Thursday 7 May 2015

பேரிடர்களும், பேரிழப்புகளும் கற்பிக்கும் பாடம் என்ன?...



பேரிடர்களும், பேரிழப்புகளும் கற்பிக்கும் பாடம் என்ன?...



மனித வாழ்வென்பது நிரந்தரமில்லை. ஆனால், மனித வாழ்வில் இன்பம், துன்பம், வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம், ஏற்றம் இறக்கம் என்பது மாறி மாறி இடம்பெருவது நிரந்தரம்.

இந்த இரட்டை வரையறைகளை அல்லாஹ் மனித வாழ்வோடு இணைத்து வைத்திருப்பதின் தத்துவமே மனிதன் மகத்தான பாடங்களையும், படிப்பினைகளையும் பெறவேண்டும் என்பதற்காகத்தான்.

என்றாலும், பெரும்பாலான மனிதர்கள் இந்த இருநிலைகளிலும் பாடங்களையோ, படிப்பினைகளையோ கற்றுக் கொள்வதில்லை.

அதிலும் குறிப்பாக இழப்புகளோ, அழிவுகளோ ஏற்படும் போது மிகத் தீர்க்கமான பாடத்தையும் படிப்பினையையும் பெறவேண்டும்.

அழிவு, இழப்பு என்பது அடிப்படையில் இந்த உலகில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் சொந்தமானது. அதிலும் குறிப்பாக மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 –ஆம் தேதி நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏறத்தாள எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடு, வாசல், சொத்துக்களை இழந்தனர்.

இதற்கு முன்னரும் கூட நாம் இது போன்ற   நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி, புழுதிவாரி தூற்றும் சூறாவளி, புயல், வெள்ளம் இயற்கைப் பேரிடர்களை கண்டிருக்கின்றோம்.

எனினும், இத்தகைய பேரிடர்கள் மூலமாக, அழிவுகளின் மூலமாக நாம் என்ன பாடத்தைக் கற்றிருக்கின்றோம்? என்ன படிப்பினைகளைப் பெற்றிருக்கின்றோம்?...

அல்லாஹ் வழங்கும் அருட்கொடைகளிலிருந்து…. பாடமும்.. படிப்பினையும்..

ஸுலைமான் (அலை) அவர்கள் தங்களின் படை, பரிவாரங்களோடு அணிவகுத்து வருகின்றார்கள். வெகு தொலைவிலே ஒரு எறும்புக் கூட்டம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உணவு தேடி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நபி ஸுலைமான் (அலை) அவர்களின் படை, பரிவாரங்களின் பலத்தை அல்லாஹ் எறும்புக்கு அறிவுறுத்தி இருப்பான் போலும். எறும்புக் கூட்டத்தை வழி நடத்தும் தளபதி தம் இனத்தை நோக்கி ஒர் ஆணை பிறப்பிக்கின்றது.

இந்த உரையாடலை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ () حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ ()

 “மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான – முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.

( ஒரு முறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார் ) அவர்கள் அனைவரும் எறும்புகளின் வசிப்பிடத்திற்கு – பள்ளத்தாக்கிற்கு அருகே வந்த போது ஓர் எறும்பு கூறியது “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்து விடக்கூடாது”.

فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ ()

நெகிழ்ந்து போன ஸுலைமான் (அலை) அவர்கள் புன்னகைப் பூத்த வதனத்தோடு நெகிழ்ச்சியோடு “இறைவா! என் மீதும், என் பெற்றோர் மீதும் நீ புரிந்த உபகாரத்திற்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும், நீ திருப்திப் படுகின்ற நற்காரியங்களை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!” என்று கூறினார்கள்.                         ( அல்குர்ஆன்: 27: 17-19 )

பிரிதொரு தருணத்தில் ஸபா நாட்டு அரசியின் வருகைக்கு முன்னர் அந்த அரசியின் அரியணையை தம் அரண்மனைக்கு கொண்டு வருகிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது என தங்களது கட்டுப்பாட்டின் கீழிருக்கிற வலிமை வாய்ந்த ஜின் மற்றும் மனிதப் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

இந்த உரையாடலை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ () قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ () قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ

ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப்படிந்தோராய் என்னிடம் வரும் முன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வர முடியும்?” பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: ”நீங்கள் உங்களுடைய இடத்தை விட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வருகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்

அவர்களுள் வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர்நீங்கள் கண் மூடி திறப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வருகின்றேன்என்று கூறினார்.

فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ ()

அவ்வாறே அந்த அரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (அலை) அவர்கள் (நெகிழ்ச்சியோடு) உரக்கக் கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா அல்லது நன்றி கொல்கின்றேனா என்பதை சோதிப்பதற்காகவே அவன் இவ்வாறு கொடை வழங்கியிருக்கின்றான்”.                                    ( அல்குர்ஆன்: 27: 38-40 )

ஸுலைமான் (அலை) அவர்கள் இறைவனிடத்தில் இப்படிப் பிரார்த்தித்திருந்தார்கள்:

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

 இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக நீயே உண்மையான கொடையாளன்!”.              ( அல்குர்ஆன்: 38:35 )

ஆனால், அல்லாஹ்வோ நாம் கேட்டதை விட மிகப் பிரம்மாண்டமான அளவில் நம்மை கௌரவிக்கின்றானே, நிச்சயமாக இது நமக்கானது அல்ல, எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நமக்கு இப்படி வழங்குகின்றான். எனவே, வாழ்வில் எத்தருணத்திலும் நன்றி கொன்று விடக்கூடாது, இவைகளை வழங்கி கௌரவித்த அவனிடமே அவனுக்கு நன்றியோடு வாழ்கிற நற்பேற்றையும் கேட்டுப் பெறுவோம் என்று துஆ செய்தார்கள்.

நாமும் நம் வாழ்க்கையில் எதிர் பாராத எத்துனையோ அருட்கொடைகளை, நற்பேறுகளை அனுபவிக்கின்றோம் என்றாவது நம்முடைய மனதில் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்கிறதா?, நம்முடைய நாவு இப்படியான பிரார்த்தனையை உதிர்த்திருக்கின்றதா?

ஏனென்றால், நாம் அவ்வாறான படிப்பினையையும், பாடத்தையும் அங்கிருந்து பெறவில்லை.

வெற்றியிலிருந்து பெற வேண்டிய பாடமும்படிப்பினையும்

ஸைப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.

இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.

இதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.

இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும். ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.

அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.

ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

كانت الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..
عندما فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":
قال له:
" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام وأهله"..؟؟
فأجاب أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:
ويحك يا جبير..
ما أهون الخلق على الله اذا هم تركوا أمره..
بينما هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!
أجل..


அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள்அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.

அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கிஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”

ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.

இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.

மனிதன் உலக வாழ்வில் பெறுகின்ற வெற்றியில் இருந்தும், முன்னேற்றத்தில் இருந்தும் எத்தகைய உயரிய படிப்பினையையும், பாடத்தையும் பெற வேண்டும் என்பதை அபூதர்தா (ரலி) அவர்கள் நமக்கு உணர்த்துகின்றார்கள்.

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.

அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.

ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!

இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்துஇது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியதுஎன்று அசரீரி வந்தது.

அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.

அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்என்றார்கள்.

அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.

ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம்.

இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

                ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )

உலக வாழ்வின் பல பகுதிகளில் இருந்தும் தேவையான பாடங்களையும், படிப்பினைகளையும் பெறுகின்றவர்களால் மட்டுமே இது போன்ற மகோன்னதமான அந்தஸ்தைப் பெற இயலும் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

செல்வச் செழிப்பில் பெறவேண்டிய பாடமும்.. படிப்பினையும்…

سمعوه وهو يتحدث االى عوّاده الذين ذهبوا يعودونه وهو رضي الله عنه في مرض موته.
قالوا له:
أبشر يا أبا عبدالله، فانك ملاق اخواتك غدا..
فأجابهم وهو يبكي:
" أما انه ليس بي جزع .. ولكنكم ذكّرتموني أقواما، واخوانا، مضوا بأجورهم كلها ام ينالوا من الدنيا شيئا..
وانّا بقينا بعدهم حتى نلنا من الدنيا ما لم نجد له موضعا الا التراب"..
وأشار الى داره المتواضعة التي بناها.
ثم أشار مرة أخرى الى المكان الذي فيه أمواله وقال:
" والله ما شددت عليها من خيط، ولا منعتها من سائل"..!
ثم التفت الى كنفه الذي كان قد أعدّ له، وكان يراه ترفا واسرافا وقال ودموعه تسيل:
" أنظروا هذا كفني..
لكنّ حمزة عم الرسول صلى الله عليه وسلم لم يوجد له كفن يوم استشهد الا بردة ملحاء.... اذا جعلت على رأسه قلصت عن قدميه، واذا جعلت على قدميه قلصت عن رأسه"..!

ஃகப்பாப் பின் அல் அரத் (ரலி) அவர்கள் நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

சதா அழுது கொண்டே இருப்பார்களாம். வீட்டிற்கு நலம் விசாரிக்கச் செல்லும் நபித்தோழர்களில் சிலர்அழாதீர்கள்! உங்களின் பழைய இஸ்லாமிய நண்பர்களையல்லவா நீங்கள் சந்திக்க இருக்கின்றீர்கள்! மகிழ்ச்சியோடு இருங்கள்! என்று கூறுவார்களாம்.

அதைக் கேட்கிற போது, ஃகப்பாப் (ரலி) அவர்கள்என் உயிரோடும் உணர்வோடும் ஒன்றித்து விட்ட அந்த உத்தமர்களை நான் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் கசிந்து விடுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விற்காகவே வாழ்ந்தார்கள். அவனுக்காகவே இறந்தும் போனார்கள். அவர்கள் தங்களின் நல்லறங்களுக்கான கூலியை முழுமையாகப் பெற்ற வண்ணமல்லவா இவ்வுலகை விட்டுச் சென்றார்கள்.

ஆனால், நானோ அவர்களுக்குப் பின்னரும் கூட உயிர் வாழ்கின்றேனே? உலகத்தின் சுக போகங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்றே? சத்தியமாகச் சொல்கின்றேன்! ஒரு நூலிழையைக் கொண்டு கூட இந்தச் சொத்துக்களை நான் கட்டிக்காத்திட வில்லை. மாறாக, தேவையுள்ளவர்களுக்காக என் வீட்டின் கதவுகளை நான் திறந்தே வைத்து விட்டேன்!

சொல்லிக் கொண்டே, தனக்காக தயாராய் வைத்திருந்த கஃபன் துணியைச் சுட்டிக் காட்டிதோழர்களே! ஹம்ஸா (ரலி) அவர்களும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் உஹதிலே ஷஹீத் ஆனார்கள். ஆனால், அவர்களின் தலையை மூடினால் காலும், கால்களை மூடினால் தலையும் தெரியும் அளவிற்கு தானே இருந்தது. ஆனால், என்னுடைய கஃபன் அவர்களுக்குரியதை போன்றா இருக்கின்றது?” என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார்களாம்.

என்றோ நிகழ்ந்து விட்ட உஹத் ஷுஹதாக்களின் மரணமும், அவர்களின் இறுதி நிலையும் கப்பாப் (ரலி) அவர்களின் வாழ்வில் எத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது!?”

தங்களின் பொருளாதாரம் முழுவதையும் தங்களின் வீட்டில் நிரப்பி வைத்து விரும்பியவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என பொது அறிவிப்புச் செய்யும் ஓர் உன்னத நிலைக்கு கப்பாப் (ரலி) அவர்கள் உயர்ந்தார்கள்.

