Thursday 30 January 2020

கொரோனா வைரஸ்! பாடங்களும்.. படிப்பினைகளும்...


கொரோனா வைரஸ்!
பாடங்களும்.. படிப்பினைகளும்...



சீனா கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியக் கண்டத்திலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாகப் பரப்பளவில் மூன்றாவது பெரிய நாடாகும்.

2015 –ஆம் ஆண்டிற்குப் பின் உண்டான கணக்கெடுப்பின் படி 1,306,313,812 மக்கள் வாழும் சீனா உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

உலகின் மிக முக்கியமான நாடாகவும், வளர்ந்து வரும் வல்லரசு நாடாகவும், உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பங்கு வகிக்கிற நாடாகவும், வர்த்தக உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிற நாடாகவும், இராணுவம், பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றில் மிகச் சிறந்து விளங்குகிற நாடாகவும் திகழ்கிறது.

தற்போது சீனா மிகப் பெரிய ஆபத்தை எதிர் கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்க காத்திருக்கின்றது.

சீனாவுக்கு என்ன ஆபத்து?..

சுமார் 14 நகரங்கள், (50 மில்லியன்) 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பகுதி அல்லது முழுமையான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு அவரவர்களின் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

வுஹான், ஹெனன், ஹெபீ, ஹைனான், ஹீலோங்ஜியாங், ஷாங்காய் போன்ற பகுதிகள் முழுக்க முழுக்க அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கின்றது.

சுமார் 106 மரணங்கள், 90,000 க்கு மேல் பாதிப்பு, 4,000 க்கும் அதிகமானோர் ஆபத்தான நிலை, 450 பேர் தீவிர மருத்துக் கண்காணிப்பின் கீழ், சீனாவைச் சுற்றியுள்ள சுமார் 13 நாடுகளில் இந்தியா உட்பட 3000 பேர் பாதிப்பு என்றும், பிப்ரவரி 4 –ஆம் தேதிக்குள் வுஹான் நகரில் மட்டும் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஆய்வாளர்கள் குழுவும் எச்சரித்துள்ள நிலையில் தொடர்ந்து சீனாவையும், உலகையும் அச்சுறுத்துகிற தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

முதன் முதலாக பீஜிங்கில் கொரோனா எனும் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  அதன் பின் பெரும் பீதியை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா எனும் கொடிய வைரஸ்

ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. அந்த நகரத்தில் 11 மில்லியன் (1.1 கோடி) பேர் வசிக்கிறார்கள்.
     
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கிற மருத்துவ நிபுணர்கள் சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்றும் கூறுகின்றனர்.

மேலும், இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.

இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. ஐந்து லட்சம் சீன மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுவரை வுஹான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே போலத்தான் இப்போதும் வவ்வாலிலிருந்து இந்த கொரானா வைரஸ் பாம்புகளுக்குப் பரவி பாம்புகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருப்பதாக கூறுகின்றனர்.

சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே கொரோனா வைரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகையாகும். இரண்டுமே விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸுமாகும்.

இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. இங்கிருந்து மனிதர்களிடம் தாவுவது இந்த வைரஸ்களுக்கு மிகவும் சுலபமானதும் கூட.

வைரஸ் என்றால் என்ன? வைரஸ்கள் பரவுவது எப்படி?

வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.

சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.

வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.

எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.
பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும்.

ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

21 -ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.

இபோலாவைரஸ்

மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.

1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.
லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.

அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.

நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சார்ஸ் (SARS)

21 -ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.

Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.

2002 -ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது. அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.
சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003 -ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது.

சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர். இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது. தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.

ஜிகா வைரஸ்

Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.

முதன் முதலில் உகாண்டாவில் 1947 -ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.

பின்னர் 2007 -ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013 -ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.

2015 -ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது. கொசுவில் இருந்து பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.

Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள். ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

நிபா வைரஸ்

நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.

1998 -ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.

2004 -ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018 -ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.

நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இந்த வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.

நாம் வாழ்கிற இந்த நவீன யுகத்தில் எல்லாம் நவீனமயமாகி விட்டது போன்று நோய்களும் நவீனமாக விட்டது.

அதனால் தானோ என்னவோ நோய்களுக்கான பெயர்களும் தேடித் தேடி நவீன பெயர்களால் சூட்டப்படுகின்றது.

கொரோனா குறித்த இஸ்லாமியப் பார்வை...

