Thursday 29 September 2016

ஹிஜ்ரத் ஓர் புதிய பரிமாணம்!!!



ஹிஜ்ரத் ஓர் புதிய பரிமாணம்!!!



பன்முகங்கள் கொண்ட பாக்கியங்கள் பல நிறைந்த இஸ்லாமியப் புத்தாண்டை எதிர்நோக்கியவர்களாக நாம் இருக்கின்றோம்.

உலகிலுள்ள பெரும்பாலான மனித சமூகங்கள் ஆண்டின் துவக்கத்தை வெகு விமரிசையாக கேளிக்கை, கூத்து, கும்மாளம், ஆட்டம், பாட்டம் போன்றவற்றால் கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டின் துவக்க நாளில் சந்தோஷமாக இருந்தால் அதே போன்று வருடம் முழுவதும் சந்தோஷம் இருக்கும் என்ற அறிவுக்குப் புறம்பான முறையில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதை பார்க்கின்றோம்.

ஆனால் நம்முடைய இஸ்லாமிய வருடப் பிறப்போ ஹிஜ்ரத் எனும் தியாகச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டதாகும். 

அல்லாஹ்வுக்காக அவனது அடியார்கள் அனைத்து விதமான தியாகங்களையும் செய்த மிகப்பெரும் வரலாற்றுச் சம்பவமே ஹிஜ்ரத் ஆகும். 

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தியாகங்களை நினைவு கூறி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் சிலர் ஹிஜ்ரத்தை ஒரு சாதாரண நிகழ்வாக குறிப்பிடுகின்றனர். ஹிஜ்ரத் என்பது நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களும் அவரின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற ஓர் புலம்பெயர்வு மட்டும் தான் என சித்தரிக்கின்றனர்.

இன்னும் சில வரலாற்றாசிரியர்கள் ஹிஜ்ரத்தை தரம் தாழ்த்தி விமர்சிக்கின்றனர். அதாவது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களும் நபியின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தப்பியோடிய நிகழ்வு மட்டும் தான் என மோசமாக விமர்சிக்கின்றனர்.

ஆனால், ஹிஜ்ரத் என்பது சவால்களை சாதனைகளாக்கிட மதீனா நோக்கிய வீரமும், துணிச்சலும், இறைக்காதலும் நிறைந்த ஒரு திருப்பு முனைப் பயணம் என்பதும், நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களது வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மட்டுமின்றி, மனித வரலாற்றிலேயே ஒரு புதிய பரிமாணத்தை தோற்றுவித்த மாபெரும் வரலாற்று நிகழ்வு என்பதும், ஹிஜ்ரத் உடைய வரலாற்றுப் பிண்ணனியை, ஹிஜ்ரத்திற்கு பிந்தைய முஸ்லிம் சமூகத்தின் பல்வேறுபட்ட ஏற்ற இறக்கங்களை வரலாற்றின் ஊடாக வாசித்துப் பார்க்கும் போது விளங்கிக் கொள்ள இயலும்.

ஹிஜ்ரத் ஏன்?

ஏகத்துவத்தை ஏந்தி அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால், நேர்வழியின் பால் அறைகூவல் விடுத்த இறைத்தூதர்களான நபிமார்களுக்கு சொந்த மக்களின், சமூகத்தின் வாயிலாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அவ்வாறு, எதிரிகளின் அடக்குமுறை கட்டுக்குள் அடங்காமல் எல்லை மீறுகிற போது, ஏகத்துவ சுகந்தத்தை ஏந்தி நின்ற தனது தூதுவர்களை அல்லாஹ் மூன்று விதமான உதவிகள் மூலம் பாதுகாத்தான்.

1} எதிரிகளை அவர்கள் வாழ்ந்த சுவடுகளே இல்லாமல் அழித்தொழிப்பது. 2} தனது தூதுவர்களை ( நாடு விட்டு நாடு ) ஹிஜ்ரத் ( புலம் பெயரச் ) செய்ய வைப்பது. 3} எதிரிகளை அழித்து தனது தூதுவர்களை ஹிஜ்ரத் செய்ய வைப்பது.