وقد أتاح هذا الدخل الوفير لخبّاب أن يبتني له دارا بالكوفة، وكان يضع أمواله في مكان ما من الدار يعرفه أصحابه وروّاده.. وكل من وقعت عليه حاجة، يذهب فيأخذ من المال حاجته..
ومع هذا فقد كان خبّاب لا يرقأ له جفن، ولا تجف له دمعة كلما ذكر الرسول عليه الصلاة والسلام وأصحابه الذين بذلوا حياهم للله، ثم ظفروا بلقائه قبل أن تفتح الدنيا على المسلمين، وتكثر في أيديهم الأموال.

இராக்கின் கூஃபாவிற்கருகே எளிய ஓர் வீட்டில் தங்களின் வாழ்க்கையை கழித்து வந்த அவர்கள்தங்களுக்கு வருகின்ற மானியங்களையும், பணம் காசுகளையும் வீட்டின் நடுவே கொட்டிவைத்துயார் யாருக்கு தேவைப்படுகின்றதோ அவர்கள் வந்து தங்களின் தேவைக் கேற்ப எடுத்துச் செல்லலாம்எனும் பொது அறிவிப்பை அறிவித்து இருந்தார்கள்.

எந்நேரமும் அவர்களின் இல்லம் திறந்தே இருக்கும். சதா எப்போதும் யாராவது வந்து தங்களுக்கான பொருட்களை எடுத்துச் சென்று கொண்டே இருப்பார்கள்.

ஓர் இழப்பை எந்த வகையில் ஓர் இறைநம்பிக்கையாளர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை, பாடத்தை கப்பாப் (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றது.

இறுதியாக, ஹிஜ்ரி 37 –ஆம் ஆண்டில் தங்களது 73 –வது வயதில் மறுமை வாழ்க்கைக்குப் பயணமானார்கள்.   

                                  (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்} )

பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் ஏன் ஏற்படுகிறது?

அறிவியல் & புவியியல் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் அவ்வப்போது புதிய புதிய ஆய்வுகளையும், தகவல்களையும் இந்தச் சமூகத்திற்கு தந்து கொண்டே இருக்கின்றனர்.

1. பூமி பந்தானது ஓர் முட்டைக்கு ஒப்பாக இருக்கின்றது. பூமியின் மையத்திலிருந்து 3500 கி.மீ. அளவுக்கு உருகிய மாக்மா என்னும் குழம்பும் அதன் மீது முட்டை ஓடுகளைப் போல் மிதக்கும் பூமித்தகடுகளும் கொண்டது தான் பூமி. பூமியின் மேற்பரப்பு இது சுமார் 70 கி.மீ. ஆழம் கொண்டது.

இது கிட்டதட்ட 12 தட்டையான தகடுகளால் ஆனது. இந்த தகடுகளின் மாறுபட்ட இயக்கங்களால் பூகம்பம் ஏற்படுகின்றது.

2. பூமிக்கு அடியில் பல அடுக்குகளின் பாறைத்தட்டுகள் இருக்கின்றன. இந்தப் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் போது, உயரும் பாறைத்தட்டுகளின் விளிம்புகள் அருகில் இருக்கும் பாறைத்தட்டுகளின் விளிம்புகளுடன் உரசும் போது ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி பரவுவதால் நிலநடுக்கம் ஏற்படுகின்றது.

3. 30 வினாடிக்கு ஒரு முறை பூமி திடீரென அசைகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் பூமி ஐந்து லட்சம் நடுக்கங்கங்களை ஏற்படுத்துவதாக நிலநடுக்கத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் நிலநடுக்கமானிகள் ( கருவி ) பதிவு செய்திருக்கின்றன.

பேரிழப்புக்களின் புள்ளி விவரங்கள்….

கி.பி. 1703 –ல் ஜப்பான் டோக்கியோவில் நிகழ்ந்த பூகம்பத்தில் இருந்து 2004 சுனாமி வரை பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த பேரிடர்களின் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 22,27118 –இருபத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஏழாயிரத்து நூற்றி பதினெட்டு ஆகும். தற்போதைய நேபாள உயிரிழப்புகளின் எண்ணிக்கையான 8000 – எட்டாயிரத்தையும் சேர்த்தால் 22,35118 –இருபத்தி இரண்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நூற்றி பதினெட்டு ஆகும்.

