Thursday 4 May 2017

எங்கே அந்த வணிக சமூகம்?....



எங்கே அந்த வணிக சமூகம்?....



கடந்த 31 ஆண்டுகளாக தமிழகத்தில் மே 5 –ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மனித சமூகம் தமது தேவைகளை பூர்த்தி செய்ய பொருளீட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றது.

உடலுழைப்பு, உத்தியோம், தொழில், வணிகம் ஆகியவற்றின் துணை கொண்டு அந்த அவசியத்தை நிறைவேற்றிக் கொள்கின்றது.

இந்நான்கில் மனித சமூகம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதன் மூலம் வருமானம் கிடைக்கும். எனினும் சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் நஷ்டம் கூட ஏற்படும். சிலவற்றில் குறைவான வருமானமே கிடைக்கும்.

எது எப்படியோ, ஒட்டு மொத்தத்தில் வருமானம் கிடைக்கும் வழிகளாக மட்டுமே இவைகளைப் பார்க்கின்றது மனித சமூகம்.

ஆனால், இஸ்லாம் பொருளீட்டும் வழிகளை வெரும் வருமானம் பெற்றுத் தரும் வழியாக மட்டும் பார்க்காமல் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி அழகு படுத்துகின்றது.

ஆம்! பொருளீட்டும் வழிகளில் ஒன்றான வணிகத்தை இபாதத்தாக, மனித குலத்திற்கு ஆற்றும் சேவையாக, பார்க்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

أخبرنا قبيصة أخبرنا سفيان عن أبي حمزة عن الحسن عن أبي سعيد 
عن النبي صلى الله عليه
 وسلم قال
 التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء

உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் ஆகியோருடன் இருப்பார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                               ( நூல்: திர்மிதீ )

حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد عن شعبة عن قتادة عن صالح أبي الخليل عن عبد الله بن الحارث عن حكيم بن حزام قال : قال رسول الله صلى الله عليه و سلم البيعان بالخيار مالم يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كتما وكذبا محقت بركة بيعهما
 هذا حديث صحيح

விற்பவரும்நுகர்வோரும் பிரிந்து செல்லும் வரை வணிகத்தை முறிக்கும் உரிமை பெற்றவர்களாவர். அந்த இருவரும் உண்மை பேசி தெளிவு படுத்திக் கொண்டால் அந்த இருவரின் வியாபாரத்திலும் இருவருக்கும் பரக்கத் அபிவிருத்தி செய்யப்படும். இருவரும் பொய்கூறினால் உண்மையை மறைத்தால் இருவரின் வணிகத்திலும் உள்ள பரக்கத் நீக்கப்படும்என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.         ( நூல்: திர்மிதீ )

இன்றைய காலச் சூழ்நிலையில் வணிகம் இல்லாமல் எதுவும் இல்லை எனும் அளவுக்கு கல்வி, மருத்துவம் உட்பட அனைத்துமே வணிகமயமாக மாறிப்போய் இருக்கின்றது.

மேலும், வணிகம் என்பது தற்போது பண நிர்வாகம், நேர நிர்வாகம், பொருளாதாரம், தயாரிப்பு, மனிதவள மேலாண்மை, விளம்பரம், சந்தைப் படுத்துதல், தொலைத் தொடர்பு வசதி, கணிணி என்று பல்வேறு துறைகளோடு இணைந்து விரிவான முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

வணிகத்துறையில் சாதிக்க வேண்டுமானால் பல்கலைக் கழகங்களில் பல ஆண்டுகள் பயின்று, பயிற்சிகள் பெற வேண்டும் என்கிற அளவுக்கான நிலைகள் பலதை இன்றைய வணிகச் சூழல் அடைந்துள்ளது.