முதல் வித இறை உதவியைப் பெற்றவர்கள்: ஹூத் {அலைஹிஸ்ஸலாம்}, ஸாலிஹ் {அலைஹிஸ்ஸலாம்}, லூத் {அலைஹிஸ்ஸலாம்} இன்னும் ஏராளமான நபிமார்களுக்கு இவ்வாறான உதவி வழங்கப்பட்டதாக அல்குர்ஆனில் அல்லாஹ் விவரிப்பான்.

இரண்டாவது வகையில் உதவி செய்யப்பட்டவர்கள்: இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்}, முஹம்மது {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} ஆகிய நபிமார்கள் ஆவார்கள்.

மூன்றாவது வகையில் உதவி செய்யப்பட்டவர்கள்: நூஹ் {அலைஹிஸ்ஸலாம்} மூஸா {அலைஹிஸ்ஸலாம்} ஆகிய நபிமார்கள் ஆவார்கள்.

قال القرطبي في تفسيره عند تفسير قوله تعالى حاكيا عن إبراهيم
 إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ {الصافات: 99} قال
 هذه الآية أصل في الهجرة والعزلة. وأول من فعل ذلك إبراهيم عليه السلام، وذلك حين خلصه الله من النار قال إني ذاهب إلى ربي. أي مهاجر من بلد قومي ومولدي إلى حيث أتمكن من عبادة ربي فإنه ( سيهدين ) فيما نويت إلى الصواب.
 قال مقاتل: هو أول من هاجر من الخلق مع لوط وسارة إلى الأرض المقدسة وهي أرض الشام

அறிஞர் பெருமக்களிடையே ஹிஜ்ரத் செய்த நபிமார்கள் விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்களும் இருக்கின்றன.

”தன்னுடைய பரிசுத்த ஆவியின் மூலம் பிறந்த ஈஸா நபி {அலை} அவர்களை மண்ணிலிருந்து விண்ணிற்கும், பரிசுத்த மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதம் நபி அலை அவர்கள் விண்ணிலிருந்து மண்ணிற்கும் அல்லாஹ் ஹிஜ்ரத் செய்ய வைத்தான் என்று சில அறிஞர்களும்,

நூஹ் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சில அறிஞர்களும், லூத் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சில அறிஞர்களும், இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்} அவர்கள் இராக்கிலிருந்து சிரியாவுக்கும், மூஸா நபி{அலை} அவர்கள்  எகிப்திலிருந்து சிரியாவுக்கும், முஹம்மது {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள்,  மக்காவிலிருந்து மதீனாவுக்கும் ஹிஜ்ரத்செய்து புலம் பெயர்ந்தார்கள்.

உலகில் முதல் ஹிஜ்ரத் செய்த கூட்டம் நபி நூஹ் அலை அவர்களின் தலைமையில் கப்பலில் பயணம் செய்த 80 முஃமின்கள்.

قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلاَّ مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلاَّ قَلِيلٌ ﴾ هود: 40

ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்

இதன்படி பார்த்தால், ஹிஜ்ரத் {அகதியாகுதல் - புலம் பெயர்தல்} என்பது அவமானமான ஒன்றல்ல; தன்மானத்தோடும், இறைச் சிந்தனையோடும் வாழ்வதற்கான ஒரு அறிய வாய்ப்பு என்பதும், அது அவ மரியாதையான ஒன்றல்ல; சுய மரியாதை கிடைப்பதற்கான புதிய சூழலை ஏற்படுத்துவதற்கான ஓர் புதிய பரிமாணம் என்பதும், அது அல்லாஹ்வின் வெகுமதிகளில் ஒன்று என்பதும் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

சவால்களை சாதனைகளாக்கிய ஹிஜ்ரத்...

1. மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த அடுத்த நொடியில் மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களுக்கு முன்னால் பெரும் சவாலாக இருந்தது புலம் பெயர்ந்த முஹாஜிர்களை மதீனாவின் முஸ்லிம்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பது தான்.

2. மதீனா என்பது வெறும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டிருக்கிற ஒரு பூமியல்ல. அங்கே, யூதர்கள், கிறிஸ்துவர்கள், நெருப்பு வணங்கிகள் என பெரிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் விஷயத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்த சிந்தனை பெரும் சவாலாக இருந்தது.

