Wednesday 18 November 2015

மழை செய்த பிழையா?



மழை செய்த பிழையா?



வானமே பொத்துக்கிட்டு ஊற்றியதோ? உலகின் நாலா பாகங்களிலும் சிதறிக் கிடந்த மேகத்துண்டுகளெல்லாம் ஒன்று திரண்டு தமிழகத்தில் மொத்தமாக மழையைக் கொட்டியதோ? என்று நினைக்கும் அளவிற்கு தமிழகமெங்கும் பரவலாக பலத்த பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டமான கடலூரும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

பார்க்கிற இடங்களிலெல்லாம் தண்ணீர், தண்ணீர். தூக்கமில்லாமல், போதிய மின்சாரமில்லாமல், உணவில்லாமல், சுகாதாரமில்லாமல் எப்போது வடியும் இந்த தண்ணீர் என மக்கள் கண்ணீரோடு காத்திருக்கின்றார்கள்.

கடலூரில் 43 பேர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக மொத்தம் 148 பேர்.

வீடுகள், வர்த்தகம், விவசாயம், மின் தொடர்பு சாதனங்கள், சாலைகள் போன்றவற்றின் கணக்கெடுப்புகள் இன்னும் வரவில்லை. வந்தால் தான் தெரியும் எவ்வளவு சேதம் என்று.

மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை, மக்கள் படும் அவல காட்சிகள் சோக காட்சிகளாக தொலைக்காட்சிகளில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவதை பார்க்கும் போது பேரழிவுகளைத் தாங்கித்தான் இப்பெருமழை பெய்திருக்குமோ? என எண்ணத்தோன்றுகிறது.

வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்திருப்பதாகவும், மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்திருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் முதலமைச்சர் 500 கோடி ரூபாய் பணத்தை வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆனாலும், மாதம் மும்மாரி மழை பொழிந்த வளம்மிக்க நாடாகத்தானே நம் தமிழ்நாடு இருந்துள்ளது. அப்போதெல்லாம் தண்ணீருக்கும் பிரச்சனை இல்லை. தண்ணீராலும் பிரச்சனை இல்லை.

பின்னர் ஏன் இப்படி? மழை செய்த பிழையாக இருக்குமோ? என்றெல்லாம் நமக்கு பலவாறாக எண்ணத்தோன்றுகிறது.

ஆம்! பிழை எங்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை கண்டறிந்து சரி செய்து, இது போன்ற பேரிடர்களில் இருந்து மீண்டுவரும் பாடத்தைக் கற்று வருவோம்!

தண்ணீர் மனிதனுக்கு மாத்திரமல்ல உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என படைப்பினங்கள் அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த தண்ணீரை மழை நீர் எனும் நன்னீர் மூலம் அல்லாஹ் வழங்கி உயிரினங்களை வாழ வைக்கின்றான்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால் உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்.

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ

உயிரினங்கள் அனைத்தையும் நாம் தண்ணீரைக் கொண்டே உருவாக்கினோம்”. (அல்குர்ஆன்: 21: 30 )

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் அனைத்துப் பிராணிகளையும் தண்ணீரிலிருந்தே படைத்தான்”. ( அல்குர்ஆன்: 24: 45 )

மழையை பரக்கத் அபிவிருத்தி என்கிறது அல்குர்ஆன்….

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ () وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ () رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ ()

மேலும், நாம் வானத்திலிருந்து அபிவிருத்திகள் நிறைந்த மழை நீரை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான அழகிய ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். இறந்து விட்ட மனிதர்கள் பூமியிலிருந்து வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்”.        ( அல்குர்ஆன்: 50: 9 – 11 )

மழையை ரஹ்மத் - அருள்வளம் என்கிறது அல்குர்ஆன்…..

وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ()

மேலும், அவனே தன்னுடைய அருள்வளத்திற்கு ( மழைக்கு ) முன்பாக நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான்”.      ( அல்குர்ஆன்: 7: 57 )

மழையை தஹூர் - தூய்மை என்கிறது அல்குர்ஆன்….

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا

மேலும், வானிலிருந்து தூய்மையான ( மழை ) நீரை நாம் இறக்கி வைக்கின்றோம்”.                                            ( அல்குர்ஆன்: 25: 48 )

மழை ரிபாத்துல் குலூப் - இதயங்களை வலுப்படுத்தும் உயரிய அம்சம் என்கிறது அல்குர்ஆன்….

