Thursday 26 December 2013

சிறார்களைச் சீராக்குவோம்!



              சிறார்களைச் சீராக்குவோம்!

 

  
மனித வாழ்வின் முக்கியப் பருவம் சிறார்ப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.                   இவ்வாற்றல் இறைவனால் பிறப்பிலேயே மனித சமூகத்திற்கு தரப்பட்டிருக்கின்ற இலவசக் கொடையாகும்.                       இவ்வாற்றலை சிறார்களிடமிருந்து மிகச் சரியாக வெளிக் கொணர்கின்றவர்களால் மட்டுமே,                                               சிறார்களின் எதிர் காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் வெற்றி நிறைந்ததாய் மாற்றிட இயலும்.

ஆனால், வெளிக்கொணர வேண்டியவர்களில் பலர், சிறார்களிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை உணராமல் இருப்பதும்,                          அப்படியே உணர்ந்தாலும் அதைத் திட்டமிட்டு வளர்க்காமலும், அப்படியே வளர்த்தாலும் அதனைச் சரியான தருணங்களில் பயன் படுத்தாமலும் இருந்து,                                                                  சிறார்களின் எதிர்கால வெற்றிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கின்றார்கள்.

 சீராக்கப் படாத சிறார் சமூகத்தால் ஒட்டு மொத்த மனித சமூகமும், அன்றாடம் பல சீரழிவுகளைச் சந்தித்து வருவதை நாம் ஊடகத்தின் வாயிலாக அறியப் பெறுகின்றோம்.

சிறார்களைச் சீரமைக்கின்ற மிகப் பெரும் பொறுப்பை இஸ்லாம் மூன்று பிரிவினர்களிடையே வழங்கியிருப்பதை அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் வழிகாட்டலில் இருந்து விளங்க முடிகிறது.

மூன்று பிரிவினர்கள்

1.பெற்றோர்கள். 2.ஆசிரியர்கள். 3.சமூகத்தின் சான்றோர்கள்.
 தற்காலச் சூழ்நிலையில் சிறார்கள் பெற்றோர்களின் நிழலில் இளைப்பாருவதை விட ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் சான்றோர்களின் நிழலில் தான் அதிகம் இளைப்பாருகின்றனர். ஆகவே, சிறார்களைச் சீராக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பிந்திய இரு பிரிவினருக்கே அதிகம் உள்ளதை உணர முடிகிறது.                                 ஆனால், சமூகத்தில் இரு பிரிவினரும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை நாம் நன்றாகவே விளங்கி வைத்திருக்கின்றோம்.                                                   (மேலும், பெற்றோர்களின் கடமையையும் பொறுப்பையும் ஏற்கனவே அதிகமதிகம் நாம் ஜும்ஆ உரையில் பேசியிருப்பதாலும், மக்களும் கேட்டிருப்பதாலும் மற்ற இரு பிரிவினரின் செயலாக்கங்கள் குறித்து கொஞ்சம் விரிவாகக் காண்போம்.)
    
ஆசிரியச் சமூகத்தின் கடமையும், பொறுப்பும்….