அதிகபட்சமாக 1976 –ல் சீனா வின் டாங்சன் மாநிலத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவு பதிவான நில நடுக்கத்தில் 6,50000 ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

மிகக் குறைவாக 1964 –ல் அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பதிவான பூகம்பத்தில் 131 பேரும், சுனாமியில் 128 பேரும் உயிரிழந்தனர். என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இன்னும், கி.மு 1177 –ல் சீனாவில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டதாக சீனாவின் வரலாற்றிலும், கி.மு 580 –ல் ஐரோப்பாவில் பெரிய பூகம்பம் ஒன்று ஏற்பட்டதாக ஐரோப்பாவின் வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.

சொத்துக்கள், பொருளாதாரங்கள், விளை நிலங்கள் ஆகியவற்றின் இழப்புக்கள் பல மில்லியன் கோடிகளைத்தாண்டும். மேலும், இந்த பேரிழப்புக்குள்ளான நாடுகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மேற்கொண்ட செலவினங்களைக் கணக்கிட்டால் அது இன்னும் பல கோடி பில்லியன்களைத் தொட்டு நிற்கும்.

இஸ்லாமியப் பார்வையில்…..

இது போன்று ஏற்படுகிற பேரிடர்களை இயற்கைச் சீற்றங்களாகவும், இயக்கங்களில் ஏற்படுகிற மாற்றங்களாகவும் மட்டுமே மனித சமூகம் பார்த்துக் கொண்டு வருகிறது.

ஆனால், இஸ்லாமோ இப்படி அபத்தமான சாயங்கள் பூசப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், உலகில் ஏற்படும் எந்த ஒரு அசைவானாலும் அது தானாக ஏற்படுவதில்லை. படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

மேலும், அந்த அல்லாஹ் தான் இத்தகைய பூகம்பங்களையும், நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்துகின்றான்.

உலகில் முதன் முதலாக ஏற்பட்ட மிகப்பெரும் பேரிடராக நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தை தற்காலப் பாஷையில் சொல்வதானால் சுனாமியை அல்குர்ஆன் ஹூத் அத்தியாயத்தில் 36 முதல் 49 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றது.

இந்த மானுட சமூகம் தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.

أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ()

“வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத்தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால் பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!”                                                    ( அல்குர்ஆன்: 67:16,17 )

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()
“மனிதர்களின் கரங்கள் செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கின்றான்”.
                                                          (அல்குர்ஆன்:30:41)


“என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…

அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன் தாய்க்கு நோவினை கொடுத்து, தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால், ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால், சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால், மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                     ( நூல்: திர்மிதீ )

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு அபீ ஷைபா )

எனவே, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும், எப்போதாவது, என்றைக்காவது நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும் தீர்க்கமான பாடத்தையும், தெளிவான படிப்பினையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக இரத்தத்தை உறைய வைக்கிற, உள்ளத்தை பதற வைக்கிற கோரமான பேரிடர்களில் இருந்து நிறைவான பாடத்தைப் பெற வேண்டும்.

அப்போது தான் இந்த உலக வாழ்க்கை மன நிறைவாகவும், மறு உலக வாழ்க்கை சோபனம் நிறைந்ததாகவும் ஆகும்.

அல்லாஹ் நம் அனைவர்களையும் அவன் ஆற்றலை விளங்கி, முழுக்க முழுக்க அவனை அஞ்சி, வணங்கி வழிபட்டு வாழும் பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!
                       
                         வஸ்ஸலாம்!!!


1 comment:

  1. சம்பவங்கள் யாவும் அற்புதமே இயற்கைசீற்றத்தால் ஏற்படும் காரணம்
    அற்புதமே
    தங்களின் சீறிய சிந்தனையும் அற்புதமே

    ReplyDelete