Thursday 15 March 2018

சிறைப்பறவைகளுக்கு சிறகுகள் முளைக்கட்டும்!!!



சிறைப்பறவைகளுக்கு சிறகுகள் முளைக்கட்டும்!!!



உலக மக்களுக்கே சான்றாளர்களாகவும், சாட்சியாளர்களாகவும் வாழ வேண்டிய ஓர் சமூகம் இன்று தன் சமூகத்தின் பிரச்சனைகளுக்காக நற்சான்றுகளையும், சாட்சிகளையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது.

உலக மக்களுக்கே சாந்தியையும், சமாதானத்தையும் வழங்க வேண்டிய ஓர் சமூகம் இன்று தன் சமூகத்தின் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் தூது விட்டுக் கொண்டிருக்கின்றது.

சர்வாதிகாரத்திற்கு முன்பும், கொடுமைகளுக்கு முன்பும் சிக்கியிருக்கும் சமூக மக்களை மீட்டெடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டிய ஓர் சமூகம் இன்று சர்வாதிகாரத்திற்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகியிருக்கின்ற பரிதாப நிலையை உலகின் எங்கும் பார்க்க முடிகின்றது.

அந்த ஒப்பற்ற உயர்ந்த சமூகமும் முஸ்லிம் சமூகம் தான். தேடி அலைந்து கொண்டும், தூது விட்டுக் கொண்டும் பரிதாபத்தோடும் உலவுகிற சமூகமும் முஸ்லிம் சமூகம் தான்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின் படி தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், தமிழ்மாநில இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் பீ. ஃகாஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்கள் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைச் சந்தித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் விசாரணை சிறைக்கைதிகளை விடுவிக்குமாறு மனு ஒன்றை அளித்தார்கள்.

இதே வேளையில், இதற்கடுத்த மறுநாள் பாஜக வின் சி.பி ராதாகிருஷ்ணன் முதலமைச்சரைச் சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகளை தீவிரவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் குறிப்பிட்டு அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மனு அளித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்திலும் தமிழக மக்களுக்கு மத்தியிலும் ஒரு விதமான பரபரப்பு நிலவி வருகிற நிலையில் முஸ்லிம் சமூகமாகிய நாம் அதிகம் மறந்து போன முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து அவர்களின் விடுதலை குறித்து நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.

சக முஸ்லிமான ஒருவரின் மீது இரக்கம் கொள்கிற, உதவிகள் செய்கிற, அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கிற இந்த முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் மிகவும் தூரமாக இருப்பதைக் காண முடிகின்றது.

முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய முக்கியமான தருணம் இது என்றால் அது மிகையல்ல.

சடங்களாகத் திரும்பும் எம் சகோதரச் சொந்தங்கள்….

ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றனர் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தற்போது நான்காவது மரணமாக, 11.03.2018 அன்று காலையில் 34 வயது நிரம்பிய, சுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை கழித்த, ரிஸ்வான் பாஷா மரணம் நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்பு 2004 இல் தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்கு பிறகு, சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் இல்லாததால் மரணம் அடைந்தார்.

இதேபோல் 2008 இல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான், இதய நோயினால் இறந்தார். இதே போன்று, 2016 -இல் 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர், இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார்கள்.

இவரைப் போல் இன்னொரு ஆயுள் சிறைவாசி அபூதாஹிர் எஸ்.எல்.இ எனும் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

இப்படியே முஸ்லிம் சிறைவாசிகளின் வாழ்வு சிறையிலேயே அஸ்தமம் ஆகி வெற்றுச் சடலங்களாகத் தான் அரசால் விடுவிக்கப்படுவார்களோ என்கிற அச்சமும், அபயக் குரலும் முஸ்லிம் சமூகத்தில் எழத்துவங்கியுள்ளது.

அடுத்த ஒரு மரணம் நிகழும் முன்பாக நாம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

உலக நாடுகளின் சிறைகளில் முஸ்லிம்கள்...

