Friday 1 July 2016

ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் சிந்தனை!!!



ஈதுல் ஃபித்ர்ஈகைத் திருநாள் சிந்தனை!!!



உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிற பல முஸ்லிம்களால் இந்த ஈது தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை.

சிரியா, ஃபலஸ்தீன், லிபியா, சோமாலியா, ஈராக், எகிப்து, பர்மா, மியான்மர், ஆஃப்கானிஸ்தான் போன்ற தேசங்களில் வாழும் முஸ்லிம்களால் வறுமையின் காரணத்தினாலோ, எதிரிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரை விடுவதில் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய காரணத்தினாலோ, ஆரோக்கியமற்ற நிலை மற்றும் நோய்கள் போன்ற  காரணத்தினாலோ, இன்னும் இது போன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டோ இந்த ஈது தினத்தை – ஈகைத் திருநாளை கொண்டாட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும், அல்லாஹ் நமக்கு மேற்கூறிய எவ்வித பிரச்சனைகளும் இன்றி, இன்றைய ஈது தினத்தை மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் அமைத்துக் கொடுத்து, குடும்பத்தோடும், சுற்றத்தோடும், நட்புகளோடும் கொண்டாடுகிற நற்பேற்றைத் தந்து அருள் புரிந்து இருக்கின்றான்.

இது என்னுடைய அல்லது உங்களுடைய முயற்சியைக் கொண்டு நடந்த ஒன்றல்ல! மாறாக, இது நம் அனைவரின் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கிற மாபெரும் அருட்கொடையாகும்.

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

உங்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு அருட்கொடையும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்தே உங்களுக்கு அருளப்படுகின்றது”. ( அல்குர்ஆன்: 16: 53 )

இதற்காக நாம் முதலாவதாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்! அல்ஹம்து லில்லாஹ்…. 
 
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அதிகப்படுத்தி தருவான்”.                                      ( அல்குர்ஆன்: 14: 7 )

அல்லாஹ்! நம் அனைவருக்கும் வாழ்வின் இறுதி வரை இன்னும் ஏராளமான ஈது தினங்களை இன்றைய நாளில் தந்தது போன்று தந்தருள் புரிவானாக! ஆமீன்!!

ஏனெனில், பசியிலிருந்து நாம் விடுதலை அடைந்ததும், பயத்திலிருந்து விலகி நிம்மதியோடு இருப்பதும் அவனின் மாபெரும் கருணையின் துணை கொண்டே

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ () الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ ()

நீங்கள் கஅபாவின் இறைவனை வணங்கி, வழிபடுங்கள்! அவனே பசியிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்கு உணவளிக்கின்றான். மேலும், பயத்திலிருந்து உங்களை காத்து உங்களுக்கு நிம்மதியை வழங்குகின்றான்

                                                    ( அல்குர்ஆன்: 106: 3,4 )

மனிதன் தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றான்!

அப்படி மகிழ்ச்சியான தருணங்கள் அமையப் பெற்றால் சில போது தன் நிலையை மறந்து விடுகின்றான். இன்னும், சில போது அவன் தன்னோடு வாழும் சமூக மக்களின் நிலையை மறந்து விடுகின்றான். இன்னும், சில போது படைத்த ரப்பையே மறந்து விடுகின்றான்.

ஆதலால் தான் அல்லாஹ் மகிழ்ச்சி நிறைந்த இன் நன்னாளில் ஈகையை வெளிப்படுத்தும் விதமாக ஸதக்கத்துல் ஃபித்ர் தர்மத்தையும், இனிய பெருநாள் தொழுகையையும் அழகிய வழிமுறையாக ஆக்கித்தந்து தன் நிலையை, தன்னோடு வாழும் சமூக மக்களின் நிலையை, தன்னைப் படைத்த ரப்பை, மறந்து வாழும் நிலைகளில் இருந்து காத்து அருள் புரிந்திருக்கின்றான்.
  
ஆகவே, குடும்பம், சுற்றம், நட்பு சகிதமாக சந்தோஷத்தில் திளைத்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் ஈகையை வழங்கி விட்டு, இறைவனை தொழுது விட்டு அமர்ந்திருக்கிற உங்களின் கவனத்திற்கு ஈகைத் திருநாள் சிந்தனையாக இஸ்லாம் வலியுறுத்துகிற முக்கியமான மூன்று அம்சங்களை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

1. சுய மரியாதையோடும், கண்ணியத்தோடும் பிறருக்கு ஈந்து வாழும் கொடைத்தன்மையோடும் வாழ்கிற நல்ல சந்ததியை, அழகிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.

