Wednesday, 24 April 2013

சிகரம் தொட்டபின் சறுக்க வேண்டாம்!


அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சிகரம் தொட்டபின் சறுக்க வேண்டாம்!
உலகில் மனிதனுக்கு வழங்கப்படுகின்ற கண்ணியம், மரியாதை, கெளரவம், அந்தஸ்து ஆகிய இவைகளை ஒன்று  இயற்கையாகவே இறைவன் அவனுக்கு வழங்கியதன் மூலம் பெற்றுக்கொள்கிறான். உதரணமாக, பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறப்பது, நல்லோர்கள், நாதாக்களின் வம்சத்தில் பிறப்பது, செல்வச் செழிப்பு மிக்க குடும்ப பிண்ணனியில் பிறப்பது, சன்மார்க்க அறிவு பெற்றவர்களாக பிறப்பது.
இன்னொன்று அவனது ஆற்றல், திறமைகள், முயற்சி ஆகியவற்றை பயன்படுத்தி, மெல்ல மெல்ல மக்களால் மதிக்கப்படுகின்ற உயர்நிலையை பெற்றுக்கொள்கிறான்.
உதாரணமாக அவன் கையாளும் நேர்மை, நீதியின் அடிப்படையிலான வாழ்க்கை, மனித நேய செயல் பாடுகளில் காட்டுகிற தீவீரம், அவன் கற்ற கல்வியை பயன்படுத்துகிற விதம் என இன்னும் ஏராளமானவற்றை குறிப்பிடலாம்.
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவன் அடைந்து கொண்ட உயர்விலிருந்து அவன் கீழிறங்கி விடக்கூடாது.
சிகரத்தை தொட்ட அவன் சறுக்கி விடக் கூடாது.
மென்மெலும் அவன் இன்னும் உயர்ந்த இடம் எதுவோ அதை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது; வலியுறுத்தவும் செய்கிறது.
அல்லாஹ் அல்குர் ஆனில், மூஃமின்களின் சில பண்புகள் குறித்து (23ம் அத்தியாயம் 57 முதல் 60 வரை உள்ள வசனங்களில்) பேசிய பிறகு,

أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ 
அத்தகையவர்கள் தாம் உயர்வான நன்மைகளின் பக்கம் விரைந்து செல்பவர்களாகவும், அவர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்று அவற்றை அடையக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
அல்குர் ஆன்: 23:61
      மேற்கூறியவாறு கூறுகின்றான்,
      ஆகவேதான் ஆன்மீக வாழ்க்கையில் கூட நல்லறங்களைக் கொண்டு, சில இபாதத்களைக் கொண்டு ஓர் இறை நம்பிக்கையாளன் திருப்தியுற்றுவிடக்கூடாது.இன்னும் அது உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
 فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ () وَإِلَى رَبِّكَ فَارْغَبْ () 

(நபியே!)எனவே, நீர் (ஒரு வணக்கத்திலிருந்து) ஓய்வு பெறும் போது (மற்றொரு) வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக! மேலும் உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
அல்குர் ஆன்: 94:7,8
      அதே நேரத்தில், தனக்கு சமூகத்தில் தரப்படும் மரியாதை, அந்தஸ்து, கெளரவம் ஆகியவைகளைக் கொண்டு பூரிப்படைந்து விடக்கூடாது.அது தற்பெருமை, கர்வம் போன்ற இறை விரோதச் செயல்களில் ஈடுபட வைத்து சறுக்கி விட வைத்து விடும். அல்லாஹ் காரூணைப்பார்த்து அக்கால மக்கள் விமர்சித்ததைக் கூறும் போது
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الآخِرَةَ وَلا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلا تَبْغِ الْفَسَادَ فِي الأَرْضِ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُفْسِدِينَ

ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினார்கள், நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை (மாறாக) அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற ஆசை கொள்; மேலும், இம்மையிலும் உனது பங்கை (வாழ்வை) மறந்து விடாதே! மேலும் அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பது போன்று நீயும் (பிறருக்கு) உபகாரம் செய்.
மேலும் பூமியில் அராஜகம் விளைவிக்காதே! அராஜகம் விளைவிப்பவர்களை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
      மேலும் தனக்கான மரியாதையும், கண்ணியமும் அல்லாஹ்வின் நெருக்கத்தை சமீபமாக்குவதற்கான ஓர் சாதனம்!மென்மேலும் இபாதத்களின் முன்னேற்றத்திற்கான ஏணி! சுவனத்து அந்தஸ்துகளை உயர்த்திக் கொள்வதற்கான ஒர் அரிய வாய்ப்பு! என கருதுவது தான் உண்மையான ஓர் இறை நம்பிக்கையாளனின் மனதில் நிரம்பி இருக்கும்தக்வாவிற்கான அடையாளமாகும்.
அல்குர் ஆன்: 28: 76, 77
ஆகவே சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குச் சென்ற ஒருவன் மீண்டும் பழைய நிலைக்கு வர ஒரு போதும் விரும்புவதில்லை.அதுபோல், சாதாரண முஸ்லிமாக இருந்து உன்னத நிலைக்கு வந்த ஓர் இறைநம்பிக்கையாளன் இன்னும் மிக உயர்ந்த நிலைக்கு தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும்.
சுவனத்தின் மிக உயர்ந்த அந்தஸ்துக்குறியவராக தன்னை நிலை நிறுத்திட முன் வர வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் உயர்ந்த விருப்பமாகும்
அல்லாஹ் கூறுகின்றான்:
 وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَنْ تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٍ 

உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று, பிறகு அதனைத் துண்டு துண்டாக்கி விட்டாளே அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகி விட வேண்டாம்.அல்குர் ஆன்: 16: 92
சுருக்கமாக சொன்னால் சிகரம் தொட்ட பின் சறுக்கிட வேண்டாம் என்பதுதான் மேற்கூறிய இறை வசனத்தின் கருத்து.
அல்லாஹ் இறைமறையின் 7ம் அத்தியாயம் 175 மற்றும் 176ம் வசனத்தில உயர்ந்த மரியாதையையும், கண்ணியமும் வழங்கப் பெற்ற ஒருவர் தமது தீய நடத்தையால் நாய்க்கு ஒப்பான வரலாற்றை எடுத்து சொல்லுமாறு ஏந்தல் நபியிடத்தில் எடுத்தியம்புகின்றான். இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள மனிதர் யார் என்பதை குர் ஆனின் விரிவுரையாளர்கள் கூற முற்படும் போது முந்தைய காலத்தில் வாழ்ந்த பல்வேறு மனிதர்களை குறிப்பிட்டுள்ளார்கள். எனினும், இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அஹமத் அல் குர்துபீ, அவர்கள் தமது அல் - ஜாமிவு - லி - அஹ்காமில் குர்ஆன், எனும் நூலிலும் அல்லாமா சுயூத்தீ (ரஹ்) அவர்கள், தமது தஃப்ஸீர் அல்ஜலாலைன் எனும் நூலிலும் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِيَ آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَأوِينَ *وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذَّلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ)).
وهو بلعم بن باعوراء من علماء بني إسرائيل ، سئل أن يدعو على موسى وأُهدي إليه شيء ، فدعا فانقلب عليه واندلع لسانه على صدره { فَأَتْبَعَهُ الشيطان } فأدركه فصار قرينه { فَكَانَ مِنَ الغاوين } .

