Thursday 31 December 2015

புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்!!!



புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள்!!!



உலகில் சிலர் புகழோடு பிறக்கிறார்கள்! இன்னும் சிலர் புகழோடு வாழ்கிறார்கள்! இன்னும் சிலர் புகழோடு இறக்கின்றார்கள்!

புகழோடு பிறக்கிற பலர் புகழோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பிறப்பும், வாழ்வும் புகழோடு அமைந்த பலருக்கு தங்களின் மரணம் புகழ் மிக்கதாய் அமைந்திருக்க வில்லை.

மரணம் புகழோடு அமைந்த பலருக்கு அவர்களின் பிறப்பும், வாழ்வும் புகழ் வாய்ந்ததாய் அமையவில்லை.

ஆனால், பூமான் நபி {ஸல்} அவர்கள் மட்டும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் மலர இடம் தந்தார்கள்.

ஆம்! நபி {ஸல்} அவர்கள் மட்டுமே புகழோடு பிறந்தார்கள்! புகழோடு வாழ்ந்தார்கள்! புகழோடு பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்!

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கிற போது, வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்வார்கள் தாஜுல் மதீனா முஹம்மது {ஸல்} அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்பூவுலகில் ஏறக்குறைய 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதில் இறைத்தூதராக 23 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையில் பிந்தைய 23 ஆண்டுகளுக்கும், முந்தைய 40 ஆண்டுகளுக்கும் இடையே ரிஸாலத்தைத் தவிர வேறெதுவும் அவர்களை வேறுபடுத்தி விடாது.

ஏனெனில், பிந்தைய ரிஸாலத் வாழ்க்கையில் இறைத்தூதின் துணை கொண்டு எதைப் போதித்தார்களோ, அவைகளை முந்தைய ரிஸாலத் இல்லாத வாழ்விலும் கடைபிடித்தார்கள்.

அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்திருந்த போதும் மடமைத்தனமான எந்தவொரு செயலையும் அவர்கள் செய்திடவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்த அம்மக்கள் கூட நபி {ஸல்} அவர்களை விரும்பினார்கள், போற்றினார்கள்.

உலகில் வேறெந்த தலைவருக்கும், வரலாற்றுப் புருஷர்களுக்கும் தராத, நீங்காத உன்னதமான ஓர் இடத்தை அல்லாஹ் நம் நபி {ஸல்} அவர்களுக்கு தந்தான்.

இன்னும் சொல்லப்போனால், ஏனைய இறைத்தூதர்களிலிருந்து அநேக அம்சங்களில் மாநபி {ஸல்} அவர்களை சிறப்புப்படுத்தி இருக்கின்றான்.

குறிப்பாக, நான்கு அம்சங்களில் நபி {ஸல்} அவர்கள் உலகத்தில் ஆளுமை செலுத்திய அத்துனை தலைவர்களில் இருந்தும் வேறுபட்டு சிறந்து விளங்கினார்கள்.

1. தங்களின் கடந்த கால வாழ்வை விமர்சனம் செய்ய அறை கூவல் விடுத்தார்கள்.

2. தாங்கள் உயிர் வாழும் காலத்திலேயே தாங்கள் கொண்டு வந்த கொள்கை, கோட்பாடுகளை, மனித குலத்தை மாற்றியமைக்கும் சீர்மிகு இறைத்தூதை குறைவின்றி முழுமைபடுத்தி விட்டதாக அறிவிப்புச் செய்தார்கள்.

3. தங்களின் வாழ்க்கையில் எல்லா காலங்களிலும், துணை நின்று உபகாரம் செய்த, ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்த அத்துனை பேருக்கும் முழுவதுமாக பிரதி உபகாரம் செய்து விட்டதாக உரக்கக் கூறினார்கள்.

4. யாருக்கும் தீங்கு செய்யாத போதும், தங்களோடு வாழும் காலத்தில் தங்களால் பாதிக்கப்பட்டவர், அவர் எவராக இருந்தாலும் தான் வாழும் காலத்திலேயே தன்னை பழிதீர்த்துக் கொள்ளுமாறு பெரும் மக்கள் திரளிலே சூளுரைத்தார்கள்.

முந்திய அறை கூவலை நபித்துவத்தின் துவக்கக் காலத்திலும், பிந்தைய மூன்று பிரகடனங்களை தங்களின் மரணத்திற்கு முன்பாக கடைசி காலத்திலும் மக்களுக்கு முன்பாக அறிவிப்புச் செய்தார்கள்.

உலக வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கி புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள் பூமான் நபி {ஸல்} அவர்கள்.

1. அண்ணலாரும்…. நபித்துவத்திற்கு முந்தைய 40 ஆண்டுகால வாழ்வும்….

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைத்தூதை எடுத்து வைத்த ஆரம்ப நாட்களில் மக்காவின் குறைஷிகளும், ஏனைய இறை மறுப்பாளர்களும் நபி {ஸல்} அவர்களைக் கடுமையாக எதிர்த்ததோடு, ஏகத்துவத்தை ஏற்க மறுத்தனர்.

அப்போது, அல்லாஹ் அம்மக்களை நோக்கி இவ்வாறு கேட்குமாறு கூறினான்:

فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ ()

மேலும், இதற்கு முன்னர் உங்களோடு நீண்ட காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அந்த வாழ்க்கையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?”                                                  

                                                      ( அல்குர்ஆன்: 10: 16 )

தங்களின் கடந்த வாழ்வை சீர் தூக்கிப் பார்க்குமாறும், ஆய்வு செய்து பார்க்குமாறும் அம்மக்களுக்கு அறை கூவல் விட்டார்கள்.

இந்த அறை கூவல் நபி {ஸல்} அவர்களின் வாயில் இருந்து வந்த வெறும் சப்தம் அல்ல. அது உலகம் அழியும் காலம் வரை நின்றிலங்கும் ஓர் மாபெரும் சகாப்தம் ஆகும்.

இதற்கு, குர்ஆனின் துணை கொண்டு பார்த்தோமேயானால் நம் சிந்தனை தெளிவு பெறும்.

وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ () قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ () قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِ () وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنْطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ () وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونِ () قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ () فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ () أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ () قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ () وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ ()


அந்த நிகழ்ச்சியை ( நபியே! ) நீர் இவர்களுக்கு கூறும்! உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம், ஃபிரவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும்! அவர்கள் படைத்த ரப்பை அஞ்சி வாழவேண்டாமா?”

அதற்கு, “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றி விடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன். என் நெஞ்சம் இடுங்கி விடுகின்றது. என் நாவு சரளமாகப் பேசுவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக! மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.

எனவே, அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என நான் அஞ்சுகின்றேன்என்று இறைஞ்சினார்.

அதற்கு, இறைவன் அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக் கொண்டு ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நாம் உங்களோடு இருந்து அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.

மேலும், அவனிடம்அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களோடு நீ அனுப்பிட வேண்டுமென்பதற்காக!” என்று கூறினான்.

மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று இப்படிக் கூறியதும், ஃபிர்அவ்ன் இவ்வாறு கேட்டான்: “நீ குழந்தையாய் இருந்த போது உம்மை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா?, மேலும், உம் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீர் எம்மிடம் கழித்திருக்கின்றீர்? மேலும், நீர் இன்னின்ன செயலையும் செய்தீர்! நீர் பெரிதும் நன்றி கெட்ட மனிதராக இருக்கின்றீர்”. ( அல்குர்ஆன்: 26: 10-17 )

மூஸா (அலை) அவர்கள் நபித்துவத்தை எடுத்துச் சொன்ன போது, ஃபிர்அவ்ன்  நபி மூஸா (அலை) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னால் கிப்தீ இனத்தைச் சார்ந்த ஒருவனை அடித்தார்கள். அவன் அடிவாங்கிய அந்த நொடியிலேயே இறந்து போனான். அது மூஸா (அலை) அவர்களின் மீது கொலைப்பழியாக விழுந்தது. அதைச் சொல்லிக் காட்டினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்துவத்தை அதன் ஆரம்பப் பொழுதில் அன்றைய அரபுலக மக்களிடையே எடுத்துச் சொல்ல ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறி நின்றார்கள்.

