Thursday 18 April 2019

இறந்து போனவர்களின் மீதும் கொஞ்சம் கருணை காட்டுங்கள்!!!


இறந்து போனவர்களின் மீதும்
கொஞ்சம் கருணை காட்டுங்கள்!!!




ஷஅபான் மாதம் இறைநம்பிக்கையாளர்களின் வாழ்வில் மிகவும் கவனம் பெறுகிற ஒரு மாதம் ஆகும்.

அல்லாஹ்விடம் பரக்கத் வேண்டி ஆர்வத்தோடு துஆ செய்கிற மாதம். பராஅத் இரவை எதிர் நோக்கி இருக்கிற மாதம்.

இன்றியமையாத இறையோனின் மூன்று அருட்கொடைகளை மூன்று யாஸீன் (வஸீலா) துணையுடன் கேட்கிற மாதம்.

நோன்பு, திக்ர், ஸதக்கா, இரவு வணக்கம் என வழிபாடுகளில் ஆசையுடன் ஈடுபடும் மாதம்.

ரமலானை வரவேற்கவும், ரமலானுக்கான தயாரிப்புகளில் முனைப்பும், முன்னேற்பாடுகளும் செய்கிற மாதம்.

இப்படியாக, பல்வேறு சிறப்புகளை கொண்ட ஷஅபான் மாதத்தில் நாம் வீற்றிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்….!

இந்த மாதத்தில் மாநபி {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தை மகத்தான ஓர் அம்சத்தின் மீது கவனம் செலுத்துமாறு பணித்திருப்பதை ஹதீஸ்களின் வழியாகக் காண முடிகின்றது.

எனினும் இந்த உம்மத் அந்த மகத்தான அம்சத்தின் மீது மிகவும் அலட்சியமாக இருப்பதை உணர முடிகின்றது.

ஆம்! அந்த மகத்தான அம்சம்இறந்து போன மௌத்தாக்களின் மீதும் கொஞ்சம் கருணை காட்டுங்கள்என்பது தான்.

மிகச் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் மய்யித்தை அடக்கியதோடு சரி, அதன் பிறகு அடுத்த அல்லது அதற்கடுத்த மய்யித்தை அடக்கம் செய்வதற்கு தான் மண்ணறைக்கே செல்கின்றார்கள்.

மண்ணறையில் அடங்கப்பட்டிருக்கிற நம் இரத்த உறவுகள், நம் குடும்ப உறுப்பினர்கள், நம் மஹல்லா, தெரு, ஊர் வாசிகள், உலகெங்கும் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிற இறைநம்பிக்கையாளர்களான மௌத்தாக்களுக்கு என்று நாம் என்ன செய்திருக்கின்றோம்?

கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அதுவும் இறந்து போனவர்கள் அடங்கப்பட்டிருக்கிற இடத்தைக் கூட வெறுமெனே கடந்து போய் விடக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் உயர்வான ஓர் மார்க்கத்தில் நாம் இருக்கின்றோம்.

பராஅத் இரவும்மௌத்தாக்களின் மீது கருணையும்

عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث

ஒரு நாள் இரவு நான் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள்.

(நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம்
செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ” என்று கேட்டார்கள்.

நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன்.

அப்போது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்” என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.


      ( நூல்கள்: திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299 )

பாக்யமும், மகத்துவமும் நிறைந்த பராஅத் இரவொன்றில் மாநபி {ஸல்} அவர்கள் பள்ளியில் அமர்ந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக இறந்து போனவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிற மண்ணறைகளுக்கு சென்று அவர்கள் மீது இறைவனின் மன்னிப்பும் கருணையும் கிடைக்க வேண்டும் என்பதை விரும்பினார்கள் என்றால் மண்ணறைவாசிகள் மீதான நம் கவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

இறந்து போனவர்களுக்கும் நமக்கும் இடையேயான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?

1.   குரோதங்களை விட்டுவிட வேண்டும்

وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் அதிபதியே! எங்களையும், இறைநம்பிக்கை கொண்டு எங்களை முந்தி சென்று (இறந்து) விட்ட எங்கள் சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் அவர்கள் மீதும் நம்பிக்கையாளர்கள் எவர்கள் மீதும் எந்தக் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் அதிபதியே! நிச்சயமாக, நீ மிகவும் கருணையுடையோனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்!”                         ( அல்குர்ஆன்: 59: 10 )

இறந்து போனவர்களை ஏசக்கூடாது...