ஆகவே, வணிகம் குறித்தும், வணிகர்கள் குறித்தும் இஸ்லாம் கூறும் வழிகாட்டல் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

இஸ்லாம் ஓர் உன்னதமான வாழ்வியல் நெறியாகும். அது பேசாத கருத்துக்களும் இல்லை. அதில் சொல்லப்படாத விஷயங்கள் என்று எதுவும் இல்லை எனப் போற்றப்படும் அளவுக்கு வான்மறையும், வள்ளல் நபி {ஸல்} அவர்களின் வாழ்வும் அமையப் பெற்றிருக்கின்றது.

அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரி வாழ்வை மேற்கொண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் ஒரு முன்மாதிரி வணிகராகவும் திகழ்ந்திருக்கின்றார்கள்.

நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னால் மாநபி {ஸல்} அவர்கள் வணிகம் சம்பந்தமாக சுமார் ஆறு முறை ( 4 முறை யமனுக்கும், 2 முறை ஷாமுக்கும் ) பயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய சிரியாவுக்கும் மக்காவுக்குமான தொலை தூரம் 1,377.6 கி.மீ ஒரு முறை சென்று வர 2,755.2 கி.மீட்டர் ஆகும்.

4 × 1,377.6 = 5510.4 கிலோமீட்டர் தொலை தூரமாகும்.

இன்றைய யமனுக்கும் மக்காவுக்கும் இடையேயான தொலை தூரம் 1124 கி.மீ, ஒரு முறை சென்று வர 2248 கிலோமீட்டர் ஆகும்.

8 × 1124 = 8992 கிலோமீட்டர் தொலை தூரமாகும். மொத்தத்தில் வணிக முறைப் பயணமாக மாநபி {ஸல்} அவர்கள் 5510.4 + 8992 = 14,502.4 கிலோ மீட்டர் தொலை தூரம் பயணம் சென்றிருக்கின்றார்கள் என்பதை வரலாற்றின் வாயிலாக உணர முடிகின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இளமைக் காலத்தில் பெரும் பகுதியை வணிகப் பயணத்திற்காக கழித்திருக்கின்றார்கள்.

ஆதலால் தான் நபித்துவத்தை மக்கத்து குறைஷிகள் எதிர்த்த போது தங்களது கடந்த கால வாழ்வை சீர் தூக்கிப் பார்க்குமாறும், ஆய்வு செய்து பார்க்குமாறும் அம்மக்களுக்கு அறை கூவல் விடுமாறு அல்லாஹ் கூறினான்:

فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ ()

மேலும், இதற்கு முன்னர் உங்களோடு நீண்ட காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அந்த வாழ்க்கையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?”                                                  

                                                      ( அல்குர்ஆன்: 10: 16 )

அன்றைய அரபுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்தவர்கள் மக்காவின் வணிகப்பிரமுகர்கள்.

இவர்கள் தங்களின் வியாபாரப் பொருட்களை இடைத்தரகர்களிடம் கொடுத்து ஷாம், யமன் போன்ற பகுதிகளுக்கு அனுப்புவார்கள்.

இடைத்தரகர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்கள் இஷ்டத்திற்கு விலையேற்றம் செய்து விற்பனை செய்வார்கள். விற்பனை செய்த பணத்தில் கனிசமான பணத்தை எடுத்துக் கொண்டு மீதிப்பணத்தை முதலாளிகளிடம் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, வாய்மை ஆகிய பண்புகள் அறவே இல்லாமல் இருந்த காலத்தில் தான் அண்ணலார் {ஸல்} அவர்கள் ஒரு வணிகராக அறிமுகம் ஆனார்கள்.

முதல் வணிகப் பயணத்திலேயே மக்காவின் அத்துணை வணிகப் பிரமுகர்களின் தனிப்பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக ஆகிப் போனார்கள்.

ஆதலால் மக்காவின் மாநகர மக்கள் அனைவரும் நபி {ஸல்} அவர்களை ஸாதிக்உண்மையாளர், அமீன்நம்பிக்கையாளர் என்று பெயர் சூட்டி அழைத்து அகமகிழ்ந்தனர்.

