Wednesday 18 March 2020

கூட்டமைப்பின் முடிவும்… எல்லை தாண்டிய விமர்சனமும்…


கூட்டமைப்பின் முடிவும்…
எல்லை தாண்டிய விமர்சனமும்…



தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நிலவி வருகின்றது. வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து அடை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றது.

அதன் படி தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு 120 பேரை தொற்றியுள்ளது. இது இன்னும் அதிகரித்து விடக்கூடாது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளை நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில்மக்கள் திரளாக ஒன்று கூட வேண்டாம் என்பதும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தமிழக அரசும் 17/03/2020 முதல் 31/03/2020 வரை தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டாய விடுமுறை அறிவித்தும், மக்கள் அதிகம் கூடுகிற பூங்காக்கள், தியேட்டர்கள், நிறுவனங்கள், மால்கள் இவையனைத்தும் 31/03/2020 வரை மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனாவை விட கொடிய வைரஸான குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கெதிராக ஷஹீன்பாக்குகள்தொடர் இருப்பு போராட்டகளங்கள் அமைத்து முஸ்லிம் சமூகம் போராடி வருகின்றது.

மக்கள் திரளாக ஒன்று கூட வேண்டாம்என்கிற அரசின் உத்தரவை மதித்து நடைபெற்று வருகிற ஷஹீன்பாக்குகளைதொடர் இருப்பு போராட்ட களங்களை கொரோனா வைரஸ் குறித்தான நிலைமை சீராகும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் சார்பாக கூட்டமைப்பின் தலைவர் மௌலானா, மௌலவி பி.. காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.

சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப் போன்றவைகளின் மூலமாக விமர்சனங்கள் என்ற பெயரில் ஜமாஅத்துல் உலமாவையும், இயக்கங்களின் கூட்டமைப்பையும், கூட்டமைப்பின் தலைவர் அவர்களையும் சொல்லெனா கடும் வார்த்தைகளால் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

கோவை, புதுக்கோட்டை, நெல்லை ஏர்வாடி, முத்துப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை மேலப்பாளையம், வண்ணாரப்பேட்டை ஆகிய ஷாஹின்பாக்குகள் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 
இயக்கங்களின் கூடமைப்பின் முடிவு தவறானது. ஷாஹீன்பாக் போராட்ட களங்களின் மக்களிடத்தில் கருத்து கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை மதிக்கமாட்டோம் என்று ஷாஹீன்பாக் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் அறிவித்துள்ளனர்.

ஷூராவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தவறானதா? அல்லது ஷூராவே தவறானதா? தன்னெழுச்சியாக போராடும் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்க வேண்டுமா? ஷாஹீன்பாக் ஒருங்கிணைப்புக்குழு என்ற தற்போதைய புது வரவான இவர்களிடம் கருத்து கேட்க வேண்டுமா?

இஸ்லாமிய வார்ப்பில், அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில், ஆய்வு நோக்கில் ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம்!!

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

“(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே, இவர்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும், இவர்களுக்காக மன்னிப்புக் கோருவீராக! மேலும், தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! ஏதாவதொரு விஷயத்தில் நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அப்போது அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்”.

                                                      ( அல்குர்ஆன்: 3: 159 )

وَالَّذِينَ اسْتَجَابُوا
 لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ 

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

ஆலோசனை செய்வதன் முக்கியத்துவம்..

ما خاب من استخار ولا ندم من استشار، ولا عال من اقتصد
 رواه الطبراني

இஸ்திகாரா செய்தவர் நஷ்டப்படமாட்டார். ஆலோசனை செய்தவர் வருத்தப்படமாட்டார். பொருளை நடுநிலையாக செலவு செய்தவர் ஏழையாக மாட்டார்” என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                    ( நூல்: தப்ரானீ )

ومع أن هذه الآيات مكية، نزلت قبل قيام الدولة المسلمة في المدينة، فإننا نجد فيها أن من صفة هذه الجماعة المسلمة: «وَأَمْرُهُمْ شُورى بَيْنَهُمْ» ..
مما يوحي بأن وضع الشورى أعمق في حياة المسلمين من مجرد أن تكون نظاما سياسيا للدولة، فهو طابع أساسي للجماعة كلها، يقوم عليه أمرها كجماعة، ثم يتسرب من الجماعة إلى الدولة، بوصفها إفرازا طبيعيا للجماعة.

