Thursday 15 December 2016

தென்றலும் புயலாகும்!!



தென்றலும் புயலாகும்!!




மாநபி {ஸல்} அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? இப்படியொரு கேள்வியை இறை நம்பிக்கையாளர்கள் நிறைந்திருக்கிற ஒரு சபையில் கேட்டால் சட்டெனெ இப்படி பதில் வரும்மதீனாவின் புனித ரவ்ளாவில்என்று.

சராசரி முஸ்லிம்களிடம் இருந்து இப்படித் தான் பதில் வரும். பெருமானார் {ஸல்} அவர்களின் மீது காதலும், பேரன்பும் கொண்டிருக்கிற ஓர் இறை விசுவாசிஒவ்வொரு நாளும் நான் (அத்தஹிய்யாத்தில்) சொல்கிற ஸலாத்திற்கு பதில் கூறும் தூரத்தில் தான் என் நேச நபி வீற்றிருக்கிறார்கள்என்று பதில் கூறுவார்.

மாநபி {ஸல்} அவர்களை சராசரி முஸ்லிமாக இருந்து பார்ப்பதற்கும், பேரன்பும், காதலும் நிறைந்த முஸ்லிமாக இருந்து பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது.

இப்போது நம் முன் எழும் கேள்வி இது தான்? நீங்களும் நானும் சராசரி முஸ்லிமாக இருந்து மாநபி {ஸல்} அவர்களைப் பார்க்கின்றோமா? அல்லது பேரன்பும், காதலும் நிறைந்த முஸ்லிமாக இருந்து பார்க்கின்றோமா?

வாருங்கள்! சுய பரிசோதனை ஒன்றை மேற்கொண்டு விட்டு நாம் யாராக இருக்கின்றோம்? யாராக இருக்க வேண்டும்? என தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வருவோம்!!

நபித்தோழர்கள் மாநபி {ஸல்} அவர்கள் மீது கொண்ட காதலும், பேரன்பும்…..

அல்லாஹ் அல்ஹுஜுராத் அத்தியாயத்தில் “இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் நபியின் சப்தத்திற்கு முன் உங்களின் சப்தங்களை உயர்த்தி விட வேண்டாம்” என அல்லாஹ் எச்சரித்து வசனம் ஒன்றை இறக்கியருளிய தருணத்தில் உமர் (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் பேசினால் மிகவும் குரலைத் தாழ்த்தி பேசுவார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள், இரண்டொரு முறை கேட்ட பின்னரே உமர் (ரலி) அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் எனும் அளவிற்கு பேசுவார்கள்.

பின்னர் அல்லாஹ், “திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் உரையாடும் போது தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ, உண்மையில் அல்லாஹ் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக பரிசோதித்து தேர்ந்தெடுத்திருக்கின்றான், அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கின்றன” எனும் இறை வசனத்தை இறக்கியருளினான்.

وقد روي عن أمير المؤمنين عمر بن الخطاب - رضي الله عنه - أنه سمع صوت رجلين في مسجد النبي [ ص ] قد ارتفعت أصواتهما , فجاء فقال
 أين أنتما ? قالا: من أهل الطائف
 فقال
  لو كنتما من أهل المدينة لأوجعتكما ضربا

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்து இருவர் சப்தமிட்டு பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், அருகே, வந்து “நீங்கள் யார்? உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்டார்கள்.

அதற்கு, அவ்விருவரும் “ நாங்கள் தாயிஃப் நகரைச் சார்ந்தவர்கள்” என்று பதில் கூறினார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “நீங்கள் மட்டும் மதீனாவாசிகளாக இருந்திருந்தால் உங்களை வலிக்கும் படி அடித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

                                    ( நூல்: தஃப்ஸீர் ஃபீ ளிலாலில் குர்ஆன் )

உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஜைத் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் முஹம்மத்.

ஒரு நாள் முஹம்மத் அவர்களை ஒருவர் வீதியில் வைத்து முஹம்மதே! அல்லாஹ் உம்மை இவ்வாறு இவ்வாறெல்லாம் தண்டிப்பானாக! என்று பழித்துக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் இதைச் செவி மடுத்தார்கள்.

