Wednesday 11 June 2014

தேய்ந்து வரும் அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும்…

     தேய்ந்து வரும் அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும்

      இன்று சமூகத்திலே எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதில் உலகாதாய நோக்கம் பிரதானமாக பார்க்கப்படுகின்றது.

எந்தத் துறையாக இருப்பினும் உலக நன்மைக்கே முன்னுரிமை தரப்படுகின்றது.

அர்ப்பணிப்பு உணர்வுகளும், அறச் சிந்தனைகளும் உயர் பண்புகளும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகிக் கொண்டிருக்கின்றது.

முழுக்க முழுக்க தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் வாழ்கிற சுயநலச் சிந்தனை பெருகி, பொது நலமும், பிறர் நலனின் மீதான அக்கறையும் அருகிப் போய் விட்டது.

وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் பிறருக்கு உபகாரம் செய்.”

பொதுவாக அறச்சிந்தனை என்பது வசதி வாய்ப்புகள் உள்ளவர்களிடமும், அர்ப்பணிப்பு உணர்வு என்பது எல்லா வகையிலும் அல்லாஹ் சிறப்பு படுத்தி வைத்திருப்பவர்களிடமிருந்தும் வெளிப்பட வேண்டும்.

அறச்சிந்தனை இல்லையாயின் அழிவு நிச்சயம்.

إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ (17) وَلَا يَسْتَثْنُونَ (18) فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ (19) فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ (20) فَتَنَادَوْا مُصْبِحِينَ (21) أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِنْ كُنْتُمْ صَارِمِينَ (22) فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ (23) أَنْ لَا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِسْكِينٌ (24) وَغَدَوْا عَلَى حَرْدٍ قَادِرِينَ (25) فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ (26) بَلْ نَحْنُ مَحْرُومُونَ (27) قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُلْ لَكُمْ لَوْلَا تُسَبِّحُونَ (28) قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ (29) فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ (30) قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ (31) عَسَى رَبُّنَا أَنْ يُبْدِلَنَا خَيْرًا مِنْهَا إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ (32) كَذَلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அல்லாஹ் அல்குர்ஆனின் அல் கலம் அத்தியாயத்தின் 17 –ஆம் வசனத்தில் இருந்து 33 –ஆம் வசனம் வரை இரு பிரிவினரின் இரகசிய உரையாடல் குறித்து விவரிக்கின்றான்.

அதில் அறச் சிந்தனை முற்றிலும் இல்லாமல் போன ஒரு பிரிவினரின் தோட்டம் முழுவதும் இல்லாமல், அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்ணுற்றார்கள் என்று குர்ஆன் விவரிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் முதன் முதலில் அந்த மக்களுக்கு அறச் சிந்தனையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் ஏவினார்கள், தூண்டினார்கள்.

அதன் விளைவாக மார்க்கமும் மேலோங்கியது. சமுதாய மக்களின் வாழ்க்கையின் தரமும் உயர்ந்தது.

அந்த மக்கள் எல்லா நிலைகளிலும் இந்த இரண்டு அம்சங்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

ஸஹாபாக்களும்.. அறச்சிந்தனையும்…

அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளை அந்த பெருமக்களின் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றிப்போட்டது.

எந்த அளவுக்கெனில், இருக்கும் போதும் அள்ளிக் கொடுத்தார்கள். இல்லாத போதும் கொடுக்க முடியாமல் போனது குறித்து ஏங்கினார்கள்.

அடியோடு மாற்றிய அந்த இறைக்கட்டளை.

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில் அர்ப்பணிக்காத வரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும், எதனை நீங்கள் அர்ப்பணித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”

இந்த இறை வசனம் இறங்கிய பின்னர் தான் ஒவ்வொரு நபித்தோழர்களும் அறத்திலும், அர்ப்பணிப்பிலும் தங்களை ஈடுபடுத்தினார்கள்.

وقال الإمام أحمد: حدثنا روح، حدثنا مالك، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، سمع أنس بن مالك يقول: كان أبو طلحة أكثر أنصاري (2) بالمدينة مالا وكانَ أحبَّ أمواله إليه بيْرَحاءُ -وكانت مُسْتقْبلة المسجد، وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيّب-قال أنس: فلما نزلت: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قال أبو طلحة: يا رسول الله، إن الله يقول: { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وإن أحبَّ أموالي إلَيَّ بيْرَحاءُ وإنها صدقة لله أرجو بِرَّها وذُخْرَها عند الله تعالى، فَضَعْها يا رسول الله حيث أراك الله [تعالى] (3) فقال النبي صلى الله عليه وسلم: "بَخٍ، ذَاكَ مَالٌ رَابِحٌ، ذَاكَ مَالٌ رَابِح، وَقَدْ سَمِعْتُ، وَأَنَا أرَى أنْ تجْعَلَهَا فِي الأقْرَبِينَ". فقال أبو طلحة: أفْعَلُ يا رسول الله. فَقَسَمها أبو طلحة في أقاربه وبني عمه. أخرجاه

முதன் முதலாக இதைத் துவக்கிவைத்தவர்கள் அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி) அவர்கள். தங்களுக்கு மிகவும் விருப்பமான பைருஹா தோட்டத்தை அறமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தந்தார்கள்.

                                               (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

இதைக் கொண்டு தான் மாநபி {ஸல்} இஸ்லாத்தின் முதல் அறக்கட்டளையை நிறுவினார்கள்.

وكذلك فعل زيد ابن حارثة، عمد مما يحب إلى فرس يقال له (سبل) وقال: اللهم إنك تعلم أنه ليس لي مال أحب إلي من فرسي هذه، فجاء بها [إلى ] «2» النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: هذا في سبيل الله. فقال لأسامة بن زيد (اقبضه). فكأن زيدا وجد من ذلك في نفسه. فقال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن الله قد قبلها منك). ذكره أسد بن موسى. وأعتق ابن عمر نافعا مولاه، وكان أعطاه فيه عبد الله بن جعفر ألف دينار. قالت صفية بنت أبي عبيد: أظنه تأول قول الله عز وجل:" لَنْ تَنالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ".

அடுத்து ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் ”தங்களது வீட்டில் இருந்து அழுது புலம்பியவர்களாக யாஅல்லாஹ்! என்னிடத்திலே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணம் ஒன்றும் இல்லை. என்னிடம் நான் மிகவும் நேசிக்கின்ற ஒன்றாக இதோ இந்த குதிரை மட்டும் தான் இருக்கின்றது. இதோ அதையும் உனக்காக அர்ப்பணித்து விடுகின்றேன்” என்று சொல்லியவராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.


அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்கள் 1000 தீனாரை எடுத்துக் கொண்டு வந்து நபி {ஸல்} அவர்களிடம் கொடுத்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தங்களின் அடிமையான நாஃபிஉ (ரலி) அவர்களை விடுதலை செய்தார்கள்.

                                             (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ)

عن ابن عمر رضي الله عنهما أن عمر تصدق بمال له على عهد رسول الله ? وكان يقال له: ثمغ، وكان به نخل، فقال عمر: يا رسول الله إني استفدت مالاً، وهو عندي نفيس، فأردت أن أتصدق به، فقال النبي ?: تصدق بأصله، لا يباع ولا يوهب، ولا يورث، ولكن ينفق ثمر. فتصدق به عمر، فصدقته تلك في سبيل الله، وفي الرقاب، والمساكين، والضيف وابن السبيل، ولذوي القربى، ولا جناح على من وليه أن يأكل بالمعروف، أو يؤكل صديقه غير متمولٍ به(251)، وفي رواية: أصاب عمر بخيبر أرضاً، فأتى النبي ? فقال: أصبت أرضاً لم أصب مالاً قط. أنفس منه، كيف تأمرني به؟ قال:إن شئت حبست أصلها وتصدقت بها، فتصدق عمر: أنه لا يباع أصلها، ولا يوهب، ولا يورث، في الفقراء وذوي القربى، والرقاب، وفي سبيل الله، والضيف، وابن السبيل، لا جناح على من وليها أن يأكل منها بالمعروف، أويطعم صديقاً غير متموِّل فيه(252)، فهذا الموقف العمري فيه فضيلة ظاهرة للفاروق رضي الله عنه ورغبته في المسارعة للخيرات، وإيثاره الحياة الآخرة على الحياة الفانية.

உமர் (ரலி) அவர்கள் நபிகளாரின் சமூகத்திற்கு வருகை தந்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கைபரில் கிடைத்த ஒரு பங்கு நிலமான “ஸமஃக்” உள்ளது.

அதை விடவும் சிறந்த மதிப்புமிக்க வேறொரு பொருள் என்னிடம் இல்லை; நான் அதனை அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றேன். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? அன்பு கூர்ந்து எனக்கு ஆலோசனை நல்குங்கள்” என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள்

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உமரே! நீர் விரும்பினால் அதன் அசலை வக்ஃப் செய்து விடுங்கள்! அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை தர்மம் செய்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நல்கிய ஆலோசனையின் படி தங்களின் நிலத்தை அர்ப்பணிப்புச் செய்தார்கள்.

அதாவது, அந்த நிலம் விற்கவோ, அன்பளிப்புச் செய்யவோ பட மாட்டாது. அதற்கு யாரும் வாரிசு ஆகவும் முடியாது. அதன் முழு வருமானமும் ஏழை, எளியோர், வறியோர், வறுமையில் வாடும் உமர் (ரலி) அவர்களின் உறவினர்கள், விருந்தாளிகள், பிரயாணிகள் ஆகியோருக்கு செலவழிக்கப்படும்.

மேலும், அடிமையை விடுதலை செய்யவும், சன்மார்க்கப் போருக்காக செலவழிக்கவும் அதில் இருந்து பயன் படுத்தலாம். மேலும், இந்தச் சொத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பவர் என்கிற முறையில் அவரும் நியாயமான முறையில் சிறிது எடுத்துக் கொள்ளலாம். அல்லது அவரின் நண்பர்களுக்கும் அதிலிருந்து தர்மமாக வழங்கிக் கொள்ளலாம். ஆனால்,ஒரு போதும் அதிலிருந்து சொத்தாக எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

(நூல்: ஃப்ஸ்லுல் கிதாப் ஃபீ ஸீரதி இப்னுல் கத்தாப் லில் இமாமிஸ் ஸுல்லாபி)

பிரிதொரு சந்தர்ப்பத்தில், அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “மனிதன் இறந்த பிறகு அவனுடைய பணிகள் இவ்வுலகத்தை விட்டும் நின்று விடுகின்றன; ஆனால், மூன்று பணிகளைத் தவிர! அவை அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது; அவற்றின் நன்மையும் அவனுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன! நீடித்த தர்மம், பயன் தரும் கல்வி, அவனுக்காக பிரார்த்தனை புரியும் அவனுடைய நல்ல சந்ததிகள்.” என்று கூறினார்கள்.

இந்த அறிவிப்பிற்கு பிறகு, முன்பை விட நபித்தோழர்களிடையே அறச்சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும் மிகுதியாகி காணப்பட்டது.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்களும், அலீ (ரலி) அவர்களும், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களும் தாங்கள் அதிகம் விரும்பிய, நேசித்த பெரும் நிலங்களை அறப்பணிகளுக்கு ஈடுபடுத்திட அர்ப்பணிப்பு உணர்வுடன் முன் வந்தார்கள்.

எந்த அளவுக்கென்றால், ஓரளவு வசதியுள்ள எந்தவொரு நபித்தோழரும் அர்ப்பணிப்புச் செய்யாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கள் சொத்துக்களை அல்லாஹ்வின் பாதையில் அள்ளித் தந்து சமுதாய முன்னேற்றத்தில் மிகப் பெரும் பங்காற்றினார்கள்” என்பதை நான் அறிவேன்.

வரலாற்றில் கல் மனதை கரைத்திடும் வல்லமை கொண்ட இப்படியும் ஒரு செய்தி உண்டு…

روى عنه الحسن بن أَبي الحسن وقتادة أَنه قال: اللهم، إِني تصدقت بعرضي على عبادك. روى ابن عيينة، عن عمرو بن دينار، عن أَبي صالح، عن أَبي هرَيرة أَن رجلاً من المسلمين قال: اللهم، إِنه ليس لي مال أَتصدق به، وإني قد جعلت عرضي صدقَةً لله، من أَصاب منه شيئاً من المسلمين. قال: فأوجب النبي صلى الله عليه وسلم أَنه قد غُفِر له، أَظنه أَبا ضمضم.
وروى من حديث ثابت، عن أَنس أَن رسول الله صلى الله عليه وسلم قال: " ألا تحبون أن تكونوا كأبي ضمضم " ؟ قالوا: يا رسول الله، ومن أَبو ضمضم؟ قال: " إِن أَبا ضمضَم كَانَ إِذَا أصبَحَ قَالَ: " اللهم إني قد تصدقت بعرضي على من ظلمني " .
أَخرجه أَبو عمر.


அனஸ் (ரலி) அவர்கள் மற்றும் அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:

ஒரு நாள் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “தோழர்களே! நீங்கள் அபூ ளம்ளமை (ரலி) ப்போல ஆகிட பிரியப்படுகின்றீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஹாபாக்கள் ”அல்லாஹ்வின் தூதரே! யார் அந்த அபூ ளம்ளம்? என வினவினார்கள்.

அதற்கு, அண்ணலார் “ஒவ்வொரு நாள் விடியும் போதும் அவர் அல்லாஹ்விடம் இப்படி மன்றாடுகின்றார் “ யாஅல்லாஹ்! உன் பாதையில் அர்ப்பணித்திட என்னிடம் பொருளாதார வளம் இல்லை. என் உடல் ஊனத்தால் என்னால் அதை ஈட்டிட முடியவில்லை. ஆகவே, என்னை யாராவது குறை படுத்தி, ஏசிப் பேசி இருந்து, அதை உனக்காக நான் பொருந்திக் கொண்டிருப்பேன்.

அந்த பொறுமைக்கு நீ ஏதாவது கூலி வழங்கலாம் என நினைத்திருப்பாய், அப்படி நீ வழங்கும் அந்த கூலியை நான் உன்னுடைய பாதையில் அர்ப்பணிக்கின்றேன்! என்று..

இதைக் கூறிய அண்ணலார் {ஸல்} அவர்கள் “அவரின் பிழைகளை மன்னிப்பதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்” இன்னொரு அறிவிப்பில், ”அல்லாஹ் அவருக்கு தர்மம் வழங்கிய நன்மையை கொடுப்பதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்” என்று கூறினார்கள்.

         (நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப், உஸ்துல் ஃகாபா)

உலகில் வேறெந்த மதமும் வழங்கிடாத மகத்தான வழிகாட்டலை இந்த மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியது.

இஸ்லாமியம் இந்த உலகில் கோலோச்சிய கால கட்டத்தில் மேற்கூறிய அறச் சிந்தனையின், அர்ப்பணிப்பு உணர்வின் உந்துதலால் தான் வறுமை, அடிமைத்தனம், ஏழ்மை, பசி, நோய், பஞ்சம், தீண்டாமை, அறியாமை, கல்லாமை, இல்லாமை போன்ற மனிதனை அழிக்க வல்ல பல தீய இடர்களிலிருந்து மனித சமூகத்தை மிகக் கவனமாக பாதுகாக்க முடிந்தது.

ஒரு படி மேலாகச் சொல்ல வேண்டுமானால், ஆசிரியர், மு. குலாம் முஹம்மத் அவர்கள் தங்களது “இஸ்லாமிய நாகரிகம்” எனும் நூலில் “முஸ்லிம் தனவந்தர்கள் சிலர் சில அறக்கட்டளைகளை உருவாக்கினார்கள். இவை அதிசயமான அறக்கட்டளைகள். இவற்றில் சில நிலப்பரப்புகளைத் தானமாகத் தந்தார்கள்.

இந்த நிலப்பரப்புகள் வயது வந்த மிருகங்களின் உணவாகப் பயன்படும் தழைகளையும், செடிகளையும் வளர்க்கப் பயன்படுத்தப் படவேண்டும் என உயில் எழுதித் தந்தார்கள்.

இப்படி உருவாகிய அறக்கட்டளைகளில் ஒன்று மாராஜ் – இ – அக்ஸர். இது டமஸ்கஸில் இருக்கின்றது. இதிலுள்ள மேய்ச்சல் பகுதிகள், தங்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகளின் உணவறைகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் குதிரைகள் இவற்றில் தங்கள் ஆயுள் உள்ளவரைக்கும் அக்குதிரைகள் மேய்ந்தன.

டமஸ்கஸில் உள்ள இன்னொரு அறக்கட்டளை பூனைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. பூனைகளுக்கு இங்கே உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டன.

அவற்றுக்காக கட்டப்பட்ட வீடுகளில் நூற்றுக்கணக்கான பூனைகள் வாழ்ந்தன. இங்கே பூனைகளுக்கு உணவும், உறைவிடமும் கிடைத்ததால் அவை அங்கிருந்து வெளியே சென்றிட வில்லை. அவை வெளியே சென்றதெல்லாம் விளையாடவும், குதூகலித்திருக்கவுமே!

இஸ்லாமிய நாகரிகத்திற்கென தனியானதோர் வரலாறு உண்டு. வேறெந்த நாகரிகமும் இப்படியொரு பெருமையை பெற்றிட முடியாது.

    (நூல்: இஸ்லாமிய நாகரிகம், மிருகங்களிடம் அன்பும் பரிவும் எனும் பகுதி)

மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் முஸ்லிம்களின் அறச்சிந்தனையால் பயன்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் காலத்தோடு நின்று விட வில்லை. நபித்தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அது பல்கிப் பெருகி இருந்தது. வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் தங்களது ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} எனும் நூலில் பதிவு செய்திருக்கும் ஒரு செய்தி இதோ..

ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களில் நபிகளாருக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

சன்மார்க்கத்திற்காக ஆரம்ப காலத்தில் உடலால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களை ஃகாப்பாப் (ரலி) அவர்கள் சந்திக்க வருகின்றார்கள்.

வந்தவர்களை முகமுன் கூறி வரவேற்ற உமர் (ரலி) அவர்கள் தாங்கள் அமர்கிற ஆசனத்தில் ஃகப்பாப் (ரலி) அவர்களை அமர வைத்து விட்டு, இந்த இடத்தில் அமர்வதற்கு உங்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் மட்டுமே தகுதி இருப்பதாக நான் கருதுகின்றேன்” என்றார்கள்.

அது கேட்ட ஃகப்பாப் (ரலி) அவர்கள், அப்படியேல்லாம் சொல்லி விடாதீர்கள். பிலால் கொடுமைப் படுத்தப் படுகிற போது அவரின் மீது இரக்கம் கொள்ள அன்றைக்கு அபூ பக்ர் (ரலி) போன்ற சில நல்லவர்கள் இருந்தார்கள்.

ஆனால், உம்மு அன்மார் வீட்டில் அடிமையாக இருந்த போது தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். எனக்கிழைத்த கொடுமை போல் வேறெவருக்கும் கொடுமை இழைக்கப்படவில்லை.

அக்கொடுமையில் இருந்து என்னை சிறிது நேரம் நிறுத்தி வைப்பதற்கு கூட ஒரு ஆள் கிடையாது.
அவர்கள் விரும்பிய போதெல்லாம் என்னை கொடுமையில் வாட்டி எடுத்தார்கள் என்று கூறியவர்களாக தன் மேல் போர்த்தியிருந்த மேல் துண்டை எடுத்து தங்களின் முதுகுப் புறத்தைக் காட்டினார்கள்.

கன நேரம் தான் உமர் பார்த்திருப்பார்கள். சட்டென முகத்தை திருப்பியவர்களாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! என் வாழ்நாளில் இப்படியொரு முதுகை நான் கண்டதே இல்லை! ஃகப்பாப் அவர்களே! என்று கூறி கதறி அழுதார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஃகப்பாப் (ரலி) அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையை உமர் (ரலி) அவர்களிடம் தொடர்ந்து கூறினார்கள்.

”நெருப்பை மூட்டி என்னை அதில் தள்ளுவார்கள். என் நெஞ்சின் மீது இரு கால்களையும் வைத்து அழுத்தியவாறு ஒருவன் நிற்பான். ஆனால், என் முதுகந்தண்டின் கொழுப்பு உருகி அத்தீயை அணைத்து விடும். இப்படியே பல நாட்கள் பல தடவை என்னை கொடுமை படுத்தி இருக்கின்றார்கள் இதனால் பல நேரங்களில் நெருப்புக் கங்குகளோடு என் முதுகு பல நேரங்களில் ஒட்டி விடும். அதன் வடுவைத்தான் இன்று நீங்கள் பார்க்கின்றீர்கள்.”

                                                 (நூல்: அல் இஸ்தீஆப்)

இந்த உரையாடல் நடைபெறுகிற போது ஃகப்பாப் அவர்களுக்கு 65 வயது. உமர் (ரலி) அவர்களுடன் சந்திப்பு நடைபெற வில்லையாயின் ஃகப்பாப் அவர்களின் தியாகம் இஸ்லாமிய உலகிற்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஏராளமான அன்பளிப்புகளையும், அரசின் மான்யங்களையும் ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் இது தொடர்ந்தது.

وقد أتاح هذا الدخل الوفير لخبّاب أن يبتني له دارا بالكوفة، وكان يضع أمواله في مكان ما من الدار يعرفه أصحابه وروّاده.. وكل من وقعت عليه حاجة، يذهب فيأخذ من المال حاجته..
ومع هذا فقد كان خبّاب لا يرقأ له جفن، ولا تجف له دمعة كلما ذكر الرسول عليه الصلاة والسلام وأصحابه الذين بذلوا حياهم للله، ثم ظفروا بلقائه قبل أن تفتح الدنيا على المسلمين، وتكثر في أيديهم الأموال.

இராக்கின் கூஃபாவிற்கருகே எளிய ஓர் வீட்டில் தங்களின் வாழ்க்கையை கழித்து வந்த அவர்கள் “தங்களுக்கு வருகின்ற மானியங்களையும், பணம் காசுகளையும் வீட்டின் நடுவே கொட்டிவைத்து” யார் யாருக்கு தேவைப்படுகின்றதோ அவர்கள் வந்து தங்களின் தேவைக் கேற்ப எடுத்துச் செல்லலாம்” எனும் பொது அறிவிப்பை அறிவித்து இருந்தார்கள்.

எந்நேரமும் அவர்களின் இல்லம் திறந்தே இருக்கும். சதா எப்போதும் யாராவது வந்து தங்களுக்கான பொருட்களை எடுத்துச் சென்று கொண்டே இருப்பார்கள்.

سمعوه وهو يتحدث االى عوّاده الذين ذهبوا يعودونه وهو رضي الله عنه في مرض موته.
قالوا له:
أبشر يا أبا عبدالله، فانك ملاق اخواتك غدا..
فأجابهم وهو يبكي:
" أما انه ليس بي جزع .. ولكنكم ذكّرتموني أقواما، واخوانا، مضوا بأجورهم كلها ام ينالوا من الدنيا شيئا..
وانّا بقينا بعدهم حتى نلنا من الدنيا ما لم نجد له موضعا الا التراب"..
وأشار الى داره المتواضعة التي بناها.
ثم أشار مرة أخرى الى المكان الذي فيه أمواله وقال:
" والله ما شددت عليها من خيط، ولا منعتها من سائل"..!
ثم التفت الى كنفه الذي كان قد أعدّ له، وكان يراه ترفا واسرافا وقال ودموعه تسيل:
" أنظروا هذا كفني..
لكنّ حمزة عم الرسول صلى الله عليه وسلم لم يوجد له كفن يوم استشهد الا بردة ملحاء.... اذا جعلت على رأسه قلصت عن قدميه، واذا جعلت على قدميه قلصت عن رأسه"..!


ஃகப்பாப் அவர்கள் நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அழுது கொண்டே இருப்பார்களாம். வீட்டிற்கு நலம் விசாரிக்கச் செல்லும் நபித்தோழர்களில் சிலர் “அழாதீர்கள்! உங்களின் பழைய இஸ்லாமிய நண்பர்களையல்லவா நீங்கள் சந்திக்க இருக்கின்றீர்கள்! மகிழ்ச்சியோடு இருங்கள்! என்று கூறுவார்களாம்.

அதைக் கேட்கிற போது, ஃகப்பாப் (ரலி) அவர்கள் “என் உயிரோடும் உணர்வோடும் ஒன்றித்து விட்ட அந்த உத்தமர்களை நான் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் கசிந்து விடுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விற்காகவே வாழ்ந்தார்கள். அவனுக்காகவே இறந்தும் போனார்கள். அவர்கள் தங்களின் நல்லறங்களுக்கான கூலியை முழுமையாகப் பெற்ற வண்ணமல்லவா இவ்வுலகை விட்டுச் சென்றார்கள்.

ஆனால், நானோ அவர்களுக்குப் பின்னரும் கூட உயிர் வாழ்கின்றேனே? உலகத்தின் சுக போகங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்றே? சத்தியமாகச் சொல்கின்றேன்! ஒரு நூலிழையைக் கொண்டு கூட இந்தச் சொத்துக்களை நான் கட்டிக்காத்திட வில்லை. மாறாக, தேவையுள்ளவர்களுக்காக என் வீட்டின் கதவுகளை நான் திறந்தே வைத்து விட்டேன்!

சொல்லிக் கொண்டே, தனக்காக தயாராய் வைத்திருந்த கஃபன் துணியைச் சுட்டிக் காட்டி “தோழர்களே! ஹம்ஸா (ரலி) அவர்களும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் உஹதிலே ஷஹீத் ஆனார்கள். ஆனால், அவர்களின் தலையை மூடினால் காலும், கால்களை மூடினால் தலையும் தெரியும் அளவிற்கு தானே இருந்தது. ஆனால், என்னுடைய கஃபன் அவர்களுக்குரியதை போன்றா இருக்கின்றது?” என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார்களாம்.

இறுதியாக, ஹிஜ்ரி 37 –ஆம் ஆண்டில் தங்களது 73 –வது வயதில் மறுமை வாழ்க்கைக்குப் பயணமானார்கள்.    

                                  (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} )

ஸஹாபாக்களைப் பொருத்த வரையில் அவர்கள் எல்லா நிலைகளிலும் அறச்சிந்தனையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

ஆனால், இன்றைக்கு சமூகத்திலே தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் தங்களின் பொருளாதாரத்தை எங்கு முடக்கினால் நாம் இறந்த பின்னரும் நம் சந்தததிகள் லாபம் அடைவார்கள் என்று ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் கொண்டு முடக்கி பொருளாதாரத்தையும் உலக மோகத்தையும் நோக்கமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முன் சென்ற ஒரு சமூக மக்களின் வாழ்க்கை நமக்கு இன்றளவும் திறந்த புத்தகமாய் இருந்து கொண்டிருக்கின்றது.

அருகிப் போயிருக்கும் அறச்சிந்தனையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பெருகச் செய்திட முயற்சிப்போம்!

அல்லாஹ்வின் அருள் இந்த உம்மத்திற்கு தட்டில்லாமல் கிடைத்திட மனம் உருகி பிரார்த்திப்போம்!

வல்ல ரஹ்மான் அத்தகைய ஈகையை நம் செல்வந்தர்களுக்கும், செல்வந்தர்களாகி ஈந்தளிக்கும் அந்தப் பாக்கியத்தை நமக்கும் தந்தருள் பாளிப்பானாக!

                ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

                           வஸ்ஸலாம்!!!



No comments:

Post a Comment