Tuesday 13 January 2015

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறன்! பாகம் – 2



அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறன்!
பாகம் – 2





அகிலத்தார்களை வியக்க வைத்த அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறன் குறித்து நாம் பேசி வருகின்றோம்.

யங் இந்தியா எனும் நூலை எழுதிய மகாத்மா காந்தி தன்னுடைய நூலில் ஓரிடத்தில்….

"I wanted to know the best of one who holds today undisputed sway over the hearts of millions of mankind...
I became more than convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet, the scrupulous regard for his pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission.
These and not the sword carried everything before them and surmounted every obstacle. When I closed the 2nd volume (of the Prophet's biography), I was sorry there was not more for me to read of the great life."

                                                                                   ( Mahatma Gandhi, says in 'Young India')
  
மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மனித மனங்களில் எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இன்று வரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட, வாசித்துப் பார்த்திட ஆவல் கொண்டு, முஹம்மது நபியின் வாழ்க்கையை படித்தறிய முற்பட்டேன்.

இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாகவே நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் எளிமை, தம்மை உயர்வாகக் கருதாத உயர்பண்பு, எல்லா நிலைகளிலும் வாக்குறுதி பேணிய தன்மை, தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் அவரது பிரச்சாரத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஆகிய ஆளுமைகள் தான் அவரது இமாலய வெற்றிக்கு காரணங்கள்.

இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும், அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றிக்கு வித்திட்டன.

அவரது மகத்தான வெற்றிக்கு இந்த ஆளுமை தான் காரணமே தவிர வாள் பலம் அல்ல.

                       (Young India, Quoted In The Light, Lahore For 16th September 1924)

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் ஆளுமைத்திறனே இஸ்லாத்தின் வியக்கத்தக்க வெற்றிக்கு வித்திட்டதாக தேசத்தந்தை காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான சில தருணங்களில் அபாரமான சில முடிவுகளை மேற்கொண்டார்கள் என்று நாம் முன்பு குறிப்பிட்டோம்.

அதற்கு அண்ணலாரின் அறிவு சார்ந்த ஆளுமையும், முடிவெடுக்கும் திறனும் – Decision making skill, சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் – Problem Solving Skill தான் துணை நின்றது என்றால் அது மிகையல்ல என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இதில் , சிக்கல்களைத் தீர்க்கும் திறன் – Problem Solving Skill என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

பொதுவாகவே, சிக்கலான சந்தர்ப்பங்களில் நாம் மேற்கொள்ளும் முடிவுகள் சில போது நமக்கே பாதகமாக அமையும் வாய்ப்பு உண்டு.

அது போன்ற தருணங்களில் அறிவு சார்ந்த ஆளுமையை பெற்றிருப்பவர்கள் தம்மோடு இருப்பவர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்பதை அண்ணலார் இந்த அவனிக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

அறிவு சார்ந்த ஆளுமையில் முழுத்திறனையும் பெற்றிருந்த நபி {ஸல்} அவர்கள் பல்வேறு தருணங்களில் தங்களின் தோழர்களோடு, மனைவியரோடு ஆலோசனை செய்திருக்கின்றார்கள். அதை நடைமுறைப் படுத்தியும் இருக்கின்றார்கள்.

பத்ர் யுத்தம் இஸ்லாம் இந்த அவனியில் நிலைத்திருப்பதற்காக தங்களின் உயிரையும், உடமைகளையும் துச்சமெனக்கருதி கன்னிக் களம் கண்ட முதல் நிலை தியாகிகளை சுமந்த யுத்தமாகும்.

قال بن إسحاق فحدثت عن رجال من بن سلمة أنهم ذكروا أن الحباب بن المنذر بن الجموح قال يا رسول الله أرأيت هذا المنزل أمنزلا أنزلكه الله ليس لنا أن نقدمه ولا نتأخر عنه أم هو الرأي والحرب والمكيدة
قال بل هو الرأي والحرب والمكيدة فقال يا رسول الله فأن هذا ليس بمنزل فانهض بالناس حتى نأتي أدنى ماء من القوم فننزله ثم تغور ما وراءه من القلب ثم نبنبي عليه حوضا فنملؤه ماء ثم نقاتل القوم نفشرب ولا يشربون فقال رسول الله صلى الله عليه وسلم لقد أشرت بالرأي فنهض رسول الله صلى الله عليه وسلم ومن معه من الناس فسار حتى إذا أتى أدنى ماء من القوم نزل عليه ثم أمر بالقلب فغورت وبني حوضا على القلب الذي نزل فملىء ماء ثم قذفوا فيه الآنية .

