இஸ்லாம் விரும்பும் அறப்பணிகள்
பொருளாதார மோகம் நிறைந்து காணப்படும் இப்பூவுலகில் முஸ்லீம்களீன் இதயங்களும் பொருளாதார மோகத்தில் சிக்குண்டு வீழ்ச்சியடைந்து வருவதைக் காணமுடிகிறது.முன்பெல்லாம், சமூக மேம்பாட்டுக்கும், இறையில்லங்களுக்கும், மார்க்க கல்வியின் வளர்ச்சிக்கும், வாரி, வாரி வழங்கி உறுதுணையாக இருந்த இந்த முஸ்லீம் சமூகம் அர்ப்பணிக்கும் எண்ணம் இல்லாமல், அறம் செய்யும் வேகமில்லாமல், சோர்வடைந்து நிற்கும் பரிதாப நிலையையும், இன்னொருபுறம் அல்லாஹ்வின் சொத்துக்களை இறையச்சமின்றி அனுபவித்துக் கொள்ள துடியாய் துடிக்கும் நிலையையும் காண முடிகிறது. மற்றெந்த சமூகத்திலும் இல்லாத அளவிற்கு 54 சிறிய பெரிய ஆன்மீக மற்றும் அரசியல் அமைப்புகளை கொண்டு, சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக முழக்கமிடும் - கோஷமிடும் நிலைகளும் முஸ்லீம் சமூகத்தில் காணப்படுகிறது.
இன்றளவும் அநேக முஸ்லிம்கள் ஆதரவற்றவர்களாய், வறியவர்களாய், ஏழைகளாய், கடனாளிகளாய், நோயாளிகளாய் இந்த சமுதாயத்தில் நடமாடுக் கொண்டுதானிருக்கிறார்கள். உலக அளவில் பெயர் வாங்கிய இயக்கமும், தேசிய அளவில் பெயர் பெற்ற இயக்கமும், மாநில அளவில் சிறந்து விளங்குகின்ற இயக்கங்களையும் கொண்டிருக்கிற, சமூக சேவையில், சமூக தொண்டாற்றுவதில் முண்ணனி வகிக்கின்ற ஒரு சமூகத்தின் நிலை இது என்றால்?...
இந்த சமூகத்தில் எங்கோ பிழைகளும், தவறுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உள்ளார்ந்த பொருள் - அது தான் உண்மை.
இந்த சமூகம் செய்து கொண்டிருக்கிற சேவைகளில் ஆற்றுகிற தொண்டில் சில பல மாற்றங்களையும், முன்னோர்களிடம் காணப்பட்ட சில பண்புகளையும், கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதை செல்வந்தர்களும், சேவையாற்றுகின்ற இயக்கங்களும் கடைபிடிக்க முன் வர வேண்டும்.
அப்போது தான் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த அடிப்படையில் அமைந்த அறச்செயலாகும்! சமூக சேவையாகும்!
அல்லாஹ் கூறுகிறான்:
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3)
மறுமையில் நற்கூலி - தண்டனை கொடுக்கப்படுவதை பொய்யென்று சொல்பவனை (நபியே) நீர் பார்த்திருக்கிறீரா?அவன் தான் அநாதையை விரட்டுகின்றான்; மேலும், வறியவரின் நிலை கண்டு உணவளிக்கும் படி (யாரையும்) அவன் தூண்டுவதில்லை.
அல்குர் ஆன் 107: 1-3
உலக மதங்களில் இஸ்லாம் மாத்திரமே வறிய ஒருவரின் நிலை கண்டு அவர் துயர் துடைக்க தூண்டாதவரைக் கூட குற்றவாளி எனக் கூறுகிறது எனில், சமூக தேவையில் ஒரு முஸ்லிம் எத்தகைய பண்புகளோடு நடந்து கொள்ள வெண்டும் என இஸ்லாம் விரும்புவதை மேற்கூறிய இறை வசனம் உணர்த்துகிறது.
மாநபியின் மஸ்ஜித் இறையன்பை, இறையச்சத்தை, இறையுணர்வை வெளிப்படுத்துகிற, இறை பக்தியை, வழிப்பாட்டை வெளிப்படுத்துகிற இடமாக மாத்திரம் இருக்கவில்லை. பல நேரங்களில் அது, வறியோர்களின் வறுமையை நீக்குமிடமாகவும், வக்கற்றோர், திக்கற்றோரின் துயர்களை கலையுமிடமாகவும், கடனாளிகள், அநாதைகளின் இன்னல்களை விலக்குமிடமாகவும் பரிணமித்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.
அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்:-
“நபி (ஸல்) அவர்களின் முன் இறந்து போன ஒருவரின் ஜனாஸா தொழுவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.அப்போது நபி (ஸல்) அவர்கள் இறந்து போன இவர் மீது ஏதேனும் கடன் உள்ளதா?எனக் கேட்டார்கள்.
அதற்கு மக்கள் “ஆம் இவர் மீது கடன் உண்டு” என்றனர்.
கடனை நிறைவேற்றுமளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா?என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
மக்கள் இல்லை என்று கூறினார்கள்; அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்நிலையைக் கண்ட அலீ (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! அக்கடனை அடைக்கும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள்.அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து தொழ வைத்தார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்களை நோக்கி
அலீயே! அல்லாஹ் உம்மை நரகிலிருந்து காப்பானாக!
முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடனை அடைக்கும் எந்த முஸ்லிமைடும் அல்லாஹ் மறுமை நாளில் நரகிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஷரஹூஸ் ஸுன்னா
மஸ்ஜிதுன் நபவீயை முகவரியாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், நபியவர்களின் குடும்பத்தாரையும், தனது குடும்பமாகவும், ஸஹாபாக்களை உறவினர்களாகவும், திண்ணைத் தோழர்களை நண்பர்களாகவும், எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஏழை ஸஹாபி தான் ரபீ அத்துல் அஸ்லமீ அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் மீது அளவற்ற நேசமும், காதலும் கொண்டிருந்தவர்கள்.ஒரு நடு நிசி மாநபியின் உறக்கத்தை கலைத்தது கதவை தட்டும் ஓசை. கதவை திறந்து வெளியில் வந்த நபிகளார் உற்று பார்க்கிறார்கள், அங்கோ கடும் குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தார் ரபீஆ (ரலி)
என்ன இந்த நேரத்தில்? ரபீஆவே! என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
ஒன்றுமில்லை அல்லாஹ்வின் தூதரே! உங்களை காண வேண்டுமென எனதுள்ளம் ஆவல் கொண்டது.அது தான் உங்களைக்காண இங்கு வந்தேன் என ரபீஆ கூறினார்.மாநபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறே ரபீஆவை அனுப்பி வைத்தார்கள்.
மற்றொருமுறை..
அல்லாஹ்வின் தூதரே!“சுவர்க்கத்திலும் உங்களோடு உங்கள் நெருக்கத்தைப் பெற்று இருக்க விரும்புகின்றேன் என தனது பேரன்பின் ஆவலை வெளிப்படுத்தியபோது அதிகமான ஸஜ்தக்களைக் கொண்டு என்னோடு சுவனத்தில் இருக்க உன்னை தயார் படுத்திக் கொள்! என நபி (ஸல்) அவர்கள் மறுமொழி பகிர்ந்தார்கள்.
ஈருலகிலும் நபிகளாரை அருகிலிருந்து கண்குளிர கண்டு கொண்டே இருக்க வேண்டுமென விரும்பியவர் தான் ரபீஅத்துல் அஸ்லமீ (ரலி) அவர்கள்.
ஒரு நாள் ரபீஆ வை அழைத்து
என்ன ரபீஆ திருமணம் செய்து கொள்ளவில்லையா?எனக் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்; இன்னொரு நாள் மாநபி (ஸல்) அவர்கள் அதே கேள்வியை கேட்கிறார்கள்.
சிரிப்பையும், ஏக்கப்பார்வையையும் பதிலாக தந்து விட்டு செல்கிறார்கள் ரபீஆ.
மூன்றாவது முறையாக மாநபி (ஸல்) அவர்கள் அதே கேள்வியை கேட்டபோது,இம்முறை ரபீ (ரலி) நபி (ஸல்) அவர்களின் அருகே வந்து மஸ்ஜிதுந் நவபீயின் திண்ணையில் படுத்துறங்கும் இந்த ஏழைக்கு யார் பெண் தருவார்? எனக் கேட்டார்.உடனே, நபி (ஸல்) ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் நான் உனக்கு பெண் கேட்டதாகச் சொல்லவும் எனக் கூறி அனுப்பினார்கள்.
