Thursday 10 October 2019

பணமும்… மனித மனமும்…


பணமும்மனித மனமும்





நாம் வாழ்கிற இந்த காலத்தில் பணம் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் இருக்கின்றார்கள்.

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதையும் விலை பேசி வாங்கிடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.

ஆதலால் தான் இங்கு, இன்று எல்லாவற்றையும் நிர்ணயிப்பது பணமாகி விட்டது.

பணம் தான் கல்வியை, கல்வியாளனை தீர்மானிக்கிறது; பணம் தான் பதவியை, தலைமைத்துவத்தை தீர்மானிக்கிறது; பணம் தான் நீதியை தீர்மானிக்கிறது; பணம் தான் இங்கே பலரின் வாழ்க்கைத் துணையை தீர்மானிக்கிறது. பணம் தான் இங்கே பலருக்கான அடையாளத்தையும், சமூகத்தில் மரியாதையையும் தீர்மானிக்கிறது.

மிகச் சாதாரண காரியங்களில் இருந்து பெரிய காரியங்கள் வரை அரசு அலுவலகங்களின் சாதாரண அதிகாரியில் துவங்கி ஆட்சியாளர் வரை சாமானியர்கள், பாமரர்கள் என்றில்லாமல் படித்தவர்கள், பண்பாளர்கள் வரை பணம் பண்ண வேண்டும் அல்லது பணம் தான் முக்கியம் என்கிற வெறி ஆழமாக குடிகொண்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

மனித சமூகம் புழங்குகிற அனைத்து தளங்களும் இன்று பணமயமாக மாறிப் போனதை நாம் பார்க்கின்றோம்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் ஓர் அறிக்கையின் படி சமூகத்தில் நடக்கிற குற்றங்களில் 24 வகையான குற்றங்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட குற்றங்கள் ஆகும். ஆம்! பணம் மட்டுமே அங்கே குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்கின்றது.

விபச்சாரம், திருட்டு, கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், லஞ்சம், ஊழல், கலப்படம், அபகரித்தல், கள்ளச்சந்தை, நில மோசடி, காப்பீட்டு மோசடி, பங்குச்சந்தை மோசடி என நீண்ட பட்டியலே இருக்கின்றது.

சமீபத்திய நீட் தேர்வு ஆள்மாறாட்டம் அது தொடர்பான விவகாரங்களின் பிண்ணனியில் பணத்தின் மீதான ஆசையில் நடந்தேறிய அவலங்களை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்.

டாக்டர் சீட் பெறுவதற்கு பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள். லட்சங்களுக்காக அந்த தவறை செய்ய ஒப்புக் கொண்டவர்கள். அதற்கு துணை போன அதிகாரிகள், உடந்தையாக இருந்த பெற்றோர்கள் என ஒரு பெரிய நெட்வொர்க்கே இதன் பின்னால் இருந்ததை பார்க்க முடிந்தது.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம் தான். “பணம் இருந்தால் தான் இங்கு எல்லாம்என்ற கால சூழ்நிலையில் வாழும் நாம், மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் வழிகாட்டுகிற இஸ்லாம் பணம் தொடர்பான விவகாரங்களில் காட்டும் வழிகாட்டுதலை அறிந்து கொண்டு செயல்பட கடமைப்பட்டுள்ளோம்.

பொதுவாக பணம், செல்வம் குறித்தான மனிதனின் மனோ நிலை குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதையும், நபிமொழிகளில் பெருமானார் {ஸல்} அவர்கள் கூறியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.   பணத்தின் மீதான மோகம்..
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا (20)
மேலும், செல்வத்தின் மீது நீங்கள் அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்

                                                       (அல்-குர்ஆன்: 89: 20)

2.   எப்போதும் தம்முடனே இருக்கும் என்கிற எண்ணம் 

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ (1) الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ (2) يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ (3) كَلَّا

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே நிரந்தரமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் செல்வம் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.      ” (அல்-குர்ஆன்: 104:1-4 )

3.   எதையும் சாதித்து விட முடியும் என்கிற நம்பிக்கை

وَقَالُوا نَحْنُ أَكْثَرُ أَمْوَالًا وَأَوْلَادًا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ (35)

மேலும், “நாங்கள் அதிகமான செல்வமும், சந்ததிகளும் உடையவர்கள். எனவே, நாங்கள் ஒரு போதும் தண்டிக்கப்பட மாட்டோம்என்று அவர்கள் கூறினார்கள்.                                                 (அல்-குர்ஆன்: 34: 35)

4. இன்னும் வேண்டும், வேண்டும் என்கிற பேராசை

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஆதமின் மகனுக்கு ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமுடைய மகனுடைய வயிற்றை மண்ணைத் தவிர வேறெதுவும் மூடாது. மேலும் (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். { நூல்: புகாரி 6438 }

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை'' என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி 6421 )

மேற்கூறிய வசனங்களில், நபிமொழிகளில் பணத்தின் மீதான ஆசையை, நம்பிக்கையை, எண்ணத்தை மனிதனின் இயற்கையான சுபாவங்களாக அல்லாஹ்வும், அல்லூஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அடையாளப் படுத்தி இருப்பதைக் காண முடிகின்றது.

