Sunday 28 May 2017

இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!



மூன்றாம் நாள் தராவீஹ் பயான்

இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!



மூன்றாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், இரண்டாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இதர இபாதத்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

நேற்று துவங்கப்பட்ட  ஆலுஇம்ரான் அத்தியாயம் இன்று ஓதி நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட முக்கியமான ஓர் அத்தியாயமாகும்.

இன்று ஓதப்பட்ட ஒன்னேகால் ஜுஸ்வில் பல்வேறுபட்ட வரலாற்றுச் செய்திகள், பத்ர், உஹத், குறித்த நிகழ்வுகள், சமூக ஒற்றுமை, நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், மாநபி {ஸல்} அவர்களின் அந்தஸ்து, ஷஹீத்களின் அந்தஸ்து, மரணம், இஸ்திஃக்ஃபார், முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் என பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளது. 

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று இஸ்லாம் மார்க்கத்தின் மகத்துவம் குறித்து பேசுகின்றது...

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம்தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

உலக மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியைத் தந்ததாகும்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்தும் விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.                                    ( அல்குர்ஆன்: 5: 3 )

மனிதனை மனிதனாகவும், புனிதனாகவும் மாற்றுகிற, பண்படுத்துகிற மகத்தான ஆற்றல் இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு. ஏனெனில், இஸ்லாம் மாத்திரமே படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மாதமாகும்.

உலகில் மனித சமூகத்தின் எல்லா வகையான உயர் சிந்தனைகளும், அழகிய செயல்பாடுகளும் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அங்கே இஸ்லாம் நிச்சயம் இடம் பெற்றாக வேண்டும்.

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ()

இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒரு போதும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும், மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்”.                                                  ( அல்குர்ஆன்: 3: 85 )

பஞ்சாபின் சுற்றுலாத்துறையின் அமைச்சரும் (காங்கிரஸ் எம். எல். ஏ) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் அவருடைய முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியை வாட்ஸ்அப்பில் படிக்க நேர்ந்தது. அதில்….

“இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு நாள் 10,000 ரூபாயை எடுத்துக் கொண்டு அன்னை தெரசாவைச் சந்தித்து நன்கொடை அளிக்க அவரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன்.

என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, நான் வந்த நோக்கத்தை அங்கிருந்தவர் களிடம் தெரிவித்துக் கொண்டு அன்னை தெரசா அவர்களை நேரில் காண வேண்டும் எனக் கூறினேன்.

அங்கிருந்தவர்கள் ஒரு வழியைக் காண்பித்து இப்படிச் செல்லுங்கள், அங்கே ஒரு ப்ளாக்கில் அன்னை இருப்பார்கள் என்று அடையாளம் காட்டினார்கள்.

நான் அங்கே ஒவ்வொரு ப்ளாக்காக கடந்து இறுதியாக அன்னை இருந்த ப்ளாக்கை அடைந்தேன். ஆனால், அந்த ப்ளாக்கில் என்னால் நிற்க கூட முடியவில்லை. மனித உடலின் துர்நாற்றம் என் குடலைக் குமட்டிக் கொண்டு வந்தது.

அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியுற வைத்தது. உடல் முழுவதும் புண்ணால் பாதிக்கப்பட்ட, குடும்பத்தினரால் முழுவதுமாக கைவிடப்பட்ட ஒரு நோயாளி புண்ணில் இருந்து சீழ், சலம் வடிய ஒரு படுக்கையில் படுத்திருக்க அவர் அருகே அமர்ந்து அந்த புண்ணில் வடியும் சீலை எந்த சலனமும் இல்லாமல் ஒரு தாய் தன் மகனுக்கு செய்வதைப் போன்று துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னால் அதற்கும் மேலாக அங்கே நிற்க முடியாமல் ஓடோடி வெளியே வந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். இறுதியாக, நான் அன்னையைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்தி என்னுடைய நன்கொடையைக் கொடுத்தேன்.

அதைப் பெற்றுக் கொண்டு, இதையெல்லாம் விட நீங்கள் வந்து இங்கு அடைக்கலம் ஆகி இருக்கிற இவர்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நேரமாவது பணிவிடை செய்தால் மிக நன்றாக இருக்கும்” என்றார்கள்.

அன்னை தெரசா மட்டும் இல்லை உலகில் மனித நேய மிக்க எத்தனையோ நல்லுள்ளம் கொண்டவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அவர்கள் செய்கிற காரியம் எவ்வளவு புனிதமானதாக இருக்கிறது என்பதை நாம் விளங்கியும் வைத்திருக்கின்றோம்.

ஆனால், அவர்கள் இவ்வுலகில் இஸ்லாம் அல்லாத வாழ்க்கை நெறியை தேர்வு செய்து வாழ்கிற போது அதற்கு நாளை மறுமையில் எவ்வித பலனும் இல்லாமல் போய்விடுகின்றது. நாளை மறுமையில் நரகின் வேதனையில் இருந்து இந்த மகத்தான செயல்கள் ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை.

இஸ்லாத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும்…..

சற்றேறக்குறைய 120 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர். இறைநிராகரிப்பில் சரியாக 60 ஆண்டுகளும், தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று 60 ஆண்டுகளும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

அவர் தான் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார்கள்.

மக்கா வெற்றியின் போது தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள மாநபி {ஸல்} அவர்களின் கரங்களைப் பற்றி தழுதழுத்த குரலில், கண்களில் ஏக்கத்தோடு இப்படிக் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாத்திற்கு வரும் முன்னர் பல நல்லறங்களை செய்திருக்கின்றேன். அதன் நன்மைகள் எனக்கு கிடைக்குமா?” என்று...

ஆம்! இஸ்லாத்திற்கு வரும் முன் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார். (அந்த அடிமைகளில் ஒருவர் தான் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அவரை அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்கள்.) நூறு ஒட்டகைகளை அறுத்து ஏழைகளுக்கு உணவாகவும், இறைச்சியாகவும் தர்மம் செய்திருந்தார்கள்.

மேலும், மக்காவில் ஹரமிற்கு ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களுக்கு (இலவசமாக) உணவு வழங்கும் உயர்வான, உன்னதமான பொறுப்பையும் செய்து வந்தார்கள்.

فقال رسول الله أسلمت على ما سلف لك من خير

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், கீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களிடம் ”நீர் இஸ்லாத்திற்குள் நுழையும் போதே அவையனைத்தையும் சேர்த்தே தான் கொண்டு வந்து விட்டீர்” என பதில் கூறினார்கள்.

தங்களின் வாழ்க்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாம் இஸ்லாத்திற்கு தாமதமாக வந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.

فلقد رآه ابنه بعد إسلامه يبكي، فقال: "ما يبكيك يا أبتاه؟

قال: "أمور كثيرة كلها أبكاني يا بني

أولها بطء إسلامي مما جعلني أسبق إلى مواطن كثيرة صالحة حتى لو أنني أنفقت ملء الأرض ذهبا لما بلغت شيئا منها

ثم إن الله أنجاني يوم "بدر" و "أحد" فقلت يومئذ في نفسي:

لا أنصر بعد ذلك قريشا على رسول الله – صلى الله عليه و سلم – و لا أخرج من مكة، فما لبثت أن جررت إلى نصرة "قريش" جرا

ثم إنني كنت كلما هممت بالإسلام، نظرت إلى بقايا من رجالات قريش لهم أسنان و أقدار متمسكين بما هم عليه من أمر الجاهلية، فأقتدي بهم و أجاريهم

و ياليت أني لم أفعل

فما أهلكنا إلا الاقتداء بآبائنا و كبرائنا

فلم لا أبكي يا بني؟

அப்படி ஒரு நாள் அவர்கள் அழுது கொண்டிருந்த போது அவர்களின் மகனார் தந்தையே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்.

ஒன்றா? இரண்டா? மகனே! எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றது நான் அழுவதற்கு… என்று கூறிவிட்டு தொடர்ந்தார்கள்.

ஆரம்பமாக நான் இஸ்லாத்தை மிகவும் தாமதமாக ஏற்றுக் கொண்டதை நினைத்தும், எத்தனையோ தருணங்கள் அப்பொழுதெல்லாம் நான் இணைந்திருந்தால் மகத்தான நன்மைகளையும், கூலியையும் பெற்றிருப்பேனே!? நான் இழந்த அந்த நன்மைகளை பூமி முழுவதையும் செலவழித்தாலும் பெற்றுக் கொள்ள முடியாதே! என்பதற்காகவும் அழுகின்றேன்.

பின்னர், அல்லாஹ் என்னை பத்ரிலும், உஹதிலும் நான் கொல்லப்படாமல் பாதுகாத்தான். அப்போது, நான் எனக்குள் கூறிக் கொண்டேன் “இனி ஒரு போதும், குறைஷிகளுக்கு உதவக் கூடாது என்று” என்ன செய்ய அதன் பின்னரும் குறைஷிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் இசைந்தேன்.

பின்னர், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என் உள் மனம் கூறும் போதெல்லாம் குறைஷி குலத்தின் மேன்மக்களை பார்த்தேன், அவர்கள் தங்களின் கொள்கையில் பிடிப்போடு இருந்ததோடு மாத்திரமல்லாமல் மக்களிடம் செல்வாக்கோடும் இருந்தார்கள்.

நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது! என் அழிவுக்கும், நாசத்திற்கும் காரணம் மூதாதையர்களின் கொள்கையும், மேன்மக்களின் வழிமுறைகளும் தான்!.

மகனே! இப்போது சொல்! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்! என்று பதில் கூறினார்கள்.  ( நூல்: தஹ்தீபுல் கமால் லி இமாமி அபுல் ஹஜ்ஜாஜுல் முஸ்னீ (ரஹ்).. )

கிட்டத்தட்ட 60 ஆண்டு கால இஸ்லாமிய வாழ்க்கையில் போட்டி போட்டு இபாதத்கள் செய்தார்கள்.

ஒருமுறை ஹஜ் செய்ய வரும் போது தன்னுடன் 100 ஒட்டகைகளை அழைத்து வந்து, குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு வினியோகித்தார்களாம்.

மற்றொரு முறை ஹஜ் செய்ய வரும்போது தன்னுடன் நூறு அடிமைகளை அழைத்து வந்தார்கள். அவர்களின் கழுத்துகளில் அல்லாஹ்விற்காக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களால் விடுவிக்கப்படுவர்கள்” என வெள்ளியால் ஆன பட்டைகளில் பொறிக்கப்பட்டு இருந்ததாம். பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.

وقيل إن حكيما باع دار الندوة من معاوية بمئة ألف

உச்சபட்சமாக, இழந்த நன்மைகளை அடையும் பொருட்டு இஸ்லாத்திற் கெதிராகவும், மாநபிக்கும், உம்மத்திற்கும் எதிராகவும் சதா தீய பல திட்டம் தீட்ட உதவிய தாருன் நத்வாவை ஒரு லட்சம் திர்ஹம் விலை கொடுத்து வாங்கி முஆவியா (ரலி) ஆட்சி காலத்தில் முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

يا رسول الله لا أدع شيئا صنعته في الجاهلية إلا صنعت لله في الإسلام مثله وكان أعتق في الجاهلية مئة رقبة وأعتق في الإسلام مثلها وساق في الجاهلية مئة بدنة وفي الإسلام مثلها

இன்னொரு, அறிவிப்பின் படி ”இஸ்லாத்திற்கு முன்பாக எதையெல்லாம் நான் விரும்பி செய்தேனோ அல்லாஹ்வின் தூதரே! அவற்றை போன்று இஸ்லாமிய வாழ்விலும் நான் செய்வேன்” என்று ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம் உறுதியோடு கூறினார்கள்.

பின்னர், அது போன்றே ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.

حدثنا عبد الحميد بن سليمان سمعت مصعب بن ثابت يقول بلغني والله أن حكيم بن حزام حضر يوم عرفة ومعه مئة رقبة ومئة بدنة ومئة بقرة ومئة شاة فقال الكل لله وعن أبي حازم قال ما بلغنا أنه كان بالمدينة أكثر حملا في سبيل الله من حكيم

இன்னொரு அறிவிப்பின் படி, ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் 100 ஆடுகள், 100 மாடுகள், 100 ஒட்டகங்கள் 100 அடிமைகள் ஆகியவற்றை கொண்டு வந்து இதை நான் அல்லாஹ்விற்காக தர்மம் செய்கின்றேன் என்றார்கள்.

மதீனாவில் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கப்படுகிற செல்வங்களில் பெரும்பான்மையானவை ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களுடையதாகத்தான் இருக்கும் என அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப், ஸியரு அஃலா மின் நுபலா,  )

இஸ்லாத்தின் நிழலில் ஒரு நாள் வாழ்வதன் மகத்துவம் குறித்து நபித்தோழர் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மை உணரத் தூண்டுகின்றது.

நாம் சில தலைமுறைகளாக முஸ்லிம்களாக இருப்பதால் இஸ்லாம் எவ்வளவு பெரிய மகத்தான அருட்கொடை என்பதை நம்மால் விளங்க முடிவதில்லை.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

நான்காம் நாள் தராவீஹ் பயான் தலைப்பு: முஹம்மத் { ஸல் – அவர்கள் } எனும் அளவிலா அருட்கொடை!!

No comments:

Post a Comment