Wednesday, 31 May 2017

ஆறாவது நாள் தராவீஹ் பயான்! المغفرة மன்னிப்பு எனும் அளவிலா அருட்கொடை!!!ஆறாவது நாள் தராவீஹ் பயான்!
المغفرة  மன்னிப்பு எனும் அளவிலா அருட்கொடை!!!ஆறாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஐந்தாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம் செய்த இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று மன்னிப்பின் மகத்துவம் குறித்து பேசுகின்றது...

إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ (165)

”நிச்சயமாக! உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும், நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும், பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 6: 165 )

மனித படைப்பாகிய நாம் படைத்த ரப்புக்கு மாற்றமான பாவமான காரியங்களை பகிரங்கமாகவும், இரகசியமாகவும், அறிந்தும் அறியாமலும், சிறிதும் பெரிதுமாக வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்கின்றோம்.

மனித சமூகமாகிய நாம் செய்கிற பாவமான செயல்களுக்காக உடனடியாக அல்லாஹ் தண்டிக்க நாடிவிட்டால் இந்த உலகத்தில் மனித சமூகம் என்கிற ஓர் படைப்பே இல்லாமல் போய் விடும்.

எனினும் அல்லாஹ் தன்னுடைய மன்னிப்பு எனும் பெருங் கருணையின் துணை கொண்டு நம்மை அரவணைத்து, வாழும் நாட்களை நீட்டித்து, செய்த பாவமான செயல்களில் இருந்து மீள்வதற்கான பாவமன்னிப்பு எனும் வாசலையும் திறந்து வைத்து நம்மீது பேருபகாரம் செய்திருக்கின்றான்.

அல்லாஹ் தான் மன்னிப்பாளன் என்பதை அல்குர்ஆனில் மூன்று விதமாக அடையாளப்படுத்துகின்றான்.

1. ஃகஃபூர் 2. ஃகாஃபிர், 3. ஃகஃப்ஃபார்.

அல்குர்ஆனில் ஏறத்தாழ 5 இடங்களில் ஃகஃப்ஃபார் -  - என்றும், ஒரு இடத்தில் ஃகாஃபிர் -  - என்றும், 90 மேற்பட்ட இடங்களில் ஃகஃபூர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும் மறைத்து அவர்கள் மீது அருள் புரிகின்றான்.

عن أنس بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله يقول: قال الله تعالى
 (يا ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى وَرَجَوتَنِى غَفَرتُ لَكَ عَلى مَا كَانَ مِنكَ وَلاَ أُبَالِى
 يَا ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّماءِ ثُمَّ استَغفَرتَنِى غَفَرتُ لَكَ
 يَا ابنَ آدَمَ إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!

ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!

ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன்”.               ( நூல்: திர்மிதீ )

وروي ان حبيب بن الحارث قال للنبي (صلى الله عليه وآله وسلم): إني مقراف للذنوب، قال: (فتب إلى الله يا حبيب، فقال: إني أتوب ثم أعود، فقال: كلما أذنبت فتب، حتى قال: عفو الله أكبر من ذنوبك يا حبيب).

ஹபீப் இப்னு ஹாரிஸ் (ரலி) என்கிற தோழர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் பாவத்தால் சூழப்பட்டிருக்கின்றேன்என்று கூறினார். ஹபீபே! அல்லாஹ்விடம் தவ்பாச் செய் என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, அல்லாஹ்வின் தூதரே! நான் தவ்பாச் செய்கிறேன், எனினும் மீண்டும் பாவம் செய்து விடுகின்றேனேஎன்ன செய்ய அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்நீர் பாவம் செய்கிற போதெல்லாம் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து விடுஎன்று கூறினார்கள்.

மீண்டும் அவர் இவ்வாறு கேட்கவே, “ஹபீபே! உம்முடைய பாவத்தை விட அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியதுஎன்று பதிலளித்தார்கள்.