ஆனால், பின்வரும் வசனங்களும், நபிமொழிகளும் அந்த ஆசைகளும், எண்ணங்களும், நம்பிக்கைகளும் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றன.

1.   செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!

وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ

அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்”.                                             ( அல்-குர்ஆன்: 16: 71 )

قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (36)

நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்என்று (நபியே!) நீர் கூறும்                                        ( அல்-குர்ஆன்: 34: 36 )

2.   வெறும் அலங்காரம் மட்டும் தான்

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا (46)

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன                    ( அல்-குர்ஆன் 18: 46 )

3.   பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்காது!

مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (7)

அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்                            ( அல்-குர்ஆன்: 59: 7 )

4.   செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்! அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!

وَلَا تُعْجِبْكَ أَمْوَالُهُمْ وَأَوْلَادُهُمْ إِنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُعَذِّبَهُمْ بِهَا فِي الدُّنْيَا وَتَزْهَقَ أَنْفُسُهُمْ وَهُمْ كَافِرُونَ (85)
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்” ( அல்-குர்ஆன்: 9: 85 )

وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ (33)

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது மட்டும் இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்        ( அல்-குர்ஆன்: 43: 33 )

5.   சொற்பகாலம் சுகம் அனுபவிக்கவே!

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ (14)

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், ழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள் சுகம் அனுபவிக்க மட்டும் தான் அல்லாஹ்விடமே அழகிய புகலிடம் உள்ளது. ( அல்குர்ஆன்: 3: 14 )

6.   சோதனையே..
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ (28)

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! ( அல் குர்ஆன்: 8: 28 )

கஅப் பின் இயாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்'' என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                             ( நூல்: திர்மிதீ 2258 )

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டு அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைக் திருப்பி விட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பி விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                         ( நூல்: புகாரி 6425 )

7.   கவனமும், எச்சரிக்கையும் வேண்டும்..

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ (9)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.                     ( அல்குர்ஆன்: 63: 9 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                         ( நூல்: புகாரி 2059 )

அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: "ஒருவன் தன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதித்தான்? எப்படிச் செலவழித்தான் என்று விசாரணை செய்யப்படாமல் அவனின் இரு பாதங்களும் (மறுமை நாளில் அவன் நிற்கும் இடத்தை விட்டு) நகர முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ 2341 )

8 மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88)

அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா” (அல்-குர்ஆன்: 26: 88 )
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى (11)

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது                               ( அல்-குர்ஆன்: 92:11 )

كَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَانُوا أَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَالًا وَأَوْلَادًا فَاسْتَمْتَعُوا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِي خَاضُوا أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ (69)
     
“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள்.

அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன்: 9:69)

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَالَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (27) مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ (29)

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்:என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

 அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்)”.                   ( அல்-குர்ஆன்: 69: 25-29 )

சில நேரம்.. சில பொழுது

பணம் சில நேரம், சில பொழுது நல்லோர்களையும் கூட விட்டு வைப்பதில்லை. அவர்களை தன் பக்கம் இழுத்து விடுகின்றது.

مرّ رجلٌ على رسول الله صلى الله عليه وسلم فقال: «ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن يُنْكح، وإن شَفَع أن يُشَفّع، وإن قال أن يُسْتمع له. قال: ثم سكت، فمر رجل من فقراء المسلمين فقال: ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن لا يُنْكح، وإن شَفَع أن لا يُشَفّع، وإن قال أن لا يُسْتمع له، فقال رسول الله صلى الله عليه وسلم
«هذا خيرٌ من ملء الأرض من مثل هذا» «»

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்த இடத்தை ஒரு மனிதர் கடந்து சென்றார்.

அப்போது, அண்ணலார் இவர் மீதான உங்களின் அபிப்பிராயம் என்ன?” என்று வினவியதற்குநபித்தோழர்கள்இவர் சுதந்திரமான ஒருவர், இவர் திருமணம் செய்ய பெண் கேட்டால், மணமுடித்து வைக்கப்படுவார். ஏதேனும் ஒரு விவகாரத்தில் இவர் பரிந்துரைத்தால் உடனடியாக இவரின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். அவர் ஏதாவது சொன்னால் செவி தாழ்த்தி மக்களெல்லாம் கேட்பார்கள்என்று பதில் கூறினார்கள்.