இணைவைப்பாளர்கள் வருவதற்குள் பத்ர் திடலுக்கருகில் உள்ள நீர்நிலைகளை கைப்பற்றி அங்கே முகாமிட வேண்டும் என்ற தீராத வேகத்தோடு படைவீரர்களை அழைத்து வந்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.

பத்ரின் நீர் நிலைகள் பலதைக் கடந்து குறிப்பிட்ட ஓர் நீர் நிலைக்கு அருகே வந்த அண்ணலார் அங்கே தங்குமாறு தோழர்களுக்கு ஆணையிடுகின்றார்கள்.

அப்போது, அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரலி) எனும் நபித்தோழர் நபிகளாரின் முன் வந்து நின்றுஅல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்குவதற்கு ஆணையிட்டதன் பிண்ணனியை கூறவேண்டும்.

நாம் இந்த இடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் ஆணையிட்டு இருக்கின்றானா? அல்லது உங்களின் மேலான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் இது அல்லாஹ்வின் ஆணை இல்லை. மாறாக, இது என்னுடைய யோசனையும், போர் தந்திரமும் தான்என்றார்கள்.

அப்போது, அல்ஹுபாப் (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால், இது நாம் தங்குவதற்கு ஏற்ற இடமல்ல. உடனடியாக நாம் இங்கிருந்து புறப்பட்டு குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகே சென்று, அங்கு தங்குவோம்.

பின்னர் அனைத்து நீர் நிலைகளையும் அழித்து விடுவோம். மேலும், அங்கே நாம் நமக்காக ஓர் பிரத்யேகமான ஓர் நீர்த்தடாகத்தை உருவாக்குவோம். அதில் நீர் கொண்டு முழுவதையும் நிரப்பி விடுவோம்.

நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். ஆனால், அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காதுஎன்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக அங்கிருந்து கிளம்பி, எதிரிகளுக்கு மிகச் சமீபமாக வந்திறங்கி, சிறு, சிறு நீர்த்தேக்கங்களை தயார் செய்யுமாறும், அதில் நீரை நிரப்புமாறும் உத்தரவிட்டார்கள்.

பின்பு, தங்களருகே அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரலி) அவர்களை அழைத்த அண்ணலார்தோழரே! நிச்சயமாக நீர் ஓர் அழகிய ஆலோசனையையே கூறினீர்என்று முகமும் அகமும் மலர்ந்து வாழ்த்தினார்கள்.

                                    ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

وشاورهم في أحد في أن يقعد في المدينة أو يخرج إلى العدو، فأشار جمهُورُهم بالخروج إليهم، فخرج إليهم.


உஹத் யுத்த ஆயத்தத்தின் போது எதிரிகளை எங்கிருந்து எதிர்கொள்வது, மதீனாவின் உள்ளிருந்தா? அல்லது ஊருக்கு வெளியே சென்று படை நடத்தி எதிரிகளை களம் காணுவதா? அப்போது நபிகளாரின் எண்ணமும், சில நபித்தோழர்களின் எண்ணமும் ஊருக்குள் இருந்தே எதிரிகளை எதிர்கொள்வது என்பதாகத்தான் இருந்தது.

ஆனால், அது உகந்த முடிவு அல்ல, முஸ்லிம்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் என அண்ணலாரிடம் தெரிவித்த போது தங்களின் முடிவை கை விட்டு, தோழர்களில் சிலர்கள் தந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

                                                      ( நூல்: இப்னு கஸீர் )

وشاورهم يوم الخندق في مصالحة الأحزاب بثلث ثمار المدينة عامئذ، فأبى عليه ذلك السَعْدَان: سعدُ بن معاذ وسعدُ بن عُبَادة، فترك ذلك.

فلما سمع رسول الله صلى الله عليه وسلم بمسيرهم أمر المسلمين بحفر الخندق حول المدينة مما يلي الشرق  ، وذلك بإشارة سلمان الفارسي، فعمل المسلمون فيه واجتهدوا، ونقل معهم رسول الله صلى الله عليه وسلم التراب وحفَر.

அஹ்ஸாப் யுத்தத்திற்காக, எதிரிகள் ஒன்று கூடி மாபெரும் அணியாக ஒன்று திரண்டு வருகிறார்கள் எனும் செய்தி அண்ணலார் {ஸல்} அவர்களுக்குத் தெரிய வந்த போது, நபித்தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்வேண்டுமானால் எதிரிகளுக்கு நாம் இந்த ஆண்டு மகசூலில் மூன்றில் ஒரு பகுதியைத் தருவதாகக் கூறி, அவர்களின் படையெடுப்பைத் தடுத்திடுவோம்என்று ஆலோசனையை கூறினார்கள்.