3. விவசாயத்தொழிலாளர்களான மதீனா முஸ்லிம்கள், எல்லாவற்றையும் (வீடு, வாசல், சொத்து, மனைவி, மக்கள் என) துறந்து முற்றிலும் நிராயுதபாணிகளாக, ஏழைகளாக மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் மக்காவின் முஸ்லிம்கள், இந்த ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சரிசெய்வது என்கிற சிந்தனையும் பெரும் சவாலாக இருந்தது.

4. இறைவனை முற்றிலுமாக வணங்கி வழிபட, எந்தக் குறுக்கீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக முஸ்லிம்களாய் வாழ்ந்திட, எதிரிகளின் புறத்திலிருந்து வரும் எதிர்ப்புகளை வலுவாக எதிர் கொள்ள, எப்படி முஸ்லிம் சமூகத்தைக் கட்டமைப்பது என்கிற சவாலும் தொடர்ந்து தொக்கி நின்றது.

அல்லாஹ்வின் மாபெரும் உதவி கொண்டும், வழிகாட்டல் கொண்டும் சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக்கினார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

1. புலம் பெயர்ந்த முஸ்லிம்களும்.... மதீனாவின் முஸ்லிம்களும்....

இன்று உலகளாவிய அளவில் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

கடந்த ஜூன் 20 –ஆம் தேதி உலகெங்கிலும் அகதிகள் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதையொட்டி, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் புலம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 6.53 கோடியைத் தாண்டியது.

அகதிகளின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 113 பேரில் ஒருவர் அகதி என்பதை, அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் என்று அது குறிக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், ”உள்நாட்டுப் போர் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாக்கப்பட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர்.

மேலும், அளவுக்கு அதிகமாக அகதிகள் குவிந்து வருவதால் குடியேறும் நாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு கசப்புணர்வு அதிகரித்துவிட்டது.

இதனால் அவர்கள் அகதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது மனிதாபிமான உணர்வை சோதனைக்குள்ளாகியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

எல்லா வகையிலும் முன்னேறியிருக்கிற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற 21 –ஆம் நூற்றாண்டில் இவ்வாறு கவலை தெரிவிக்கப்படுகிறது என்றால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் விஷயத்தில் கொண்டிருந்த கவலையும் நியாயமானதே!

அந்த சவாலை மாநபியவர்கள் எதிர்கொண்ட விதமும், அதனால் சமூகத்தில் உண்டான மாற்றமும் இன்றளவிலும் உலகளாவிய அகதிகள் பிரச்சனைக்கு மாபெரும் தீர்வாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

சகோதரத்துவம் எனும் கட்டமைப்பு….

மாநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை அடுத்து மக்கத்து நபித்தோழர்கள் மதீனாவில் நுழைந்த போது அகதிகள் என்றழைக்கப்படாமல் முஹாஜிர்கள் என்றும், மதீனாவின் மக்களால் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இரண்டே ஆண்டுகளில், உறவினர்களாகவும், வியாபார கூட்டாளிகளாகவும் பெண் எடுத்து பெண் கொடுத்து உறவு முறையில் மேம்பாடு கண்டவர்களாகவும் மாற்றம் கண்டார்கள்.

மாநபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் மதீனாவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்திடும் நான்கு ஆட்சியாளர்கள் மக்காவைச் சார்ந்த, மதீனாவைச் நோக்கி வந்த முஹாஜிர்களாக இருந்தும் அதை அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மதீனமா நகர மக்களை தயார் படுத்திச் சென்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

சுருங்கச் சொன்னால் அகதிகளாகச் சென்றவர்கள் தான் நேர்வழி நின்ற நான்கு ஆட்சியாளர்களாய் - கலீஃபாக்களாய் வரலாற்றில் வாகாய் மிளிர்ந்தார்கள்.

புலம் பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு உரிய மதிப்பையும், உதவிகளையும் செய்து வந்த மதீனா முஸ்லிம்கள் குறித்து அல்லாஹ் புகழாரம் சூட்டி மகிழ்ந்தான்.