இன்று சான்றோர்களாக இருக்கட்டும், பெற்றோராக இருக்கட்டும், ஆசிரியராக இருக்கட்டும் அனைவருமே கூட்டாக ஒரு தவறைச் செய்கின்றார்கள்.                                                 அதாவது சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும், அனைத்து விஷயங்களிலும் முதல் நிலையை அடையப் பெற்றிருக்கின்ற சிறார்களையே விரும்புகிறார்கள். பாராட்டுகின்றார்கள், பரிசில் தருகின்றார்கள்.                                                   ஆனால், கடை நிலைச் சிறார்கள் குறித்தோ, அவர்கள் தரம் உயராததின் நிலை குறித்தோ யாரும் அக்கறை கொள்வதாய் இல்லை. இங்கு தான் ”சிறார்கள் சீரழியத் தொடங்குகின்றார்கள்” என்பதை எளிதாக மறந்து விடுகின்றார்கள்.                                      எனவே, ஒவ்வொரு சிறுவனிடத்திலும்  திறமை, ஆற்றல்,மன உறுதி என்று ஏதாவதொன்று மறைந்திருக்கும் அதை வெளிக் கொணர்ந்து உலகறியச் செய்வது தான் ஆசிரியப் பணியின் உண்மையான உயிரோட்டமாகும்.                                 சிறுவனிடம் காணப்படும் வறுமையோ, உடலமைப்போ, தோற்றமோ இதைக் கொண்டு தீர்மானிக்காமல் அவனுடைய ஆற்றலைக் கொண்டு ஓர் ஆசிரியர் தீர்மானிக்க வேண்டும்.               தாமஸ் ஆல்வா எடிசன் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாய் பரிணமித்தார். ஆனால், பள்ளியில் படிக்கும் போது எடிசனின் கோணல் மாணலான தலையைப் பார்த்து, ”உன்னுடைய தலை கோணலாக இருக்கிறது.                                              நீ என்ன படித்தாலும் உன் மண்டையில் ஏறாது” என்று கூறி பள்ளிக் கூடத்திற்கு வர வேண்டாம் என விரட்டி விட்டார்.                     ஆனால், எடிசனின் தாயாரின் முயற்சியும், எடிசனின் மன உறுதியும் உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளராய் மாற்றியது. உண்மயைச் சொல்லப் போனால் இங்கே தோற்றுப் போனது அவரின் ஆசிரியர் தான்.
   ஒருவன் தாழ்வான பகுதியிலிருந்து மலைப் பகுதியிலிருக்கும் தன் வீட்டிற்கு தினமும் அதிகாலையில் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம்.                                                    ஒரு கம்பின் இரு ஓரங்களிலும் இரு மண்பானைகளைக் கட்டிக் கொண்டு, தண்ணீர் எடுத்துச் செல்வான். ஒரு பானை நன்றாகவும், மற்றது சிறிது ஓட்டையாகவும் இருந்தன. தினமும் ஒன்றரைப் பானை தண்ணீர் தான் வீட்டிற்கு போய்ச் சேரும். இப்படியே நாட்கள் பல நகர்ந்தன.                                                                  ஒரு நாள் நன்றாக இருந்த பானை ஓட்டைப் பானையை பார்த்து “ நான் தான் நம் எஜமானனுக்கு முழுமையாகப் பயன்படுகின்றேன்” என்று பெருமை பேசியது. உன்னை வைத்து நம் எஜமானனுக்கு நஷ்டம் தான் என்றும் குறை கூறியது.                                           
இது கேட்ட ஓட்டைப் பானைக்கோ மிகவும் அவமானமாக இருந்தது. தன் எஜமானனுக்கு முழு பயனைத் தரமுடியவில்லையே என மனம் வருந்தியது.                                                      ஒரு நாள் தண்ணீர் எடுக்க மேட்டிலிருந்து கீழே அவன் இறங்கிய போது ஓட்டைப் பானை அவனிடம் பேசியது “என்னை நினைத்தால் எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது”.  “எதை நினைத்து அவமானப்படுகிறாய்”? எனக் கேட்டான் அவன்.                                  “எனது பக்கவாட்டில் உள்ள சிறிய ஓட்டையால், உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போகிறதே! அதனால் நான் வருந்துகிறேன்” என்றது. அவனோ “ நாம் வீட்டிற்குத் திரும்பும் போது வழி நெடுகிலும் கவனமாகப் பார் “ என்றான்.                         திரும்பவும் மலையேறிச் செல்லும் போது, ஓட்டைப் பானை “ சூரிய வெளிச்சத்தில் பூத்துக் குலுங்கும் மலர்ச் சோலைகளைப் பார்த்து” ஆச்சர்யமாய் கேட்டது “இத்தனை நாளும் நான் உங்களோடு தான் வருகிறேன்.                                                      ஆனால், ஒரு நாளும் நான் பார்க்க விலையே? எப்படி இதை உருவாக்கினீர்கள்”. ”இது உருவாகக் காரணமாக இருந்தது நீதான். உன்னை வைத்து தான் இதை உருவாக்கினேன்”. என்றான் அவன். எப்படி? என்று கேட்டது ஓட்டைப் பானை.                                 “ நான் தண்ணீருடன் திரும்பி வரும் வழியில், உன் பக்கம் தான் பூக்கள் பூத்திருக்கின்றன. கவனித்தாயா? என்று கேட்டு விட்டு, ஏன் தெரியுமா? உன்னுடைய குறை எனக்குத் தெரியும். அதை நானோ சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.                            ”வழியில் நீ வரும் பக்கத்தில் மலர்களின் விதையைத் தூவினேன். நீ அதன் மேல் தினமும் உன் ஓட்டை வழியாக நீர் ஊற்றியுள்ளாய்.” நீ மட்டும் இப்படி இல்லாமல் இருந்திருந்தால் காண்போரின் கண்களையும், உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் இந்த மலர்ச் சோலை உருவாகியிருக்காது.” என்றான்.
 