''அஷ்ஷூரா'' (கலந்தாலோசிப்பது-42) என்ற பெயரிலான தனியான ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில் உள்ளது. அந்த அத்தியாயத்திலுள்ள, ''அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்.” (42:38)  என்ற வசனம் மக்காவில் தான் இறக்கப்பட்டது என்று கூறும் ஷஹீத் சையித் குதுப் (ரஹ்) அவர்கள், ஷூரா என்பது அரசியல் விவகாரங்களுடன் மட்டும் குறுகிப்போய் விடுவதல்ல. மாறாக, முஸ்லிம் சமூகத்தின் வாழ்வின் சகல பகுதிகளுக்கும் விரிந்தது என்பதை இது காட்டுகிறது என்றார்.

மேற்படி ''அஷ்ஷூரா'' எனும்அத்தியாத்தில் இறைநம்பிக்கையாளர்களின் எட்டுப் பண்புகள் பற்றி புகழ்ந்து கூறும் அல்லாஹ் (42:36- 38)  (1) ஈமான், (2) தவக்குல், (3) பெரும் பாவங்களைத் தவிர்த்தல், (4) கோபம் வந்தால் மன்னிப்பது, (5) தமது இரட்சகனின் கட்டளைகளுக்கு அடிபணிவது, (6) தொழுகையை நிலை நிறுத்துவது, (7) தமது காரியங்களை ஆலோசனையின் பேரில் அமைத்துக்கொள்வது, (8) அல்லாஹ் வழங்கிய சொத்து செல்வங்களிலிருந்து செலவு செய்வது ஆகிய பண்புகள் அவர்களிடம் இருப்பதாகக் கூறுகிறான்.

இங்கு ஆறாவது பண்பாக தொழுகையை நிலைநிறுத்துவதையும் எட்டாவது பண்பாக ஸகாத் கொடுப்பதையும் கூறும் அல்லாஹ் தொழுகைக்கும் ஸகாத்துக்கும் இடைப்பட்ட பண்பாகஅவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசிப்பது அவர்களது பண்பாகும்என்று ஏழாவது பண்பாக ஷூராவைக் குறிப்பிடுகிறான் எனவே, இதிலிருந்து ஷூராவின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

மாநபி {ஸல்} அவர்களின் வாழ்வில் மஷ்வரா...

يقول أبو هريرة _رضي الله عنه_: "ما رأيت أكثر مشورة لأصحابه من رسول الله _صلى الله عليه وسلم_ لأصحابه
நபி {ஸல்} அவர்கள் தம் தோழர்களிடம் “மஷ்வரா – ஆலோசனை செய்தது போல வேறு யாரும் தம் தோழர்களிடம் மஷ்வரா செய்ய நான் கண்டதில்லை” என ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

நபிகளார் {ஸல்} அவர்களது வாழ்வில் மஷ்வரா பத்ர் யுத்தம் இடம்பெற முன்னர் நபி {ஸல்} அவர்கள் முதலில் முஹாஜிர்களிடம் ஆலோசனை பெற்றார்கள்.
அதன் பின்னர் தனது படையில் பெரும்பான்மையினராக இருந்த அன்ஸார்களிடம் வந்த அவர்கள், ''மக்களே எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்றார்கள்.

அன்ஸார்களின் சார்பில் பேசிய சஅத் இப்னு  முஆத் (ரலி) அவர்கள் தமது தரப்பின் பூரண ஒத்துழைப்புக் கிட்டும் என்பதைத் தெரிவித்தார்கள். பத்ர் படை எந்த இடத்தில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்ற விஷயத்திலும் நபி {ஸல்} தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றார்கள்.

