Thursday 25 May 2017

அல் – குர்ஆன் எனும் அளப்பெரும் அருட்கொடை!!!



இரண்டாம் நாள் தராவீஹ் பயான்
அல்குர்ஆன் எனும் அளப்பெரும் அருட்கொடை!!!



இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், முதல் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

அல்பகரா அத்தியாயம் ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட ஓர் அத்தியாயமாகும். இன்று ஓதப்பட்ட ஒன்னேகால் ஜுஸ்வின் பெரும் பகுதி சட்டதிட்டங்கள் குறித்தானதாகும்.

வஸிய்யத் எனும் மரண சாஸனம், கிஸாஸ் எனும் பழிவாங்கல், நோன்பு, ஹஜ், உம்ரா, திருமணம், தலாக் - விவாகவிலக்கு, பால்குடி, வட்டி, வியாபாரம், கடன், போர், வீட்டின் ஒழுங்குகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து, இறைவனோடும், இறையடியார்களோடும் தொடர்பிலிருக்கிற சட்டங்கள் குறித்து அதிகம் அல்லாஹ் பேசுகின்றான்.

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று இந்த ரமலான் மாதத்தின் மகத்துவம் குறித்து விவரிக்கும் போது...

“ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது”.                               ( அல்குர்ஆன்: 2: 185 )

ஆகவே, இன்றைய தினம் அல்குர்ஆன் குறித்த சில தகவல்களை நாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 சங்கைமிகு ரமழான் மாதம் ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் குர்ஆன் ஓதுவதிலும், குர்ஆன் ஓதக் கேட்பதிலும் அதிகமதிகம் தம்மை ஈடுபடுத்தி குர்ஆனோடு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம்.

அதன் தாக்கமும் தொடர்பும் வாழ்வின் இறுதி வரை நீடித்திட குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திட அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்!

உலகில் பார்த்தாலே நன்மை கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்களால் பாராட்டப்பட்ட பாக்யங்களில் அல்குர்ஆனும் ஒன்றாகும்.

குர்ஆனோடு ஒவ்வொரு முஸ்லிமும் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு என்ன என்பதை அல்லாஹ்வும், அவனது ரஸூல் மாநபி {ஸல்} அவர்களும் மிக விரிவாகவே நமக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

குறைந்த பட்சமாக இவைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.

1. குர்ஆனைக் கண்ணியப்படுத்த வேண்டும்

1. மகிழ்ச்சி அடையவேண்டும்.

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ ()

அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும், அருளைக் கொண்டும் இந்த திருக்குர்ஆனை இறக்கியருளினான். இந்த திருக்குர்ஆனைக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்! அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் விட இது சிறந்ததாகும்என நபியே! நீர் கூறுவீராக!”           ( அல்குர்ஆன்: 10: 58 )

2. கண்ணியம் கொடுக்கவேண்டும்.

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ()

மேலும், யாரேனும் அல்லாஹ் புனிதம் என்று அடையாளப் படுத்தியவைக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்”.                                             ( அல்குர்ஆன்: 22: 32 )

3. தூய்மையோடு தொடவேண்டும்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ () فِي كِتَابٍ مَكْنُونٍ () لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ()

இது ஓர் உன்னதமான குர்ஆன் ஆகும். இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது”.                                        ( அல்குர்ஆன்: 56: 77 – 79 )

4. அடக்கத்தோடும், பணிவோடும் கேட்கவேண்டும்.

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ()

மேலும், குர்ஆன் உங்கள் முன் ஓதப்படும் போது அதனைப் பணிவோடும், செவிதாழ்த்தி அடக்கத்தோடும் கேளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீதும் அருள் பொழியக்கூடும்!”.                                            ( அல்குர்ஆன்: 7: 204 )

5. ஷைத்தானை விட்டு பாதுகாப்பு தேடவேண்டும்.

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ()

மேலும், நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும் போது, சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருங்கள்!”. ( அல்குர்ஆன்: 16: 98 )

6. தினம் ஒரு முறையாவது பார்க்கவேண்டும்.

, قَالَ :, يَقُولُ : قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
لَوْ أَنَّ قُلُوبَنَا طَهُرَتْ مَا شَبِعَتْ مِنْ كَلامِ رَبِّنَا
 وَإِنِّي لأَكْرَهُ أَنْ يَأْتِيَ عَلَيَّ يَوْمٌ لا أَنْظُرُ فِي الْمُصْحَفِ "

நம்முடைய உள்ளம் தூய்மை அடைந்து விட்டால் நம்முடைய ரப்பின் வார்த்தையான திருக்குர்ஆனை ஓதுவதில் நமது ஆசை அடங்காது. திருமறை குர்ஆனை பார்க்காமல் ஒரு நாள் என்னை கடந்து செல்வதைக் கூட நான் அறவே வெறுக்கின்றேன்என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

7. குர்ஆனை ஓதவேண்டும்.
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக்கொள்ளுங்கள்!”.                              ( அல்குர்ஆன்: 73: 20 )

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ()
மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுங்கள்!”.      ( அல்குர்ஆன்: 73: 4 )

عَنْ عَائِشَةَ ـ رَضِيَ اللهُ عَنْهَا ـ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

“குர்ஆனைத் திறனுடன் சரளமாக ஓதுகின்றவர், கடமை தவறாத கண்ணியம் மிக்க தூதுவர்களான வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை சிரமப்பட்டுத் திக்கித் திணறி ஓதுகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.          ( நூல் : இப்னு மாஜா, 3777 )

குர்ஆனில் 323015 மூன்று லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து பதினைந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

சாதாரண நாட்களில் ஒரு குர்ஆனை ஓதிமுடிப்பவருக்கு ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் வீதம் 323015 எழுத்துக்களுக்கு 3230150 முப்பத்திரண்டு லட்சத்தி முப்பதாயிரத்து நூற்றிப் ஐம்பது நன்மைகள் கிடைக்கும்.

இதுவே, ரமலானில் ஒரு குர்ஆனை முடிப்பவருக்கு நன்மைகள் கோடிகளின் எண்ணிக்கையில் கிடைக்கும்.  

குர்ஆன் ஓதும்போது மனஅமைதியும், வானவர்களும் இறங்குதல்...

وروى عنه أنه قال (قرأت ليلة سورة البقرة وفرس لى مربوط ويحيى ابنى مضجع قريب منى وهو غلام, فجالت الفرس فقمت وليس لى هم إلا ابنى, ثم قرأت, فجالت الفرس, فقمت وليس لى هم إلا ابنى, ثم قرأت فجالت الفرس, فرفعت رأسى فاذا شيء كهيئة الظلة فى مثل المصابيح, نقيل من السماء فهالنى, فسكت, فلما أصبحت عدوت على رسول الله صلى الله عليه وسلم فأخبرته, فقال اقرأ يا أبا يحيى, فقلت قد قرأت, فجالت فقمت ليس هم لى إلا ابنى, فقال لى: اقرأ يا أبا يحيى, فقلت قد قرأت فجالت الفرس, فقال اقرأبا الحضير فقلت قد قرأت فرفعت رأسى فاذا كهيئة الظلة فيها المصابيح فهالنى, فقال: تلك الملائكة دنوا لصوتك, ولو قرأت حتى تصبح لأصبح الناس ينظرون إليهم.

உசைத் இப்னு ஹுளைர் (ரலி) அறிவித்தார் நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.

திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். மீண்டும் ஓதினேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது.

நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.

காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள்.

நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை'' என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று கூறினார்கள்.

மரண வேளையிலும் குர்ஆன் ஓதிய பெருமானார் {ஸல்}….

பெருமானார் {ஸல்} அவர்கள் மரணவேதனையில் உடல்ரீதியாக கஷ்டப்படும் பொழுது கூட ''அல்முஅவ்விதத்தைன் '' என்று சொல்லக்கூடிய சூரத்துல் ஃபலக், சூரத்துல் இக்லாஸ், சூரத்துன் நாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதி தங்களின் இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக்கொண்டு கடுமையான மரண வேதனையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றார்கள்.