 {நூல்: முன்னேற்றத்தின் முகவரி, பக்கம்: 55, வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ். எழுதிய, ஒழுகுகிற பானையும்…வழிகிற பானையும்… எனும் கட்டுரையில் இருந்து.}

 இந்த கதையில் வரும் உவமானங்கள் உலகக் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களோடு நின்று விடாமல், மார்க்கக் கல்வியை போதிக்கும் நம் போன்ற ஆலிம்களுக்கும் நீதியை போதிப்பதை மறந்து விடக்கூடாது.

  ஏனெனில், இன்று மக்தப் எனும் மார்க்க ஆரம்ப பாடசாலைகளிலும் இது போன்ற பேதங்கள் பின்பற்றப்படுவதை மறுக்க முடியாது. ஆனாலும், சில ஆலிம்கள் சிறார்களின் ஆற்றல்களை ஏற்றமிகு மாட்சிமைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
  

அண்ணலாரின் அழகிய முன்மாதிரி…
 ஜாபிர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களின் சிறுவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். தாமாகவே முன் வந்து எங்களின் சிறார்களிடம் ஸலாம் சொல்வார்கள். எங்கள் சிறார்களிடம் காணப்படும் ஆற்றலைக் கண்டு வாழ்த்துவார்கள். எங்களின் சிறார்களை பேதத்தோடு ஒரு போதும் நடத்தியதில்லை. விரட்டவோ, திட்டவோ மாட்டார்கள். தவறு செய்யும் ஒரு சிறுவனைக் கண்டால் அன்பொழுக அவனை அழைத்து அது தவறு என்று சுட்டிக் காட்டுவார்கள்.
    நூல்: அல் உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்: 179.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், சிறார்களிடம் காணப்பட்ட ஆற்றலைக் கொண்டு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறைகளில் ஈடுபடுத்தி மிகப் பெரும் அங்கீகாரம் வழங்கி வாழ்த்தினார்கள். அதுவே பின்னாளில் அவர்களின் வெற்றிக்கும், இஸ்லாமிய எழுச்சிக்குமான அஸ்திவாரமாய் அமையப் பெற்றிருப்பதை வரலாறு வாகாய் பல பாகங்களிலும் பதிவு செய்துள்ளது.


வாரிசுரிமைச் சட்டங்களின் வித்தகர்

ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மக்கள் தங்களின் மழலைச் செல்வங்களை கொண்டு வந்து “துஆ” செய்யுமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.                                                     எங்களின் கோத்திரத்தார்களான பனூ நஜ்ஜார்களும் தங்களின் மழலைச் செல்வங்களோடு என்னையும் அழைத்து வந்திருந்தனர். என்னை நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு நிறுத்தி “ நான் குர்ஆனின் சில சூராக்களை மனனமிட்டு இருப்பதாக புகழ்ந்து கூறினார்கள்.                                                    அப்போது நபி {ஸல்} அவர்கள் என்னிடம் சில வசனங்களை ஓதிக் காட்டுமாறு கேட்டார்கள். இறுதியாக நான் சூரா “அல்-கஹ்ஃபை” முழுமையாக ஓதினேன்.                                                     இதனைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். அப்போது எனக்கு வயது 11 ஆகும்.                            பின்னர் ஒரு நாள் மாநபி {ஸல்} அவர்கள் என்னை அழைத்து ஸைதே! நீர் யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொள்ளும்! “யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதிலும், எனக்கு வரும் கடிதத்தை படிப்பதிலும் எனக்கு திருப்தி இல்லை.                                ஏனெனில், அவர்கள் தவறு செய்திடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே, நீர் யூத மொழியை கற்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்” எனக் கூறினார்கள்.                            நான் பதினைந்தே நாட்களில் ஹீப்ரு மொழியைக் கற்று அதில் புலமையும் பெற்றேன். அதன் பின் அண்ணலாரின் ஆயுட்காலம் வரை நான் தான் அவர்களது அனைத்து கடிதங்களையும் எழுதினேன், படித்தேன். 
                          நூல்: அஹ்மத்,பாகம்:5, பக்கம்:186,