முதலில் நபி {ஸல்} அவர்கள் ஓர் இடத்தைத் தேர்வு செய்த வேளையில் அதனை கவனித்த யுத்த தந்திரங்கள் தொடர்பான நிபுணரான ஹப்ஹாப் இப்னுல் முன்திர் (ரலி) அவர்கள், நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து முந்தவோ பிந்தவோ நம்மால் முடியாத அளவுக்கு அது அல்லாஹ் உங்களுக்குத் தங்கும் படி கட்டளையிட்ட இடமா அல்லது மனிதர்களது பகுத்தறிவுக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுள்ளதா? எனக்கேட்டார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ''பகுத்தறிவுப் பிரயோகத்துக்கும் யுத்த தந்திரங்களுக்கும் அதில் இடமுண்டு'' என்றார்கள். அது கேட்ட ஹப்ஹாப் (ரலி) அவர்கள் அப்படியானால் இது பொருத்தமான இடமல்ல. மக்களை அழைத்துக் கொண்டு வாருங்கள். குறைஷிப்படை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் நாம் தங்குவோம். அங்கு ஓர் நீர் தடாகம் அமைப்போம்என்று கூறினார். அந்த ஆலோசனையை அப்படியே அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள் ''நீர் (தான் சரியான) அபிப்பிராயத்தை வெளியிட்டீர்'' என்று கூறியதுடன் அதன்படியே நடந்தார்கள்.

பத்ர் கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பது சம்பந்தமாகவும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களது ஆலோசனைகளைப் பெற்றார்கள்.

உஹத் யுத்தத்தில் ஈடுபடும் முன்னர் நபி {ஸல்} அவர்கள் தோழர்களை அணுகி ஆலோசனை கேட்டார்கள்.நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு ஆலோசனை கூறுங்கள்''  என்றார்கள். யுத்தத்தில் சம்பந்தப்படத் தேவையில்லை என அன்ஸார்கள் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால், மற்றும் பலரது கருத்து வேறு விதமாக அமைந்தது. இறுதியில் யுத்தம் செய்வது என நபி(ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள்.

ஆனால், உஹதில் முஸ்லிம்களுக்குத் தோல்வி ஏற்பட்டாலும் உஹதின் பின்னர்  இறக்கப்பட்ட குர்ஆனிய வசனத்தில்அவர்களை நீர் மன்னிப்பீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக!” விஷயங்களில் அவர்களிடம் ஆலோசனை பெறுவீராக!” (3:159) என்று அல்லாஹ் கூறினான். 

உஹதுக்கு முன்னர் தோழர்களிடம் ஆலோசனை கேட்ட நபிகளாருக்கு தொடர்ந்தும் அவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி இவ்வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகைக்குஅழைப்பது எவ்வாறு என்ற பிரச்சினை வந்த போது பல தோழர்களதுஆலோசனைகளும் பெறப்பட்டபின்பே தற்போதைய பாங்கு முறையை நபிகளார் {ஸல்} அறிமுகம் செய்தார்கள். தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது எதிரிகள் அபாண்டம் சுமத்தியவேளை அன்னார் தனது தோழர்களது ஆலோசனைகளைப் பெற்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் தனது தோழர்களுக்குச் சில கட்டளைகளை இட்டபோது அவர்கள் அவற்றை அமுலாக்கத் தயங்கிய சந்தர்ப்பத்தில் அன்னார் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தனது மனைவி உம்மு ஸலமா (ரலி) விடம் நபி {ஸல்} அவர்கள் ஆலோசனை கேட்டது மாத்திரமின்றி அதன்படியே முடிவெடுத்தார்கள்.

1.   முஸ்லிம் சமூகத்தின் பொது விவகாரங்களில் ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டுமா?

தாதுஸ் ஸலாஸில் எனும் போருக்கு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையில் 300 பேர் கொண்ட ஒரு படையை நபி  {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அவருக்கு உதவியாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களின் தலைமையில் ஓர் துணைப் படையையும் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.

அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களின் தலைமையின் கீழ் அபூபக்ர் {ரலி}, உமர் {ரலி} போன்ற பெரும் ஸஹாபிகளெல்லாம் படை வீரராக கலந்து கொண்டார்கள். அவர்கள் கடும் குளிர் காலத்தில் பயணமேற்கொண்டனர்.