அவர்களை அன்ஸார்கள் – உதவியாளர்கள் என்று கூறி கௌரவித்தான்.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()

அன்ஸாரிகளான அவர்கள், நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை மிகவும் நேசிக்கின்றனர். மேலும், அவ்வாறு குடியேறி வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புகளில் இருந்து தங்கள் இதயத்தால் கூட தேவைப்பட மாட்டார்கள். மேலும், தங்களுக்கு தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே உதவி பெற தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களே, அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்”.                             ( அல்குர்ஆன்: 59: 9 )




ஆனால், ஹிஜ்ரத்திலிருந்து இந்த உம்மத்தும் பாடம் பெறவில்லை, உலக மனித சமூகமும் படிப்பினை பெற வில்லை.

இன்றளவிலும் கூட தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் வாழும் பல மஹல்லாக்களில் உள்ளூர் வாசி, வெளியூர் வாசி என்கிற பேதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

சில இடங்களில் இந்த பிரிவினைப் போக்கால் ஒரே ஊரில் இரண்டு பள்ளிவாசல்கள் கூட உருவாகி இருக்கின்றது.

ஹிஜ்ரத்திலிருந்து நபித்தோழர்கள் பெற்ற பாடம் தான் அபூஹுரைரா (ரலி), பிலால் (ரலி), ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) போன்ற வெளி ( நாட்டு) யூர்க்காரர்களை தங்களில் ஒருவராக பார்க்கத் தூண்டியது.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), உமர் (ரலி) அபூபக்ர் (ரலி) அலீ (ரலி) உஸ்மான் (ரலி)  ஸயீத் (ரலி) தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) அபூ உபைதா (ரலி) போன்ற புலம்பெயர்ந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டு இவ்வுலகிலேயே சுவனத்திற்கான சோபனம் பெற்றவர்கள் என்று நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} கூறிய போதிலும் மனதில் அணுவளவு கூட குரோதம் இல்லாமல் நேசிக்கத்தூண்டியது.

ஆனாலும் நாம் இது குறித்துப் பேசுகின்றோம், படிக்கின்றோம், கேட்கின்றோம் என்ன பயன்? சகோதரத்துவ கட்டமைப்புக்குள் இன்னமும் நாம் கேள்விக்குறியாக அல்லவா இருக்கின்றோம்.

சகோதரத்துவம் எனும் ஒற்றை வார்த்தை அவர்களுக்குள் பிரிக்க முடியாத ஓர் பிணைப்பை உருவாக்கியது, விட்டுக் கொடுத்தல் எனும் நற்குணத்தை உருவாக்கியது, இதயப்பூர்வமான நேசத்தை உருவாக்கியது.

உணர்ச்சிகளை விட உயர்ந்தது சகோதரத்துவம்….

அபூதர்தா (ரலி) அவர்களும், ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களும் நபி {ஸல்} அவர்களால் ஹிஜ்ரத்தின் போது சகோதர உறவு ஏற்படுத்தப்பட்டவர்கள்.

சகோதர உறவு ஏற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் ஆழமான நட்பும், நேசமும் கொண்டிருந்த பெருமை இவர்களையே சாரும்.

அபூதர்தாவுக்கு திருமணம் முடிந்திருந்தது. ஆனால், ஸல்மான் (ரலி) அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.

சத்திய சன்மார்க்கத்தை தேடிய பயணத்தில் பெரும்பாலான காலங்களை கழித்தமையால் திருமணம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

இப்போது ஸல்மான் (ரலி) அவர்கள் திருமணம் செய்ய விரும்பினர்கள். ஆனால், வயது சற்றுக் கூடுதலாக இருந்தது.