                                                      ( நூல்: அல் கபாயிர் )
وفي الحديث الطويل لأنس أن الأعرابي قال يا رسول الله من يلي حساب الخلق فقال الله تبارك وتعالى قال هو بنفسه قال نعم فتبسم الأعرابي فقال صلى الله عليه و سلم مم ضحكت يا أعرابي فقال إن الكريم إذا قدر عفا وإذا حاسب سامح فقال النبي صلى الله عليه و سلم صدق الأعربي ألا لا كريم أكرم من الله تعالى هو أكرم الأكرمين

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அண்ணலாரின் சபைக்கு ஒரு கிராமவாசி வந்தார். வந்தவர், அல்லாஹ்வின் தூதரே! படைப்புகளின் கேள்வி கணக்கை யார் கேட்பார்? என்று வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்அல்லாஹ் தான் கேட்பான்என்று கூறினார்கள்.

அப்போது, அவர்அல்லாஹ் தானே, அவன் மட்டும் தானே கேள்வி கேட்பான்? என்று வினவினார். அதற்கு பெருமானார் {ஸல்} அவர்கள்ஆம்என்று பதிலளித்தார்கள்.

அப்போது, அந்தக் கிராமவாசி புன்னகைத்தார். அதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள்எதற்காக நீர் சிரித்தீர்?” என வினவினார்கள்.

அப்போது, அந்தக்கிராமவாசிகண்ணியமானவன் என்றால் யார் தெரியுமா? அனைத்துக்கும் சக்தியிருந்தும் மன்னிப்பான்! விசாரணை மேற்கொண்டால் கண்டும் காணாமல் நடந்து கொள்வான்என்றார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்கிராமவாசி உண்மையே சொன்னார்! அல்லாஹ்வை விட கண்ணியமானவன் எவருமில்லை. அவன் கண்ணியமானவர்களில் எல்லாம் மிகவும் கண்ணியமானவன்என்று பதில் கூறினார்கள்.                                                 ( நூல்: அல்கபாயிர் )

அல்லாஹ்வின் மகத்தான மன்னிக்கும் குணம்….

أن موسى عليه السلام، كان هناك رجلاً من قومه يؤذيه بأنواع من الأذى و موسى يحاول أن ينصحه وأن يكف عنه شره وذاك الرجل يزداد سوءاً وشراً فاشتكى موسى إلى الله تعالى قال (ياربِ إن فلان فعل كذا وكذا فيارب خلصني منه ) فأوحى الله تعالى إلى موسى قال له( يا موسى قد جعلت عقابه إليك ) أي أنت تريد به عقوبة معينه فلك ذلك ، فرآه موسى عليه السلام في وسط الطريق يوماً فأقبل ذلك الرجل كعادته يسب موسى عليه السلام ويتنقصه فغضب موسى عليه السلام فقال يا أرض خذيه ، قالوا فانشقت الأرض فدخل الرجل إلى ركبتيه فصاح قال: يا موسى تبت، يا موسى أغثني، فقال موسى: يا أرض خذيه، فانشقت الأرض ودخل إلى حقويه "حوظه" فلا زال يستغيث يا موسى تبت، وموسى عليه السلام لا يستجيب له حتى بلعته الأرض كله، فأوحى الله تعالى إلى موسى ، قال يا موسى: ما أقسى قلبك ، وعزتي وجلالي لو استغاث بي لأغثته .
وهذه القصة ذكرها الإمام ابن أبي الدنيا في كتابه مستجابي الدعوة

பனூஇஸ்ரவேலர்களில் ஒருவன் மூஸா {அலை} அவர்களுக்கு எல்லா வகையிலும் நோவினை கொடுத்து வந்தான். அவனை அழைத்து மூஸா {அலை} அவர்கள் எவ்வளவோ உபதேசம் செய்தும் அவன் திருந்தவில்லை.

நாளுக்கு நாள் அவன் மூலம் அடைகிற தொல்லை பெருகிக் கொண்டே போனது. இறுதியாக மூஸா {அலை} அவர்கள் அவனுடைய தொல்லைகள் எல்லை மீறிப்போனது குறித்து அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.

அல்லாஹ் நபி மூஸா {அலை} அவர்களிடம் அவன் விஷயத்தை உங்களிடமே ஒப்படைக்கின்றேன். நீர் அவனோடு எப்படி நடந்து கொள்ள விரும்புகின்றீரோ அப்படி நடந்து கொள்ளும்!” என்று கூறிவிட்டான்.

ஒரு நாள் மூஸா {அலை} அவர்கள் கடை வீதிக்குச் சென்றார்கள். எதிரே அந்த மனிதன் வந்தான். மூஸா {அலை} அவர்களைக் கண்டதும் முன்பு போல பலவாறாக ஏசிப்பேசினான்.

கோபமடைந்த மூஸா {அலை} அவர்கள்பூமியைப் பார்த்து பூமியே! நீ அவனைப் பிடித்துக் கொள்! என்று கூறினார்கள்.

பூமி அவனைப் பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பூமியின் பிடிக்குள் சிக்கி பூமிக்குள் புக ஆரம்பித்தான்.

தாம் அழியப்போகிறோம் என்பதை உணர்ந்த அவன்நபிய்யுல்லாஹ் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று மரண ஓலமிட்டான்.

மூஸா {அலை} அவர்களோ! பூமியே இன்னும் நீ நன்றாகப் பிடித்துக் கொள்! என்று கட்டளைப் பிறப்பித்தார்கள். பூமிக்குள் முழுவதுமாக அவன் இழுக்கப்படுகின்ற வரை அவன்நபிய்யுல்லாஹ் மூஸா அவர்களே! நான் மன்னிப்புக் கோருகின்றேன்! எனக்கு உதவி செய்யுங்கள்! என்று  ஓலமிட்டுக் கொண்டே இருந்தான்.

மூஸா {அலை} அவர்களும் அதைக் கண்டு கொள்ளாமல் பூமியிடம் கட்டளை போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக அவன் பூமிக்குள் புதையுண்டு போனான். இப்போது, அல்லாஹ் மூஸா {அலை} அவர்களை நோக்கிமூஸா அவர்களே! ஏன் உம் உள்ளம் இப்படி வறண்டு போய் விட்டது? அவன் என்னிடம் உதவி கோரியிருந்தால் நான் அவனை மன்னித்து அவனுக்கு உதவியிருப்பேன்!” என்று கூறினான்.

           ( நூல்: அல் முஸ்தஜாபுத் தஃவா லி இமாமி இப்னு அபித்துன்யா )


அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் மன்னிப்பான்…

كان احد الصالحين جار لاحد الفسقة الذين ادمنو الخمر .. والمعاصى
فلما مات هذا العاصى وطلب الناس من هذا الصالح ان يصلى عليه.. تافف الصالح وقال هذا رجل فاسق كيف اصلى عليه.
وفى تلك اليلة ..نام هذا الرجل الصالح ....
وفى المنام
راى مفاجاة
وهى ان هذا الفاسق كان يصلى فى الجنة
جن الجنون هذا الرجل الصالح فذهب الى امراة الفاسق ,و وسالها ماذا كان يفعل زوجك .. قالت ما كان يفعل الا ما ريتم الا انه كان كل اسبوع يجمع اطفال الحى اليتامى ويقول لهم : ادعو لعمكم عسى ان يغفر الله لهم

ஸாலிஹீன்களில் ஒருவரின் வீட்டுக்கு அருகே மதுப்பிரியர் வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் அவர் இறந்து போனார். மக்கள் அந்த ஸாலிஹை அவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைக்குமாறு வேண்டினர்.

என்ன சொல்கின்றீர்கள்? சதா மதுவிலேயே ஊறித் திளைத்தவருக்கு எப்படி தொழ வைக்க முடியும்? நான் தொழ வைக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.

அன்றைய இரவிலே அந்த ஸாலிஹ் இறந்த போன பக்கத்து வீட்டுக்காரரை சுவனத்தில் தொழுவது போன்று கனவில் கண்டார்.

நித்திரையில் இருந்து விழித்தெழுந்த அவருக்கு எப்படி இவர் இந்த அந்தஸ்தை அடைந்தார்? என ஒரே குழப்பமாக இருந்தது.

காலையில் முதல் ஆளாக அவரின் வீட்டுக்குச் சென்று தாம் கனவில் கண்டதைக் கூறி உம் கணவர் ஏதாவது நன்மையான செயலைச் செய்து இருக்கின்றாரா? என்று கேட்டார்.

அதற்கு அப்பெண்மணி, ஆம்! வாரத்தில் ஒரு நாள் ஊரில் இருக்கிற அநாதைக் குழந்தைகளை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து உணவோ அல்லது திண்பண்டமோ வாங்கிக் கொடுத்து விட்டு, நீங்கள் எனக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்! அல்லாஹ் என் பாவங்களை உங்கள் துஆவால் மன்னிப்பான் என நான் ஆதரவு வைக்கின்றேன்” எனக் கூறுவார் என்றார் அவரின் மனைவி.    ( நூல்: அல்கபாயிர் )

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم :( كان الكفل من بني إسرائيل لا يتورع عن ذنب عمله فأتته امرأة فأعطاها ستين دينارا على أن يطأها فلما قعد مقعد الرجل من امرأته أرعدت فبكت فقال : ما يبكيك أكرهت ؟ قالت : لا و لكن هذا عمل لم أعمله قط و إنما حملني عليه الحاجة قال فتفعلين هذا و لم تفعليه قط قال : ثم نزل فقال : اذهبي و الدنانير لك قال : ثم قال و الله لا يعصي الكفل ربه أبدا فمات من ليلته و أصبح مكتوبا على بابه قد غفر للكفل ) رواه الحاكم و قال : هذا حديث صحيح الإسناد و لم يخرجاه و وافقه الذهبي

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு பெண்மணி உதவி கேட்டு வந்தார். அறுபது தீனாரை கொடுத்து விட்டு, விபச்சாரம் செய்ய அழைத்தார். அந்தப் பெண்மணியும் வேறு வழியின்றி சம்மதித்தார்.

அந்தச் செயலைச் செய்வதற்காக அந்தப் பெண்மணியின் தொடையின் மீது இவர் அமர்ந்த போது திடுக்கிட்டு எழுந்த அப்பெண்மணி கதறி அழுதாள். அப்போது அவர் ஏன் அழுகின்றாய்? என்று வினவினார்.

அதற்கு, அப்பெண்மணி இதற்கு முன் எப்போதும் நான் இப்படியான இழி செயலை செய்ததில்லை. என் சூழ்நிலை என்னை இவ்வாறு செய்யத் தூண்டி விட்டது என்றாள்.

அப்போது, அவர் “இனி ஒரு போதும் நீ இந்த இழி செயலைச் செய்ய வேண்டாம். அந்த தீனார்களை நீயே எடுத்துக் கொள்! என்று கூறி விட்டு, மனம் திருந்தியவராக “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இனி வாழ்க்கையில் எந்தவொரு தருணத்திலும் ரப்புக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று சத்தியமிட்டுக் கூறினார். அந்த இரவிலேயே அவர் இறந்து போனார்.

“அவருடைய வீட்டு வாசலைக் கடந்து சென்ற அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்த படியே ஒருவருக்கொருவர் பேசிய படியே சென்றனர்.

ஆம்! அவர் வீட்டு வாசலிலே “அல்லாஹ் இவரை மன்னித்து விட்டான்” என்று எழுதப்பட்டு இருந்தது.

திர்மிதியின் இன்னொரு அறிவிப்பில்….

பின்னர், அல்லாஹ் அவர் பற்றியுண்டான இந்தச் செய்தியை அந்த காலத்தில் வாழ்ந்த நபிக்கு அறிவித்துக் கொடுத்து மக்களிடம் சொல்லுமாறு ஆணை பிறப்பித்தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ, ஹாக்கிம் )

அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்.

இன்ஷா அல்லாஹ்…. நாளை ஜும்ஆ நாளாக இருப்பதால் நாளை ஒரு நாள் மட்டும் பயான் பதிவிட இயலாது.

இன்ஷா அல்லாஹ்…. சனிக்கிழமை பயான் பதிவிடப்படும்….