இது கேட்ட மாநபி {ஸல்} அவர்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் அண்ணலாரின் சபையைக் கடந்து சென்ற ஒரு ஏழை முஸ்லிமைக் குறித்துஇவரின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்கு, நபித்தோழர்கள், “இவரும் ஒரு சுதந்திரமான மனிதர் தான், எனினும் இவர் பெண் கேட்டால் எவரும் கொடுக்க முன் வர மாட்டார்கள். இவர் பரிந்துரைத்தால் அது பரிசீலிக்கப்படவே மாட்டாது. இவர் பேச்சை எவரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்என பதிலளித்தனர்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீங்கள் முதலில் விமர்சித்த நபரை விடவும், நிரப்பமான இந்த பூமியை விடவும் இந்த ஏழை மனிதர் தான் மிகவும் சிறந்தவர்என கூறினார்கள்.                              ( நூல்: புகாரி ) 

மனிதர்களை மதிப்பதின் மீதான உங்களின் அளவீடுகளும், அணுகுமுறையும் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டி சுயமரியாதை உள்ள எந்த ஒருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நபிகளார் தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

அப்படியென்றால், பணம் தொடர்பான விவகாரங்கள் அனைத்தில் இருந்தும் ஒரு முஃமின் எப்படி விலகி வாழ்ந்திட முடியும்?

மார்க்கம் வலியுறுத்துகிற பல்வேறு கடமைகள், வழிபாடுகள் இவைகளை நிறைவேற்ற பணம் அவசியம் தேவைப்படுகின்றதே!?

இப்படியான கேள்விகளுக்கு மாநபி {ஸல்} அவர்கள் தருகிற பதில் அழகானது!

فقال النبي صلَّى اللهُ علَيه وسلَّم: يا عمْرُو، نِعْمَ المالُ الصالِحِ للمَرْءِ الصالِحِ"، أي: نِعْمَ المالُ الحَلالُ للرَّجُلِ الذي يُنفِقُه في حاجَتِه ثم في ذَوي رَحِمِه وأقارِبِه الفُقَراءِ ثم في أعْمالِ البِرِّ

மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அம்ரே! ஸாலிஹான மனிதருக்கு கொடுக்கப்பட்ட ஸாலிஹான பணம் தான் மிக உயர்ந்த பணம் ஆகும்” ( நூல்: பைஹகீ, அல் அதபுல் முஃப்ரத் )

அதாவது ஹலாலான வழியில் சம்பாதித்து நன்மையான காரியங்களில், ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் செலவிடப்படும் பணம் ஆகும்.

وقد روى الخطيب البغدادي بسنده عن علي بن الجعد قال: أخبرني يعقوب بن إبراهيم أبو يوسف القاضي، قال: توفي أبي؛ إبراهيم بن حبيب، وخلفني صغيرًا في حجر أمي، فأسلمتني إلى قصار أخدمه؛ فكنت أدع القصار، وأمر إلى حلقة أبي حنيفة، فأجلس استمع، فكانت أمي تجيء خلفي إلى الحلقة، فتأخذ بيدي وتذهب بي إلى القصار، وكان أبوحنيفة يعني بي؛ لما يرى من حضوري وحرصي على التعلم، فلما كثر ذلك على أمي، وطال عليها هربي، قالت: لأبي حنيفة؛ ما لهذا الصبي فساد غيرك، هذا صبي يتيم لا شيء له، وإنما أطعمه من مغزلي، وآمل أن يكسب دانقًا يعود به على نفسه، فقال لها أبو حنيفة: مري يا رعناء، هذا هو ذا يتعلم أكل الفالوذج بدهن الفستق، فانصرفت عنه، وقالت له: أنت شيخ قد خرفت، وذهب عقلك، ثم لزمته؛ فنفعني الله بالعلم، ورفعني حتى تقلدت القضاء، وكنت أجالس الرشيد، وآكل معه على مائدته، فلما كان في بعض الأيام قدم إلي هارون فالوذجة، فقال لي هارون: يا يعقوب، كل منه فليس كل يوم يعمل لنا مثله، فقلت: وما هذه يا أمير المؤمنين؟ فقال: هذه فالوذجة بدهن الفستق، فضحكت، فقال لي: مم ضحكت؟ فقلت: خيرًا أبقى الله أمير المؤمنين، قال: لتخبرني وألح علي، فخبرته بالقصة من أولها إلى آخرها؛ فعجب من ذلك، وقال: لعمري إن العلم ليرفع وينفع دينًا ودنيا، وترحم على أبي حنيفة، وقال: كان ينظر بعين عقله مالا يراه بعين رأسه.

ஹிஜ்ரி 113 –ஆண்டு யஅகூப் இப்னு இப்ராஹீம் என்பவர்கள் கூஃபா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கின்றார்கள்.

இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற காலமும் கூட.

உலகின் எட்டுத் திக்கிலும் இமாமவர்களின் புகழ் பரவி, சன்மார்க்க அறிவைப் பருக, பெற்றிட தூர தேசங்கள் அனைத்திலிருந்தும் அலை அலையாய் இமாமவர்களின் பாடசாலையை நோக்கி மாணவர்கள் திரண்டு வந்து கொண்டிருந்த தருணம் அது.