தன் சகோதரர் அபூதர்தாவிடம் தமது ஆசையை தெரிவித்து விட்டு, பனூ லைஸ் கோத்திரத்தார்களின் அன்ஸாரித்தோழர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவரிடம் நீர் தான் பெண்பேசி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் ஸல்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

عن ثابت البناني ((أن أبا الدرداء ذهب مع سلمان الفارسي يخطب امرأة من بني ليث فدخل فذكر فضل سلمان وسابقته وإسلامه وذكر أنه يخطب إليهم فتاتهم فلانة، فقالوا أما سلمان فلا نزوجه ولكنا نزوجك، فتزوجها ثم خرج فقال: إنه قد كان شيء وإني استحي أن أذكر ذلك، قال: وما ذاك؟ فأخبره أبو الدرداء بالخير، فقال سلمان: أنا أحق أن استحي منك أن أخطبها، وكان قد قضاها لك)).
ثم قال إني لأرجو أن يجعلني الله ممن قال فيهم ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين (الحجر:48

அதற்கு சம்மதம் தெரிவித்த அபூதர்தா (ரலி) அவர்கள், ஸல்மானை அழைத்துக் கொண்டு அந்த அன்ஸாரித்தோழரின் வீட்டிற்கு பெண் பேசச் சென்றார்கள்.

அந்த அன்ஸாரித்தோழரிடம் ஸல்மான் (ரலி) அவர்களின் குணநலன்களையும், நபி {ஸல்} அவர்கள் ஸல்மான் (ரலி) அவர்கள் குறித்துக் கூறிய சோபனங்களையும் கூறி ஸல்மான் (ரலி) அவர்களுக்குப் பெண் கேட்டார்.

அந்த அன்ஸாரித்தோழரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அழகும், செல்வ வளமும் நிறைந்த அபூதர்தா (ரலி) அவர்களிடம்ஸல்மான் (ரலி) அவர்களுக்கு எனது மகளை நான் திருமணம் செய்து தரப் போவதில்லை. மாறாக, நீர் விரும்பினால் உமக்கு என் மகளை நான் திருமணம் செய்து தருகின்றேன்என்று கூறினார். அவ்வாறே திருமணமும் செய்து வைத்தார்.

சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற அபூதர்தா (ரலி) அவர்கள் ஸல்மானை நோக்கிஸல்மானே! உள்ளே நடைபெற்ற சம்பவத்திற்காக நான் அதிகம் வெட்கப்படுகின்றேன்!” என்றார்கள்.

தமது சகோதரரின் முகவாட்டத்தையும், கவலையையும் கண்ட ஸல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவை நோக்கிசகோதரரே! உண்மையில் நான் தான் வெட்கப்படுவதற்கு அதிகம் தகுதி உள்ளவன்! ஏனெனில், அல்லாஹ் உமக்காக நிர்ணயித்த பெண்ணை நான் பெண் கேட்டு வந்தமைக்காக!...

சகோதரரே! நானும் நீயும் எப்படிப்பட்ட சகோதரர்கள் தெரியுமா? அல்லாஹ் கூறுகின்றானேஅவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்” ( அல்குர்ஆன்: 15 : 48 ) என்ற இறை வசனத்திற்கு ஏற்ப அல்லாஹ் நம்மை ஆக்கவேண்டும்என்றே நான் விரும்புகின்றேன்.

                    ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ )

உணர்வுகளை விட மேலானது சகோதரத்துவம்….

உஹத் யுத்தகளத்தின் பரபரப்பான தருணம் அது

புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து முஸ்லிம்களை நிலை குலையச் செய்த அபாயகரமானச் சூழல், நாலா புறமும் முஸ்லிம்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

இப்போது, யுத்தகளம் முழுவதையும் எதிரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.
" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "
"سيرة ابن هشام" (2 / 86)
وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .
 وكان النبي صلى الله عليه وسلم قد أَسَرَّ إلى حذيفة أسماء المنافقين ، وضبط عنه الفتن الكائنة في الأمة .
இந்த யுத்தத்தில் ஹுதைஃபா (ரலி) அவர்கள், தங்களது தந்தை ஹுஸைல் இப்னு ஜாபிர் (ரலி) அவர்களோடு களம் புகுந்திருந்தார்கள்.

இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹுஸைல் (ரலி) அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி தப்பி ஓடுகின்றான். அவனைத் துரத்திக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்கள் ஓடுகின்றார்கள்.

சற்று தூரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ஹுஸைல் (ரலி) அவர்களை எதிரியாகவும், தப்பி ஓடும் எதிரியை முஸ்லிமாகவும் தவறாக நினைத்துக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்களுக்குப் பின்னால், அவரைத் தாக்க துரத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதைக் கண்ணுற்று நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்தவர்களாகதோழர்களே! அவர் என் தந்தை, அவர் ஒரு முஸ்லிம்என உரக்க சப்தமிட்டவாறே பின்னால் ஓடினார்கள்.

