Thursday 27 July 2017

மிரட்டப்படும் முஸ்லிம் சமூகம்!!!



மிரட்டப்படும் முஸ்லிம் சமூகம்!!!



முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வும், காழ்ப்புணர்ச்சியும் ஃபாஸிச பயங்கர வாதிகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு சிறிய, சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக தொடுக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருகின்றோம்.

சில போது, ஆளும் வர்க்கத்தின் மூலமாகவும், சில போது ஊடகங்களின் மூலமாகவும், சில போது நீதி மற்றும் சட்டத்தின் மூலமாகவும், சில போது வன்முறை மற்றும் கலவரங்களின் மூலமாகவும், சில போது விமர்சனங்களின் மூலமாகவும் இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடரப்பட்டு வருகிறது.

தற்போது, ஆளும் வர்க்கத்தின் மூலமாகவும்,  நீதி மற்றும் சட்டத்தின் மூலமாகவும் தொடர் மிரட்டல்களை முஸ்லிம் சமூகம் சந்தித்து வருவதை ஊடகத்தின் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

கடந்த ஓராண்டில் மட்டும் மாட்டுக்கறி பிரச்சனை, பொதுசிவில் சட்டம், முத்தலாக் விவகாரம், என தொடர்படியாக முஸ்லிம் சமூகம் மிரட்டப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

 இந்நிலையில், கடந்த 25/7/2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி M. V. முரளீதரன் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த வீரமணி என்பவர் தொடுத்த ஒரு வழக்கின் தீர்ப்பில் தான் இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கின் சாரம் இது தான் “ஆசிரியர் பணி தொடர்பான தேர்வில் வந்தே மாதரம் எந்த மொழி என கேட்கப்பட்டு, அதற்கு தான் வங்காள மொழி என தெளிவாக பதில் கூறியிருந்தும் அதற்கான ஒரு மதிப்பெண்ணை போடவில்லை” என்று வழக்கு தொடர்ந்தார்.

வழக்கிற்கு சற்றும் தொடர்பில்லாத தீர்ப்பை நீதிபதி முரளீதரன் வழங்கியது ஜனநாயக தத்துவத்தை மதித்து நடக்கிற மக்களுக்கு வியப்பையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

வந்தே மாதரம் இஸ்லாமிய மார்க்க நிலைப்பாட்டிற்கு எதிரானது என்கிற பிரச்சனை தமிழக சட்டப்பேரவையில் எழுந்ததால் தான் தமிழக சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இவை தமிழக சட்டப்பேரவை குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளது என்பதை மாண்புமிகு நீதிபதிக்கு சுட்டிக்காட்ட நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிய தமிழகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

வாருங்கள்! இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டமும்... அரசு வழிகாட்டலும்....

1. முதலில் இந்த தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான வழிகாட்டல் ஏதும் உள்ளதா? என்று பார்த்தால் நமது அரசமைப்பு சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் இடம் பெறவில்லை.

2. இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பினும் குடிமக்களின் மத உணர்வுகளை மதித்து அவர்கள் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டு என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின் வழியாக உரிமை வழங்கி யுள்ளது.

எனவே ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற அவனுக்கு சர்வ சுதந்திர உரிமை உண்டு.

 மேலும், ஒருவனுக்கு மற்றவனது மதத்தை பழிக்கவோ, அவமதிக்கவோ உரிமை கிடையாது. அப்படி ஒருவன் அதைச் செய்தான் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தண்டிப்பதற்குரிய குற்றங்களாகும்.

 மதம் சம்பந்தமான குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமானது தனது 295 முதல் 298 வரையிலான 5 சட்டப்பிரிவுகளின் வாயிலாக விளக்குகிறது. அந்த 5 சட்டப்பிரிவுகளையும் பின்வரும் மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்துகிறது.