பொதுவாக இஸ்லாம் மனித வாழ்க்கையின் அத்துனை அம்சங்களிலும் வழிகாட்டுவது போன்று நோய்கள் குறித்தும் நோய் நிவாரணங்கள் குறித்தும், நோய்கள் தடுப்புமுறைகள் குறித்தும் மிக அதிகமாகவே வழிகாட்டி இருக்கின்றது.

தற்போதைய இந்த சூழலில் நாம் சில விஷயங்களை இஸ்லாமிய அடிப்படையில் தெளிவு படுத்திக் கொள்வது கடமையும் அவசியமும் ஆகும்.

1.   தொற்று நோய் என்பது இஸ்லாத்தில் இல்லை..

حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول رواه الزهري عن أبي سلمة وسنان بن أبي سنان

நபி {ஸல்} அவர்கள் ஒரு சபையில்தொற்று நோய் கிடையாது. ஸஃபர் மாதத்தில் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர்அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?' என்று கேட்டார்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள்அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: புகாரி 5717 ) இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி {ஸல்} அவர்கள் கூறுகின்றார்கள்.

2.   விதியின் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும்...

حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب عن عبد الله بن عبد الله بن الحارث بن نوفل عن عبد الله بن عباس أن عمر بن الخطاب رضي الله عنه خرج إلى الشأم حتى إذا كان بسرغ لقيه أمراء الأجناد أبو عبيدة بن الجراح وأصحابه فأخبروه أن الوباء قد وقع بأرض الشأم قال ابن عباس فقال عمر ادع لي المهاجرين الأولين فدعاهم فاستشارهم وأخبرهم أن الوباء قد وقع بالشأم فاختلفوا فقال بعضهم قد خرجت لأمر ولا نرى أن ترجع عنه وقال بعضهم معك بقية الناس وأصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نرى أن تقدمهم على هذا الوباء فقال ارتفعوا عني ثم قال ادعوا لي الأنصار فدعوتهم فاستشارهم فسلكوا سبيل المهاجرين واختلفوا كاختلافهم فقال ارتفعوا عني ثم قال ادع لي من كان ها هنا من مشيخة قريش من مهاجرة الفتح فدعوتهم فلم يختلف منهم عليه رجلان فقالوا نرى أن ترجع بالناس ولا تقدمهم على هذا الوباء فنادى عمر في الناس إني مصبح على ظهر فأصبحوا عليه قال أبو عبيدة بن الجراح أفرارا من قدر الله فقال عمر لو غيرك قالها يا أبا عبيدة نعم نفر من قدر الله إلى قدر الله أرأيت لو كان لك إبل هبطت واديا له عدوتان إحداهما خصبة والأخرى جدبة أليس إن رعيت الخصبة رعيتها بقدر الله وإن رعيت الجدبة رعيتها بقدر الله قال فجاء عبد الرحمن بن عوف وكان متغيبا في بعض حاجته فقال إن عندي في هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه قال فحمد الله عمر ثم انصرف

அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் ஃகத்தாப் (ரலி) ஷாம் க்கு மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக)ப் புறப்பட்டார்கள். சர்ஃக்எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதியும், ஆளுநருமான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும், அவர்களின் தோழர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்என்று சொல்ல, அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன்.

அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? அல்லது மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா?” என்று) ஆலோசனை கேட்டார்கள்.

இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், “நீங்கள் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டீர்கள். அதிலிருந்து
பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லைஎன்று கூறினார்கள்.

இன்னும் சிலர், “உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர்.
அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளை நோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லைஎன்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி)நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு, “என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களைப் போன்றே கருத்து வேறுபாடு கொண்டார்கள்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள்நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்என்று சொல்ல நான் அவர்களை அங்கு அழைத்து வந்தேன்.

அவர்களில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்என்று.

எனவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே எழுந்து நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்என்று அறிவிப்பு செய்தார்கள்.

அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி)அல்லாஹ்வின்
விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று
கேட்க, உமர் (ரலி) அவர்கள்அபூ உபைதா அவர்களே! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம்! நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே
வெருண்டோடுகிறோம்.

உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு
பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை
மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள்.
வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான்
நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.

இந்த நேரத்தில் தம் தேவை நிமித்தமாக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அங்கே வந்தார்கள்.