ஸலாஸில் என்பது மதீனாவில் இருந்து 10 நாட்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓர் மணற்பாங்கான பகுதியாகும். போருக்குச் செல்கிற வழியில் இந்த உம்மத்திற்கு பெரும் பாடங்களை கற்றுத் தந்த மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.

பெரும்பாலும் படைத் தளபதிகளே மக்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பார்கள். அது தான் அண்ணலாரின் வழக்கமாகவும் இருந்தது. ஒரு நாள் இரவு அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கு குளிப்புக் கடமையாகி விடுகின்றது. தயம்மும் செய்து சுபுஹ் தொழுகையை தொழ வைத்தார்கள்.

இதை அறிந்து கொண்ட உமர் {ரலி} அவர்கள் உட்பட, படை வீரர்கள் அனைவரும் ஆட்சேபித்தனர். ஆனாலும், தளபதியின் முடிவுக்கு கட்டுப் பட வேண்டுமென்ற மாநபியின் கட்டளை அவர்களைத் தடுத்து விட்டது.

அடுத்து ஸலாஸிலை சமீபித்திருந்த ஒரு பகுதியில் இரவு தங்க நேரிட்டது. குளிரின் தாக்கம் அதிகமாகி விடவே, வீரர்கள் நெருப்பு மூட்டினர்.சிறிது நேரத்தில் அங்கு வந்த தளபதியார் தீயை அணைத்து விடுங்கள்; இனி யாரும் நெருப்பு மூட்ட வேண்டாம். இது தளபதியின்  உத்தரவாகும்என்று அனைவரிடத்திலும் கூறினார்கள்.                        
மீண்டும் படை வீரர்களுக்கு மத்தியில் சலசலப்பு  முணுமுணுப்பு. இறுதியாக, போர் நடந்தது. முஸ்லிம்கள் மாபெரும் வெற்றி வாகை சூடினர். எதிரிகள் தலை தெறிக்க புறமுதுகு காட்டி ஓடினர்.

இப்போது தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களிடம் இருந்து ஓர் கட்டளை எதிரிகளை யாரும் துரத்திச் சென்று தாக்கிட வேண்டாம்; அப்படியே திரும்பி விடுங்கள்.யாரும் இப்படியொரு உத்தரவை அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் போடுவார்கள்என சற்றும் எதிர் பார்க்கவில்லை. எதிரிகளை பதம் பார்த்திட அருமையானதொரு சந்தர்ப்பம்.

இனிமேல், இதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இம்முறை எதிர்ப்பு கடுமையாகவே தளபதியிடம் வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் நாம் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்குவோம்இல்லை, இப்போதே படை வாபஸ் பெறப்படுகிறது. உடனடியாக, நாம் மதீனா திரும்பிச் செல்கின்றோம்என்றார் தளபதி. பல்வேறு சிக்கலுக்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை.                                             
உடனடியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் உமர் {ரலி} அவர்கள் மற்றும் இன்னும் சில வீரர்கள் சேர்ந்து தளபதியின் நடத்தை குறித்து முறையிட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், உமர் கூறிவிட்டார். அபூபக்ர் கூறிவிட்டார். இன்னும் கண்ணியத்திற்குரிய பெரும் ஸஹாபாக்களெல்லாம் கூறிவிட்டனர். உடனே  அம்ர் {ரலி}  அவர்களை அழைத்து அதற்காக தண்டிக்கவில்லை.

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். அம்ர் {ரலி} அவர்கள் வந்ததும்அம்ரே! மக்கள் உம் மீது இன்னின்னவாறான ஆட்சேபனைகளை என்னிடம் முறையிட்டுள்ளனர். உம்முடைய பதில் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கடுமையான குளிரில் குளித்தால் மரணித்து விடுவேனோ என நான் அஞ்சினேன்.