சர்வதேச நாடுகளில் 50 –க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறைக்கைதிகளில் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சொல்லலாம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்குப் பின்னர் சந்தேகத்தின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும் பேரில், தீவிரவாத தடுப்பு எனும் பேரில் முஸ்லிம்களை கைது செய்வதென்பது அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கொடூரத்தை உலகிற்கு நிரூபிக்கும் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ சிறையில் 166 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித குற்றமும் சுமத்தாமல், விசாரணையும் இல்லாமல் 11 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தங்களை சித்திரவதைச் செய்வதாக கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுதந்திரமானவர்களாக மாறுவதற்கு மரணத்தை காத்திருப்பதாக குவாண்டானாமோ சிறையில் கைதிகள் கூறுவதை அல்ஜஸீரா வெளியிட்டிருந்தது.

மனித உரிமை மீறல்களுக்கும், கொடிய சித்திரவதைகளுக்கு பிரசித்திப்பெற்றது தான் அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை.ஆறு வருடங்களாக குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஸமி அல்ஹஜ், சிறையில் அமெரிக்க ராணுவத்தின் கொடிய சித்திரவதைகளின் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

சில வேளைகளில் நாய்களை உபயோகிக்கின்றார்கள். சில வேளை கடுமையாக தாக்குகின்றார்கள். சுவரில் தலையை மோதச் செய்கின்றார்கள். ஆறு நாட்கள் தொடர்ந்து தூங்கவிடாமல் சித்திரவதைச் செய்கின்றார்கள் - இவையெல்லாம் 6 வருடங்களாக குவாண்டானாமோ சிறையில் அனுபவித்த தான் சித்திரவதைகள் என்று ஸமி கூறுகிறார்.

2011-ஆம் ஆண்டு இறுதியில் குவாண்டனாமோ சிறையை மூடுவேன் என்று வாய்ச்சவடால் விட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்கு பிறகு இதுக் குறித்து வாய் திறக்கவுமில்லை. குவாண்டனாமோ சிறையை மூடவுமில்லை.

இந்தியச் சிறைச்சாலைகளும்.. முஸ்லிம்களும்

இந்தியாவில் 1,394 சிறைச்சாலைகள் உள்ளன. இந்திய சிறைகளின் கொள்திறன் 3 லட்சத்து 56 ஆயிரத்து 561 பேர். ஆனால், 2014-ம் ஆண்டு டிசம்பர் கணக்குப்படி இச்சிறைகளில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 536 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்ட்ரல் ஜெயில் – மத்திய சிறைச்சாலை 127, டிஸ்ட்ரிக் ஜெயில் – மாவட்ட சிறைச்சாலை 340, சப் ஜெயில் – கிளைச்சிறைச்சாலை 806, உமென்ஸ் ஜெயில் – பெண்கள் சிறைச்சாலை 20, ஓபென்ஸ் ஜெயில் – திறந்தவெளி சிறைச்சாலை 46, சிறுவர் சீர்திருத்த (சிறை) பள்ளி 21, ஸ்பெஷல் ஜெயில் – சிறப்பு சிறைச்சாலை 31, அதர் ஜெயில் – பிற சிறைச்சாலை 3.

இதில் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் தமிழகத்தில்133 சிறைச்சாலைகள் உள்ளன.

9 மத்திய சிறைகள், 4 மாவட்ட சிறைகள், 3 மகளிர் தனிச்சிறைகள், 90 ஆண்கள் கிளைச்சிறைகள், 9 மகளிர் கிளைச்சிறைகள், 2 ஆண்கள் தனி கிளைச் சிறைகள், 3 மகளிர் தனி கிளைச் சிறைகள், 11 சிறுவர் சீர்திருத்த (சிறை) பள்ளி, 2 திறந்த வெளிச்சிறை ஆகியவைகள் உள்ளன.

தேசிய அளவில் மொத்த சிறைவாசிகளில் 66% பேர் விசாரணைக் கைதிகள் இதில் தமிழக சிறைக்கைதிகளில் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் 34% பேர்.

தேசிய அளவில் மொத்த சிறைவாசிகளில் 17.75% பேர் தண்டனைக் கைதிகள், தமிழக சிறைக்கைதிகளில் தண்டனைக் கைதிகளில் 13.7% பேர் முஸ்லிம்கள்.

தேசிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கைது செய்யப் படுகின்றவர்களின் எண்ணிக்கையில் குஜாரத் முதலிடமும், தமிழகம் இரண்டாமிடமும் வகிக்கின்றது.

குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 28.25% ஆகும்.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24.72% ஆகும்.

தமிழக, குஜராத், உ. பி. சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள்...!