இரண்டு பேருக்குமிடையே வந்த அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு
விளக்கம் உள்ளது. இதோ சொல்கின்றேன்! என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச்செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான்  கேட்டிருக்கின்றேன்என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள்  தங்களின் முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி
காட்டுதலுக்கேற்ப அமைந்திட வேண்டும் என்பதற்காக) அல்லாஹ்வைப் போற்றி
புகழ்ந்துவிட்டு மதீனாவிற்கு திரும்பிச் சென்றார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                  ( நூல்: புகாரி, 5729 )

3.   அல்லாஹ்வின் சோதனையாக சில போது நோய்கள் அமையும் என்று நம்ப வேண்டும்

மனித வாழ்வில் ஏற்படும் சோதனை குறித்து குர்ஆனில் பேசும் போது அல்லாஹ் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவான்.

ஒன்று முஸீபத்مُصِيبَةٍ, இன்னொன்று பலாஉ - الْبَلَاءُ, இதில் முதல் வகை அல்லாஹ்வை முற்றிலும் மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும் ஏற்படும் சோதனையாகும்.

அந்தச் சோதனை என்பது அல்லாஹ்வை வழிபட்டவர்கள் காப்பாற்றப்பட்டு அல்லாஹ்வை வழிபடாதவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகும். அதுவும் அல்லாஹ் அதற்கென ஒரு நாளை தேர்ந்தெடுத்தோ அல்லது ஒட்டு மொத்தமாக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தோ நடைமுறை படுத்துவான்.

உதாரணமாக, நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம், பேரிடர்கள் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமூகம் சந்தித்த பேரழிவுகள் அனைத்தும் இதற்கு சான்றுகளாகும். அல்குர்ஆனின் வசனங்களில் அநேக வசனங்கள் இது குறித்துப் பேசுகின்றன.

இரண்டாவது வகை சோதனை இது இறைநம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிற சோதனையாகும்.

இவ்வகை சோதனைகளின் மூலம் அல்லாஹ் அவர்களின் ஈமானையும், தவக்குலையும், தக்வாவையும் சோதிப்பான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்                                          ( அல்குர்ஆன்: 2:155 )

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதிப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”.                           ( அல்குர்ஆன்: 21:35 )

அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு ஆணை பிறப்பித்ததையும், அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களும், இஸ்மாயீல் (அலை) அவர்களும் கட்டுப்பட்ட அந்த தருணத்தையும் விவரித்து விட்டு அல்லாஹ் கூறும் போது

أَنْ يَا إِبْرَاهِيمُ () قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ () إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ

இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது தெளிவான சோதனையாய் இருந்தது”. (அல்குர்ஆன்: 37:105,106) என்று கூறுகின்றான்.

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ ()

பிறகு, நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். அப்போது, அவர் தம் இறைவனின் பக்கம் திரும்பினார்”. ( அல்குர்ஆன்: 38: 34 )

மேலும், யஃகூப் (அலை) அவர்களை அல்லாஹ் யூஸுஃப் (அலை) அவர்களின் மூலமாகவும், மூஸா (அலை) அவர்களை ஃபிரவ்ன் மற்றும் தம் சொந்த சமூகத்தின் மூலமாகவும், லூத் (அலை) அவர்களை காஃபிரான தம் மனைவியின் மூலமாகவும், நூஹ் (அலை) அவர்களை தம் மனைவி மற்றும் மகன் மூலமாகவும் சோதித்தான் என அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.

இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் மனோ நிலையும், ஈமானிய வலிமையும் சோதிக்கப்படுகின்றது என்பது தான் உண்மை.

ஆகவே, முதல் வகையான சோதனைகள் ஏற்படாமல் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மேலும், அச்சோதனைகள் எதன் மூலம் எல்லாம் ஏற்படும் என அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றார்களோ அவைகளில் இருந்து தவிர்ந்து, விலகி வாழ வேண்டும்.

இரண்டாவது வகையான சோதனை அது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகும். அவ்வகையான சோதனைகளின் போது அல்லாஹ்விடம் பொறுமையைத் தருமாறுபிரார்த்திக்க வேண்டும்.

அந்த வகையில் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்குகின்ற நோயும் ஒரு வகையான சோதனையே. இங்கேயும் முஸீபத்துக்கும் பலாவுக்கும் இடையேயான தொடர்பு வேறுபடும்.

