Wednesday 22 May 2013

மாண்பாளனாய் மாற்றும் இரு பண்புகள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மாண்பாளனாய் மாற்றும் இரு பண்புகள்

எதிரியின் வாள் முனையின் கூர்மையை விட எதிரியின் ஏளனப் புன்னகையின் வீரியம் எந்த ஒரு மனிதனையும் நிலை குலைய செய்துவிடும்.
பல சந்தர்ப்பங்களில் எதிரிகள் இத்தகைய குணங்களையே கையாளுவர்.
எளிதில் உணர்ச்சி வசப்படவைப்பது, சகிப்புத்தன்மையை சாதகமாக்கி கோபமூட்டும் செயலில் இறங்கிடுவர்.
சமூகத்தில் இதுபோன்றஇழி குண முடைய்ரின் செயல்பாடுகளில் சிக்குண்டு நிம்மதியிழந்து வாழ்வோர் எண்ணிக்கை ஏராளம்.
இது போன்ற தருணங்களில் எத்தகைய பண்பாடுகளை ஓர் இறைநம்பிக்கையாளன் கையாள வேண்டும் என இஸ்லாம் அழகியதோர்  வழிகாட்டுதை 15 நூற்றாண்டுகளுக்கு முன்னரே காண்பித்துள்ளது.
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மாண்பாளனாய், வெற்றிவாகை சூடியவர்களாய் அறியப்படுகிற அனைவருமே இத்தகைய நெருக்கடிக்கு உள்ளானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இரு பண்புகள் தான் நிலையான வெற்றியின் ரகசியமாய் மாறிப்போனது. அந்த இரு பண்புகள்,
1.      நிதானம்
2.      சகிப்புத்தன்மை
அன்றொரு நாள் கைஸ் குழுவினர் மாநபி (ஸல்) அவர்களைக் காண தூரமான பகுதியிலிருந்து வருகை புரிந்திருந்தனர், வந்த அவசரத்திலும், நபிகளாரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்திலும், வாகனங்களை அப்படியே விட்டு விட்டு, பொருட்களை ஆங்காங்கே வைத்துவிட்டு அழுக்கடைந்த ஆடையோடும், புழுதி படிந்த முகத்தோடும் நபிகளாரின் சபைக்குள் நுழைந்தனர்.
ஆனால் அவர்களின் தலைவர் அஷஜ் அப்துல் கைஸ் (ரலி) அவர்கள் வாகனத்தை ஓரமாக கட்டிவிட்டு, பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, நன்றாக குளித்து ஆடை மாற்றி அண்ணலாரின் முன்வந்து ஸலாம் முகமன் கூறி நின்றார்கள். மாநபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி 
إن فيك خصلتين يحبهما الله: الحلم والأناة

உம்மிடம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் விருப்பமான இரு பண்புகள் உள்ளன. அவை சகிப்புத் தன்மையும், கம்பீரமான நிதானமும் தாம்என்று கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! இயற்கையாகவே என் சுபாவமா?அல்லது அல்லாஹ்வே அதை எனக்கு பிரத்யேகமாக வழங்கியிருக்கானா?என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்அவை அல்லாஹ் உமக்கு பிரத்யேகமாக வழங்கியவையே!” என்றார்கள்.அதற்கவர்அல்லாஹ்வ்ம், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற இரு பண்புகளை எனக்குள் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும்!என்று கூறினார் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.அஷஜ் அப்து கைஸ் என்பது பட்டப்பெயர்.அவரின் இயர்பெயர் முந்திர் இப்னு ஆயித் (ரலி) என்பதாகும்.
நூல்: அஹமது பாகம்:4, பக்கம். 205
இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:89

ولما أراد أبو سفيان الانصراف أشرف على الجبل ثم صرخ بأعلى صوته إن الحرب سجال يوم بيوم اعل هبل، فقال النبي صلى الله عليه وسلم: قم يا عمر فأجبه، فقال: الله أعلى وأجل، لا سواء قتلانا في الجنة وقتلاكم في النار، قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم، فقال النبي صلى الله عليه وسلم: أجيبوه، قالوا: ما نقول؟ قال قولوا: الله مولانا ولا مولى لكم.