இந்திய மக்கள் தொகையில் குஜராத்தின் பங்கு 3 சதவிகிதம்; குஜராத் சிறைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 சதவிகிதம்..!

இந்திய முஸ்லிம் கைதிகளின் மூன்றில் ஒரு பங்கு குஜராத் சிறைகளில் உள்ளனர்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குஜராத் சிறையில் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குஜராத்தின் 6 கோடி மக்கள் தொகையில் 58.6 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இது குஜராத் மொத்த ஜனத்தொகையில் 9.7% ஆகும். குஜராத் இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில் 3.4% முஸ்லிம்களை கொண்டுள்ளது.

ஆனால் கைதிகளின் சதவிகிதத்தில் 36.5% முஸ்லிம்கள் குஜராத் சிறைகளில் உள்ளனர்.மொத்தமுள்ள 658 கைதிகளில் 240 பேர் குஜராத் சிறைகளில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 220 முஸ்லிம் கைதிகளை கொண்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் இருகின்றது. தமிழகமும் முஸ்லிம் ஜனத்தொகையின் சதவிகிதத்திற்கும் அதிகாமான கைதிகளை கொண்டுள்ளது.

முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் 5040 குற்றவாளிகளும், 17858 முஸ்லிம்களும் விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளனர். ஆனால் அங்கு கைதிகளின் எண்ணிக்கை வெறும் 45 தான்.

உத்திர பிரதேசம் இந்திய முஸ்லிம் மக்கள் தொகையில் 22.4 % முஸ்லிம்களை கொண்டுள்ளது.

இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில் 5% முஸ்லிம்கள் உள்ள ஜம்மு கஷ்மீரில் 153 முஸ்லிம் குற்றவாளிகளும் 1125 விசாரணை கைதிகளும் சிறையில் உள்ளனர். இங்கு 35 முஸ்லிம்கள் கைதிகாளாக சிறையில் உள்ளனர்.

முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்து சமூக போராளிகள் கருத்து தெரிவிக்கையில் 1985 இல் அமல்படுத்தப்பட்ட Prevention of Anti-Social Activities Act மற்றும் பொடா சட்டங்கள் சிறுபான்மையினர்களுக்கு எதிராகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வழக்கறிஞர் சம்ஷத் பதான் கூறுகையில்இது போன்ற சட்டங்கள் சிறுபான்மையினர் மீது செலுத்தப்படுவது அவர்கள் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதற்குத் தான் என்று கூறியுள்ளார்.

2000 க்கு பிறகு முஸ்லிம்களை விசாரணை என்கிற பெயரில் கைது செய்வதும், கைது செய்யப்பட்டவர்களை தங்களுக்காக உளவு பார்க்க வற்புறுத்துவதும், அப்படி செய்ய மறுப்பவர்களை போலியான தீவிரவாத வழக்குகளில் சிக்கவைப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்றும்” அவர் கூறியுள்ளார்.

இந்திய சிறைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அவர்களின் தேசிய மக்கள்தொகை விகிதாசாரத்தை விட மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது என இந்தியப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்திய சுதந்திரத்தில் இருந்து 1992 வரையிலான காலகட்டங்களை விட 1992 பாபர் மசூதி இடிப்பிற்கு பின்னரே முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

( மேற்கோள்:  மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் NATIONAL CRIME RECORDS BUREAU,  PRISON STATISTICS INDIA  மற்றும் THE WIRE ஆகிய ஆங்கில இணைய தளத்தின் மூலம் பெறப்பட்டது. )

சிறைவாழ்க்கை என்பது…..

மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இவ்வுலகம் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும். இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்”.

                                                    ( நூல்: முஸ்லிம்: 5663 )

சிறைவாழ்க்கையின் நிலை குறித்த மாநபி {ஸல்} அவர்களின் இந்த ஒற்றை வார்த்தை போதும் அது எவ்வளவு சிரமங்களும், சோதனைகளும் நிறைந்தது என்று.

உலகில் சர்வாதிகார சிந்தனையும், ஆணவப்போக்கும் கொண்டிருந்த ஆட்சியாளர்களும் எதையும் சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி பிடித்த ஆட்சியாளர்களும் தங்களின் சிந்தனைக்கும், போக்கிற்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் மனிதர்களுக்கு எதிராக சுழற்றுகிற முதல் சாட்டை இந்த சிறைவாசம் தான் என குர்ஆனில் அல்லாஹ் விளக்குகின்றான்.

இறைத்தூதர் மூஸா {அலை} அவர்கள் ஃபிர்அவ்னின் முன்பாக நின்று ஏகத்துவ அழைப்பை விடுத்த போது, அவனுடைய சர்வாதிகாரத்தைக் கண்டித்த போது, அவனுடைய ஆணவப் போக்கை விமர்சித்த போது

قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ (29)

”(மூஸாவே) என்னையன்றி வேறொரு கடவுளை வணங்குவதற்குத் தகுதியானவனாக நீர் எடுத்துக் கொண்டீர் என்றால் உம்மை நான் சிறையில் (அடைப்பேன்) உள்ளவர்களில் ஒருவராக ஆக்கிவிடுவேன்”. என்று கூறி மூஸா {அலை} அவர்களை மிரட்டினான்.                             ( அல்குர்ஆன்: 26; 29 )

இறைத்தூதர் யூஸுஃப் {அலை} அவர்கள் மிஸ்ர் நாட்டு அரசியின் சதிவலையில் இருந்து பல முறை தப்பித்து, அவருடைய அந்த மானக்கேடான செயலை செய்யத்தூண்டும் காரியங்களில் இருந்து தொடர்ந்து விரண்டோடவே இறுதியாக அந்த நாட்டு அரசி

وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِنَ الصَّاغِرِينَ (32)

என் கட்டளை (விருப்பத்திற்) க்கு நீர் உடன்பட வில்லையானால் உம்மை சிறையிலடைத்து உம்மை சிறுமைபட்டோரில் ஒருவராக ஆக்கிவிடுவேன்”. என்று கூறி மிரட்டினார்.                                            ( அல்குர்ஆன்: 12: 32 )

ஃபிர்அவ்ன் மூஸா {அலை} அவர்களை மிரட்டினான். ஆனால், மிஸ்ரின் அரசி மிரட்டியதோடு மாத்திரமல்லாமல் சில ஆண்டுகள் சிறையிலும் அடைத்தார்.

ஆக சர்வாதிகார சிந்தனை கொண்டோரும் தான் நினைத்ததை அடையத் துடிப்போரும் எதிர் தரப்பு நியாயங்களை ஒரு போதும் ஆராயாமல் சிறையில் அடைக்கவே விரும்புவர் என்கிற தகவலை மேற்கூறிய இறைவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்துகின்றான்.

அநியாயமாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்போது விடுதலை ஆவோம் என்கிற ஏக்கத்திலேயே சிறையில் நாட்களை கழிப்பார் நமக்கு எவராவது உதவி செய்யமாட்டாரா? அல்லது அரசு நம்மை விடுதலை செய்திடாதா? என்று ஏங்கித் தவிப்பார் என்பதை யூஸுஃப் அத்தியாயத்தின் 42 –ஆவது இறைவசனத்தில் யூஸுஃப் {அலை} அவர்களின் ஏக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுவான்.

அதே போன்று அநியாயமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஒருவருக்கு அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அரசு உதவ வேண்டும் என்பதையும், அது குறித்து உரிமை கோர அவருக்கு உரிமை உண்டு என்பதையும், அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் உடனடியாக அவரை அரசே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் அதே யூஸுஃப் அத்தியாயத்தில் 50,51 –அவது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவான்.

குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

நாட்டில் நடைபெற்ற எந்த ஒரு குண்டுவெடிப்பு வழக்கிலும், கலவர வழக்கிலும் சிறை சென்றிருக்கிற முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனால் கண்டிப்பாக தண்டியுங்கள்.

இந்த முஸ்லிம் சமூகம் ஏன் என்று கேள்வி கூட கேட்காது. ஆனால், எவ்வித குற்றமும் செய்யாமல் அல்லது செய்யாத குற்றத்திற்காக முஸ்லிம் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக அதற்கும் மேலாக இளமையைத் தொலைத்து, பெற்றோர்களைப் பிரிந்து, மனைவி மக்களைத் துறந்து, சொந்த பந்தங்களை இழந்து, நிர்க்கதியாக, நோயாளிகளாக சிறையின் கம்பிகளுக்குப் பின்னால் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற என் சகோதரனை விடுதலை செய்ய இந்த அரசு ஏன் முன்வர மறுக்கின்றது?