அப்போது எனக்கு உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அளப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன்:4:29) எனும் இறை வசனம் நினைவுக்கு வந்தது.                                   
எனவே நான் தயம்மும் செய்து தொழவைத்தேன். அது தவறா இறைத்தூதரே!?” என்று கேட்டார். அது கேட்ட அண்ணலார் புன்முறுவல் பூத்தவராக இல்லை, தப்பொன்றும் இல்லைஎன்று கூறிவிட்டு, ”ஏன் நெருப்பை மூட்ட வேண்டாம் என்று கூறினீர்கள்என்று கேட்டார்கள். அதற்கு அம்ர் {ரலி} அவர்கள் எதிரிகளின் இடத்தை நாங்கள் நெருங்கிய பின்பு தான் நான் அவ்வாறு கூறினேன். காரணம் நம் நடமாட்டத்தை அறிந்து எதிரிகள் நம்மைத் தாக்கி விடுவார்களோ என நான் அஞ்சினேன். அதன் பின்னர் தான் அப்படி நான் கட்டளை பிறப்பித்தேன்என விளக்கம் தந்தார்கள். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் புன்னகை பூத்தார்கள்.

பின்னர், ”ஏன் விரட்டிச் சென்று தாக்கிட வேண்டாம் என்று உத்தரவிட்டீர்கள்என மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்குஎதிரிகளின் எண்ணிக்கை நம் எண்ணிக்கையை விட அதிகம். அவர்கள் களத்தை விட்டும் வெளியேறி பரந்த வெளியில் ஓடிக்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து சென்று தாக்கினால் அவர்கள் சுற்றி வளைத்து நம்மை தாக்கி, வெற்றி பெற்றுவிடுவார்களோ என நான் அஞ்சிய போது அந்த முடிவை எடுத்தேன்என்று அம்ர் {ரலி} அவர்கள் கூறினார்கள். இப்போதும் நபி {ஸல்}  சிரித்தார்கள்.                                
பின்பு, “என்ன தான் இருந்தாலும் களத்தில் நிற்கிற போது படைவீரர்களிடம் நீங்கள் ஆலோசித்து முடிவெடுத்து இருக்க வேண்டும். என அறிவுரை கூறி அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்களை அனுப்பி வைத்தார்கள். ( நூல்:தாரீகுல் இஸ்லாம் லி இப்னி அஸாக்கிர், பக்கம்: 59 முதல் 67 வரை. )

2.   முஸ்லிம் சமூகத்தின் பொது விவகாரங்களில் தலைவர்கள் ஒன்று கூடி  ஆலோசனை செய்து முடிவெடுப்பது தவறா?

ரோமப் பேரரசர் சீஸர் முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.

ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.

அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.

ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி), முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), யஸீத் இப்னு அபீ சுஃப்யான் (ரலி), அம்ர் இப்னு ஆஸ் (ரலி) ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.

எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.

நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ஸைஃபுல்லாஹ்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் (ரலி) அவர்கள்.

தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.

நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.

நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.என்று கூறினார்.

அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!

 இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.

என்னருமைத்தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!

இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள்.

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294,295,296.)

பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.

அவசியமான நேரத்தில் முன் மாதிரி ஆளுமை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கையாண்ட ஷூரா  4 லட்சம் போர் வீரர்களைக் கொண்ட வல்லரசு ரோம் ஆட்டம் காண காரணமாய் அமைந்தது.  

ஆம்! வெறும் 46 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறுபடை பென்னம் பெரும் படையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக வரலாற்றில் தனக்கான வலுவான இடத்தையும், முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என அன்றைய உலகிற்கு உணர்த்தியது.

முதல் நிகழ்வு எல்லோரிடமும் ஆலோசனை கேட்பதை அனுமதிக்கும் அதே நேரத்தில் ஆலோசனை கேட்காமல் செய்ததற்காக அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் கண்டிப்பதாக அமையாது.