ஆகவே, தான் அண்ணலாரின் தூதுத்துவத்தை அம்மக்கள் பொய் படுத்திய போது தங்களின் கடந்த கால வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்குமாறும், சீர்தூக்கி பார்க்குமாறும் மாநபி {ஸல்} அவர்கள் அறைகூவல் விடுத்தார்கள்.

வணிகமும்இஸ்லாமும்

அல்லாஹ் அனுப்பிய அத்தனை நபிமார்களும் அந்தந்த உம்மத்துகளுக்கு ஏகத்துவ அழைப்போடு அவர்கள் செய்து வந்த பிரதான பணி ஒன்றும் உண்டு. அது அந்தந்த சமுதாய மக்கள் அடாவடியாக, பிடிவாதமாக செய்து வந்த மனித குல விரோத செயல்பாடுகளை எச்சரித்தது ஆகும்.

அந்த அடிப்படையில் பெரும் வணிகர்களாக வாழ்ந்த மத்யன் சமூகத்திற்கு நேர்வழியைக் காட்டும் பொருட்டாக அல்லாஹ் ஷுஐபு {அலை} அவர்களை அனுப்பி வைத்து வியாபாரம் குறித்த அழகிய வழிகாட்டலை வழங்கினான்.

وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ () وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ () بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ ()

மேலும், மத்யன் வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் அம்மக்களிடம்என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத்தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும், அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்!


இன்று, உங்களை நான் நல்ல நிலையில் காண்கிறேன். ஆனால், வெகு விரைவில் துன்பம் சூளும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பீடிக்குமோ என நான் அஞ்சுகின்றேன்.

மேலும், என் சமுதாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாய் அளந்து கொடுங்கள்! முழுமையாய் நிறுத்துக் கொடுங்கள்! மேலும், மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துத் தராதீர்கள்.! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கை உடையோராயிருப்பின் அல்லாஹ்வினால் மீதப்படுத்தப்பட்ட லாபமே உங்களுக்குச் சிறந்ததாகும். ஆயினும், நான் எல்லா நிலையிலும் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க இயலாதுஎன கூறினார்.                                             ( அல்குர்ஆன்: 11: 84, 85, 86 )

அல்லாஹ் அல்குர்ஆனில் 7 சூராக்களில் சுமார் 9 இடங்களில் வணிகம் மற்றும் வியாபாரம் குறித்து பேசுகின்றான்.

உச்சபட்சமாக அல்லாஹ் ஓரிடத்தில் ஈமானையும், மறுமை நாளையும், அறப்போர் புரிவதையும், நரகை விட்டும் காக்கும் செயலாக, மன்னிப்பைப் பெற்றுத் தரும் அம்சமாக, சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் காரணியாக அல்லாஹ் கூற முன்வரும் போது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ () تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ () يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ () وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ ()

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை நரகை விட்டும் ஈடேற்றம் பெறச் செய்யும் ஓர் வணிகத்தை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா?”            ( அல்குர்ஆன்: 61: 10 – 13 )  என்று அடையாளப்படுத்துவான்.

இதுவே இஸ்லாம் வணிகத்துக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதற்கு போதுமான சான்றுகளாகும்.

வணிகத்தை இபாதத்தோடு இணைத்துக் கூறிய ஓர் ஒப்பற்ற மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களான முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலை என்ன?

இன்றைய முஸ்லிம் சமூக வணிகர்களின் நிலை என்ன? என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

வணிகம் குறித்த எந்த வழிகாட்டலும் இல்லாத பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் சர்வதேச அளவில், தேசிய அளவில், மானில அளவில், மாவட்ட அளவில் கிளை நிறுவனங்களைத் தொடங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அடையார் ஆனந்தபவன், சரவணபவன் ஹோட்டல், போத்தீஸ், ஜோஸ் & ஜோய் ஆலுக்காஸ், சரவணா ஸ்டோர், பூர்விகா மொபைல்ஸ் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

முஸ்லிம் வணிக நிறுவனங்களால் உள்ளூரில் கூட சோபிக்க முடியாமல் போவது ஏன்? என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகளை சகோதர சமயத்தவர்களில் சிலர் அள்ளி வீசி விமர்சிக்கும் போது முஸ்லிம் வணிகர்களாலும், வணிகத்தில் அவர்கள் கையாண்ட நேர்மையாலும் தான் இஸ்லாம் பரவியதுஎன்று மறுத்துரைக்கின்றோமே எங்கே அந்த வணிக சமூகம்?

முந்தைய தலைமுறையின் வணிகத்தால் உலகெங்கும் இஸ்லாம் பரவும் போது, நம் காலத்து வணிகத்தால் கிளைகளாவது பரவி இருக்க வேண்டாமா?

வாருங்கள்! நாம் இழைக்கும் தவறுகளைக் களைந்து, சீர்திருத்தி வணிகத்தில் மீண்டும் ஒருமுறை சர்வதேச அளவில் உலா வருவோம்! மூதாதையர்கள், முன்னோர்களைப் போன்று இஸ்லாத்தின் மாண்புகளை உலகெங்கும் கொண்டு செல்வோம்!.

வணிகத்தில் பக்தி இல்லை…..

பக்தி இது தான் வணிக நிறுவனத்தின் உறுதிமிக்க அஸ்திவாரம். இது இல்லை என்றால் வணிக நிறுவனம் வளராது என்பதைக் காட்டிலும் வெகு விரைவில் வீழ்ந்து விடும்.

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ () لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும், வியாபாரமும், கொள்வினை, கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒரு நாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்றால் அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும், அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும் தான்!”                                                   ( அல்குர்ஆன்: 24: 37, 38 )

மாநபி {ஸல்} அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களின் நடை முறையை இந்த வசனம் குறிப்பிடுகின்றது. நபித்தோழர்களை பொருத்தமட்டில் தொழுகைக்கான அழைப்பு காதில் விழுந்து விட்டால் அவர்கள் கடைவீதியில் எந்த நிலையில் நின்றிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு பள்ளிக்கு விரைந்து சென்று விடுவார்கள்.                                      ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )

சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நபித்தோழர்களில் அபூபக்ர், உமர், உஸ்மான், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா, ஜுபைர் இப்னு அவ்வாம், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ( ரலியல்லாஹு அன்ஹும் ) ஆகியோர் மாபெரும் வணிகர்கள் மற்றும் செல்வந்தர்கள்.

وقال أبو عمر: كان تاجرًا مجدودًا في التجارة، فكسب مالا كثيرًا وخلف ألف بعير وثلاثة آلاف شاة ومائة فرس ترعى بالبقيع، وكان يزرع بالجرف على عشرين ناضحًا
فكان يدخل من ذلك قوت أهله سنة.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் குறித்து வரும் செய்தி மிகவும் ஆச்சர்யமானது. ஒரு முறை அவர்களின் சரக்கு சந்தைக்கு சென்று திரும்பும் போது ஓராண்டு முழுவதுக்கும் அவர்களின் குடும்பம் சும்மா உட்கார்ந்து அனுபவிப்பதற்குத் தேவையான லாபங்களை ஈட்டுமாம்.

தல்ஹா (ரலி) அவர்கள் குறித்து சொல்லப்படும் போது “எவராவது அவரிடம் உதவி கேட்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்கச் சென்றால் அவர் கேட்கும் முன்பாக அவர் கேட்க நினைத்ததை விட அதிகளவிலான உதவிகளைச் செய்வார்களாம்.