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم 
لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا

“இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் எதனை முற்படுத்தினார்களோ அதனை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி)

ஜனாஸாவைப் பின் தொடர்வதும், தொழுவதும், அடக்கம் செய்யும் வரை காத்திருப்பதும்

நபி (ஸல்) அவர்கள், கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் மேல் ஐந்து உரிமைகள் உள்ளன.  அவர் ஸலாம் கூறினால், பதில் கூறுதல், அவர் நோயுற்றிருந்தால் பார்க்கச் செல்லுதல், அவர் மரணமடைந்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல், அவர் தும்மினால் யர்ஹமுக் அல்லாஹ்  (அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக) என கூறுதல். [புகாரி, முஸ்லிம்]

ஜனாஸா (பிரேத)த்தொழுகையில் பங்கேற்றஒருவர் (அதைஅடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்துசெல்லவில்லையானால், அவருக்குஒருகீராத்” (நன்மையே) உண்டு; அதை (அடக்கம்செய்யும்வரை) பின்தொடர்ந்தால்அவருக்குஇரண்டுகீராத்கள் (நன்மை) உண்டுஎனநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அப்போதுஇரண்டுகீராத்கள்என்றால்என்ன?” என்றுவினவப்பட்டது. அதற்குஅவர்கள்இரண்டுகீராத்களில்மிகச்சிறியஅளவு, உஹுத்மலைஅளவாகும்என்றுவிடையளித்தார்கள்.  [புகாரி]

ஆறுதலும், துஆவும் செய்வது…

அபூஸலாமாவின் மனைவி கூறினார்கள் எனது கணவர் அபுஸலாமா மரணமடைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது என் கணவரின் கண் திறந்திருந்தது. நபியவர்கள் லேசாக கசக்கி கண்ணை மூடிவிட்டு உயர் கைப்பற்றப்பட்ட உடன் பார்வை அதனை நோக்கியே இருக்கும் என கூறினார்கள்.

இதனை கேட்டவர்கள் அனைவரும் நடுக்கமுற்று அழுதார்கள். நீங்கள் உங்களை பற்றி நன்மையான சொல்லையே உபயோகித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுபவற்றுக்கு வானவர்கள் ஆமீன்கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு,

 பின்னர்யா அல்லாஹ் அபூஸலமாவுக்கு பிழைப்பொறுப்பாயாக நேர்வழி அடைந்தவர்களில் அவர் பதவியை உயர்த்துவாயாக அவர் தமக்குப்பின் விட்டுச்செல்லும் மக்களுக்கு நீயே பிரதிநிதியாக இருந்து காப்பாற்றுவாயாக! எல்லா உலகங்களுக்கும் அதிபதியே! எங்களுக்கும் அவர்களுக்கும் பிழைப்பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விசாலப்படுத்தி வைப்பாயாக! அதிலே ஒளியையும் ஏற்படுத்துவாயாக என்று பிராத்தனை செய்தார்கள்.   ( ஆதாரம்: முஸ்லிம்)

இறந்து போனவர்கள் மார்க்கப்பற்றும், சமுதாயப்பற்றும் நிறைந்தவர்களாக இருப்பின் அவர்களின் மார்க்கப்பற்றையும், சமுதாயப்பற்றையும் நினைவு கூர்வது…


وروى عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم

மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த அண்ணலாரின் முன்னால் வழக்கொன்று கொண்டு வரப்பட்டது. இது தான் அந்த வழக்கு.

ஆதரவற்ற அநாதை வாலிபர் ஒருவருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, இப்போது நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள்அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்றுமதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள். 

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ثم قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في الجنة " .

வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம் அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டுகனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள் சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனஎன்று கூறி உறுதிபடுத்தினார்கள்.

                    ( நூல்:  الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3, பக்கம்:102 )

خرج صلى الله عليه وسلم إلى تبوك، وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாத என ஏங்கினேன்.”

                                   ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )


பெருமானார் {ஸல்} அவர்களோடு ஒரு போரில் கலந்து கொள்ள ஜுலைபீப் அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப் போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இறுதியாக ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில் நபிகளாரும்,தோழர்களும் ஈடுபட்டிருந்தனர்.

எவரையாவது விட்டு விட்டீர்களா?என நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை விட்டு விட்டோம். என தோழர்கள் கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள் வினவ, முன்பு போலவே தோழர்கள் பதில் கூறினர். மூன்றாம் முறையும் நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை காணவில்லையே? சென்று போர்க்களம் முழுவதும் நன்றாக தேடுங்கள் என்றார்கள்.

ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு கிடப்பதாக நபியிடத்தில் வந்து தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி {ஸல்} அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக்கிடந்ததை பார்த்தார்கள்.

நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்:இதோ இங்கு ஷஹீதான ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன் கடுமையாக போரிட்டு பின்னர் அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர் ஷஹீதாகி இருக்கிறார். அறிந்து கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச் சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி {ஸல்} அவர்கள்.

( நூல்:இப்னு ஹிப்பான், பாகம்: 9, பக்கம்: 334, இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்: 155,156, முஸ்னத் அஹ்மத்,பாகம்: 4, பக்கம்: 422. )

இறந்து போனவர் வெளிப்படையாக எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அவரின் பாவமன்னிப்பிற்காக அதிகம் அல்லாஹ்விடம் துஆ செய்வது…

عن نافع عن ابن عمر قال: لما توفي عبد الله بن أبي بن سلول جاء ابنه عبد الله إلى رسول الله صلى الله عليه وسلم وسأله أن يعطيه قميصه ليكفنه فيه فأعطاه، ثم سأله أن يصلي عليه فقام رسول الله صلى الله عليه وسلم يصلي عليه فقام عمر بن الخطاب فأخذ بثوبه فقال: يا رسول الله تصلي عليه وقد نهاك الله عنه، فقال رسول الله " إن ربي خيرني فقال استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم وسأزيد على السبعين " فقال إنه منافق أتصلي عليه ؟ فأنزل الله عز وجل  وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ وفي رواية للبخاري وغيره قال عمر: فقلت يا رسول الله تصلي عليه وقد قال في يوم كذا وكذا، وقال في يوم كذا وكذا وكذا ! ! فقال " دعني يا عمر فإني بين خيرتين، ولو أعلم أني إن زدت على السبعين غفر له لزدت " ثم صلى عليه فأنزل الله عز وجل وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ الآية.قال عمر: فعجبت من جرأتي على رسول الله صلى الله عليه وسلم

நயவஞ்சகர்களின் தலைவராகச் செயல்பட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் இறந்த போது, அவருடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தைக்கு கஃபனாக தாங்கள் அணிந்திருக்கும் ஆடையைத் தரவேண்டும் என்றும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் தான் என் தந்தைக்கு தொழ வைக்க வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.

நபி {ஸல்} அவர்கள் அவரின் வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் ஜனாஸா தொழுகைக்காக தொழ வைக்க நின்ற போது உமர் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டாமென தடுத்தார்கள்.

وقال سفيان بن عيينة عن عمرو بن دينار سمع جابر بن عبد الله يقول: أتى رسول الله صلى الله عليه سلم قبر عبد الله بن أبي بعدما أدخل حفرته فأمر به فأخرج فوضعه على ركبتيه - أو فخذيه -ونفث عليه من ريقه وألبسه قميصه. فالله أعلم. في صحيح البخاري هذا الاسناد مثله وعنده لما كان يوم بدر أتي بأسارى، وأتي بالعباس ولم يكن عليه ثوب، «فنظر النبي صلى الله عليه وسلم له قميصا، فوجدوا قميص عبد الله بن أبي يقدر عليه، فكساه النبي صلى الله عليه وسلم إياه، فلذلك نزع النبي صلى الله عليه وسلم قميصه الذي ألبسه» قال ابن عيينة كانت له عند النبي صلى الله عليه وسلم يد فأحب أن يكافئه
 رواه البخاري، كتاب الجهاد والسير، باب الكسوة للأسارى

ஆனாலும், நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள் நபி {ஸல்} அவர்கள் ஏன் தொழ வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் காரணத்தை கூறுகின்றார்கள்.

பத்ரில் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கைதிகள் ஒரு நாள் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். நபி {ஸல்} அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களும் அப்போது கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை.

நபி {ஸல்} அவர்கள் கைதிகளுக்கு குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு போர்வை வழங்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். எல்லா கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்பாஸ் அவர்களுக்கு வழங்க போர்வை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி அப்பாஸ் அவர்களுக்கு கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்யும் முகமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.                                                       ( நூல்: புகாரி )

பெற்றெடுத்த தாய் தந்தையர், நமக்கு வாழ்வில் மிகவும் உபகாரியாக வாழ்ந்தோர் இறந்திருந்தால் அவர்களின் உபகாரங்களைக் குறிப்பிட்டு ரப்பிடம் மனமுருகி இறைஞ்சுவது....