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

இதையும் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும், அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்”.                           ( அல்குர்ஆன்: 8: 11 )

பத்ரில் அல்லாஹ் முஃமின்களுக்கு மட்டும் வழங்கிய பிரத்யேகமான மழையை நினைவு கூறச் சொல்கின்றான்.

மழை வாழ்க்கைக்கான சாதனங்களை வழங்கும் மாபெரும் கொடை என்கிறது அல்குர்ஆன்….

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12)

உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”.                          ( அல்குர்ஆன்: 71: 10 – 12 )

மழைநீர் உலகத்தோடு முடிந்து விடும் ஒன்றல்ல மறுமையிலும் மனிதனோடு அதன் உறவைத் தொடர்கின்றது.

قال رسول الله
صلى الله عليه و سلم أن جسد الأنسان يبلى كله فيما عدا "عجب الذنب" فإذا أراد الله تعالى بعث الناس أنزل مطراً من السماء فينبت كل فرد من عجب ذنبه كما تنبت البقلة من بذرتها رواه مسلم كتاب الفتن و أشراط الساعة

மஹ்ஷர் மைதானம் அமையப் பெற்ற பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு மழையை பொழியச் செய்வான். உடனே இறந்தவர்கள் பச்சைப்புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மண்ணறையிலிருந்து உயிர்த்தெழுவார்கள். ஆதமுடைய மகனின் உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் மண் தின்று விடும். அவனுடைய முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் குத எழும்பின் நுனியைத்தவிர, அதை வைத்தே அல்லாஹ் மீண்டும் மனித சமூகத்தை உயிர்த்தெழுப்புவான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: முஸ்லிம் )


அல்லாஹ் மழையை இவ்வளவு மாண்பாக வர்ணித்துக்  கூறும் போது ஏன் இவ்வளவு பெரிய இழப்புகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்குகின்ற அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின், நியதியின் அடிப்படையில் தான் வழங்குகின்றான்.


إنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”

மழையும் அப்படித்தான்..

وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ

எனினும், அவன் வானத்திலிருந்து அளவுடன் தான் தண்ணீரை ( மழையை ) இறக்கி வைக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 43: 11 )


மழை வரும்போது நபியவர்களின் மனோ நிலை

و حَدَّثَنِي هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ح و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا النَّضْرِ حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ
مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَى النَّاسَ إِذَا رَأَوْا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عَرَفْتُ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةَ قَالَتْ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤَمِّنُنِي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ قَدْ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا
{ هَذَا عَارِضٌ مُمْطِرُنَا }

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

“மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'அல்லாஹ்வின்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்களோ மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் அடைக்கின்றீர்களே ஏன்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள்ஆயிஷாவே! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ”இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்என்றே கூறினர்என பதிலளித்தார்கள்.
( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا مُحَمَّدٌ - هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِىُّ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ « صَيِّبًا نَافِعًا

நபி(ஸல்) அவர்களின் கண்கள் மழையைக் காணும்போது அவர்களின் நாவு இப்படிப் பிரார்த்திக்க ஆரம்பித்து விடும் ”அல்லாஹும்ம ஸைய்யிபன் நாஃபிஆ – யாஅல்லாஹ்! இந்த மழையைப் பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!" என்று...

                                                            ( நூல்: புகாரி )

ஆனால், நாமோ இன்று மழை மேகத்தை கண்டுவிட்டால் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த மேகம் சுமந்து வருகிற மழை அல்லாஹ்வின் அருள் மழையா? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மழையா? என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இல்லை. இது தான் இன்றைய நமது நிலை.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு கலக்கம் அடைகிறார்கள்.

மழையின் பாதிப்பிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِىُّ قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ الأَنْصَارِىُّ قَالَ حَدَّثَنِى أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَبَيْنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِىٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ ، فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا . قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَدَيْهِ ، وَمَا فِى السَّمَاءِ قَزَعَةٌ ، قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ ، قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ ، وَفِى الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ وَالَّذِى يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الأُخْرَى ، فَقَامَ ذَلِكَ الأَعْرَابِىُّ أَوْ رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ ، فَادْعُ اللَّهَ لَنَا . فَرَفَعَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَدَيْهِ وَقَالَ « اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا » . قَالَ فَمَا جَعَلَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّمَاءِ إِلاَّ تَفَرَّجَتْ حَتَّى صَارَتِ الْمَدِينَةُ فِى مِثْلِ الْجَوْبَةِ ، حَتَّى سَالَ الْوَادِى - وَادِى قَنَاةَ - شَهْرًا . قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ .
                                          
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன்.

அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. கால்நடைகள் அழிகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள்.

மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.

                                                            ( நூல்: புகாரி )

அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற எந்த ஒரு அருட்கொடையும் மனித சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் நோக்கில் படைக்கப்படவில்லை.

அப்படி ஒரு அருட்கொடையைக் கொண்டு கேடு விளையுமானால் அதற்கு மனித சமூகமே முழுமுதற் காரணமாகும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

ظَهَرَ الْفَسادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِما كَسَبَتْ أَيْدِي النَّاسِ

“மனித சமூகம் தங்கள் கரங்களால் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதன் காரணமாகவே தரையிலும் ( நிலத்திலும் ) கடலிலும் அராஜகமும், குழப்பமும் தோன்றுகின்றன”.                                        ( அல்குர்ஆன்: 30: 41 )

இப்போது தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் கடலூரில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் நீர் செல்ல வேண்டிய பாதை தடை பட்டிருக்கின்றது.

ஆம்! ஒரு காலத்தில் குளங்களாகவும், ஏரிகளாகவும், கண்மாய்களாகவும் இருந்தவைகள் இன்று மக்களின் குடியிருப்புக்களாக மாறிவிட்டன.

குடியிருப்புக்களை கட்டும் முன் மழை காலத்தின் தண்ணீர் செல்வதற்கான பாதைகள், ஓடைகள், வடிகால்கள், மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் போன்றவற்றை அமைத்திருக்க வேண்டும்.

மக்களும், அரசும் கண்டு கொள்ளாமல் இருந்ததனால் இன்று மிகப் பெரிய சேதாரத்திற்கு மக்கள் ஆளாகி இருக்கின்றார்கள்.

எப்படி சமாளிப்பது என மக்களோடு சேர்ந்து அரசும் அதிகாரிகளும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1. முழு முயற்சி வேண்டும்.

மனித வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ வேண்டுமானாலும் கூட அதற்கு மனித முயற்சி மிகவும் அவசியம் என்கிறது அல்குர்ஆன்.

அல்லாஹ்வின் அற்புதத்தை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் உணவளிக்க முன்வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا

“பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஒர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது.

அப்போது, அவர் “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருக்கக் கூடாதா?” என்று கூறலானார். அப்பொழுது, கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார் ”நீர் கவலைப் படாதீர்! உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.

மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும், அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும். ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக!”.                                 ( அல்குர்ஆன்: 19: 22 – 26 )

மூஸா (அலை) அவர்களின் சமூகம் தண்ணீர் இன்றி தவித்த போது அல்லாஹ்விடம் மூஸா (அலை) பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் தண்ணீர் தர முன் வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا

இன்னும், மூஸா தம் சமூகத்தினருக்காக தண்ணீர் வேண்டி பிரார்த்தித்ததையும் நினைவு கூறுங்கள். அப்போதுஉம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். அவ்வாறு அவர் அடித்ததும் அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன”. ( 2: 60 )

فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ (63) وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ (64) وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ (65)

இது போன்றே ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பித்துச் சென்ற போது கடல் நீர் குறுக்கிடவே மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் கைத்தடியைக் கொண்டு கடலில் அடிக்குமாறு கட்டளை பிறப்பித்தான். ( பார்க்க, அல்குர்ஆன்: 26: 60 – 66 )

ஆக, மனித வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் முழுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

2. சரியான திட்டமிடல் வேண்டும்.

மதீனாவை போர் மேகம் சூழ்ந்திருந்த தருணம் அது. எதிரிகள் மதீனாவிற்குள் நுழைந்து விட்டால் உயிழப்புகளும், சேதங்களும் பன்மடங்கு பெருகி விடும் அபாயகரமான சூழ்நிலை.

ஆம்! ஹிஜ்ரி 5 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 10000 பேர் கொண்ட பெரும் படை ஒன்று மதீனாவைத் தாக்கி முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்கிற முனைப்போடு வருகின்றார்கள் என்கிற செய்தி தான் இதற்கு காரணம்.

இதுவரை இல்லாத ஒரு வித பதற்றமும், அச்ச உணர்வும் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், இதுவரை எதிரிகள் வெளியே இருந்து வந்தனர். ஆனால், இப்போதோ எதிரிகளோடு கைகோர்த்திருப்பவர்கள் மதீனாவின் பூகோளத்தை முழுவதுமாக அறிந்து வைத்திருந்த மதீனாவின் யூதர்கள்.

என்ன செய்வது? எப்படி போர்முனையை சமாளிப்பது? பெரும் சேதத்தை எப்படி தவிர்ப்பது? இப்படி நிறைய எப்படி பெருமானார் {ஸல்} அவர்களின் மின் கேள்விகள் தொக்கி நின்றது.

அல்லாஹ்வும் இப்படி பதிவு செய்திருப்பான்:

هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ()

“அந்தக் கடினமான நேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் நன்கு சோதிக்கப் பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 33: 11 )

ولو بلغت هذه الأحزاب والمحزبة والجنود المجندة إلى أسوار المدينة بغتة لكانت أعظم خطراً على كيان المسلمين مما يقاس، وربما تبلغ إلى استئصال الشأفة وإبادة الخضراء، ولكن قيادة المدينة كانت قيادة متيقظة، لم تزل واضعة أناملها على العروق النابضة، تتجسس الظروف، وتقدر ما يتمخض عن مجراها، فلم تكد تتحرك هذه الجيوش عن مواضعها حتى نقلت استخبارات المدينة إلى قيادتها فيها بهذا الزحف الخطير .
وسارع رسول الله صلى الله عليه وسلم إلى عقد مجلس استشاري أعلي، تناول فيه موضوع خطة الدفاع عن كيان المدينة، وبعد مناقشات جرت بين القادة وأهل الشوري اتفقوا على قرار قدمه الصحابي النبيل سلمان الفارسي ضي الله عنه .
قال سلمان : يا رسول الله، إنا كنا بأرض فارس إذا حوصرنا خَنْدَقْنَا علينا . وكانت خطة حكيمة لم تكن تعرفها العرب قبل ذلك .
وأسرع رسول الله صلى الله عليه وسلم إلى تنفيذ هذه الحظة، فوكل إلى كل عشرة رجال أن يحفروا من الخندق أربعين ذراعاً، وقام المسلمون بجد ونشاط يحفرون الخندق، ورسول الله صلى الله عليه وسلم يحثهم ويساهمهم في عملهم هذا .

பரபரப்பான சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களில் முக்கியமானவர்களை உடனடியாக மஸ்ஜிதுன் நபவீயில் ஒன்று கூடுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

மஸ்ஜிதுன் நபவீ அப்படியொரு அமைதியை அன்று வரை சந்தித்தது இல்லை. அமைதி என்றால் அப்படியொரு அமைதி. முக்கிய நபித்தோழர்களெல்லாம் அண்ணலாரை சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நிலவிய அமைதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகதோழர்களே! நிலைமையை நீங்கள் மிகவும் அறிந்திருப்பீர்கள் என நான் கருதுகின்றேன்! நல்லதொரு ஆலோசனையை நல்குங்கள்!” என்று பேச்சை ஆரம்பித்தார்கள்.

நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களின் அறிவினிற் சிறந்த ஆலோசனைகளை பெருமானார் {ஸல்} அவர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மாநபி {ஸல்} அவர்களும் மிகவும் உன்னிப்பாக அவைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வரும் போது எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என்று கூறினார்கள்.

இது நாள் வரை இப்படியானதொரு திட்டத்தை அறிந்தவர்களாக அரேபியர்கள் இல்லாததன் காரணமாக மாநபி {ஸல்} அவர்கள் அகழ் குறித்து முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டு, அதை அங்கீகரித்து அதை நிறைவேற்ற 40 முழம் அகழ் தோண்ட 10 பேர் கொண்ட ஒரு குழுவாக பல குழுக்களை நபி {ஸல்} அவர்கள் நியமித்து தாங்களும் பங்கேற்றார்கள்.

இறுதியாக, அல்லாஹ் மபெரும் வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான். பெரும் அழிவிலிருந்து, மிகப் பெரிய சேதாரத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களைக் காத்துக் கொள்ள அகழ் பெரிதும் உதவியது.

وهذه الغزوة في الحقيقة امتداد لغزوة حنين، وذلك أن معظم فلول هَوَازن وثَقِيف دخلوا الطائف مع القائد العام ـ مالك بن عوف النَّصْرِي ـ وتحصنوا بها، فسار إليهم رسول الله صلى الله عليه وسلم بعد فراغه من حنين وجمع الغنائم بالجعرانة، في الشهر نفسه ـ شوال سنة 8 هـ .
وقدم خالد بن الوليد على مقدمته طليعة في ألف رجل، ثم سلك رسول اللهصلى الله عليه وسلم إلى الطائف، فمر في طريقه على نخلة اليمانية، ثم على قَرْنِ المنازل، ثم على لِيَّةَ، وكان هناك حصن لمالك بن عوف فأمر بهدمه، ثم واصل سيره حتى انتهي إلى الطائف فنزل قريباً من حصنه، وعسكر هناك، وفرض الحصار على أهل الحصن .

ஹுனைன் யுத்தம் வெற்றியோடு முடிக்கப்பட்டு எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய தருணம் அது. போரில் தோல்வி கண்ட எதிரிகள் மூன்று பிரிவினர்களாக ஓடினர்.

ஒவ்வொரு பிரிவினரையும் பிடிக்க அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார்கள்.

அவ்தாஸை நோக்கி ஓடிய எதிரிகளைப் பிடிக்க அபூ ஆமிர் அஷ்அரீ (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவையும், தாயிஃபை நோக்கி ஓடிய எதிரிகளைப் பிடிக்க காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 1000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவையும் அனுப்பி வைத்தார்கள்.

தாயிஃபை நோக்கி ஓடிய எதிரிகள் அங்கிருந்த பெரும் கோட்டை ஒன்றில் அடைக்கலமானார்கள். ஒரு வார காலமாகியும் எதிரிகள் வெளியே வராததால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அந்தப் படைப்பிரிவோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

وشاور رسول الله «صلى الله عليه وآله» أصحابه في أمر حصن الطائف، فقال له سلمان الفارسي: يا رسول الله، أرى أن تنصب المنجنينق على حصنهم، فإنَّا كنَّا بأرض فارس ننصب المنجنيقات على الحصون. وتنصب علينا، فنصيب من عدونا ويصيب منا بالمنجنيق، وإن لم يكن منجنيق طال الثواء.
فأمره رسول الله «صلى الله عليه وآله»، فعمل منجنيقاً بيده، فنصبه على حصن الطائف. وهو أول منجنيق رمي به في الإسلام
وعن مكحول: إن رسول الله «صلى الله عليه وآله» نصب المنجنيق على أهل الطائف أربعين يوماً
سبل الهدى والرشاد ج5 ص385 عن الواقدي، تاريخ الخميس ج2 ص110

பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “எதிரிகளை எப்படி வெளியே கொண்டு வருவது? என்பது குறித்து நபித்தோழர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

அப்போது அங்கிருந்த ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் இது போன்ற தருணங்களில் எதிரிகளின் நிலை மீது கற்களை வீசித்தாக்கும் மின்ஞனீக் எனும் கருவியைப் பயன்படுத்தி எதிரிகளை நிலை குலையச் செய்து கோட்டைகளை விட்டும் வெளியேற்றுவோம்” என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அத்தோடு அதை உருவாக்கியும் கொடுத்தார்கள். சுமார் நாற்பது நாட்கள் முற்றுகைக்குப் பிறகு கோட்டையின் உள்ளே பதுங்கியிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் வெளியே வந்து சரணடைந்தனர்.

( ஸுபுலுல் ஹுதா வர் ரஷாத் லி இமாமி அல் வாகிதீ, தாரீகில் ஃகமீஸ் )

இது போர்காலங்களில் நடை பெற்றிருந்தாலும் கூட, பெரும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் தடுக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பில் எங்கேயோ ஒரு நாட்டில் கையாளப்படுகிற பேரிடர் தடுப்பு மேலாண்மையை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கையில் எடுத்து மிகச் சரியாக திட்டமிட்டு இந்த உம்மத்தை பெரும் இழப்புகளிலிருந்து காப்பாற்றினார்கள் என்பதை மேற்கூறிய இரு நிகழ்வுகளும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

ஓர் இந்திய உதாரணம்…

இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அபாயமான புவிச்சூழலைக் கொண்டது ஜப்பான். பேரிடர்களை எதிர்கொள்ளும் கல்விக்கு மிகச் சிறந்த வழி. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை என்றால், ஒடிஷாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தைவிடப் பின்தங்கிய மாநிலம். கோடையில் கடும் வறட்சியாலும் மழைக்காலத்தில் கடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் மாநிலம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாய்லின் புயலை அது எதிர்கொண்ட விதம் ஐ.நா.சபை உட்பட ஏராளமானோரின் பாராட்டுகளை ஒடிஷாவுக்குப் பெற்றுத் தந்தது.

இன்றைக்கும் ஆச்சரியமூட்டும் பணி அது. மிகக் கடுமையான புயலை ஒடிஷா எதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கை வந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக் களத்தில் இறங்கிவிட்டார்.
வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச் சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றார். முப்படைகளின் உதவியும் உறுதிசெய்யப்பட்டது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல் தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசு துணை சேர்த்துக்கொண்டது.

எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்த கால்நடைகளும்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பு மையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டி இருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன.

புயலுக்கு முந்தைய கடும் மழையிலேயே மோசமான பாதிப்புகள் தொடங்கிவிட்டன. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய பாய்லின் புயல் இன்னும் கொடூரமான பாதிப்புகளை உருவாக்கியது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் நாசமாயின; ரூ. 3,000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் ஆயின.

முன்னதாக, இதே போன்ற பெரும்புயலை 1999-ல் ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 (அடுத்தடுத்த நாட்களில் இறந்தவர்களையும் சேர்த்தாலும் 50-க்குள்தான்).

ஒடிஷாவின் இந்தச் சாதனைக்கு எது அடிப்படை? பூஜ்ய உயிரிழப்பு இலக்கோடு இந்தப் பணியை மேற்கொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். 1999 புயல் பாதிப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்.

அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை, வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப் பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறது ஒடிஷா. ஆனால், மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப் பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது ஒடிஷா பேரிடர் மேலாண்மை மையம்.
 
தமிழக நிலை

தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் கடலூரில் மட்டும் 43 பிணங்கள் விழுந்திருக்கின்றன.

2004 சுனாமியின்போது தமிழகம் 7,996 பேரைப் பறிகொடுத்தபோதும், கடுமையாக விலை கொடுத்தது கடலூர். 2011 தானே புயலின்போதும் பெரும் விலை கொடுத்தது. இப்போதும் சீரழிகிறது.

சரியாக, ஒரு மாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலை ஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை முன்பே இதைச் சுட்டிக்காட்டியது: இன்னொரு பேரிடர் நேர்ந்தால், அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம் இல்லை.

பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரக்கால நடவடிக்கை மையங்களில் 2012-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை அம்பலப்படுத்தியது.சுனாமியின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகையில் ஒரு மையம்கூட இந்த ஆய்வின்போது செயல்படும் நிலையில் இல்லை; கடலூரில் 14 மையங்கள் செயல்படும் நிலையில் இல்லைஎன்று அந்த அறிக்கை குறிப்பிட்டது நிலைமையின் விபரீதத்தை விவரிக்கக் கூடியது.
 
கத்ரினாவின் விளைவுகள்
 
கடலூரில் மழையில் மடியில் பிணத்தைப் போட்டுக்கொண்டு கதறுபவர்களைக் காணச் சகிக்கவில்லை. பாரிஸில் 129 பேர் உயிரிழந்தால், சர்வதேசத்தின் வெளியுறவுக் கொள்கையே மாறுகிறது; ஆனால், இந்திய மரணங்கள் ஏன் யாரையும் உலுக்குவதில்லை? பலரும் கேட்கிறார்கள். காரணம் எளிமையானது.

அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் மாகாணம் 2005-ல் கத்ரினா புயல் பாதிப்புக்குள்ளானது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் புஷ்ஷுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். அதன் பின், நியு ஆர்லியன்ஸ் மாகாண காவல் கண்காணிப்பாளர் எட்டி காம்பஸ் பதவி நீக்கப்பட்டார்.

மேயர் ரே நாகீன் ஊழல் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அமெரிக்கப் பேரிடர் மேலாண்மை முகமை பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. மக்கள் அங்கு உயிரிழப்புகளை அரசியலாகப் பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் இங்கு உயிரிழப்புகளை இழப்பீடுகளாகப் பார்க்கிறார்கள்!
 
( நன்றி தி இந்து தமிழ் நாளேடு 17. 11. 2015, திரு சமஸ் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து… )

வருமுன் காப்பது எப்படி புத்திசாலித்தனமோ அது போன்றே வந்த பின்னர் விழித்தெழுந்து இனி அதுபோல் ஏற்படாதிருக்க முயற்சி செய்வதும் புத்திசாலித் தனமாகும்.

சுருங்கச் சொன்னால் கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து இனிவரும் காலங்களில்  வருமுன் காப்போம்என்ற உணர்வோடு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.

பஞ்ச தந்திரக்கதைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற மீன் கதை ஒன்று உண்டு. வருமுன் காக்கும் மீன், வந்த பின் காக்கும் மீன், வந்த பிறகும் காத்துக் கொள்ளாத மீன்.

நாளை மீன் பிடிக்க வருவார்கள் என்பதற்காக அடுத்த குளத்திற்கு ஓடி விடுவோம் என்று தப்பிச் செல்லும் மீன்கள் இவைவருமுன் காப்போம்வகையைச் சார்ந்தது. வலையில் பிடிபட்டு செத்தது போல் நடித்து கரையிலிருந்து மீண்டும் குளத்திற்குள் பாய்ந்து செல்லும் மீன்கள் இவைவந்த பின் காக்கும்வகையைச் சார்ந்தது. வலையில் பிடிபட்டு மீன் பிடிப்பவனின் கையால் நசுக்கப்படும் மீன்கள் இவைவந்த பிறகும் காத்துக் கொள்ளாதவகையைச் சார்ந்தது.

நம்மிலும் இப்படியான மூன்று வகை குணம் கொண்ட மனிதர்கள் வாழ்கின்றார்கள். இதில்வரும் முன் காப்போம்எனும் சிந்தனை கொண்ட மீன் போல் விழிப்புணர்வுடன் செயல்படுகிற மனிதர்கள் மட்டுமே வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றியாளர்களாய் வலம் வருகின்றார்கள்.

இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையும் அப்படித்தான், அவன் விழிப்புணர்வோடு செயல்படுகிற போது வெற்றி பெற்று விடுகின்றான்.

ஓர் இறைநம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் அவனைச் சுவனத்து பூஞ்சோலையில் உலவ விடுவதும், நரகத்துப் படுகுழியில் தள்ளி விடுவதும் விழிப்புணர்வை வாழ்வில் அவன் கையாளும் முறையைக் கொண்டு தான் அமைகிறது.


விழிப்புணர்வே வெற்றியாளனின் அடையாளம்..

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا () فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا () قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا () وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا ()
மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீது ஆணையாக! திண்ணமாக, ( விழிப்புணர்வோடு செயல்பட்டு ) மனதைத் தூய்மைப் படுத்தியவன் வெற்றி பெற்றுவிட்டான். ( விழிப்புணர்வின்றி செயல்பட்டு ) மனதை நசுக்கியவன் தோற்று விட்டான்”.  ( அல்குர்ஆன்: 91:7 – 10 )

அலட்சியப்போக்கும்விழிப்புணர்வின்மையும்

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ()
ஜின் மற்றும் மனிதவர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. ஆயினும், அவர்கள் அவற்றால் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவர்கள் அவற்றால் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் கீழானவர்கள்! அவர்கள் தான் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” ( அல்குர்ஆன்: 7:179 )

ஆகவே, பாவங்கள் தான் காரணம், அல்லாஹ் தான் இத்தகைய தண்டனைகளைத் தருகின்றான் என்று சொல்லி அல்லாஹ்வின் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு, நம்முடைய மனிதத்தவறுகள் தான் இது போன்ற அழிவுகளுக்கு காரணம் என்பதை மனதிற் கொண்டு கடந்த கால நிகழ்வினிலிருந்து பாடம் பெறுவோம்! நிகழ் காலத்தில் திட்டமிடத் தொடங்குவோம்! எதிர்காலத் தலைமுறையினரை பேரிடர்களிலிருந்து காப்போம்!

மழை செய்த பிழையல்ல! மனித சமூகமே நாம் செய்த பிழைகள் தாம் இவை! எனவே விழிப்புணர்வு பெறுவோம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் விழிப்புணர்வுடன் செயல்படும் ஆற்றலைத் தருவானாக! 

          ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!