ஹிஜ்ரி 5-ம் ஆண்டு ஷவ்வாலில் ஃகந்தக் யுத்தம் நடைபெற்றது.             எந்த யுத்தம் நடைபெற்றாலும், அந்த யுத்தத்தில் கலந்து கொள்ளும் கோத்திரத்தார்களை வழி நடத்திட அவர்களில் மிகச் சிறந்த ஒருவரை  தளபதியாக நியமித்து, அவர்களின் கையில் இஸ்லாமியக் கொடியை கொடுப்பது நபிகளாரின் வழக்கம்.                         அன்று பனூ நஜ்ஜார் கோத்திரத்தாரின் தளபதியாக உமாரா இப்னு ஹஸ்ம் {ரலி} அவர்கள் கொடியோடு வழி நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.                                                         படை புறப்படும் முன் அணி அணியாக ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் ”உமாராவிடம் இருந்து கொடியை வாங்கி, முதன் முதலாக களம் காணும் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களிடம் கொடுத்து இவர் உங்களை வழி நடத்துவார்” என்று கூறினார்கள்.                                                            அப்போது உமாரா {ரலி} அவர்கள் ”அல்லாஹ்வின் தூதரே! எந்த விதத்தில் ஸைத் {ரலி} என்னை விட உயர்ந்தவராகி விட்டார்? எனக் கேட்டார்கள்.                                                          அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உமாராவே!அப்படி இல்லை குர்ஆன் தான் எப்போதுமே முன்னிலை பெற வேண்டும். ஸைத் உம்மை விட குர்ஆனில் அதிக பகுதியை மனனமிட்டிருக்கின்றார்” ஆதலால் அவர் தலைமை வகிப்பதே தகுதியாகும். என்று மாநபி {ஸல்} அவர்கள் அவர்கள் உமாராவிடம் கூறினார்கள்.                                                      அப்போது ஸைத் இப்னு ஸாபித் {ரலி} அவர்களுக்கு வயது 15 ஆகும்.
                        நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:284.

 11-ஆம் வயதில் மாபெரும் ஆற்றல் ஒளிந்திருக்கும் சிறுவராக மாநபி {ஸல்} அவர்களால் அடையாளம் காணப்பட்ட இவர்கள் உடனடியாக இஸ்லாத்தின் செய்திப் பிரிவு மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு மற்றும் இறைத்தூதை {வஹீயை} பதிவு செய்யும் பணி ஆகியவற்றில் செயலாற்றும் திறன் உள்ளவராக மாநபியவர்களால் மாற்றம் கண்டார்கள்.                                                      மீண்டும் தலைமைத் துவத்திற்கான ஆற்றலை 15-ஆம் வயதில் பெற்றுள்ளதாக நபி {ஸல்} அவர்களால் அறியப்பட்டார்கள்.            ஸைத் {ரலி} அவர்களின் 20-ஆம் வயதில் நபி {ஸல்} அவர்கள் ”இந்த உம்மத்தின் சட்ட விவகாரங்களில், வாரிசுச் சட்ட விவகாரங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர் ஸைத் இப்னு ஸாபித் {ரலி} ஆவார்” என புகழாரம் சூட்டினார்கள்.

                      நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:27,284

 இங்கே ஒரு விஷயத்தை நாம் விளங்க வேண்டும், அதாவது கல்வியின் நுழைவாயில் என்று நபிகளாரால் அழைக்கப்பட்ட அலீ {ரலி} அவர்கள், சபையில் இருக்கும் போது தான் ஸைத் {ரலி} அவர்களை ஹீப்ரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு பணிக்கிறார்கள் நபி {ஸல்} அவர்கள்.                                                         ஆக ஒவ்வொருவரின் ஆற்றலும் ஒவ்வொரு விதத்தில் இந்த சமூகத்திற்கு பயன் தரும் என்பதை  நபி {ஸல்} உணர்த்தினார்கள்.

 அபூபக்ர் {ரலி} அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யமாமா யுத்தத்தில் ஏராளமான ஹாஃபிள்கள் (கொல்லப்பட்டதால்) ஷஹீதாக்கப் பட்டதால் ஆட்சியாளர் அபூபக்ர் {ரலி} அவர்கள் ஸைத் {ரலி} அவர்களை குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் ”மூன்று முறை தங்களுக்குப் பதிலாக இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களை நியமித்தார்கள். இரண்டு முறை ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், ஒரு முறை அரசியல் பயணமாக ஷாமுக்குச் சென்ற போதும் ஃகலீஃபாவாக” நியமித்தார்கள்.

உஸ்மான் {ரலி} அவர்களும் தங்களின் ஆட்சிக் காலத்தில் ஹஜ் செய்யச் சென்ற போது இடைக்கால ஆட்சியாளராக ஸைத் {ரலி} அவர்களையே நியமித்தார்கள்.

 இமாம் மஸ்ரூக் {ரஹ்} அவர்கள் கூறுகிறார்கள்: “அதிகமான மார்க்க ஞானமுள்ள, மார்க்க விஷயங்களில் எவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் இருந்ததோ அப்படிப்பட்ட ஸஹாபிகளில் ஒருவராகவும் மிக உயர்ந்த நீதிபதிகள்,காரிகள்,சட்டவல்லுனர்களில் ஒருவராகவும், ஸைத் இப்னு ஸாபித் {ரலி} விளங்கினார்கள்.

 இதே ஸைத் {ரலி} அவர்கள் பத்ரிலும்,உஹதிலும் கலந்து கொள்ள ஆர்வப்பட்ட போது நபி {ஸல்} அவர்கள் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டார்கள்.

                 நூல்: இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:283,284,285.


நேர்வழிக்கு வித்திட்ட சிறுவர்

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடுத்திருந்த தருணம் அது.. நீண்ட தூர பயணம், கடுமையான வெயிற்காலமும் கூட.. நிறைய நிதிகளும், தளவாடங்களும் தேவைப் பட்டது.                                                               மக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளி அள்ளி வழங்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். மக்களும் ஒவ்வொருவராக வந்து தங்களால் இயன்ற அளவு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.                                             ஒரு ஏழை நபித்தோழர் தன் விரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் “இதோ இந்த விரிப்பை யாரேனும் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். தபூக்கிற்கான நிதியில் என் பங்கும் சேர வேண்டுமென நான் ஆவல் கொள்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்.                    ஒருவர் ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த நபித்தோழர் விரைவாக மாநபியை நோக்கிச் சென்றார். தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅதுல் காரீ என்ற சிறுவர் அந்த நபித்தோழரைப் பின் தொடர்ந்தார். மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த நபிகளாரின் கையில் ஒரு திர்ஹத்தை கொடுத்து விட்டு தமது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினார் அந்த ஏழை நபித்தோழர்.                                அவர்  நபிகளாரை விட்டு நகர்ந்ததும்  உஸ்மான் {ரலி} அவர்கள் அங்கே வந்தார்கள். 1000 பொற்காசுகள் நிரப்பப்பட்ட ஒரு தோல் பையை மாநபியின் கரங்களில் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.             சிறிது நேரத்தில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் {ரலி} அவர்கள் தமது தோள்களில் ஒரு பையைச் சுமந்து வந்து மாநபி {ஸல்} அவர்களின் முன் கொட்டினார்கள். பையிலிருந்து 200 ஊக்கியா தங்கக் கட்டிகள் வந்து விழுந்தது.                                                இப்படியாக நபித்தோழர்கள் ஒவ்வொருவராக வருவதும், ஏதாவது கொடுத்து விட்டுச் செல்வதுமாய் இருந்தனர். இந்தக் காட்சியை மஸ்ஜிதின் வாசலில் நின்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிறுவரான உமைர் இப்னு ஸஅத்.                                 வேகமாக தம் வீட்டிற்கு வந்தார். இவரின் தந்தை ஸஅத் {ரலி} அவர்கள் பத்ரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார். பின்னர் இவரின் தாயார் அர்மலா {ரலி} அவர்கள், ஜுலாஸ் இப்னு சுவைத் {ரலி} என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.                  இப்போது வளர்ப்புத் தந்தையான ஜுலாஸ் {ரலி} அவர்களிடம் வந்து “சந்தையிலிருந்து துவங்கி மாநபி {ஸல்} அவர்களின் தர்பார் வரையிலான தான்  கண்ட காட்சியை சொல்லிவிட்டு, ஆதங்கத்தோடு அச்சிறுவர் கேட்டார் தந்தையே!  ”நீங்களும் பெரும் செல்வந்தர் தானே ஏன் நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்விற்காக கொடை வழங்கவில்லை.? போய் நீங்களும் கொடுத்து விட்டு வாருங்கள். என்றார்.                                                                அதற்கு, ஜுலாஸ் “முஹம்மத் அவர் சொல்வதில் {கொள்கையில்} உண்மையாளராக இருப்பாரேயானால், நாம் கழுதையை விட கேடு கெட்டவர்களாக ஆகி விட்டிருப்போம்” என்று சொன்னார்.                   இதைக் கேட்ட உமைர் ”முஹம்மத் {ஸல்} அவர்கள் உண்மையாளர் தான் என்று நான் சாட்சி கூறுகின்றேன். நீர் தான் கழுதையை விட கேடு கெட்டவர்” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார். இந்த பதிலை சற்றும் எதிர் பாராத ஜுலாஸ் “மகனே தயவு செய்து இதை நபிகளாரிடம் சொல்லிவிடாதே என்று சொன்னார்.                அப்போது உமைர் “ஜுலாஸே! என்று பெயர் கூறி அழைத்து, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதுவரை  என் இதயத்தில் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவராக உம்மைத்தான் வைத்திருந்தேன். என் சிந்தையில் உம்மைத் தான் பெரும் கொடையாளியாக இருத்தியிருந்தேன். உம்மை கண்ணியமானவராகவும், நல்லவராகவும் கருதியிருந்தேன்.                                                    