Friday 15 June 2018

ஈதுல் ஃபித்ர் சிந்தனை – 2018 ஈகைக்கு ஏது எல்லை !!!


ஈதுல் ஃபித்ர் சிந்தனை – 2018
ஈகைக்கு ஏது எல்லை !!!



மகிழ்ச்சியான தருணங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஓர் உயரிய பொக்கிஷம் ஆகும்.

ஏனெனில், அந்த தருணங்கள் தான் குடும்ப உறவுகளின் அர்த்தத்தை, நட்புகளின் நேசத்தை, சொந்த பந்தங்களின் பங்களிப்பை, அண்டை, அயலாரின் மகிழ்ச்சியை மனிதனுக்கு உணர வைக்கின்றது.

அதற்காகவே இறைவன் மனிதனுக்கு வாழும் நாட்களில் மகத்தான பல நாட்களை வெகுமதியாக வழங்கி இருக்கின்றான்.

அந்த நாட்களில் மிகவும் உயர்ந்த நாட்கள் தாம் இரண்டு ஈதுடைய ( ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ) நாட்கள் ஆகும்.

அத்தகைய மகத்தான இரண்டு ஈதுகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் உடைய தினத்தில் நாம் மகிழ்ச்சியோடு அல்லாஹ்வின் பள்ளியில் அமர்ந்திருக்கின்றோம்.

ஈத் என்றாலே ஈகை தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சக மனிதனுக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும் ஈந்து வாழுமாறு இஸ்லாம் வலியுறுத்துவதைப் பார்க்க முடிகின்றது.

ஈகையை, மனித நேயப் பண்பை இஸ்லாம் இந்த உலகில் கூறியது போல் வேறெந்த சமயங்களும் கூறியது கிடையாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இது போன்ற மகிழ்ச்சியான பல ஈதுத் திருநாளை தந்து, ஈகையோடு, பிறருக்கு ஈந்து வாழ்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக!

ஈகையும்பிற வழிபாடுகளும்

இஸ்லாம் மனிதனை உயிருள்ள வரை ரப்புக்கு வழிபட்டு வாழச் சொல்கிறது. உயிர் வாழ்கிற காலம் முழுவதும் தொழுமாறு கண்டிப்புடன் கூறுகின்றது. உடல் ஆரோக்கியம் இருக்கும் வரை நோன்பு நோற்க வலியுறுத்துகின்றது. பொருளாதார வளத்தோடு வாழ்கிற வரை ஜகாத் கொடுக்குமாறு ஆணையிடுகின்றது. உடல் வலிமையும், பொருளாதார வளமும் இருக்கும் போதே ஹஜ் செய்யுமாறு தூண்டுகின்றது.

தொழுகை ஒரு நாளைக்கு 5 வேளை தான் தொழ வேண்டும். ரமலான் மாதத்தில் மட்டும் தான் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும். குறிப்பிட்ட அளவை எட்டிய செல்வ வளத்தில் இருந்து இரண்டரை சதவீதம் மட்டும் தான் ஜகாத் கொடுக்க வேண்டும். ஹஜ்ஜுடைய காலங்களில் மட்டும் தான், அதுவும் மக்கா சென்று தான் ஹஜ்ஜு செய்ய வேண்டும் என இஸ்லாம் எல்லா வழிபாடுகளுக்கும் ஓர் எல்லையை தீர்மானித்து வைத்து இருக்கின்றது.

ரப்பை தானே வணங்குகின்றோம் என்பதற்காக ஒருவர் ஒரு நாளைக்கு 10 வேளை தொழ முடியாது. நோன்பு ரப்புக்கு அதிகம் பிடித்த அமல் என்பதற்காக ஆண்டு முழுவதும் தொடராக நோன்பு நோற்க முடியாது.

மிதமிஞ்சிய பொருளாதாரம் இருக்கின்றது என்பதற்காக 5 சதவீதம், 10 சதவீதம் என ஆளாளுக்கு ஓர் அளவு வைத்து ஜகாத் கொடுக்க முடியாது. ஹஜ்ஜுடைய நிய்யத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு, வாழ்கிற பகுதிகளில் இருந்து கொண்டு ஹஜ்ஜுடைய கிரியைகளை செய்ய முடியாது. சொந்த மஹல்லா பள்ளி வாசலை தவாஃப் செய்ய முடியாது.

முடியாது என்று கூறுவதை விட கூடாது என்று கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஆனால், இஸ்லாம் ஈகையோடு, பிறருக்கு ஈந்து வாழ்வதற்கு மட்டும் எவ்வித காலம், நேரம், இடம் என எதையும் நிர்ணயிக்கவில்லை. ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வவளம் என எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இப்படித்தான் செய்ய வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற எந்த எல்லையையும் வகுக்கவில்லை.

சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் மகிழ்ச்சியை, சந்தோஷத்தை கொடுக்க முடியுமோ அத்துனை பகுதிகளையும் ஈகை என்றே இஸ்லாம் கூறுகின்றது.


كَانَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) لَمَّا حَاصَرَ بَنِي قُرَيْظَةَ قَالُوا لَهُ ابْعَثْ إِلَيْنَا أَبَا لُبَابَةَ نَسْتَشِيرُهُ فِي أَمْرِنَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) : " يَا أَبَا لُبَابَةَ ائْتِ حُلَفَاءَكَ وَ مَوَالِيَكَ ، فَأَتَاهُمْ .
فَقَالُوا لَهُ : يَا بَا لُبَابَةَ مَا تَرَى ، أَ نَنْزِلُ عَلَى حُكْمِ رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ؟
فَقَالَ : انْزِلُوا وَ اعْلَمُوا أَنَّ حُكْمَهُ فِيكُمْ هُوَ الذَّبْحُ ، وَ أَشَارَ إِلَى حَلْقِهِ .
ثُمَّ نَدِمَ عَلَى ذَلِكَ ، فَقَالَ خُنْتُ اللَّهَ وَ رَسُولَهُ ، وَ نَزَلَ مِنْ حِصْنِهِمْ ، وَ لَمْ يَرْجِعْ إِلَى رَسُولِ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، وَ مَرَّ إِلَى الْمَسْجِدِ ، وَ شَدَّ فِي عُنُقِهِ حَبْلًا ثُمَّ شَدَّهُ إِلَى الْأُسْطُوَانَةِ الَّتِي كَانَتْ تُسَمَّى أُسْطُوَانَةَ التَّوْبَةِ ، فَقَالَ لَا أَحُلُّهُ حَتَّى أَمُوتَ ، أَوْ يَتُوبَ اللَّهُ عَلَيَّ .
فَبَلَغَ رَسُولَ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " أَمَا لَوْ أَتَانَا لَاسْتَغْفَرْنَا اللَّهَ لَهُ ، فَأَمَّا إِذَا قَصَدَ إِلَى رَبِّهِ فَاللَّهُ أَوْلَى بِهِ " .
وَ كَانَ أَبُو لُبَابَةَ يَصُومُ النَّهَارَ وَ يَأْكُلُ بِاللَّيْلِ مَا يُمْسِكُ رَمَقَهُ ، وَ كَانَتْ بِنْتُهُ تَأْتِيهِ بِعَشَائِهِ ، وَ تَحُلُّهُ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ .
فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ وَ رَسُولُ اللَّهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ نَزَلَتْ تَوْبَتُهُ .
فَقَالَ : " يَا أُمَّ سَلَمَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَى أَبِي لُبَابَةَ " .
فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ أَ فَأُؤْذِنُهُ بِذَلِكَ ؟
فَقَالَ : " لَتَفْعَلَنَّ " .
فَأَخْرَجَتْ رَأْسَهَا مِنَ الْحُجْرَةِ ، فَقَالَتْ : يَا أَبَا لُبَابَةَ أَبْشِرْ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ .
فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ .
فَوَثَبَ الْمُسْلِمُونَ يَحُلُّونَهُ .
فَقَالَ : لَا وَ اللَّهِ حَتَّى يَحُلَّنِي رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) بِيَدِهِ .


அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து ''என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை.

நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்: ''யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவினரிடம் சென்றுதான் தொழ வேண்டும்'' (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள்.

மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைளாவினரின் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.

நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினரின் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள்.

மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: ''அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா'' என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின.

மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர்.

இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ரிப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்து கொள்ளவில்லை.

இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடந்த இந்த முற்றுகை இருபத்தைந்து இரவுகள் நீடித்தன.

இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். சரணடைவதற்கு செய்தனர்.

எனினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார்.

இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் ''அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?'' என்றனர். அப்போது அபூலுபாபா ''தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!'' என்று சூசகமாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார், வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார்.

நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினரின் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவரின் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் ''அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது'' என்றார்கள்.

தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர்.

பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவரின் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்கள். அதற்கு நபியவர்கள் ''உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்'' என்றனர்.

நபியவர்கள் ''இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்'' என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போரில் காலில் அம்பு தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். 

அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி ''ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி அழைத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.

ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) ''இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட்படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது'' என்றார்.

ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி) இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.

ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தபோது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ''உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் ''ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்'' என்றார்கள்.

அப்போது ஸஅது (ரழி) ''எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் ''ஆம்! செல்லுபடியாகும்'' என்றனர். பிறகு ஸஅது (ரழி) ''முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''ஆம்!'' என்றனர். அப்போது ''இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள்.

அப்போது நபியவர்கள் ''ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்'' என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:

''ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு'' என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் ''ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது.

பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார்.

அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும் தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்தபோது அதிகாலை ஸஹர் நேரத்தில் அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான வசனம் இறங்கியது.

فَجَاءَ رَسُولُ اللَّهِ ( صلى الله عليه و آله ) ، فَقَالَ : " يَا أَبَا لُبَابَةَ قَدْ تَابَ اللَّهُ عَلَيْكَ تَوْبَةً "
﴿ وَآخَرُونَ اعْتَرَفُواْ بِذُنُوبِهِمْ خَلَطُواْ عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ * خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّهُ سَمِيعٌ عَلِيمٌ * أَلَمْ يَعْلَمُواْ أَنَّ اللّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴾

மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் நற்செயலோடு தீய செயலையும் கலந்து விட்டிருக்கின்றனர். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால், திண்ணமாக! அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனும் ஆவான்என்கிற இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.

அப்போது, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அபூலுபாவிற்கு மகிழ்ச்சி தருகிற இந்த செய்தியை நான் சென்று முதலாவதாக அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “உனக்கு பிரியம் என்றால் நீ சென்று அறிவித்து விடு” என்று கூறி அனுமதி அளித்தார்கள்.

உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக ''அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்.

இச்செய்தியைக் கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்தபோது அவரை அவிழ்த்து விட்டார்கள்.  ( நூல்: ஸஹீஹுல் புகாரி, சீரத் இப்னு ஹிஷாம் )

இங்கே உம்மு ஸலமா (ரலி) அவர்கள் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முதன் முதலாக நானே சென்று அந்த சோபனத்தை சொல்ல விரும்புவதாக கூறிய போது நபி {ஸல்} அவர்கள் தடுக்கவில்லை.

ஒரு முஃமினின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திட விரும்பிய அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் ஆர்வத்தை நபி {ஸல்} அவர்கள் அங்கீகரித்தார்கள்.

எனவே வாழ்வினில் சக முஸ்லிம் ஒருவரின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துவதும், மலர்ந்த முகத்தோடு எதிர் நோக்குவதும் மிகச் சிறந்த ஈகை என்பதை மேற்கூறிய நபிமொழியும், வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.

عن أبي ذر رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم
 تبسُّمك في وجه أخيك لك صدقة، وأمرك بالمعروف ونهيك عن المنكر صدقة، وإرشادك الرَّجل في أرض الضَّلال لك صدقة، وإماطتك الحجر والشَّوكة والعظم عن الطريق لك صدقة، وإفراغك من دلوك في دلو أخيك لك صدقة

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உம் சகோதரரை மலர்ந்த முகத்தோடு சந்திப்பது ஈகையாகும். உம் சகோதரர் ஒருவருக்கு நீர் நன்மையை ஏவுவதும், தீமையை குறித்து எச்சரிப்பதும் ஈகையே. வழிதவறி உம் சகோதரருக்கு வழிகாட்டுவதும் ஈகையே. பாதையில் மக்களுக்கு இடையூறு தரும் கல், முள் போன்றவைகளை அப்புறப்படுத்துவதும் ஈகையே. உம் பாத்திரத்திலிருந்து உம் சகோதரர் ஒருவரின் பாத்திரத்தில் தண்ணீர் பகர்வதும் ஈகையே” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                             ( திர்மிதீ )

நவீன கால ஈகையாளர்கள், மனித நேய மாண்பாளர்கள்…

1.   அலி பெனாத்

அலி பெனாத் 200 க்கும் மேற்பட்ட கோடிகளுக்கு சொந்தமான மிகப்பெரும் கோடீஸ்வரர்.

உலகின் விலையுயர்ந்த அத்தனை சொகுசான பொருட்களையும் அனுபவித்தவர். 600,000 டாலர் மதிப்புள்ள சொகுசு காரில் பயணித்தவர். 60,000 டாலர் மதிப்புள்ள பிரஸ்லெட், 1300 டாலர் மதிப்புள்ள ஆயிரம் மாடல்களில் ஷூக்கள், 700 டாலர் மதிப்பிலான நூற்றுக் கணக்கான செருப்புக்களை அணிந்து அழகு பார்த்தவர்.

திடீரென நோய்வாய்ப்படுகின்றார் 4 மாத மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் கேன்சர் என்று சொன்னதோடு, இன்னும் நீங்கள் 7 மாதமே உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்கின்றார்கள்.

தன் வாழ்வின் இறுதிப்பகுதியில் இருப்பதாக உணர்ந்த அவர், தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாற்றமான வாழ்வை வாழ முற்பட்டார்.

தான் பயன்படுத்திய கோடிக்கணக்கான மதிப்பிலான துணிமணிகள், வாட்ச்கள், அழகிய கண்ணாடிகள், ஷூக்கள், என அத்துனையையும் தூக்கிக் கொண்டு ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி, காங்கோவை நோக்கி பயணமானார்.

ஆப்ரிக்க, காங்கோ ஏழை முஸ்லிம்களுக்கு பிரித்துக் கொடுத்தார். சில நாட்கள் அங்கு தங்கி அந்த மக்களின் தேவைகளை கண்டறிந்து சொந்த நாடு திரும்பிய அவர் MATW PROJECT என்ற அறக்கட்டளையைத் துவங்கி ஆப்ரிக்க முஸ்லிம்களின் பகுதிகளில் பள்ளிவாசல்களும், கல்விக்கூடங்களும் நிறுவ தன் சொத்துக்களை, தன் நிறுவனத்தின் லாபங்களை ஒதுக்கினார்.

7 மாதங்களில் மரணம் என்று தேதி குறித்த மருத்துவர்களின் கெடுவை வல்ல ரஹ்மான் நீட்டித்து ( இரண்டாண்டுகள் ) 2018 வரை உயிர் வாழவைத்தான்.

மரணத்திற்கு முன்பாக அலி பெனாத்தை சந்தித்து பேட்டி கண்ட வீடியோ ஒன்று தற்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காணக்கிடைக்கின்றது.

அந்தப் பேட்டியில்சொகுசு கார்களில் ஹாயாக வலம் வந்த நீங்கள், இப்போது எப்படி உணர்கின்றீர்கள்?” என்று கேட்ட போதுஎனக்கு அவ்வளவாக இன்பம் கிடைப்பதில்லை, ஆப்ரிக்க ஆடையில்லா ஏழை சிறுமி ஆடை கிடைத்து அதை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கும் போது கிடைக்கும் இன்பம் சொகுசு காரில் தற்போது நான் பயணிக்கும் போது எனக்கு கிடைக்கவில்லைஎன்று கூறுகின்றார்.

2.   ரஸன் நஜ்ஜார்…

பாலஸ்தீனத்தின் முஸ்லிம் சகோதரி, நர்ஸிங் துறையில் பயின்று நர்ஸ் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

21 வயது நிரம்பிய ரஸன் அல் நஜார் எனும் இளம் வயது பெண்மணி தான் அவர். தான் பணி செய்வதற்காக தேர்ந்தெடுத்த இடம் குழு குழு ஏசி அறையுடன் கூடிய நட்சத்திர மருத்துவமனை அல்ல.

நாள் தோறும் பீரங்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் மனித உயிர்களை சிதறியடித்துக் கொண்டிருக்கும் காஸா இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ள மருத்துவ முகாம்.

ஆம்! எப்படியும், என்றாவது ஒரு நாள் இஸ்ரேலிய துப்பாக்கித் தோட்டாக்களுக்கு தாம் இறையாக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தும் கூட தம் சொந்த முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

காயம் பட்ட ஃபலஸ்தீன பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என இவர் கடந்த ஒரு மாத காலமாக 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இராப்பகலாக ஓய்வின்றி சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

கடந்த மேமாதம் துவங்கிய இஸ்ரேலிய அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலில் இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நூற்றுக் கணக்காணோர் காயம் அடைந்துள்ளார்.

தீவிரமான சிகிச்சைப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த ரஸன் அல் நஜார் கடந்த ஜூன் 1 –ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை எங்கிருந்தோ வந்த ஸ்னீப்பர் வகை குண்டு மார்பில் பாய அப்படியே இரத்த வெள்ளத்தில் சரிகிறார். அருகில் நின்ற சக மருத்துவ குழுவினர் ஓடோடி வந்து காயம் பட்ட ரஸன் அல் நஜாருக்கு முதலுதவி சிகிச்சை செய்கின்றனர்.

மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அந்த சகோதரியின் வாயில் இருந்து வந்த வார்த்தை இதோ! நான் மரணத்தைச் சமீபித்து விட்டேன். எனக்கு மருத்துவ உதவி செய்து மருந்துகளை வீணாக்கி விடாதீர்கள். எனக்குப் பயன்படுத்துகிற மருந்துகளை வாழ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளுக்கும், குண்டடிபட்டு இரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியருக்குப் பயன்படுத்துங்கள். அவர்கள் வாழ வேண்டும்” என்று கூறுகின்றார்.

சுற்றியிருந்த சக குழுவினர் தயங்கவே அந்த நிலையிலும் கண்டிப்போடு தனக்கு மருத்துவ உதவி வேண்டாம் என்று கூறி மருத்துவ சிகிச்சையை நிராகரித்து சற்று நேரத்தில் ஷஹீதாகிப் போனார் வீரமங்கை ரஸன் அல் நஜார்.

ஒரே நேரத்தில் வீரமங்கை உம்மு அம்மாராவையும், யர்மூக் யுத்தத்தில் தாகித்த நிலையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த மூன்று நபித்தோழர்கள் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தண்ணீர் அளிக்கும் படி வேண்டுவார்களே அந்த புண்ணிய சீலர்களை நினைவு படுத்தி விட்டார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரஸன் அல் நஜாருக்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கி ஷுஹதாக்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக! ஆமீன்!

3.   முஹம்மது கஸாமா

மாலி நாட்டைச் சார்ந்த இளைஞர் அவர், ஃபிரான்ஸ்க்கு வேலை தேடி வந்து வேலைவாய்ப்புக்காக ஃபிரான்ஸ் நகர வீதிகளில் ஒவ்வொரு நிறுவனங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஓர் வீதியின் வழியாக வருகிற போது பெரும் கூட்டம். அங்கு நுழைந்து பார்க்கின்றார் எல்லோர் கையிலும் மொபைல் போன். எல்லோர் பார்வையும் அங்கிருந்த 6 மாடி கட்டிடத்தின் மேலே நிலைகுத்தி இருக்கின்றது.

அங்கே நான்காவது மாடியில் ஒரு குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. ஒருவர் அக்குழந்தையின் கையைப் பிடித்து கீழே விழாமல் நீண்ட நேரமாக பிடித்துக் கொண்டிருக்கின்றார்.

சற்று நேரம் கூட தாமதிக்காமல் நான்கு மாடி கட்டிடத்தில் மின்னல் வேகத்தில் ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து ஏறி மணித்துளிகளில் அந்தக் குழந்தையை காப்பாற்றி விடுகின்றார்.

இந்தக் காட்சி சமூக ஊடங்கள், வலைதளங்களின் வழியாக நாட்டின் பிரதமர் வரை செல்கின்றது.

ஃபிரான்ஸ் குடியுரிமை, தீயணைப்புத்துறையில் பணி என்கிற ஆணையை அரசு சார்பாக பிரதமரே அறிவிக்கின்றார்.

எல்லோரும் மரணத்தின் சாட்சிகளாக, மௌனிகளாக நிற்கும் போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறி குழந்தையின் உயிரைக் காப்பாற்றி மனித நேய மாண்பாளனாய் ஜொலித்தார் முஹம்மது கஸாமா.

காசு, பணம், செல்வம், பொருளாதரம் கொண்டு மட்டும் செய்வதல்ல இஸ்லாம் கூறும் ஈகை என்பதை மேற்கூறிய மூவரும் வெவ்வேறு வகையில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவை, ஆற்றலை செலவளித்து மகத்தான  உயிர்களை வாழவைத்துள்ளனர்.

அல்லாஹ் இவர்களின் ஈகையை ஏற்றுக் கொண்டு மறுமையில் மகத்தான கூலிகளை வழங்குவானாக! ஆமீன்!

இறுதியாக,

“எவர் ஓர் ஆத்மாவை வாழவைக்கின்றாரோ அவர் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் வாழ வைத்தவர் போன்றவராவார்”             ( அல்குர்ஆன்: 5: 32 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈகைத்தன்மையை வெளிப்படுத்தி, சக முஸ்லிம் சக மனிதர்களோடு மனித நேயத்தோடு வாழும் பாக்கியத்தை நல்குவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

அனைவருக்கும் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்!!!