(offences relating to religions) மதம் சம்பந்தமான குற்றங்கள்     1. வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருள்களின் புனிதத்தன்மைக் கெடுத்தல். (defilement of places of worship or objects of veneration)  பிரிவுகள் 295 மற்றும் 297.            2.மத உணர்வுகளை அவமதித்தல்,  (outraging the religious feelings) பிரிவுகள் 295-a மற்றும் 298.                            3.மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், (disturbing religious assemblies) பிரிவு 296.

                                                                                 (  நூல்: இந்திய தண்டனைச் சட்டம்,  பக்கம்: 370,371. )

இதற்கு முன்பு வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக 07.09.2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது.

அப்போது பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளை அறிவித்தது.

மத்திய அரசாங்கம்  இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள் -  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தான.

மதவாத மாநில அரசாங்கங்கள்பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள்,  அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.


வேறொன்றுமில்லை. இத்தகைய மிரட்டல்களால் முஸ்லிம்களை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாம், இந்த தேசத்தை விட்டும் இஸ்லாத்தை விரட்டி விடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: “இவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்து விட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”.

                                                     ( அல்குர்ஆன்: 61: 8 )

இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

வந்தே மாதரம் பாடல் இதன் அடிப்படை நோக்கம் துர்க்கை அம்மனை துதி பாடுவதாகும்!.

எனவே, தான் வந்தே மாதரம் பாடலை திணிக்க முற்பட்ட போது சுதந்திர வேட்கை நிறைந்த அன்றைய காலத்திலேயேயும், இந்தியா சுதந்திரம் அடைந்த துவக்க காலத்திலும் முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர். 

வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்க்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக, இறைவனுக்கு இணைகற்பிப்பதாக, இஸ்லாமியர்கள் கருதியதால் அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக ஜன கண மன பாடலை நாட்டுப் பண்ணாக தேர்ந்தெடுத்தனர். வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை.

இணை கற்பிக்கும் படி பெற்றெடுத்த பெற்றோரே கூறினாலும்.....

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا

மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள்”.                  ( அல்குர்ஆன்: 4: 36 )

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ () وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا

“எனக்கு நீ நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்ப வேண்டியுள்ளது. ஆனால், எதனை நீ அறிய மாட்டாயோ அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதே!”.                                            ( அல்குர்ஆன்: 31: 14, 15 )

படைத்த இறைவனுக்கு அடுத்த படியாக பார்க்கப்பட வேண்டிய உறவு என்று இஸ்லாம் கூறும் ஓர் உன்னத உறவு பெற்றோர் எனும் உறவு.

அந்த உறவே படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்குமாறு கூறினாலும் அந்த விஷயத்தில் அந்த உறவின் வேண்டுகோலுக்கு உடன் படக்கூடாது என்று உறுதியாக கட்டளையிடும் பட்சத்தில் இணை கற்பிக்கும் ஃபாஸிச கும்பல்களின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் முஸ்லிம் சமூகம் செவி சாய்க்குமா என்ன?

இவர்களென்ன இவர்களை விட மிகக் கொடுமையான கொடுங்கோலர்கள் எல்லாம் இந்த உம்மத்தை மிரட்டிப்பார்த்தார்கள். உயிரை துச்சமாகக் கருதி உன்னத ஏகத்துவத்திற்காக இன்னுயிரை நீத்த வீரர்களை முன் மாதிரியாகக் கொண்ட வராற்றுப் பாரம்பரியமிக்க சமூகம் இந்த முஸ்லிம் சமூகம்.

முஸ்லிம் சமூகமே முன் வைக்கும் கேள்விகள்?

முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சில அறிவு ஜீவிகள் நிர்பந்த நிலையில் இஸ்லாம் விலக்கப்பட்ட பாவமான செயல்களைச் செய்ய அனுமதிக்கத்தானே செய்கின்றது?

அந்த அடிப்படையில் இது உள்ளம் சார்ந்த விஷயம் இதை வெறுமெனே மொழிவதால் என்ன வந்து விடப்போகின்றது?

ஏன்! காலம், காலமாக கிருஸ்துவ மிஷினரி பள்ளிக் கூடங்களிலும், ஹிந்து பள்ளிக் கூடங்களிலும், வித்யாலயா பள்ளிக் கூடங்களிலும் அவரவர்கள் தெய்வ வழிபாட்டை படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார்களே, அங்கெல்லாம் முஸ்லிம் மாணவர்கள் படிக்கத்தானே செய்கின்றார்கள் அப்பொழுதெல்லாம் இத்தகைய நிலைப்பாட்டை ஏன் முஸ்லிம் சமூகம் எடுக்கவில்லை? என்று.

நிர்பந்த நிலையும்... இஸ்லாமிய வழிகாட்டலும்....

1. தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்வதில்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ () إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ()

“இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்விற்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாக இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையான உணவுகளையே உண்டு வாருங்கள்! மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்!

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும் அல்லாஹ்வைத் தவிர மற்றவை (வர்) களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவை ஆகும்.

எனினும், எவரேனும் ஒருவர் ( இப்பொருளில் ஏதாவதொன்றை உண்ண வேண்டிய ) நிர்ப்பந்தத்திற்கு உள்ளானால், இறைச் சட்டத்தை தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் ( தேவைக்கு மிகாமலும் ) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை.

நிச்சயமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்”.                           ( அல்குர்ஆன்: 2: 172,173 )

இங்கே, நிர்பந்த நிலையில் உண்பதற்கு அனுமதி அளித்த அல்லாஹ் மூன்று நிபந்தனைகளையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.

1. உண்மையிலேயே தவிர்க்க முடியாத கட்டாய நிலை அதாவது ( பசி, பட்டினி, பஞ்சம் போன்ற நிலை ஏற்பட்டாலோ, அல்லது உயிர் போய் விடும் நிலை ஏற்பட்டாலோ, அல்லது நோயின் காரணமாக உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றிருந்தாலோ அல்லது தடுக்கப்பட்ட பொருளைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே ) இவைகள் தான் நிர்பந்தம், கட்டாயம், தவிர்க்க முடியாத நிலை என்பதாகும்.

2. அல்லாஹ்வின் சட்டத்தை உடைத்தெறிக்க வேண்டும், தூக்கி எறிய வேண்டும் எனும் தீய எண்ணம் உள்ளத்தில் ஏற்படக்கூடாது.

3. தடுக்கப்பட்ட பொருளை தேவையான அளவுக்கு மேல் பயன் படுத்துவது, அடிக்கடி பயன்படுத்துவது, தொடர்ந்து பயன்படுத்துவது கூடாது என்பதாகும்.

2. தகாத உறவை மேற்கொண்டால்....

சுய விருப்பத்தோடு விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஷரீஆவின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில்,  திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் கல்லெறி தண்டனையும், திருமணம் ஆனவர்களாக இருந்தால் கசையடி தண்டனையும் நிறைவேற்றப்படும்.

ஆனால், பலவந்தப்படுத்துதலின் பேரில் விபச்சாரம் செய்தவர்களை அல்லாஹ் அவர்களின் தவ்பாவின் மூலம் மன்னிக்கின்றான்.

وَلَا تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا وَمَنْ يُكْرِهْهُنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ غَفُورٌ رَحِيمٌ ()

“மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக் கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் போது அவர்களை எவரேனும் விபச்சாரம் புரியுமாறு பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும், மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 24: 33 )

روي عن جابر بن عبد الله وابن عباس رضى الله عنهم أن هذه الآية نزلت في عبد الله بن أبى، وكانت له جاريتان إحداهما تسمى معاذة والأخرى مسيكة، وكان يكرههما على الزنى ويضربهما عليه ابتغاء الأجر وكسب الولد، فشكتا ذلك إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فنزلت الآية فيه وفيمن فعل فعله من المنافقين. ومعاذة هذه أم خولة التي جادلت النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في زوجها. وفي صحيح مسلم عن جابر أن جارية لعبد الله بن أبى يقال لها مسيكة وأخرى يقال لها أميمة فكان يكرههما على الزنى، فشكتا ذلك إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأنزل الله عز وجل" وَلا تُكْرِهُوا فَتَياتِكُمْ عَلَى الْبِغاءِ"- إلى قوله-" غَفُورٌ رَحِيمٌ".

நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை வீட்டில் இரண்டு அடிமைப் பெண்கள் ( மஸீக்கா (ரலி) மற்றும் மஆதா (ரலி). மஆதா (ரலி) அவர்கள் கவ்லா (ரலி) அவர்களின் தாயார் ஆவார்கள். ) பணிபுரிந்து வந்தனர். இருவரும் தூய இஸ்லாமிய நெறியை ஏற்றுக் கொண்டனர்.

அறியாமைக் காலத்தில் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ விபச்சாரத்தை தொழிலாக செய்து வந்தனர். இந்நிலையில், தூய இஸ்லாத்தை ஏற்றதன் பின்னர் அவர்களின் வாழ்வில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டது.

பின்னர், இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்து அதை தண்டனைக் குரிய குற்றமாக சேர்த்து அதற்கான தண்டனையையும் அல்குர்ஆனின் மூலமும், நபி {ஸல்} அவர்களின் மூலமும் தெளிவு படுத்தியது.

இப்படி இருக்கும் போது, அப்துல்லாஹ் இப்னு உபை விபச்சாரம் செய்து பணம் சம்பாதித்து வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். இருவரும் அவனிடத்தில்  ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு போதும் இஸ்லாம் தடை செய்திருக்கிற விபச்சாரத்தைச் செய்யமாட்டோம்!” என மறுத்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை கடுமையாக நிர்பந்திக்கவே இருவரும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சபையின் முன் ஆஜாராகி அவர்களின் நிலைமையை எடுத்துரைத்தனர். அப்போது, அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியருளினான்.           ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ, தஃப்ஸீர் அல் குர்துபீ )

3. குஃப்ரிய்யத்தான வார்த்தையை மொழிவதில்....

مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَكِنْ مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ () ذَلِكَ بِأَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ ()

“எவரேனும், இறை நம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி, அவருடைய உள்ளம் இறைவனை ஏற்றுக் கொண்டதில் நிம்மதியுடன் இருக்கும் நிலையில் நிராகரித்தாரானால் அவர் மீது குற்றமில்லை. ஆனால், எவர் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களுக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது.

இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதால். மேலும், அல்லாஹ் நன்றி கொன்று வாழ்பவர்களுக்கு ஒரு போதும் நேர்வழி காட்டுவதில்லை”.                      ( அல்குர்ஆன்: 16: 106, 107 )

عن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر قال: أخذ المشركون عمار بن ياسر فعذبوه حتى قاربهم في بعض ما أرادوا، فشكا ذلك إلى النبي صلى الله عليه وسلم، فقال النبي صلى الله عليه وسلم: "كيف تجد قلبك؟" قال: مطمئنا بالإيمان قال النبي صلى الله عليه وسلم: "إن عادوا فعد"  .
ورواه البيهقي بأبسط من ذلك، وفيه أنه سب النبي صلى الله عليه وسلم وذكر آلهتهم بخير، وأنه قال: يا رسول
الله، ما تُركتُ حتى سَببتك وذكرت آلهتهم بخير! قال: "كيف تجد قلبك؟" قال: مطمئنا بالإيمان. فقال: "إن عادوا فعد". وفي ذلك أنزل الله: { إِلا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإيمَانِ }  .

இந்த வசனம் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக இறக்கி அருளப்பட்டது.

இறைநிராகரிப்பாளர்கள் ஒருமுறை அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களைப் பிடித்துச் சென்று கடும் சித்ரவதைகளைச் செய்தனர். சித்ரவதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத அம்மார் (ரலி) அவர்கள் தங்களை விட்டு விடுமாறு அவர்களிடம் கோரினார்கள்.