குலஃபாவுர்ராஷிதீன்களான நான்கு கலீஃபாக்களும் தங்களின் ஆட்சிக் காலத்தில் இந்த உம்மத்திற்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்ட போது முக்கியமான நபித்தோழர்களையும், முக்கியமான கோத்திரங்களின் தலைவர்களையும் அழைத்தே ஆலோசனை கேட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நாம் பிரபல்யமாக அறிந்து வைத்திருக்கிற  பெரிய நபித்தோழர்கள் பலரும் அந்த ஷூரா அமைப்பில் இடம் பெறவே இல்லை.

எனவே, இந்த உம்மத்தின் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு, பிரச்சனையின் வீரியத்தை கவனத்தில் கொண்டு மஷ்வரா செய்வது, அதுவும் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளிடம் மாத்திரமே மஷ்வரா செய்வது மாநபி {ஸல்} அவர்கள் காட்டித்தந்த அழகிய நடைமுறையும் ஆகும்.

ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்என்று கூறுங்கள்என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

பின்பு, எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் எங்களின் குடும்பம் தான் வேண்டும்என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

( நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)

கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் மக்கள் இசைந்து கைதிகளை விடுவிக்க முன் வந்த போது இது தான் தருணம் உடனடியாக செயல் படுத்தி விடுவோம் என்று கருதாமல் நீங்கள் திரும்பிச் சென்று உங்களின் கருத்துக்களை உங்களின் தலைவர்களிடம் தெரிவியுங்கள் என்று கூறியது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

ஆலோசனை செய்து எடுக்கப்படும் முடிவுகளுக்குப் பின்னால் அழகான, ஆழமான காரணங்களே இடம் பெற்றிருக்கும்.

இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பின் முடிவுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றது.

1.   பிறர் நலம் நாடியதே பிரதான காரணம்...

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவர் தான் முஸ்லிம். எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர் தான் உண்மையான முஃமின்  என்று இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் ( நூல்: திர்மிதீ )

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

நான் நபி {ஸல்} அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.

عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ

தமீமுத் தாரீ (ரலி) அவர்கல் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம்.நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்.                      ( நூல்: முஸ்லிம் )

மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் பிறர் நலம் நாடுதலை  ஈமானோடும், தீனோடும் தொடர்பு படுத்தி மாநபி {ஸல்} கூறியதிலிருந்து  இஸ்லாமிய மார்க்கம் பிறர் நலம் நாடுவதை எவ்வளவு அக்கறையோடு அணுகச் சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடையாளம். இறை நம்பிக்கையின் அடிப்படை. இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே, சமூகமாக நாம் எப்போதும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கத்தால் வழிகாட்டப்பட்டு இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும்.
அதே போன்று நலம் நாடுதல் என்பது, தீய காரியங்களைச் செய்யாமல் இருப்பதையும் அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பதையும் குறிக்கும். அந்த வகையில் “தமிழக மக்கள் அனைவரின் நலம் நாடியே” இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2.   சமூகத்தின் மீது பழிச்சொல் வந்து விடக்கூடாது என்று அஞ்சியதும் ஒரு காரணம்..

ஏற்கனவே, ஃபாசிஸ பயங்கரவாதிகள் மற்றும் ஊடகவாதிகளால் நாம் இந்த தேசத்தில் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், வந்தேறிகள், பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று பல்வேறு பழிச்சுமைகளைச் சுமந்து அதைக் களைவதற்காக இன்று வரை எவ்வளவு தூரம் முயற்சித்து வருகின்றோம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக போராட்டத்தில் கலந்து கொண்டதன் விளைவாகத்தான் பரவியது, தமிழகத்தில் வேகமாக பரவ இவர்கள் தான் காரணம் (தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை) என்று பழி சுமத்தி விடக்கூடாது என்ற அச்சமும் ஒரு காரணம் என்பதை உணர வேண்டும்.

இன்று பரவலாக அரபு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. நம் சமூகத்தைச் சார்ந்த பலர் அங்கே பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த காலகட்டத்தில் அங்கிருந்து தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதிக்கு ஒரு ஊருக்கு ஒருவர் வருகின்றார். அவர் ஷாஹீன் பாக்கில் கலந்து கொள்கிறார். அவருக்கு கொரோனா தொற்று இருந்து அவரின் மூலமாக கொரோனா தொற்று பரவுகிறது என்று வைத்துக் கொள்வோம். ( நவூதுபில்லாஹ்..) இதற்கு யார் பதில் சொல்வது, பொருப்பேற்பது.