ذكر الهيثمي في "مجمع الزوائد" عن أنس بن مالك رضي الله عنه قال: لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي رضي الله عنهما، دخل عليها رسول الله صلى الله عليه وسلم فجلس عند رأسها فقال: "رحمك الله يا أمي، كنت أمي بعد أمي، تجوعين وتشبعيني، وتعرين وتكسيني، وتمنعين نفسك طيباً وتطعميني، تريدين بذلك وجه الله والدار الآخرة".
 ثم أمر أن تغسل ثلاثاً فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه وسلم بيده، ثم خلع رسول الله صلى الله عليه وسلم قميصه فألبسها إياه، وكفنها ببرد فوقه، ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاماً أسود يحفرون، فحفروا قبرها،  فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده وأخرج ترابه بيده، فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال: "الله الذي يحيي ويميت، وهو حي لا يموت، اغفر لأمي فاطمة بنت أسد، ولقنها حجتها، ووسِّع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين". وكبر عليها أربعاً، وأدخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم. (رواه الطبراني والحاكم وابن ابي خيثمة وابن حبان)
وذكر السمهودي في كتابه "وفاء الوفا" أن رسول الله صلى الله عليه وسلم قد دفن فاطمة بنت أسد بن هاشم بالروحاء في المدينة المنورة.

அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

இறந்து போனவர்களின் குடும்பத்தார், வறுமையிலும், கடனிலும் சிக்கி நிலைகுலைந்து போய் இருந்தால் ஓடோடிச் சென்று உதவிட வேண்டும்…

அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்:- “நபி (ஸல்) அவர்களின் முன் இறந்து போன ஒருவரின் ஜனாஸா தொழுவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இறந்து போன இவர் மீது ஏதேனும் கடன் உள்ளதா?எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் ஆம் இவர் மீது கடன் உண்டுஎன்றனர்.

கடனை நிறைவேற்றுமளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா?என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
மக்கள் இல்லை என்று கூறினார்கள்.

அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்நிலையைக் கண்ட அலீ (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! அக்கடனை அடைக்கும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து தொழ வைத்தார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்களை நோக்கிஅலீயே! அல்லாஹ் உம்மை நரகிலிருந்து காப்பானாக! முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடனை அடைக்கும் எந்த முஸ்லிமைடும் அல்லாஹ் மறுமை நாளில் நரகிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஷரஹூஸ் ஸுன்னா )


உஹதில் ஷஹீதாகிப் போன தம் தந்தை, ஏராளமான கடன் சுமை,  வயதுக்கு வந்த ஒன்பது சகோதரிகள், ஏழ்மையான சூழ்நிலை என ஏராளமான பிரச்சனைகளோடு நடமாடிக் கொண்டு, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் பகைவர்களை எதிர்த்துப் போரிட முதல் ஆளாய் வந்து நிற்கிற இளைஞர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் காருண்ய நபியவர்கள் அவருக்கு பெரிய அளவில் உதவிட வேண்டும், அந்த உதவி அவரின் முழுச் சூழ்நிலைகளையும் மாற்றிட வேண்டும். என தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.                            

ஏனெனில், தன்மான உணர்வும், உயர்குலத்தில் பிறந்த சிறப்பும் பெற்றிருந்தவர். நேரிடையாகச் சென்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உதவிட தயக்கம் காட்டியதற்கு இது தான் காரணமாய் அமைந்திருந்தது.                                            
                அன்று அருமையாய் ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு மனமில்லை.              

இன்றைக்கு எப்படியாவது அவரின் துயர் துடைத்திடும் உதவியை செய்தேயாக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு தயாரானார்கள். தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.                                                          
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.                                

மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் என்ன ஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.                            

கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின் மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள். ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.          

அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.                
 
மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள் ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?” ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?”  என்று நபிகளார் கேட்டார்கள். அதற்கவர் விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்என்றார்கள்.

ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.

ஜாபிர் {ரலி} சொன்னார்கள் இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார். கடனும் ஏராளமாய் இருக்கின்றது.                      

இந் நிலையில் நான் என் சகோதரிகளைக் கவனிக்க என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை  திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”.