صعد النبي صلى الله عليه وسلم ذات يوم على الصفا، فعلا أعلاها حجرًا، ثم هتف : ( يا صباحاه )
وكانت كلمة إنذار تخبر عن هجوم جيش أو وقوع أمر عظيم .
ثم جعل ينادى بطون قريش، ويدعوهم قبائل قبائل : ( يا بني فهر، يا بني عدى، يا بني فلان، يا بني فلان، يا بني عبد مناف، يا بني عبد المطلب ) .
فلما سمعوا قالوا : من هذا الذي يهتف ؟ قالوا : محمد . فأسرع الناس إليه، حتى إن الرجل إذا لم يستطع أن يخرج إليه أرسل رسولًا لينظر ما هو، فجاء أبو لهب وقريش .
فلما اجتمعوا قال : ( أرأيتكم لو أخبرتكم أن خيلًا بالوادى بسَفْح هذا الجبل تريد أن تغير عليكم أكنتم مُصَدِّقِىَّ ؟ ) .
قالوا : نعم، ما جربنا عليك كذبًا، ما جربنا عليك إلا صدقًا .

யா ஸபாஹா! யா ஸபாஹா! என்றொரு எச்சரிக்கைக் குரலை எழுப்பினார்கள். அந்தக் குரல் மக்காவின் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

குரல் வந்த திசை நோக்கி மக்கள் வெள்ளம் ஓடியது. ஆம் தூரத்தில் ஒரு உருவம் இன்னும் சப்தமாக அழைத்துக் கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்கிற ஒரு வித பதட்டத்தோடு மக்கள் அணிவகுத்து நிற்க அங்கே அண்ணலார் {ஸல்} அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.

மக்களே! இம்மலைக்குப் பின்னால் இருக்கிற கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என்று நான் கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அலைகடலென திரண்டிருந்த அரபுலக அம்மக்கள் திரள் உரத்த குரலில் ஆம்! உங்களை நம்புவோம்! ஏனெனில், உங்களை உண்மையாளராகவே நாங்கள் கண்டோம்! நீங்கள் பொய்யுரைத்து நாங்கள் ஒரு போதும் கேட்டதில்லை! பார்த்ததில்லை!” என்றார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்மிகக் கடுமையான வேதனை வரும்முன் நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கின்றேன்! அல்லாஹ்விடமிருந்து உங்களின் ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! திட்டவட்டமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாளியாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனையும் அளிக்க முடியாதுஎன்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்து சத்தியத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள்.

                                              ( நூல்: ரஹீக் அல் மஃக்தூம் )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நபித்துவ வாழ்க்கைக்கு முந்தைய வாழ்வு குறித்து அம்மக்கள் சான்று வழங்கினார்கள்.

ஆம்! நபி {ஸல்} அவர்களின் காலத்திற்கு முன்னரும் சரி, நபி {ஸல்} அவர்கள் உயிருடன் வாழும் காலத்திலும் சரி, நபி {ஸல்} அவர்களின் காலத்திற்கு பின்னரும் சரி, இனி உலகம் அழியும் நாள் வரையிலும் சரி என்னுடைய கடந்த கால வாழ்க்கையை சீர் தூக்கிப் பாருங்கள்! என அறை கூவல் விடுகிற ஆற்றல் நபி {ஸல்} அவர்களைத் தவிர வேறெவருக்கும் இல்லை.

2. அண்ணலாரும்ஹஜ்ஜத்துல் விதாவின் அறைகூவலும்

இறைவனின் வசனங்களை ஹிராக்குகையில் தங்கியிருந்த நபிகளாருக்கு இக்ரஃ எனும் வசனத்தோடு இறக்கியருளிச் சென்றிருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஓர் இறைக் கட்டளையைச் சுமந்து வந்தார்.

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப் படுத்துவீராக!”

                                                     ( அல்குர்ஆன்: 74: 1-3 )

இந்த இறைக்கட்டளைக்குப் பின்னர் வீறு கொண்டு எழுந்த நபி {ஸல்} அவர்கள் எழுந்தார்கள், நின்றார்கள், நடந்தார்கள்.

ஆம்! கதீஜா (ரலி) என்கிற ஒற்றை இலக்கத்தோடு துவங்கிய தூதுத்துவப் பணியை தொய்வின்றி தொடர்ந்தார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா என்கிற தங்களுடைய இருதிப்பேருரையின் போது தங்களுக்கு முன் திரண்டிருந்த 1,24000 நபித்தோழர்களைப் பார்த்த வண்ணமாக தங்களின் வாகனமான அள்பாவின் மீது போடப்பட்டிருந்த இருக்கையின் மீது அமர்ந்த அண்ணலாருக்கு அப்போது தான் ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்! ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தை தொட, இரட்டை இலக்கம் நூறைத் தொட, நூறு ஆயிரத்தைத் தொட அந்த அரபுலகத்திலே அண்ணலார் தனியொரு ஆளாக நின்று எவ்வளவு போராட்டங்களை கண்டார்கள்.

மனித குலத்தின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய அத்துனை தீமைகளையும், மடமைகளையும், வழிகேடுகளையும், உலகாதாய மோகங்களையும் தங்களின் காலடிக்குள் புதைக்கும் வரை ஓயாத போராட்டங்கள்.

களத்தில் நிற்க அதிகமாகவே போராடினார்கள். அடுக்கடுக்கான சோதனைகள், சங்கிலித்தொடர் போல் போர்க்களங்கள், திரும்பிய திசைகளில் எல்லாம் எதிரிகள், சூழ்ச்சி வலைகள், நயவஞ்சக சதித்திட்டங்கள் என அத்துனையையும் தகர்த்தெறிந்து இருந்த இடம் தெரியாமல் தவிடு பொடியாக்கினார்கள்.

இறுதியில், ஏகத்துவத்திற்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தார்கள்! அந்த வெற்றியின் முன்பாக அரபுலகமும், அதைத் தாண்டிய ஏனைய பல தேசங்களும் அடிபணிந்து நின்றன! அறியாமை, மடமை எனும் இருளை அறவே இல்லாமல் ஆக்கினார்கள்.

புதியதோர் உலகத்தை தோற்றுவித்தார்கள்! புதிய வரலாற்றை உருவாக்கினார்கள்! புதிய சிந்தனை கொண்ட ஓர் ஒப்பற்ற சமுதாயத்தை கட்டியமைத்தார்கள்.

ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் ஹஜ்ஜத்துல் விதா வரை அண்ணலார் நின்று கொண்டு தான் இருந்தார்கள்.

அநேகமாக, நபி {ஸல்} அவர்கள் ஆசுவாசமாய் அமர்ந்து, இளைப்பாறிய தருணம் ஒன்று உண்டென்றால் அது ஹஜ்ஜத்துல் விதாவில் அள்பாவின் மீது போடப்பட்டிருந்த இருக்கையின் மீது அமர்ந்த அந்த தருணம் தான்.

அங்கே, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் இஸ்லாத்தின் முதல் நபரான அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தேதியில் கடைசி நபராய் இஸ்லாத்தில் நுழைந்தவரும் இருந்தார்.

அந்த அரஃபாப் பெருவெளியில் வீற்றிருந்த மக்கள் திரளை நோக்கி மாபெரும் பேருரை ஒன்றை நபி {ஸல்} அவர்கள் நிகழ்த்தினார்கள்.

أيها الناس، اسمعوا قولي، فإني لا أدري لعلى لا ألقاكم بعد عامي هذا بهذا الموقف أبداً

உரையின் ஆரம்பமாக, மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள்! ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா? என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறி

தொடர்ந்து நெஞ்சை நெகிழச்செய்யும், உள்ளத்தை உருகச்செய்யும் ஆழமான பல செய்திகளைக் கூறினார்கள்.

وأنتم تسألون عني، فما أنتم قائلون ؟  قالوا : نشهد أنك قد بلغت وأديت ونصحت .
فقال بأصبعه السبابة يرفعها إلى السماء، وينكتها إلى الناس : ( اللهم اشهد ) ثلاث مرات .

இறுதியாக, ”நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேனா?” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, கூடியிருந்த மக்கள் திரள்நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள்! முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள்! நன்மையையே நாடினீர்கள்! என்று நாங்கள் சாட்சி கூறுவோம்என்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பிஅல்லாஹ் இதற்கு நீயே சாட்சிஎன்று மூன்று முறை கூறினார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எத்தி வைத்திடுங்கள்! ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களை விட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்!” என்று கூறினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முழுமையாக முடித்த போது..

{ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا }

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் முழுமையாக்கி வைத்து விட்டோம்”.       ( அல்குர்ஆன்: 5:3 ) எனும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.                               ( நூல்: ரஹீக் அல் மக்தூம் )

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அல்லாஹ்வின் தூதரோடு 23 ஆண்டுகாலம் தொடர்ந்து அருகேயே இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும், அதற்கடுத்த, அதற்கடுத்த நிலைகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்க ஹிஜ்ரி 8,9,10 போன்ற வருடங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள்.