யுத்தகளத்தின் களேபரத்தில் ஹுதைஃபாவின் குரல் நபித்தோழர்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. ஆம் நபித்தோழர்கள் ஹுதைஃபாவின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

ஹுஸைல் (ரலி) அவர்களின் தலை துண்டாக வீழ்ந்த அதே நேரத்தில், அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் உடைந்து தெறித்தது.

நபித்தோழர்கள் அருகே சென்று பார்க்கின்றார்கள். அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்கள்.

ஒரு முஸ்லிமை சக முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயமாக கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வோடு தலைகுனிந்தவர்களாக செய்வதறியாது விக்கித்து நின்றார்கள் நபித்தோழர்கள்.

இதே நேரத்தில் ஹுதைஃபா அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செய்வதறியாது விக்கித்து நிற்கும் தோழர்களை இரக்க மனதோடும், வாஞ்சையோடும் நோக்கிய ஹுதைஃபா (ரலி) அவர்கள்தோழர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்! நீங்கள் ஒன்றும் என் தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை! தவறுதலாகத்தான் செய்து விட்டீர்கள்! கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனான அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்! என்று உணர்வுகளை அடக்கி, உயர்ந்த எண்ணத்தோடு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, யுத்தகளம் நோக்கி எதிரிகளைத் தாக்க விரைந்து சென்றார்கள்.

யுத்தகளம் ஓய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஹுதைஃபா (ரலி) அவர்களை அழைத்து கட்டித்தழுவி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.

தந்தையை இழந்த மகனுக்கு தக்க நஷ்ட ஈட்டை வழங்குமாறு ஹுஸைலைக் கொன்ற நபித்தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகையை அண்ணலாரிடமே திருப்பித்தந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! இந்த தொகையை ஏழை முஸ்லிம்களுக்கு உங்கள் கரங்களாலே வழங்கி விடுங்கள்என்று கூறி நபி {ஸல்} அவர்களை நெகிழ வைத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹுதைஃபா (ரலி) அவர்களின் மீதான அன்பும், நேசமும் நபி {ஸல்} அவர்களுக்குப் பல்கிப் பெருகியது.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அந்தரங்கக் காரிய தரிசியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரகசியங்களைக் கட்டிக் காக்கும் உயரிய பணியின் தலைமைச் செயலராக நியமனம் பெற்றார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…, ஸீரத் இப்னு ஹிஷாம், புகாரி )

தன்மானத்தை விட மகத்துவம் வாய்ந்தது சகோதரத்துவம்….

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கிநீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்என்றான் அரசன்.

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها.

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين.

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆசை கொண்டான். அருகில் சென்ற அரசன்எனது நெற்றியில் முத்தமிடும்! உம்மை விடுதலை செய்கின்றேன்! நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்என்றான். 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு அந்த அரசன்என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற உம்முடைய படை வீரர்கள் 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்என்று கூறினான்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்என்று கூறி முத்தமிட்டார்கள்.

فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

சுற்றியிருந்த மக்களில் சிலர் “உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழை” என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

உடனே, உமர் (ரலி) அவர்கள் “அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி “அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளது” என்று கூறினார்கள்.

                                                  ( நூல்: உஸ்துல் ஃகாபா )
உயிரை விட உவப்பானது சகோதரத்துவம்….