உடனடியாக, அங்கிருந்து தங்களது சகோதரரின் மகனை அழைத்துக் கொண்டு, வீட்டிற்கு வந்த உமர் (ரலி) அவர்கள் தங்களது சகோதரரின் மகனிடம் “மகனே! உம்முடைய முஹம்மத் எனும் பெயரை மாற்றி விடு! உம்முடைய பெயரை கூறி எவராவது உம்மை திட்டினால் அது என்னுடைய ஹபீப் முஹம்மத் {ஸல்} அவர்களை திட்டுவதைப் போன்று நான் உணர்கின்றேன்” என்றார்கள்.

ஒரு சமயம் மஸ்ஜிதுன் நபவீயின் சுவற்றில் தேவை நிமித்தமாக ஆணி ஒன்றை அடித்தார்கள்.

அந்த சப்தத்தைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பதறித் துடித்தவர்களாக ஓடி வந்து “தோழர்களே! அல்லாஹ்வின் நபியின் சப்தத்திற்கு முன் உங்களின் சப்தங்களை உயர்த்தி விட வேண்டாம்” என அல்லாஹ் எச்சரிக்க வில்லையா?” என்று கேட்டார்களாம்.

وقال محمد بن إسحاق، عن بعض أصحابه، عن عطاء بن يَسَار قال: نزلت سورة "النحل" كلها بمكة، وهي مكية إلا ثلاث آيات من آخرها نزلت بالمدينة بعد أحد، حيث قتل حمزة، رضي الله عنه، ومثل به فقال رسول الله صلى الله عليه وسلم: "لئن ظهرنا عليهم لنمثلن بثلاثين رجلا منهم" فلما سمع المسلمون ذلك قالوا: والله لئن ظهرنا عليهم لنمثلن بهم مثلة لم يمثلها أحد من العرب بأحد قط. فأنزل الله: { وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ } إلى آخر السورة () .


உஹத் யுத்தக் களம் நிறைவுற்று எதிரிகள் வெற்றிக் களிப்போடு திரும்பிய பின்னர், மாநபி {ஸல்} அவர்கள் உயிர்த் தியாகம் அடைந்த நபித்தோழர்களின் உடல்களை அடையாளம் காண களத்திற்குள் நுழைகின்றார்கள்.

யுத்த களத்தின் நாலாபுறங்களிலும் வீரத்தியாகிகளின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.

ஒவ்வொருவரின் உடலையும் பார்க்கின்றார்கள். சிலரின் உடல் அருகே சென்று தூக்கி எடுத்து தங்களின் மடி மீது வைத்து அவர்களின் கடந்த கால வாழ்வு குறித்து, எதிர் கால சுவன வாழ்வு குறித்து பேசினார்கள்.

இறுதியாக, ஒரு உடலின் அருகே மாநபி {ஸல்} அவர்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றார்கள். நெஞ்சு பொறுக்காமல் அழுகின்றார்கள்.

ஆம்! அஸதுல்லாஹ் ஹம்ஜா (ரலி) அவர்களின் வீர மரணம்! மாநபி {ஸல்} அவர்களை ஓர் உலுக்கு உலுக்கிற்று!

வயிறு கிழிக்கப்பட்டு, குடல்கள் எல்லாம் அறுக்கப்பட்டு, மூக்கு சிதைத்து, காதுகளை கிழித்து, தலையை கொய்து, மண்டை ஓட்டை பிய்த்து எடுத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலைப் பார்த்த மாநபி {ஸல்} அவர்கள் “இதே போன்று எதிரிகளின் எழுபது பேர்களை சிதைக்காமல் விட மாட்டேன்” என சபதமெடுக்கின்றார்கள்.

மாநபிக்கு ஒன்று என்றால் தாளாத மாநபியின் தோழர்கள் “இது வரை எவரும் நடந்து கொள்ளாத வரலாறு காணாத கொடுந்தாக்குதலை அவர்கள் மீது நாங்களும் தொடுப்போம்” என சூளுரைக்கின்றனர்.

அந்த இடத்திலேயே மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்….

