Thursday 5 September 2013

இஸ்லாத்தின் நிழலில். பேரு பெற்ற மனித சமூகம்.

இஸ்லாத்தின் நிழலில்.
பேரு பெற்ற மனித சமூகம்.
நாம் காணும் சமூகத்தில் ஓர் அங்கம் மனிதன்.தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தும் தன் சொல், செயல் ஆகியவைகள் உள்ளபடியே மிகச்சரியாக அமைந்திருக்கின்றனவா?என ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளான்.
சரியாக அமைந்திருக்கும் பட்சத்தில் அதே அமைப்பில் அவன் தன் வாழ்க்கைப்பயணத்தை அமைத்துக் கொள்வது அவசியம்.தவறாக அமைத்திருக்கும் பட்சத்தில் அதை சரி செய்து திருத்திக் கொண்டு வாழ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவன் அல்லது அவள் சமூகத்தில் பல்வேறு தளங்களில் பல்வேறு பொறுப்புகளுடன் வலம்வர வேண்டி இருக்கின்றது.
குழந்தையாக, மாணவனாக, இளைஞனாக, கணவனாக, குடும்பத்தலைவனாக, அரசியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக, தொண்டனாக, தலைவனாக, ஒரு நிறுவனத்தின் அதிகாரியாக, ஊழியனாக
இப்படி மனித சமூகம் தொடர்புடைய அனைத்து துறைகளிலும்ஏதேனும் ஒரு பெயரில் இந்த உலகில் வாழ வேண்டிய நிலையில் இருக்கின்றான்.
தனக்கு கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும்.அப்படி வாழ்கிற போது மட்டுமே சமூகத்தில் மனித நேயம் தழைக்கும்.
உரிமைகள் பேணப்படாத, வீணடிக்கிற ஓர் சமூகத்தில் சீர்குலைவும், ஒழுக்கக்கேடும், பிரச்சனையும், அச்சம் நிறைந்த சூழ்நிலையும் நிலவும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான பிரகடனம் .நா.வால் 1948ல் வெளியிடப்பட்டது.அதில் 30 பிரிவுகளில் 30 உரிமைகள் உள்ளதாகவும் வரையறுக்கப்பட்டது.இதை அனைத்து நாட்டிலும் அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப பின்பற்றப்பட வேண்டும் என . நா.தெரிவித்து 1966 டிசம்பர் 16ம் தேதி சர்வதேச அலவில் சட்டமாக அங்கீகரித்தது. மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் (1993)ல் தான் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நூல்: சமூக மதிப்பீட்டுக்கல்வி கல்வி, பக்கம் 21
ஆனால், இஸ்லாமிய மார்க்கம் மனிதன் படைக்கப்பட்ட போதிருந்தே, இப்பூமியில் நடமாடத்தொடங்கிய போதே அவனுக்கான உரிமைகள், கடமைகளை பாதுகாக்க வழிகாட்டியுள்ளது.தன்னைப்போன்றே தன் சக மனிதனையும் பார்க்க வேண்டும், நடத்த வேண்டும் என கட்டளையிடுகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரைஒரு மனிதனுக்கான கடமைகளை, உரிமைகளை மூன்றாக பிரித்துள்ளது.
1.      படைத்த இறைவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள்.
2.      மனிதன் சக மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
3.      மனிதன் தனக்குத் தானே செய்ய வேண்டிய கடமைகள்.
படைத்த இறைவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தமட்டில் ஓர் மனிதன் தவறிழைக்கும் பட்சத்தில், இணைவைத்தல் நீங்கலாக அவனுக்கு இறைவன் நாடினால் தான் அருட்பார்வை கிடைக்கும். தனது விசாலமான மன்னிப்பையும் வழங்கி தண்டனையிலிருந்து பாதுகாப்பும் வழங்கும். அல்லாஹ் கூறுகிறான்:-
திண்ணமாக!அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிப்பதில்லை இதைத்தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். எனவே யார் அல்லாஹ்விற்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்
(அல்குர் ஆன்: 4:116)
மனிதன் சக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தமட்டில் சம்மந்தப்பட்ட, பாதிப்ப்புக்குள்ளான சக மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை.அதற்கு தண்டனையோ அல்லது அதற்கான நஷ்ட ஈடோ தரப்பட்டு, மன்னிப்பும் பெறப்பட்டாலொழிய அல்லாஹ் தன் மன்னிப்பை வழங்க மாட்டான்.பாதிக்கப்பட்டவனின் பாதிப்பிற்கு தக்க அவன் அல்லாஹ்வால் ஈருலகிலும் தண்டிக்கப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            “பாதிப்புக்குள்ளானவனின் முறையீட்டிலிருந்துஉங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
நூல்: மிஷ்காத்
மனிதன் தனக்குத் தானே செய்ய வேண்டிய கடமைகளை பொறுத்தவரையில் சில செயல்களில் தண்டனைகளும், சில செயல்களில் மன்னிப்பும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எல்லை மீறிச் செயல்படுகிறபோது முழுப் பாதிப்பும் அவனுக்கே!