உஹத் யுத்தக்களம் மாநபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியை கமீஆ என்பவன் பரப்பிவிடுகிறான். காரணம் தனித்து விடப்பட்டிருந்த நபி (ஸல்) அவர்களை குறிவைத்து சில இணைவைப்பாளர்கள் அம்பெய்ய முனைந்ததை பார்த்த தல்ஹா (ரலி) அவர்கள் சிங்கமென சீறிப்பாய்ந்து எறியப்பட்ட அம்புகளையெல்லாம் தமது உடலை கேடயமாக பயன்படுத்தி தாங்கிக்கொண்டார்கள். இந்தக் காட்சியை கண்ணுற்ற அபூபக்கர் (ரலி) அபூ உபைதா (ரலி) இருவரும் முன்னேறிச் சென்று நபி (ஸல்) அவர்களை காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.கிட்டத்தட்ட 35 அல்லது 39 காயங்களுடன் மயக்கமுற்ற தல்ஹா (ரலி) கீழே சாய்ந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் உஹதை பற்றி பேசுகிற சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம்அன்றைய தினம் (உஹத்) முழுவதும் நபி (ஸல்) அவர்களை பாதுகாக்க நம்மையெல்லாம் தல்ஹா இப்னு உபைதுல்ல்லாஹ் (ரலி) அவர்களையேச் சாரும்என்று கூறுவார்கள்.
உஹதில் நபிகளாரைச் சுற்றி நடைபெற்ற இத்தாக்குதலையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டமிட்ட கமீஆ மாநபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விட்டான்.
உஹத் யுத்தம் முடிந்து மகிழ்ச்சிப் பெருக்கோடு திரும்பிக்கொண்டிருந்த அபூ சுஃப்யான், முஸ்லிம்களின் நிலையை அறிய மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை நோக்கிஉங்களில் முஹம்மத் உயிரோடு இருக்கின்றாரா? உங்களில் அபூபக்கர் உயிரோடு இருக்கின்றார?உங்களில் உமர் உயிரோடு இருக்கின்றார?என்று உணர்ச்சியை தூண்டும் விதமாகவும், கோபமூட்டும் விதமாகவும் கூவினார்.நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்க வேண்டாமென தடுத்து விட்டார்கள்.ஆனால் முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததைக்கண்ட அபூ சுஃப்யான் தமது வீரர்களை நோக்கிஎன் மக்களே!அறிந்து கொள்ளுங்கள், இவர்களையே நீங்கள் கொன்று வீட்டீர்கள்; அது போதும் என்றார்.
உமர் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானுடைய இந்த ஏளனப்பேச்சை கேட்டு கொதிப்ப்டைந்து பதில் கூற முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கரங்களைப்பற்றி இழுத்தார்கள்.ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்வது போல் அது அமைந்திருந்தது.
அபூ சுஃப்யான் மீண்டும் கூறினார்:
ஹூபுல் சிலைக்குத்தான் கண்ணியமும் உயர்வும்
இப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை பதில் கூறுமாறு பணித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள்ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கொன்று விட்டதாக கூறினாயோ அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள்மேலும், அல்லாஹ் தான் உயர்ந்தவன், கண்ணியமானவன்! என்று வீராவேசத்துடன் பதில் கூறினார்.
இதைக் கேட்டு சினமுற்ற அபூ சுஃப்யான்
இந்த வெற்றி எவ்வளவு மகிழ்ச்சியானது பத்ரில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பகரமாய் ஆகிவிட்டது.போரென்றால் இப்படித்தான்என்று பதில் கூறினார்.
அதற்கு உமர் (ரலி)
ஒருக்காலும் சமமாக முடியாது; உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருப்பர். எங்களில் கொல்லப்பட்டவர் மேலான சுவனத்தில் இருக்கின்றார்கள்! என்று பதிலடி தந்தார்கள்.
இதைக் கேட்டதும் அபூ சுஃப்யான் உமரே! இங்கே வாரும் என்றார்.நபிகளார் செல்லுமாறு உமருக்கு அனுமதி வழங்கியதும் அபூ சுஃப்யான் உமர் (ரலி) அவர்களிடம் உமரே ஒரு உண்மையை என்னிடம் சொல்ல வேண்டும்.