நாட்டில் குற்றப்பிண்ணனி உள்ளவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாய் வலம் வருகின்றார்களே! ஊழல் செய்தவர்களும், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி சுருட்டிக் கொண்டு ஓடியவர்களெல்லாம் உலக நாடுகளில் சுகமாகச் சுற்றித் திரிகின்றார்களே?

நாட்டில் கலவரத்தை உண்டு பண்ணி, முஸ்லிம் சமூகத்தின் கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடியவர்களும், லட்சக்கணக்கான முஸ்லிம்களை ஊனமாக்கியவர்களும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்களும், பாலியல் கூட்டு பலாத்காரங்கள் செய்தவர்களும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், சிவசேனை என்கிற பெயர் சூட்டப்பட்ட ஃபாஸிஸ பயங்கரவாதிகளும், நக்ஸல்களும், மாவோயிஸ்ட்களும் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது ஒரு தேசத்தில் மக்கள் தொகையில் அவர்களின் விகிதாசாரத்தையும் விட கூடுதலாக சிறையில் அடைத்து சடலங்களாக வெளியே அனுப்புவது எந்த வகையில் நியாயம்?

விடுதலை சாத்தியமில்லையா?

இந்த நாட்டின் இறையாண்மைக்கும், தேச வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவித்த, நாட்டுமக்களின், அரசின் சொத்துக்களை சூறையாடி பல்வேறு குண்டுவெடிப்புகளை, மனித உயிர்களை வேட்டையாடிய மாவோயிஸ்டுகள் பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்படுகின்றார்களே?

பல்வேறு குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் பிணையின்ஜாமீனின் பெயரில் விடுவிக்கப்படுகின்றார்களே?

அரசியல் சாசனத்தின் சட்டத்தில் இடம் இருக்கின்றதே தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு என்று கூறுகின்றதே!

முஸ்லிம் என்ற ஒரே காரணம் தான் இந்த தேசத்தின் ஆட்சியாளர்களுக்கு எங்களுக்கு எதிராக நடக்கத்தூண்டும் என்றால், எங்களை சித்ரவதைகளைக் கொண்டு அடக்கி, ஒடுக்கிட முடியும் என்றால் எங்களுக்கு முஸ்லிம் என்று பெயர் சூட்டி அழைக்கும், அழகு பார்க்கும் அல்லாஹ்விடமே நாங்கள் பொறுப்புச் சாட்டுகின்றோம்.

கைதிகளோடு மனித நேயத்துடன் நடந்த மாநபி {ஸல்} அவர்கள்…

عن نافع عن ابن عمر قال: لما توفي عبد الله بن أبي بن سلول جاء ابنه عبد الله إلى رسول الله صلى الله عليه وسلم وسأله أن يعطيه قميصه ليكفنه فيه فأعطاه، ثم سأله أن يصلي عليه فقام رسول الله صلى الله عليه وسلم يصلي عليه فقام عمر بن الخطاب فأخذ بثوبه فقال: يا رسول الله تصلي عليه وقد نهاك الله عنه، فقال رسول الله " إن ربي خيرني فقال استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم وسأزيد على السبعين " فقال إنه منافق أتصلي عليه ؟

நயவஞ்சகர்களின் தலைவராகச் செயல்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் இறந்த போது, அவருடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் தான் என் தந்தைக்கு தொழ வைக்க வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.

நபி {ஸல்} அவர்கள் அவரின் வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தொழ வைக்க நின்ற போது உமர் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டாமென தடுத்தார்கள்.

وقال سفيان بن عيينة عن عمرو بن دينار سمع جابر بن عبد الله يقول: أتى رسول الله صلى الله عليه سلم قبر عبد الله بن أبي بعدما أدخل حفرته فأمر به فأخرج فوضعه على ركبتيه - أو فخذيه -ونفث عليه من ريقه وألبسه قميصه. فالله أعلم. في صحيح البخاري هذا الاسناد مثله وعنده لما كان يوم بدر أتي بأسارى، وأتي بالعباس ولم يكن عليه ثوب، «فنظر النبي صلى الله عليه وسلم له قميصا، فوجدوا قميص عبد الله بن أبي يقدر عليه، فكساه النبي صلى الله عليه وسلم إياه، فلذلك نزع النبي صلى الله عليه وسلم قميصه الذي ألبسه» قال ابن عيينة كانت له عند النبي صلى الله عليه وسلم يد فأحب أن يكافئه
 رواه البخاري، كتاب الجهاد والسير، باب الكسوة للأسارى

ஆனாலும், நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள் நபி {ஸல்} அவர்கள் ஏன் தொழ வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் காரணத்தை கூறுகின்றார்கள்.

பத்ரில் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கைதிகள் ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். நபி {ஸல்} அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களும் அப்போது கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை.

நபி {ஸல்} அவர்கள் கைதிகளுக்கு குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு போர்வை வழங்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்பாஸ் அவர்களுக்கு வழங்க போர்வை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அப்பாஸ் அவர்களுக்கு கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்யும் முகமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.                                                       ( நூல்: புகாரி )

மனித நேயப்பண்பு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பாகும்..

أصابت خيل رسـول اللـه -صلى اللـه عليه وسلم- ابنة حاتم الطائي في سبايا
طيّ فقدمتْ بها على رسـول الله -صلى الله عليه وسلم-فجُعِلَتْ في حظيرة بباب
المسجد فمرّ بها رسول الله -صلى الله عليه وسلم- فقامت إليه وكانت امرأة جزلة ، فقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَ الوافد،فقال ومَنْ وَافِدُك ؟، قالت عدي بن حاتم ، قال الفارُّ من الله ورسوله ؟، ومضى حتى مرّ ثلاثاً ، فقامت وقالت يا رسول الله هَلَكَ الوالِد وغابَالوافد فامْنُن عليّ مَنّ الله عليك قال قَدْ فعلت ،

وفي رواية أخرى أن سُفانة قد قالتلرسول الله -صلى الله عليه وسلم- يا مُحَمّد ! إن رأيتَ أن تخلّي عنّي فلاتشمِّت بي أحياء العرب ؟! فإنّي ابنة سيّد قومي ، وإنّ أبي كان يفُكّ العاني ،ويحمي الذّمار ، ويُقْري الضيف ، ويُشبع الجائع ، ويُفرّج عن المكروب ، ويفشيالسلام ويُطعم الطعام ، ولم يردّ طالب حاجة قط ، أنا ابنة حاتم الطائي )قالالنبي -صلى الله عليه وسلم- يا جارية ، هذه صفة المؤمن حقاً ، لو كان أبوكإسلامياً لترحّمنا عليه خلّوا عنها فإن أباها كان يُحِبّ مكارم الأخلاق ، والله يحب مكارم الأخلاق

ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, ”அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! உனக்கு எம் கருணையுண்டு! உன்னை நான் விடுதலை செய்கின்றேன்!” என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மனித நேயத்தோடு நடந்து கொண்டார்கள்.

     ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272, அத்தாரிக் லித் தபரீ )

இன்று 16/03/2018 வியாழன் அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பங்கெடுத்த கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர் ஸாஹிப் அவர்கள் சட்டமன்றத்தில் சிறைவாசிகள் விடுதலை குறித்து கோரிக்கை வைத்து, ரிஸ்வான் பாஷாவின் மரணத்திற்கு தமிழக அரசின் பொறுப்பின்மையும், அலட்சியமும் தான் காரணம் என்று கூறி, தமிழக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்ன?

எதிர் வரும் காலத்திலாவது முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ செய்ய வேண்டும்.

அரசியல் விவகாரங்களில் மாநில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை குறித்த உத்தரவாதத்தை இடம் பெறச் செய்ய வேண்டும்.

தங்களின் ஜகாத், ஸதகாக்களில் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பத்திற்கும் ஒரு பங்கை ஒதுக்க வேண்டும்.

முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகள் படிப்புச் செலவுகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும், பெண்குமர்களின் திருமணச் செலவுகளுக்கும் இயன்ற அளவிலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீட்டிற்காக நடத்தப்பட்ட மாநாடு போன்றோ, அல்லது முத்தலாக் விஷயத்தில் நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி தமிழக அரசை நிர்பந்திக்க வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சிறைவாசிகள் விவகாரத்தில் விரைவில் நீதமான முடிவுகள் வர தவ்ஃபீக் செய்வானாக!

ஆட்சியாளர்களின் இதயங்களில் அல்லாஹ் மனித நேயத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவானாக!

முஸ்லிம் சமூகத்திற்கு எல்லா காலத்திலும் விழிப்புணர்வை வழங்குவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!