அல்லாஹ் கூறுகின்றான்:
            “உங்களுடைய கரங்களால் உங்களுக்கு நீங்களை அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்.இஹ்ஸான் எனும் வழிமுறையைக் கடைபிடியுங்கள். நிச்சயமாக! அல்லாஹ் முஹ்சின்களை நேசிக்கின்றான்
அல்குர் ஆன்: 2:195
எனவே, உலகில் அமைதி நிலவ வேண்டுமேயானால், மனித உரிமைகள் பின்பற்றப்படவேண்டும்.தான் எப்படி பிறர் நம்மிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறோமோ அது போன்று பிறரிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
சக மனிதனின் உரிமைகள்:
            அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்எந்தச் செயல் சிறந்தது ?தரமானது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்):
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும், இறைவழியில் அறப்போர் புரிவதும்என்றார்கள்
            நான் கேட்டேன்: எத்தகைய அடிமைகளை விடுவிப்பது சிறந்தது?
            நபி (ஸல்): ‘விலை கூடுதலான, தம் உரிமையாளரிடத்தில் மதிப்பு வாய்ந்த அடிமைகளை விடிவிப்பது சிறந்ததுஎன்றார்கள்
            நான் கேட்டேன்: என்னால் அது இயலவில்லை எனில்?
            அண்ணல் நபி (ஸல்) அவர்கள்: ஒரு பணியைச் செய்து கொண்டிருப்பவனுக்கு நீ உதவி செய்யும் அல்லது தன் பணியைச் சரிவர செய்ய முடியாதவனின் வேலையை நீ செய்து கொடும் என்றார்கள்.
            நான் கேட்டேன்: என்னால் அது இயலவில்லையெனில்?
            நபி (ஸல்): சக மனிதர்களுக்கு துன்பம் தராதீர், இது உமக்கு தர்மமாக திகழும், இதற்காக உமக்கு கூலி கிடைக்கும்.
நூல்: புகார், முஸ்லிம்



ஆட்சியாலர் குடிமக்களின் மீதான உரிமைகள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            ‘ஒப்பந்தக்காரன் (முஸ்லிமல்லாத குடிமகன்) ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ அவனது உரிமையைப் பரித்தாலோ அவனது சக்திக்கு மீறிய (பதுகாப்புவாரியான) சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக்கொண்டாலோ நான் மறுமை நாளில் இறைவனின் சந்நிதானத்தில் அந்த முஸ்லிம்முக்கு நதிராக தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிம்மல்லாத குடிமகனின் சார்பாக நான் வாதாடுவேன் (நூல்: அபூதாவுத்)
1.      இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் சிறுபான்மை மதத்தவர்களின் மீதான உரிமை பேணப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
2.      அவர்களின் ஏதேனும் ஒரு உரிமை மறுக்கப்பட்டாலோ அல்லது பறிக்கப்பட்டாலோ மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அவரின் சார்பாக நான் வழக்கறின்ஞராக நின்று வாதிடுவேன் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
3.      மேலும் ஆட்சியாலர்கள் தம் கீழூள்ள மக்களின் உரிமைகளை முழுமையாக பேண வேண்டும். அதில் பாகுபாடும், வேறுபாடும் காட்டக்கூடாது.
இமாம் அபூஹனீஃப (ரஹ்) அவர்களின் காலத்தில் கலீஃபா அல் மன்சூர் ஆட்சியாளராக இருந்தார்.மெளஸல் மாகாணத்து மக்கள் அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தனர்.இறுதியில் இனி ஆட்சிக்கு எதிராக ஈடுபட மாட்டோம் என ஒப்பந்தமிட்டு அம்மாகாண மக்கள் கலீஃபா அல்மன்சூரிடம் தந்தனர்.ஹிஜ்ரி 148ல் மீண்டும் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கலீஃபா நாட்டின் அனைத்து ஃபுகஹாக்களையும் ஒன்று கூட்டினர்.அபூ ஹனீஃபா (ரஹ்) உட்பட அனைவரும் ஆலோசனை கூடத்திற்கு வந்தனர்.கிளர்ச்சியில் ஈடுபடும் அம்மக்களின் உயிர்களும், உடமைகளும் தமக்கு ஹலாலா?இல்லையா?என அனைவரிடமும் கேட்டார் கலீஃபா.அனைத்து ஃபுகஹாக்களும் ஒப்பந்தத்தை மீறுவது குற்றம்.மேலும், இனி நாங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் எங்கள் உயிர்களும், உடமைகளும் உங்களுக்குச் சொந்தம் என அம்மக்களே ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள் என்றனர். ஆக அவர்களை போர் மூலம் அடக்குவது ஆகுமானது தான் என்று ஃப்த்வா தந்தனர்.மேலும் நீங்கள் மன்னிக்க நினைத்தால் அது உங்கள் பெருந்தன்மையை வெளிக்காட்டும் என்றும் கூறினார்கள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் சட்ட மேதை இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள்.
            என்ன கருதுகின்றீர்கள்?என இமாமின் மெளனத்தை கலைத்தார் கலீஃபா.