சமீபத்தில் உம்ராச் சென்றிருந்த நூற்றுக்கணக்காணோர் சவூதி விதித்த 72 மணி நேர கெடுவில் ஊர் வந்திருக்கின்றார்கள். எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்றாலும் நாளை இது போன்றதொரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால் என்ன செய்ய முடியும்?
ورد في إحياء علوم الدين حديث
اتقوا مواضع التهم

பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மக்களின் பழிச்சொல்லுக்கு நீங்கள் பயப்படுங்கள்”                                       ( நூல்: இஹ்யா உலூமித்தீன் )

وَقَالَ الْحَافِظُ أَبُو بَكْرٍ الْبَيْهَقِيُّ: أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الحُميدي، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا  عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاة فكَسَعَ رجلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ، فَقَالَ الْأَنْصَارِيُّ: يَالَلْأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَا بَالُ دَعْوَى الْجَاهِلِيَّةِ؟ دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيِّ بْنِ سَلُولَ -وَقَدْ فعلوها-: والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل. قال جَابِرٌ: وَكَانَ الْأَنْصَارُ بِالْمَدِينَةِ أَكْثَرَ مِنَ الْمُهَاجِرِينَ حِينَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ كَثُرَ الْمُهَاجِرُونَ بَعْدَ ذَلِكَ، فَقَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "دَعْهُ؛ لَا يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ"

மேலும் அவர்கள் நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர் என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது,அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாள ருக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்).

4907. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, 'அன்சாரிகளே! (உதவுங்கள்)' என்று கூறினார். முஹாஜிர், 'முஹாஜிர்களே! (உதவுங்கள்)' என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி 'அன்சாரிகளே, (உதவுங்கள்)' என்று கூற, முஹாஜிரும், 'முஹாஜிர்களே, (உதவுங்கள்)' என்று கூறினார்' என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்துவிட்டார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை 'இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்' என்று கூறினான்.

அப்போது (செய்தி அறிந்த) உமர் இப்னு கத்தாப்(ரலி), 'என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறறேன், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடுங்கள். 'முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்' என்று மக்கள் பேசி விடக்கூடாது' என்று கூறினார்கள்.                                 ( நூல்: புகாரி, தஃப்ஸீர் இப்னு கஸீர் )

மார்க்கத்திற்கும், மாநபிக்கும், இந்த உம்மத்திற்கும் எல்லையில்லா துரோகம் இழைத்திருந்தும் கூட, கொல்லப்படுவதற்கு தகுதியானவனாக இருந்தும் கூட, நயவஞ்சகன் என்று தெளிவாக தெரிந்திருந்தும் கூட மாநபி {ஸல்} அவர்கள் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று எண்ணினார்கள். ஆகவே, தடுத்தார்கள். இன்னொரு அறிவிப்பில் அவரது மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இது போன்று கொல்வதற்கு அனுமதி கேட்கும் போது கூட அவரிடமும் மாநபி {ஸல்} அவர்கள் இதே பதிலை தந்தார்கள்.

எனவே, கூட்டமைப்பின் முடிவு என்பது மார்க்க அடிப்படையிலேயே ஆலோசனையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வோம்.

அதைத் தான் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் த.மா.ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மரியாதைக்குரிய பி.ஏ.கே காஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்கள் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியாக தந்தார்கள். வேண்டுகோளும் விடுத்தார்கள்.

எல்லை கடந்து விமர்சிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உம்மத்தை ஒரே தலைமையின் கீழ் ஒண்றிணைப்பானாக! ஒருமித்த கருத்துடையவர்களாக ஆக்குவானாக!

இறுதியாக..

எது எப்படியோ ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே பிரிவினைக்கு அச்சாரம் போடுகின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உம்மத்தை எல்லா சூழ்ச்சிகளில் இருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!