ஏழ்மை சூழலில் வாழ்ந்து வந்த, இமாமுல் அஃளம் பாடசாலையின் அருகே வாழ்ந்து வந்த யஅகூப் அவர்களின் உள்ளத்திலும் அந்த ஆசை இடம் பெற்றது.

மதி கூர்மையும், அபார மனன சக்தியும் நிறைந்திருந்த இளவல் யஅகூப் அவர்கள் இமாமவர்களின் பாடசாலையில் அடியெடுத்து வைக்கின்றார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் அவரின் தாயார் அவர்கள் ஒரு சலவையாளரிடம் தொழில் பழகுவதற்காக விட்டு வந்திருந்தார்கள்.

ஆனால், யஅகூப் அவர்களோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இமாமவர்களின் பாடசாலைக்கு வந்து ஆர்வத்தோடு கல்வி பயில ஆரம்பித்தார்கள்.

துவக்கமாக, அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்.

இந்தச் செய்தியை சலவையாளரின் மூலம் அறிந்து அவரது தாயார், ஒரு நாள் நேராக பாடசாலைக்குச் சென்று கடும் கோபத்தோடு தங்களது மகனை அழைத்துச் சென்றார்கள்.

அங்கே, பாடம் நடத்திக் கொண்டிருந்த இமாமுல் அஃளம் அவர்கள் இதனைக் கண்டு எழுந்து வந்து காரணம் வினவுகின்றார்கள்.

அதற்கு, அந்த தாயார்இவரோ ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரும் நானும் இணைந்து உழைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும். இது தெரியாமல் என் பிள்ளையை அழைத்து வந்து ஓதிக் கொடுக்கின்றேன் என்று அவன் வாழ்வை பாழாக்குகின்றீர்களே! இது நியாயமா? என்று கேட்டார்கள்.

அப்போது, இமாமவர்கள்! விபரமில்லாத பெண்ணே! இந்தச் சிறுவரை எதிர் காலத்தில் பிஸ்தா எண்ணையினால் தயாரிக்கப்படும் ஃபாலூதா எனும் உணவை உண்பதற்காக தயார் படுத்திக் கொண்டிருக்கின்றேன்என்றார்கள்.

அது கேட்டதும், கோபத்தில் இருந்த அந்த தாய்! பெரிய மனிதரே! நீர் கெட்டுப் போய் விட்டீர் போலும்! உமது அறிவு மழுங்கி விட்டது போலும்!” என்று கடுமையாக பேசினார்கள்.

பின்னர், சிறிது நேரம் கழித்து யஅகூப் அவர்களின் தாயாரைச் சந்தித்து100 திர்ஹம்கள் அடங்கிய ஒரு பையைக் கொடுத்து இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகன் மாதந்தோரும் தரும் ஊதியமாக நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் கல்வி கற்று முடியும் வரை இது போன்று பண முடிப்புகளை உங்கள் ஏழ்மையை கருத்தில் கொண்டு உபகார நிதியாக தருகின்றேன். உங்கள் மகனை சன்மார்க்க கல்விக்காக விட்டு விடுங்கள் என்றார்கள்.

அவர்களின் தாயாரும் அதற்கு சம்மதித்தார்கள். குர்ஆனை மனனம் செய்தார். குர்ஆனுக்கான விரிவுரை வழங்கும் கலை, ஹதீஸ் கலை, வரலாற்றுக் கலை, ஃபிக்ஹ் கலை என பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றார்கள்.

இமாமவர்களால் நீதிபதியாகும் தகுதி படைத்த மாணவர் என புகழாரம் சூட்டப்பட்டவர்களில் ஒருவரானார் யஅகூப் எனும் இயற்பெயரைக் கொண்ட இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள்.

உலகின் நான்கில் மூன்று பகுதிகள் இஸ்லாமிய எல்கையால் சூழப்பட்டிருந்த தருணம் அது.

அமீருல் முஃமினீனாக ஹாரூன் ரஷீத் பாதுஷா (ரஹ்) அவர்கள் வீற்றிருந்த காலம் அது.

இஸ்லாமிய முழு உலகின் முதன்மை நீதிபதியாக முதலாவதாக நியமிக்கப் பட்டார்கள் இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள்.

ஒருநாள் கலீஃபாவோடு உணவருந்த அமர்ந்திருந்த இமாம் அவர்களின் முன்பாக நறுமணமும், சுவையும் மிக்க ஒரு உணவு வைக்கப்படுகின்றது. அதை அப்போது தான் முதன் முதலாகப் பார்க்கின்றார்கள் இமாம்.

கலீஃபாவிடம் இது என்ன உணவு? என்று வினவினார்கள். கலீஃபா அவர்கள் இமாமிடம் இது ஃபாலூதா, பிஸ்தா எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவு என்றார்கள்.