நபி மூஸா (அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்த ஓர் மார்க்க அறிஞர் பல்அம் என்பவர் தான்அவர்.இஸ்முல் அஃளம்- அல்லாஹ் அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தான்.அவர் என்ன துஆ செய்தாலும் அல்லாஹ் அதை அங்கீகரிப்பான்.இந்நிலையில் சிலர்மூஸா (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் சமூகத்தாருக்கு எதிராக துஆ செய்ய வேண்டுமென வேண்டி நின்றனர். முதலில் கடுமையாக மறுத்த அவர், பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து கொடுத்து ஆசை காட்டிய போது, பேராசையால் கையை உயர்த்தி வாயால் மொழிய முற்பட்ட போது அவரது நாவை நாய் தன் நாக்கை தொங்க விடுவது போன்று, அல்லாஹ் அவரது நாடி வரை தொங்க விட்டுவிட்டான்.
சிகரத்தை தொட்ட அவர் சறுக்கியதால் அல்லாஹ்வால் நாய்க்கு ஒப்பாக்கப்படும் பரிதாப நிலை எற்பட்டது.
      எனவே சமூகத்தில் சக மனிதர்கள் எதற்காக நம்மை மதிக்கின்றார்கள்?நம்மிடம் எதை அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்?மரியாததையையும், கண்ணியத்தையும் வழங்கிய அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?இது போன்ற தருணங்களில் நமது சான்றோர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் சிகரத்தை தொட்டவர்களின் முன்னால்?
      ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அருமைத் தோழர்களும் மஸ்ஜிதுன் நபவீயில் வீற்றிருந்த சமயம் தூரத்தில் தக்பீர் முழக்கம் கேட்கிறது.குரல் வந்த திசை நோக்கி மாநபியின் முகமும், நபித்தோழர்களின் முகமும் முன் நோக்கியவாறு இருந்தன. அப்போது அவர்கள் கண்ட காட்சி நடந்தவாறும், வாகனத்தில் அமர்ந்தவாறூம், சிறுவர்கள், வாலிபர்கள், முதியோர்கள், பெண்கள் என தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளக்க அணி, அணியாய் மஸ்ஜிதுந் நபவீயை நோக்கி சமீபமாக வந்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் அருகே அந்த கூட்டம் வந்ததும் தலைமையேற்று அழைத்து வந்த அந்த இளைஞரைப் பார்த்ததும் ஆச்சர்யம் மேலிட அவரை நோக்கிப் புன்னகைத்தார்கள், அவரும் பதிலுக்கு புன்னகைத்தார். பெருந்திரளாக வந்திருந்த அந்த மக்கள் யார்?என மாநபி (ஸல்) அந்த இளைஞரை நோக்கி கேட்டார்கள்.அந்த இளைஞர் சொன்னார்; இவர்கள் என் சமூக மக்களான கிஃபார் மக்கள் மற்றும் அண்டை கோத்திரமான அஸ்லம் மக்களாவார்கள். உயர்ந்தோனாம் அல்லஹ்வின் சத்திய மார்க்கத்தை ஏற்றவர்களாக உங்களிடம் அழைத்து வந்துள்ளேன் அல்லாஹ்வின் தூதரே! என்றார் அந்த இளைஞர்.
நல்வரவாகட்டும்! கிஃபார் குல மக்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!
நல்வரவாகட்டும்! அஸ்லம் குல மக்களே! அல்லாஹ் உங்களுக்கு சாந்தியளிப்பானாக!
என்று நபி (ஸல்) அவர்கள் மகிழ்ந்த முகத்தோடு கூறினார்கள்.
தன் குலத்திற்கும், தன் அண்டை குலத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமுத வாயால் சோபனத்தை பெற்றுத்தந்த அந்த இளைஞர் யார்?
அவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர்கள்நான்காவதாவோ அல்லது ஐந்தாவதாகவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்எனக் கூறூவர்.
கஃபாவின் முகட்டின் மீதேறி மிக உரத்த குரலில் ஷஹாதத் - சாட்சியம் சொன்ன முதல் மாவீரரும் அவரே!
அவர்தான் அபூதர் அல் கிஃபாரி என்றழைக்கபடும் ஜுந்துப் இப்னு ஜனாதா (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயின் முன் திரளாக குழுமியிருந்த கிஃபார் மற்றும் அஸ்லம் மக்களையும், அபூதர் (ரலி) அவர்களையும், வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது, அபூதர் (ரலி) அவர்கள் நபிகளாரை நோக்கி அல்லாஹ்வின் தூதரே! அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா?எனக் கேட்டார்.