நபி {ஸல்} அவர்கள் கேட்ட, , ”நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேனா?” என்று கேட்டு விட்டு, மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு 23 ஆண்டு காலம், 22, 21, 20 என வாழ்ந்தவர்கள் வேண்டுமானால்நிச்சயமாக, நீங்கள் எடுத்துரைத்தீர்கள்! முழுமையாக உங்கள் கடமைகளை நிறைவேற்றினீர்கள்! நன்மையையே நாடினீர்கள்! என்று நாங்கள் சாட்சி கூறுவோம்என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால், மிகக்குறைந்த காலமே நபி {ஸல்} அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த லட்சக்கணக்கானோரும் இதே பதிலைத் தானே சொன்னார்கள்.

ஆக, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பதிவு மகத்தான ஓர் சகாப்தம் தான்.

3. அண்ணலாரும்…. கடன் இல்லாத நன்றியும்….

ஓர் அடியார் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது போன்றே, தம்மோடு வாழும் சக அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் கடமையாகும் என போதித்த நபி {ஸல்} அவர்கள் தாம் போதித்த அந்த போதனையில் மிகப் பெரும் முன்மாதிரியாய் திகழ்ந்தார்கள்.

உபகாரம், உதவி என்பது பொருளியலைச் சார்ந்த ஓர் விஷயமன்று, மாறாக, நம் வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் யாராவது ஒருவர் நமக்கு உதவி, உபகாரம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

பெற்றோர்கள், மனைவி மக்கள், உறவுகள், அண்டை வீட்டார், நட்பு வட்டாரம், மஹல்லா, சமூகம், சமுதாயம் என ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்வில் எந்தெந்த நிலைகளில் யாரெல்லாம் உதவியாய், உபகாரமாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் தேடித்தேடிச் சென்று பிரதி உபகாரம் செய்திருக்கின்றார்கள்.

عن أبي هريرة - رضي الله عنه - قال - صلى الله عليه وسلم -: مَن لا يَشكُر الناس، لا يَشكُر الله

எவர் மக்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள மாட்டார்களோ, அத்தகையவர்கள் அல்லாஹ்வின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளமாட்டார்கள்என அருமை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              

                                                          ( நூல்:திர்மிதீ )
قال - صلى الله عليه وسلم -:

مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به، ومَن لم يجد، فليُثنِ به، فإنَّ أَثنى به، فقد شكَره، وإنْ كتَمه، فقد كفَره، ومن تَحلَّى بما لَم يُعطِ، فإنَّه كلابس ثَوبَي زُورٍ

எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                                                                  ( நூல்:திர்மிதீ )
قال - صلى الله عليه وسلم -:
مَن صُنِع إليه معروفٌ، فقال لفاعله: جَزاكَ الله خيرًا، فقد أبلَغ في الثناء

ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் உபகாரம் செய்தவருக்கு ஜஸாக்கல்லாஹு கைரன்என்று கூறுவாரானால், அவர் நல்ல முறையில் வாழ்த்துச் சொல்லி விட்டார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                            

                                                            ( நூல்:திர்மிதீ )

ஆனால், இன்று உலகத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு உபகாரியாய், உதவியாய் இருந்தவர்களை உதாசீனப்படுத்துகின்ற காட்சியை சர்வ சாதாரணமாக கண்டு வருகின்றோம்.

ஒரு காலத்தில் இவண் உயர ஏணியாய், வாழ்க்கையில் கரை சேர்க்கும் துடுப்பாய், இருந்தவர்களை எட்டி உதைக்கும் பாவியாய் மாறிப்போனதை அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து வருகின்றோம்.

وعن أبي هريرة ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم
 قال الترمذي
 حديث حسن غريب

ஆனால், நபி {ஸல்} அவர்கள் தங்களின் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அந்த தருணங்களில் தங்களின் தோழர்களை ஒன்று திரட்டி,

“என் அருமைத் தோழர்களே! உலகில் வாழும் காலத்தில் எமக்கு யாரெல்லாம் ஆதரவாய், உபகாரியாய் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த உலகத்திலேயே, நான் உயிரோடு வாழும் காலத்திலேயே பிரதி உபகாரம் செய்து விட்டேன்! இதோ! இருக்கின்றோரே உங்களின் சகோதரர் அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் நேசர் ஆவார். அல்லாஹ்வைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது எனும் கட்டளை மாத்திரம் இல்லையானால், அபூபக்ர் (ரலி) அவர்களையே நான் என்னுடைய உற்ற நண்பராக தேர்ந்தெடுத்து இருப்பேன்.

அவரின் பொருளாதாரம் எனக்கு பயன் பட்டது போன்று உங்களில் வேறெவரின் பொருளாதாரமும் எனக்குப் பயன் பட்டதில்லை. அப்படிப் பட்ட அபூபக்ர் அவர்களுக்கு மட்டும் என்னால் இந்த உலகில் பிரதி உபகாரம் செய்ய எதுவும் இல்லை. ஆகையால், என் சார்பாக நாளை மறுமையில் அல்லாஹ் அவருக்கு பிரதி உபகாரம் வழங்குவான்” என்று கூறினார்கள்.                        ( நூல்: திர்மிதீ )

இந்த அறிவிப்பை நபி {ஸல்} அவர்கள் பூவுலகை விட்டுப் பிரியும் ஐந்து நாட்களுக்கு முன்னர் செய்தார்கள்.

1. வளர்த்த அன்னைக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்....

ذكر الهيثمي في "مجمع الزوائد" عن أنس بن مالك رضي الله عنه قال: لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي رضي الله عنهما، دخل عليها رسول الله صلى الله عليه وسلم فجلس عند رأسها فقال: "رحمك الله يا أمي، كنت أمي بعد أمي، تجوعين وتشبعيني، وتعرين وتكسيني، وتمنعين نفسك طيباً وتطعميني، تريدين بذلك وجه الله والدار الآخرة".
 ثم أمر أن تغسل ثلاثاً فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه وسلم بيده، ثم خلع رسول الله صلى الله عليه وسلم قميصه فألبسها إياه، وكفنها ببرد فوقه، ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاماً أسود يحفرون، فحفروا قبرها،  فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده وأخرج ترابه بيده، فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال: "الله الذي يحيي ويميت، وهو حي لا يموت، اغفر لأمي فاطمة بنت أسد، ولقنها حجتها، ووسِّع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين". وكبر عليها أربعاً، وأدخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم. (رواه الطبراني والحاكم وابن ابي خيثمة وابن حبان)
وذكر السمهودي في كتابه "وفاء الوفا" أن رسول الله صلى الله عليه وسلم قد دفن فاطمة بنت أسد بن هاشم بالروحاء في المدينة المنورة.


அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

2. நேசத்தால் மனம் குளிர வைத்தவருக்கு நபி {ஸல்} அவர்கள் செய்த பிரதி உபகாரம்...

فلما بلغ النبي صلى الله عليه وسلم هذا الخبر قال لأصحابه أيكم( ينزل ) (1) خبيبا عن خشبته وله الجنة؟ فقال الزبير: أنا يا رسول الله وصاحبي المقداد بن الأسود، فخرجا يمشيان بالليل ويكمنان بالنهار حتى أتيا التنعيم ليلأ 31/ب وإذا حول الخشبة أربعون رجلا من المشركين نائمون نشاوى فأنزلاه فإذا هو رطب ينثني لم يتغير منه شيء بعد أربعين يوما، ويده على جراحته وهي تبض دما اللون لون الدم والريح ريح المسك، فحمله الزبير على فرسه وسارا فانتبه الكفار وقد فقدوا خبيبا فأخبروا قريشا فركب منهم سبعون، فلما لحقوهما قذف الزبير خبيبا فابتلعته الأرض فسمي بليع الأرض.
فقال الزبير: ما جراكم علينا يا معشر قريش، ثم رفع العمامة عن رأسه وقال: أنا الزبير بن العوام وأمي صفية بنت عبد المطلب وصاحبي المقداد بن الأسود أسدان رابضان يدافعان عن شبليهما فإن شئتم ناضلتكم وإن شئتم نازلتكم وإن شئتم انصرفتم، فانصرفوا إلى مكة، وقدما على رسول الله صلى الله عليه وسلم وجبريل عنده فقال يا محمد إن الملائكة لتباهي بهذين من أصحابك فنزل في الزبير والمقداد بن الأسود { وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ } حين شريا أنفسهما لإنزال خبيب عن خشبته
عيون الأثر لابن سيد الناس: 2 / 56-66

ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.

ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.

எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.

வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!

குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!

“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ஸல்} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!

உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.

“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.

கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ஸல்} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.

தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.

கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.

மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.

அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ஸல்} அவர்களுக்கு அறிவித்தான்.

நபி {ஸல்} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.

வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ஸல்} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.

உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ஸல்} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே! ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!” என்று கூறினார்கள்.

அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.

உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.

நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

விவேகத்தோடு செயல்பட்ட  அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த  பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.

கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.

குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.

இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.

உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.

மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி ஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )

3. தனக்கு தீங்கிழைத்தோருக்கும் உபகாரம் செய்த மாநபி {ஸல்} அவர்கள்...

عن نافع عن ابن عمر قال: لما توفي عبد الله بن أبي بن سلول جاء ابنه عبد الله إلى رسول الله صلى الله عليه وسلم وسأله أن يعطيه قميصه ليكفنه فيه فأعطاه، ثم سأله أن يصلي عليه فقام رسول الله صلى الله عليه وسلم يصلي عليه فقام عمر بن الخطاب فأخذ بثوبه فقال: يا رسول الله تصلي عليه وقد نهاك الله عنه، فقال رسول الله " إن ربي خيرني فقال استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم وسأزيد على السبعين " فقال إنه منافق أتصلي عليه ؟ فأنزل الله عز وجل  وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ وفي رواية للبخاري وغيره قال عمر: فقلت يا رسول الله تصلي عليه وقد قال في يوم كذا وكذا، وقال في يوم كذا وكذا وكذا ! ! فقال " دعني يا عمر فإني بين خيرتين، ولو أعلم أني إن زدت على السبعين غفر له لزدت " ثم صلى عليه فأنزل الله عز وجل وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ الآية.قال عمر: فعجبت من جرأتي على رسول الله صلى الله عليه وسلم

நயவஞ்சகர்களின் தலைவராகச் செயல்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் இறந்த போது, அவருடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் தான் என் தந்தைக்கு தொழ வைக்க வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.

நபி {ஸல்} அவர்கள் அவரின் வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தொழ வைக்க நின்ற போது உமர் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டாமென தடுத்தார்கள்.

وقال سفيان بن عيينة عن عمرو بن دينار سمع جابر بن عبد الله يقول: أتى رسول الله صلى الله عليه سلم قبر عبد الله بن أبي بعدما أدخل حفرته فأمر به فأخرج فوضعه على ركبتيه - أو فخذيه -ونفث عليه من ريقه وألبسه قميصه. فالله أعلم. في صحيح البخاري هذا الاسناد مثله وعنده لما كان يوم بدر أتي بأسارى، وأتي بالعباس ولم يكن عليه ثوب، «فنظر النبي صلى الله عليه وسلم له قميصا، فوجدوا قميص عبد الله بن أبي يقدر عليه، فكساه النبي صلى الله عليه وسلم إياه، فلذلك نزع النبي صلى الله عليه وسلم قميصه الذي ألبسه» قال ابن عيينة كانت له عند النبي صلى الله عليه وسلم يد فأحب أن يكافئه
 رواه البخاري، كتاب الجهاد والسير، باب الكسوة للأسارى

ஆனாலும், நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள் நபி {ஸல்} அவர்கள் ஏன் தொழ வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் காரணத்தை கூறுகின்றார்கள்.

பத்ரில் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கைதிகள் ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். நபி {ஸல்} அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களும் அப்போது கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை.

நபி {ஸல்} அவர்கள் கைதிகளுக்கு குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு போர்வை வழங்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்பாஸ் அவர்களுக்கு வழங்க போர்வை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அப்பாஸ் அவர்களுக்கு கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்யும் முகமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.                                                       ( நூல்: புகாரி )

இன்ஷா அல்லாஹ்… இதன் தொடர்ச்சி அடுத்த வாரமும் தொடரும்…

அல்லாஹ் புகழோடு வாழ்கிற, புகழோடு மரணிக்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!

    ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!    வஸ்ஸலாம்!!!