மாநபி {ஸல்} அவர்கள்  நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் இருக்கும் (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.  என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். ( நூல் புகாரி )


குர்ஆன் அதனுடன் தொடர்பு வைப்பவரை உயர்த்தும்….

அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. பஸராவின் ஆளுநராக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) வீற்றிருக்கின்றார்கள்.

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முக்கிய விவகாரம் குறித்து குறைஷி குலத்தின் மேன்மக்களோடு அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

عن أبي العالية: كنت آتي ابن عباس فيرفعني على السرير وقريش أسفل من السرير، فتغامز بي قريش، وقالوا: يرفع هذا العبد على السرير ؟ ! ففطن بهم ابن عباس، فقال: إن هذا العلم يزيد الشريف شرفا ويجلس المملوك على الأسرة.

அப்போது, ”அபுல் ஆலியா” ரஃபிவு இப்னு மிஹ்ரான் என்பவர்கள் அந்த அவைக்கு வருகை தருகின்றார்கள். அவர்களைக் கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையை வலது புறமாக போட்டு, சற்று உயர்த்தி, அதிலே அவர்களை அமரச் சொல்லி தாங்கள் கீழே அமர்ந்தார்கள்.

சுற்றியிருந்த குறைஷி மேன்மக்கள் தங்களுக்குள் “இப்னு அப்பாஸ் செய்த இந்த காரியத்தைக் கண்டீர்களா? ஒரு அடிமைக்கு எவ்வளவு மரியாதை செய்கின்றார்?” என்று பேசிக் கொண்டதோடு அபுல் ஆலியா அவர்களை கேலி பேசினார்கள்.

இதனைச் செவிமடுத்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறைஷி குல மேன்மக்களை நோக்கி “மார்க்க அறிவு என்பது இப்படித் தான் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும்! பிற மக்களுக்கு மத்தியில் அவர்களின் கண்ணியத்தை உயர்த்தும்! ஏன்? அடிமைகளைக் கூட அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும்! இதோ! நீங்கள் யாரைக் குறித்து விமர்சிக்கின்றீர்களோ இந்த அபுல் ஆலியாவை நான் உயர்த்திப் பார்ப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்.

உண்மை அதுவல்ல! அல்லாஹ்வின் தூய வார்த்தையான அல்குர்ஆனோடு அடிமையாக இருந்த அபுல் ஆலியா அவர்கள் கொண்டிருந்த இடைவிடாத் தொடர்பின் மூலம் இந்த உயர்வை அல்லாஹ் அவருக்கு வழங்கினான்” என்றார்கள்.

யார் இந்த அபுல் ஆலியா?...

அபூபக்ர் இப்னு அபூ தாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்களுக்குப் பின்னால் குர்ஆனிய அறிவைப் பரிபூரணமாக பெற்றவர்களில் முதலாமவர் அபுல் ஆலியா ரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள், அடுத்து ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

பெரும்பாலான நபித்தோழர்களைச் சந்தித்ததோடு மாத்திரமல்லாமல் அவர்களிடம் இருந்து மார்க்க ஞானத்தையும் கற்றுக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக, உமர் (ரலி), அலீ (ரலி) அபூதர் (ரலி) உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் மிகவும் நெருக்கத்தைப் பெற்று சன்மார்க்க அறிவைப் பெற்றிருக்கின்றார்கள்.

உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஆகியோரிடம் தலா ஒரு முறையும், உமர் (ரலி) அவர்களிடம் தலா மூன்று முறையும் முழுக்குர்ஆனையும் மனனமாக ஓதிக் காட்டியும் இருக்கின்றார்கள்.

அடிமை எனும் ஸ்தானத்திலிருந்து திருக்குர்ஆன் விரிவுரையாளர் எனும் நிலைக்கு….

ولد رُفيع بن مهران في بلاد "فارس", وعلى أرضها نشأ وترعرع, ولما شرع المسلمون بغزو بلاد فارس ليُخرِجوا أهلها من الظلمات إلى النور… وقع رفيع أسيرا في أيدي المسلمين.
ثم ما لبث أن أسلم وأقبل على كتاب الله, وتعلم حديث رسول الله صلى الله عليه وسلم, والكتابة العربية.

அபூபக்ர் (ரலி) ஆட்சிகாலத்தில் பாரசீகத்தை நோக்கிச் சென்ற முஸ்லிம்களின் படை பாரசீகத்தின் ஒரு பகுதியை வெற்றி கொண்டு, ஏராளமான ஃகனீமத் பொருட்கள் மற்றும் நிறைய கைதிகளோடு மதீனா நோக்கி வந்தது.

அந்த கைதிகளில் ஒருவராக, இணைவைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தவர் தான் இந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள்.

பனூதமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஸாலிஹான நபித்தோழியர்களில் ஒருவருக்கு அடிமையாக போய்ச் சேர்ந்தார்கள்.

அங்கு தான் ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்களின் இதயத்திற்கு அல்லாஹ் ஹிதாயத்தின் வாசலைத் திறந்து விட்டான்.

ஆம் நபித்தோழர்களின் வியத்தகு வாழ்வைப் பார்த்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் கொஞ்ச நாளிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு குர்ஆன் ஷரீஃபோடு அழகியதொரு தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்களோடு இன்னும் அடிமையாக இருந்த சிலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் எஜமானர்களான ஸஹாபாக்கள் தங்களுக்கு பணிவிடை செய்வதோடு ஒரு நாளில் ஒரு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என ஆணையும் பிறப்பித்தனர். பகல், இரவு என எஜமானர்களின் பணிவிடைகளுக்கு இடையே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை ஓதினர். எனினும் இது மனச் சோர்வையும், உடல் தளர்வையும் ஏற்படுத்தவே எஜமானர்களிடம் இது குறித்து கோரிக்கை வைத்ததும், அது இரண்டு நாளாக மாற்றப்பட்டது. அதுவும் சிரமமாக ஆகவே மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு மூன்று நாளாக உயர்த்தப்பட்டது.

فكنّا نختم القرآن الكريم كل ليلة مرة، فشقّ ذلك علينا فجعلنا نختم كلّ ليلتين مرة، فشق علينا فجعلنا نختم كل ثلاث ليال مرة، فشقَّ علينا حتّى شكا بعضنا إلى بعض, فلقينا أصحاب رسول الله، صلى الله عليه وسلم.
فعلمونا أن نختم كل جمعة مرّة, فصلينا ونمنا ولم يشق علينا بعد ذلك.

ரஃபிவு இப்னு மிஹ்ரான் தலைமையில் சிலர் ஒன்று கூடி மூத்த ஸஹாபாக்கள் சிலரிடம் இது குறித்து முறையிட வந்தனர். அங்கே, ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் “நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிவிடைகள் மற்றும் ஊழியம் செய்கின்றோம். சிறிது நேர ஓய்வு, சிறிது நேர தூக்கம் என்று போக மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் குர்ஆனையே ஓதிக் கொடிருக்கின்றோம்.

எங்களுக்கு முழுக்குர்ஆனையும் ஓதி முடிப்பதற்கு இன்னும் கூடுதலாக அவகாசம் தர வேண்டும்” என்று வேண்டினார்கள்.

அது கேட்ட நபித்தோழர்கள் வேண்டுமானால் ஒரு ஜும்ஆவை காலக் கெடுவாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு ஜும்ஆவிற்கும் ஒரு குர்ஆனை ஓதி முடியுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள்.

இதன் பின்னர், ரஃபிவு அவர்கள் தங்களுக்கு கிடைத்த நேரங்களில் உபை இப்னு கஅப் (ரலி), உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடம் சென்று குர்ஆனை மனனமாக ஓத ஆரம்பித்தார்கள். அத்தோடு குர்ஆனுடைய விளக்கத்தையும் படித்தார்கள்.

ஒரு கட்டத்தில் குர்ஆனோடு அலாதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இவரைப் பார்த்த இவர்களின் எஜமானி ரஃபிவு அவர்களின் வேலைப் பளுவை குறைத்து, மார்க்கக் கல்வியை பயில அனுமதி அளித்தார்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறையில் சிறந்த ஞானம் பெற்றவராக உருவெடுத்ததும் இவர்களை விடுதலை செய்திட முன் வந்தார்கள்.
وقالت: اشهدوا يا معشر المسلمين أني أعتقت غلامي هذا رغبة في ثواب الله
وطمعا بعفوه ورضاه
وأنه ليس لأحد عليه من سبيل إلاّ سبيل المعروف.
اللهم إني أدّخره عندك ليوم لا ينفع فيه مال ولا بنون

ஒரு ஜும்ஆ உடைய நாளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ரஃபிவு அவர்களை அழைத்து வந்த அவர்களின் எஜமானி “முஸ்லிம்களே! அல்லாஹ்வின் மகத்தான கூலியை, மேலான மன்னிப்பை ஆதரவு வைத்து அழகிய முறையில் நான் இவரை உரிமை விடுகின்றேன்” என்று கூறிவிட்டு, யாஅல்லாஹ்! இதோ! இந்த செயலை செல்வமும், பிள்ளைச் செல்வங்களும் பயன் தராத அந்த மறுமை நாளுக்காக முன் கூட்டியே நான் உன்னிடம் அனுப்பி வைக்கின்றேன்” என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்! இணைவைப்பில் ஊரிப்போயிருந்த, அடிமையாக இருந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் தூய இஸ்லாத்தை ஏற்று, புனித குர்ஆனோடு ஏற்படுத்திக் கொண்ட அந்த தொடர்பு உலகின் அனைத்து இமாம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலை திருக்குர்ஆன் விரிவுரை அறிஞராக மாறிப்போனார்கள் “அபுல் ஆலியா” ரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள்.

மார்க்கப் போரில் பங்கெடுத்து தீனுக்காக வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தீராத வேட்கையும் அவரின் இதயத்தில் இடம் பெற்றிருந்தது. அதற்காக பயிற்சி மேற்கொண்டிருந்த போது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. அந்த முறிவு அவர்களுக்கு பலத்த வலியை ஏற்படுத்தியது. வலியால் துடித்த அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.

அதன் ஒரு பகுதியாக மயக்க மருந்து பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.

فقال: أحضروا لي قارئاً يتقن كتاب الله، واجعلوه يقرأ علي ما تيسر من آياته، فإذا رأيتموني قد احمر وجهي واتسعت حدقتاي وثبت نظري في السماء فافعلوا بي ما شئتم.
وقرأ القارئ القرآن، فلما وقع ما ذكر، ونظر وثبت بصره في السماء نفذوا أمره ونشروا ساقه وبتروها، فلما أفاق قال له الطبيب: كأنك لم تشعر بآلام الشق والبتر؟ فقال: لقد شغلني برد حب الله وحلاوة ما سمعته من كتاب الله عن حرارة المناشير.

அதற்கு இசைவு தெரிவிக்காத அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் “குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவர்களை அழைத்து என் அருகே அவர்களை ஓதச் சொல்லுங்கள்! அப்போது, உங்களின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

அவ்வாறே செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களிடம் “எப்படி உங்களால் இவ்வாறு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது? என்று கேட்டார்.

அதற்கு, “படைத்த ரப்பின் நேசம் இதயத்திலும், அல்குர்ஆனின் இனிமை செவியிலும் ஊற்றுப் பிரவாகம் எடுக்கும் போது இவைகள் எல்லாம் அதற்கு முன் நின்று ஈடு கொடுக்க முடியுமா?” என்று பதில் கூறினார்கள்.

                                        ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )  

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அவனுடைய புனித வேதத்தோடு தொடர்பு வைத்துக் கொள்கிற நல்ல நஸீபை தந்தருள்வானாக!

ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இந்த தலைப்புக்கு இன்னும் மேலதிகத் தகவல் வேண்டுமானால்….

குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திடுவோம் என்ற தலைப்பிலும், திருக்குர்ஆன் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? என்ற தலைப்பிலும் பார்த்துக் கொள்ளவும்.

மூன்றாம் நாள் தராவீஹ் பயான் தலைப்பு:  

”இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!”


No comments:

Post a Comment