சிறந்த, ஸாலிஹான பெற்றோருக்கான தகுதிகளில் ஒன்றாக இஸ்லாம் சொல்கிற முக்கியமான அம்சங்களில் ஒன்று.

சந்ததிகளுக்கு, வாரிசுகளுக்கு நிறைவான அல்லது வாழ்க்கைக்கு போதுமான அளவிற்கு சொத்து, செல்வங்களை சேர்த்து வைக்க வேண்டும்.

அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் மூஸா {அலை} மற்றும் கிள்ர் {அலை} ஆகியோரின் உரையாடல் மற்றும் பயணத்தின் ஊடாக பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் சுட்டிக்காட்டுகிற அல்லாஹ் சந்ததிகளின் எதிர்கால வாழ்விற்காக சொத்து, செல்வங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றான்.

فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ()

மூஸா {அலை} அவர்களும், கிள்ர் {அலை} அவர்களும் ஒரு ஊருக்கு வருவார்கள். அவ்வூர் வாசிகளிடம் உண்பதற்கு உணவும் கேட்பார்கள். ஆனால், இருவருக்கும் உணவளிக்க அவ்வூர் வாசிகள் மறுத்து விடுவார்கள். இந்த நிலையில், ஊரின் ஓர் பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் சிதிலமடைந்து கிடக்கும் ஒரு வீட்டின் சுவரை சரி செய்யும் பணியில் கிள்ர் {அலை} அவர்கள் மூஸா {அலை} அவர்களின் துணை கொண்டு ஈடுபட்டு சரி செய்து விடுவார்கள்.

உணவு தர மறுத்த ஊரில் சிதிலமடைந்து கிடைந்த ஒரு வீட்டின் சுவரை செப்பனிட்ட இந்த செயலால் சினமுற்ற மூஸா {அலை} அவர்கள்நாம் செய்த இந்த வேலைக்காக கொஞ்சம் பணத்தை கூலியாகவாவது பெற்றிருக்கலாம் அல்லவா?” என கிள்ர் {அலை} அவர்களிடம் கேட்பார்கள்.                  ( அல்குர்ஆன்: 18: 77 )

பயணத்தில் நடைபெற்ற அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமளிக்கும் கிள்ர் {அலை} அவர்கள் இதற்கும் விடையளிப்பார்கள்.

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا ()

நாம் செப்பனிட்டுச் சரி செய்த சுவர் இருக்கிறதல்லவா அதன் கீழே காலஞ் சென்ற ஸாலிஹான ஒரு பெற்றோர் தங்களின் இரு பிள்ளைகளுக்காக செல்வத்தை புதைத்து வைத்து சென்றிருக்கின்றனர். உமது இறைவனான அல்லாஹ், அவனின் அருள் கொண்டு அந்த இரு பிள்ளைகளும் பருவ வயதை அடைந்ததன் பின்னர் அவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க நாடினான். இதற்காகத்தான் நானும், அவனுடைய ஆணைக்கிணங்க இவ்வாறு செய்தேன். ஆனால், உம்மால் இது விஷயத்தில் எம்முடன் பொருமையாக இருக்க முடியாமல் போய் விட்டதுஎன்று கிள்ர் {அலை} விளக்கம் அளிப்பார்கள்.                        ( அல்குர்ஆன்: 18: 82 )

இங்கே, அல்லாஹ் தங்களின் வாரிசுகளுக்காக, சந்ததிகளுக்காக செல்வத்தைச் சேர்த்து வைத்த பெற்றோர்களை அடையாளப்படுத்தும் போது وَكَانَ أَبُوهُمَا صَالِحًا அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் ஸாலிஹீன்களாக இருந்தார்கள் என்கிறான்.

ஒரு மனிதர் நபிகளாரின் அவையில் வந்து அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தையும் விட்டுச் செல்கின்றார்.

இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் சென்று விடுகின்றார்என்று.

அதற்கு, “இருவரில் முதலாமவரே சிறந்த தந்தையாவார் என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.                            ( நூல்: தர்ஃகீப் அத் தர்ஹீப் )

عن الزّهري عن عامر بن سعد بن أبيه أنّ رسول الله صلّى الله عليه وسلّم جاء يعوده عام حجّة الوداع من وجعٍ اشتدّ به، فقلت: (يا رسول الله، إنّي ذو مال ولا يرثني إلّا ابنة، أفأتصدّق بثلثي مالي؟ فقال صلّى الله عليه وسلم: لا، قلت: فالشّطر يا رسول الله؟ قال رسول الله عليه الصلاة والسلام: لا، قلت: فالثّلث؟ فأجاب رسول الله صلّى الله عليه وسلم: الثّلث والثّلث كثير، إنّك إن تذر ورثتك أغنياء خيرٌ من أن تذرهم عالة يتكفّفون النّاس،

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:  இறுதி ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி {ஸல்} அவர்கள் இருந்தார்கள்.

அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன் எனக் கருதுகின்றேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை.

எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்வேண்டாம்" என்றார்கள்.

பின்னர் நான் பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள் வேண்டாம்என்று கூறிவிட்டு, வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்துவிடுங்கள். அதுவும் அதிகம்தான்.

ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்!” என்று கூறினார்கள்.                         ( நூல்: புகாரி )

எனவே, நம்முடைய சந்ததிகளை வாழ்க்கையில் எந்த சந்தர்பத்திலும், எவரிடத்திலும் கையேந்துகிற சூழ்நிலையில் விட்டுச் செல்வதில் இருந்து தவிர்ந்து, போதுமான, வாழ்க்கைக்குத் தேவையான சொத்து செல்வங்களை சேர்த்து தன்னிறைவானவர்களாக வாழ வழி வகை செய்வோம்.

2. அல்லாஹ் தந்த செல்வங்களைக் கொண்டு மன நிறைவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். எந்தத் தருணத்திலும் எவரிடமும் கையேந்தாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

உலகில் அல்லாஹ் ஏற்றத் தாழ்வுகளோடு தான் மனித சமுதாயத்தைப் படைத்திருக்கின்றான்.

உலகில் சிலரை அல்லாஹ் சொத்து, செல்வத்தோடும், வீடு வாசலோடும், பொருளாதாரத்தோடும் வளமாக வாழ வைத்துள்ளான்.

இன்னும் சிலரை அல்லாஹ் கஷ்டத்தோடும், சிரமத்தோடும், ஏழ்மையோடும் அடுத்த வேலை சாப்பிட ஒன்றும் இல்லாத நிலையிலும் வறுமையோடு வாழ வைத்துள்ளான்.

وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ
  
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரை விடச் செல்வத்தில் மேன்மை படுத்தி இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 16: 71 )

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும், இவர்கள் உலக வாழ்வில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மன நிறைவு அடைகின்றார்கள். ஆனால், மறுமையைக் கவனிக்கும் போது இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை”.     ( அல்குர்ஆன்: 13: 26 )

அல்லாஹ் வழங்கியிருப்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு, வசதிக்கு தக்கவாறு வாழ்ந்து கொள்ள வேண்டும். அப்படி சிரமத்திற்கு மத்தியில் போதுமென்ற மனதோடு வாழ்ந்தால் அல்லாஹ் கஷ்டத்திற்கு பின் இலகுவான வாழ்வையும், சிரமத்திற்குப் பின் உயர்வான வாழ்வையும் வழங்குவதாக வாக்களிக்கின்றான்.

لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا ()

அல்லாஹ்வால் வசதி வழங்கப்பட்டவர்கள் தங்களின் வசதிக் கேற்ப செலவு செய்து கொள்ளவும். மேலும், வசதி குறைவாக வழங்கப்பட்டிருக்கின்றவர்களும், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தமக்காக செலவு செய்து கொள்ளவும்; எந்த ஓர் ஆத்மாவையும் அல்லாஹ் அதற்கு கொடுத்திருப்பதேயல்லாமல் ( மிகையாகச் செலவு செய்யும் படி ) சிரமம் கொடுக்க மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர் அல்லாஹ் வெகு விரைவில் இலகுவையும், சுகமான வாழ்வையும் ஏற்படுத்தித் தருவான்”.                                        ( அல்குர்ஆன்: 65: 7 )

அண்ணலாரின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்கள் உடைய அழகிய பண்பாடுகளை, குண நலன்களை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் புகழ்ந்து குறிப்பிடுகின்றான்.

அதில், இரண்டு இடங்களில் கூறும் இரண்டு பண்புகள் ஒட்டு மொத்த உம்மத்திற்கும் முன்மாதிரியாய் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.

1. தங்களோடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மேலான வசதி வாய்ப்புகளைப் பார்த்தும் அவர்களிடம் தேவையாகுவதில் இருந்தும் விலகி வாழ்ந்தார்கள்.

