Wednesday 17 December 2014

விக்கலுக்கு விஷம் குடிப்பதா?



விக்கலுக்கு விஷம் குடிப்பதா?



வீட்டடுப்புச் சமையலுக்கு
வெட்டியானை அழைப்பதா?
இடிபடைக்குக் கட்டுமான
இலாக்காவைக் கொடுப்பதா?
விக்கலுக்குத் தீர்வாக
விஷமெடுத்துக் குடிப்பதா?!

பேராசிரியர், தி.மு. அப்துல்காதர் அவர்கள் சமநிலைச் சமுதாயம் இதழில் வெளியான கிரணவாசல் எனும் தொடருக்கு எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற கவிதையின் ஓர் பகுதி தான் இது.

சமீபத்தில் ஆக்ராவில் 30 இஸ்லாமிய குடும்பம் ரேஷன் கார்டுக்காகவும், ஆதார் அடையாள அட்டைக்காகவும் தங்களின் சுவனத்து அடையாளமான ஈமானை இழக்க முன் வந்த சம்பவத்தை பத்திரிக்கையின் வாயிலாக படித்து அதிர்ச்சி அடைந்தோம்.

அது பொய்யா? அல்லது உண்மைத் தகவலா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் நம்பிக்கை எனும் ஈமானை இதயத்தில் இடம் பெறச் செய்திருக்கின்ற ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தனது ஈமானைக் குறித்து, ஈமானின் தரம் குறித்து உரசிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

உண்மையான ஈமான் இடம் பெற்றிருக்கிற இதயத்தில் ஒரு போதும் ஈமானுக்கு எதிரான நிலைப்பாடு இடம் பெறாது.

வறுமைக்காகவோ, உயிரின் மீதான பிரியத்திற்காகவோ பதவியின் மீதான மோகத்திற்காகவோ, ஆட்சி, அதிகாரத்தின் மீதான ஆசைக்காகவோ ஒரு போதும் தன் ஈமானை ஓர் இறைநம்பிக்கையாளன் விலை பேசவும் மாட்டான், விலை போகவும் மாட்டான்.

ஆனால், நாம் வாழும் காலத்தில் நம்முடைய சகோதர, சகோதரி (முஸ்லிம்கள்) மிக இலகுவாக காதல் என்ற பெயரில் மாற்றார்களை இழுத்துக் கொண்டு ஓடும் அவலங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன.

எங்கிருந்து இந்த பிழைகள் ஏற்படுகின்றது? அதை எப்படி சரி செய்வது? என்பது குறித்த முழுமையான முயற்சியில் நாம் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம்.

இறைநம்பிக்கை, இறையச்சம், இறை நேசம், இறை அடிமைத்தனம் போன்ற உயர்ந்த படித்தரங்கள் தான் ஓர் முஃமினின் நிரந்தர முகவரியாகும்.

 இவைகளில் பழுது ஏற்படும் போதும், குறைவு ஏற்படும் போதும் ஈமானிய உணர்வுகள் ஆட்டம் காணத் துவங்குகின்றது.

பாதிப்பு யாருக்கு?

إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ

நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் ஒருபோதும் நிராகரிப்பை விரும்புவதில்லை.”                                         ( அல்குர்ஆன்:39:7 )

وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ ()

அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள் தாம் தேவையுடையவர்களாய் இருக்கின்றீர்கள். ஒருவேளை நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.”          ( அல்குர்ஆன்:47:38 )

إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِآخَرِينَ وَكَانَ اللَّهُ عَلَى ذَلِكَ قَدِيرًا ()

மனிதர்களே! அவன் நினைத்தால் உங்களை அகற்றி விட்டு, உங்களுக்குப் பகரமாக மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ் முழு வல்லமை பெற்றவனாக இருக்கின்றான்.”                     ( அல்குர்ஆன்:4:133 )

இந்த மூன்று இறைவசனங்களும் பொதுவாக இறைநிராகரிப்பாளர்களைப் பற்றி பேசுகின்றது. ஆனால், பின் வரும் வசனமோ நேரடியாக முஃமின்களைப் பார்த்தே பேசுகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ()

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனைமார்க்கத்தை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்,) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள்.

அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள்.

இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”            ( அல்குர்ஆன்:5:54 )

ஆதலால் தான், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் தடம் மாறிச் சென்றிடும் ஈமானை விட்டும் பாதுகாவல் தேடுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ()
அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.”       ( அல்குர்ஆன்:3:8 )

حدثنا يزيد أخبرنا همام بن يحيى عن علي بن زيد عن أم محمد عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم يقول يا مقلب القلوب ، ثبت قلبي على دينك ، قلت : يا رسول الله ، إنك تدعو بهذا الدعاء ، قال : يا عائشة ، أوما علمت أن القلوب أو قال : قلب بني آدم بين إصبعي الله ، إذا شاء أن يقلبه إلى هدى قلبه ، وإذا شاء أن يقلبه إلى ضلالة قلبه

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இதயங்களை புறட்டக்கூடியவனே! என் இதயத்தை உன் சத்திய மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக!” என்று அதிகமதிகம் இறைவனிடம் இறைஞ்சக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நான் நபிகளாரிடம் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்து கொண்டு இப்படி பிரார்த்திக்கின்றீர்கள்” என்று கேட்டேன்.

அதற்கு, அண்ணலார் {ஸல்} அவர்கள் “ஆயிஷாவே! ஆதமுடைய சந்ததியினரின் இதயத்தை அல்லாஹ் தன் இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருக்கின்றான். அவன் நாடினால் நேர்வழியின் பால் புறட்டுகின்றான். அவன் நாடினால் வழிகேட்டின் பால் புறட்டுகின்றான். ஆதலால் தான் நான் அவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள்.        ( நூல்: திர்மிதீ )

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாயிலாகவும் இது போன்று மற்றுமொரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

حدثنا معاذ أخبرنا أبو كعب صاحب الحرير حدثنا شهر بن حوشب قال : قلت لأم سلمة
 يا أم المؤمنين ، ما كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم إذا كان عندك ، قالت : أكثر دعائه : يا مقلب القلوب ثبت قلبي على دينك ، ثم قال : يا أم سلمة ، إنه ليس من آدمي إلا وقلبه بين   إصبعين من أصابع الله ، ما شاء أقام وما شاء أزاغ                  ( நூல்: ஹாக்கிம் ) 

وقال تعالى آمرا لعباده المؤمنين أن يقولوا 
( ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقد كان الصديق رضي الله عنه يقرأ بهذه الآية في الركعة الثالثة من صلاة المغرب بعد الفاتحة سرا . فمعنى قوله تعالى  
( اهدنا الصراط المستقيم استمر بنا عليه ولا تعدل بنا إلى غيره  

அபூபக்ர் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்தில் ஃபாத்திஹா சூரா ஓதிய பின்னர் மௌனமாக ““எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.” என்று ஓதும் வழமை கொண்டவர்களாக இருந்தார்கள்.     ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

عبد الله بن مسعود ، روى أن رسول الله دخل الْمَسْجِدَ وَهُوَ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وهو يُصَلِّي، وَإِذَا هُوَ يَقْرَأُ النِّسَاءَ، فَانْتَهَى إِلَى رَأْسِ الْمِائَةِ فَجَعَلَ ابْنُ مَسْعُودٍ يَدْعُو وَهُوَ قَائِمٌ يُصَلِّي فَقَالَ النَّبِيُّ : ((اسْأَلْ تُعْطَهْ اسْأَلْ تُعْطَهْ))، ثُمَّ قَالَ: ((مَنْ سَرَّهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ بِقِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ))، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَيْهِ أَبُو بَكْرٍ لِيُبَشِّرَهُ وَقَالَ لَهُ: مَا سَأَلْتَ اللَّهَ الْبَارِحَةَ قَالَ: قُلْتُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ مُحَمَّدٍ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் இரவு இஷாத் தொழுக்கைக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை தந்தார்கள்.

அங்கே உமர் (ரலி) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் நபி {ஸல்} அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் சூரா அந்நிஸாவை ஓதிக் கொண்டிருந்தேன். சூரா அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு என் தொழுகையை நான் நிறைவு செய்தேன்.

தொழுது முடித்ததும் என்னை அழைத்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ்வே! ”அல்லாஹ்விடம் நீ விரும்பியதை கேள்! உனக்கு அல்லாஹ் நீ விரும்பியதை வழங்குவான்!” என இரு முறை கூறினார்கள்.

பின்பு, “யார் குர்ஆனை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கொண்டு வந்து இறக்கியருளிய போது ஓதப்பட்டதைப் போன்று ஓத வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் இப்னு உம்மி அப்த் (இது இப்னு மஸ்வூத் அவர்களின் செல்லப்பெயர்) அவர்கள் ஓதுவது போன்று ஓதிக் கொள்ளட்டும்!” என்றும் கூறினார்கள்.

மறுநாள் வைகறைத் தொழுகை முடித்து நான் அமர்ந்திருக்கும் போது என்னிடம் வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த சோபனத்தை என்னிடம் கூறிய பிறகுஅப்துல்லாஹ்வே! நீ விரும்பியதை அல்லாஹ்விடம் கேள்! அல்லாஹ் நீ விரும்பியதை உமக்கு தருவான்!” என நபி {ஸல்} அவர்கள் உம்மிடம் கூறினார்களே இன்றைய அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ்விடம் நீர் என்ன துஆ செய்தீர் என்று கூறுங்களேன்என்று கேட்டார்கள்.

அதற்கு, நான்அல்லாஹ்வே! உன்னிடம் நான் நிலையான, தடம் மாறிப்போய் விடாத ஈமானையும், அழிந்து போகாத அருட்கொடைகளையும், உயர்வான சுவனத்தில் முஹம்மத் {ஸல்} அவர்களோடு என்றென்றும் தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கிறேன்  என்று நான் கேட்ட அந்த துஆவைக் கூறினேன்.

ஆக, எக்காரணத்தைக் கொண்டும் தம்மை விட்டும் ஈமான் பறிபோய் விடக்கூடாது என்பதில் எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய நபி மொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களின் ஈமானிய உணர்வு..

ஹிஜ்ரீ 9 –ஆம் ஆண்டு நஜ்த் தேசம் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு பகுதியாக மாறிவிட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு, தானும் தூதுத்துவத்தை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக முஸைலமா எனும் பொய்யன் தம்மை அறிவித்துக் கொண்டான்.

பெருங்கூட்டம் ஒன்று அவன் பின்னால் அணி சேரத்தொடங்கியது. ஆணவத்தின் உச்சத்திற்கும் அகம்பாவத்தின் விளிம்பிற்கும் வந்த அவன் மாநபி {ஸல்} அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இரு தூதுவர்களை ஏற்பாடு செய்து மதீனாவிற்குச் சென்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களிடம் கொடுத்து விட்டு, அவசியம் பதிலை வாங்கி வாருங்கள் என்று அனுப்பி வைத்தான்.

وفوجئ الرسول يوما بمبعوث بعثه مسيلمة يحمل منه كتابا يقول فيه "من مسيلمة رسول الله، الى محمد رسول الله.. سلام عليك.. أم بعد، فاني قد أشركت في الأمر معك، وان لنا نصف الأرض، ولقريش نصفها، ولكنّ قريشا قوم يعتدون"..!!!
ودعا رسول الله أحد أصحابه الكاتبين، وأملى عليه ردّه على مسيلمة:
" بسم الله الرحمن الرحيم..
من محمد رسول الله، الى مسيلمة الكذاب.
السلام على من اتبع الهدى..
أما بعد، فان الأرض لله يورثها من يشاء من عباده، والعاقبة للمتقين"..!!
وجاءت كلمات الرسول هذه كفلق الصبح. ففضحت كذاب بني حنيفة الذي ظنّ النبوّة ملكا، فراح يطالب بنصف الأرض ونصف العباد..!
وحمل مبعوث مسيلمة رد الرسول عليه السلام الى مسيلمة الذي ازداد ضلالا واضلالا..

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களின் சங்கமத்தால் நிறைந்திருந்தது. முஸைலமாவின் இருதூதர்களும் அவைக்கு வருகை புரிந்து, கடிதத்தை நபிகளாரிடம் வழங்கினார்கள்.

கடிதத்தின் உள்ளேஅல்லாஹ்வின் தூதர் முஸைலமாவிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களுக்கு, ”உம்முடன் தூதுச் செய்தியில் தூதராக நானும் பங்கு தாரராக நியமிக்கப்பட்டுள்ளேன்என்பதை இதன் மூலம் அறியத்தருகின்றேன்.

எங்களுக்கு பாதி நிலமும், குறைஷியர்களாகிய உங்களுக்கு பாதி நிலமுமாக ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் இறைவனின் நியதி. ஆனால், குறைஷிகளான நீங்களோ வரம்பு மீறிவிட்டீர்கள்.” என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள் தூதுவராக வந்திருந்த இருவரையும் நோக்கிமுஸைலமா குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அவ்விருவரும்முஸைலமா உண்மை சொல்பவராக இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம்என்றனர்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள்தூதுவர்கள் கொல்லப்படக்கூடாது எனும் நடைமுறை மாத்திரம் இல்லை என்றிருப்பின் உங்கள் இருவரையும் நான் கொலை செய்யுமாறு ஏவியிருப்பேன்என்று எச்சரிக்கை செய்து விட்டு, பதில் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து விடுமாறு நபித்தோழர்களுக்கு ஆணையிட்டார்கள் {ஸல்} அவர்கள்.

அதில், “அன்பாளன், அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் {ஸல்} அவர்களிடமிருந்து பொய்யனான முஸைலமாவிற்கு….. “ நேரிய வழி நடப்போரின் மீதே இறைவனின் சாந்தி நிலவும்! பரந்து விரிந்த மொத்த பூமி யாவும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீ உணர்ந்து கொண்டாக வேண்டும். அவன், தான் நாடுபவர்களுக்கே அதை உரிமையாக்குகின்றான். மேலும், இறுதி தீர்ப்பு நாளின் நற்கூலியும் அவனை அஞ்சுபவர்களுக்கே கிடைக்கும்”. என்று எழுதச் சொன்னார்கள்.

ومضى الكذب ينشر افكه وبهتانه، وازداد أذاه للمؤمنين وتحريضه عليهم، فرأى الرسول أن يبعث اليه رسالة ينهاه فيها عن حماقاته..
ووقع اختياره على حبيب بن زيد ليحمله الرسالة مسيلمة..
وسافر حبيب يغذّ الخطى، مغتبطا بالمهمة الجليلة التي ندبه اليها رسول الله صلى الله عليه وسلم ممنّيا نفسه بأن يهتدي الى الحق، قلب مسيلمة فيذهب حبيب بعظيم الأجر والمثوبة.

இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட தூதுவர்கள் இருவரும் நஜ்துக்கு சென்று முஸைலமாவிடம் கொடுத்தார்கள்.

தன் நிலையை மாற்றியமைப்பதற்குப் பதிலாக தன்னுடைய அக்கிரமத்தை அதிகரித்துக் கொண்டான்.

அவனை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களை கொடுமை படுத்தி, கொன்றொழித்தான்.

தானும் கெட்டு, பிறரையும் வழிகேட்டில் அழைத்துச் செல்கிற முஸைலமாவின் தறி கெட்ட செயலை தடுத்து நிறுத்தும் முகமாக, எச்சரிக்கையுடன் கூடிய ஒரு கடிதத்தை அண்ணலார் {ஸல்} எழுதி, அதை கொண்டு சேர்க்கும் அரும்பணியை ஹபீப் இப்னு ஜைத் (ரலி) எனும் 20 அல்லது 21 வயது நிரம்பிய இளம் வாலிபரிடம் ஒப்படைத்து, நஜ்துக்கு அனுப்பினார்கள்.

இத்தோடு, முஸைலமாவும் அவனது ஆதரவாளர்களும் மனம் திருந்தி மீண்டும் சத்திய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களின் ஈமானை புதுப்பித்துக் கொள்வார்கள்எனும் ஆசையோடு பாலை, சுடுமணல், மலை, காடு என பல சிரமங்களைத் தாண்டி நஜ்தை அடைந்து பொய்யன் முஸைலமாவின் கோட்டைக்கு வந்தார்.

கடுமையான கெடுபிடிக்குப் பின்னால் அவன் முன் வந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூதுவராக நான் வந்திருக்கின்றேன்! இதோ இந்த கடிதத்தை நபி {ஸல்} அவர்கள் தங்களிடம் தரச் சொன்னார்கள் என்று கூறியவாறே கடிதத்தை முஸைலமாவிடம் கொடுத்தார் ஹபீப் (ரலி) அவர்கள்.

جمع الكذاب مسيلمة قومه، وناداهم الى يوم من أيامه المشهودة..
وجيء بمبعوث رسول الله صلى الله عليه وسلم، حبيب بن زيد، يحمل آثار تعذيب شديد أنزله به المجرمون، مؤملين أن يسلبوا شجاعة روحه، فيبدو امام الجميع متخاذلا مستسلما، مسارعا الى الايمان بمسيلمة حين يدعى الى هذا الايمان أمام الناس.. وبهذا يحقق الكذاب الفاشل معجزة موهومة أمام المخدوعين به..

கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் கடும் சினம் கொண்டவனாக மாறினான். தூதுவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை காற்றில் பறக்க விட்ட அவன்இவரைச் சிறையில் அடையுங்கள்! நாளைக் காலையில் இவரை நம் அவையின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்என்று மதம் கொண்ட யானை போல் பிளிறினான்.

கைது செய்யப்பட்ட ஹபீப் (ரலி) கலங்கிடவில்லை. மறுநாள் காலைப் பொழுது எல்லோருக்குமான காலைப் பொழுதாக விடியவில்லை ஹபீபிற்கு. ஷஹாதத் உடைய காலைப் பொழுதாக விடிந்தது நபித்தோழர் ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களுக்கு.

ஆம்! பொய்யன் முஸைலமா, தமது ஆதரவாளர்களின் புடைசூழ ஆனந்தமாக அமர்ந்திருக்கும் சபைக்கு சங்கிலியோடு இழுத்து வரப்பட்டார் ஹபீப் (ரலி) அவர்கள்.

قال مسيلمة لـ حبيب:
" أتشهد أن محمدا رسول الله..؟
وقال حيب:
نعم أشهد أن محمدا رسول الله.
وكست صفرة الخزي وجه مسيلمة وعاد يسألأ:
وتشهد أني رسول الله..؟؟
وأجاب حبيب في سخرية قاتلة:
اني لا أسمع شيئا..!!

ஏளனத்தோடு, ஏறிட்டுப்பார்த்த முஸைலமா முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்த ஹபீப் (ரலி) அவர்களை நோக்கிமுஹம்மத் யார்? அவர் அல்லாஹ்வின் தூதரா? என்று கேட்டான்.

ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி சுட்டெரிக்கும் பார்வையில்நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லைஎன்று நக்கலாக அதே நேரத்தில், முகத்தில் வெளிக்காட்டாமல் பதில் கூறினார் ஹபீப் (ரலி) அவர்கள்.

وتحوّلت صفرة الخزي على وجه مسيلمة الى سواد حاقد مخبول..
لقد فشلت خطته، ولم يجده تعذيبه، وتلقى أمام الذين جمعهم ليشهدوا معجزته.. تلقى لطمة قوية أشقطت هيبته الكاذبة في الوحل..
هنالك هاج كالثور المذبوح، ونادى جلاده الذي أقبل ينخس جسد حبيب بسنّ سيفه..
ثم راح يقطع جسده قطعة قطعة، وبضعة بضعة، وعضوا عضوا..
والبطل العظيم لا يزيد على همهمة يردد بها نشيد اسلامه:
" لا اله الا الله محمد رسول الله"..

முகம் வெளுத்தது முஸைலமாவிற்கு. சினத்தின் உச்சத்திற்கே சென்ற அவன்அவர் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்என ஆணை பிறப்பித்தான்.

உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டு, ஹபீப் அவர்களின் கண்முன்னே கிடக்கிறது. அருகில் வந்தான் முஸைலமா, என்ன ஹபீபே! இப்போதும் முஹம்மத்  அல்லாஹ்வின் தூதர் தான் என்று சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

குருதி வழிந்தோடினாலும் ஈமானிய சுருதி குறையாமல்ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

மீண்டும், முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கிநான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

ஹபீப் (ரலி) அவர்கள் முன்பு போலவே, “நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லைஎன்று உறுதி படக்கூறினார்.

ஹபீப் (ரலி) அவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியும் இவ்வாறே துண்டு, துண்டாக வெட்டப்படுகின்றது.

இந்த உரையாடலும் தொடர்கின்றது. முக்கால் வாசி உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.

அல்லாஹ் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகின்றேன்.” என்று கூறியவாறே அவரின் இறுதி மூச்சும் பிரிந்தது.

இன்னா லில்லாஹ்…. அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!

ولكن الرجل الذي شهد مع أبيه، وأمه، وخالته، وأخيه بيعة العقبة، والذي حمل منذ تلك اللحظات الحاسمة المباركة مسؤولية بيعته وايمانه كاملة غير منقوصة، ما كان له أن يوازن لحظة من نهار بين حياته ومبدئه..

இதே ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்கள்தமது தாயார் உம்மு உமாரா (ரலி) – நுஸைபா பிந்த் கஅப், தமது தந்தை ஜைத் மற்றும் தமது சகோதரர் அப்துல்லாஹ் ஆகியோரோடு, குடும்பம் சகிதமாக  தமது 12 –ஆம் வயதில் இரண்டாம் அகபாவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருக்கரத்தில்….

( على السمع والطاعة في النشاط والكسل .
وعلى النفقة في العسر واليسر .
وعلى الأمر بالمعروف والنهي عن المنكر .
وعلى أن تقوموا في الله، لا تأخذكم في الله لومة لائم .

 இன்பத்திலும், துன்பத்திலும் நாங்கள் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் கட்டுப்படுவோம்; வசதியிலும், வசதியின்மையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோம்; நன்மையை ஏவுவோம், தீமையைத் தடுப்போம்; அல்லாஹ்வுக்காகவும், உங்களுக்காகவும் எப்போதும் நாங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்போம்; எவரின் பழிப்பையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்; ஆட்சி, அதிகாரத்திற்காக நாங்கள் எவரிடமும் சண்டையிட மாட்டோம்.” என உறுதிமொழி (பைஅத் - பிரமாணம்) கொடுத்திருந்தார்கள்.

                ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, இப்னு ஹிஷாம் )

ஆம்! அன்று, “நபியே! உங்களுக்காக உயிரையும் அர்ப்பணிப்பேன்என்று கூறினார்கள் அல்லவா? இதோ அர்ப்பணித்து விட்டார் தம் உயிரை

அன்று வரை இஸ்லாமிய உலகு இறை மார்க்கத்திற்காக உடலைத் தந்தவரை கண்டிருந்தது. உயிரைத் தந்தவரை கண்டிருந்தது. ஆனால், அன்று தான் முதன் முதலாக கண்ட துண்டமாய், அங்கம் அங்கமாய் உயிரைத் தந்தவரைக் கண்டது.

ஹபீப் (ரலி) அவர்கள் ஈமானை விட உயர்வாக உயிரை விரும்பியிருந்தால், அவர் விரும்பியவாறு தம் வாழ்வைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

ஆனால், அவரின் இதயத்தின் ஊடாக, இரத்த நாளங்களின் வழியாக ஈமானிய உணர்வு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களின் ஈமானின் நிலையை என்னவென்பது? அவர்களின் ஈமானிய தரத்தை எந்த உரைகல் கொண்டு உரசிப்பார்ப்பது?

சன்மானம் வேண்டாம் நபியே! வீர மரணம் தான் வேண்டும் நபியே!

وعن شداد بن الهاد:
أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله وسلم فآمن به واتبعه، ثم قال أهاجر معك فأوصى به النبي صلى الله عليه وسلم بعض أصحابه، فلما كانت غزوة غنم النبي صلى الله عليه وسلم سبياً فقسم وقسم له فأعطى أصحابه ما قسم له، وكان يرعى ظهرهم، فلما جاء دفعوه إليه فقال: ما هذا؟ قالوا: قسم قسمه لك النبي صلى الله عليه وسلم فأخذه فجاء به إلى النبي صلى الله عليه وسلم، فقال: ما هذا؟ قال: قسمته لك قال: ما على هذا اتبعتك، ولكني اتبعتك على أن أرمى إلى ها هنا وأشار إلى حلقه بسهم فأموت فأدخل الجنة، فقال: إن تصدق الله يصدقك. فلبثوا قليلاً ثم نهضوا في قتال العدو فأتي به النبي صلى الله عليه وسلم يحمل قد أصابه سهم حيث أشار، فقال النبي صلى الله عليه وسلم أهو هو قالوا: نعم، قال: صدق الله فصدقه: ثم كفنه النبي صلى الله عليه وسلم في جبة النبي صلى الله عليه وسلم ثم قدمه عليه، فكان فيما ظهر من صلاته اللهم هذا عبدك خرج مهاجراً في سبيلك فقتل شهيداً أنا شهيد على ذلك.
رواه النسائي

ஷத்தாத் இப்னுல் ஹாதி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு கிராமவாசி அண்ணலாரின் சபைக்கு வந்தார். ஈமான் கொண்டார். அழகிய முறையில் அண்ணலாரின் வழியில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் போருக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த வேளையில், அந்த கிராமவாசி அண்ணலாரிடம் வந்துஅல்லாஹ்வின் தூதரே! நானும் உங்களோடு போருக்கு வருகிறேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனாலும் அவரை நபி {ஸல்} அவர்கள் படைவீரர்களின் ஒட்டகை மற்றும் குதிரைகளுக்கு தீனி போடும் பணியில் அமர்த்தினார்கள்.

அந்த யுத்தம் ஏராளமான ஃகனீமத் பொருட்களோடு வெற்றி கொள்ளப்பட்டது. பின்னர் படை வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஃகனீமத் பொருளை அண்ணலார் பங்கு வைத்து கொடுத்தார்கள்.

ஒரு பங்கை அந்த கிராமவாசிக்கும் கொடுத்து அனுப்பினார்கள். அவரிடம் ஒரு நபித்தோழர் கொண்டு சென்று கொடுத்த போது, இது என்ன? என்று அவர் கேட்டார்.

இது ஃகனீமத் பொருள், நபி {ஸல்} அவர்கள் உம்மிடம் கொடுக்கச் சொன்னார்கள்என்று அந்த ஸஹாபி கூறினார்.

அதைப் பெற்றுக் கொண்ட அந்த கிராமவாசி நேராக அண்ணலாரிடம் வந்து, அண்ணலாரின் கையில் கொடுத்து விட்டுஅல்லாஹ்வின் தூதரே! இந்த செல்வத்திற்காக நான் உங்களைப் பின்பற்றவில்லை! சத்திய சன்மார்க்கத்தில் நான் நுழைந்ததன் காரணம் எது தெரியுமா? என்று கூறிய அவர், தமது நெஞ்சத்தின் மீது கை வைத்துஇந்த இடத்தில் அம்பு தைத்து வீர மரணம் அடைந்து, அதன் மூலம் நான் சுவனப்பேற்றை அடைந்து கொள்ள வேண்டும்என்ற உயரிய நோக்கத்தில் தான்என்று கூறினார்.

அது கேட்ட, பூமான் நபி {ஸல்} அவர்கள்உம்முடைய வார்த்தையில் உண்மை இருக்குமானால் அல்லாஹ் அதை உண்மை படுத்துவான்எனக் கூறினார்கள்.

மீண்டும் ஒரு யுத்தம் நடைபெற்றது. அதில் அந்த கிராமவாசியும் கலந்து கொண்டார். இப்போது அவர் வீரராக களம் கண்டார்.

யுத்தம் முடிந்து, வீரமரணம் அடைந்தவர்களின் உடலை கணக்கெடுத்த போது அங்கே அவர் எந்த இடத்தைச் சுட்டிக்காட்டி தாம் வீர மரணம் அடைய விரும்புவதாக கூறினாரோ இப்போது அதே இடத்தில் அம்பு தைத்து வீரமரணம் அடைந்திருந்தார்.

அதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் நபித்தோழர்களை நோக்கிஅன்று நம்மிடம் இவ்வாறெல்லாம் கூறினாரே அவரா இவர்?” என்று கேட்டார்கள்.
நபித்தோழர்கள் ஆம் என்று கூறியதும், ”அவர் உண்மையையே உரைத்திருக்கின்றார்! அல்லாஹ்வும் அதை உண்மை படுத்தி விட்டான்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பின்பு, அண்ணலார் {ஸல்} அவர்கள் தங்களது புனித மேலாடையை கழற்றி அவருக்கு கஃபன் ஆடையாக அணிவித்தார்கள்.

பின்பு வானை நோக்கி கையை உயர்த்திஇறைவா! இதோ இவர் உன்னுடைய அடிமை! உனக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டார். இதோ உன் பாதையிலே வீர மரணம் அடைந்திருக்கின்றார்! அவரின் இந்த ஷஹாதாவிற்கு நான் சாட்சியாவேன்!” என்று பிரார்த்தித்தார்கள்.

          ( நூல்: நஸாயீ, அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா லில் அல்பானீ )

ஈமானில் ஊனமில்லைஆனால்?

அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) கண்பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி, இஸ்லாமிய ஜோதியை ஆரம்பத்திலேயே இதயத்தில் சுடர் விடச் செய்த பாக்யசாலி.

قال أنس رضى الله عنه " إن جبريل أتى رسول الله صلّى الله عليه وسلم وعنده ابن ام مكتوم فقال له متى ذهب بصرك قال وانا غلام فقال جبريل الأمين له : قال الله تبارك وتعالى : إذا ما أخذت كريمة عبدى لم أجد له بها جزاء الا الجنة ، هكذا وعد الله إبن أم مكتوم بالجنة وبشره بها جبريل عليه السلام.

 البداية والنهاية أبو الفداء الحافظ بن كثير

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் பொழுது அண்ணலார் சபையில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அப்போது அங்கே இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள் தங்களருகே இப்னு உம்மி மக்தூம் அவர்களை அழைத்து, ”அப்துல்லாஹ் அவர்களே உங்களின் பார்வை பிறவியிலேயே இப்படியா? அல்லது இடையிலே ஏற்பட்ட ஏதேனும் கோளாரில் பார்வை பரிபோனதா?” என்று அன்பொழுக விசாரித்தார்கள்.

அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தாம் சிறுவயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு சூழ்நிலையில் பார்வை பறிபோனதாக தெரிவித்தார்கள்.

அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள், நபிகளாரிடம்சங்கையான என்னுடைய அடியானிடம் இருந்து நாம் ஏதேனுமொரு அருட்கொடையை எடுத்துக் கொண்டோம் எனில், அதற்குப் பகரமாக நாம் சுவனத்தைத் தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதில்லைஎன்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்களால் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றை அடைந்த மாபெரும் நபித்தோழர்.

وكان رسول الله يستخلفه على المدينة المنورة في غزواته فيصلي بالناس ويرعى شؤونهم وقد استخلفه ثلاث عشرة مرة في الأبواء وبواط وذي العشيرة، وغزوته في طلب كرز بن جابر، وغزوة السويق، وغطفان، وفي غزوة أحد، وحمراء الأسد، ونجران، وذات الرقاع، وفي خروجه إلى حجة الوداع، وفي خروجه إلى بدر

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் கிட்டத்தட்ட பதிமூன்று முறை மதீனாவின் தற்காலிக அமீராக நியமிக்கப் பெற்ற சிறப்பு வாய்ந்த நபித்தோழர்.

في أعقاب غزوة بدر أنزل الله على نبيه صلى الله عليه وسلم

من آي القرآن ما يرفع شأن المجاهدين ويفضلهم على القاعدين ،

لينشط المجاهد إلى الجهاد ، ويأنف القاعد من القعود ، فأثر ذلك

في نفس ابن أم مكتوم رضي الله عنه وعز عليه أن يُحرم من ذلك الفضل وقال:

( يا رسول الله لو أستطيع الجهاد لجاهدت )

ثم سأل الله بقلب خاشع أن ينزل القرآن في شأنه وشأن أمثاله

ممن تعوقهم عاهاتهم عن الجهاد ، فهو بحكم عاهته محروم من

هذه العبادة العظيمة ، فكان يتألم وكان يبكي ، وكان يسأل

النبي صلى الله عليه وسلم ، أن يسأل ربه أن ينزل قرآنا في

شأن ابن أم مكتوم رضي الله عنه المعذور ، وشأن أمثاله ممن

تعوقهم عاهاتهم عن الجهاد ، وجعل يدعو في ضراعة :

( اللهم أنزل عذري ، اللهم أنزل عذري )

فما أسرع أن استجاب الله سبحانه لدعائه ، حدث زيد بن ثابت

رضي الله عنه كاتب وحي رسول الله صلى الله عليه وسلم فقال :

( كنت إلى جنب الرسول صلى الله عليه وسلم ، فغشيته السكينة ،

ونزل عليه الوحي ، فلما سُري عنه قال : " اكتب يا زيد "

فكتبت : (( لا يستوي القاعدون من المؤمنين ))

فقام ابن أم مكتوم وقال :

( يا رسول الله فكيف بمن لا يستطيع الجهاد ؟ )

قال فما انقضى كلامه حتى غشيت رسول الله صلى الله عليه

وسلم السكينة ، ولما سُري عنه قال : " اقرأ ما كتبته يا زيد "

فقرأت (( لا يستوي القاعدون من المؤمنين ))

قال : اكتب (( غير أولي الضرر ))

فكأن من إكرام الله سبحانه أن يستجيب لهذا الصحابي الجليل ،

பத்ர் யுத்தம் முடிவடைந்து, பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்த சிறப்புகளை கேள்விபட்டு அந்த சிறப்புக்களை தம்மால் அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடும், பத்ரில் கலந்து கொள்ளாதவர்களை அல்லாஹ் விமர்சித்து இறைவசனம் இறக்கியருளியுள்ளான் என்பதைக் கேள்விபட்டு ஒரு வித நடுக்கத்தோடும் நபிகளாரின் அவைக்கு நபிகளாரைக் காண வருகை தந்தார்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என்னால் இயலுமானால் நானும் போரில் கலந்து கொண்டிருப்பேனே!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தன் இயலாமையை முறையிட்டார்கள்.

பின்னர், வானை நோக்கி கையை உயர்த்தியாஅல்லாஹ் என் விஷயத்திலும், என் போன்ற இயலாதவர்களின் நிலை குறித்தும் நீ உன் திருமறையில் வசனம் ஒன்றை இறக்கியருள வேண்டும்என அல்லாஹ்விடம் அழுது மன்றாடினார்கள்.

உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 95 –ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.

அத்தோடு நின்று விட வில்லை அவர்களின் ஈமானிய உணர்வினால் உந்தப்பட்ட அவர்களின் ஜிஹாதின் மீதான ஆர்வம்.

وظيفتها في ساحات القتال فكان يقول

( أقيموني بين الصفين ، وحملوني اللواء أحمله لكم وأحفظه

فأنا أعمى لا أستطيع الفرار
)

எப்பொழுதெல்லாம் யுத்த களங்களை நோக்கி நபித்தோழர்கள் செல்வார்களோ, அப்பொழுதெல்லாம்என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்! இரண்டு படைகளுக்கு மத்தியில் என்னை நிறுத்தி முஸ்லிம்களின் கொடியை என் கையில் தாருங்கள்.

நான் கண்பார்வையை இழந்தவன் என்பதால் எந்த பேராபத்தைக் கண்டும் அஞ்சவோ, புறமுதுகிட்டு ஓடவோ என்னால் முடியாது. என் உடலில் உயிர் இருக்கும் வரை கொடியைக் கீழே வீழ்ந்திடாமல் காத்திடுவேன்என்று கூறுவார்கள்.


في السنة الرابعة عشرة للهجرة ، عقد عمر بن الخطاب

رضي الله عنه العزم على أن يخوض مع الفرس معركة

فاصلة تزيل دولتهم وتزيل ملكهم ، وتفتح الطريق أمام

جيوش المسلمين ، فأمر الفاروق رضي الله عنه على الجيش

الكبير سعد بن أبي وقاص ، ووصاه وودعه ، ولما بلغ الجيش

القادسية ، برز عبد الله بن أم مكتوم رضي الله عنه لابسا درعه

مستكملا عدته ، وندب نفسه لحمل راية المسلمين والحفاظ

عليها أو الموت دونها ، والتقى الجمعان في أيام ثلاثة قاسية

عابسة ، فكانت حربا لم يشهد لها تاريخ الفتوح مثيلا ،

حتى انجلى الموقف في اليوم الثالث عن نصر مؤزر للمسلمين ،

وكان ثمن هذا النصر المبين مئات الشهداء ، وكان من بين

هؤلاء الشهداء عبد الله بن أم مكتوم رضي الله عنه ، فقد وجد

صريعا مضرجا بدمائه وهو يعانق راية المسلمين

ஹிஜ்ரி 14 –ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் ஸஅத் இப்னு வக்காஸ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் படையை பாரசீகத்தை நோக்கி அனுப்பினார்கள். அதுவே காதிஸிய்யா யுத்தம் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இஸ்லாமிய வரலாறு அதுவரையிலும் காணாத உக்கிரமமான போர் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக கடும் பின்னடைவயும் பெருமளவிலான இழப்பையும் முஸ்லிம் படையினர் சந்தித்தனர்.

அதில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கவச உடையணிந்து இஸ்லாமியக் கொடியை ஏந்தி நின்றார்.

மூன்றாம் நாளின் பிற்பகலில் இருந்து முஸ்லிம்களின் கை ஓங்க ஆரம்பித்து, அது வெற்றியோடு முடித்து வைக்கப்பட்டது.

இந்தப்போரில் வீரத் தியாகிகளின் உடல்களை வீரர்கள் கணக்கெடுக்கும் போது, அங்கே ஓரிடத்தில் உடலெங்கும் பலத்த காயங்களுடன் இரத்தத்தில் துவைந்து போன நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் ஷஹீதாகி கிடந்தார்கள்.

ஆனால், அவரின் இரண்டு கரங்களும் முஸ்லிம்களின் கொடியை மார்போடு கட்டித்தழுவிய நிலையில் இறுக்க பிடித்திருந்தன.

        அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!

( நூல்: ரிஜாலுன் அன்zஜலல்லாஹு ஃபீஹிம் குர்ஆனா லி இமாமி அப்துர்ரஹ்மான் உமைரா, தபகாத்துல் குப்ரா லி இமாமி இப்னு ஸஅத், தாரீகுல் இஸ்லாம் லி இமாமி அத்தஹபீ )

உடலில் தான் ஊனமிருந்ததே தவிர, ஈமானில் இல்லை. ஒரு இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு அல்லாஹ்விற்காக, ஈமானுக்காக ஏதேனும் ஒரு அமலை அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் எந்த அளவு அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள் என்பதை மேற்கூறிய வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே, மடையன் கூட விக்கலுக்கு விஷம் குடிக்க மாட்டான். ஏதோ ரேஷன் கார்டுக்காகவும், ஆதார் அடையாள அட்டைக்காகவும் ஒரு சிலர் ஈமானை இழக்க நேரிட்டதை நினைத்து, அவர்களுக்காக பரிதாபப்பட வேண்டாம்.

இது அரசியல் சதி, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர மோடி அரசு திட்டமிடுகிறது என்ற அரசியல் பார்வையும் வேண்டாம்.

வாழும் காலத்திலும், வாழ்வின் இறுதியிலும் அல்லாஹ் நமக்கு வழங்கிய பேரருளான ஈமானை பாதுகாத்திடும் வழிகளை நோக்கி பயணிப்போம்!

தடம் பதித்து நடக்க வேண்டிய நாம், தடம் மாறிச் சென்றிடும் பாதைகளை கண்டறிந்து, தடைகளை தகர்த்தெறிந்து ஈமானிய உணர்வோடு வாழ்வோம்!

எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.”

“இதயங்களை புறட்டக்கூடியவனே! எங்களின் இதயத்தை உன் சத்திய மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக!”

அல்லாஹ்வே! உன்னிடம் நாங்கள் நிலையான, தடம் மாறிப்போய் விடாத ஈமானையும், அழிந்து போகாத அருட்கொடைகளையும், உயர்வான சுவனத்தில் முஹம்மத் {ஸல்} அவர்களோடு என்றென்றும் தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கின்றோம்

    ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! 

4 comments:

  1. காலத்திற்கு ஏற்ப அருமையான கருத்து பேழை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete