Wednesday 10 May 2017

பராஅத் இரவு அதன் மாண்பும், மகத்துவமும்….!!!



பராஅத் இரவு அதன் மாண்பும், மகத்துவமும்….!!!



இந்த மாதம் பாக்கியமும், அருள்வளமும் நிறைந்த மகத்தான ஷஅபான் மாதமாகும்.

ரமலானுக்குப் பின்னால் பாக்கியமும், அருள்வளமும் நிறைந்த மாதம் ஷஅபான் மாதமாகும்.

இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் இரவுக்கு பல்வேறு சிறப்புக்கள் இருப்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் மூலமாக இந்த உம்மத்தின் மேன்மக்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் உறுதிபடுத்தி இருக்கின்றார்கள்.

குர்ஆன், ஸுன்னாவை குறுகிய கண்ணோட்டத்தோடும், மழுங்கிய புத்தியோடும் பார்த்துப் பழகிய சில குறுமதியாளர் கூட்டங்கள் தாங்கள் விலகி இருப்பதோடு மாத்திரமல்லாமல் இந்த உம்மத்தின் பெருந்திரளானவர்களிடையேயும் இது குறித்த சந்தேகங்களையும், புரளிகளையும் சமீப காலமாக ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த இரவில் தான் விதி முடிவு செய்யப்பட்டு வானவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றது.

இந்த இரவில் தான் வரும் ஓராண்டில் வாங்கப்பட வேண்டிய ரூஹ்களின் பட்டியல் மலக்குல் மவ்த்திடம் ஒப்படைக்கப் படுகின்றது.

இந்த இரவில் தான் அல்லாஹ் முதலாம் வானத்திற்கு வருகை புரிந்து வாழ்வாதாரத்திற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, பாவமன்னிப்பிற்காக துஆ செய்பவர்கள் யாரும் உண்டா? எனக் கேட்கின்றான்.

இந்த இரவில் தான் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறை வாசிகளுக்கு மாநபி {ஸல்} பிரத்யேகமான துஆக்களைச் செய்தார்கள்.

இந்த நாளின் இரவில் நின்று வணக்கம் புரிவதும், பகலில் நோன்பு நோற்பதும் இறைவனுக்கு மிக உகந்த செயலாகும் என ஹதீஸில் வந்துள்ளது.

என்றாலும், இந்த உம்மத்தின் நிலை குறித்து மாநபி {ஸல்} அவர்கள் அன்றே தங்களின் கவலையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீஸின் மூலமாக விளங்க முடிகின்றது.

عن أسامة بن زيد رضي الله عنهما قال: قلت يا رسول الله: لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان؟ قال : ((ذاك شهر تغفل الناس فيه عنه، بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، وأحب أن يرفع عملي وأنا صائم
ويكفي شعبان انه فيه ليله النصف من الشعبان  

மாநபி {ஸல்} அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

இதைக் கவனித்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் மற்றெல்லா மாதங்களில் நோன்பு நோற்பதை விடவும் ஷஅபானில் அதிகமாக நோன்பு நோற்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு, மாநபி {ஸல்} ரஜபுக்கும் ரமலானுக்கும் இடையே வருகிற இந்த ஷஅபான் மாதம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அல்லாஹ்விடம் எவ்வளவு மகத்தானது என்பதை விளங்காமல் மக்கள் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

1. இந்த மாதத்தில் தான் மனிதர்களின் அமல்கள்செயல்கள் அல்லாஹ்வின் திருமுன் உயர்த்தப்படுகின்றது.

2. என் அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் போது நான் நோன்பாளியாக இருக்கவே விரும்புகின்றேன்என்று பதில் கூறினார்கள்.

                                                        ( நூல்: النسائي )

மாநபி {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தின் அலட்சியம் குறித்து கவலை கொள்வதோடு, தாம் நபியாக இருந்தும் அல்லாஹ்வின் திருமுன் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை பயப்படுவதையும், அதற்காக விழிப்புணர்வோடு செயல் படுவதையும் இந்த உம்மத்திற்கு உணர்த்துகின்றார்கள்.

காரணம் இந்த மாதத்தின் இன்றைய பராஅத் இரவில் தான் அல்லாஹ்வின் திருமுன் மனித சமுதாயத்தின் ஒவ்வொருவரும் ஓராண்டில் செய்த அத்துணை அமல்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எவ்வளவு கனமான, பாரமான விஷயம், அல்லாஹ் நம் ஏடுகளை பார்க்கும் போது நம்முடைய செயல்களால் நம் மீது அதிருப்தி அடைந்து விட்டால் பின்னர் நம் நிலைமை என்னவாகும் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அலட்சியமும்ஆபத்தும்….

அலட்சியம் அது இறைநம்பிக்கையாளர்களின் ஈருலக வாழ்க்கையிலும் ஆபத்தை விளைவிக்கிற காரணிகளில் பிரதானமான ஒன்றாக இருப்பதாக குர்ஆன் எச்சரிக்கின்றது.

ஆம்! நரகமும், அதன் வேதனையும் யாருக்கானது என்பதை அல்லாஹ் அறிமுகம் செய்கிற போதுஅது அலட்சியம் செய்பவர்களுக்கானதுஎன்றே கூறுகின்றான்.

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ()

ஜின் மற்றும் மனிதவர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றைக் கொண்டு எதைப் பார்க்க வேண்டுமோ அவற்றை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு செவிகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் நல்லவைகளைக் கேட்பதில்லை. இவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் கேடானவர்கள்! அவர்கள் தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்”.                                        ( அல்குர்ஆன்: 7: 179 )  

அல்லாஹ்வை பொறுத்தமட்டில் அவன் எப்போதும் அலட்சியமாக இருப்பதில்லை. அலட்சியமாக இருப்பவர்களை அவன் ஒரு போதும் விட்டு வைப்பதும் இல்லை.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ ()

பாவம் செய்கிற அநியாயக்காரர்கள் அல்லாஹ் அலட்சியமாக இருக்கின்றான் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அவன் தாமதப்படுத்துவதெல்லாம் பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் மகத்தான ஒரு (மறுமை) நாளுக்காகத் தான்

                                                   ( அல்குர்ஆன்: 14: 42    )

இன்று தொழலாம், நாளை தொழலாம், இந்த வாரம் ஏழைக்கு உணவளிக்கலாம், அடுத்தவாரம் உணவளிக்கலாம், இப்ப என்ன அவசரம் மார்க்கத்தின் கடமைகளை காலம் கனிகிற போது செய்து கொள்ளலாம், என்று இழுத்தடித்து மௌத் வரும் வரை செய்யாமல் அலட்சியமாக இருந்தவர்களைஸகர்எனும் கொடிய நரகத்தில் அல்லாஹ் வீழ்த்துவான் என குர்ஆன் எச்சரிக்கின்றது.

فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ () عَنِ الْمُجْرِمِينَ () مَا سَلَكَكُمْ فِي سَقَرَ () قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ () وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ () وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ () وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ () حَتَّى أَتَانَا الْيَقِينُ

சுவனத்தில் வீற்றிருப்பவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்உங்களை இந்த கொடிய ஸகருக்கு கொண்டு வந்தது எது? என்று.

அதற்கு, அவர்கள்தொழக்கூடியவர்களாக, ஏழைக்கு உணவளிக்கக் கூடியவர்களாக நாங்கள் இருக்கவில்லை. மேலும், சத்தியத்திற்கெதிரான பேச்சுக்களை பேசுபவர்களோடு நாங்களும் இணைந்திருந்தோம். மேலும், கூலி கொடுக்கப்படும் மகத்தான இந்நாளையும் நாங்கள் பொய்யென உரைத்து வந்தோம். அந்த உறுதியான மரணம் எங்களைச் சந்திக்கும் வரைஎன்று கூறுவார்கள்.

                                                  ( அல்குர்ஆன்: 74: 40 – 47 )

ஆகவே, அலட்சியம் எவ்வளவு மாபெரும் ஆபத்தானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள இது போதுமானதாகும்.

ஆகவே, நம் செயல்பாடுகளை, அனுதினமும் சரிசெய்திட, அழகு படுத்திக் கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.

செயல் பதிவேடுகள் எதற்காக?....

வானம், பூமி மற்றும் அனைத்து வஸ்துக்களின் மீதும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் போது எதற்காக மனிதர்களின் செயல்களை பதிவு செய்ய வேண்டும்? ஏன் அதை தினமும் இரு முறையும், வாரம் இரு முறையும், ஆண்டிற்கு ஒரு முறையும் பார்வையிட வேண்டும்? என்று நமக்கு வியப்பும், கேள்வியும் எழலாம்.

இதோஅதற்கான பதில்

அல்லாஹ் மறுமையில் மரணமே இல்லாத ஓர் வாழ்வை அமைத்து வைத்திருக்கின்றான். அந்த வாழ்வானது ஒன்று இன்பங்களும், உல்லாசமும் நிறைந்த இனிய சுவனத்தில் இருக்கும். அல்லது துன்பங்களும் கொடிய வேதனைகளும் நிறைந்த நரகத்தில் இருக்கும்.

அல்லாஹ் மனித சமூகத்தின் உலக வாழ்வை மறுமையின் நிரந்தரமான இவ்விரண்டு வாழ்விற்கான பரிசோதனைத் தளமாகவே அமைத்துள்ளான்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

அவனே மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு!”

                                                       ( அல்குர்ஆன்: 67: 2 )

உலக வாழ்வில் அழகிய மிகச்சிறந்த செயல்களைச் செய்தவர்களை இனிய சுவனத்திற்கும், மோசமான, தீய செயல்களைச் செய்தவர்களை கொடிய நரகிற்கும் நிரந்தமாக வாழ அல்லாஹ் அனுப்புவான்.

ஏன் நான் சுவனத்திற்கு வந்தேன்? என்று சுவனம் செல்பவர் தெரிந்து கொள்வதற்காகவும், ஏன் நான் நரகத்திற்கு வந்தேன்? என்று நரகில் புகுந்தவர் தெரிந்து கொள்வதற்காகவும் வேண்டி அல்லாஹ் செய்த மகத்தான ஏற்பாடு தான் இந்த செயல் பதிவேடாகும்.

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ () إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ () فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ () فِي جَنَّةٍ عَالِيَةٍ () قُطُوفُهَا دَانِيَةٌ () كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ()

அன்று தன் வலக்கரத்தில் யாருக்குச் செயல்பதிவேடு தரப்படுகின்றதோ, அவர் கூறுவார்: “இதோ பாருங்கள்! என் செயல் பதிவேட்டைப்படியுங்கள்! நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்! இத்தகையவர் மனதிற்குகந்த வாழ்க்கையில், பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் உன்னதமான சுவனத்தில் வீற்றிருப்பார்.

அவர்களிடம் கூறப்படும்சுவையாக உண்ணுங்கள்! பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் புரிந்த மிகச் சிறந்த செயல்களுக்குப் பகரமாக

                                                  ( அல்குர்ஆன்: 69: 19 – 24 )

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ () وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ () يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ () مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ () هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ () خُذُوهُ فَغُلُّوهُ () ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ () ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ ()

மேலும், தன்னுடைய இடக்கரத்தில் செயல்பதிவேடு வழங்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயல்பதிவேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா? அந்தோ! உலகத்தில் ஏற்பட்ட அந்த மரணமே இறுதியானதாய் இருக்கக்கூடாதா? இன்று என்னுடைய செல்வம் எனக்கு பயன் அளிக்கவில்லையே? என்னுடைய அதிகாரம் அனைத்தும் செயலிழந்து போய் விட்டதே?! இத்தகையவனை நோக்கி ஆணை பிறப்பிக்கப்படும்! “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்! பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்! பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!”

                                                  ( அல்குர்ஆன்: 69: 25 – 32 )

செயல் பதிவேடும்பாவிகளின் நிலையும்

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ()

மேலும், செயல் பதிவேடு முன்னால் வைக்கப்பட்டு விடும். ( நபியே ) அவ்வேளையில் நீர் பார்ப்பீர்! அந்நாளில் குற்றம் புரிந்தோர் தமது செயல் பதிவேட்டில் உள்ளவற்றை நினைத்து அஞ்சிக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்கள்அந்தோ! எங்கள் துர்பாக்யமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ, பெரிதோ எதையும் பதியாமல் விட்டு வைக்கவில்லையே! என்று புலம்புவார்கள்.

தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள்”.                                               ( அல்குர்ஆன்: 18: 49 )

وكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا () اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا ()

 மேலும், ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும், மறுமை நாளில், செயல்பதிவேட்டை அவனுக்காக வெளிப்படுத்துவோம். அதனை அவன் திறந்த புத்தகத்தைப் போன்று காண்பான்.

படித்துப்பார், உன்னுடைய இந்த செயல்பதிவேட்டை! இன்று உன்னுடைய கணக்கைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்என்று சொல்லப்படும்.

                                                   ( அல்குர்ஆன்: 17: 13, 14 )

இந்த செயல் பதிவேடு என்பது அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டிருக்கிற இரு வானவர்களால் எழுதப்படுகின்றது.

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ () مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். எந்தச் சொல்லையும் அவன் சொல்வதில்லை, அதனைப் பதிவு செய்வதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்”.      ( அல்குர்ஆன்: 50: 17, 18 )


عَنْ أَبِي مُوسَى الأشعري رضي الله عنه قَالَ : قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لا يَنَامُ ، وَلا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ


எழுதப்படுகின்ற இந்த செயல்பதிவேடு அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளில் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ فِي كُلِّ جُمُعَةٍ مَرَّتَيْنِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ إِلا عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ : اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا

போதாக்குறைக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இதுவெல்லாம் தாண்டி ஆண்டுக்கு ஒரு முறை பராஅத் இரவிலும் அல்லாஹ்வின் திருமுன் இந்தச் செயல் பதிவேடு சமர்ப்பிக்கப்படுகின்றது.

எனவே, நாம் நம்முடைய செயல்பாடுகளை செதுக்க வேண்டும், மிகச் சிறந்த செயல்களையே செய்ய வேண்டும்.

1. அழகிய எண்ணம் அது செயலையும், செயல்பதிவேட்டையும் அழகு படுத்தும்

عمر بن الخطاب رضي الله عنه ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

  إنما الأعمال بالنيّات

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்திண்ணமாக செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன”.                         ( நூல்: புகாரி )

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِذَا تَحَدَّثَ عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ الْمَلَائِكَةُ رَبِّ ذَاكَ عَبْدُكَ يُرِيدُ أَنْ يَعْمَلَ سَيِّئَةً وَهُوَ أَبْصَرُ بِهِ فَقَالَ ارْقُبُوهُ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ

அல்லாஹ் கூறியதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ என் அடியான் ஒரு நல்ல செயலை செய்ய மனதினில் எண்ணி விட்டால் அவன் செய்யாத போதும் அதற்காக நான் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுகின்றேன். அவன் அதைச் செய்து விட்டால் பத்து நன்மைகளை அவனுக்கு நான் எழுதுகின்றேன்.

அதே போன்று, ஓர் அடியான் தீய செயலை செய்ய மனதில் எண்ணி, அவன் செய்யவில்லை என்றால் அவனை நான் மன்னித்து விடுகின்றேன். அவன் செய்து விட்டால் ஒரு தீமையை மட்டுமே எழுதுகின்றேன்.

இதைச் சொல்லிய அண்ணலார் தொடர்ந்து கூறினார்கள்: “தீய செயலை செய்ய நாடிய அடியான் அந்தச் செயலை செய்ய சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தால், வானவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! இதோ இந்த அடியான் இன்ன தீய செயலைச் செய்ய தீவிரமாக சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருக்கின்றான்” என்பார்களாம்.

அப்படியானால், அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருங்கள்! கிடைத்த சந்தர்பத்தில் அவன் அந்த தீய செயலை செய்து விட்டால் அவனுக்கு ஒரு தீமையை எழுதுங்கள். அவன் விட்டு விட்டால் ஒரு நன்மையை எழுதுங்கள்! என்று அல்லாஹ் சொல்கின்றான்.

ஒரு ரிவாயத்தில்… வானவர்கள் ”அல்லாஹ்வே! அவன் மனதில் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததே! ஏதோ அவன் அதைச் செய்யாமல் விட்டு விட்டான் அதற்காக ஒரு நன்மையை எழுத வேண்டுமா? என்று கேட்பார்கள்.

அதற்கு, அல்லாஹ் “என் மீதான பயம் தான் அந்த தீயச் செயலில் ஈடுபடுவதில் இருந்து அவனைத் தடுத்தது. அதற்காகத் தான் அவனுக்கு நன்மையை எழுதச் சொன்னேன்” என்று கூறுவான்.                ( நூல்: தாரகுத்னீ, அஹ்மத் )


2. நன்மையான செயல்கள் செய்வதின் மீது ஆர்வம் இருக்க வேண்டும்

عن أبي أمامة قال: قال رسول الله -صلى الله عليه وسلم: "أيكم أصبح اليوم صائما؟ " قال: فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله, ثم قال: "أيكم تصدق اليوم على مسكين؟ " قال: فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله فقال: "أيكم شيع اليوم جنازة؟ " فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله, وفي أخرى: "أيكم عاد اليوم مريضًا؟ " قال أبو بكر: أنا فضحك رسول الله -صلى الله عليه وسلم- فقال: "والذي بعثني بالحق, ما جمعهن رجل في اليوم إلا دخل الجنة" خرجه الملاء في سيرته.

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எங்களிடம், “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் ஓர் உங்களில் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்களில் ஒரு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், சிரித்தவர்களாக “என்னை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீதாணையாக! எந்த மனிதர் நல்லறங்களான இவையனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லைஎன்றார்கள்.                       ( நூல்: முஸ்லிம் )

3. பேணுதலான வாழ்வை மேற்கொள்ள வேண்டும்….

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَحْيُوا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَسْتَحْيِي وَالْحَمْدُ لِلَّهِ، قَالَ لَيْسَ ذَاكَ، وَلَكِنَّ الاسْتِحْيَاءَ مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ: أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى، وَالْبَطْنَ وَمَا حَوَى، وَلْتَذْكُرْ الْمَوْتَ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ اسْتَحْيَا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நாங்கள் வெட்கப்படத்தானே செய்கின்றோம்!” என்று கூறினோம்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீங்கள் சொல்வது போன்று அல்ல, நான் சொல்கிற வெட்கம் என்பது! “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என்றால் நீங்கள் தலையையும், அதைச் சுற்றியுள்ள இதர உறுப்புக்களையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

வயிற்றையும், வயிற்றுக்கு மேலும் வயிற்றுக்கு கீழும் இருக்கிற உறுப்புக்கள் அனைத்தையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

மேலும், மரணத்தையும், மண்ணறை வாழ்வையும் நினைவு கூர்வதும், மறுமை வாழ்விற்காக இவ்வுலக மோகத்தை விட்டு விடுவதும் தான்என்று பொருள் ஆகும்.

மேலும், எவர் மேற்கூறிய அம்சங்களை சரிவரச் செய்கின்றாரோ அவர்அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்பட்டு விட்டார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          ( நூல்: திர்மிதீ )


4. அல்லாஹ்வின் கட்டளைகளை சரியாகப் பேண வேண்டும்…

حدثنا أبو كامل، مظفر بن مدرك حدثنا إبراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن أبي الطفيل، عامر بن واثلة أن رجلا، مر على قوم فسلم عليهم فردوا عليه السلام فلما جاوزهم قال رجل منهم والله إني لأبغض هذا في الله فقال أهل المجلس بئس والله ما قلت أما والله لننبئنه قم يا فلان رجلا منهم فأخبره قال فأدركه رسولهم فأخبره بما قال فانصرف الرجل حتى أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله مررت بمجلس من المسلمين فيهم فلان فسلمت عليهم فردوا السلام فلما جاوزتهم أدركني رجل منهم فأخبرني أن فلانا قال والله إني لأبغض هذا الرجل في الله فادعه فسله على ما يبغضني فدعاه رسول الله صلى الله عليه وسلم فقال فسأله عما أخبره الرجل فاعترف بذلك وقال قد قلت له ذلك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم فلم تبغضه قال أنا جاره وأنا به خابر والله ما رأيته يصلي صلاة قط إلا هذه الصلاة المكتوبة التي يصليها البر والفاجر قال الرجل سله يا رسول الله هل رآني قط أخرتها عن وقتها أو أسأت الوضوء لها أو أسأت الركوع والسجود فيها فسأله رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا ثم قال والله ما رأيته يصوم قط إلا هذا الشهر الذي يصومه البر والفاجر قال يا رسول الله هل رآني قط أفطرت فيه أو انتقصت من حقه شيئا فسأله رسول الله صلى الله عليه وسلم فقال لا ثم قال والله ما رأيته يعطي سائلا قط ولا رأيته ينفق من ماله شيئا في شيء من سبيل الله بخير إلا هذه الصدقة التي يؤديها البر والفاجر قال فسله يا رسول الله هل كتمت من الزكاة شيئا قط أو ماكست فيها طالبها قال فسأله رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا فقال له رسول الله صلى الله عليه وسلم قم إن أدري لعله خير منك

அபுத்துஃபைல் ஆமிர் இப்னு வாஸிலா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர் கூட்டமாக அமர்ந்திருந்த சிலரைக் கடந்து சென்றிருக்கின்றார். அப்போது, அவர் அவர்களுக்கு ஸலாம் சொல்லி இருக்கின்றார். அவர்களும் அவருக்கு பதில் ஸலாம் கூறியிருக்கிறார்கள். அவர் அந்த இடத்தைக் கடந்ததும் கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மீது நான் அல்லாஹ்விற்காக கோபம் கொள்கிறேன்! என்று கூறியிருக்கின்றார்.

கூட்டத்தில் இருந்த இன்னொருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் கூறியதை நான் அவரிடம் கண்டிப்பாக சொல்வேன் என்று கூறிவிட்டு, எழுந்து இவரிடம் வந்து அவர் சொன்னதைக் கூறினார்.

இப்போது, அவர் தன்னிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருமுன் வந்து நடந்தவற்றைக் கூறினார்.

மாநபி {ஸல்} அவர்களும் முழுமையாக கேட்டு விட்டு அந்த மனிதரை அழைத்து வரச் சொன்னார்கள். அவரும் அல்லாஹ்வின் தூதரின் சபைக்கு வந்தார்.

மாநபி {ஸல்} அவர்கள் “அவரிடம் ஏன் இவ்வாறு கூறினீர்? என்று கேட்டார்கள்.

அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இவரின் அண்டை வீட்டுக்காரன் ஆவேன். இவரின் சில செயல்பாடுகள் தான் என்னை இவர் மீது கோபம் ஏற்பட வைத்தது” என்றார்.

அப்படி என்ன அவர் செய்கின்றார்? என்று மாநபி {ஸல்} அவர்கள் அவரிடம் கேட்டதற்கு “ஃபர்ளான தொழுகைகளைத் தவிர வேறெந்த தொழுகைகளையும் தொழ நான் இவரைக் கண்டதில்லை. ஃபர்ளான ரமலான் நோன்பைத் தவிர வேறெந்த நோன்பையும் நோற்க இவரை நான் பார்த்ததில்லை. கடமையான ஜகாத்தைத் தவிர வேறெந்த தர்மத்தையும் இவர் கொடுத்து நான் கண்டதில்லை. இது என்ன இதைத் தான் நல்லவர்களும், தீயவர்களும் செய்கின்றார்களே?

நல்லவர் என்றால் உபரியான தொழுகைகளும், நோன்புகளும், தர்மங்களும் நிறைவேற்ற வேண்டாமா? என்பது போல் அவரின் கேள்வி இருந்தது.

ஒவ்வொன்றிற்கும் அவர் பதில் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! என்றாவது தொழுகையை அதன் நேரம் தவறி நான் தொழுதிருக்கின்றேனா? அல்லது அதன் ருகூவு ஸுஜூது ஆகியவைகளில் ஏதாவது குறை வைத்திருக்கின்றேனா? என்று.

மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியாகவே தொழுகைகளை நிறைவேற்றுவார்.

அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! கடமையான நோன்பை என்றாவது நான் நோற்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது அந்த நோன்பை முறிக்கும் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றேனா? என்று.

மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியாக நோன்பு நோற்பார். நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்திலும் அவர் ஈடுபட்டதில்லை.

அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! கடமையான ஜகாத்தை கொடுக்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது உரியவர்களைத் தேடி கொடுக்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது ஜகாத் கடமையாகி அதை மறைத்திருக்கின்றேனா? என்று.

மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியாக ஜகாத்தை நிறைவாற்றுவார் என்று பதில் கூறினார்.

அதுவரை எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “கடமையான அமல்கள் போக உபரியான அமல்களைச் செய்யும் உம்மை விட எல்லா விதத்திலும் அவரே சிறந்தவர் ஆவார்” என பதில் உரைத்தார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

ஆக கண்ணியத்திற்குரிய மேன்மக்களே! அலட்சியத்தை அகற்றி, எச்சரிக்கை உணர்வோடு ஒவ்வொரு நாட்களையும் நகர்த்தி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்கப்படுகிற நம் அமல்கள் அல்லாஹ்வை மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலே அமைவதற்கு நாம் முயற்சி மேற்கொள்வோம்!

அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்குவானாக! நற்செயல்கள் புரிய ஆர்வத்தை தருவானாக! பேணுதலான வாழ்க்கை வாழ தவ்ஃபீக் செய்வானாக! அவனது கடமைகளை தவறாமல் நிறைவேற்றுகிற மேன்மக்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

8 comments:

  1. சின்ன சின்ன நன்மையான செயலையும் அலட்சியமாக கருதிவிடக்கூடாது. அதுவும் கூட மறு உலக வாழ்வில் உயர்வுக்கு காரணமாக அமையலாம். என்பதை அழகாக கூறியுள்ளீர்கள் جزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், அருமை

    ReplyDelete
  3. Masha allah sukran jajeelan

    ReplyDelete
  4. الحمد لله بارك الله في علمك

    ReplyDelete
  5. நல்ல தகவல்
    الحمدلله

    ReplyDelete