இதைக் கேட்டதும் இமாம் அவர்கள் சிரித்தார்கள். கலீஃபா சிரித்ததன் காரணம் என்ன என்று கேட்டதற்கு இமாமவர்கள் கடந்த கால நிகழ்வுகளைக் கூறி என் ஆசிரியர் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் எவ்வளவு தீட்சண்யத்தோடு இதை சொல்லி இருக்கின்றார்கள். அல்லாஹ் அன்னாருக்கு அருள் புரிவானாக! என்றார்கள்.

இதைக் கேட்ட கலீஃபா அவர்கள், ஆம்! உலகில் எல்லோரும் புறக்கண்களால் பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள். உமது ஆசான் இமாமுல் அஃளம் அவர்களோ அகக் கண்களால் பார்க்கும் அபார ஆற்றல் கொண்டவர்கள்என்று கூறினார்கள்.

                               ( நூல்: கிதாபுல் கராஜ், கிதாபு கதீபுல் பக்தாதீ )

சாதாரண சலவைத் தொழிலாளியாகவோ அல்லது ஏதேனும் ஒரு கூலித் தொழிலாளியாகவோ வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவரை தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், வரலாறு போன்ற மாபெரும் கலைகளில் மகத்தான ஆற்றல் கொண்டவராக, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் முதன்மை நீதிபதியாக இமாம் அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள் பரிணமிக்க, வரலாற்றில் வாகாய் அமர்ந்து ஒளி வீசிக்கொண்டிருக்கஸாலிஹான மனிதரான இமாம் அவர்களின் ஸாலிஹான பணத்தால் தான்என்றால் அது மிகையல்ல.

அல்லாஹ் நேசிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் தான் ஸல்மான் ஃபார்ஸி (ரலி)

அஹ்ஸாப் யுத்தத்தின் போது ஸல்மான்  (ரலி) வழங்கிய ஆலோசனையும், அல்லாஹ்வின் உதவியும் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.

யார் இவர்?

பாரசீகத்தில் பெரும் தனவந்தரின் குடும்பத்தில் பிறந்தவர், நெருப்பை வணங்கும் ஆச்சாரமான குடுமபத்தில் பிறந்தவர், வளமாக வாழ எல்லா அம்சங்களையும் கொண்டவர், அவரின் இளமைப்பருவம், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும், இறைவன் யார் என்பதில் தேட்டமும் கொள்ளவைத்தது.

உண்மை மார்க்கம் எது வென்பதை கண்டுபிடிப்பதில் அதிக முனைப்பும் காட்டினார்.ஆதலால், கிறுஸ்துவ, யூத பாதிரிமார்களுடன் நெருக்கத்தை எற்படுத்திக் கொண்டார்.அதிலும் குறிப்பாக ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் அதிக நட்பும், மதிப்பும். கொண்டிருந்தார், அவர் தம் மரண தருவாயில் விரைவில் ஒரு நபி மக்காவில் தோன்றுவார் அவர் கொண்டுவரும் இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது என்று கூறியதோடு நபி (ஸல்) அவர்கள் குறித்த சில அடையாளங்களையும் சொல்லிவிட்டு இறந்துபோனார்.