            இமாம் அவர்கள் கூறினார்கள்:
தங்களுக்கு சொந்தமில்லாத, ஒரு விஷயத்தை ஒப்பந்தத்தின் போது மெளஸல் நகர மக்கள் உங்களுக்கு வழங்கிருக்கின்றார்கள்.(அதாவது அவர்களுடைய உயிர்கள்) அவ்விதமே கேட்கக் கூடாத, கேட்க தகுதியற்ற, உரிமையில்லாத நிபந்தனை ஒன்றை நீங்கள் கேட்டுப்பெற்றுள்ளீர்கள்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், என்னைக்கொன்று விடுங்கள் என ஒரு மனிதர் யாரிடமாவது கூறினால் அவரைக் கொலை செய்வது ஆகுமா?
ஒரு பெண் திருமணம் செய்யாமலேயே தன்னை அனுபவித்துக்கொள்ள உரிமை வழங்கினால் அது ஹலாலாக ஆகிவிடுமா?என்று கேட்டார்கள்.
இல்லை! அனுமதி, ஹலால் இல்லை! என பதில் கூறினார் அல்-மன்சூர்.
அப்படியென்றால் மெளஸல் மாகாணத்தின் மக்கள் மீது கை வைக்காதீர்கள்! அவர்களுடைய உயிர்களைப் போக்குவது உங்களுக்கு ஹலால் அல்ல! என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.
எனவே, அநியாயமாக உயிரையும், உடமைகளையும் பறிப்பது மனிதநேயமற்ற செயல் என்பதையும், தெளிவான உரிமை மீறல் என்பதையும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் இங்கே ஆட்சியாளர் முன் அஞ்சாநெஞ்சத்துடன் கூறினார்கள்.
இப்னுல் அஸீர்; பாகம் 5, பக்கம் 25
தமிழ நூல்: இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும், வீழ்ச்சியும் பாகம் 2, பக்கம் 65
மகளிரின் உரிமைகள்:
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிகாலம், இறையாண்மையும், இறையாட்சியும், இறைத்தூதரின் வழிகாட்டலிலும் நிறைந்து இலங்கிக் கொண்டிருந்தது.யார் பாதிக்கப்பட்டாலும் ஓடோடிச் சென்று நிவாரணம் தருபவர் உமர் (ரலி) அவர்கள்.
அன்றொரு நாள் இரவு நகர் வலம் செல்கிறார்கள்.தூரத்தில் ஒரு குடுப்பத்தலைவி அழுது கொண்டிருப்பதை பார்க்கின்றார்கள்.தன் கவலையையும், மன ஆதங்கத்தையும் என் நேசர் (கணவர்) என் அருகே இல்லாத இரவுதான் எவ்வளவு நீளமானது?” என கவிதை மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.அருகே சென்ற உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் அழுததற்கான காரணம் கேட்டார்கள். வந்தவர் உமர் (ரலி) தான் என்று தெரியாத அப்பெண்மணி
            ‘எங்கள் தனிமையை கொஞ்சம் இலகுவாக்கூடாதா?நீண்ட நாட்கள் எங்கள் கணவன்மார்கள் பிரிந்திருப்பதை சற்று குறைக்கக்கூடாதா?இந்த ஆட்சியாளர் உமர் (ரலி) என்று கூறினார்கள்.
            மறுநாள் காலை நபியவர்களின் துனைவியாரும், உமர் (ரலி) அவர்களின் மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்று,
ஒருபெண் தன் கணவனை விட்டுப்பிரிந்து எத்தனை நாள் பொறுமையாக இருக்க முடியும்?என்று கேட்டார்கள்.
அன்னை ஹஃப்ஸா (ரலி)
ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் கூடிபோனால் நான்கு மாதம் பொறுமை காக்க இயலும் என்று பதில் கூறினார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள்; தமது ஆட்சியின் கீழ் ராணுவப்பிரிவில் பணியாற்றக்கூடாது.4 மாதங்கள் முடிந்து விட்டால் உடனே ஊருக்கு புறப்பட்டு சென்று விட வேண்டும் என சட்டமியற்றினார்கள்.அதனுடைய முதல் நகலை அந்தப் பென்மணியின் கணவனுக்கு அனுப்பிவைத்தார்கள்.
நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 155
ஏழைகளின் உரிமைகள்:
ஒருநாள் இரவு உமர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களும் இரவு நேரத்தில் மதீனாவின் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.கேட்ட திசை நோக்கிச் சென்ற உமர் (ரலி) அங்கு சென்று பார்க்கின்றார்கள்.ஒரு தாய் குழந்தையை மடியில் போட்டு குழந்தையை தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.உமர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள்.மீண்டும் சில மணிதுளிகளில் குழந்தை அழுதது. அங்கு சென்ற உமர் (ரலி) அல்லாஹ்வை பயந்து கொள்! உன் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்! என்றார்கள். சிறிது நேரத்தில் அக்குழந்தை மீண்டும் அழுதது வேகமாகச் சென்ற உமர் (ரலி) நாசமாப்போ!நீ நல்ல தாயாக இல்லை.ஏன் மீண்டும் மீண்டும் உன் குழந்தை அழுது கொண்டிருக்கிறது?நான் பலதடவை சொல்லியும் உன் குழந்தையின் அழுகையை ஏன் நிறுத்த முடியவில்லை?அந்தப் பெண்மணி முன்நிற்பவர் உமர்தான் என்று அறியாமல் சொன்னார்.
அல்லாஹ்வின் அடியாரே! நான் என் குழந்தையை பால் குடியிலிருந்து கட்டாயப்படுத்தி மறக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.ஆனால், அது மறப்பதற்கு மறுக்கின்றது என்றாள்.
ஏன்?நீ மறக்கடிக்க கட்டாயப்படுத்துகிறாய் என்க்கேட்டார் உமர் (ரலி) அவர்கள்.
            ஏனென்றால், ஆட்சியாளர் உமர் பால் குடி மறக்கடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொது நிதியிலிருந்து உதவித்தொகை கொடுக்கின்றாராம் என்றாள்.
சரி! உன் குழந்தைக்கு எத்தனை வயசாச்சு எனக் கேட்டார் உமர் (ரலி).
பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கிறது?என்றாள் அப்பெண்.
அவசரப்படாதே! உன் குழந்தையின் ஆரோக்கியத்தில் எனக் கூறிய உமர் (ரலி) அங்கிருந்து வெடுக்கென வெளியேறினார்கள்.
மறுநாள் நடந்தவைகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அன்று காலை உமர் (ரலி) எங்களுக்கு ஃப்ஜ்ர் தொழவைத்தார்கள்.தொழுகையில் அவர்கள் ஓதும் சப்தத்தை விட அழுகையின் சப்தம் உயர்ந்திருந்தது. ஒரு வழியாக தொழுதுமுடித்து ஸலாம் வாங்கிய பின் உமர் (ரலி) எழுந்தார்கள்
மக்களே! பால்குடி மறக்கடிப்பதில் அவசரம் காட்டாதீர்கள்! நாம் அனைத்து இஸ்லாமிய குழந்தைகளுக்கும் பொது நிதியிலிருந்து உதவித்தொகையை வழங்குவோம் என்று கூறினார்கள்.இதை உடனே அமுல் படுத்துமாறு அனைத்து மாகாண கவர்னர்களுக்கும் கடிதம் எழுதினார்கள்.
நூல்: குலஃபாவுர்ரசூல் (ஸல்) பக்கம்: 125
உலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாத்திடவும், உலகில் அமைதியை நிலைநாட்டிடவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை (.நா. சபை) இந்த அவை பிறப்பித்த மனித உரிமைப் பிரகடனங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயை உள்ளதை அமெரிக்காவின் அடாவடித்தனங்களாலும், இஸ்ரேலின் கொடூரத்தாலும் உணர முடிகின்றது. ஆனால், 1434 ஆண்டுகளுக்கும் முன் நபி (ஸல்) கூறிய மனித உரிமைப் பிரகடனங்கள் இந்த உம்மத்தால், இந்த உம்மத்தின் தலைவர்களால், இந்த உம்மத்தின் இமாம்களால் எப்படி நடைமுறைப்படுத்தப் பட்டது. (இனிமேலும் நடைமுறைப் படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்) என்பதைத் தான் மேற்கூறிய சம்பவங்கள் மூலம் நாம் அறிகிறோம்.
இஸ்லாம் மனித உரிமைகளில் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் உரிமைகளிலும் கூட கவனம் செலுத்துமாறு கட்டலையிடுகின்றது.
ஒருவன் ஒரு சிட்டுக் குருவியையோ அல்லது அதை விடச் சிறிய குருவியையோ அவற்றிற்கான உரிமையின்றிக் கொன்றுவிட்டால் அது குறித்து அல்லாஹ் நாளை மறுமையில் விசாரிப்பான் என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! குருவிகளின் உரிமை என்ன?என்று கேட்கப்பட்டது? அவற்றை அறுத்து உண்பதும், தலை அறுத்த பின்னர் அப்படியே வீசியெறிந்து விட்டாமலிருப்பதும் தான் அவற்றின் உரிமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்
நூல்: மிஸ்காத்
என் ஆட்சிக்குட்பட்ட எல்லையில் தண்ணீரின்றி நாவரண்டுத் திரியும் நாய் குறித்துக் கூட அல்லாஹ் என்னிடம் விசாரிப்பானோ என்று நான் அஞ்சுகிறேன் என உமர் (ரலி) அடிக்கடி கூறுவார்கள்.
ஆக, உயிரினங்களின் உரிமைகளைக் கூட இஸ்லாம் பேணுமாறு வலியுறுத்தும் போது மனித உரிமைகளைப் பேணுவதில் நாம் எந்தளவு கவனம் செலுத்த வேண்டும் என சிந்தித்துப்பார்க்க கடமைபட்டுள்ளோம்.
மேலும், மனித உரிமைகளை மீறுவோர் எத்தகைய நிலைக்கு உள்ளாவர் என மாநபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமோழியில் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள்; ஒன்றுமில்லாதவன் (வறியவன்) என்பவன் யார்?என்று கேட்டார்கள்.மக்கள் எவரிடம் திர்ஹமோ, வேறேந்தப்பொருளுமே இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினார்.அதற்கு அண்ணலார் பின் வருமாறு பதிளாளித்தார்கள்; ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் தான் வழங்கிய ஜகாத்துடனும் அல்லாஹ்வின் முன் ஆஜராவான்.
அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டிருப்பான்; எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான். எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்திருப்பான்; எவரையேனும் கொன்றிருப்பான்; எவரையேனும் அடித்திருப்பான்; எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும்.பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிகுள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் மீதியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும்.பிறகு அவன் நரகத்தில் வீசியெறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் ஒன்றுமில்லாதவன் (வறியவன்) ஆவான்
நூல்: முஸ்லிம்
மேலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரு மனிதனின் ஈருலக முன்னேற்றத்தை இன்னொரு மனிதனின் உரிமைகளை நிறைவேற்றுவதின் மூலம் தான் அடைய முடியும் என்பதனை தங்களின் வாக்குகளின் மூலம் உறுதிபடுத்திருக்கின்றனர்.
ஏழைகளின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் போர்புரிபவரைப் போன்றவராவார்.மேலும் அவர் இரவு முழுக்க களைப்படையாமல் நின்று வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார்; பகலில் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவராவார்.                                                                                            நூல்: திர்மிதி