உண்மையில் எங்கள் வீரர்கள் முஹம்மதைக் கொன்று விட்டார்களா?இல்லையா?என்று கேட்டார்.அதற்கு உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் அவர்களை கொல்லவில்லை.இப்போதும் அவர்கள் உமது பேச்சை கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்என்றார்கள். இதக் கேட்ட அபூ சுஃப்யான்இப்னு கமீஆ வை விட நீர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருக்க நான் காண்கிறேன்
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம் 150
எதிரிகள் எப்போதும் நம்மோடு ஆரோக்கியமான நிலையில் அணுகுவார்கள் என்று கருதிவிடக் கூடாது.சிலபோது நம் சிந்தைக்கே புலப்படாத வழிகளிலெல்லாம் நம்மை ரோஷமூட்டுவார்கள்.உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்ய முயன்று அது நமக்கே பாதகமாக மாறிவிடும் போது அதைக் கண்டு ஏளனமாக சிரிப்பார்கள் எனவேதான் நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வே! என் நிலை கண்டு ஏளனப் புன்னகையை வெளிப்படுத்தும் எதிரிகளை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்திப்பார்கள், மேலும், உம்மத்தினரையும் பிரார்த்திக்குமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.
மேற்கூறிய சம்பவத்தில் அபூ சுஃப்யான் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்ட போது கொந்தளித்த உமர் (ரலி) அவர்களை மாநபி (ஸல்) அவர்கள் நிதானத்தை கையாளுமாறு போதிக்கிறார்கள். அதன் பின்னர் மாநபியே பதிலடி கொடுக்க வாய்ப்பளித்தார்கள்.நிதானத்திற்குபின் வெளிவந்த உமரின் வார்த்தைகள் எப்படி அமைந்திருந்தது?
உமர் (ரலி) உடனுக்குடன் பதில் கூறியிருப்பார்களேயானால் மீண்டும் ஓர் போரிடும் சூழல் உருவாகி இருக்கும்.
யர்முக் யுத்த களத்தின் முதல் நாள் வீரர்களின் அணிவகுப்பு, ரோமப் படையின் தளபதி மாஹான் இஸ்லாமியப்படையின் வீரத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) மற்றும் இஸ்லாமிய படைவீரர்களை நோக்கி”    
قد علمنا أنه لم يخرجكم من بلادكم إلا الجهد والجوع فإن شئتم أعطيت كل واحد منكم عشرة دنانير وكسوة وطعاماً، وترجعون إلى بلادكم، وفي العام القادم أبعث إليكم بمثلها!

உங்களின் வறுமையும், ஏழ்மையும் தான் உங்களை எங்களுக்கு எதிராக போரிடத் தூண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.இப்போது ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் 10 தீனார்களையும், நல்ல ஆடைகளையும், சிறப்பான உணவுகளையும் தருகிறேன்.பெற்றுகொண்டு ஓடி விடுங்கள், அடுத்த ஆண்டு இப்படி படை நடத்தி வந்து வாங்கத்தேவையில்லை.நானே உங்கள் பகுதிக்கு வந்து இதே போன்று அனுப்பி வைக்கிறேன்என்று ஏளனமாக் கூறினான்.
ரோமப்படைத்தளபதியின் இந்த ஆணவப் பேச்சுக்கு பிண்ணனியில் தமது படையில் 4 லட்சம் வீரர்கள் அணிதிரண்டு வந்திருப்பதும், இஸ்லாமியப் படையில் வெறும் 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருப்பதும் தான் அப்படிப் பேசுமாறு அவனைத்தூண்டியது.
காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் ரோமப் படைத்தளபதி மஹனை நோக்கி:

إنه لم يخرجنا من بلادنا الجوع كما ذكرت، ولكننا قوم نشرب الدماء، وقد علمنا أنه لا دم أشهى ولا أطيب من دم الروم، فجئنا لذلك!)… وعاد بجواده الى صفوف الجيش ورفع اللواء عالياً مؤذناً بالقتال: (الله أكبر، هبي رياح الجنة)

கவனமாகக் கேட்டுக்கொள்! மஹனே! நீ சொன்னது போன்ற சூழ்நிலையில் நாங்கள் இல்லை.நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக கணித்து விட்டாய்.நாங்கள் எதிரியின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்க்க துடிப்பவர்கள்.அதுவும் ரோமர்களின் ரத்தம் மிகவும் ருசியாக இருக்கும் என்பதை கேள்விப்பட்டோம்.அதனை பரீட்சித்துப்பார்க்க வேண்டியே இங்கு வந்தோம் என்று கூறினார்கள்.பின்பு காலித் (ரலி) அவர்கள் தமது படைவீரர்களை நோக்கிஎன்னருமைத் தோழர்களே! சுவனத்து தென்றல் காற்றை சுவாசிக்க விரைந்து செல்லுங்கள்! அல்லாஹு அக்பர் என வீரமுழக்கமிட்டு எதிரிகளின் களத்தினுள் முதல் வீரராக நுழைந்தார்கள்
நூல்: கிஸஸ்  அஸ் ஸஹாபா
உலக நாடுகளில் ஏகத்துவச் செய்தியை பரவச் செய்திட ஏதுவாக அமையப் பெற்றது தான் ஹூதைபிய்யா உடன் படிக்கை வெளித்தோற்றத்தில் தோல்வியைப் போல் தோன்றினாலும் பல வெற்றிகளுக்கான அஸ்திவாரம் தான் ஹூதைபிய்யா என்றால் அது மிகையாகாது. நபி (ஸல்) அவர்களின் சகிப்புத்தன்மையை அதிகமாகவே ஆட்டிப்பார்த்தார்கள் மக்காவின் தலைவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் நிதனத்தை ரொம்பவே உரசிப்பார்த்தார்கள் குறைஷி குல இணை வைப்பாளர்கள்
1.      பிஸ்மில்லாஹ்வை திருத்தச் சொன்ன போது..
2.      முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.. என்பதை மாற்றச் சொன்ன போது..
3.      மக்கா வந்தோரை திரும்ப அனுப்ப மாட்டோம் என்று மறுத்த போது..
4.      மதீனா வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று சொன்ன போது..
5.      அபூஜந்தலை அழைத்துச் செல்ல அனுமதியளிக்காத போது..
இவ்வாறான அனைத்து நிலைகளிலும் மாநபி (ஸல்) அவர்கள் சகிப்புத்தன்மையையும், நிதானத்தையும் கையாண்டு வெறும் 1400 அல்லது 1500 நபித்தோழர்கள் எனும்நிலையை இரண்டே ஆண்டுகளில் 10000 மாக மாற்றி ஹிஜ்ரி 8ல் மக்காவை வெற்றி கொண்டார்கள்.
நிதானத்தை இழந்தவர்கள் வாழ்க்கையில் பல்வேறு இழப்புகளை மேற்கொள்ள வேண்டிவரும். நிதானத்தை கையாள்பவர்களால் மட்டுமே உலகையே உலுக்கிப் போடுகிற வெற்றிகள் பலதை தன் வசப்படுத்த முடியும் என்பதைத்தான் ஹூதைபிய்யாவில் நபிகளாரின் நடவடிக்கை நமக்கு உணர்த்துகின்றது.
நூல்: தஹ்தீப் - சீரத் - இப்னு ஹிஷாம்
எளிதில் ஆவேசமும், உணர்ச்சிவயப்படும் சுபாவம் உடையவர் என்று பெயர் பெற்றவர்கள் உமர் (ரலி) அவர்கள், ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் நிதானத்திற்கு மாறிவிடுவார்கள்.
ஹிஜ்ரத்தின் போது பலர் ரகசியமாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தனர். ஆனால், உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமான போது மக்காவின் முகட்டின் மீதேறி நின்று கொண்டு உரத்த குரலில்
! மக்களே!