அன்ஸாரிகளான அவர்கள், நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை மிகவும் நேசிக்கின்றனர். மேலும், அவ்வாறு குடியேறி வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புகளில் இருந்து தங்கள் இதயத்தால் கூட தேவைப்பட மாட்டார்கள். மேலும், தங்களுக்கு தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே உதவி பெற தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களே, அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்”.                             ( அல்குர்ஆன்: 59: 9 )

2. தங்களுக்குத் தேவைகள் இருந்த போதும் எவரிடத்திலும் கையேந்தாமல் பிறர் பார்வையில் செல்வந்தர்கள் போல் வாழ்ந்தார்கள்.

பூமியில் நடமாடித் தங்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்களே அத்தகையவர்களுக்குத் தான் உங்களின் கரிசனமும், அரவணைப்பும் உரியதாகும். பிறரிடம் யாசிக்காத அவர்களுடைய பேணுதலைக் கண்டு அறியாதவர்கள் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணிக் கொள்வார்கள். அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு ( நபியே! ) நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்க மாட்டார்கள்; இத்தகையோருக்காக நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அல்லாஹ் நிச்சயம் நன்கறிபவனாக இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 2: 273 )

வரலாற்றில் வாகாய் மிளிரும் ஓர் எடுத்துக் காட்டை இங்கே நாம் பார்ப்போம்.

حدثني أبو نعيم بنحو من نصف هذا الحديث حدثنا عمر بن ذر حدثنا مجاهد أن أبا هريرة كان يقول ألله الذي لا إله إلا هو إن كنت لأعتمد بكبدي على الأرض من الجوع وإن كنت لأشد الحجر على بطني من الجوع ولقد قعدت يوما على طريقهم الذي يخرجون منه فمر أبو بكر فسألته عن آية من كتاب الله ما سألته إلا ليشبعني فمر ولم يفعل ثم مر بي عمر فسألته عن آية من كتاب الله ما سألته إلا ليشبعني فمر فلم يفعل ثم مر بي أبو القاسم صلى الله عليه وسلم فتبسم حين رآني وعرف ما في نفسي وما في وجهي ثم قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال الحق ومضى فتبعته فدخل فاستأذن فأذن لي فدخل فوجد لبنا في قدح فقال من أين هذا اللبن قالوا أهداه لك فلان أو فلانة قال أبا هر قلت لبيك يا رسول الله قال الحق إلى أهل الصفة فادعهم لي قال وأهل الصفة أضياف الإسلام لا يأوون إلى أهل ولا مال ولا على أحد إذا أتته صدقة بعث بها إليهم ولم يتناول منها شيئا وإذا أتته هدية أرسل إليهم وأصاب منها وأشركهم فيها فساءني ذلك فقلت وما هذا اللبن في أهل الصفة كنت أحق أنا أن أصيب من هذا اللبن شربة أتقوى بها فإذا جاء أمرني فكنت أنا أعطيهم وما عسى أن يبلغني من هذا اللبن ولم يكن من طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم بد فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم وأخذوا مجالسهم من البيت قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال خذ فأعطهم قال فأخذت القدح فجعلت أعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح فأعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح فيشرب حتى يروى ثم يرد علي القدح حتى انتهيت إلى النبي صلى الله عليه وسلم وقد روي القوم كلهم فأخذ القدح فوضعه على يده فنظر إلي فتبسم فقال أبا هر قلت لبيك يا رسول الله قال بقيت أنا وأنت قلت صدقت يا رسول الله قال اقعد فاشرب فقعدت فشربت فقال اشرب فشربت فما زال يقول اشرب حتى قلت لا والذي بعثك بالحق ما أجد له مسلكا قال فأرني فأعطيته القدح فحمد الله وسمى وشرب الفضلة

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன்.

மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி {ஸல்} அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை.

பிறகு, உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன்

அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.

பிறகு, அபுல்காசிம் நபி {ஸல்} அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன்! இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள்.

 நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி {ஸல்} அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன்.

அப்போது, (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி {ஸல்} அவர்கள் அபூ ஹிர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.

திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவும் மாட்டார்கள்.

நபி {ஸல்} அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி {ஸல்}  அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். 

இப்போது நபி {ஸல்} அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன்.

 திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி {ஸல்} அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள்.

நபி {ஸல்} அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்றேன். நபி {ஸல்} அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார்.

இறுதியில், நான் நபி {ஸல்} அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி {ஸல்} அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்று சொன்னேன். அதற்கவர்கள் நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே) என்று கேட்டார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான் என்றேன்.