அதற்கு, இறைநிராகரிப்பாளர்கள் ”எங்கள் கடவுளர்களை நீர் வாழ்த்திப் பேச வேண்டும். முஹம்மது {ஸல்} அவர்களை நீர் திட்ட வேண்டும்” என்றனர்.

இது கேட்ட அம்மார் (ரலி) அவர்கள் அவர்கள் கூறியது போன்று நடந்து கொண்டார்கள். பின்பு அங்கிருந்து விடுதலையாகி நேராக மாநபி {ஸல்} அவர்களின் திருச்சபையின் முன் ஆஜாராகி நடந்த சம்பவத்தை விளக்கி என்னுடைய நிலை என்ன? என்பது போல் கேட்டார்கள்.

அப்பொழுது மாநபி {ஸல்} அவர்கள் “அவர்களின் முன்பாக நீர் என்னைத் திட்டும் போதும், அவர்களின் கடவுளர்களை வாழ்த்தும் போதும் உம்முடைய இதயத்தின் ஓட்டம் எவ்வாறிருந்தது? என்று கேட்டார்கள்.

அதற்கு, அம்மார் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்போது என் இதயம் ஈமானால் இலங்கிக் கொண்டிருந்தது. என் உள்ளத்தில் ஈமான் முழுமையாக, நிரப்பமாக இருந்தது” என்று பதில் கூறினார்கள்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “அப்படியென்றால் அவர்கள் மீண்டும் உம்மை சிறைபிடித்து முன்பு போல் கூறச் சொன்னால் தாராளமாகக் கூறுவீராக!” என்று கூறினார்கள்.

அப்போது அந்தச் சபையில் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியருளினான்.                                 ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

ஆகவே, நிர்பந்தம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி மார்க்கத்தில் எல்லா அம்சங்களிலும் வரம்புகளைக் கடந்து விடமுடியாது.

ஏனெனில், அதற்கான சூழ்நிலைகள், அதன் எல்லைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது, நம் சமூகத்தின் அறிவு ஜீவிகள் கேட்கும் கேள்விக்கு பதிலைப் பார்ப்போம்.

1. வந்தே மாதரம் கட்டாயமாக பாட வேண்டும் என்று அரசு ஒன்றும் சட்டம் இயற்ற வில்லையே?

2. நீங்கள் அந்தப் பாடலை பாடவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம் என்றோ அல்லது உங்களது குடியுரிமையை ரத்து செய்து விடுவோம் என்றோ அரசு நிர்பந்திக்க வில்லையே?

3. ஒரு தேசத்தின் மீதான பற்று என்பதை வெறும் ஒரு பாடலை பாடுவதை வைத்து தீர்மானித்து விட முடியுமா என்ன?

4. சொன்னது ஒரு நீதிமன்றத்தின் நீதிபதி, இன்னும் நாட்டின் உயர் நீதிமன்றம் இருக்கிறது, உச்ச நீதிமன்றம் இருக்கிறது அவைகளின் தீர்ப்புகள் எப்படி வரும் என்பதை எதிர் பார்ப்போம்.

5. நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் சட்டம், ஒழுங்கைக் காப்பது மட்டுமே அன்றி சட்டம் இயற்றுவது அல்லவே?

6. இந்த நாடு மதச்சார்பின்மை நாடு இந்த நாட்டின் அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கிற உரிமையை நாம் பயன்படுத்தி நாம் வாழ்வதற்கு நமக்கு அதிகாரம் இருக்கின்றது.

7. அரசுப் பள்ளிக் கூடங்கள் இருக்கும் போது தனியார் பள்ளிக் கூடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வைத்தது தவறு, அப்படி கிருஸ்துவ, ஹிந்து பள்ளிக் கூடங்களில் படிக்க வைத்தால் அவர்கள் செய்வதையும், சொல்வதையும் விரும்பியோ, விரும்பாமலோ செய்து தான் ஆக வேண்டும் இது எப்படி நிர்பந்தமாகும். இதற்காக அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஆகவே, நிர்பந்தம் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி இணைவைப்போடும், இறைநிராகரிப்போடும் ஒரு முஸ்லிம் சமரசம் செய்து கொள்ள முடியாது. சமரசம் செய்து கொள்ளவும் கூடாது.