ஆனால், நீர் சொன்ன ஒரு வார்த்தை உம் மீதான அனைத்து நன்மதிப்பையும் தூக்கி எறிய வைத்து விட்டது.                            இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளும்! நீர் பேசியதை மக்களிடம் தெரியப்படுத்தினால், நான் உம்மை கேவலப்படுத்தியது போல் ஆகி விடும். நீர் பேசியதை நான் மறைத்து விட்டால் மக்களெல்லாம் மதிக்கின்ற இறைத் தூதருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்”.                                                 ஆகவே, கண்டிப்பாக நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சொல்வேன். என்றார்.                                 அதற்கு ஜுலாஸ் ”நீ சிறுவனாக இருப்பதால் உன் சொல்லை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.” எனக் கொன்றும் கவலை இல்லை என்றார்.                                                 உமைர் மஸ்ஜிதுன்நபவி-க்கு வந்தார். மாநபி {ஸல்} அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரமாகக் கூறினார்.                 உறுதியான நெஞ்சோடும், உண்மைக்கும்,நீதிக்கும் சாட்சியாளனாய் நின்று சான்று பகர்வதை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மா நபி {ஸல்} அவர்கள் ஜுலாஸை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்கள்.                                     அதற்குள் அங்கிருந்த சில நபித் தோழர்கள் ”ஜுலாஸ் நம்மோடு தான் தொழுகிறார். நம்மோடு தான் கலந்துறவாடுகிறார்” அவர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றனர்.                                      இன்னும் சிலரோ இப்படிச் சொன்னார்கள் “சிறுவராக இருந்தாலும் இவரையும் நாங்கள் தொழக் கண்டிருக்கிறோம். மேலும், சிறுவரின் முகமே சொல்கிறது அவர் பொய் சொல்ல மாட்டார் என்று”.                ஜுலாஸ் வந்தார் வந்தவரிடத்தில் ”உமைர் சொல்வது உண்மையா? என்று நபியவர்கள் கேட்டார்கள்.                  அதற்கு ஜுலாஸ் “இல்லை! அல்லாஹ்வின் தூதரே! உமைர் பொய் சொல்கிறார்” என்றார்.                                     மாநபி {ஸல்} அவர்கள் உமைரை நோக்கி பார்த்தார்கள். “ நான் பொய் சொல்லவில்லை அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்களைப் பற்றி அப்படித்தான் சொன்னார்” என்றார் உமைர்.                  அப்போது ”அல்லாஹ்வின் மீது சத்தியமாச் சொல்கின்றேன்! நான் ஒரு போதும் அப்படிச் சொல்லவில்லை” என்றார் ஜுலாஸ்.                  இதைக் கேட்ட பிஞ்சு நெஞ்சம் பதறியது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது.                                     வானை நோக்கிப் பார்த்த உமைரின் பிஞ்சு வதனங்கள் “அல்லாஹ்வே! உன் தூதரின் மீது என் விஷயத்தில் விளக்கத்தை இறக்கியருள்” என்று மொழிந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அமைதியானார்கள்.                                    சுற்றியிருந்த நபித்தோழர்கள் விளங்கிக் கொண்டனர் மாநபியவர்களுக்கு இறைத்தூது {வஹீ} வந்து கொண்டிருக்கின்றது என்று.                                                                    பின்பு நபி {ஸல்} அவர்கள் : “ நாங்கள் அவ்வாறு கூறவில்லை” என்று அல்லாஹ்வின் மீது (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும், தம்மால் செய்ய முடியாத செயலை செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள்! அவர்கள் தம்முடைய இந்நடத்தையில் இருந்து விலகிக் கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும்.விலகிக் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்போரையும்,அவர்களுக்கு உதவிசெய்வோரையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.” அல்குர்ஆன்:9:74. எனும், வசனத்தை ஓதிக்காட்டி இப்போது தான் ஜிப்ரீல் {அலை} அவர்கள் இந்த வசனத்தை தந்து விட்டுச் செல்கிறார்கள். என்றார்கள்.                                      இதைக் கேட்ட ஜுலாஸ் “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள். நானும் தவ்பாச் செய்கிறேன். உமைர் உண்மைதான் சொன்னார்.                                  நான் தான் பொய் சொன்னேன்.என்று கூறியவாறு கண்ணீர் விட்டு அழுதார்.                                                        அப்போது, முகம் நிறைய மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்த உமைர் இப்னு ஸஅத் {ரலி} அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் தம் அருகே அழைத்து,                                                   அவரின் காதுகளை வருடிவிட்டு “சிறுவனே அல்லாஹ் உம் காதிற்கு இனிமையான செய்தியை வழங்கினான்.                    மேலும், உன்னுடைய இறைவன் நீ உண்மையாளன் தான் என்பதை உறுதிபடுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.