“நீங்கள் தண்டிக்க வேண்டும் என விரும்பினால் உங்களை அவர்கள் எவ்வாறு தண்டித்தார்களோ அவ்வாறே தண்டித்து விடுங்கள் நபியே! மாறாக, நீங்கள் பொறுமை காத்தீர்கள் என்றால் அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்” என இறைவசனத்தை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபதத்தை முறித்துக் கொண்டு, சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்கள். மேற்படி, நபித்தோழர்களை நோக்கி “நீங்கள் ஆவேசப்பட்டு எதையும் செய்து விட வேண்டாம்” என்று கட்டுப்படுத்தினார்கள்.                        ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, இப்னு கஸீர் )

وعن البراء بن عازب قال: كتب علي رضي الله عنه الصلح بين النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وبين المشركين يوم الحديبية، فكتب: هذا ما كاتب عليه محمد رسول الله ] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [فقالوا: لا تكتب رسول الله، فلو نعلم أنك رسول الله لم نقاتلك. فقال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لعلي:] امحه [. فقال: ما أنا بالذي أمحاه «1»، فمحاه النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بيده.


ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது, உடன்படிக்கையை மாநபி {ஸல்} அவர்கள் சொல்ல அலீ (ரலி) எழுதிக் கொண்டு வருகின்றார்கள்.

ஒரு கட்டத்தில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்று நபி {ஸல்} அவர்கள் சொல்ல அலீ (ரலி) அவ்வாறே எழுதினார்கள்.

ஆனால், மக்கா குறைஷிகள் அவ்வாறு எழுதக்கூடாது, அதை அழித்து விட்டு முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்று எழுதுமாறு கூறுகின்றார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் அலீயே! முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதை அழியுங்கள்! என்று கூற, அலீ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் உள்ளத்திலே அல்லாஹ்வின் தூதராகத்தான் இடம் பெற்றிருக்கின்றீர்கள்! நானும் அவ்வாறு தான் உங்களை நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்! என்னால், அவ்வாறு செய்ய முடியாது” என்று மறுத்து விடுகின்றார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் தாங்களே அதை முன் வந்து அழிக்கின்றார்கள். அதன் பின்னர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பதை அலீ (ரலி) அவர்கள் எழுதினார்கள்.                             ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ )

மாநபி {ஸல்} அவர்களின் முன்பாக எவராவது மாற்றுக் கருத்துக் கூறினாலோ, அல்லது ஆட்சேபம் தெரிவித்தாலோ, அல்லது மாநபியின் முன்பாக மாநபி {ஸல்} அவர்களுக்கு நோவினை தந்தாலோ உமர் (ரலி) அவர்கள் கேட்கும் அடுத்த வார்த்தை இது தான்  يا رسول الله ائذن لي فأضرب عنقه
 ”அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் தலையைக் கொய்து விடுகின்றேன்!” என்று தான்.

ஆக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீது காதலும், பேரன்பும் கொண்டவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? நாம் எவ்வாறு நடந்து கொள்கின்றோம்?

முஹம்மது என்று பெயர் வைப்பதையும், முஹம்மது என்று பெயர் வைத்திருப்பவர்களை ஏசுவதையும் பேசுவதையும் மிகச் சாதாரணமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள் நம்மில் எத்துனை பேர்?

மஸ்ஜிதுன் நபவீயில் ஆணி அடிப்பதைக் கூட அனுமதிக்காத ஆயிஷா (ரலி) அவர்கள் எங்கே?

மஸ்ஜிதுன் நபவீக்கு முன் நின்று செல்ஃபி எடுத்து முக நூலில் ஸ்டேடஸ் போடும் நாம் எங்கே?

சராசரி முஸ்லிமாக வாழ்வதில் இருந்து விலகி பேரன்பும், காதலும் நிறைந்த முஸ்லிம்களாய் வாழ முயற்சிப்போம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நல்ல தௌஃபீக்கை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

நேரம் மிகக் குறைவாக இருந்ததால் குறைவாக பதிவிட்டிருக்கின்றேன்…

இன்ஷா அல்லாஹ்…. அடுத்த வாரமும் தொடர்கிறேன்…


5 comments:

  1. ஜஸாகுமுல்லாஹு ஹைரா!

    ReplyDelete
  2. அடுத்த வாரத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் உஸ்தாத் அவர்களே! جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete