Thursday 12 May 2016

2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாம் செய்ய வேண்டியது என்ன?



2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாம் செய்ய வேண்டியது என்ன?



234 தொகுதிகள், 3776 வேட்பாளர்கள், 66 ஆயிரம் வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளர்கள் = 2,93,33,927,  ஆண் வாக்காளர்கள் = 2,88,62,973, மூன்றாம் பாலினத்தவர் = 4,720 , பாதுகாப்பிற்கு 300 ராணுவ கம்பெனிகள், பல்லாயிரக்கணக்கான தேர்தல் அலுவலர்கள், என தமிழ்நாட்டின் 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது.

பெரிய கட்சிகளின் நான்கு முனை கூட்டணி, ஆறு கட்சிகளின் தனித்த போட்டி, சுயேட்சைகள் என முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழக வாக்காளர்களை பெரிதும் சிக்கலில் தவிக்க வைத்தும், சிந்திக்கத் தூண்டியும் உள்ளது தமிழக தேர்தல் களம்.

ஆயிரக்கணக்கான இலவச அறிவிப்புகள், சாத்தியமாகுமா? என சிந்திக்கத் தூண்டும் ஏராளமான வாக்குறுதிகள், வித்தியாசமான கோஷங்கள், வித விதமான முழக்கங்கங்கள், தலைவர்களின் சூறாவளிப் பிரச்சாரங்கள் என களை கட்டியிருக்கின்றது தமிழக தேர்தல் களம்.

தமிழக முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமான களம் தான்.

ஆம்! கடந்த கால தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரதானமான பிரச்சனைகள், முக்கியமான கோரிக்கைகள், இட ஒதுக்கீடு போன்ற வாழ்வாதார அம்சங்கள் இடம் பெற்று அதை மையமாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் தங்களின் வாக்குகளை அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழங்கி வந்திருக்கின்றது.

ஆனால், தற்போதைய தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை, கரிசனத்தை எந்த அரசியல் கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, முக்கியத்துவமும் தரவில்லை.

இதற்கு முஸ்லிம் அமைப்புகள், மற்றும் கட்சிகளின் சிதறிய சிந்தனைகள் தாம் முக்கியக் காரணம் என அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றார்கள்.

ஆம்! இரு அரசியல் கட்சிகள் திமுக வோடும், ஒரு அரசியல் கட்சி அதிமுக வோடும், ஒரு அரசியல் கட்சி மக்கள் நலக்கூட்டணியோடும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருக்கின்றன. ஒரு அரசியல் கட்சி குறிப்பிட்ட சில தொகுதிகளில் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது.

என்றாலும், கடந்த காலங்களில் வாக்களித்தது போன்று இந்த தேர்தலிலும் முஸ்லிம் சமூகம் வாக்களித்து, தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க இருக்கின்றது.

யாரைத் தேர்ந்தெடுப்பது? எதை அளவுகோலாக வைத்து தேர்ந்தெடுப்பது? எப்படித் தேர்ந்தெடுப்பது? எனும் குழப்பத்தில் ஏனைய வாக்களர்களைப் போலவே முஸ்லிம் சமூகமும் திணறிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது.

வாருங்கள்! குழப்பமான இந்த கேள்விகளுக்குத் தெளிவை நோக்கி சத்திய மார்க்கத்தை அணுகுவோம்! நம் வாக்குகளின் மூலம் நமக்கான தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம்!

தேர்தலும்வாக்குரிமையும்….. முஸ்லிம் சமூகமும்….

இந்த தேசம் ஒன்றும் இஸ்லாமிய ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இங்கு நடைபெறும் தேர்தலும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்ததும் இல்லை. இந்த தேசத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் யாரும் 100 சதவீதம் இறைவனுக்குப் பயந்து நடப்பவர்கள் என்று சொல்லி விடவும் முடியாது.

என்றாலும், உலகில் வரலாறு தோன்றிய காலம் தொட்டு இன்று வரை இந்த முஸ்லிம் சமூக முஸ்லிம் அல்லாத பல தலைவர்களின், ஆட்சியாளர்களின், மன்னர்களின் ஆட்சி, அதிகாரத்தின் நிழலின் கீழ் பயணித்தும், கடந்தும் வந்திருக்கின்றது.

எனவே, இஸ்லாமிய வழிகாட்டல் இந்த முஸ்லிம் உம்மத்துக்கு நிறைவாகவே இது விஷயத்தில் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக! அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை இடுகின்றான். அமானிதம்அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்!”                               ( அல்குர்ஆன்: 4: 58 )

வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமை ஆகும்.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் இந்த உரிமை முஸ்லிம் சமூகத்திற்கு அமானிதம் எனும் அந்தஸ்தை கொடுக்கிறது.

மேற்கூறிய இறை வசனத்தின் அடிப்படையில் அதை உரியவர்களிடம், உரிய முறையில் ஒப்படைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தார்மீக கடமையாகும்.

ஆனால், இங்கு தான் முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் சிக்கல் ஏற்படுகின்றது. எப்படி உரியவர்களை அடையாளம் காண்பது? எப்படி உரிய முறையில் ஒப்படைப்பது?

ஏனெனில், இங்கு ஆட்சியாளர்களும் சரி, மக்கள் பிரதிநிதி எனும் பேரில் வேட்பாளர்களாக நிற்பவர்களும் சரி எப்படிப் பட்டவர்கள் என்பதை செய்தித்தாள்களும், ஊடகங்களும் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும், யாரையாவது ஒருவரை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். தேர்ந்தெடுக்காமல் ஒதுங்கிக் கொண்டால் மற்றவர்கள் யாரையாவது தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

ஆகவே, உரிய முறையில் உரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும்.

ஓர் இறை நம்பிக்கையாளன் தன்னுடைய வாழ்வில் அவன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது அவனுடைய ஈருலக வாழ்வின் வளங்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்யுமாறு இஸ்லாம் பணிக்கிறது.

தான் அணிகிற செருப்பில் இருந்து துவங்கி தன்னுடைய வாழ்வில் அங்கம் வகிக்கிற எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அது நம்மை ஆட்சி செய்கிற ஆட்சியாளனாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையாக இருந்தாலும், மொழிகிற வார்த்தையாக இருந்தாலும் நல்லவற்றையே மிக மிக நல்லவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கும் ஓர் இறைவிசுவாசியை அழகிய அழகிய முறையில் அது வாழ்த்துகிறது, பாராட்டுக்கள் பல வழங்கி கௌரவிக்கிறது.

நன்மை தரும் விஷயத்தை தேர்ந்தெடுப்பது நபிமார்களின் நற்பண்புகளில் ஒன்றாக இஸ்லாம் வர்ணித்துக் கூறுகின்றது.

நபி {ஸல்} அவர்களின் முன்மாதிரி

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையேஅது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.

அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள்.

( நூல்: முஸ்லிம், பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி )

மூஸா {அலை} அவர்களின் முன்மாதிரி…

நபி மூஸா அலை அவர்கள் எகிப்தில் இருந்து மத்யன் நோக்கி சென்ற வரலாற்றை குர்ஆன் அழகு பட விவரிக்கின்றது.

மத்யனுக்கு வந்த மூஸா {அலை} அவர்கள் ஊர் எல்லையில் மக்களில் பலர் ஒரு கிணற்றிற்கு அருகே கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.

மக்களில் எல்லோரும் சென்ற பின்னரும் இரண்டு பெண்கள் மட்டும் அங்கு வெகு நேரம் தங்கள் கால்நடைகளோடு  நின்று கொண்டிருந்ததை அறிந்து கொண்ட மூஸா {அலை} அவர்கள் அருகே வந்து விவரம் கேட்டார்கள்.

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا

மூஸா {அலை} அவர்கள் அப்பெண்களிடம் உங்களுடைய பிரச்சனை என்ன? என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள்இந்த இடையர்கள் தங்கள் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் வரை எங்களுடைய கால்நடைகளுக்கு எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லைஎன்று கூறினர்.

இதைக் கேட்ட மூஸா {அலை} அவர்கள் அவர்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டினார். பிறகு ஒரு நிழலில் போய் அமர்ந்து கொண்டு “என் இறைவனே! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாகவே இருக்கின்றேன்” என்று கூறினார்.

சற்று நேரத்தில் அவ்விரு பெண்மணிகளில் ஒருவர் நாணத்துடன் வந்து நின்று “என்னுடைய தந்தை உங்களை அழைத்து வரச் சொன்னார். நீங்கள் எங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டியதற்கு கூலியைத் தங்களுக்குத் தருவதற்காக!”

முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு பிரதேசம், அந்நியப் பெண் ஒருவர் தம் தந்தை அழைப்பதாக கூறி அழைக்கிறார். இயற்கையாகவே வெட்க உணர்வு மேலோங்கியிருந்த மூஸா {அலை} அவர்களால்,  ஒரு பெண்ணுக்கு பின்னால் நடக்க அந்த வெட்கம் அவரை அனுமதிக்கவில்லை.

ஆகவே, வழி காட்ட வேண்டிய பெண்ணை தனக்குப் பின்னே வரச் சொல்லி விட்டு மூஸா {அலை} அவர்கள் வழியை கேட்டுக் கொண்டே, அந்தப் பெண்களின் தந்தையான ஷுஐபு {அலை} அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள்.

மூஸா {அலை} அவர்களைப் பற்றியுண்டான விவரங்களை ஷுஐபு {அலை} அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ ()

அப்போது, அவ்விரு பெண்களில் ஒருவர் தம் தந்தையின் அருகே வந்து “தந்தையே! இவரைப் பணியாளராய் வைத்துக் கொள்ளுங்கள். எவர் வலிமை மிக்கவராகவும், நம்பிக்கையாளராகவும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர் தான் உங்களின் பணியாளராய் இருக்கத் தகுதியானவராவார்”.     ( அல்குர்ஆன்: 28: 26 )

இவர் நம்பிக்கயாளர் என்று உனக்கு எப்படித் தெரியும் என்று ஷுஐபு {அலை} அவர்கள் கேட்க, அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார் ”எனக்குப் பின்னால் வா பெண்ணே! எனக்கு முன்னால் நீ நடந்து சென்றால் வீசும் காற்று உன் உடலழகை எனக்கு வர்ணித்து விடக் கூடாது! என்று என்னிடம் அவர் கூறினார்என்றார்.
 .
وأما أمانته : فإنه قال لي امشي خلفي حتى لا تصف الريح بدنك - تفسير البغوي  

ஆதரவற்ற ஓர் பிரதேசத்தில், நிராயுதபாணியாய் நின்று கொண்டிருந்த தருணத்தில்,  மூஸா {அலை} அவர்களுக்கு ஒரு வேலையையும், உண்ண உணவையும், ஒண்ட ஓர் இடத்தையும் பெற்று தந்தது, அவரின் முன்னால் இருந்த ஓர் காரியத்தின் நன்மையான அம்சத்தை தேர்ந்தெடுத்ததால் தான்.                ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ )

நபி ஸுலைமான் (அலை) அவர்களின் முன் மாதிரி....

ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை ஸபா நாட்டு அரசி வருவதற்கு முன் இங்கு யார் கொண்டு வருவார் என்று வினவியதற்கு,

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَنْ يَأْتُونِي مُسْلِمِينَ () قَالَ عِفْرِيتٌ مِنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ تَقُومَ مِنْ مَقَامِكَ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ () قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ

அல்லாஹ் கூறுகின்றான்: ஸுலைமான் {அலை} கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாய் வருமுன் அப்பெண்மணியுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வர முடியும்”?

பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தை விட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வருகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”

அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர்நீங்கள் கண்மூடி திறப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுகின்றேன்என்று கூறினார்.

தங்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்த, தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிற ஜின்னைப் பயன்படுத்தாமல், இறை நெருக்கத்தைப் பெற்ற ஆலிமின் மூலம் அரியணையைக் கொண்டு வர முடிவு செய்து, அதை ஆமோதித்தார்கள்.

அல்லாஹ்வும் அவ்வாறே ஸுலைமான் {அலை} அவர்களின் முடிவுக்கிணங்க அரியணையை அடுத்த கணம் ஸுலைமான் {அலை} அவர்களின் கண் முன் கொண்டு வைத்தான்.

ஆக நல்லவற்றை, நன்மையானவற்றைத் தேர்ந்தெடுப்பது வாழ்வில் அளப்பெரும் நன்மைகளை பெற்றுத் தந்திடும் என்பதை உணர்த்துகின்றது.

1. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…

இருமலைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த ஓர் சமூகத்தார் யஃஜூஜ் – மஃஜூஜ் எனும் கலகக்காரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் அராஜகப் போக்கால் வாழ்க்கையின் மீது நிராசை கொண்டு வாழ்ந்து வந்தனர்.

யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தாரை எதிர் கொள்ளத் துணிவில்லாமல் தகுதி உள்ள எவராவது வரமாட்டார்களா? அவர்களைக் கொண்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்களின் தாக்குதல்களிலிருந்து மீண்டு விடலாம் என எண்ணிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தனர்.

இந்த நேரத்தில் தான் உலகை சுற்றி வந்து கொண்டிருந்த துல்கர்னைன் (அலை) அவர்கள் அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகை தந்திருந்தார்கள்.

இதன் பின்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ், அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் நயம்பட விவரிக்கின்றான்.

حَتَّى إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا () قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا () قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا () آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا ()
قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا ()

பிறகு, துல்கர்னைன் (அலை) வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே வாழ்ந்துவந்த ஓர் சமுதாயத்தைக் கண்டார். அவர்களின் பேச்சை துல்கர்னைன் அவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

இந்நிலையில், ஒரு நாள் அந்த சமுதாய மக்கள், “துல்கர்னைன் அவர்களே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் நாங்கள் வசிக்கும் பகுதியில் பெரும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து வருகின்றனர். எனவே, நீர் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச் சுவரை எழுப்பித்தர வேண்டும், இதற்காக நாங்கள் உங்களுக்கு ஏதேனும் கப்பம் வரி செலுத்த வேண்டுமா? என்று கோரினார்கள்.
அதற்கு, துல்கர்னைன் அவர்கள் “என்னுடைய இறைவன் எனக்கு ஏராளமாக வழங்கியிருக்கின்றான். எனக்கு எதுவும் நீங்கள் தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள்” நான் உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச் சுவரை எழுப்பித் தருகின்றேன். அதற்காக நீங்கள் இரும்புப்பாளங்களை கொண்டு வாருங்கள்” என்றார்கள்.

இறுதியில், இரு மலைகளுக்கு இடையிலான பகுதிகளை இரும்புப் பாளங்களால் நிரப்பி விட்ட பிறகு, மக்களை நோக்கி துல்கர்னைன் “இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்! என்று கூறினார்.

கடைசியில், அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய் பழுக்கக் காய்ந்த போது மக்களை நோக்கி துல்கர்னைன் “னான் உருக்கிய செம்புத் திரவத்தைக் கொண்டு வாருங்கள்! நான் அதன் மீது ஊற்றுகின்றேன்.

யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்திருந்தது.

அம்மக்கள் பிரம்மாண்டமான அந்த தடுப்புச் சுவர் குறித்து வியப்பில் ஆழ்ந்த போது துல்கர்னைன் “இது என் இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் ( மறுமை ) வந்து விட்டால், அவன் இதனைத் தூள் தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையாகும்”.

                                                  ( அல்குர்ஆன்: 18: 92 – 98 )

தங்கள் பகுதியின் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்த ஓர் சமூகம் தகுதியான ஒருவரை அடையாளம் கண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் முறையிட்டு அவர்கள் எதிர் கொண்டு வந்த பிரச்சனையில் இருந்து மறுமை நாள் வரயிலான ஓர் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொண்டது என்றால் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் முழு ஆற்றல் கொண்டவர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்ய வேண்டும்.

2. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்….

எகிப்தின் பேரரசர் தான் கண்ட விநோதமான, அதே நேரத்தில் உள்ளத்தில் உறுத்தலை ஏற்படுத்திய கனவொன்றை கண்டு பயந்து திடுக்கிட்டார்.

அரசவையில் இடம் பெற்றிருந்த முக்கிய மந்திரிகளிடம் கூறி அதற்கான விளக்கம் கேட்டார். ஆனால், மந்திரிகளோ தங்களுக்கு அது பற்றிய அறிவும் ஞானமும் இல்லை என்று கூறி கை விரித்து விட்டனர்.

யூஸுஃப் அத்தியாயத்தின் 43 மற்றும் 44 –ஆம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்நிலையில், யூஸுஃப் (அலை) அவர்களுடன் சிறையில் ஒன்றாக இருந்த இரு கைதிகளில் ஒருவர் அப்போது அரசவையில் பணியாற்றி வந்தார்.

وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ

அவர் அரசரிடம் “ நான் இக்கனவிற்கான விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கின்றேன். என்னைச் சிறைச்சாலையில் இருக்கிற யூஸுஃப் அவர்களிடம் அனுப்புங்கள்” என்றார்.                                       ( அல்குர்ஆன்: 12: 45 )

அரசரின் அனுமதி பெற்று உள்ளே சென்று, யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து கனவிற்கான விளக்கத்தை கேட்டறிந்து அரசரிடம் வந்து அவர் கூறினார்.