அண்டை அயலாரின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
எந்த மனிதர் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும்; அவரிடம் அமானிதமாக ஒரு பொருளை அதன் உரிமையாளைடம் பாதுகாப்பாக ஒப்படைக்கட்டும். தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்
நூல்: மிஷ்காத்
அநாதைகளின் உரிமையைப் பேணுபவரின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நானும் அநாதையைப் பராமரிப்பவனும், ஆதரவற்றவர்களை அரவணைப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்இதைச் சொல்லிவிட்டு அண்ணலார் நடு விரலையும், சுட்டு விரலையும் காட்டினார்கள். இருவிரல்களுக்கிடையிலும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள்
நூல்: புகாரி
மனைவி, பிள்ளைகள், குடுப்பத்தினரின் உரிமையை பேணுபவரின் சிறப்பு:
மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்தில் தன் வீட்டாருக்கு செலவிடும் போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்துவிடுகிறது.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா?என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அவசியம் கூறுங்கள் என மக்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள்அது தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக் கூடியவர் வேறு எவருமில்லை என்ற நிலையில் உன்பக்கம் திருப்பி அனுப்பபட்ட உன்மகள் தான்என்றார்கள்
நூல்: இப்னுமாஜா
இன்னும் ஏராளமான அருள்வளங்களை மனிதனுக்கு அல்லாஹ் வழங்குவதற்கு சக மனிதனின் உரிமைகளை, கடமைகளை நிறைவேற்றுவதில் தான் இணைத்திருக்கின்றான் என்பதை பல்வேறு நபி மொழிகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவே, பிறரின் உரிமைகளை சரிவரப்பேணி மனித நேயப்பண்புடன் வாழும் மாண்பாளனாக நம்மை ஆக்கியருள்வானாக!
ஆமீன்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முன்பதிவு செய்பவாகளுக்கே முன்னுரிமை! சுவனத்தில்....

இன்று நாம் முன்பதிவு செய்யாமல், முந்திச் செல்லாமல் உலகில் எந்த ஒன்றும் மக்களுக்கு கிடைப்பதில்லை. கல்விக்கூடத்தில் (தன் பிள்ளைகளின் படிப்பிற்காக...)வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ..... மருத்துவ சிகிச்சையில்..... தொலைதூர பிரயாணத்தில்... ரேஷன் கடைகளில் ...... என்று, இன்னும் மனித சமூகம் பயனடைகிற எத்தனையோ காரியத்தில்....
முந்திச் செல்லவில்லையென்றால்?
முன்பதிவு செய்யவில்லையென்றால்?
எதுவும் கை கூடுவதில்லை!
கையூட்டு கொடுத்தும், சிபாரிசுக்கு ஆள்பிடித்தும் ஒன்றும் ஆவதில்லை!
சில சவுகர்யங்களும், சுகங்களும் அற்ப ஆதாயமும், சலுகைகளும் கிடைக்கும் இவைகளுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் முன்னேற்பாடுகளும் தான் எத்தனை? ஆனால்,
 தரம்! உயர்தரம்! நிரந்தரம்!!!
           என அனைத்து தரச்சான்றுகளும் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மகோன்னதமான ஓர் இடத்திற்கு
           முன்பதிவுசெய்பவாகள் எத்தனை பேர்?
     படைத்த இறைவனால் நிச்சயம் கிடைக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்ட இடத்தை அடைய முந்திச் செல்பவர்கள் எத்தனை பேர்?
     நல்ல விசாலமான, காற்றோட்டம் நிறைந்த, சகல வசதிகளையும், சவுகர்யங்களயும் சலுகைகளையும், சுகபோகங்களையும், என்றென்றும் நிரந்தரமாய், படைத்தோனின் தரிசனத்தோடு, தீர்க்க தரிசிகளின் அரவணைப்போடு இறைநேசர்களின் சந்திப்போடு ஏராளமான அந்தஸ்துகளை, ஆயிரமாயிரம் உயர் பதிவிகளை தன்னகத்தே கொண்ட உயர்வான அந்த இடத்தை அடைய முன்பதிவு செய்பவர்கள் எத்தனை பேர்?
     ஆம்!            அந்த இடமான சுவனத்திற்கு, மேலான
                ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிற்கு தாமதமின்றி
                முன்பதிவு செய்வோம்,
                குறைவானர்களே அனுமதிக்கப்படும்
                மேலான அந்த இடத்தை அடைய
                முந்திச்சென்று முன்னுரிமை பெறுவோம்!
               
சுவனமும், சுவனத்தின் இன்பமும்!
அல்லாஹ் கூறுகின்றான்!
     இறையச்சமுடையோருக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன் மகத்துவம் இதுவே - அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குறையாத பாலாறுகளும் குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொணடிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து விதமான கனிவர்க்கங்களும் கிடைக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும்.
அல்குர்ஆன்: 47:15
மேலும், சுவனம் சம்பந்தமாக அல்லாஹ் குர்ஆனில் பல வசனங்கள் மூலம் விரிவாகப் பேசுகிறான்.
பார்க்க: அல்குர்ஆன் : 2:25, 9:20-22, 11:108, 13:24
                     15:45-48, 16:30,31,  18:31, 20:75,76
                     25 75,76 (இன்னும் 50-க்கும் மேற்பட்ட வசனங்கள் உண்டு)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் காணாத, எந்தக்காதும் கேட்காத, எவருடைய உள்ளத்திலும் தோன்றாத அருட்கொடைகளை என் நல்லடியார்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன்”. நீங்கள் விரும்பினால் குர்ஆனில் பின்வரும் (32:17-ம்) வசனத்தை நல்லடியார்களுக்காக எத்தனைக் கண்குளிர் இன்பங்களை மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்
சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கின்ற சிறிதளவு இடம் கூட உலகம் மற்றும் உலகின பொருட்களை விடச் சிறந்த்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     இன்பங்கள், ஆபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது
     கஷ்டங்கள், துன்பத் துயரங்கள் ஆகியவற்றால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது.
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நரக நெருப்பை விட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால், அதனைவிட்டு வருண்டோட வேண்டிய்வன் உறங்கிக் கொண்டிருக்கிறான். நான் சுவனத்தை விட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்”.
(நூல்: திர்மிதி)
சுவனம் யாருக்கு?
அல்லாஹ் கேட்கின்றான்:-
     உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடை)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்துவிடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய எதவி எப்பொழுதுவரும்?என்று (புலம்பிக்) கேட்கும்வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். – இதோ அல்லாஹ்வுடைய உதவி மிக அண்மையில் இருக்கிறது. (என ஆறுதல் கூறப்பட்டது)
(அல்குர்ஆன்: 2:214)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகமின்றி உண்மை சொல்வது நம்மையின் பால் வழிநத்துகிறது, நன்மை சுவனம் வரை சேர்த்துவிடுகிறது.                           (நூல் :முஸ்லிம்)
பொறுமை, நிலைகுலையாமை, உண்மை பேசுதல் நல் அமல்கள், நேர்மை, நற்குணங்கள் போன்ற ஏராளமான தகுதிகளை கொண்டோர்கள் சுவனம் செல்ல முடியும் – என்கிற நற்செய்தியோடு, நபிகளாரே சில தகுதியுடையோருக்கு சுவனத்தைப் பெற்றுத்தருகிற ஏராளமான நபிமொழிகளைக் காணமுடிகிறது எனினும் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டு காட்டுகிறோம். மேலும், நல் அமல்கள், இறைவழிபாடுகள் மட்டுமே ஒரு மனிதனை சுவனத்தில் கொண்டு சோத்துவிடாது. அல்லாஹ்வின் அருட்பார்வையும் இருந்தால் தான் சுவனம் செல்ல முடியும் என்ற பொருள்பட நபிமொழிகளும் காணப்படுகிறது ஏனெனில் காலமெல்லாம் விபச்சாரம் செய்த ஒரு பெண்மணி ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் அல்லாஹ் சுவனத்தை கொடுத்ததாக ஹதீஸில் காணமுடிகிறது.
எனவே, அவைகளோடு அதிகம் அல்லாஹ்வின் அருள்மீது ஆதரவுவைத்து அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.
நபித் தோழர்கள் சுவனத்தை அடைய செய்த கடும் முயற்சிகள் வரலாற்றுப்பதிவுகளில் பரவலாக காணமுடிகிறது. அவற்றில் ஒருசிலதை மட்டும் இங்கு காண்போம்.

ஆசையே மூலதனம்
நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலக பயணத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை நபித்தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் சிறு கூட்டமும், மற்றா இறைத்தூதருடன் சில பேரும், இன்னொரு இறைத்தூதருடன் பத்து பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். ஒரு இறைத்தூதர் மட்டும் தனியே சென்றார் அப்போது ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் ஜிப்ரிலே! இவர்கள் என் சமுதாயத்தினரா? என்று கேட்டேன். ஜிப்ரீல், இல்லை என்று கூறி மாறாக அடிவானத்தை பாருங்கள் என்றார், உடனே நான் பார்த்தேன். அங்கே மிகப்பெரும் மக்கள் திறள் இருக்கக்கண்டேன். இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தார் இவர்களின் முன்ன்னியில் இருக்கும் எழுபதாயிரம் பேருக்கும் விசாரணையுமில்லை வேதனையுமில்லைஎன்று கூறினார். நான் ஏன்? என்று கேட்டேன். அதங்கு ஜிப்ரீல் (அல்)இவர்கள் நோய்க்காக சூடிட்டுக்கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள் என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா எனும் நபித்தோழர் எழுந்து நபி (ஸல்) அவர்களிடன் அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள். பிறகு இன்னொருவர் எழுந்து அவர் கூறியது போன்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்என்று சொன்னார்கள்
(நூல்: புகாரி)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:-
உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும் உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் எளிதில் கூவனம் புகுந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா?
(அல்-குர்ஆன்: 2:214)
Basic Eligibility (அடிப்படைத் தகுதி)
அல்லாஹ் கூறுகின்றான்:
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்பார்கள்! மேலும் அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும் இதுவே மாபெரும் வெற்றியாகும்!...
(அல்-குர்ஆன்:9:72)
கத்தாபின் மகனே, முஃமின்கள் மட்டும் தான் சொர்க்கத்தில் நுழைவார் என்று மக்களிடம் சென்று அறிவிப்புச் செய்வீராக என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.               (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக அறிந்த நிலையில் எவர் மரணமடைகிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்என்று நபி (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Other Eligibility (இன்ன பிற தகுதிகள்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கிறேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்குச் சுவனத்தின் நடவில் ஒரு வீட்டைப் (பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கிறேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர பொறுப்பேற்கிறேன்.”          
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தனது இரு தாடைகளுக்கும், இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளுக்கு (நாவு, மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சுவனம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.                                               (நூல் : புகாரி)
விரும்பி வீரமரணமடைதல்
பத்ர் – யுத்த களத்தில் எதிரிகளை நோக்கி மாநபியும் மாநபித் தோழர்களுகம் அணிவகுத்து நின்றிருந்த நேரம் அது.
நபித்தோழர்களை ஆர்வமூட்டும் விதமாக நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்: சுவனத்தின் பக்கம் முன்னேறிச் செல்லுங்கள், உமைர் பின் ஹுமாம் (ரலி) என்னும் நபித்தோழர்  என்றார் என்ன சொல்கிறீர் எனக் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதரே! சுவன வாசிகளில் ஒருவனாக நான் ஆக ஆதரவைக்கிறேன் என்றார் உமைர் (ரலி)
ஆம்! நீர் சுவன வாசிகளில் ஒருவர் தான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். உடனே தான் வைத்திருந்த பேரித்தம்பழ பையை கையில் ஏந்தியவாறு இதைச் சாப்பிடுகிற நேரத்தை இந்த உலக வாழ்க்கையின் நேரமாக எண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு யுத்த களத்தில் புகுந்து கடுமையாக போரிட்டு வீரமரணமடைந்தார்கள்.
(நூல் : முஸ்லிம்)
உஹத் – யுத்த களம் முஸ்லிம்கள் தோற்றுவிட்டார்கள் என்கிற செய்தி காட்டுத்தீயாய் மதீனாவை சுற்றிக் கொண்டிருந்த்து. கடமையான குளிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த ஹன்ளலா (ரலி) யின் காதில் இடியாய் விழுந்த்து. வாளேந்தி உஹதை முன்னோக்கிச் சென்றார் களம் புகுந்து வேட்டையாடி இறுதியில் வீரமரணம் அடைந்தார்.
நபியவர்கள் நபித் தோழர்களிடம் மலக்குமார்கள் அவரை குளிப்பாட்டக் கண்டேன் என்றார்கள்.
(நூல்: இஸ்தீஆப் , பக்கம் :165-1)
உஹத் – யுத்த களத்திற்கான அழைப்பு
தந்தை அப்துல்லாஹ் (ரலி) மகன் ஜாபிர் (ரலி)யிடம் நான் கலந்து கொள்கிறேன் என்றார்
மகன்: வயதான நேரத்தில் கலந்து என்ன செய்யப் போகிறீர்கள் நான் இளைஞன்
     ஆகவே நான் கலந்து எனது இளமையை நிரூபிக்கிறேன்.
தந்தை: இனி இதுபோன்றதொரு வாய்ப்பு எனக்கு அமையுமா? என்பது சந்தேகமே
      எனவே, எனக்கு வழிவிடு
மகன்: எனக்கு விட்டு கொடுங்கள்
தந்தை: சுவனத்தை தவிர வேறு ஏதாவது கூலியாக கிடைக்கு மென்றிருந்தால்
       உனக்கு நான் விட்டுக் கொடுத்திடுவேன். ஆகவே, வழிவிடு – என்றார்

உரையாடல் முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கவே சீட்டுக்குலுக்கி போடும் முடிவுக்கு வந்தனா. சீட்டுக் குலுக்கலில் அப்துல்லாஹ் (ரலி)யின் பெயர் வரவே கலந்து கொண்டார், விரும்பியது போன்றே வீரமரணம் அடைந்தார்.

தந்தையை இழந்த தனயனின் முகம் வாடியிருந்த்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்: ஜாபிர் (ரலி)யை அருகே அழைத்து ஆறுதல் கூறினார்கள். உனது தந்தையிடம் அல்லாஹ் திரையின்றி பேசினான் உமது தந்தையிடம் அல்லாஹ் விரும்பியதைக் கேளுங்கள் தருகிறேன் என்றான். உமது தந்தை அல்லாஹ்விடன் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்து உமது பாதையில் போராடி மீண்டும் வீரமரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். அதற்கு அல்லாஹ் எனது நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றான். – என்ற இந்த உரையாடலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      (நூல்: இஜ்தீஆப், பாகம்: 2)

ஏன் முனபதிவு செய்ய வேண்டும்?
அப்துல்லாஹ் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     சொர்க்க வாசலில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதை நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சுவனத்தில் நுழைந்து கொள்என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பிவந்து என் இறைவா! அது நிரம்பியிருக்க்க் கண்டேன்என்று கூறுவார். மீண்டும் அல்லாஹ் முன்புபோல் கூறுவான். மீண்டும் முன்பு போல அவரும் கூறுவார். மூன்றாம் முறையும் அல்லாஹ் முன்பு போல கூறுவான். திரும்பி வந்த அம்மனிதர் அல்லாஹ்விடம் முறையிடுவார் அதற்கு அல்லாஹ் நீ சுவனத்தில் நுழைந்து கொள் ஏனெனில் உலகம் மற்றும் அதைப் போன்ற பத்துமடங்கு அல்லது உலகத்தைப் போன்ற பத்து மடங்கு இடம் உனக்கு உண்டுஎன்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்னை நகைக்கின்றாயா? என்று கேட்பார். இதைக்கூறிய போது நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சுவன வாசிகளில் குறைந்த அந்தஸ்தில் உடையவர் ஆவார்.- என கூறப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி)

ஸஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்க வாசிகளில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் மேல் அறைகளில் உள்ளவர்களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.
(நூல்: புகாரி)

எனவே குறைந்த அந்தஸ்தை உடையவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் வெகுமதி இதுவென்றால் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களின் நிலை எப்படி இருக்கும் அல்லாஹ் சுவனத்தில் நுழையும் நற்பாக்கியத்தையும், உயர் பதவிகளையும் தருவானாக!

ஆகவே! சுவனத்திற்கு முன்பதிவு செய்வோம்!
           முந்திச்சென்று உயர்பதவிகளை அடைவோம்!
எல்லாம் வல்ல ரஹமான்  இந்நற்பேற்றை
           நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!
ஆமீன்!

வஸ்ஸலாம்

தொகுப்பு


N.S.M.பஷீர் அஹ்மத் உஸ்மானி