     இந்த ஹதீஸை தன் தந்தை சுபைர் {ரலி} அவர்கள் மூலமாக அறிவிக்கக்கூடிய உர்வா {ரஹ்} அவர்கள் “ இந்த சம்பவத்திற்குப் பிறகு உமைர் {ரலி} அவர்களின் வாழ்க்கையில், அவர் மரணிக்கும் வரை மிக உயர்வான நிலை மட்டுமே காணப்பட்டது.” என்று தம் தந்தை சுபைர் {ரலி} தம்மிடம் சொன்னதாக கூறுகிறார்கள்.                                 இந்த ஹதீஸை உர்வா {ரஹ்} அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு ஸீரீன் {ரஹ்} அவர்கள் “ இந்த சம்பவத்திற்குப் பின் ஈமானை சீர் குலைக்கும் எந்த ஒரு செயலிலும் ஜுலாஸ் {ரலி} அவர்கள் ஈடுபடவில்லை. என்று கூறுகின்றார்கள்.                                ஹூமைத் இப்னு ஜஅஃபர் {ரஹ்} அவர்கள், அவர்களின் தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்கள். “இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜுலாஸ், உமைர் {ரலி} அவர்களை முன்பை விட மிக சிறப்பாக நடத்தினார். தான் நேர்வழி அடைய உமைர் தான் காரணம் என்று அடிக்கடி சொல்வார்களாம்.”

           நூல்:துர்ருல் மன்ஸூர், பாகம்:3, பக்கம்:463,464.
       முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஹதீஸ் எண்:18303.
                     அல் இஸ்தீஆப்,1/151,152,153. 2/158,159.

