விரும்புபவர்கள் இதோ இந்த அபூதர் (ரல்) அவர்களிடம் கண்டு கொள்ளுங்கள்.
என்று கூறினார்கள்.
     நூல்-இஸ்தீஆப், கிஸஸ்- அஸ்-ஸவ்பா
மாறவே மாட்டார்கள், மாற்றவேமுடியாது என்று உலக வரலாற்றின் அத்தனை அரசர்களாலும், மன்னர்களாலும் கைவிடப்பட்டவர்கள்,
உலக வரலாற்றின் அன்றைய வல்லரசுகளான ரோம், பாரசீகம் ஆகியவற்றாலும் கைவிடப்பட்ட அந்த அரபுலக மக்களை மாற்றிக் காட்டினார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.
கொடூரமனம் படைத்த வஹ்ஷீ, ஹின்தா மாறினார்கள். சித்ரவதையை ரசிக்கும் அம்ருப்னுல் ஆஸ் மாறினார் முஸ்லிம்களை அழிக்க படை நடத்திய அபூசுப்யான் மாறினார்.
இவர்கள் மாறினார்கள், சமூகத்தையும் மாற்றினார்கள்
ஏன் நாம் மாறக் கூடாது?
ஒவ்வொரு நாளும் நாம் கிழித்து எறிகிற காலண்டர் தேதி கேட்கிறது.
தினம், தினம் நான் மாறுகின்றேன்.
ஆனால், நீ அப்படித்தானே இருக்கின்றாய்!

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் முன்வந்து
நான் மாற வேண்டும் அல்லாஹ்வின் தூதரே
நான் மாற வேண்டும்!
என் கண்கள் பாவம் செய்கிறது! என் கரங்கள் பாவம் செய்கிறது!
என் பாதங்கள் பாவம் செய்கிறது! என் செவிகள் பாவம் செய்கிறது! என் இதயம் பாவம் செய்கிறது!
நான் மாற வேண்டும்! என் நிலை மாற வேண்டும்!
அல்லாஹ்வின் தூதரே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமைக்காக செல்படு! மரணத்தை நினைத்து செயல்படு!
மாற்றம் வரும் நீ மாறிவிடுவாய்!
நூல்:தாரமீ
காலங்களில் சிறந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழந்தவர்கள் ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள்.
வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள்.

ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள்.
ஆனால்,
ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள்.
பயங்கரத் திருடர்
தாரீதீ திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.
எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும்.
தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்.
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்
வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்
இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!
ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார்.
காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ?
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.
இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம்-384
என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?
எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்
இதோ வந்துவிட்டேன் என் இறைவா?
இதோ உருகிவிட்டேன் என் இறைவா?
இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?

என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,
நூல்- ஸியரு அஃலாமின் நுபலா, பாகம்-13, பக்கம்-59எண்-3793
நாம் மாற வேண்டும் மக்களே!

பின்பு,
நாம் மற்றவர்களும், சமூகமும் மாற வேண்டும் என்பதில் அக்கறை கொள்வோம்.
நம்முடைய மாற்றம் நாளையோ, அல்லது நாளை மறுநாளோ அல்ல
இன்றே! இப்பொழுதே மாறுவோம்.
நம் பண்புகளையும் குணங்களையும் மாற்றுவோம்!
அல்லாஹ் கூறுகின்றான்!
எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாதவரை, உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
அல்குர்ஆன்-13:11

அல்லாஹ் மாற்றத்தை தருவானாக! ஆமீன்





3 comments:

  1. மவ்லானா! உமர் மல்யுத்த வீரர் என்றால், நீங்கள் சொல்யுத்த வீரரல்லவா!

    ReplyDelete
  2. அருமையான நடை
    அழகான தகவல்கள்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. அருமையான நடை
    அழகான தகவல்கள்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete