நபிமார்களின் தோழமையை பெற்றுத்தரும் நற்பண்புகள்!
ஓர் இறைநம்பிக்கையாளனின்
வாழ்வும், மரணமும் உயர்ந்த நோக்கையும், இலக்கையும் கொண்டதாய் அமைந்திருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
அதை நோக்கி அவன் பயணிக்கும்
பட்சத்தில் அல்லாஹ் அதற்கான பாதைகளை இலகுவாக்கியும், அதை
அடைந்து கொள்வதற்கான ஆற்றலை வசப்படுத்தியும் தருகிறான் என
இஸ்லாம் இயம்புகிறது.
அதனடிப்படையில் நாம்
சிந்தித்துப் பார்த்தோமேயானால் “ஓர்
முஃமின் தன் இலக்காக
சுவனத்தையும், தன் நோக்கமாக
சுவனத்தின் அந்தஸ்துகளையும் அடைந்து
கொள்வதற்காக தன் வாழ்நாள்
முழுவதையும் ஈடுபடுத்திட வேண்டும்”
என்ற கருத்தாக்கத்தைத் தீர்வாகப்
பெறமுடிகிறது.
ஏனெனில், ஓர்
உண்மையான இறைநம்பிக்கையாளனின் உன்னத
வாழ்வானது அங்கிருந்து தான்
ஆரம்பமாகின்றது.
சுவனத்தின் உயர்
அந்தஸ்துக்களில் மிகவும்
உயர்ந்தது மனிதர்களில் மிகவும்
புனிதர்களான நபிமார்களுடன் இணைந்திருக்கும்,
தோழமை கொண்டிருக்கும் அந்த
உன்னதமான தருணம் தான்.
وَمَنْ يُطِعِ
اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ
مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ
أُولَئِكَ رَفِيقًا () ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا
()
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன்
தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்
அருள் புரிந்த நபிமார்கள்,
வாய்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும்
நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பார்கள்.
இவர்கள் எத்துணைச்
சிறந்த தோழர்கள்! இது
அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்
உண்மையான அருளாகும்.” ( அல்குர்ஆன்:4:69,70
)
நோக்கம் உயர்வானால்.. பாதை
இலகுவாகும்.
எத்தனையோ இரவுகள் மனிதனைக்
கடந்து செல்கின்றது. ஆனாலும், புனித மிக்க
லைலத்துல் கத்ர் இரவுக்கு நிகராக வேறெந்த இரவுகளும் இல்லை.
புனித மிஃராஜ் இரவும், பராஅத் இரவும் நன்மைகள் பலதை ரஹ்மானிடம் இருந்து பெற்றுத் தந்தாலும்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு போல் வராது.
ஒரு நாள் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் தம் அருமைத்
தோழர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
பல சந்தர்ப்பங்களில்
முன்னோர்களின் வாழ்க்கையின் படிப்பினை மிகுந்த செய்திகளை பரிமாறிக் கொள்வதுண்டு.
அது போன்று அன்றும்
அண்ணலார் முன்னோர்களான மேன்மக்களின் வரலாற்றுச்
செய்தியை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
வியப்பின் உச்சத்திற்கே,
ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே நபித்தோழர்கள் சென்று விட்டார்கள்.
உடனடியாக அல்லாஹ்வின்
தூதுச் செய்தியை சுமந்து ஜிப்ரயீல் (அலை)
அவர்களும் நபிகளாரின் அவைக்கு வருகை தந்து விட்டார்கள்.
அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்கள்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்று ஆவல்
பூக்கிறதா? இதோ அதையும் கொஞ்சம் பார்த்து தான் விடுவோமே?
وقال
علي وعروة: ذكر النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أربعة من بني إسرائيل،
فقال (عبدوا الله ثمانين سنة، لم يعصوه طرفة عين)، فذكر أيوب وزكريا، وحزقيل بن
العجوز ويوشع بن نون، فعجب أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من ذلك.
فأتاه جبريل فقال: يا محمد عجبت أمتك من عبادة هؤلاء النفر ثمانين سنة لم يعصوا
الله طرفة عين، فقد أنزل الله عليك خيرا من ذلك، ثم قرأ: إِنَّا أَنْزَلْناهُ فِي
لَيْلَةِ الْقَدْرِ. فسر بذلك رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
”பனூ இஸ்ரவேலர்களில்
நான்கு மேன்மக்கள் 80 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
கண் சிமிட்டும் நேரம் கூட அவர்கள் அல்லாஹ்விற்கு மாறு செய்யவில்லை”
என்று கூறிய அண்ணலார்..
தொடர்ந்து அவர்கள் ”நபி அய்யூப் (அலை) அவர்கள், நபி ஜகரிய்யா
(அலை) அவர்கள், ஹிஸ்கீல்
(அலை) அவர்கள், யூஷஃ இப்னு
நூன் (அலை) அவர்கள் ஆகியோர் ஆவார்கள்.”
என்று கூறிய போது..
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இன்னா அன்ஸல்னா அத்தியாயத்தோடு
இறங்கி வந்து மாநபியே! உம்முடைய சமூகத்தார் இம்மேன்மக்களின் இபாதத்
கண்டு வியந்து போய் விட்டார்கள்.
அல்லாஹ் உங்களுக்கு
இதை விட சிறந்த ஒன்றை வழங்கி இருக்கின்றான். என்று கூறி
அல்கத்ர் அத்தியாயத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முகம் மகிழ்ச்சியால் இலங்கியது.
இந்தச் செய்தியை அலீ
(ரலி) மற்றும் உர்வா (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு அபீ ஹாத்தம் (ரஹ்) அவர்கள் தங்களது நூலிலே
19426 –வது ஹதீஸாக பதிவு செய்திருக்கின்றார்கள்.
(நூல்: தஃப்ஸீர்
அல் குர்துபீ, பாகம்:10, பக்கம்:350)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்தச் செய்தியை சொன்ன மாத்திரத்தில்
நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட மனோநிலை இது போன்ற இபாதத்களை நாமும் செய்வதற்கு ஆற்றல் கொண்டோர்களாய்
இருந்திருந்தால் எப்படி இருக்கும்? என்று ஆச்சர்யத்தோடு அணுகிய
போது அல்லாஹ் இந்த ஒட்டு மொத்த உம்மத்திற்கும் அதற்கான பாதைகளை இலகுவாக்கி,
அதற்கான ஆற்றலையும் வசப்படுத்தி தந்துவிட்டான்.
ஆம்! 80 ஆண்டுகள் அம்மேன்மக்கள் வணங்கிய வணக்கத்தின் நன்மையை ஒரேயொரு
இரவில் இபாதத்களில் ஓர் இறைநம்பிக்கையாளான் தம்மை ஈடுபடுத்திடும் போது பெற்றுக் கொள்கிறான்.
ஆக, நோக்கம் உயர்வாகும் போது அதற்கான பாதைகளை அல்லாஹ் இலகுவாக்கித்
தருகிறான்.
சுவனமும்.. உயர் அந்தஸ்துகளும்…
وَلِكُلٍّ
دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ ()
”ஒவ்வொருவருக்கும்
அவர்களின் செயல்களைப் பொறுத்து (சுவனத்தில்) சில அந்தஸ்துகள் உள்ளன. உம் இறைவன் அவர்கள் செய்கின்ற
செயல்களைப் பற்றி கவனமற்றவனாய் இல்லை.”
( அல்குர்ஆன்:6:132)
وَلِكُلٍّ
دَرَجَاتٌ مِمَّا عَمِلُوا وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا
يُظْلَمُونَ ()
“ஒவ்வொருவருக்கும்
அவர்களின் செயல்களைப் பொறுத்து (சுவனத்தில்) சில அந்தஸ்துகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்கு ஏற்ப
படித்தரங்கள் வழங்கப்படுவார்கள். அதில் அவர்கள் அநீதம் இழைக்கப்பட
மாட்டார்கள்.”
انْظُرْ
كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَلَلْآخِرَةُ أَكْبَرُ دَرَجَاتٍ
وَأَكْبَرُ تَفْضِيلًا ()
“இவ்வுலகிலேயே
அவர்களில் சிலருக்கு வேறு சிலரை விட
எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம்? என்பதைப்
பாருங்கள். மேலும், மறுமையிலோ அவர்களுக்கு
இன்னும் (உயர்ந்த) அதிகமான அந்தஸ்தும் சிறப்பும்
வழங்கப்படும்.”
عن عبادة
بن الصامت
أن رسول الله
قال: ِ
((الْجَنَّةُ مِائَةُ دَرَجَةٍ، مَا بَيْنَ
كُلِّ دَرَجَتَيْنِ مَسِيرَةُ مِائَةِ عَامٍ،
وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً، وَمِنْهَا
تَخْرُجُ الْأَنْهَارُ الْأَرْبَعَةُ، وَالْعَرْشُ مِنْ فَوْقِهَا، وَإِذَا
سَأَلْتُمْ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ))
رواه أحمد.
உப்பாதா இப்னு அஸ்
ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“சுவனத்தில் 100 அந்தஸ்துகள் இருக்கின்றன.
ஒரு அந்தஸ்திற்கும் இன்னொரு அந்தஸ்திற்கும் இடையேயான வித்தியாசமாகிறது
நூறு ஆண்டுகள் நடந்து செல்லும் தொலை தூரத்திற்கு சமமாகும்.”
மேலும், ”ஃபிர்தவ்ஸ் தான் சுவனத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தாகும்.
ஏனெனில், அங்கிருந்து தான் சுவனத்தின் நான்கு நீரோடைகள்
உற்பத்தியாகின்றன. அல்லாஹ்வின் சிம்மாசனம் அர்ஷ் அதற்கு மேல்
தான் அமைக்கப்பட்டிருக்கின்றது.”
மேலும், “அல்லாஹ்விடத்தில் நீங்கள் சுவனத்தைக் கேட்டால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள்”
என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
وَقَالَ عَفَّانُ: كَمَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ
உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும்
இன்னொரு அறிவிப்பில்.. “வானம், பூமிக்கிடையே
இருக்கிற தொலை தூரத்திற்கு சமமாகும்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்:அஹ்மத் )
قال أهل العلم الفردوس هو أعلى درجات الجنة، وهو تحت عرش الرحمن عز وجل، ومنه
تخرج أنهار الجنة الأربعة، وأعلى مقام هو مقام الوسيلة، وهو مقام لا ينبغي إلا
لعبد من عباد الله؛ فمن تابع المؤذن ثم سأل الوسيلة لرسول الله
حلت
له شفاعته يوم القيامة. ثم تليها غرفُ أهلِ عليين وهي قصور متعددة الأدوار، من
الدر والجوهر، تجري من تحتها الأنهار، وهي منازل الشهداء والصابرين من أهل البلاء
والأسقام والمتحابين في الله. ثم باقي أهلِ الدرجات، وأدناهم منزلةً من كان
مُلْكُه مثلُ عَشَرَة أمثالِ أغنى ملوك الدنيا.
இந்த ஹதீஸிற்கு விளக்கம்
தருகிற அறிஞர் பெருமக்கள்… “சுவனத்து
அந்தஸ்துகளில் உயர்ந்தது ஃபிர்தவ்ஸ் ஆகும். மிக உயர்ந்த அந்தஸ்து
வஸீலா எனும் உயர் பதவியாகும். இதை அல்லாஹ் தன் அடியார்களில் மிக
உயர்ந்த ஒரு அடியாருக்கு வழங்குகின்றான். அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாம் துஆ
செய்ய வேண்டும் என ஷரீஆவால் வழிகாட்டப்பட்டிருக்கின்றோம்.
யார் மாநபி {ஸல்} அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஒவ்வொரு
பாங்குக்குப் பின்னரும் துஆ செய்கின்றார்களோ அவருக்கு நாளை மறுமையில் நபி {ஸல்} அவர்களின் புனித பரிந்துரை கிடைக்கும்.
சுவனத்தின் அதற்கடுத்த
அந்தஸ்து முத்து மரகதம் போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்ட, வழிந்தோடுகிற நதிகளுக்கு மேலே கட்டப்பட்டிருக்கிற அடுக்கடுக்கான மாளிகைகளைக் கொண்ட
சுவனமாகும்.
அது அல்லாஹ்வை நேசித்தவர்கள், அல்லாஹ்விற்காக நேசித்தவர்கள், சோதனைகளின்
போது பொறுமையை மேற்கொண்டவர்கள், அல்லாஹ்விற்காக உயிர் நீத்த தியாகிகள்
ஆகியோருக்கு வழங்கப்படும்.
அதற்கடுத்த அந்தஸ்து
அதற்கடுத்த நிலைகளில் உள்ள நல்லோர்கள், உத்தமர்களுக்கு
வழங்கப்படும்.
சுவனத்தின் மிகக் குறைந்த
அந்தஸ்து எதுவெனில், “உலகத்து ஆட்சியாளர்களில் பத்து நபர்கள் ஆட்சி
புரிந்த இடமளவு சுவனத்தில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுவதாகும்.” என்று கூறுகின்றார்கள்.
ولا
منزلة عند الله في الآخرة أفضل من مرافقة الأنبياء " شرح صحيح البخاري لابن
بطال (217/9)
மேலும்,இந்த நபிமொழிக்கு
இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிற போது… “மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில்
மிக உயர்ந்த அந்தஸ்து என்று ஒன்று இருக்குமேயானால் அது நபிமார்களோடு சுவனத்தில் உறவடுவது
தான்” என கூறுகின்றார்கள்.
எனவே, சுவனத்தை இலக்காக கொண்டு இந்த உலக வாழ்வை அமைத்துக் கொள்கிற அதே
நேரத்தில் சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்தையும் நோக்கமாக கொண்டு இபாதத் செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக
அல்லாஹ் அருள் புரிந்த மேன்மக்களான நபிமார்களோடு தோழமை பெற்றிடும் பாக்கியத்தை அடையச்
செய்திடும் அமல்களை மிக ஆர்வத்தோடு செய்து சாதனை மனிதர்களாக வரலாற்றில் பதிவு செய்திட
வேண்டும்.
கவலையும்… கலப்பற்ற நேசமும்…
وحكى الثعلبي: أنها
نزلت في ثوبان مولى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وكان شديد الحب
له قليل الصبر عنه، فأتاه ذات يوم وقد تغير لونه ونحل جسمه، يعرف في وجهه الحزن،
فقال له: (يا ثوبان ما غير لونك) فقال: يا رسول الله ما بي ضر ولا وجع، غير أني إذا
لم أرك اشتقت إليك واستوحشت وحشة شديدة حتى ألقاك، ثم ذكرت الآخرة وأخاف ألا أراك
هناك، لاني عرفت أنك ترفع مع النبيين وأني إن دخلت الجنة كنت في منزلة هي أدنى من
منزلتك، وإن لم أدخل فذلك حين لا أراك أبدا، فأنزل الله
وَمَنْ
يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ
عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا () ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ
عَلِيمًا ()
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களால் விலைக்கு வாங்கி உரிமை விடப்பட்ட அடிமை தான்
ஸவ்பான்
{ரலி}
அவர்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் பணியாளராக பரிணமித்தவர்கள்.
நபிகளார்
{ஸல்}
அவர்கள் ஊரில் இருந்தாலும், பிரயாணத்தில் இருந்தாலும் நபிகளாருடனேயே தங்களின் பெரும் பாலான நேரங்களைச்
செலவிட்டவர்கள். நபிகளாரின் மீது அளவு
கடந்த நேசமும்,
காதலும் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் ஸவ்பான்
{ரலி}
அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் தர்பாருக்கு வருகை தருகின்றார்கள். அவரின் நிலை கண்டு மாநபி {ஸல்} அவர்கள் கவலையுற்றவர்களாக, என்ன ஸவ்பான் இப்படி
இருக்கின்றீர்கள்?
உடலெல்லாம் நிறம் மாறி மஞ்சனித்து இருக்கிறதே? ஏன் உடல் நிலை சரியில்லையா? என்று அன்பொழுக
விசாரித்தார்கள்.
அதற்கவர்,
”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நோயோ, அல்லது உடலில் ஏற்பட்ட நோவினையின் காரணமாகவோ, என் நிலை இப்படியாகவில்லை. மாறாக, உங்களைக் காணாத போது எனக்கு கடுமையான மனக்கவலையும், கஷ்டமான இந்த நிலையும் ஏற்படுகிறது.”
மீண்டும் உங்களை நான் பார்த்து விட்டேன் என்றால் நான் சகஜ நிலைக்கு திரும்பி
விடுகின்றேன். இந்த உலகத்தில் இப்படி
என்றால் நாளை மறுமையில்,
என்ன நடக்கும் என நான் சிந்தித்தாலே இந்த நிலைக்கு
உள்ளாகிவிடுறேன்.
என்னை கவலையும் சூழ்ந்து கொள்கின்றது.
ஏனெனில்,
நாளை மறுமையில் ஒரு வேளை நான் சுவனவாசியாகி, உங்களைப் பார்க்க வேண்டுமென நான் ஆவல் கொண்டால் அது நடக்குமா? நீங்களோ உயர்வான இடத்தில், உயர்ந்தோர்களான
நபிமார்களோடு வீற்றிருப்பீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
நானோ குறைவான அந்தஸ்தோடு சுவனத்தில் எங்கோ ஓர் மூலையில்
இருப்பேன்.
உங்களை என்னால் பார்க்க முடியுமா?
அல்லாஹ்வின் தூதரே!
”ஒரு வேளை நான் சுவனவாசியாக இல்லையெனில், ஒருக்காலமும் உங்களைக் காண முடியாதே!” என்ற கவலை தான் என்னை இந்த நிலைக்கு
ஆட்படுத்தி இருக்கிறது” என்று பதில் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்
“எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள்
ஆகியோருடன் இருப்பார்கள்.
இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து
கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும், (இந்த மக்களுடைய)
உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அல்குர்ஆன்:4:69,70.
ஆகிய இறை வசனங்களை இறக்கி வைத்தான்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் எங்களுக்கு இந்த இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். என்று அன்னை ஆயிஷா
{ரலி}
அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல்: அல் இஸ்தீஆப்,
தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:2,
பக்கம்:182 )
ஆர்வமும்..
தேடலும்…
عبد الله بن مسعود
، روى
أن رسول
الله
دخل
الْمَسْجِدَ وَهُوَ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وهو يُصَلِّي، وَإِذَا هُوَ
يَقْرَأُ النِّسَاءَ، فَانْتَهَى إِلَى رَأْسِ الْمِائَةِ فَجَعَلَ ابْنُ
مَسْعُودٍ يَدْعُو وَهُوَ قَائِمٌ يُصَلِّي فَقَالَ النَّبِيُّ
: ((اسْأَلْ تُعْطَهْ اسْأَلْ
تُعْطَهْ))، ثُمَّ قَالَ: ((مَنْ سَرَّهُ أَنْ
يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ بِقِرَاءَةِ ابْنِ
أُمِّ عَبْدٍ))، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَيْهِ أَبُو بَكْرٍ
لِيُبَشِّرَهُ وَقَالَ لَهُ: مَا سَأَلْتَ اللَّهَ الْبَارِحَةَ قَالَ: قُلْتُ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ
وَمُرَافَقَةَ مُحَمَّدٍ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ.
அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத் (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு
நாள் இரவு இஷாத்
தொழுக்கைக்குப் பின்னர் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை
தந்தார்கள்.
அங்கே
உமர் (ரலி) மற்றும்
அபூபக்ர் (ரலி) ஆகியோரும்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கருகில் நபி
{ஸல்}
அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது
நான் தொழுது கொண்டிருந்தேன்.
தொழுகையில் சூரா அந்நிஸாவை
ஓதிக் கொண்டிருந்தேன். சூரா
அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு
என் தொழுகையை நான்
நிறைவு செய்தேன்.
தொழுது
முடித்ததும் என்னை அழைத்த
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் அப்துல்லாஹ்வே! ”அல்லாஹ்விடம்
நீ விரும்பியதை கேள்!
உனக்கு அல்லாஹ் நீ
விரும்பியதை வழங்குவான்!” என
இரு முறை கூறினார்கள்.
பின்பு,
“யார் குர்ஆனை ஜிப்ரயீல்
(அலை)
அவர்கள் என்னிடம் கொண்டு
வந்து இறக்கியருளிய போது
ஓதப்பட்டதைப் போன்று ஓத
வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் இப்னு
உம்மி அப்த் (இது
இப்னு அப்பாஸ் அவர்களின்
செல்லப்பெயர்) அவர்கள் ஓதுவது
போன்று ஓதிக் கொள்ளட்டும்!”
என்றும் கூறினார்கள்.
மறுநாள்
வைகறைத் தொழுகை முடித்து
நான் அமர்ந்திருக்கும் போது
என்னிடம் வந்த அபூபக்ர்
(ரலி)
அவர்கள் இந்த சோபனத்தை
என்னிடம் கூறிய பிறகு
“அப்துல்லாஹ்வே! நீ விரும்பியதை
அல்லாஹ்விடம் கேள்! அல்லாஹ்
நீ விரும்பியதை உமக்கு
தருவான்!” என நபி
{ஸல்}
அவர்கள் உம்மிடம் கூறினார்களே
இன்றைய அதிகாலைத் தொழுகைக்குப்
பின்னர் அல்லாஹ்விடம் நீர்
என்ன துஆ செய்தீர்
கூறுங்களேன்” என்று கேட்டார்கள்.
அதற்கு,
நான் “அல்லாஹ்வே! உன்னிடம்
நான் நிலையான ஈமானையும்,
அழிந்து போகாத அருட்கொடைகளையும்,
உயர்வான சுவனத்தில் முஹம்மத்
{ஸல்}
அவர்களோடு என்றென்றும் தோழமை
கொள்கிற பெரும் பேற்றையும்
கேட்கிறேன்” என்று
நான் கேட்ட அந்த
துஆவைக் கூறினேன்.
( நூல்: தஹாவீ
)
ஆசையும்…
தியாகமும்…
உம்மு
அம்மாரா (ரலி) என்றும்
உம்மு உமாரா (ரலி)
என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை
நுஸைபா பிந்த் கஅபுல்
மாஸினிய்யி அவர்கள் நபி
{ஸல்}
அவர்கள் வாழ்கிற போதும்
நபி
{ஸல்}
அவர்கள் மரணித்த பின்னரும்
அனைத்து யுத்தகளங்களிலும் மருத்துவப்
பணிகளிலே தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
சில
யுத்தகளங்களிலே வாளெடுத்து வீர
தீர செயல்களிலே ஈடுபட்டு,
எதிரிகளின் பல பேர்களை
காயப்படுத்தியதும் உண்டு.
குறிப்பாக
உஹத் மற்றும் யமாமா
யுத்தகளங்களில் வீர மங்கையாக
பரிணமித்து பல விழுப்புண்களை
தியாகச் சுவடுகளாக தாங்கியும்
இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கொல்லப்பட்டு விட்டார்கள் எனும்
வதந்தியால் உஹத் யுத்தகளத்தின்
நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின்
தாக்குதல் தாங்க முடியாமல்
யுத்த களத்தின் நாலாபுறமும்
சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த
வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில்
யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது
குடும்பம் சகிதமாக அண்ணலாரைத்
தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்!
உஹத் யுத்தகளத்தில் அவர்களின்
கணவர் ஸைத் இப்னு
ஆஸிம் (ரலி) மற்றும்
அவர்களின் இரு மகன்களான
ஹபீப் இப்னு ஸைத்,
அப்துல்லாஹ் இப்னு ஸைத்
(ரலி
– அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து
கொண்டார்கள்.
இறுதியாக,
அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும்,
அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும்
எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய
மேலீட்டால் ”இதோ அண்ணலார்
உயிரோடு இங்கே உயிரோடு
இருக்கின்றார்கள்” என்று உஹத்
யுத்தகளம் முழுமையும் கேட்கும்
அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
قال ابن إسحاق فلما
عرف المسلمون رسول الله صلى الله عليه وسلم نهضوا به ونهض معهم نحو الشعب معه أبو
بكر الصديق وعمر بن الخطاب وعلى بن أبي طالب وطلحة بن عبيد الله والزبير بن العوام
وسعد بن أبي وقاص وابو دجانة وزياد بن السكن والحارث
بن الصمة وأم عمارة نسيبة بنت كعب المازنية ورهط من المسلمين رضوان الله عليهم.
இதே
நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத்
தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது
அண்ணலாருக்கு அருகே நாலா
புறங்களிலும் அரணாக தங்களை
அமைத்து அண்ணலாரை காக்கும்
பணியில் சில நபித்தோழர்கள்
ஈடுபட்டிருந்தனர்.
அதில்
தங்களையும் ஒருவராக வீர
மங்கை உம்மு உமாரா
(ரலி)
அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
عن عمر قال سمعت
رسول الله صلى الله عليه و سلم يقول ما ألتفت يوم أحد يمينا ولا شمالا إلا وأراها
تقاتل دوني.
மாநபி
{ஸல்}
அவர்கள் தங்களைக் காக்கும்
பணியில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டு சுழன்று சுழன்று
போராடிய உம்மு உமாரா
(ரலி)
அவர்களைப் பார்த்து “உஹத்
யுத்தகளத்தில் என்னைச் சுற்றி
வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு
உமாரா (ரலி) அவர்கள்
போராடியதைப் போன்று வேறெவரும்
போராட நான் பார்க்க
வில்லை” என்று நபி
{ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட
13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு
அம்மையார் போராடிக் கொண்டிருக்க
ஒரு எதிரி வாள்
கொண்டு வீசி அம்மையாரின்
தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக்
காயம் அதிக வேதனையைத்
தரவே அண்ணலாரை நோக்கி
மெல்ல நடந்து வந்தார்கள்.
அண்ணலாரின் அருகே வந்ததும்
”அல்லாஹ்வின் தூதரே! என்
கணவர், இருமகன்கள், நான்
உட்பட அனைவரும் நாளை
மறுமையில் சுவனத்தில் உங்களோடு
தோழமை பெற்றிட துஆ
செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم
رُفَقَائِي فِي الجَنَّةِ). )
உடனடியாக,
உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
“யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும்
சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!”
என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக்
கேட்ட உம்மு உமாரா
(ரலி)
அவர்கள் அளவிலா மகிழ்ச்சி
அடைந்தார்கள்.
( நூல்:
ஸீரத் இப்னு
ஹிஷாம், ஸியரு
அஃலா மின்
நுபலா, தபகாத்
இப்னு ஸஅத்
)
எனவே,
மாநபி {ஸல்} அவர்களுடன்
சுவனத்தில் தோழமை கொள்கிற,
உறவாடுகிற பாக்கியம் பெற்றிட
வேண்டுமானால் நபித்தோழர்களிடம் இருந்த
ஆர்வம், ஆசை, கலப்பற்ற
காதல், தியாக உணர்வு
போன்ற உயரிய குணங்களை
கொண்டோர்களாக நாம் மாற்றம்
பெற்றிட வேண்டும்.
நபிமார்களின் தோழமையை பெற்றுத் தரும் இபாதத்களும்,
நற்பண்புகளும்..
قال رسول اللَّه
صلى الله عليه وسلم
"ثلاثة
يرزقون مرافقة الأنبياء: رجل يدفع إليه قاتل وليّه ليقتله فعفى عنه، ورجل عنده
أمانة لو يشاء لخانها فيردها إلى من ائتمنه عليها، ورجل كظم غيظه عن أخيه ابتغاء
وجه اللَّه"
1. முத்தான மூன்று நற்பண்புகள்.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “மூன்று நற்பண்புகளைக்
கொண்டிருக்கின்ற மனிதர்கள்
சுவனத்தில் நபிமார்களுடன் உறவாடிடும்
நற்பேற்றை அடைந்து கொள்வார்கள்.
“1. உயிருக்கு
உயிர் பழி வாங்கும்
உரிமை இருந்தும் சம்பந்தப்பட்ட
மனிதரை மன்னித்து விடுபவர்.
2. மோசடி
செய்வதற்கு ஆற்றல், அதிகாரம்
இருந்தும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை உரிய
முறையில் நிறைவேற்றுபவர்.
3. அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்திற்காக தன்
சக முஸ்லிம் சகோதரன்
ஒருவன் செய்த ரோஷமூட்டும்
செயலால் தான் பாதிக்கப்பட்டும் தன் ரோஷத்தை
விட்டு விட்டவர்.
( நூல்:
முஸ்தத்ரக், பாகம்:9,
பக்கம்:12, ஹதீஸ்
எண்:7 )
2. குர்ஆன் ஓதுதல்.
وأخرج
أحمد والحاكم وصححه عن معاذ بن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال : من قرأ
ألف آية في سبيل الله كتب يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين
وحسن أولئك رفيقا إن شاء الله.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “எவர் அல்லாஹ்வின்
பாதையில் ஆயிரம் இறைவசனங்களை ஓதுகின்றாரோ அவர் அல்லாஹ் நாடினால்
நாளை மறுமையில் சுவனத்தில் நபிமார்கள், உண்மையாளர்,
ஷஹீத் ஆகியோருடன் உறவாடும் பட்டியலில் இடம் பெறுவார்.”
( நூல்: அஹ்மத், ஹாக்கிம்
)
3. பாங்கு சொல்லுதல்.
وقال
عليه السلام « من أذن عشرين سنة متوالية اسكنه الله مع ابراهيم عليه السلام فى
الجنة »
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “எவர் இருபது
ஆண்டுகள் தொடர்படியாக பாங்கு
சொல்வாரோ அவர் சுவனத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் வீற்றிருப்பார்.”
( நூல்: தாரமீ )
4. நேர்மையோடு செய்யப்படும் வணிகம்.
عن النبي صلى الله عليه
وسلم قال
التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “உண்மை பேசி,
நேர்மையுடனும், நாணயத்துடனும் நடந்து
கொள்ளும் ஒரு வணிகர்,
மறுமை நாளில் நபிமார்கள்,
உண்மையாளர்கள், ஷஹீத் ஆகியோருடன்
இருப்பார்.”
( நூல்: திர்மிதீ
)
5. அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்தல்.
وَمَنْ يُطِعِ
اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ
مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ
أُولَئِكَ رَفِيقًا () ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا
()
“எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும்
கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்
புரிந்துள்ள நபிமார்கள்,
உண்மையாளர்கள், இறை வழியில்
உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள்
ஆகியோருடன் இருப்பார்கள்.
இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும்,
(இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து
கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
( அல்குர்ஆன்:4:69,70.)
قال ابن
كثير: "أي: من عمل بما أمره الله به ورسوله
، وترك ما نهاه الله عنه ورسوله
، فإن الله عز وجل يسكنه دار كرامته، ويجعله مرافقًا للأنبياء ثم
لمن بعدهم في الرتبة، وهم الصديقون ثم الشهداء ثم عموم المؤمنين، وهم الصالحون
الذين صلحت سرائرهم وعلانيتهم".
இந்த
இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற
இப்னு கஸீர் (ரஹ்)
அவர்கள் “எவர் அல்லாஹ்வும்,
அவன் தூதரும் ஏவியதைச்
செய்தும், அவர்கள் இருவரும்
விலகி வாழச் சொன்னதிலிருந்து விலகியும் வாழ்கிறாரோ
அவரை அல்லாஹ் சுவனத்தில்
நபிமார்களின் தோழமையைப் பெற்றிடும்
பெரும் பேற்றை வழங்குகின்றான்.
( நூல்:
தஃப்ஸீர் இப்னு கஸீர்
)
பெருமானார்
{ஸல்} அவர்களுடன் தோழமையை பெற்றுத்தரும் இபாதத்களும் நற்பண்புகளும்…
1. கற்பொழுக்கமும்..
அரவணைப்பும் உள்ள
பெண்.
أنا وامرأة سفعاء الخدين كهاتين يوم القيامة وأومأ
يزيد
بالوسطى والسبابة
امرأة آمت من زوجها ذات منصب وجمال حبست
نفسها على يتاماها حتى بانوا أو ماتوا
அவ்ஃப்
இப்னு மாலிக் (ரலி)
அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “நானும் கரிந்து
போன முகத்துடைய பெண்ணும்
மறுமை நாளில் இந்த
இரு விரல்களைப் போன்று
இருப்போம்”.
யஸீத்
இப்னு ஸரீஉ (ரலி)
அவர்கள் இந்த நபிமொழியைக்
கூறிய போது தம்
நடுவிரலையும், சுட்டு விரலையும்
இணைத்து சுட்டிக்காட்டினார்கள்.
கரிந்து
போன முகத்துடைய பெண்
– அதாவது, தன் கணவனை
இழந்து விட்ட, குடும்பப்
பாரம்பர்யமும் நல்ல அழகும்
இருந்து, இறந்து விட்ட
கணவனின் குழந்தைகளுக்காக அவர்கள்
தன்னை விட்டுப் பிரியும்
வரை அல்லது இறந்து
விடும் வரை திருமணம்
செய்து கொள்ளாமலிருக்கும் பெண்.
(நூல்: அபூதாவூத்)
2. அநாதைகளையும்,
தேவையுள்ளோர்களையும் அரவணைத்தல்.
من حديث سَهْل بْن سَعْدٍ عَنْ
النَّبِيِّ قَالَ: ((أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ
هَكَذَا))
وأشار بالسبابة والوسطى
وفرج بينهما شيئا.
ஸஹ்ல்
இப்னு ஸஅத் (ரலி)
அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “நானும், அநாதையைப்
பராமரிப்பவனும், இன்ன பிற
தேவை உடையோரைப் பராமரிப்பவனும் சுவனத்தில் இப்படி
இருப்போம்” இதைச் சொல்லி
விட்டு நபி {ஸல்}
அவர்கள் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு
விரல்களுக்கு இடையே சிறிது
இடைவெளி விட்டிருந்தார்கள்.
( நூல்: புகாரி
)
3. நபிகளாரை நேசித்தல்.
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ
فَقَالَ:
يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: ((وَمَا
أَعْدَدْتَ لِلسَّاعَةِ؟)) قَالَ: حُبَّ اللَّهِ وَرَسُولِهِ، قَالَ: ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))، قَالَ أَنَسٌ:
فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِي
: ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))،
قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ،
فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ.
அனஸ்
இப்னு மாலிக் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு
மனிதர் அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களின் திருச் சமூகத்திற்கு
வருகை தந்தார்.
வந்தவர்,
”அல்லாஹ்வின் தூதரே! யுகமுடிவு
நாள் எப்போது வரும்”?
என்று வினவினார்.
அதற்கு,
அண்ணலார் “அதற்காக நீர்
என்ன தயாரிப்பு செய்து
வைத்திருக்கின்றீர்?” எனக் கேட்டார்கள்.
அதற்கவர்,
“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின்
மீதும், அவன் தூதர்
மீதும் நான் அளவு
கடந்த நேசத்தை கொண்டிருக்கின்றேன்.
இதையே நான் அந்த
நாளுக்கான தயாரிப்பாக வைத்திருக்கின்றேன்”
என்றார்.
அது
கேட்ட அண்ணலார் “அப்படியாயின்
நீர் யாரை நேசிக்கின்றீரோ,
அந்நாளில் அவருடன் இருப்பீர்!”
என பதில் கூறினார்கள்.
அனஸ்
(ரலி)
அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின்
தூதரை நேசிக்கும் எங்களுக்கு
நாங்கள் இஸ்லாத்திற்கு வந்த
போது எவ்வளவு மகிழ்ந்தோமோ
அந்த அளவு மகிழ்ச்சியை
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் சொன்ன அந்த
வார்த்தையால் அடைந்தோம்.”
”உண்மையில்
நான் அல்லாஹ்வின் தூதரையும்,
அபூபக்ர் மற்றும் உமர்
(ரலி
– அன்ஹுமா) ஆகியோரையும் நேசிக்கின்றேன்.
அவர்கள் அளவு என்னால்
இபாதத் செய்ய முடியாவிட்டாலும் அவர்களோடு சுவனத்தில்
நானும் இருக்கப் போகிறேன்”
எனும் நம்பிக்கையை அந்த
வார்த்தை என்னுள் ஏற்படுத்தியது.
( நூல்: இப்னு
மாஜா, புகாரி
)
4. கடமையான,
உபரியான தொழுகைகளை நியமமாகத் தொழுதல்.
ربيعة
بن كعب الأسلمي، كان ربيعة من فقراء الصحابة وكان من أهل الصُّفة، وكان ربيعة
ملازمًا لخدمة الرسول
يبيت
عند باب بيته
لأداء
خدمته، فيأتيه بما يطلب من ماءٍ للوضوء وغير ذلك، وبقي على هذه الحالة حتى انتقل
الرسول
إلى
الرفيق الأعلى، أراد النبي
يومًا
أن يكرمه بما يفرحه ويخفف عنه فقره، فقال لربيعة: ((سل))
أي: اطلب ما تحتاجه وتتمناه نفسك، ولعل أول ما يتمناه الفقير المعدم أن يرزق مالًا
يتمتع به أو بيتًا يسكنه، وهو مطلب لا عيب فيه بالنسبة لفقير محتاج، لكنَّ ربيعةَ
كانت
همته أعلى من ذلك كله، قال للنبي
: أَسْأَلُكَ
مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ، فقَالَ النبي
: ((أَوَ غَيْرَ ذَلِك؟)) قال ربيعة: هُوَ ذَاكَ، فقَالَ
له النبي
: ((فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُود)).
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களிடம்
“சுவனத்தின் தோழமையைக் கேட்ட
நபித்தோழர் ரபீஆ இப்னு
கஅபுல் அஸ்லமீ (ரலி)
அவர்களிடம் மாநபி {ஸல்}
அவர்கள் ”என் தோழமை
உமக்கு வேண்டுமானால் நீர்
அதிகமாக ஸுஜூது செய்வதைக்
கொண்டு எனக்கு உதவி
புரிவீராக!” என்று கட்டளையிட்டார்கள்.
இந்த
ஹதீஸிற்கு விளக்கம் தருகிற
அறிஞர் பெருமக்கள் “கடமையான,
தொழுகைகளை தொழுவதோடு உபரியான
தொழுகைகளை குறிப்பாக இரவுத்
தொழுகையை நியமமாகத் தொழுது
வருவதாகும்” என்று கூறுகின்றார்கள்.
5. நற்குணங்களோடு வாழ்தல்.
قال رسول الله صلى الله عليه وسلم:
((إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة
أحاسنكم أخلاقا، وإن أبغضكم إلي وأبعدكم مني مجلسا يوم القيامة الثرثارون
والمتشدقون والمتفيهقون))، قالوا: يا رسول الله، قد علمنا الثرثارون
والمتشدقون فما المتفيهقون؟ قال: ((المتكبرون))
رواه الترمذي.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “உங்களில் என்னிடம்
மிகவும் நேசத்திற்குரியவரும், நாளை
மறுமையில் என்னுடைய நெருக்கத்தை
பெறுபவரும் யாரெனில், உங்களில்
நற்குணத்தால் தன் வாழ்வை
மிகவும் அழகாக ஆக்கிக்
கொண்டவர் தான்.
உங்களில்
என்னிடம் மிகவும் வெறுப்புக்குரியவரும்,
நாளை மறுமையில் என்னை
விட்டும் மிக தூரமாக
இருப்பவரும் யாரெனில், உங்களில்
அதிகமாக பேசுபவரும், பெருமைக்காக
பேசுபவரும், மிகக் கடுமையான
வார்த்தைகளால் பேசுபவரும் தான்”.
( நூல்: திர்மிதீ
)
ஆகவே,
சுவனத்தை விரும்புவோம்! மேலான
ஃபிர்தவ்ஸில் இடம் பெற
ஆசைப்படுவோம்! மிக உயர்ந்த
அந்தஸ்தான நபிமார்களின் தோழமையை
பெற்றிட முயற்சி செய்வோம்!
யாஅல்லாஹ்!
எங்களுக்கு நிலையான ஈமானையும்,
அழிவில்லாத உன் அருட்கொடைகளையும்,
உன் அருளுக்குச் சொந்தமான
உன்னதமான நபிமார்களோடு சுவனத்தில்
தோழமையையும் உன்னிடம் கேட்கிறோம்!
எங்களுக்கு தவ்ஃபீக் செய்வாயாக!
ஆமீன்! வஸ்ஸலாம்!!
சுன்னத் தான் ஜன்னத்தில் நபியின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை உணர்த்தி விட்டீர்கள்!
ReplyDeleteShukran.jazakumullah
ReplyDelete