Wednesday 5 February 2014

தீமைக்கு எதிரான போராட்டம்!!




                                       தீமைக்கு எதிரான போராட்டம்!!



இன்றைய மனித சமூகத்தில் தீமைகள் மலிந்து, நன்மைகள் அருகிப் போய் விட்டது.

அவை உலக சமுதாயத்தில் பல்வேறு வகையான மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக் கின்றதென்றால் மிகையான ஒன்றல்ல.

இது வீட்டிலிருந்து துவங்கி நாடாளும் ஆட்சியாளர்களின் அவை வரையிலும் விரவிக் கிடக்கின்றது.

மனித வாழ்வின் அத்தனை தளங்களிலும் புயலென வீசிக் கொண்டிருக்கின்றது.

இது குறித்து மனித சமூகமும் பலவாராகச் சிந்தித்துக் கொண்டும் இருக்கின்றது.

காலத்தின் போக்கில் வாழ்ந்துவிட்டுப் போவோம், தீமைகளை எதிர்த்துப் போராடுவதால் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை என்கிற மனோநிலையில் சிலரும்..

நாம் மட்டும் நல்லவர்களாக வாழ்ந்துவிட்டுப் போவோம், மற்றவர்களைச் சீர்திருத்தி எந்தப் பலனும் இல்லை என்கிற எண்ணவோட்டத்தில் சிலரும்,

நாம் எப்படி நல்லவர்களாக, வாய்மையாளர்களாக, நேர்மை யாளர்களாக, ஒழுக்கமானவர்களாக வாழ்கின்றோமோ, அது போன்று சமூகத்தின் நிலையையும் சீர்படுத்த வேண்டும்.

தீமைகளை எதிர்த்துப் போராடவேண்டும், அத்தோடு நின்று விடாமல் தீமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு போராளி வர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிற ரீதியில் மிகச் சிலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக இம்மூன்று வகை சிந்தனை கொண்ட மனிதர்களில் ஒருவராகத்தான் நம்மில் ஒவ்வொருவரும் இருக்க முடியும்.

அலட்சியப்போக்கால் அழிந்து போகின்றோமா? அல்லது, தன்னை மட்டும் பாதுகாத்து தப்பித்துக் கொள்கின்றோமா? அல்லது தீமைகளை எதிர்த்துப் போராடுவதால் பயன் ஏதும் பெறுகிறோமா?, தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுபவர் யார்? எனும் கேள்விக் கணைகளோடு குர்ஆன் கூறும் ஓர் வரலாற்றை வாசித்துப் பார்ப்போம்.

“கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப்பற்றி இவர்களிடம் நீர் கேட்டுப்பாரும்! அங்கு வாழ்ந்த மக்கள் சனிக் கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை இவர்களுக்கு நினைவூட்டுவீராக! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல்மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அம்மீன்கள் அவ்வாறு வருவதில்லை. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.

மேலும், இவர்களுக்கு நினைவூட்டுங்கள்! அவர்களில் ஒரு பிரிவினர், (இன்னொரு பிரிவினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ, மேலும், கடுமையான தண்டனைக்கு ஆளாக்க இருக்கின்றானோ, அந்த மக்களுக்கு ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனின் வரம்புகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.” என்று பதில் கூறினார்கள்.

இறுதியில், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து செயல்பட்ட போது, தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அக்கிரமம் செய்து கொண்டிருந்த அனைவரையும் நாம் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.

 பிறகு, எதைச் செய்யக்கூடாது என தடுக்கப்பட்டார்களோ, அவற்றையே வரம்புமீறி செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம்.

                                            (அல்குர்ஆன்: 7: 163 – 169)
மேற்கூறிய வரலாற்றிலிருந்து நமக்கான படிப்பினை இது தான். அந்த ஊரில் மூவகை சிந்தனை கொண்ட மக்கள் இருந்தனர்.

1.துணிந்து இறைக்கட்டளைக்கு மாறு செய்து வந்தவர்கள்.

 2.தான் மட்டும் நேர்மையோடு வாழ்ந்து, நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோரை தடுக்காமல், தடுப்பவர்களைப் பார்த்து “இவர்களுக்கு அறிவுரை கூறி என்ன ஆகப்போகிறது? என்று கூறிக் கொண்டிருந்தவர்கள்.

3.இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்யும் அம்மக்களின் செய்கைகளைக் கண்டு மனம் பொருக்கமுடியாமல், எப்படியாவது அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திவிடலாம் என தீர்மானம் எடுத்து போராடியவர்கள்.

மேலும், முடிந்தவரை இம்மக்களிடம் காணப்படும் தீமைக்கு எதிராகப் போராடுவோம். அம்மக்கள் நல்வழி அடையவில்லை என்றால் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் “எங்கள் இறைவா! எங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை” என ஆதாரத்தை சமர்பிக்கும் முகமாக, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்தியவர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான் அந்த ஊரின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கிய போது, தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மற்றவர்களை அல்லாஹ் கடும் வேதனை கொடுத்து தண்டித்தான்.

எனவே, தீமைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் தான் ஓர் இறை நம்பிக்கையாளன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அது தான் ஈருலகிலும் அவனை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லும்.

தன்னை அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளும் போது, அவன் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. யாருடைய சூழ்ச்சியும் அவனை ஒன்றும் செய்திடாது. ஏனெனில்,

அல்லாஹ் கூறுகின்றான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்கலின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.”                                      (அல்குர்ஆன்:5:105)

1.உடனடி பலன் அல்லது தாமதமான பலன்

மேலும், தீமைக்கு எதிரான போராட்டத்தில் சில போது உடனடியாக பலன் கிடைக்கும். இன்னும் சில போது தாமதமாக பலன் கிடைக்கும். ஆகவே, நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் விஷயத்தில் சலிப்படைந்து விடக்கூடாது.

காரூண், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தைச் சார்ந்தவன். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான செல்வ வளத்தைக் கொடுத்து சிறப்பித்திருந்தான். ஆதலால், அவனுடைய செல்வ வளங்களைக் கண்ட மக்களில் சிலர் அவனப் போன்று வாழ்ந்திட வேண்டுமென்று விரும்பினர்.

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு நாள் (காரூண்) தன்னுடைய முழு அலங்காரத்தையும் வெளிப்படுத்தி மிடுக்குடன் தன் சமூக மக்களை கடந்து சென்றான்.

 எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள் (அவனைப் பார்த்து பிரமித்துப் போய்) கூறினார்கள்: “ஆஹா! காரூணுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலி தான்!”

ஆயினும், அங்கிருந்த (மார்க்க) அறிவுபடைத்தவர்கள் “உங்கள் நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ் வழங்கும் கூலியே மிகச் சிறந்ததாகும். மேலும், பொறுமையை கையாள்பவர்களுக்குத் தான் இந்த நற்பாக்யம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

இறுதியில், நாம் அவனையும், அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்து விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவிசெய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இல்லை. தனக்குத் தானே உதவி செய்யக்கூடியவனாகவும் அவன் இல்லை.

நேற்று வரை அவனைப் போன்று வாழவேண்டுமென ஆசை கொண்ட அதே மக்கள் இப்போது (இப்படிக்) கூறினார்கள்: “அந்தோ! நாம் மறந்திருந்தோம்.

 அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் எங்கள் மீது கருணை கொண்டிராவிட்டால், எங்களையும் பூமியில் புதைத்திருப்பான். அந்தோ! நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே!”

                                             (அல்குர்ஆன்:28:76 – 82)

இங்கே காரூணின் மரணத்தைக் கண்ட பின் அவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை உண்மையில், அறிவு படைத்த மார்க்க அறிஞர்களின் போராட்டத்தின் விளைவால் ஏற்பட்டதாகும்.

 தக்க சயத்தில் அவர்கள் செய்த நல்லுரையே அவர்களின் மன
மாற்றத்திற்கு அவர்களை தயார்படுத்தியது.


உயர்ந்த நிலைப் போராட்டம்

தீமைக்கெதிரான போராட்டத்தில் மிக உயர்ந்ததும், சிறந்ததும் ஏகத்துவத்திற்கு எதிரான நிலைகொண்டவர்களிடம் நடத்தும் போராட்டமாகும்.

பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு மதீனா வந்தடைந்த மாநபி {ஸல்} அவர்களையும், முஸ்லிம்களையும் தீர்த்துக் கட்டிவிட்டால் இகமெங்கும் இஸ்லாமிய ஜோதி வெளிப்பட்டு விடாமல் தடுத்து நிறுத்திவிடலாம் என்கிற வெறியோடு குறைஷித்தலைவர்கள் யுத்த தளவாடங்களோடு “பத்ர்” எனும் இடத்தில் குழுமத்தொடங்கினர்.

இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களுக்கு சொல்லப்படுகின்றது. மிகவும் கவலைப்பட்டவர்களாக தோழர்களை ஒன்றிணைத்து, ஒவ்வொருவரையும் உற்று நோக்கிப் பார்த்தார்கள். நபிகளாரின் முகத்தில் படர்ந்த கவலை ரேகைகள் தோழர்களின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

கூட்டத்திலிருந்த மிக்தாத் இப்னு அம்ர் {ரலி} அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! எழுந்திருங்கள் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்; பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா {அலை} அவர்களிடம் கூறியது போல் நாங்கள் கூறமாட்டோம். நாங்களும் உங்களோடு இணைந்து போராடுவோம்! என்று ஆக்ரோஷமாகக் கூறினார்.

அடுத்து ஸஅத் இப்னு முஆத் {ரலி} எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களை உண்மைபடுத்தினோம்! உங்களை நம்பிக்கை கொண்டோம்! நீங்கள் கொண்டு வந்த மார்க்கம் அது தான் சத்தியம் என்று சான்று பகர்ந்தோம்! இதனடிப்படையில் நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்போம், வழிபடுவோம் என வாக்குப் பிரமாணம் தந்திருக்கின்றோம்!
அல்லாஹ்வின் தூதரே! எங்களை கடலில் குதிக்கச் சொன்னாலும் அனைவரும் பின் வாங்காமல் குதித்து விடுவோம்! புறப்படுங்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களின் போராட்டக் குணங்களை நாளை அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவான். என மழையாய் பொழிந்தார்கள்.

ஸஅத் {ரலி} அவர்களின் உரையைக் கேட்ட அண்ணலாரின் முகம் பிரகாசத்தால் இலங்கியது. புதுத்தெம்பும், உற்சாகமும் அடைந்தவர்களாக புறப்படுவோம் பத்ரை நோக்கி என ஆயத்தப் படுத்தினார்கள்.

அல்லாஹ் அந்தப் போராட்டத்தில் வெற்றியை நல்கினான். இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் போராட்டம் அது தான்.

பலவகையான சிறப்புக்கள்

தீமைக்கு எதிரான போராட்டத்தில் மிக முனைப்போடும், மன உறுதியோடும் போராடும் பட்சத்தில் அதன் பலனாக அல்லாஹ் பல சிறப்புக்களை வழங்கிக் கௌரவிக்கின்றான்.

1.வெற்றியை நல்குகின்றான். பார்க்க: அல்குர்ஆன்:3:104.
2.அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு. பார்க்க: அல்குர்ஆன்:7:164,165., 3. நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு. பார்க்க: அல்குர்ஆன்:9:67மற்றும்71.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஃபிர்அவ்னிடம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லச் சான்றாக பல அற்புதங்களை அல்லாஹ் கொடுத்தனுப்பினான். அவைகளைக் கொண்டு மூஸா {அலை} அவர்கள் ஃபிர்அவ்னிடம் தாவாச் செய்தார்கள். ஆனால், அதைக்கொண்டு ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக மூஸா {அலை} அவர்களை மந்திரவாதி என்று விமர்சித்தான்.

இறுதியில், ஓர் குறிப்பிட்ட நாளில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில், மிகப் பிரமாண்டமான மைதானத்தில் மந்திரவாதிகளின் புடைசூழ, எந்த மந்திர சக்தி பெரியது என நிரூபிக்கமாறு மூஸா (அலை) அவர்களுக்கு அழைப்பு கொடுத்தான்.

குறிப்பிட்ட நாளில், அது நடைபெற்றது, அங்கே அல்லாஹ்வின் அற்புதம் மேலோங்கியதைக் கண்ட மந்திரவாதிகள் “நாங்கள் மூஸா {அலை} ஹாரூண் {அலை} ஆகியோரின் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை – ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

(விரிவாகக் காண: அல்குர்ஆன்:7:109 முதல் 122., அல்குர்ஆன்:26:34 முதல் 48.)

அங்கு நின்று கொடிருந்த இறை நம்பிக்கையாளர்களிடம், ஆணவத்தோடு ஃபிர்அவ்ன் கேட்டான்: “என்ன? நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்பாகவே நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஆசான் என்பது இப்போது தெரிந்து விட்டது.

இப்போது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன்; மேலும், பேரீச்சமரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன்; அப்போது தெரிந்து விடும் யாருடைய வேதனை மிகக் கடுமையானது; நீடித்து நிற்கக் கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவின் இறைவனாலா?) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.                  (அல்குர்ஆன்:20:70,71)

இறை நம்பிக்கை கொண்டு சற்றேரக்குறைய சில மணித்துளிகளே ஆன அம் மேன்மக்களின் வாயிலிருந்து வெளியான வார்த்தை “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம்.

எனவே, நீ என்ன விரும்புகின்றாயோ செய்து கொள். ஏனெனில், உன்னால் இவ்வுலகத்தில் தான் நீ விரும்பிய படி தீர்ப்பளிக்க முடியும். திண்ணமாக! நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்களின் குற்றங்களையும் – எந்த சூனியத்தை கையாளுமாறு நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்கவேண்டும் என்பதற்காக!

                                                 (அல்குர்ஆன்:20:72,73)

தீமைக்கெதிராக போராடவேண்டும் என முன்வந்து விட்டால், அல்லாஹ் எல்லாவகையான ஆற்றலையும் தந்து சிறப்பிக்கின்றான் ஏனெனில், இவ்வாறு அவர்கள் தங்களது போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தியது கொடுங்கோன்மை புரிந்து கொண்டிருந்த ஓர் அரசனுக்கு முன்பாகும்.

@@. தாயிஃபில் இருந்து அல்லாஹ்வின் தூதர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, அண்ணலாரைப் பின் தொடர்ந்து வந்த ஸகீஃப் கோத்திரத்தைச் சார்ந்த உர்வா இப்னு மஸ்வூத் என்பவர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து, கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்.

 இஸ்லாத்தின் அடிப்படைகளை அவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என் சமூக மக்களுக்கும் நான் இந்த இஸ்லாத்தை எடுத்தியம்ப விரும்புகின்றேன். அனுமதி தாருங்கள்! என்றார் உர்வா {ரலி} அவர்கள்.

ஸகீஃப் கோத்திரத்தாரின் மூர்க்கத்தனமான குணத்தை அறிந்து வைத்திருந்த அண்ணலார் “உர்வாவே! அவர்கள் உன்னை கொன்று விடுவார்களோ என நான் அஞ்சுகின்றேன். கொஞ்சம் காத்திருந்து அவர்களிடம் சொல்லலாமே” என்றார்கள்.

அதற்கு உர்வா {ரலி} ”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் என்னை கன்னிப் பெண்ணை விட அதிகம் நேசிக்கின்றார்கள்”. ஆதலால் அப்படியெல்லாம் என்னிடம் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். ஆகவே, நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று கூறியவராக விடைபெற்றுச் சென்றார்கள்.

உண்மையில், அவரிடம் ஸகீஃப் கோத்திரத்தார்கள் அப்படித்தான் அதுவரை நடந்து கொண்டனர். ஆனால், அவரின் இந்த நல்லெண்ணம் இப்போது தவறாகிவிட்டது`

இஸ்லாத்தின் பால் அம்மக்களை உர்வா {ரலி} அவர்கள் அழைத்த போது, அவர்களின் குடும்பத்தினர்களும், நண்பர்களும் சினம் கொண்டு சீரியெழுந்தனர். கண்மூடித்தனமாகத் தாக்கினர். கையில் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் பிரயோகித்து அவரை நடைபிணமாக ஆக்கினர்.

இறுதியாக ஓர் அம்பு அவரின் உயிரை பதம் பார்த்தது. ஆம்! மரணத்தின் வாசல் வரை கொண்டு வந்து விட்டனர். மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உர்வா {ரலி} அவர்களைப் பார்த்து “இப்போது உம்முடைய மதம் எப்படி இருக்கின்றது?” என கிண்டலாக கேட்டனர்.

அதற்கு, உர்வா (ரலி) அவர்கள் “கண்ணியம் நிறந்த என் இறைவன் என்னை கண்ணியப் படுத்திவிட்டான்; இந்த தியாகத்தை நான் பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே அவன் என்னை உங்களிடம் வரவைத்தான். இது எனக்கு அவன் வழங்கிய அருட் கொடையாகும்.” என்றார்கள்.

 பின்பு, “நான் மரணமடைந்த பிறகு அல்லாஹ்வின் தூய மார்க்கத்திற்காக, அல்லாஹ்வின் தூதரோடு போரிட்டு, போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தார்களே அவர்களோடு என்னை நல்லடக்கம் செய்யுங்கள்” என்று கூறி வீர மரணம் அடைந்தார்கள்.

                        (நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:249)

இப்னு இஸ்ஹாக் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “தமது சமூகத்தில் உர்வா {ரலி} அவர்களின் அந்தஸ்து யாஸீன் சூராவில் சொல்லப்படும் சமூகத்தில் வாழ்ந்த வாலிபரின் அந்தஸ்தைப் போன்றதாகும்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

           (நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம், பாகம்:3, பக்கம்:173)

ஜாபிர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எனக்கு நபிமார்கள் காட்டப்பட்டனர். நான் மூஸா {அலை} அவர்களைப் பார்த்தேன். ஷனூஆ வின் ஆண்களின் சாயலில் இருந்தார்கள். நான் ஈஸா {அலை} அவர்களைப் பார்த்தேன். உர்வா இப்னு மஸ்வூத் {ரலி} அவர்களின் சாயலில் இருந்தார்கள்.  நான் இப்ராஹீம் {அலை} அவர்களைப் பார்த்தேன். அவர்கள் என் சாயலில் இருந்தார்கள். நான் அங்கே ஜிப்ரயீல் {அலை} அவர்களையும் பார்த்தேன். திஹ்யத்துல் கலபீ {ரலி} அவர்களின் சாயலில் இருந்தார்கள்.”

                                 (நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்:167)

இது உர்வா இப்னு மஸ்வூத் {ரலி} அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரால் வழங்கப்பட்ட கௌரவமாகும்.

காலம் கனிந்தது, உர்வா பின் மஸ்வூத் {ரலி} அவர்களைக் கொன்ற பிறகு அவர்களின் கோத்திரத்தார்களால் மன நிம்மதியாக வாழ்ந்திட இயலவில்லை.

 அவர்களின் அச்செயல் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஹிஜ்ரி 9 – ஆம் ஆண்டு ரமலான் மாதம் அண்ணலாரைக் காண ஒட்டு மொத்த ஸகீஃப் கோத்திரமும் மதீனா வந்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன் வந்து நின்ற ஸகீஃப் கோத்திரத்தினர் “நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், சில விஷயங்களில் எங்களுக்கு விதி விலக்கு வழங்க வேண்டும்.” என வேண்டி நின்றனர்.

நாங்கள் வசிக்கும் பகுதியை யுத்த தளமாக ஆக்கக் கூடாது.
சில காலங்களுக்கு சிலைகளை வணங்க அனுமதிக்க வேண்டும்.
தொழுகை மற்றும் ஜகாத்தில் சலுகைகள் தர வேண்டும்.
எங்களில் ஒருவரே எங்களுக்கு தலைவராக இருக்க வேண்டும்.
 (தீமைக்கெதிரான உயர்) மார்க்கப் போரில் கலந்து கொள்ள எங்களை கட்டாயப் படுத்தக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அவர்களின் 5 நிபந்தனைகளில் இரண்டை நிராகரித்து விட்டார்கள்.
 1.அல்லாஹ்வுக்கு இணை வைக்க அனுமதிக்க முடியாது.
2.தொழுகையிலும், ஜகாத்திலும் சலுகைகள் தர முடியாது.

 இந்த முடிவை நபிகளார் அறிவித்த போது, நபித்தோழர்கள் ஆட்சேபித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களிடம் “இஸ்லாம் அவர்களின் இதயத்தில் ஊடுருவி விட்டால் தானாகவே தீமைக்கெதிரான உயர் மார்க்கப் போரில் தாமாகவே பங்கெடுப்பார்கள்.
ஆம்! இஸ்லாத்தை தழுவிய பின்னர் ஒரு போதும் அவர்கள் தீமைக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:259 – 262)

ஏனெனில், இறை நம்பிக்கை ஒரு மனிதனின் உள்ளத்தில் துளிர் விட்டதென்றால், தீமைக்கெதிரான போராட்டக்குணம் ஊற்றாய் பிரவாகமெடுத்து ஓடும் என்பதில் அணுவளவும் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, ஈமானிய மான உணர்ச்சி உள்ளவர்கள், ஈமானிய உணர்வுகளை ஊனப்படுத்துகிற எந்தவொரு தீமையாக இருந்தாலும் எதிர்த்துப் போராடுகிற போர்க்குணம் கொண்டவர்களாய் மாறிப் போவார்கள். சில போது அதற்காக உயிர்த் தியாகம் செய்திடவும் துணிந்து விடுவார்கள்.

இந்த உம்மத்தின் பணி என்ன?

அல்லாஹ் கூறுகின்றான்: “மனிதர்களு (டைய நல் வாழ்வு) க்காக வெளியாக்கப் பட்ட சிறந்த (உம்மத்) சமுதாயத்தினராக நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்; மேலும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்.”                                   (அல்குர்ஆன்:3:110)

”அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து, (போராடாமலிருக்க) போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவே மாட்டார்கள். பயபக்தியாளர்களை அல்லாஹ் நன்கறிவான்.”                       (அல்குர்ஆன்:9:44)

வரையறை என்ன?
தீமைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் அல்லாஹ்வும், அவனது  தூதரும் வரையறுத்துத் தந்த வழியில் போராட வேண்டும்.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அதைத் தம் கரங்களால் தடுக்கட்டும். அதற்கு அவர் சக்தி பெறவில்லையென்றால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் அவர் சக்தி பெற்றிருக்கவில்லை என்றால், தமது மனதால் அதை வெறுத்து ஒதுக்கி விடட்டும்.”          (நூல்:புகாரி)

ஆனால், இன்று நன்மையை ஏவினாலே போதும் தீமை தானாகவே அகன்றுவிடும் என்று சிலரும், தீமையைக் கடுமையான முறையில் எதிர்க்க வேண்டும் என்று சிலரும், எல்லைகளை வகுத்துக் கொண்டு சமூகத்தில் முன்னெப்போதுமில்லாத அளவு தீமைகள் உருவாக காரணமாக அமைந்துவிட்டனர்.

இன்னும் சிலரோ, ஒரு படி மேலேறிச்சென்று “நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்கான ஏக போக உரிமைகள் தங்களுக்கு மட்டுமே இருப்பதாகக் கூறிக் கொண்டு, அவர்கள் எதையெல்லாம் சரி எனக் கூறுகின்றார்களோ அது தான் நன்மையென்றும், அவர்கள் எதையெல்லாம் தவறெனக் கருதுகின்றார்களோ அது தான் தீமையென்றும் அடம்பிடிக்கின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகள் சமூகத்தில் நிலவும் தீமைகள் நீங்குவதற்குப் பதிலாக வளர்வதற்கே வழிகோலும் என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.

போராடாவிட்டால்……?

நுஃமான் பின் பஷீர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “ நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் சட்டங்களை முறிக்கின்றவன், அல்லாஹ்வின் வரம்புகளை மீறி ஒருவன் செயல்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் கண்களால் பார்த்தும் தடுக்காமல் இருப்பவன் – இந்த இருவருக்குமான உதாரணம் இது தான் “சில மனிதர்கள் சேர்ந்து ஒரு கப்பலை விலைக்கு வாங்கினார்கள்; சிலர் மேல்தளத்திலும், சிலர் கீழ்தளத்திலும் அமர்வோம் என சீட்டுக் குலுக்கி முடிவெடுத்து பயணப்பட்டனர்.

கீழ்தளத்தில் உள்ளவர்கள் தண்ணீரின் அவசியத்தேவைக்காக மேல்தளத்தில் உள்ளவர்களை அடிக்கடி கடந்து செல்ல நேர்ந்தது. மேல்தளத்தில் உள்ளவர்கள் அதைத் தொல்லையாகக் கருதினர். இறுதியில், கீழ்தளத்தில் உள்ளவர்கள் ஒரு கோடாரியால் கப்பலின் அடிப்பகுதியை பிளக்கலாயினர்!

மேலே உள்ளவர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க, நாங்கள் தண்ணீர் தேவைக்கு மேலே வருவதை நீங்கள் தொல்லையாக கருதுவதால் கடலில் இருந்தே தண்ணீர் எடுக்க, கப்பலில் துவாரம் போட்டுக்கொண்டிருக்கின்றோம் என்று கீழ் தளத்தில் உள்ளவர்கள் கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் இந்த உதாரணத்தைக் கூறிவிட்டு, ”மேல் தளத்தவர்கள் கீழ்தளத்தவர்களின் கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினார்களென்றால், தாமும் தப்பிப்பதுடன் அவர்களையும் காப்பாற்றிவிடுவார்கள்.

ஆனால், கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்கள் என்றால் கீழ்தளத்தவர்களை மூழ்கடித்து, தாமும் மூழ்கி விடுவார்கள்.” என்று கூறினார்கள்.                       (நூல்: புகாரி)

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவனுடைய கைவசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் கட்டாயம் நன்மை புரியும்படி மக்களுக்கு ஏவிக்கொண்டே இருக்கவேண்டும்.

 தீயவர்களின் கரங்களைப் பிடித்து தீமைபுரிவதிலிருந்து அவனைத் தடுக்கவேண்டும். நீங்கள் அவனை சத்தியத்தின் முன்னால் அடிபணியச் செய்யவேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின் உங்கள் அனைவரின் உள்ளங்களும் ஒரே மாதிரியாகிவிடும்.

பிறகு அல்லாஹ் உங்களைத் தன் கருணையிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் தூக்கியெறிந்து விடுவான். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைச் செய்தது போன்று!”

            (அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத் {ரலி} நூல்:மிஷ்காத்)

ஆகவே, தீமைக்கு எதிரான போராட்டத்தை தம் வீட்டிலிருந்தே, தம் குடும்பத்திலிருந்தே துவங்கிட வேண்டும்.

இறை நம்பிக்கையின் ஒரு சிறு அணுவளவையேனும் தன்னுள் கொண்ட மனிதன் தீமைக்கு எதிராக போராட முன் வர வேண்டும்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக, சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக, வரதட்சணை, வட்டி, அநாச்சாரங்கள் போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி, அல்லாஹ் சொல்வது போன்ற “நடுநிலைச் சமுதாயமாக” மாற்றிட முஸ்லிம் உம்மத் பொறுப்பேற்றிட வேண்டும்.

அல்லாஹ் தீமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடும் மேன்மக்களாக நம் எல்லோரையும் ஆக்கியருள்வானாக!

தீமைக்கு எதிரான போராட்டத்தில்  நம்மை ஈடுபடுத்தி, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும், ஏகத்துவ எழுச்சிக்கும் உதவியாளர்களாய் வாழ்ந்திடும் நற்பேற்றினை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!   வஸ்ஸலாம்.







   








  

 

3 comments:

  1. தீமைகளுக்கெதிராக போராடுபவர்களுக்கு டானிக்

    ReplyDelete
  2. ஜசாகல்லாஹு ஹைரன்

    ReplyDelete