சான்றோர்களின் கடமையும், பொறுப்பும்…        

கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.                                                      வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.                                                      ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.                                                        நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள்.                                                  அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.                            உடனே, உமர் {ரலி} அவர்கள் “ நான் யார் தெரியுமா? நான் வருகிற பாதையில் ஷைத்தானே வர மாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறியிருக்கிறார்கள்.                                              நான் கலீஃபா என் முன்னாலேயே நின்று எதிர்த்துப் பேசுகின்றாயா? என்றெல்லாம் மிரட்டவில்லை.                                 சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள்.                                              அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.                                                                பின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.                வரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது.                                       அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.                          ஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.                                      எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.                                தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள்  விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.                                அதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்! ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!                                                       எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!                             ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.                        உன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள். அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.                             மாறாக,  ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ? நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.                         ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.                              அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!” என்றார்.                                        தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {ரலி} அவர்கள் “ மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.                                                   ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”                              ”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”                                             ”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்! அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”                                       என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.                                                           தன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.                                                        உடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.                 இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.                 அதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை.                               இதோ! உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து விடுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.                                     அதிகாலையில் நடந்த சண்டையில் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 240 பேர் ஷஹீதாக்கப்பட்டார்கள். அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் சொன்னது போலவே அவரின் உடலை சல்லடையாக உருக்குலைத்திருந்தார்கள்.                          {வரலாறு மிக நீண்டது அவசியம் கருதி இதோடு நிறுத்திக் கொள்கின்றேன்.}
 ஒரு நாள் உமர் இப்னு அப்துல் அஜீஸ் {ரஹ்] அவர்கள் இப்னு அபீ முலைக்கா {ரஹ்} அவர்களைச் சந்தித்து, அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அபீ முலைக்கா {ரஹ்} அவர்கள் “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பூமியில் நடப்பவர்களில் அப்துல்லாஹ் {ரலி} அவர்களை விடச் சிறந்த ஒரு மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை” அவர் தொழுகைக்குள் நுழைந்து விட்டார் என்றால், அவர் தன்னிடம் உள்ள அத்துனை உணர்வுகளையும் வெளியேற்றிடுவார்.                                          எந்த அளவுக்கெனில், அவர் தொழும் போது அவரின் தோள் புஜங்கள், தலையின் மீது பறவைகள் வந்து அமர்ந்திருக்கும். அப்படியே ஆடாமல், அசையாமல் தன்னிலை மறந்து தொழுகையில் ஈடுபட்டிருப்பார். நீண்ட ருகூவுகள், நீண்ட சுஜூதுகளில் ஈடுபடுவார். மொத்தத்தில் இறை வணக்கத்தில் ஈடுபட்டால் இறை இன்பத்தில் மூழ்கிவிடுவார்கள்.” என்றார்கள்.

இப்னு அப்பாஸ் {ரலி] அவர்கள் கூறுகின்றார்கள்:
 அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி] அவர்கள் “சிறு வயது முதற் கொண்டே அல்லாஹ்வின் வேதத்தை அதிகமதிகம் ஓதக்கூடியவர்களாகவும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சுன்னத்தை அப்படியே பின் பற்றுபவராகவும், அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை அமுல் படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும், அநீதிக்கு எதிராக ஆர்த்தெழக்கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.”  

 நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்,559 to 567.
                       இஸ்தீஆப், 2/57,58,59,60,61., 3/183,184.

இன்றைய சமூகத்தில் ஸைத் {ரலி}, உமைர் {ரலி}, அப்துல்லாஹ் {ரலி} ஆகியோரைப் போன்ற ஆற்றலும்,                             திறமையும் மிக்க இளஞ் சிறார்கள் ஏராளமாய், தாராளமாய் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள்.                           அவர்களை அடையாளங் கண்டு இந்த சமூகத்தின் முன்னால் அறிமுகப் படுத்தி, இந்த உம்மத்தின் உயர்வுக்கும் எழுச்சிக்கும் தோள் கொடுத்து உதவும் தோழனாய், சமூகத்தின் துயர் துடைக்கும் காரணியாய் மாறிடுவோம்.                                             வாருங்கள் பெற்றோர்களே! ஆசிரியர்களே! சான்றோர்களே! சிறார்களை சீரமைத்திட…  அழகானதோர் சீரமைப்பை உருவாக்கிட முன் வாருங்கள்.

  “சிறார்களைச் சீரமைப்போம்!                            சிறந்த தலைமுறையை உருவாக்குவோம்!

 அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!




3 comments:

  1. மெனக்கெடல் அதிகம் தெரிகிறது !
    பொருளாதார வசதி தன்னிறைவு பெற்றால் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன் !
    காலம் இப்படியே சென்று விடாது ! இறைவனின் கருணைப் பார்வையும் நம்மை விட்டு விலகி விடாது ! தவக்குளை மேற்கொண்டு ! உற்சாகத்துடன் செயல் படுங்கள் !கருணையாளன் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் !

    ReplyDelete
  2. மவ்லானா! நீங்கள் சிந்தாத ஓட்டைப் பானையாகவும் பயன் தருகிறீர்கள்; சிந்தி சிந்தி சிந்தனைக்கும் விருந்தளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    மெனக்கெடல் அதிகம் தெரிகிறது !
    பொருளாதார வசதி தன்னிறைவு பெற்றால் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன் !
    காலம் இப்படியே சென்று விடாது ! இறைவனின் கருணைப் பார்வையும் நம்மை விட்டு விலகி விடாது ! தவக்குளை மேற்கொண்டு ! உற்சாகத்துடன் செயல் படுங்கள் !கருணையாளன் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் !
    ملت உங்களுக்கு கொடுத்து விட்டார் دلت

    ReplyDelete