அந்த முகவரியில் உள்ளவரிடம் சென்று மாநபியின் விருப்பத்தை தெரியப்படுத்திய போது, முதலில் யோசித்த அக்குடும்பத்தினர் பெண் கேட்டு அனுப்பியதும், பெண் கொடுக்குமாறும் கூறுவதும் அல்லாஹ்வின் தூதரல்லவா? எனவே ரபீஆவிற்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.
நபி (ஸல்) அவர்களிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டு தனது அடுத்த கவலையை தெரிவித்தார் ரபிஆ (ரலி) ஆம்! பெண் தயார். ஆனால் குடும்பம் நடத்த வீடு வேண்டுமே, என்ன செய்வேன்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்.நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட “குமுஸ்” ல் ஒரு சிறு நிலம் இருந்தது.அதை ரபீஆவிடம் தந்தார்கள்.பின்பு, ரபீஆவின் தூரத்து உறவினர்களையும், நபித்தோழர்களையும் ரபீஆவிற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்கள்.வீடு, தேவையான சில பாத்திரங்கள், சில சாதனங்களுடன் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ரபீஆ அவர்களுக்கு ஒரு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்தனர்.
(நூல்: இஸ்தீஆப்: பாகம்:1 பக்கம்: 270)
இப்படி சமூகத்தில் எத்தனையோ ரபீஆக்கள் இன்றும் உலவிக் கொண்டுதானிருக்கிறனர்.என்ன செய்ய?மாநபியின் பள்ளிவாசல் போன்று நம் பள்ளிவாசல்கள் இல்லையே?மாநபியைப் போன்ற அரசியல் ஆன்மீக தலைவராக நம் தலைவர்கள் இல்லையே?நபிகளார் காலத்து செல்வந்தர்கள் போல, மனித நேய பண்பாளர்கள் போல நம் காலத்து உறவினர்களும், தோழர்களும், சமூக சேவையாளர்களும் இல்லையே?
சமூக சேவையில்,
இஸ்லாம் சில ஒழுக்க விழுமியங்களையும், சில பண்பாடுகளையும், சில வழிமுறைகளையும் வகுத்துள்ளது.இவைகள் பேணப்படுகிற சமூக சேவைகள் தான் பரிபூரண சமூகத் தொண்டாகவும், சமூக சேவையாகவும் பரிணமிக்கும்.
ஆனால், இன்று இந்த சமூகத்தை சமூக சேவையின் மூலம் வழிநடத்டுகிற, இயக்கங்களாகட்டும், வாரி வழங்கும் தன்வந்தர்களாகட்டும், இஸ்லாம் கூறுகிற சமூக சேவையின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டு நிற்பதை காண முடியும்.
மனத்தூய்மை
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“உங்களுக்கு முன் சென்ற காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் இன்று இரவு நான் (யாருக்கும் தெரியாமல்) இரசியமாக தர்மம் செய்வேன் என உறுதி பூண்டார். சொன்னது போன்றே இரவில் தர்மப் பொருளை ஒருவரின் கையில் கொடுத்து விட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு விபச்சாரிக்கு யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக்கொண்டனர்.அன்று இரவும் அவர் தன் தர்மப் பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு செல்வந்தர் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டனர்.அன்று இரவும் அவர் தன் தர்மப்பொருளை கொண்டு சென்று ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார்.மறுநாள் காலை மக்கள் ஒரு திருடன் கையில் யாரோ வாரிக் கொடுத்திருக்கிறார் என பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் இன்னொருவருடைய கையில் நான் கொடுத்துவிட்டேன். அல்லாஹ்வே உனக்கு புகழ் அனைத்தும்! என்று கூறினார்.அவரிடம் உம்முடைய தர்மம் ஏறுக்கொள்ளப்பட்டது என அசரீரி மூலம் சொல்லப்பட்டது.
மேலும் அல்லாஹ், அந்த விபச்சாரியை நல்லவளாகவும், செல்வந்தரை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் கொடையாளியாகவும், திருடனை உழைத்து சாப்பிடும் மனிதனாகவும் மாற்றினான்.
(நூல்: இப்னு கஸீர்: பாகம் : 1, பக்கம் : 423)
இங்கே, அவர் செய்த சேவையில் மனத்தூய்மையும், உள்ளார்ந்த அர்ப்பணிப்பும் அமைந்திருந்ததால் அல்லாஹ் சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியோடதல்லாமல், வாழ்க்கை பாதையையும் மாற்றி அமைத்தான்.
இறை திருப்தி:
இஸ்லாமிய உலகமே மாநபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் மீண்டும் ஒருமுறை ஸ்தம்பித்தது.என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தது என்றால் அது ஸைய்யிதினா உஸ்மான் (ரலி) அவர்கள் அரசியல் காரணங்களுக்காக முற்றுகையிடப்பட்ட போதுதான் என்றால் அது மிகையாகாது.
உஸ்மான் தின் நூரைன், உஸ்மானில் கனீ என்றழைக்கப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் சமூகத்தொண்டு அளப்பரியது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர்.
விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி (ஸல்) தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் (ரலி) 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள். மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள்.
இந்த பெருந்தகை உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தான் கலகக்காரர்கள் உளு செய்வதற்கும் இதர சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தண்ணீர் தர முடியாது என மறுத்துவிட்டனர்.
அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து கொண்டிருந்த தருணம், மஸ்ஜித் நவபி நெருக்கடியில் திக்குமுக்காடியது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இடநெருக்கடியை குறைத்து கொள்ளலாமே?என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போதும் உஸ்மான் (ரலி) அவர்களே15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.அந்த வள்ளல் உஸ்மான் (ரலி) அவர்களைத்தான் கலகக்காரர்கள் மஸ்ஜிதுந் நவபீக்கு சென்று தொழ அனுமதி மறுத்தார்கள்.
மாபெறும் வெற்றியான ஃபத்ஹ்-மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது! ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000 தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க) அற்பணித்தார்கள்.
முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள்.
நூல்: குலஃபாவுர்ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186)
அன்று மஸ்ஜிநுந் நபவீ நபித்தோழர்களின் சபையால் இலங்கிக் கொண்டிருந்தது.மாநபி (ஸல்) அவர்கள் அந்த சபையின் நடு நாயகராய் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்கள்.அந்நேரம் அல்லாஹ்வின் அருள் வசனம் ஒன்று இறங்கியது.அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.
“அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்போர் யார் இருக்கின்றார்கள்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனை பன் மடங்காக அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான்; அல்லாஹ்தான் (செல்வத்தை) குறைக்கவும், பெருக்கவும் செய்கின்றான் நீங்கள் அவன் பக்கமே திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.
அல்குர் ஆன் 2:245
சபையில் அமர்திருந்த அபுத் தஹ்தாஹ் எனும் நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் நம்மிடமிருந்தும் கடன் பெறுவானா?என ஆச்சர்யம் மேலிட கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்: ஆம்! அபுத் தஹ்தாஹே! என்றார்கள், உடனே அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கையைத் தாருங்கள் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டினார்கள், நபிகளாரின் கையின் மீது தமது கையை வைத்து இதோ எனது தோட்டத்தை எனது இரட்சகனுக்கு நான் கடன் தந்து விட்டேன் என்றார்கள் அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள்.அந்த தோட்டத்தில் 600 பேரித்த மரங்கள் இருந்தன என அறிவிப்பாளர் அப்துல்லாஹிப் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
பின்பு, சபையிலிருந்து எழுந்து சென்று தமது தோட்டத்தின் முன் நின்று கொண்டு, தமது மனைவியை அழைத்தார்கள்.அவர்கள் வெளியெ வந்து என்ன என்று கேட்கிறார்கள். உம்முத் தஹ்தாஹே! தோட்டத்தை விட்டு வெளியேறு நான் இதை ஏழைகளுக்கும், வறியோருக்கும் அல்லஹ்விற்காக அர்ப்பணித்து விட்டேன் என்றார்கள்.
நூல்: இஸ்தீ ஆப், பாகம்:3, பக்கம்:102
இன்புகஸீர், பாகம்:1, பக்கம்:391
துஆ செய்தல்
فها هو ذا رسول الله صلةات الله وسلامه عليه يريد
أن يجهز سرية ، فوقف في أصحابه وقال : تصدقوا فإني أريد أن أبعث بعثاً .
فبادر عبد الرحمن بن عوف إلى منزله وعاد مسرعاً وقال : يا رسول الله عندي أربعة آلاف :
ألفان منها أقرضتهما ربي وألفان تركتهما لعيالي .
فقال الرسول صلوات الله وسلامه عليه :
(بارك الله لك فيما أعطيت ...
وبارك الله لك فيما أمسكت ...)
فبادر عبد الرحمن بن عوف إلى منزله وعاد مسرعاً وقال : يا رسول الله عندي أربعة آلاف :
ألفان منها أقرضتهما ربي وألفان تركتهما لعيالي .
فقال الرسول صلوات الله وسلامه عليه :
(بارك الله لك فيما أعطيت ...
وبارك الله لك فيما أمسكت ...)
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யுத்த களத்திற்குச் செல்ல சன்மார்க்க பணிக்காக பொருளுதவி செய்யுமாறு ஆர்வமூட்டிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு நபித்தோழர்களும் தமது பங்களிப்பை நபிகளாரிடம் வந்து கொடுத்தார்கள்.
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!என் பொருளாதாரத்தில் சரி பாதியை இதோ அல்லாஹ்விற்காக வைத்துள்ளேன்” என்று கூறி கொடுத்தார்கள். அதைக் கேட்ட நபிகளார் நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும், உன் குடும்பத்திற்காக எடுத்து வைத்துக்கொண்டதிலும் அல்லாஹ் பரக்கத் - அபிவிருத்தியை நல்குவானாக! என துஆச் செய்தார்கள்.
நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:523
அல்-இஸாபா, பாகம்:1, பக்கம்:1559
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜைஷுல் எனும் போருக்காக நபிகளார் நபித் தோழர்களிடம் இறைப்பணிக்காக பொருளுதவி செய்யுமாறு ஆர்வமூட்டினார்கள்.ஒவ்வொரு நபித்தோழரும் வந்து கொடுத்தனர்.மீண்டும், மீண்டும் நபிகளார் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் 10,000 தீனார்கள் நிறைந்த பையை கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களின் கரங்களில் கொடுத்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) கூறுகிறார்கள்
உஸ்மான் (ரலி) அவர்கள் 700 ஊக்கியா தங்கத்தை இறைப்பணிக்காக அர்ப்பணித்ததை நான் பார்த்தேன்.
இப்னு ஷிஹாப் அஸ் - ஸுறஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள்.
ஜைஷுல் - உஸ்ரா எனும் போருக்கு 940 கோவேறு கழுதைகளையும் 60 குதிரைகளையும் நபிகளாரிடம் வழங்கினார்கள்.
இவையனைத்தையும் பெற்றுக்கொண்ட நபி (ஸல்) அவர்கள் “மறுமை நாள் வரை நீர் மறைவாக செய்கிற, வெளிப்படையாக செய்கிற பாவங்கள் அனைத்தையும், அல்லாஹ் மன்னித்து விட்டான்” என துஆச் செய்தார்கள்
நூல்: குலஃபாவுர் ரஸுல் (ஸல்), பக்கம்: 186, 187
ஒரு முஸ்லிம் அவன் செய்கிற எந்த ஒரு அறமாக - தர்மமாக இருந்தாலும், இறைவழியில் செலவு செய்வதாக இருந்தாலும், சமூக சேவையில் ஈடுபடுவதாக இருந்தாலும், மேற்கூறிய ஆதாபுகளையும், அக்லாக்குகளையும் கடைபிடித்து நடக்கின்ற போதுதான் தான் செய்த தொண்டின் மூலம் ஈருலகிலும் நற்பயனை அடைய முடியும்.
அதே நேரத்தில் இருக்கின்ற அனைத்தையும் அறவழிகளிலும், இறைப்பாதைகளிலும், மனித நேய காரியங்களிலும் செலவழித்துவிட இஸ்லாம் விரும்பவில்லை.
عن عامر بن سعد بن أبي وقاص، عن أبيه، أنه قال:
جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع. من وجع اشتد بي. فقلت: يا رسول الله، قد بلغ بي من الوجع ما ترى. وأنا ذو مال. ولا يرثني إلا ابنة لي. أفا تصدق بثلثي مالي؟
قال رسول الله صلى الله عليه وسلم (لا) فقلت: فالشطر؟ قال (لا) ثم قال رسول الله صلى الله عليه وسلم (الثلث.والثلث كثير. إنك أن تذر ورثتك أغنياء، خير من أن تذرهم عالة يتكففون الناس.
جاءني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع. من وجع اشتد بي. فقلت: يا رسول الله، قد بلغ بي من الوجع ما ترى. وأنا ذو مال. ولا يرثني إلا ابنة لي. أفا تصدق بثلثي مالي؟
قال رسول الله صلى الله عليه وسلم (لا) فقلت: فالشطر؟ قال (لا) ثم قال رسول الله صلى الله عليه وسلم (الثلث.والثلث كثير. إنك أن تذر ورثتك أغنياء، خير من أن تذرهم عالة يتكففون الناس.
ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன் என்னை நலம் விசாரிக்க நபி அவர்கள் வந்தார்கள்.என்னிடம் நீர் வஸீயத் மரண சாசனம் ஏதும் செய்திக்கின்றீரா?எனக் கேட்டார்கள். ஆம்! என்றேன்.மீண்டும் என்னிடம் எவ்வளவு, எப்படி செய்து வைத்துள்ளீர் எனக் கேட்டார்கள்.அதற்கு நான் என் செல்வம் முழுவதையும் இறைவழியில் செலவிட வேண்டுமென எழுதி வைத்துள்ளேன் என்றேன்.அப்படியானால் உமது பிள்ளைகளுக்கு என்ன கொடுத்துள்ளீர்?என நபியவர்கள் கேட்டார்கள்.நான் என் பிள்ளைகள் நல்ல செல்வ செழிப்புடன் தான் இருக்கின்றார்கள் என்றேன். அதற்கு நபியவர்கள் உமது சொத்தில் 10ல் ஒரு பங்கை இறைவழியில் செலவிட வஸீயத் செய்யும்! என்றார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதரே இது மிகவும் குறைவு இன்னும் அதிகமாக வஸீயத் செய்ய அனுமதி தாருங்கள் என கேட்ட வண்ணம் இருந்தேன். இறுதியாக நபியவர்கள் சரி உமது செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவிட வஸீயத் செய்யும்! இதுவே அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
நூல்: திர்மிதி
குறைந்த பட்சம் பாதையில் கிடக்கும் கற்களையும், முற்களையும் அகற்றுவதுக் கூட அறப்பணிதான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.எனவே அறப்பணிகள், சமூக சேவைகள் செய்வதற்கு வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் கிடையாது.உண்மையில் மேற்கூறிய பண்புகளில் ஏதெனும் ஒன்றை கடைபிடித்து இயன்ற அளவு அறப்பணிகளில் ஈடுபடவெ இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஆனால், இன்று சமூகத்தில் இயக்கங்களும், இயக்கவாதிகளும், தன்வந்தர்களும் சுய விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.ஃபித்ரா வழங்குவதைக்கூட போட்டோ பிடித்து பத்திரிக்கையில் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.தன்வந்தர்களோ, தனது பெயரை பதிவு செய்வதிலும், வெளியிடுவதிலும் அதிக முனைப்பு காட்டுகின்றனர்.அர்ப்பணிப்பு விழாக்கள் நடத்தி காசு பணங்களை வீண் விரயம் செய்கின்றனர்.
ஆக இஸ்லாமியப் பார்வையில்...
அறப்பணி புரிவதும்.. இறைவழியில் சேவைசெய்வதும்...
சமூக சேவையாற்றுவதும்...
மனத்தூய்மை, செயல்தூய்மை, இறைதிருப்தி, இறையச்சம், இவைகளோடு இணைந்தே தான் பிணைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இஸ்லாம் விரும்புகிற வழியில் அறப்பணிகள், செய்ய அருளும், ஆற்றலும் வழங்குவானாக! ஆமீன்!
No comments:
Post a Comment