ففي معركة اليرموك استشهد عدد من المسلمين، وأصيب بعضهم بجروح خطيرة، وكان من بين الذين أصيبوا: الحارث بن هشام، وعكرمة بن أبي جهل، وعياش بن ربيعة، فلقد سقط الثلاثة في أرض المعركة جرحى، فأسرع إليهم بعض الصحابة ونقلوهم إلى الخيمة التي يتم فيها علاج الجرحى من المسلمين، وأحسّ الحارث بن هشام بالعطش الشديد، فأشار إلى رجل كان يساعد الجرحى بأن يحضر له الماء، وجلس الرجل بجوار الحارث ليسقيه، فنظر الحارث إلى عكرمة وهو يرقد بجواره فأحسَّ بأنّه يريد الماء، فقال الحارث في نفسه: لو شربت الماء فلن يتبقى ماء لعكرمة، فقال للرجل: خذ الماء لعكرمة فإنّه عطشان، فقال له الرجل: وأنت أيضًا عطشان!! فقال له الحارث: الماء قليل فأعطه لعكرمة، فأخذ الرجل الماء وأعطاه لعكرمة، فنظر عكرمة لـ"عياش ابن ربيعة" فأحسّ أنه يريد الماء، فقال الرجل: الماء قليل فأعطه لعياش!! فنظر عيّاش للرجل الذي كان بجواره، فقد كانوا سبعة في الخيمة قد أصيبوا بجراحٍ خطيرة، فقال الرجل: الماء قليل فأعطه للرجل الذي يرقد بجواري، وهكذا ظلَّ كلَّ واحدٍ من هؤلاء السبعة يطلب من الرجل أن يسقى أخاه الذي بجواره، فلما وصل إلى السابع وجده قد مات، فعاد إلى السادس ليعطيه الماء فوجده قد مات، فعاد إلى الخامس ليجده قد مات، فعاد به إلى الرابع فوجده قد مات، فنظر إلى "عياش" ليعطيه الماء فوجده قد مات، فنظر إلى عكرمة ليعطيه الماء فيجده قد مات، فيسرع إلى الحارث ليعطيه الماء فيجده قد مات..
فآثر كلَّ واحدٍ منهم الآخر على نفسهِ حتى ماتوا جميعًا!!
யர்மூக் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணம் அது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அப்போது, காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக படையில் பங்கெடுத்த தோழர் தண்ணீர் பையோடு விரைகிறார்.

தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

தண்ணீர் பையை திறந்து ஹாரிஸ் (ரலி) அவர்களின்ன் வாயின் அருகே கொண்டு சென்ற போது, அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்த போது, அங்கே இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் (ரலி) கடுமையான தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம், இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் நாவறண்டு தாகத்தோடு காணப்பட்டார்கள். வாயின் அருகே தண்ணீரை கொண்டு செல்கிற போது அயாஷ் (ரலி) அவர்கள் ஷஹீதாகி விட்டார்.

இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்றால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

                                 ( நூல்: அல்மஃகாஸீ லிஇமாமி அல்வாகிதீ )

பலத்த காயத்தோடும், தகிக்கும் தாகத்தோடும் மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழர்கள் ஒவ்வொருவரின் உணர்வும் தங்களின் உயிரை விட சகோதரத்துவ உறவே மிகவும் உவப்பானதாக தெரிந்தது.

ஆனால், இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும், பிரிவுகளும் சகோதரத்துவம் எனும் கட்டமைப்பில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்றால் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதாவது ஒரு சேனலில் கிடைக்கிற 30 அல்லது 60 நிமிட நேரத்தில் ஒருவருக்கொருவர் மிகக் கேவலமாக விமர்சித்துக் கொள்ளும் நிலை.

இன்னும், ஒரு படி மேலே சென்று பார்த்தால் நான் தான் உண்மை முஸ்லிம், நீ காஃபிர், அவன் காஃபிர் என்று நாளுக்கொரு ஃபத்வா வழங்கி சகோதரத்துவ உறவுக்கு உலை வைக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஹிஜ்ரத் உலகிற்கு என்ன பாடம் சொல்கிறது? ஊருக்கு என்ன படிப்பினையைத் தருகிறது என்று பார்ப்பதை விட ஹிஜ்ரத்திற்கும் எனக்குமான ஆத்மார்த்தமான பந்தம் என்ன? என்று சீர் தூக்கி பார்த்து எதிர் வரும் புத்தாண்டில் 1438 –இல் சகோதரத்துவ கட்டமைப்போடு என் சக முஸ்லிம் சகோதரனை அணுகுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

எம்முடைய ஹிஜ்ரத் குறித்த முந்தைய பதிவுகள்…..

ஹிஜ்ரத் இஸ்லாமியமயமாதலின் ஓர் இனிய உதயம்…
தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!!!