ஒரு முஃமினுக்கு ஏற்படுகிற நோய் இறைவனின் அருளாகும். அவனின் பால் நெருங்குவதற்கு ஒரு துணைச் சாதனமும் ஆகும். மறுமையின் அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதற்குண்டான காரணியாகும்.

1. பாவங்கள் மன்னிக்கப்படவே, 2. அந்தஸ்துகள் உயர்த்தப்படவே முஃமின் நோயின் மூலம் சோதிக்கப்படுவார்

அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலமோ, அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிக்கு சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவருடைய பாவத்திற்கு பரிகாரமாக்காமல் இருப்பதில்லைஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நான் நபி {ஸல்} அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதே?” அதற்கு, நபியவர்கள் ஆம்! உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்பட்டுள்ளதுஎன்றார்கள்.

நான் கேட்டேன்: அப்படியென்றால், அதற்குப் பகரமாக இரு மடங்கு கூலி கிடைக்கும் அல்லவா?” அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஆம்! அது அப்படித்தான்! எந்த ஒரு முஸ்லிமானாலும் சரி ஒரு தொல்லை அவருக்கு ஏற்பட்டால், ஒரு முள்ளோ அல்லது அதை விட பருமனான அவரது உடலைக் குத்தினால் கூட அதனை அவருடைய தீமைக்குப் பரிகாரமாக ஆக்காமல் அல்லாஹ் விடுவதில்லை.

மேலும், மரம் தன்னுடைய இலைகளை உதிர்ப்பது போன்று அந்த முஸ்லிமின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டும் களையப்படுகின்றனஎன பதில் கூறினார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில்.. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றதுஎன்று வந்துள்ளது.                                     ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

وعن أبي هريرة وأبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال : " ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه "

முஸ்லிமான ஒருவனுக்கு ஏற்படும் சிரமம் நோய் கவலை துக்கம் நோயின் மன வேதனையிலிருந்து . அவனுடைய காலில் குத்தும் முள் உள்பட இவற்றின் மூலம் அவனுடைய பாவங்களை போக்கி விடுகின்றான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                   ( நூல். மிஷ்காத் )

وعن محمد بن خالد السلمي عن أبيه عن جده قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أ في ماله أو في ولده ثم صبره على ذلك يبلغه المنزلة التي سبقت له من الله " . رواه أحمد وأبو داود

அல்லாஹ்விடம் ஒரு மனிதனுக்கு உயர்ந்த அந்தஸ்து முந்தி விட்டால் (விதி) அதை அவன் தன்னுடைய நல்அமல்கள் கொண்டு அடையவில்லையாயின் அல்லாஹ் அவனுக்கோ அல்லது அவனது பொருளிலோ அல்லது அவனது பிள்ளைகளுக்கோ சோதனையை ஏற்படுத்தி அதை தாங்கும் பொறுமையையும் வழங்கி அவனுக்கு தன்னிடம் முந்தி விட்ட அந்தஸ்தை அடைய செய்கின்றான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                              ( நூல். அபூதாவூத் )


وعن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض " . رواه الترمذي

மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். உலகில் உடலாலும் இன்னும் பல்வேறு வகையிலும் சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இறைவன் உயர்ந்த நற்கூலியை வழங்கும் போது உலகில் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் “நம்முடைய உடலின் தோல் உலகில் கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே நாமும் இந்த அந்தஸ்தை பெற்றிருக்கலாமே” என்று விரும்புவார்கள்.             ( நூல்.  திர்மிதி )

4.   நோய் என்பது சில போது அல்லாஹ்வின் தண்டனையாக இருக்கும்..

عن عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ عِمْرَانُ لَا أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلَاثَةً قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَنْذِرُونَ وَلَا يَفُونَ وَيَظْهَرُ فِيهِمْ السِّمَنُ رواه البخاري 

 “நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அந்த கால கட்டத்தில் அவர்களிடையே உடல் பருமனாயிருக்கும் ( நோய் ) நிலை தோன்றும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                 ( நூல் : புகாரி 2651 )

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி)
அவர்களிடம், ‘இறைத்தூதர் {ஸல்} அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை
நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் {ஸல்} அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு
முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள்
அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும்.

அது ஒருபிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள்
செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால்,
அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்
என்று கூறினார்கள்என்று பதிலளித்தார்கள் என உஸாமா இப்னு ஜைது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                  ( நூல்: புகாரி :3473 )

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் சில போது நோய்கள் என்பது தண்டனையாக அமையும் என்பதை எச்சரிக்கின்றது.