சமரசம் செய்து கொள்ள விரும்பாத மேன்மக்கள்…

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும் இதே போன்றதொரு நிலையை அன்றைய மக்காவின் இணைவைப்பாளர்கள் உருவாக்கிய போது அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டலை வழங்கி இணை வைப்பாளர்களை நோக்கி அறை கூவல் விடச்சொன்னான்.

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ () لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ () وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ () وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ () وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ () لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ()

( ஏக இறைவனை ) மறுப்பவர்களே!நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்குஎன நபியே! நீர் கூறுவீராக!   ( அல்குர்ஆன்: 109 – 1-6 )

இன்னும், ஃகப்பாப், யாஸிர், சுமைய்யா, ஹபீப், குபைப், ஹம்ஜா, ( ரலிஅன்ஹும் ) போன்றவர்களின் தியாகச் சுவடுகளை நீங்காத காவியமாய் வரலாறு தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது.

இவர்களெல்லாம் எதற்காக சித்ரவதைகளை தாங்கிக் கொண்டார்கள்? ஏன் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஒன்றுமில்லை, ஒரே ஒரு வார்த்தைக்காகத்தான்! ஆம்! ஒற்றை வார்த்தையைத் தான் அன்றைய இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள் இவர்களின் வாயில் இருந்து வெளிப்பட்டு விடாதா? என எதிர் பார்த்தார்கள்.

வாழ்க்கையில் மட்டும் அல்ல வார்த்தையால் கூட அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க முன் வரவில்லை!

இந்த அஞ்சா நெஞ்சர்களின் வாழ்க்கை முன்மாதிரி தான் இன்றும் நம்மை உலக எதிரிகள் அனைவரிடத்திலும் எதிர்த்து நின்று போராட தூண்டிக் கொண்டிருக்கின்றது.

وفي بعض الروايات: أنه سجنه ومنع عنه الطعام والشراب أياما، ثم أرسل إليه بخمر ولحم خنزير، فلم يقربه، ثم استدعاه فقال: ما منعك أن تأكل؟ فقال: أما إنه قد حَلَّ لي، ولكن لم أكن لأشمتك فيّ.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்கள் ரோமபுரியின் அரசனால் கைதியாக பிடிபட்ட போது பல சித்ரவதைகளை மேற்கொண்டான்.

அதில் ஒன்று பல நாட்களாக உணவும், குடிநீரும் கொடுக்காமல் தாகத்தோடும் பட்டினியோடும் போட்டு கொடுமை செய்தான்.

ஒரு கட்டத்தில் மதுவையும், பன்றி இறைச்சியையும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் முன்பாக வைத்தான்.

ஆனால், அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அதை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை. இதைப் பார்த்த அரசன் “ஏன் சாப்பிடாமல் இருக்கின்றாய்? உம்மை சாப்பிட விடாமல் தடுப்பது எது? என்று கேட்டான்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்கள் “என் இறைவன் எனக்கு இந்த உணவை நிர்பந்தமான நேரத்தில் சாப்பிட அனுமதித்து இருக்கின்றான். எனினும், என் விஷயத்தில் நீ நிர்பந்தம் செய்து அதைக் கண்டு மகிழ்வது என்னை ஒன்றும் செய்திடாது என்பதை உமக்கு உணர்த்துவதற்காகத் தான்” என்று கூறினார்கள்.

ஆக, எந்த உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் முஸ்லிம் சமூகம் ஒருக்காலமும் விலை போகாது என்பதை நாம் உலகிற்கு உணர்த்துவதோடு, சத்திய தீனின் அனைத்துப் பகுதிகளிலும் பேணுதலோடும், இறையச்சத்தோடும் வாழும் நல்ல தௌஃபீக்கை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!