ஜாபிரே! நாம் மதீனாவின் எல்லையை நெருங்குகிற போது உடனடியாக  நீர் ஊருக்குள் நுழைந்திட வேண்டாம். உமது வருகையை உமது மனைவிக்கு தெரிவித்து விடுங்கள். உமது மனைவி உமக்காக தலையணையைச் சரி செய்து வைப்பார்கள்என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.                                      

                அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சாடையை புரிந்து கொள்ள முடியாமல்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டில் தலையணைகளே இல்லை அல்லாஹ்வின் தூதரே! என்றார் ஜாபிர் {ரலி}.                                                                                                                          
அல்லாஹ் நாடினால்இனி வரும்..என்றார்கள் சிரித்துக் கொண்டே நபி {ஸல்} அவர்கள். தொடர்ந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} தங்களது உரையாடலைஜாபிரே! உமது ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருகின்றீரா?”….                            

 என்னது என் ஒட்டகத்தையா? அது விலை போகாது இறைத்தூதரே! வேண்டுமானால் நான் அன்பளிப்பாக உங்களுக்குத் தந்து விடுகின்றேன்என்றார் ஜாபிர் {ரலி} அவர்கள்.  இல்லை, ஜாபிர் விலைக்குத் தருவதாக இருந்தால் கூறுங்கள். அன்பளிப்பாகவெல்லாம் தர வேண்டாம்என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.                                                                  
அப்படியானால், ”நீங்களே ஒரு விலையைக் கூறுங்கள்என்றார் ஜாபிர் {ரலி}.   அப்போது நபி {ஸல்} அவர்கள் ஒரு திர்ஹம்என்றார்கள். என் ஒட்டகம் அவ்வளவு தான் விலை போகுமா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார் ஜாபிர் {ரலி}.                                          
அப்போது நபி {ஸல்} அவர்கள் இரண்டு திர்ஹம்என்றார்கள். வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே! அன்பளிப்பாகவே எடுத்துக் கொள்ளுங்கள்!என்றார் ஜாபிர் {ரலி}.                                  
ஒவ்வொரு திர்ஹமாக உயர்த்தி, உயர்த்தி இறுதியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் 700 எழுநூறு திர்ஹமாக அந்த ஒட்டகத்திற்கு விலையாக நிர்ணயித்தார்கள்.                          

விலை பேசி நபியவர்கள் முடித்த போது உடனடியாக ஒட்டகத்தின் மேல் இருந்து கீழிறங்கிய ஜாபிர் அவர்களைப் பார்த்த நபியவர்கள் நீங்களே ஓட்டி வாருங்கள் ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கின்றேன்என்று கூறினார்கள்.                                  
மதீனா வந்ததும் நேராக மஸ்ஜிதுன் நபவீக்குச் சென்று அங்குள்ள ஒரு தூணில் ஒட்டகத்தை கட்டிப் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள் ஜாபிர் {ரலி}.                                

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது அங்கே ஒட்டகம் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, அதை அங்கே கட்டியவர் யார்? என அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள்.                    

மக்கள் ஜாபிர் என்று கூறினார்கள். உடனடியாக, அங்கிருந்த பிலால் {ரலி} அவர்களை அழைத்து 700 திர்ஹத்தை ஒருபையிலே போட்டுக் கொடுத்து, இந்த ஒட்டகத்தையும், இந்த பணமுடிப்பையும் ஜாபிர் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் இந்த பண முடிப்பை உங்களிடம் தரச் சொன்னார்கள்.              
 
மேலும், இந்த ஒட்டகத்தை உமக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பளிப்பாக தந்திருக்கின்றார்களாம்என்று கூறிடுமாறு அனுப்பி வைத்தார்கள்.      பிலால் {ரலி} அவர்களும் அப்படியே சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார்கள்.                                                      
இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள்அதற்குப் பின்னர் தாம் எப்போதுமே வாழ்வில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டதில்லை. அது எங்களின் பொருளாதரத்தை பல்கிப் பெருக்கியதுஎன்று கூறுகின்றார்கள்.  ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பாடம்: ஃகஸ்வது தாதுர் ரிகாஃ, பக்கம்:164,165. )

ஆகவே, மௌத்தாக்களின் மீதான நம் உரிமைகள்சையும், கடமைகளையும் உணர்ந்து செயலாற்றுவோம்!!!

யாஅல்லாஹ்! மரணித்து போன எங்களின் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், உலக முஃமின்கள் அனைவரின் பிழைகளையும் மன்னித்து, அவர்களைப் பொருந்திக் கொள்வாயாக!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!