தன் மனைவியை விதவையாக விட்டு செல்ல பிரியமுள்ளவர், தன் குழந்தைகளை அநாதையாக விட்டுச்செல்ல ஆசையுள்ளவர், தன் பெற்றோரை ஆதரவற்றோர்களாக விட்டுச்செல்ல மனமுடையோர் என்னைப் பின் தொடர்ந்து வரட்டும்! என பகிரங்கமாக அறிவிப்புச் செய்து விட்டு ஹிஜ்ரத் மேற்கொண்ட்டர்கள்.
தமது வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களில்..
1.      ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது..
2.      ஹாதப் பின் அபீ பல்தஆ (ரலி) உளவுசெய்தி அனுப்பும் போது..
3.      அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறிய போது..
4.      துல்  குவைஸிரா என்பவன் நபிகளாரை மோசடிக்காரன் என்று குற்றம் சுமத்திய போது..
அந்த தருணங்களிளெல்லாம் அண்ணலார் உமர் (ரலி) அவர்களை நிதானமாக செயல்படுமாறு ஆலோசனை கூறுவார்கள்.சற்று நேரத்தில் நிதானமடைந்து விடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த போது வாளுருவி கையில் வைத்துக் கொண்டு உலவிய நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக் காண்பித்த இறை வசத்தைக் கேட்டு உடனடியாக சமாதானமாகி நிதான நிலைக்கு வந்தது ஒரு சான்றாகும்.
நூல்: குலஃபாவுர் ரசூல் (ஸல்)
ஆனால்சாந்தமே உருவானவர்என்று பெயர் பெற்ற அபூபக்கர் (ரலி) நிதானமிழந்து செயல்பட்டபோது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கண்டித்த செய்திகளும் வரலாற்றில் உண்டு.
ஒரு சமயம் நபிகளாரின் சபையில் அமர்ந்திருந்த போது ஒருவர் அபூபக்கர் (ரல்) அவர்களை திட்டினார்.கொஞ்சநேரம் சகித்துக்கொண்டிருந்த அபூபக்கர் (ரலி) ஒரு கட்டத்தில் எதிர்த்துப் பேசினார்கள்.மாநபி (ஸல்) அவர்கள் வெருட்டென எழுந்து சென்று விட்டார்கள்.பின்னாலேயே ஓடிச்சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏன்?எழுந்துவந்தீர்கள் என மாநபியிடம் கேட்டபோது, நீங்கள் நிதானத்தை கையாண்டுகொண்டிருக்கும் வரை ஒரு வானவர் உங்கள் சார்பாக பதில் கூறிக்கொண்டிருந்தார்.எப்போது நீங்கள் பதில் கூற ஆரம்பித்தீர்களோ, வானவர் அங்கிருந்து சென்று விட்டார்.ஷைத்தான் அங்கு வந்து அமர்ந்து விட்டான்.ஷைத்தான் அமரும் இடத்தில் நான் அமர அனுமதி இல்லை என்று மாநபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள்.
நூல்: புகாரி
மற்றோரு சந்தர்ப்பத்தில்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது, அவதூறு சொல்லப்பட்ட விஷயத்தில் தமது பராமரிப்பின் கீழும், தமது உதவியின் கீழும் இருந்த மிஸ்தஹ் (ரலி) அவர்கள் ஈடுபட்டார்கள் எனத் தெரிய வந்த போது அல்லாஹ் மீது சத்தியமிட்டு அவருக்கு செய்து வந்த உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்தபோது அல்லாஹ் அந்நூர் அத்தியாயத்தின் வசனத்தை இறக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள் நிதானமின்றி நடந்து கொண்டது தவறு என்று அல்லாஹ் கடிந்து கொண்டான். மேலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டலை பிறப்பித்தான்.
நூல்: தஃப்ஸீர் குர்துபீ
ஆக நிதானமும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள் மாண்பளர்களாய் உயர்வதும், உலகையே உலுக்கிப் போடுகிற பல வெற்றிகளை தமதாக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதும், இதற்கும் மேலாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விரும்பும் உயர் பண்புகளாய் இருப்பதும் நமக்கு உணர்த்தப்படுகின்றது.
அல்லாஹ் நம் அனைவர்களையும் நிதானத்தோடும், சகிப்புத்தன்மையோடும் வாழ அருள் புரிவானாக!
ஆமீன்
வஸ்ஸலாம்