பொதுவாக, நோய்களில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு மாநபி {ஸல்} அவர்கள் நம்மை வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

عن أنس بن مالك رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال
 اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام” ان هذا الحديث جاء بإسناد صحيح،.

“அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் கொடிய மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன்” என நபி {ஸல்} அவர்கள் பிரார்த்தனை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனவே, பின்வருகிற அம்சங்களை நாம் கடைபிடிப்போமேயானால் அல்லாஹ் அவனுடைய தண்டயிலிருந்தும், கோபத்திலிருந்தும் நம்மை பாதுகாப்பான்.

1.   ஸுன்னாவின் படி வாழ்வது, 2. இஸ்திஃக்ஃபார் செய்வது

وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)

நபியே! நீர் அவர்களோடு இருக்கும் போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் மீது வேதனையை இறக்கி விடுவது அல்லாஹ்வின் நியதி அல்ல”.                                 ( அல்குர்ஆன்: 8: 33 )

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا (147)

2.   இறைநம்பிக்கையில் உறுதியாய் இருப்பது, 4. இறைவனுக்கு நன்றி செலுத்துவது

நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து இறைநம்பிக்கையின் வழியில் நடப்பீர்களாயின் உங்களை அல்லாஹ் ஒரு போதும் தண்டிக்க மாட்டான். மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், அவர்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 4: 147 )

5. நற்காரியங்களை செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்

وأخرج الحاكم في المستدرك عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صنائع المعروف تقي مصارع السوء والآفات والهلكات، وأهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة. وصححه الألباني.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நற்கருமங்கள் செய்வது கெட்ட முடிவுகள் ஏற்படுவதை விட்டும், ஆபத்துகள், அழிவுகள் ஏற்படுவதை விட்டும் அவரைக் காப்பாற்றும். உலகில் எவர் நல்லவராக வாழ்கின்றாரோ, அவரே மறுமையிலும் நல்லவராவார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

6. தர்மம் செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்   

فقد قال أبو الليث السمرقندي - رحمه الله -: عليك بالصدقة بما قل وكثر فإن في الصدقة عشر خصال محمودة خمس في الدنيا وخمس في الآخرة
فأما التي في الدنيا فهي:
1) تطهير المال.
2) تطهير البدن من الذنوب.
3) دفع البلاء والأمراض.
4) إدخال السرور على المساكين.
5) بركة المال وسعة الرزق.
وأما التي في الآخرة فهي:
1) تكون ظلاً لصاحبها في شدة الحر.
2) أن فيها خفة الحساب.
3) أنها تثقل الميزان.
4) جواز على السراط.
5) زيادة الدرجات في الجنة.


அபுல்லைஸ் ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:தர்மம் செய்வதால் தர்மம் செய்பவருக்கு உலகில் 5 வகையான நன்மைகளும், மறுமையில் 5 வகையான நன்மைகளும் கிடைக்கின்றன.

உலகில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்: 1. பொருளாதாரம் சுத்தமாகும். 2. பாவங்கள் மன்னிக்கப்படும். 3. சோதனைகளும், நோய்களும் நீங்கும். 4. ஒரு ஏழையின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 5. வாழ்வாதாரத்தில் பரக்கத் ஏற்படும்.

மறுமையில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்: 1. மறுமை நாளில் அவர் செய்த தர்மம் நிழல் தரும். 2. கேள்வி கணக்கு இலேசாகும். 3. மீஸானை கணக்கச் செய்யும். 4. ஸிராத்தை இலகுவாகக் கடக்க முடியும். 5. சுவனத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

7. துஆ செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்

قال بعض العلماء:"عجبت لأربعة كيف يغفلون عن أربع: عجبت لمن أصابه ضر كيف يغفل عن قوله تعالى {وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ } و الله تعالى يقول
 {فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِن ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ }
،وعجبت لمن أصابه حزن وغم كيف يغفل عن قوله تعالى
 {وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِباً فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ }
 والله تعالى يقول
 {فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ } وعجبت لمن يمكر به الناس
 كيف يغفل عن قوله تعالى
 { وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ } والله تعالى يقول
 فوقاه الله سيئات ما مكروا،
       
وعجبت لمن كان خائفاً كيف يغفل عن قوله تعالى حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ 
 والله تعالى يقول: {فَانقَلَبُواْ بِنِعْمَةٍ مِّنَ اللّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ

அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்: நான்கு வகையான மனிதர்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஏனெனில், அவர்கள் நான்கு வகையான சோதனைகளில் சிக்குண்டு கிடக்கின்றனர். ஆனால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமால் இருக்கின்றனர்.