எந்த நாள் அது?என்ன சொன்னார் அவ்ர் நபியிடத்தில்?
இஸ்லாத்தின் அறிமுகமும், ஏகத்துவத்தின் ஜோதியும் மக்கமா நகரில் முஹம்மது (ஸல்) அவர்களால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற செய்தியை கேள்விப்பட்டு ஷாம்-க்கு அருகே உள்ள ஒரு ஊரிலிருந்து மக்காவந்து ஹல்ரத் அலீ (ரலி) அவர்களின் உதவியால் ஒருநாள் அதிகாலைப் பொழுதில் அண்ணலாரை சந்தித்தார் அபூதர் அவர்கள்.
      உங்களது கவியை எனக்கு கொஞ்சம் படித்துக் காட்டுங்களேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார் அபூதர் அவர்கள்.
      இல்லை! இது என் இறைவனின் சங்கை மிகு வார்த்தைகளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அப்படியானால், எனக்கு ஓதிக் காட்டுங்கள் என்றார் அபூதர். நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய சில மனித் துளிகளிலேயே ஷஹாதத் - சாட்சியம் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள் அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள்,.
அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களின் முகவரியை கேட்ட போது, கிஃபார் கோத்திரம் என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.
இதைக்கேட்ட அண்ணலார் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு (ஆச்சர்யப்பட காரணம் கிஃபார் குல மக்கள் கடும் முரட்டு சுபாவம் கொண்டவர்கள்)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுகின்றான் என்று கூறினார்கள்.
பின்பு அபூதரே! உமது ஈமானை மறைத்துக் கொள்வீராக! மக்கத்து மனிதர்களிடம் வெளிப்படுத்திவிடாதே! உம்மை ஏதாவது செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்றார்கள்.
சிறிது நேரம் கூட கழியவில்லை.கஃபத்துல்லாஹ்வின் முகட்டின் மீதேறி உரத்த குரலில் ஏகத்துவ முழக்கத்தை முழங்கினார்கள்.மேலிருந்து கீழிறக்கி மக்கத்து தலைவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு தாக்கினார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த அப்பாஸ் (ரலி) அவர்கள் அம்மக்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களை காப்பாற்றினார்கள்.
மறுநாளும், மூன்றாம் நாளும் அவ்வாறே நடந்தது.
விஷயம் விபரீதமாவதை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை தம் பக்கம் அழைத்தார்கள்,
நபி (ஸல்) அவர்களின் பார்வையில் பாடம் கற்றுக்கொண்டவராய் என்ன செய்ய உத்தரவிடுகின்றீர்களோ அப்படியே நான் நடந்து கொள்கின்றேன்.
செல்லுங்கள்! உமது மக்களுக்கு நேர்வழியின்பால் அழைப்பு விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் மக்களை நேர்வழிக்கு கொண்டு வராமல் நான் இங்கு வரமாட்டேன் என்று நபிகளாரை நோக்கி கூறியவாறு தமது ஊரின் திசை நோக்கி விரைந்தார் அபூதர் (ரலி) அவர்கள்.
இந்தக் காட்சி நடைபெறும் என்பதை அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா?
நீங்கள் ஆச்சர்யத்தோடும், வியப்போடும் காண்கிற இந்தக் காட்சிக் குறித்து அன்றே நான் உங்களிடம் சொல்லவில்லையா?
இதைத்தான் மஸ்ஜிதுன் நபவீன் முன் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அண்ணலார் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,
கடந்த காலத்தில் நடந்தவைகளை நபிகளாரின் கண்முண் கொண்டு வந்து நிறுத்தினார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.
இதைக்கண்டு பூரித்துப் போன அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
مَن سرّه أن ينظر إلى زُهْدِ عيسى بن مريم فلينظر إلى أبي ذرّ».

மர்யமின் மகன் ஈஃஸா (அலை) அவர்களின் பணிவை காண வேண்டும் என ஆசை கொள்பவர் அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆனந்தமடைந்து கொள்ளட்டும்.
நூல்: இஸ்தீஆப்: பாகம்:1, பக்கம்:132
இஸ்தீஆப்: பாகம்:3, பக்கம்:103
மற்றுமொரு அறிவிப்பில்..
நபி ஈஸா (அலை) அவர்கள் உலகப்பற்றற்ற தன்மைக்கு என்னுடைய உம்மத்தில் ஒப்பானவர் அபூதர் (ரலி) அவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இப்னு ஸஅத்: பாகம்:4, பக்கம்:228
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமூகத்தில் அபூதர் (ரலி) அவர்களுக்கான உரிய மரியாதையை, கண்ணியத்தை அடையாளமிட்டார்கள்.அதன் பின்னர் அபூதர் (ரலி) என்ன செய்தார்?அப்படியே இருந்து விட்டாரா?அல்லது அடுத்த சிகரத்தை நோக்கி முன்னேறினாரா?
      
لما سار رسول الله صلى الله عليه وسلم إلى تبوك جعل لا يزال يتخلف الرجل، فيقولون يا رسول الله: تخلف فلان، فيقول: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، حتى قيل: يا رسول الله تخلف أبو ذر وأبطأ به بعيره، فقال رسول الله صلى الله عليه وسلم: دعوه، إن يك فيه خير فسيلحقه الله بكم، وإن يك غير ذلك فقد أراحكم الله منه، فتلوم أبو ذر رضي الله عنه على بعيره فأبطأ عليه، فلما أبطأ عليه أخذ متاعه فجعله على ظهره فخرج يتبع رسول الله صلى الله عليه وسلم ماشيا، ونزل رسول الله صلى الله عليه وسلم في بعض منازله ونظر ناظر من المسلمين فقال: يا رسول الله هذا رجل يمشي على الطريق، فقال رسول الله صلى الله عليه وسلم: كن أبا ذر، فلما تأمله القوم قالوا: يا رسول الله هو والله أبو ذر! فقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده، فضرب الدهر من ضربته وسير أبو ذر إلى الربذة، فلما حضره الموت أوصى امرأته وغلامه إذا مت فاغسلاني وكفناني ثم احملاني فضعاني على قارعة الطريق فأول ركب يمرون بكم، فقولوا: هذا أبو ذر، فلما مات فعلوا به كذلك، فاطلع ركب فما علموا به حتى كادت ركائبهم تطأ سريره، فإذا ابن مسعود في رهط من أهل الكوفة، فقالوا: ما هذا؟ فقيل: جنازة أبي ذر، فاستهل ابن مسعود رضي الله عنه يبكي، فقال: صدق رسول الله صلى الله عليه وسلم يرحم الله أبا ذر يمشي وحده ويموت وحده ويبعث وحده، فنزل فوليه بنفسه حتى أجنه، فلما قدموا المدينة ذكر لعثمان قول عبد الله وما ولي منه.
ஹிஜ்ரி ஒன்பது, தபூக் யுத்தத்திற்கான அழைப்பு விடப்படுகின்றது.கடுமையான கோடைக்காலம், மிக நீண்ட தூரப் பயணம்.எதிரிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் என போருக்கு தடை ஏற்படுத்துகிற சூழ்நிலைகள் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தது.ஒருவாராக நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் போருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மாலை நேரத்தில்;ஓர் இடத்தில் படை வீரர்களை இளைப்பாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே முஸ்லிம்கள் இளப்பாறிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களிடத்தில்நம்மோடு போருக்கு வராமல் அபூதர் (ரலி) ஊரிலேயே பின்தங்கி விட்டார் என்றனர்.
இல்லை! ஒருபோதும் அப்படியிருக்காது; அவர் நம்மோடு தான் புறப்பட்டிருப்பார்; வழியிலே அவரது வாகனம் (கோவேறு கழுதை) பலகீனப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறுதியாக, அதிகாலை நேரத்தில் மாநபியும் தோழர்களும், மாநபி (ஸல்) அவர்களும் புறப்படத்தயாராயிருந்த போது,
தூரத்தில் ஒரு மனிதர் முதுகிலே ஒரு மூட்டையை சுமந்து வருவதைக் கண்டு அண்ணலாரிடம் தெரிவித்தார்கள் தோழர்கள்.
அப்படியானால், அந்த மனிதர் அபூதர் (ரலி) அவர்களாகத்தான் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
மிகச் சமீபமாக வரும்போது தான் அவர் அபூதர் (ரலி) அவர்கள் தான் என்பதை உறுதிபடுத்திய பின் நபிகளாரிடத்தில் இதோ! அபூதர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள் எனக் கூறினார்கள் நபித்தோழர்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்;
அல்லாஹ் அபூதர் (ரலி) அவர்களுக்கு அருள் பாலிப்பானாக! தனியே நடந்து வந்தார். தனியே இருக்கும் போதுதான் மரணிப்பார்; நாளை மஹ்ஷரில் தனியாகத்தான் எழுப்பப்படுவார்! என்று கூறினார்கள்.
நூல்: கிஸஸ் - அஸ் - ஸஹாபா
தஹ்தீப் - சீரத்- இப்னு ஹிஷாம்; பக்கம்:256
சோபனத்திற்கான செயல்களைச் செய்து இன்னுமொரு சிகரத்தை அடைந்தார் அபூதர் - அல் - கிஃபாரி (ரலி) அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்
فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُواْ اللّهَ كَذِكْرِكُمْ آبَاءكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً

நீங்கள் ஹஜ்கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களென்றால், நீங்கள் உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போன்று ஏன் அதனை விட அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள்
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
நபியே
நீர் ஓய்வு பெறும் போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
மேலும் இறைவனின் பக்கமே ஆர்வமே கொள்வீராக!
எனவே, முன்பைவிட அமல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிட வேண்டும், நன்மையான அனைத்து காரியங்களிலும் முன்னிலை பெற வேண்டும் தனது ஈமானை முன்பைவிட அழகிலும், பொழிவிலும் பட்டை தீட்ட வேண்டும்.
சான்றோர்களான நமது நாயகத் தோழர்கள் எப்போதும் அமல் செய்வதிலே ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.முன்னேற்றம் அடைவதிலும், இறை நெருக்கத்தை அடைவதிலும் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
தமக்கான மரியாதை சமூகத்தில் உயர்கிறபோது அவர்களின் அமல்களின் தரம் அதிவேகமாக உயர்ந்து கொண்டிருக்கும்.இது அவர்களின் வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.
எஜமான் இடும் எந்த கட்டளையானாலும் செய்ய வேண்டும் எனும் நிலையிருந்த ஓர் அடிமை, பார்ப்பவர்கள் வெறுக்கின்ற ஓர் கருப்பு நிற அடிமை,
முஸ்லிம்களையெல்லாம் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் இழுத்துக் கொண்டு வருகிற வசீகர குரலுக்கானமுஅத்தின்பணியை பிலால் இப்னு ரிபாஹ் (ரலி)க்கு கொடுத்து அழகு பார்த்தவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,
சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்க்கப்பட்டார் பிலால் (ரலி)
يا بلال إني أسمع صوت قدميك في الجنة ماذا تفعل ؟
فقال له الصحابي بلال والله يا رسول الله ما أن توضأت حتى صليت ركعتين لله وما إن انتقض الوضوء حتى توضأت 

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து
பிலாலே! நான் சுவனத்தில் நுழைந்தேன்.அங்கே எனக்கு முன்னால் ஒருவர் நடந்து போகிற காலடி சப்தம் கேட்டேன்.இவர் யார்?எனக் கேட்டேன்.பிலால் (ரலி) என பதிலளிக்கப்பட்டது.
பிலாலே! நீர் இஸ்லாத்தில் மிகவும் விரும்பிச் செய்யும் நற்செயலைப் பற்றி எனக்கு தெரிவிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் பிலாலிடம் கேட்டதற்கு நான் மிகவும் விரும்பி செய்யும் நற்செயல் என்னவெனில் இரவு பகலில் நான் (உளு) தூய்மையாகும் போதெல்லாம் எனக்கு நானே விதித்துக் கொண்ட தொழுகையைத் தொழாமல் இருந்ததில்லை என பிலால் (ரலி) பதிலளித்தார்கள் என அபூ ஹூரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி
ஹுஜுராத் அத்தியாயத்தின் 2ம் வசனம்
எனும் வசனம் இறங்கிய போது எனது தந்தை வீட்டிற்குள் வந்தார்.கதவை தாழிட்டுக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். சபைகளில் காணப்படாத எனது தந்தை குறித்து நபி (ஸல்) அவர்கள் வினவ என் வீட்டிற்கு ஆளனுப்பினார்கள்; வந்தவரிடம் எனது தந்தை எனது சப்தம் மிகக் கடுமையானது, கரடுமுரடானது எனது அமல்கள் பாழாகி விடுவதை நான் அஞ்சுகிறேன் என சொல்லியனுப்பினார் எனது தந்தை

لمّا نزلت الآية الكريمة: {وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ}] أغلق ثابت باب داره وجلس يبكي. وطال مكثه على هذه الحال، حتى دعاه رسول الله وسأله عن حاله، فقال ثابت: (يا رسول الله، اني أحب الثوب الجميل، والنعل الجميل وقد خشيت أن أكون بهذا من المختالين). فأجابه النبي وهو يضحك راضيا: (إنك لست منهم بل تعيش بخير وتموت بخير وتدخل الجنة).
மற்றொருமுறை,
அந்-நிஸா:36 வது வசனம் இறங்கியது, அப்போதும் முன்பு போலவே நடந்து கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள்
அல்லாஹ்வின் தூதரே! நான் அழகை விரும்புகிறேன்.என் சமூகத்தில் உயர்வானவனாய் இருக்க நான் பிரியப்படுகின்றேன் எனக் கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்
ஸாபிதே! நீங்கள் அல்லாஹ் கூறுகின்றவர்களில் கட்டுப்பட்டவரல்லர்! புகழுக்குரிய வாழ்வு வாழ்வீர்! இறைப்பாதையில் வீர மரணம் அடைவீர்! சுவனத்தில் நுழைவீர்! என கூறினார்கள்.இதை மகள் அறிவித்ததாக அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
யமாமாவில் வசித்து வந்த, முஸைலைமா (தன்னை நபியென வாதிட்ட) வை நோக்கி அபூபக்ர் (ரலி) ல் காலித் பின் வலீத் (ரலி) தலைமையில் படையொன்று கிளம்பியது.அதில் கலந்து கொண்டு ஆனார்கள் ஸாபித் (ரலி) அவர்கள்.
அந்த யுத்தத்தில் ஸாபித் (ரலி) அவர்கள் புதிய உருக்குச்சட்டை அணிந்து கலந்து கொண்டார்கள்.
வீர மரணமடைந்த அந்த இரவில் சில முஸ்லிம்களின் கனவில் வந்து என்னுடைய உருக்குச் சட்டையை இன்ன வீட்டில் உள்ள ஒரு மனிதர் எடுத்துச் சென்று விட்டார்.காலித் (ரலி) அவர்களை அழைத்துச் சென்று அதை வாங்கி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொடுத்து என் கடனை அடைக்கச் சொல்லுங்கள் என கூறினார்கள்.
படை மதீனா வந்ததும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கண்ட கனவை கூறப்பட்டது. மரணத்தின் பின்னால் செய்யப்பட்ட வஸியத்தை நிறைவேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்
மரணத்திற்கு பின்னால் ஒருவருடைய மரண சாஸனம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஸாபித் (ரலி) அவர்களின் மரண சாஸனம் மட்டுமே என கூறுகிறார்.
மேற்கூறிய நபித்தோழர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கான கண்ணியத்தையும், அந்தஸ்தயும் நபி (ஸல்) அவர்கள் சமூகத்தில் அடையாளப் படுத்திய பிறகு, அதை தக்க வைத்ததோடல்லாமல் அடுத்தடுத்த, ஸ்தானத்தை நோக்கி முன்னேறிச்சென்று தமக்கான சிகரத்தின் எல்லைகளை உயர்த்திக் கொண்ட காட்சி வரலாறாய் நம் கண் முன் காட்சி தருகிறது.
ஓர் அறிஞன் சொன்னான்;
நான் ஓர் அடி எடுத்துவைக்கும் முன்
நூறுமுறை திரும்பிப் பார்ப்பேன்
ஆனால் அடியை எடுத்து விட்டால்
ஒருமுறைகூட பின் வாங்க மாட்டேன்  
ஓர் கவிஞன் சொன்னான்..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
நீ கொஞ்சம் இறங்கி வந்தால்
உன் நிழல் கூட மிதிக்கும்
ஆகவே,
சிகரம் தொடுகிற செயற்கரிய செயல்களின் மூலம்
மென்மேலும் உயர்வைப் பெற அல்லாஹ் அருள்பாளிப்பானாக!
தொட்ட சிகரத்திலிருந்து தடுமாறி, தடுக்கிலாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
சிந்தித்து செயல்படும் செயலாற்றலை அல்லாஹ் நம் அனைவருக்கும்வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்.
வஸ்ஸலாம்!

No comments:

Post a Comment