 நபி {ஸல்} அவர்கள் உட்கார்ந்து (இதைப் பருகுங்கள் என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன்.

இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி {ஸல்} அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள்.

எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்) பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.
                        
                                                                                                                                                    ( நூல் : புகாரி 6452 )

பசியின் கொடுமை காரணமாகவும், கடினமான ஏழ்மை காரணமாகவும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் அதில் பொறுமையாக இருந்தது குறித்தும் அவர்களே சொல்கிற இந்தச் செய்தியில் நமக்கான பாடம் என்னவென்றால்..

 ”இவ்வளவு சூழ்நிலையிலும் கூட அபூபக்ர் (ரலி) அவர்களிடத்திலோ, உமர் (ரலி) அவர்களிடத்திலோ எனக்கு பசிக்கிறது, உண்ண உணவு தாருங்கள்! என்று கையேந்த வில்லை” என்பது தான்.

இன்னுமோர் அழகிய எடுத்துக் காட்டு….

بعد غزوة حنين سأل حكيم بن حزام رسول الله من الغنائم فأعطاه، ثم سأله فأعطاه، حتى بلغ ما أخذه مائة بعير، وكان يومئذ حديث عهد بالإسلام، فقال له النبي : " يا حكيم، إن هذه الأموال حلوة خضرة، فمن أخذها بسخاوة نفس بورك له فيها، ومن أخذها بإشراف نفس لم يبارك له فيها، وكان كالذي يأكل ولا يشبع واليد العليا خير من اليد السفلى " فلما سمع حكيم بن حزام ذلك من النبي قال : (واللهِ يا رسول الله، والذي بعثك بالحق لا أسأل أحدا بعدك شيئا، ولا آخذ من أحد شيئا بعدك حتى أفارق الدنيا) وبر حكيم بقسمه أصدق البر، ففي عهد أبي بكر دعاه الصديق أكثر من مرة لأخذ عطاء من بيت مال المسلمين فأبى أن يأخذه، ولما آلت الخلافة إلى الفاروق دعاه مرة ثانية إلى أخذ عطاء فأبى أن يأخذه، فقام عمر في الناس وقال : (أشهدكم يا معشر المسلمين، أني أدعو حكيما إلى أخذ عطائه فيأبى) وظل حكيم كذلك لم يأخذ من أحد شيئا حتى فارق الحياة
مات سنه اربع وخمسين من الهجرة وقيل أنه عاش 120 سنه ستون في الجاهلية وستون في الإسلام

ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவிக்கின்றார்கள்; “நான் இறைத்தூதர் {ஸல்} அவர்களிடம் ( தருமம் ) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி {ஸல்} அவர்களிடம் கேட்டேன். நபி {ஸல்} அவர்கள் கொடுத்தார்கள்.

பிறகு என்னிடம், ”ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் ( பேராசையின்றி ) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது.

இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். ( கொடுக்கும் ) மேல் கை, ( வாங்கும் ) கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் ( இந்த ) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்" என்று கூறினேன்.

இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்கள்: ”ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

பிறகு, உமர் (ரலி) அவருக்கு ( அன்பளிப்புகள் சிலவற்றைக் ) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர் (ரலி) ( மக்களிடையே ), ”முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்என்று அறிவித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி), தாம் மரணிக்கும் வரை ( எதுவும் ) கேட்கவில்லை.           ( நூல்: புகாரி )

புனித இஸ்லாத்தை ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் தங்களின் 60 –ஆவது வயதில் ஏற்றார்கள். 120 –வது வயதில் ஹிஜ்ரி 54 –இல் மரணித்தார்கள்.

அதாவது, வயது முதிர்ந்த பருவத்தில் இஸ்லாத்தை ஏற்று மிகவும் வயது முதிர்ந்த பருவம் வரை வாழ்ந்த ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் தேவைகள் நிறைந்த பல தருணங்களில் கூட அண்ணலாரின் அறிவுரைக்கு மதிப்பளித்து எவரிடமும் கையேந்தாமல் வாழ்ந்திருக்கின்றார்கள்.       ( நூல்: உஸ்துல் ஃகாபா )

3. அல்லாஹ்வால் வசதி வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள், வசதியில் குறைவாக உள்ள ஏழைகளின் வாழ்வு உயர உதவும் கரங்களாய் திகழ வேண்டும்....

“அல்லாஹ்வால் வசதி, வாய்ப்பு வழங்கப்பெற்றவர்கள் தங்களின் பொறுப்பின் கீழ் இருக்கின்றவர்களுக்கும் வழங்கி, அவர்களும் இவர்களின் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்களாக ஆக்கிட முன்வருவதில்லை”. ( அல்குர்ஆன்: 16: 71 )

இப்படி, வழங்காமல் வாழ்ந்த பலர் தங்களின் மரண நேரத்தில் தான் அதை தவறென விளங்கிக் கொள்வார்கள். அதற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் பின் வரும் வசனத்தில் இவ்வாறு விமர்சிக்கின்றான்.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர்என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               ( அல்குர்ஆன்: 63: 10 )

ஏனெனில், மௌத்தின் போது தான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது? அப்போது அந்த ஆசைக்கும் ஏக்கத்திற்கும் அல்லாஹ்விடம் மதிப்பேதும் அப்போது இருப்பதில்லை.

கொடுத்து வாழுங்கள்! அல்லாஹ் கொட்டு கொட்டு என செல்வத்தைக் கொட்டிக் கொண்டே இருப்பான்...

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வறுமையில் வாடிய வறியோருக்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அல்லாஹ் அவர்களுக்கு கொட்டிக் கொடுத்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: { أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم }.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

باع في يوم أرضا بأربعين ألف دينار، ثم فرّقها في أهله من بني زهرة، وعلى أمهات المؤمنين، وفقراء المسلمين.
وقدّم يوما لجيوش الاسلام خمسمائة فرس، ويوما آخر الفا وخمسمائة راحلة.
وعند موته، أوصى بخمسن ألف دينار في سبيل الله، وأ،صى لكل من بقي ممن شهدوا بدرا بأربعمائة دينار،

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில்என் செல்வத்தில் 50000, தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள். ஒரு போரின் போது 500 வாகனங்களையும், இன்னொரு போரின் போது 1500 வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் 30000 வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

ஒரு தடவை 700 ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் ஏழை முஸ்லிம்களுக்குத் தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை 500 குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை வறுமையில் வாடிய மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

 ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

இப்படி வாரி, வாரி வழங்கியவருக்கு அல்லாஹ் வழங்கிய பேருபகாரம் என்ன தெரியுமா?

இதோ, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களே! சொல்கின்றார்கள்:

فقال: { لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا }.
“நான் ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருந்தேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியதுஎன்று.

ஆகவே, கையேந்தாத நல்ல தலைமுறையை உருவாக்கிட இஸ்லாம் கூறுகிற நல்ல ஸாலிஹான பெற்றோராக நாம் அமையப் பெறுவோம்!

வாழ்க்கையில் அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு திருப்தி பெறுவோம்! எந்த ஒரு தருணத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறெந்த ஒரு படைப்பினத்திடமும் கையேந்தாத சுய மரியாதை நிறைந்த, மானமுள்ள மனிதனாக வாழ்வோம்!!

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற எல்லா அருட்கொடைகளின் மூலமாகவும் வறியோருக்கும், எளியோருக்கும் எல்லா காலத்திலும் ஈந்து, வாரி, வாரி வழங்கி வள்ளல் பெருமக்களாக வாழ்வோம்!!!

யாஅல்லாஹ்! எங்களை மானம் மரியாதையை கெடுக்கிற, நாளை மறுமையில் அலங்கோலத்துடன் காட்சியளிக்க காரணமாக இருக்கிற யாசிக்கும், பிறரிடம் கையேந்தும் பழக்கத்தில் இருந்து எங்களையும், எங்கள் சந்ததிகளையும் காத்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! நீ வழங்கிய வாழ்வாதாரத்தைக் கொண்டு மன நிறைவோடும், இன்பத்தோடும் உனக்கு மாறு செய்யாமல், உனக்கு வழிபட்டு வாழும் நல்ல தவ்ஃபீக்கை எங்களுக்கும் எங்கள் சந்ததியினருக்கும் தந்தருள்வாயாக!

யாஅல்லாஹ்! எங்களுக்கு நீ வழங்கிய உன்னுடைய நிறைவான பரக்கத்தைக் கொண்டு ஏழைகளுக்கும், வறியோர்களுக்கும் வாரி வழங்குகின்ற வள்ளல்களாக எங்களை நீ ஆக்கியருள் புரிவாயாக!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

அனைத்து உலமாக்களுக்கும், நேயர் நெஞ்சங்களுக்கும் இதயம் கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்...
மௌலவி, அல்ஹாஃபிழ், N.S.M. பஷீர் அஹ்மது உஸ்மானி.