அதற்கான தீர்வாக சோதனைகளில் சிக்குண்டவர்கள், அவர்களின் பிரார்த்தனைகளின் மூலம் அவர்கள் யார் என்பதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

1.   மிகுந்த சிரமத்திலும் நோயிலும் சிக்குண்டவர்கள். அல்லாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரமத்தின், நோயின் போது செய்த பிரார்த்தனையை நினைவு படுத்தி அதை தான் ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விடுவித்ததை விவரிக்கின்றான்.

2.   கவலையிலும், ஏதோ ஒரு சிக்கலில் மூழ்கிய நிலையிலும் உள்ளவர்கள். அல்லாஹ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடுமையான கவலையிலும், கடலில், மீனின் வயிற்றில் சிக்கி அல்லாஹ்விடம் முறையிட்டு மன்றாடிக் கேட்ட பிரார்த்தனையை பதிவு செய்த பின் அதை தான் கபூல் செய்து அதிலிருந்து விடுவித்ததை அழகுபட கூறுகின்றான்.

3.   எதிரிகளின் .சூழ்ச்சிவலையால் பின்னப்பட்டவர்கள். அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சியில் சிக்கி தன் பிரச்சினையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவர்கள் செய்த பிரார்த்தனையை கூறிய பின் அந்த துஆவிற்கு பதில் தந்து மூஸா அலை அவர்களை பாதுகாத்த விதம் குறித்து அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான்.

4.   நிராயுதபாணிகளாக இருப்பவர்கள். உஹதில் தோல்வியைத் தழுவி 70 உயிர்களை இழந்து உடல் முழுவதும் ரணத்தோடும், மனம் முழுவதும் கனத்தோடும் வாடி வதங்கி வந்தவர்கள் இரண்டாம் முறையாக தாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்று உணர்ந்த போது, அல்லாஹ்விடம் சரணடைந்து அவர்கள் வெளிப்படுத்திய பிரார்த்தனையை அல்லாஹ் கபூல் செய்த விதம் குறித்து அல்லாஹ் விவரிக்கின்றான்.

என்ன பயன்? இந்த நான்கு வகை மனிதர்கள் சிந்திக்க வேண்டும். எப்படியான சூழ்நிலைகளிலும் நாம் செய்கிற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் பதில் தருவான் என்பதை நாம் உணர வேண்டும்.

8. ஆரோக்கியமான நிலையில் அல்லாஹ்வை நினைப்பது சோதனைகளில் இருந்து காக்கும்

فقد أخرج الترمذي وغيره من حديث ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال له
( احفظ الله يحفظك احفظ الله تجده اتجاهك) و في رواية
( احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:அல்லாஹ்வை நீர் பேணிக்கொள்ளும்! அவ்வாறெனில் அல்லாஹ் உமக்கு சிறந்த பாதுகாப்பை நல்குவான். அல்லாஹ்வை நீர் பயந்து நடந்தால் அவனது உதவிகளை நீர் சமீபமாகப் பெற முடியும். நீர் செழிப்பாக, ஆரோக்கியமாக வாழும் காலங்களில் அல்லாஹ்வுக்கு உம் தாராள மனதைக் காட்டிவிடும். அப்படியென்றால், உமக்கு ஏற்படும் இக்கட்டான சோதனைகளின் போது அவன் உமக்கு தன்னுடைய தாராள மனதைக் காட்டுவான்என நபி {ஸல்} அவர்கள் நான் சிறுவராக இருக்கும் போது என்னிடம் கூறினார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடிய வைரஸான கொரோனாவிலிருந்தும், இன்னும் கொடிய பல நோய்களிலிருந்தும் மருத்துவமனை வாழ்க்கை அதன் சிரமம், கஷ்டம், செலவினங்கள் அனைத்திலிருந்தும் உங்களையும், என்னையும், உங்கள் குடும்பத்தாரையும், சந்ததிகளையும், என் குடும்பத்தார்கள், சந்ததிகளையும், முழு மனித, இஸ்லாமிய  சமூகத்தையும் காத்தருள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!