யூஸுஃப் அத்தியாயத்தின் 46 முதல் 49 வசனம் வரை அல்லாஹ் விளக்கிக் கூறுகின்றான்.

விளக்கத்தைக் கேட்டு திடுக்கிட்ட அரசர் இறுதியாக, சிறையிலிருந்து யூஸுஃப் (அலை) அவர்களை விடுவித்து தம் அருகே அழைத்து..

فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ () قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ ()

“இப்போது, நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும், முழு நம்பிக்கைக் குரியவராகவும் ஆகிவிட்டீர்” என்றார். அதற்கு, யூஸுஃப் (அலை) அவர்கள் “ நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொருப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

                                                      ( அல்குர்ஆன்: 12: 55 )

எகிப்தின் பேரரசர் யூஸுஃப் {அலை} அவர்களை நாட்டின் நிதி மற்றும் உணவு வழங்கல் துறையின் அமைச்சராக ஆக்கினார்கள். யூஸுஃப் (அலை) கூறியது போன்றே எகிப்தை ஏழு ஆண்டுகள் கடும் பஞ்சம் சூழ்ந்து கொண்டது.

பஞ்சத்தில் இருந்து எகிப்தை மாத்திரமல்ல, எகிப்தை சுற்றியிருக்கிற ஏனைய நாடுகளையும் தங்களின் நிர்வாகத்திறமையால் காப்பாற்றினார்கள்.

தகுதியானவர்களை அடையாளம் காண்பதோடு நின்று விடாமல், அவர்கள் செயல்படுவதற்கான வாப்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதை மேற்கூறிய இரு நிகழ்வுகளின் மூலம் அல்லாஹ் உணர்த்துகின்றான்.

எல்லாம் சரி, தற்போது வேட்பாளரக நிற்பவர்கள் ஒன்றும் துல்கர்னைன் (அலை), யூஸுஃப் (அலை) அவர்களைப் போன்றவர்கள் இல்லையே என்று நினைக்கலாம்!

நமக்கு முன்னால் ஒரு கோப்பையில் அல்லது ஒரு தட்டில் நொறுக்கிய கண்ணாடி துகள்களும், ஒரு தட்டு நிறைய ஆணிகளும், ஒரு தட்டு நிறைய குண்டூசிகளும் வைக்கப்பட்டு கையால் எடுக்கச் சொன்னால் நாம் எதை எடுப்போம்?

கண்டிப்பாக, மூன்றும் கையில் காயம் ஏற்ப்படுத்தக் கூடியது தான். ஆனாலும், எது சிறிய அளவிலான காயத்தை ஏற்படுத்துமோ அதையே தேர்ந்தெடுத்து கையில் எடுப்போம்.

அது போன்று தான், இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு வேட்பாளராக நிற்கலாம். நிற்கிற வேட்பாளர்களில் எவர் பரவாயில்லாதவர் என்பதைப் பார்த்து தேர்ந்தெடுத்து வாக்களிப்பது தான் சிறந்ததோர் நிலைப்பாடாகும்.

தகுதி இல்லாதவர்களை தேர்ந்தெடுப்பதால் நமக்கும், நம் பகுதியில் உள்ளவர்களுக்கும், நம் தொகுதியில் உள்ளவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை என்பதோடு நாம் அதற்கு துணை போவதால் அதனால் ஏற்படுகிற தீமைகளில் நாமும் பொறுப்பாளியாக ஆகிவிடுவோம்.

தகுதி இல்லாத ஸாமிரியைத் தேர்ந்தெடுத்ததால் பனூஇஸ்ராயீல் சமூகம் சந்தித்த விளைவுகளையும், ஷைத்தானின் ஆலோசனையைத் தேர்ந்தெடுத்ததால் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் சந்தித்த கஷ்டங்களையும் அல்குர்ஆன் விவரிக்காமல் இல்லை.

இன்றைக்கு நாம் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் நமக்கு எவ்விதச் சிரமும் இல்லை. நமக்கு முன்னால் ஊடகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறது எனவே, நமக்கு தேர்வு செய்வது இலகுவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஐந்தாண்டுகளுக்கு நம்முடைய பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்ற நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தான் வாக்குரிமை. அந்த வாக்குரிமையை மிகச் சரியாக நிறைவேற்றுவோம்!

ஏனெனில், இன்றைய சரியான தேர்வே! நாளைய நமக்கான தீர்வு!