حَتَّى إِذَا قَدِمُوا بِي وَادِي الْقُرَى ظَلَمُونِي فَبَاعُونِي مِنْ رَجُلٍ مِنْ يَهُودَ عَبْدًا ، فَكُنْتُ عِنْدَهُ ، وَرَأَيْتُ النَّخْلَ ، وَرَجَوْتُ أَنْ تَكُونَ الْبَلَدَ الَّذِي وَصَفَ لِي صَاحِبِي ، وَلَمْ يَحِقْ لِي فِي نَفْسِي ، فَبَيْنَمَا أَنَا عِنْدَهُ قَدِمَ عَلَيْهِ ابْنُ عَمٍّ لَهُ مِنْ الْمَدِينَةِ مِنْ بَنِي قُرَيْظَةَ ، فَابْتَاعَنِي مِنْهُ ، فَاحْتَمَلَنِي إِلَى الْمَدِينَةِ ، فَوَاللَّهِ مَا هُوَ إِلا أَنْ رَأَيْتُهَا فَعَرَفْتُهَا بِصِفَةِ صَاحِبِي ، فَأَقَمْتُ بِهَا ، وَبَعَثَ اللَّهُ رَسُولَهُ فَأَقَامَ بِمَكَّةَ مَا أَقَامَ ، لا أَسْمَعُ لَهُ بِذِكْرٍ مَعَ مَا أَنَا فِيهِ مِنْ شُغْلِ الرِّقِّ ، ثُمَّ هَاجَرَ إِلَى الْمَدِينَةِ ، فَوَاللَّهِ إِنِّي لَفِي رَأْسِ عَذْقٍ لِسَيِّدِي أَعْمَلُ فِيهِ بَعْضَ الْعَمَلِ وَسَيِّدِي جَالِسٌ إِذْ أَقْبَلَ ابْنُ عَمٍّ لَهُ حَتَّى وَقَفَ عَلَيْهِ ، فَقَالَ فُلانُ : قَاتَلَ اللَّهُ بَنِي قَيْلَةَ ، وَاللَّهِ إِنَّهُمْ الآنَ لَمُجْتَمِعُونَ بِقُبَاءَ عَلَى رَجُلٍ قَدِمَ عَلَيْهِمْ مِنْ مَكَّةَ الْيَوْمَ يَزْعُمُونَ أَنَّهُ نَبِيٌّ ، قَالَ فَلَمَّا سَمِعْتُهَا أَخَذَتْنِي الْعُرَوَاءُ ( برد الحمى ) حَتَّى ظَنَنْتُ سَأَسْقُطُ عَلَى سَيِّدِي ، قَالَ : وَنَزَلْتُ عَنْ النَّخْلَةِ فَجَعَلْتُ أَقُولُ لابْنِ عَمِّهِ ذَلِكَ : مَاذَا تَقُولُ مَاذَا تَقُولُ ؟ قَالَ فَغَضِبَ سَيِّدِي فَلَكَمَنِي لَكْمَةً شَدِيدَةً ثُمَّ قَالَ : مَا لَكَ وَلِهَذَا ؟! أَقْبِلْ عَلَى عَمَلِكَ . قَالَ قُلْتُ : لا شَيْءَ ، إِنَّمَا أَرَدْتُ أَنْ أَسْتَثْبِتَ عَمَّا قَالَ . وَقَدْ كَانَ عِنْدِي شَيْءٌ قَدْ جَمَعْتُهُ ، فَلَمَّا أَمْسَيْتُ أَخَذْتُهُ ثُمَّ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ وَهُوَ بِقُبَاءَ ، فَدَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ لَهُ : إِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّكَ رَجُلٌ صَالِحٌ وَمَعَكَ أَصْحَابٌ لَكَ غُرَبَاءُ ذَوُو حَاجَةٍ ، وَهَذَا شَيْءٌ كَانَ عِنْدِي لِلصَّدَقَةِ ، فَرَأَيْتُكُمْ أَحَقَّ بِهِ مِنْ غَيْرِكُمْ ، قَالَ فَقَرَّبْتُهُ إِلَيْهِ ، فَقَالَ رَسُولُ اللَّه صلى الله عليه وسلم لِأَصْحَابِهِ : كُلُوا . وَأَمْسَكَ يَدَهُ فَلَمْ يَأْكُلْ ، قَالَ فَقُلْتُ فِي نَفْسِي هَذِهِ وَاحِدَةٌ ، ثُمَّ انْصَرَفْتُ عَنْهُ فَجَمَعْتُ شَيْئًا ، وَتَحَوَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ ، ثُمَّ جِئْتُ بِهِ ، فَقُلْتُ إِنِّي رَأَيْتُكَ لا تَأْكُلُ الصَّدَقَةَ وَهَذِهِ هَدِيَّةٌ أَكْرَمْتُكَ بِهَا ، قَالَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا ، وَأَمَرَ أَصْحَابَهُ فَأَكَلُوا مَعَهُ ، قَالَ فَقُلْتُ فِي نَفْسِي هَاتَانِ اثْنَتَانِ ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِبَقِيعِ الْغَرْقَدِ ، قَالَ : وَقَدْ تَبِعَ جَنَازَةً مِنْ أَصْحَابِهِ عَلَيْهِ شَمْلَتَانِ لَهُ ، وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ اسْتَدَرْتُ أَنْظُرُ إِلَى ظَهْرِهِ هَلْ أَرَى الْخَاتَمَ الَّذِي وَصَفَ لِي صَاحِبِي ، فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَدَرْتُهُ عَرَفَ أَنِّي أَسْتَثْبِتُ فِي شَيْءٍ وُصِفَ لِي ، قَالَ فَأَلْقَى رِدَاءَهُ عَنْ ظَهْرِهِ ، فَنَظَرْتُ إِلَى الْخَاتَمِ فَعَرَفْتُهُ فَانْكَبَبْتُ عَلَيْهِ أُقَبِّلُهُ وَأَبْكِي

மக்காவை தேடி புறப்பட்ட அவர் சிலரால் ஏமாற்றாப்பட்டு வாதில் குரா எனும் ஊரில், ஒருவரிடம் அடிமையாக்கப்பட்டார் மனம் முழுவதும் சத்திய தீனின் மீதும், நபிகளாரின் வருகை குறித்துமே நிரம்பி இருந்தது. அவர் ஆசை அன்று நிறைவேறியது

தன் எஜமானின் சொந்தக்காரர் ஒருவர், தன் எஜமானிடம்  நபி (ஸல்) அவர்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.
மனதினுள் எப்படியாவது முஹம்மத் (ஸல்) அவர்களை கண்டிரவேண்டும் என ஆவல் கொண்டார் ஸல்மான் (ரலி) அதற்கு அச்சாரம் போட்டது போல் இந்த அடிமையை எனக்கு விலைக்கு தந்துவிடு என்று விலைகொடுத்து வாங்கி கொண்டுவந்தான். ஸல்மான் (ரலி) அவர்களை மதீனாவுக்கு வந்து விட்டார்கள்.

பாரசீகத்தில் தொடங்கிய சத்தியத் தேடலுக்கான பயணம் ஒரு வழியாக மதீனாவை வந்தடைந்ததில் ஸல்மான் (ரலி) க்கு ஒருவகையில் சந்தோஷம் இதோ அருகில் தான் மக்கா இன்னும் கொஞ்சம் நாளில்நபியை சந்தித்துவிடலாம். சமயம் பார்த்து காத்திருக்கையில் ஸல்மானின் காதில் தேனாய் வந்து விழுந்தது.

இதோ கூப்பிடும் தூரத்திலிருக்கின்ற குபாவில் நபிகாளாரும் அவர் தம் அருமைதோழர்களும், வந்து தங்கியிருக்கிறார்கள் எனும் செய்தி. மறுநாளே சில பேரித்தம் பழங்களை எடுத்துக் கொண்டு குபா நோக்கி விரைந்தார் ஸல்மான்.

அங்கே ஓரிடத்தில் பாதிரி சொன்ன முக அடையாளங்களை கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது உங்களுக்கும், உங்களது தோழருக்கும் நான் தருகிற தர்மப் பொருள், கொஞ்ஜம் பேரீத்தம்பழம் உண்ணுங்கள் என்று நபிகளாரின் கையில் கொடுத்தார். ஸல்மானே! எனக்கு தர்மப் பொருள் ஆகுமானதல்ல என்று சொல்லிய நபி (ஸல்) தோழர்களிடம் கொடுத்துவிட்டார்கள்.

மறுநாளும் பேரீத்தம்பழத்தோடு வந்த ஸல்மான் நபியின் முன்வந்து இது உங்களுக்கும், உங்களது தோழருக்கும் நான் தருகிற அன்பளிப்பு என்றவராக நபிகளாரின் கையில் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள் தோழர்களையும் உண்ணச் சொன்னார்கள்.

பாதிரி சொன்ன முக அடையாளமும், ஸதகாவை உண்ணமாட்டார் என்ற அடையாளமும், ஒத்துப் போக மூன்றாம் அடையாளத்தைக் காண நபிகளாரின் முதுகுப்பக்கம் எங்கெல்லாம் திரும்பியதோ அங்கெல்லாம் நின்றார்.

ஸல்மானின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலாடையை விலக்கி நுபவ்வத் தொளிரும் முத்திரையை ஸல்மான் காணும் படிச்செய்தார்கள். நபித்துவ முத்திரையை கண்ட ஸல்மான் முத்தமிட்டு மகிழ்ச்சி பொங்க சத்திய தீனுல் இஸ்லாத்தை தம் வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் ஸல்மான் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரல்) அவர்களின் சன் மார்க்க தேடலை கேட்டு தெரிந்தபின் இப்படிச் சென்னார்கள்.இந்த தீன் விண்வெளியில் இருந்திருந்தாலும் அங்குவந்தும் இந்த தீனை ஏற்றுக்கொண்டிருப்பார் ஸல்மான் (ரலி). (நூல்: முஸ்லிம்)

அறிவு ஞானத்தில் ஸல்மான் (ரலி) நம்மிடையே லுக்மான் (அலை)போன்றவர்கள் என அலீ (ரலி) கூறுவார்கள்.

உயர்பதவியில் இருந்த போதும் எளிமை,சொந்த உழைப்பில் தான் வாழவேண்டும் என்கிற நேர்மை இக்கட்டான தருணங்களில் ஆலோசனை தரும் புத்திகூர்மை, எல்லாவற்றிற்கும் மேலாக தம் நேசரையே நேசம் கொள்ளுமாறு கட்டளையிட்ட அல்லாஹ்வின் கட்டளைககு சொந்தக்காரர் ஸல்மான் (ரலி) அவர்கள்.

قَالَ ثُمَّ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : كَاتِبْ يَا سَلْمَانُ . فَكَاتَبْتُ صَاحِبِي عَلَى ثَلاثِ مِائَةِ نَخْلَةٍ أُحْيِيهَا لَهُ بِالْفَقِيرِ ( حفرة الفسيلة التي تغرس فيها ) وَبِأَرْبَعِينَ أُوقِيَّةً ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ : أَعِينُوا أَخَاكُمْ . فَأَعَانُونِي بِالنَّخْلِ ، الرَّجُلُ بِثَلاثِينَ وَدِيَّةً ( أي صغار النخل ) ، وَالرَّجُلُ بِعِشْرِينَ ، وَالرَّجُلُ بِخَمْسَ عَشْرَةَ ، وَالرَّجُلُ بِعَشْرٍ ، يَعْنِي الرَّجُلُ بِقَدْرِ مَا عِنْدَهُ ، حَتَّى اجْتَمَعَتْ لِي ثَلاثُ مِائَةِ وَدِيَّةٍ ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : اذْهَبْ يَا سَلْمَانُ فَفَقِّرْ لَهَا ( أي احفر لها موضع غرسها ) ، فَإِذَا فَرَغْتَ فَأْتِنِي أَكُونُ أَنَا أَضَعُهَا بِيَدَيَّ ، فَفَقَّرْتُ لَهَا وَأَعَانَنِي أَصْحَابِي حَتَّى إِذَا فَرَغْتُ مِنْهَا جِئْتُهُ فَأَخْبَرْتُهُ ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعِي إِلَيْهَا : فَجَعَلْنَا نُقَرِّبُ لَهُ الْوَدِيَّ ، وَيَضَعُهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ ، فَوَالَّذِي نَفْسُ سَلْمَانَ بِيَدِهِ مَا مَاتَتْ مِنْهَا وَدِيَّةٌ وَاحِدَةٌ ، فَأَدَّيْتُ النَّخْلَ وَبَقِيَ عَلَيَّ الْمَالُ ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِ بَيْضَةِ الدَّجَاجَةِ مِنْ ذَهَبٍ ، مِنْ بَعْضِ الْمَغَازِي ، فَقَالَ : مَا فَعَلَ الْفَارِسِيُّ الْمُكَاتَبُ ؟ قَالَ فَدُعِيتُ لَهُ فَقَالَ : خُذْ هَذِهِ فَأَدِّ بِهَا مَا عَلَيْكَ يَا سَلْمَانُ . فَقُلْتُ : وَأَيْنَ تَقَعُ هَذِهِ يَا رَسُولَ اللَّهِ مِمَّا عَلَيَّ . قَالَ : خُذْهَا فَإِنَّ اللَّهَ سَيُؤَدِّي بِهَا عَنْكَ . قَالَ فَأَخَذْتُهَا فَوَزَنْتُ لَهُمْ مِنْهَا ، وَالَّذِي نَفْسُ سَلْمَانَ بِيَدِهِ أَرْبَعِينَ أُوقِيَّةً ، فَأَوْفَيْتُهُمْ حَقَّهُمْ ، وَعُتِقْتُ
இந்த ஸல்மான் (ரலி) அவர்களுக்கு அவரின் எஜமானன் விடுதலைக்கு நிர்ணயித்தது 300 மரக்கன்றுகளும், 40 ஊக்கியா தங்கமும்.

நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடையே மரக்கன்றுகள் வழங்கிட வேண்டுகோள் வைத்தார்கள். ஒரு நபித்தோழர் 30 மரன்றுகள், சிலர் 20, சிலர் 10 என ஒவ்வொருவரும் தங்களிடத்தில் இருந்த பணத்தைக் கொண்டு மரக்கன்றுகள் வாங்கினர். இறுதியாக, பெருமானார் {ஸல்} 40 ஊக்கியா தங்கத்தை கொடுத்து ஸல்மான் (ரலி) அவர்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்தனர்.
ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்; உண்மை மார்க்கத்தை அடைய வேண்டும் என்ற தேடலில் 10க்கும் மேற்பட்ட இறைவனை எனக்கு காட்டிவிட்டார்கள்.இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் தான் ஏக இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தைக் கொண்டு முற்றுப்புள்ளி வைத்தார்கள். (நூல்: இஸ்தீ ஆப் பாகம்: 1 பக்கம்: 355-358 )

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து எங்கெங்கோ அலைந்து திரிந்த ஒருவர் அவரின் அடிமை விலங்கொடிக்க நபி {ஸல்} அவர்களும், நல்லோர்களான நபித்தோழர்களின் நல்ல பணமும் வித்திட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

உண்மையில், அல்லாஹ்வும், மாநபி {ஸல்} அவர்களும் பணத்தை மதிப்பிடச் சொன்ன அடிப்படையில் மதிப்பிட்டால் அது நல்ல பணம், அவர் நல்ல மனிதர்.

அந்த மதிப்பீடு இது தான். நம்மிடம் இருக்கும் பணம் அல்லாஹ் நமக்கு தந்த பணம். அவன் விரும்பும் வழியில் நாம் செலவழிக்க வேண்டும்” என்று.

ஆனால், இந்த மதிப்பீட்டுக்கு மாற்றமாக சிந்திப்பதால் தான் பணத்தின் மீதான் தவறான பார்வைகளும், நம்பிக்கைகளும் மனித மனங்களை சூறையாடி இறை நினைவை விட்டும் தூர மாக்குகின்றன.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய மனங்களை பணம் குறித்தான தவறான மதிப்பீட்டிலிருந்து காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!