وهذا خباب بن الأرت كان حدادًا، وعبد الله بن مسعود كان راعيًا، وسعد بن أبي وقاص كان يصنع النبال، والزبير بن العوام كان خياطًا،وسلمان الفارسي كان حلاقًا ومؤبرًا للنخل، وخبيرًا بفنون الحرب، والبراء بن عازب وزيد بن أرقم كانا تاجرين

இன்னும், நபித்தோழர்களில் கப்பாப் (ரலி)  அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஜைத் இப்னு அர்க்கம், பர்ராஉ இப்னு ஆஸிப் (ரலி) ஆகியோரும், அப்துல்லாஹ் இப்னு உமர், அபுத்தர்தா, அபூதல்ஹா, அபுத்தஹ்தாஹ், அபூஸுஃப்யான், முஆவியா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், உம்முல் முஃமினீன் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜுலைபீப் (ரலி) அவர்களின் மனைவி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் பெரும் லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களின் நிறுவனர்களாக இருந்துள்ளனர்.

இமாம்களில், அபூஹனீஃபா, அப்துல்லாஹ் இப்னு முபாரக், (ரஹ்-அலைஹிமா) ஆகியோரும் ஹதீஸ் மற்றும் தஃப்சீர் துறையில் சிறந்து விளங்கிய ஏராளமான அறிஞர் பெருமக்களும் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.

இப்படியாக, வணிகத்தில் சிறந்து விளங்கிய மேன்மக்களான நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மரணத்தின் போது விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பீடுகள் அவர்களின் மொத்த குடும்ப அங்கத்தினர்களும் தலைமுறைக்கும் சும்மா இருந்து அனுபவிக்கும் அளவுக்கு இருந்தது.

அவர்களின் வணிக வெற்றிக்கும், அபாரமான வளர்ச்சிக்கும் பின்புலனாக இருந்தது வணிகத்தில் பக்தி தான்.

அல்லாஹ்வைப் பற்றிய பயம், ஹலாம், ஹராம் பற்றிய விழிப்புணர்வு, நேர்மை, நாணயம், உண்மை, வாய்மை, நுகர்வோரை ஏமாற்றாமல் இருத்தல், பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்யாமல் இருத்தல், பதுக்கல் வியாபாரம் செய்யாமல் இருத்தல் போன்ற வியாபார பண்பாடுகளின் ஊற்று தான் இந்த பக்தி என்பது.

பொருளியல் கல்வியை அறியாதிருத்தல்…

மாறிவரும் காலச்சூழ்நிலைக்கேற்ப தொழில் துறைகள் சம்பந்தமான போதிய அறிவு முஸ்லிம் சமூகத்திடம் இல்லை.

தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் பிரதான தொழில் ஹோட்டல் மற்றும் இறைச்சி தொழில் தற்போதைய ஃபாஸிச அரசு இறைச்சி மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இறைச்சி தொழில் தடை செய்யப்படலாம். அதற்கு மாற்றாக என்ன தொழிலை நாம் கற்று வைத்திருக்கின்றோம்.

கட்டுமானத் தொழில், பொற்கொல்லர் தொழில், மர வேலைப்பாடு தொழில், அழகு ஆபரணத் தொழில் என ஏராளமான தொழில்கள் இருக்கின்றது. இவைகளில் பெரும்பாலான தொழில்களின் அதிபர்களாக ஸஹாபிகள் இருந்துள்ளனர்.

கூட்டமைப்பு இல்லை….

பிற சமூக மக்களிடையே இருப்பது போன்று ( நாடார், ஜெயின், மார்வாடி ) முஸ்லிம் வணிகர்களிடையே கூட்டமைப்பு இல்லை.

ஒரு வணிகர் முடங்கி விட்டால் கை கொடுத்து தூக்கிவிடும் பரந்த மனப்பான்மை கொண்ட வணிக சமூகம் நம்மிடம் இல்லை.

கோவை கலவரத்தில் முடங்கிப் போன ஷோபா நிறுவனம் குறித்து, அதன் மறு எழுச்சி குறித்து இன்று வரை கோவை மாநகர முஸ்லிம் வணிகர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை பிறரின் வணிகத்தை போட்டி என்கிற பேரில் கெடுத்து, மார்க்கெட்டை விட்டே, வணிகத்தை விட்டே துரத்தும் நோக்கில் செயல் படாமலாவது இருக்கின்றார்களா? அதுவும் இல்லை.

மேற்குறிப்பிட்ட சமூகத்தில் 10 வயதில் அல்லது 15 வயதில் ஒரு கடையில் பணியாளனாக செல்லும் ஒருவன் தனது 25 அல்லது 30 ஆம் வயதில் அது போன்ற ஒரு கடையின் முதலாளியாக தான் வேலை பார்த்த கடையின் முதலாளியால் அமர வைத்து அழகு பார்க்கப்படுகின்றான்.

ஆனால், இங்கோ மௌத் வரை பணியாளனாகவே இருக்கும் அவலம். அடிமையாகவே பார்க்கும் நிலைமை இத்தகைய நிலைமை மாறி, காலச் சூழ்நிலை களுக்கு ஏற்ப தொழில்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்களாக, சக வணிகர்களுக்கு உதவு புரிபவர்களாக, பணியாளார்களை கை தேர்ந்த தொழில் முதலீட்டாளர்களாக, பொருளீட்டும் முறை குறித்து அறிந்தவர்களாக நம் முஸ்லிம் சமூகத்தின் வணிகச் சமூகம் மாறத வரை முன் சென்ற முன் மாதிரி வணிகச் சமூகமாக மாற்றமும், ஏற்றமும் பெற்றிட முடியாது.

நிறைவாக….

தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்களில் ஒரு ஆலிம் உரையாற்றும் போது தங்களின் உரையில்….

“உலக வணிகர்களில், உலக முஸ்லிம் வணிகர்களில் யமன் தேசத்து வணிகர்கள் மிகவும் பரக்கத் பெற்றவர்கள்.

அவர்கள் காலையில் ஃபஜ்ர் தொழுகைப் பின்னர் கடையை திறந்து விடுவார்கள். திறந்ததும் கடையில் அமர்ந்து குர்ஆன் ஓதுவார்கள்.

முதல் வாடிக்கையாளர் எவராவது வந்து சென்று விட்டால் பின்னர் தொடர்ந்து குர்ஆன் ஓதுவார்கள். இரண்டாவது வாடிக்கையாளர் எவராவது வந்தால் அந்தக் கடைக்காரர் இப்படிச் சொல்வாராம் “மன்னித்துக் கொள்ளுங்கள்! எனக்கு வியாரம் நடந்து விட்டது, இதோ எதிரே இருக்கிற கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்! என்று கூறுவாராம்.

இப்படியாக, தங்களின் சக வணிகரின் மீதான கவனம் யமனில் இருக்கிற அனைத்து கடை வீதிகளிலும், அனைத்து வணிகர்களிடமும் இருக்கும். ஆதலால், உலக வணிகத்தில் உச்சம் தொட்ட வணிகர்களாக இன்றைக்கும் ( ஓமன் – மஸ்கட் )வணிகர்கள் திகழ்கின்றார்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால், இன்றோ நிலைமை எப்படி இருக்கிறது. அந்தக்கடையை விட 1 ரூபாய் விலை குறைத்து நான் தருகின்றேன். அந்தக் கடையில் தரம் குறைந்த பொருள் தான் விற்கப்படுகின்றது. அந்தக் கடையில் சுத்தம் இருக்காது. அப்படி இப்படி என்று குறை கூறி தன் சரக்கை விற்று விடும் வணிகச் சமூகமாக நம் சமூகம் மாறி இருக்கின்றது.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் முஸ்லிம் சமூக மக்களின் வணிகத்தில் பரக்கத் செய்ய வேண்டும். முஸ்லிம் வணிகர்களின் சிந்தனையில், வணிக நிலையில் மாற்றத்தைத் தரவேண்டும்.

வஸ்ஸலாம்…