அதற்கு, ஸஅத் இப்னு முஆத், ஸஅத் இப்னு உப்பாதா (ரலிஅன்ஹுமா) ஆகியோர் மறுப்புத்தெரிவித்து, எதிரிகளோடு மோதி ஒரு கை பார்த்திடுவோம்என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்எதிரிகளோடு மோதுவது என்று முடிவெடுத்து விட்டால் எந்த ரீதியில் எதிரிகளை அணுகுவது என்று நீங்களே ஆலோசனை சொல்லுங்கள்என்றார்கள்.

அங்கிருந்த ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் எதிரிகளைத் திணறடிக்க தங்களது பாரசீகத்திலே கையாள்கிற அகழ் யுக்தியை கையாள வேண்டும்என்று ஆலோசனை தந்தார்கள்.

அவர்களின் ஆலோசனை ஏற்கப்பட்டு, அகழியும் தோண்டப்பட்டது. அகழி தோண்டும் பணியில் நபி {ஸல்} அவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

                                              ( நூல்: இப்னு கஸீர், குர்துபீ )

2. அண்ணலாரின் {ஸல்} ஆன்மீகம் சார்ந்த ஆளுமை (Spiritual personality)

1. ஆன்மீகத்தின் உச்ச நிலை.

பொதுவாகவே, நபிமார்களைப் பற்றி நாம் ஈமான் கொள்கிற போது நம்மை விட இறைவன் சம்பந்தப்பட்ட எல்லா நிலைகளிலும் நபிமார்கள் அனைவரும் முன்னிலை பெற்றவர்கள், முழுமை பெற்றவர்கள். அதிலும் குறிப்பாக ஆன்மீகத்தின் அத்துனை பகுதிகளிலும் ஆளுமை பெற்றவர்கள் என நாம் உறுதியாக நம்பவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைப் பொறுத்த வரையில் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்திருந்தார்கள்.

حدثنا سعيد بن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرنا حميد ابن أبي حميد الطويل
 : أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول جاء ثلاث رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه و سلم يسألون عن عبادة النبي صلى الله عليه و سلم فلما أخبروا كأنهم تقالوها فقالوا أين نحن من النبي صلى الله عليه و سلم ؟ قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر قال أحدهم أما أنا فإني أصلي الليل أبدا وقال آخر أنا أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه و سلم فقال ( أنتم الذين قلتم كذا وكذا ؟ أما والله أتي لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني )
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி {ஸல்} அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் (அலீ இப்னு அபீ தாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) ஆகியோர் தாம் என ஃபத்ஹுல் பாரியிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.) வந்து நபி {ஸல்} அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர்.

அது பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட போது, அவர்கள் நபி {ஸல்} அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு மூவரும் தங்களுக்குள்ளே அதற்காகச் சமாதானமும் கூறிவிட்டு, “முன் பின் தவறுகள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் ”(இனிமேல்) நான் இரவு முழுவதும் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்என்றார்.

இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்என்றார்.

மூன்றாமவர், “நான் திருமணம் செய்து கொள்ளாமல், பெண்களை விட்டும் ஒதுங்கி இருக்கப்போகிறேன்என்றார்.

இந்த உரையாடலை தங்களது இல்லத்திலே இருந்து கேட்டுக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் வெளியே வந்து தோழர்களை நோக்கிஇன்னின்னவாறு பேசியவர்கள் நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன்.

ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணம் முடித்தும் இருக்கின்றேன்.

ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

    ( நூல்: புகாரி, பாடம், கிதாபுன் நிகாஹ், பாபு அத் தர்ஃகீபு ஃபின் நிகாஹி… )

உலகில் எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாத தன்னுடைய ஆன்மீகத்தின் உச்ச நிலையை, தன்னை விட ஆன்மீகத்தில் உயர்ந்தவர் எவருமில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிபடக் கூறினார்கள்.

2. இறைவனின் உதவியைக் கோராமலே பெற்றுக் கொள்தல்.
இது ஆன்மீகத்தின் இரண்டாம் நிலை. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதருமே தங்களின் வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களிலும் படைத்த வல்லோனின் உதவியும் அருளும் என்றென்றும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவர்.

அந்த நிலைக்காக சதா இறைவனிடம் இறைஞ்சிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் தனக்காக, தன் தேவையை விண்ணப்பிக்காமல் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏராளமான உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.

இதுவும் அண்ணலார் {ஸல்} அவர்கள் ஆன்மீகம் சார்ந்த ஆளுமையில் முழுமை பெற்றிருந்ததையே பறை சாற்றுகின்றது.

நபிமார்கள் கேட்டு அல்லாஹ் வழங்கியதும்நபி {ஸல்} அவர்கள் கேட்காமலே அல்லாஹ் வழங்கியதும்

1. பாவமன்னிப்பு.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சமூகத்தார்களிடத்தில் அல்லாஹ்வின் வல்லமையை விவரிக்கும் போது

الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ () وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ () وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ () وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ () وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

அவன் எத்தகையவன் என்றால், அவன் தான் என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழியும் காட்டுகின்றான். அவன் தான் எனக்கு உண்ணவும் பருகவும் தருகின்றான். நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான். அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான்.

மேலும், கூலி கொடுக்கும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்று கூறினார்கள்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا ()

என் இரட்சகனே! எனக்கும், என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாய் பிரவேசித்திருக்கும் ஒவ்வொருவருக்கும், மேலும், இறைநம்பிக்கை கொண்டிருக்கிற ஆண்பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்குவாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்து விடாதே!” என்று பிரார்த்தித்தார்.

ஆனால், நபி {ஸல்} அவர்கள் விஷயத்தில் அல்லாஹு தஆலா நபிகளார் கேட்காமலேயே தன் புறத்திலிருந்து மன்னிப்பை வழங்கினான்.

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا () لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا () وَيَنْصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا ()

“(நபியே!) நாம் உமக்கு மிகத் தெளிவான வெற்றியை வழங்கியிருக்கின்றோம். உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தன் அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும், இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும் தான்!”

இங்கே ஒரு விஷயத்தை ஆழமாக நாம் நம் மனதினில் பதிவு செய்ய வேண்டும். அதாவது நபிமார்கள் பாவங்கள் செய்வதில் இருந்தும் அல்லாஹ்வால் பாதுகாக்கப் பட்டவர்கள்.

எனினும், தங்களின் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதற்காகவே இது போன்று அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தித்து இருக்கின்றார்கள்.

ஆதலால், நபிமார்களோ, நபி {ஸல்} அவர்களோ பாவம் செய்தார்கள் என சொல்வதும், நம்புவதும் ஈமானில் குறைபாடுகளை ஏற்படுத்தி விடும்.

2. மறுமையின் இழிவிலிருந்து பாதுகாப்பு.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ () وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ () وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ () وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ () وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ()

என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத் திறனை வழங்குவாயாக! மேலும், நீ என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக! மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக! மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக! மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார்.

மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே!” என்று இறைஞ்சினார்.

ஆனால், நபி {ஸல்} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்

يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ

அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய நபியையும், தன்னுடைய நபியைக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களையும் ஒரு போதும் இழிவு படுத்தமாட்டான்என்று கூறுகின்றான்.

3. அல்லாஹ் பாதுகாப்பான் எனும் உத்தரவாதம்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்ரூத் எனும் கொடிய அரசனால் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது அல்லாஹ்விடத்தில் இப்படி பிரார்த்தித்தார்களாம்….

قال ابن إسحاق: وجمعوا الحطب شهرا ثم أوقدوها، واشتعلت واشتدت، حتى أن كان الطائر ليمر بجنباتها فيحترق من شدة وهجها. ثم قيدوا إبراهيم ووضعوه في المنجنيق مغلولا. ويقال: إن إبليس صنع لهم المنجنيق يومئذ. فضجت السموات والأرض ومن فيهن من الملائكة وجميع الخلق، إلا الثقلين ضجة واحدة: ربنا! إبراهيم ليس في الأرض أحد يعبدك غيره يحرق فيك فأذن لنا في نصرته. فقال الله تعالى:" إن استغاث بشيء منكم أو دعاه فلينصره فقد أذنت له في ذلك وإن لم يدع غيري فأنا أعلم به وأنا وليه" فلما أرادوا إلقاءه في النار، أتاه خزان الماء- وهو في الهواء- فقالوا: يا إبراهيم إن أردت أخمدنا النار بالماء. فقال: لا حاجة لي إليكم. وأتاه ملك الريح فقال: لو شئت طيرت النار. فقال: لا. ثم رفع رأسه إلى السماء فقال:" اللهم أنت الواحد في السماء وأنا الواحد في الأرض ليس أحد يعبدك غيري حسبي الله ونعم الوكيل".

அல்லாஹ்வே! வானில் நீ ஒருவனாக இருக்கின்றாய்! பூமியில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்! ஆம்! உன்னை வணங்க என் அல்லாத ஒருவரும் இப்பூமியில் இப்போது இல்லை! அல்லாஹ்வே! நீயே எனக்குப் போதுமானவனாக இருக்கின்றாய்! பொறுப்புச் சாட்டப்படுபவர்களில் நீயே மிகச் சிறந்தவனாக இருக்கின்றாய்!” என்று.

ஆனால், நபி {ஸல்} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்….

يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ ()

நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகிற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்என்று கூறுகின்றான்.

4. உள்ள விசாலம், நிலையான புகழ்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சும் போது

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي () وَيَسِّرْ لِي أَمْرِي () وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي () يَفْقَهُوا قَوْلِي ()

என் இறைவா! என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்வாயாக! மேலும், என் காரியங்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக! நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக!” என்று கோரினார்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ ()

மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!” என்று முறையிட்டார்.

ஆனால், நபி {ஸல்} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ () وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ () الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ () وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ()
“(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா? மேலும், உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்த பெரும் சுமையை உம்மை விட்டு நாம் இறக்கி வைத்தோம். மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்என்று கூறுகின்றான்.

ஆக ஆன்மீகத்தின் ஆளுமையில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முழுமைப் பெற்றிருந்தார்கள் என்பதை மேற்கூரிய எடுத்துக்காட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.

3. அண்ணலாரின் {ஸல்} உளம் சார்ந்த ஆளுமை (Emotional personality)

எத்தகைய ஆற்றல் கொண்ட மனிதனாக இருந்தாலும் உளவியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கும் போது சில போது தோற்றுப்போய் விடுவான்.

ஏனெனில், உள்ளம் என்பது பல்வேறு உணர்வுகளைத் தாங்கியதாகவே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. அங்கே, இரக்கம், கோபம், மகிழ்ச்சி, கவலை, ஏமாற்றம், விருப்பு, வெறுப்பு போன்ற சுபாவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தால் இந்த உலகையே ஒரு உலுக்கு உலுக்கி உலகம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்தவன். ஆனால், உள ஆளுமையில் அவன் ஜீரோவாக இருந்தான். ஆதலால் தான் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

பெருமானார் {ஸல்} அவர்களின் உளம் சார்ந்த ஆளுமை என்பது உலகமே வியந்து போகும் அளவிற்கு வரலாறு எங்கும் வியாபித்து விரவிக்கிடக்கின்றது.

அதில் ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.



1. அஞ்சா நெஞ்சம்.

நபித்துவத்தின் முதல் பத்தாண்டுகள் என்பது, இஸ்லாமும் முஸ்லிம்களும் மாத்திரமல்ல அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் மிகப் பெரிய அளவிலான துன்பங்களையும், சோதனைகளையும் சந்தித்தார்கள்.

அபாரமான நெஞ்சுரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டிருந்த அண்ணலாரின் உள ஆளுமையை உரசிப்பார்க்கும் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் அன்றாடம் இறை விரோதிகளால் அரங்கேற்றப்பட்டு வந்தன.

صعد النبي صلى الله عليه وسلم ذات يوم على الصفا، فعلا أعلاها حجرًا، ثم هتف : ( يا صباحاه )
وكانت كلمة إنذار تخبر عن هجوم جيش أو وقوع أمر عظيم .
ثم جعل ينادى بطون قريش، ويدعوهم قبائل قبائل : ( يا بني فهر، يا بني عدى، يا بني فلان، يا بني فلان، يا بني عبد مناف، يا بني عبد المطلب ) .
فلما سمعوا قالوا : من هذا الذي يهتف ؟ قالوا : محمد . فأسرع الناس إليه، حتى إن الرجل إذا لم يستطع أن يخرج إليه أرسل رسولًا لينظر ما هو، فجاء أبو لهب وقريش .
فلما اجتمعوا قال : ( أرأيتكم لو أخبرتكم أن خيلًا بالوادى بسَفْح هذا الجبل تريد أن تغير عليكم أكنتم مُصَدِّقِىَّ ؟ ) .
قالوا : نعم، ما جربنا عليك كذبًا، ما جربنا عليك إلا صدقًا .
قال : ( إنى نذير لكم بين يدى عذاب شديد، إنما مثلى ومثلكم كمثل رجل رأي العَدُوّ فانطلق يَرْبَأ أهله ) ( أي يتطلع وينظر لهم من مكان مرتفع لئلا يدهمهم العدو ) ( خشى أن يسبقوه فجعل ينادى : يا صباحاه )
ثم دعاهم إلى الحق، وأنذرهم من عذاب الله، فخص وعم فقال :
( يا معشر قريش، اشتروا أنفسكم من الله، أنقذوا أنفسكم من النار، فإنى لا أملك لكم من الله ضرًا ولا نفعًا، ولا أغنى عنكم من الله شيئًا .
ولما تم هذا الإنذار انفض الناس وتفرقوا، ولا يذكر عنهم أي ردة فعل، سوى أن أبا لهب واجه النبي صلى الله عليه وسلم بالسوء، وقال : تبا لك سائر اليوم، ألهذا جمعتنا ؟ فنزلت : { تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ } [ سورة المسد : 1 ] .

தூதுத்துவத்தின் ஒளிப்பிழம்புகளை ஏந்தியவாறு அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்காவின் ஸஃபா மலைக்குன்றின் மீது நின்று கொண்டு யா ஸபாஹா! காலைப் பொழுதை அடைந்தவர்களே! என்று இருமுறை சப்தமிட்டு அழைத்தார்கள்.

பிறகு, குறைஷி குலத்தின் ஒவ்வொரு கிளையார்களின் பெயர் கூறிஃபஹ்ர் கிளையாரே! அதீ கிளையாரே! அப்து மனாஃபின் கிளையாரே! அப்துல் முத்தலிபின் கிளையாரே!” என்று அழைத்தார்கள்.

அண்ணலாரின் அழைப்பை செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என மக்களில் சிலர் தங்களுக்குள் வினவ, முஹம்மத் {ஸல்} அவர்கள் தான் என தங்களுக்குள் பதில் கூறிக்கொண்டனர்.

பெரும்பாலான குறைஷி குலத்தின் கிளையார்கள் அங்கு ஒன்று கூடினர். அங்கே அபூலஹபும் வந்திருந்தான்.

வர இயலாத ஒரு சில கிளையார்கள் தங்களின் சார்பாக ஒருவரை அனுப்பி, முஹம்மத் {ஸல்} அவர்கள் என்ன சொல்கிறார்? என்று கேட்டு வருமாறு அனுப்பினார்கள்.

அனைவரும் வந்து ஒன்று கூடிய பின்னர், அந்த சபையின் முன்பாக நின்ற நபி {ஸல்} அவர்கள்இம்மலைக்குப் பின்னால் உள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காக சில குதிரை வீரர்கள் குழுமியிருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அங்கு நின்றிருந்த அத்துனை பேரும் ஒரே குரலில்ஆம்! உங்களின் வார்த்தையை நம்புவோம்! உறுதியாக, இதுவரை நாங்கள் உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கின்றோம்! நீங்கள் ஒரு போதும் பொய்யுரைத்து நாங்கள் கண்டதில்லைஎன்றனர்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணம் என்ன தெரியுமா? ஒருவர் எதிரிகளைப் பார்த்து அவர்கள் தன்னை முந்திச் சென்று, தனது கூட்டத்தினரைத் திடீரென தாக்கி விடக்கூடாது என்பதற்காக மலை உச்சியில் ஏறி நின்றுயா ஸபாஹாஎன்று அழைக்கிறாரே அவரைப் போன்றவராவேன் நான்.

ஒவ்வொரு கிளையாரின் பெயர்களைக் கூறிய பின்உங்களது உயிர்களை அல்லாஹ்விடமிருந்து அழகிய விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்! உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும், தீமைக்கும் பொறுப்பாளியாக ஆகமுடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எவ்வித பலனையும் அளிக்க இயலாது.

எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உயரிய உறவொன்று எனக்கு இருக்கிறது. உரிய முறையில் இரத்த பந்தத்திற்கான உரிமைகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவேன்என்று கூறி முடித்தார்கள்.

இந்த எச்சரிக்கை உரையை கேட்டு முடித்ததும், கூடி நின்றவர்கள் கலைந்து போக ஆரம்பித்தார்கள்.

அப்போது, அபூலஹப் அண்ணலாரை நோக்கி வந்து இரு கைகள் நிறைய மண்ணை வாரி அண்ணலாரின் மீது போட்டு விட்டு, “நாள் முழுவதும் உமக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை இங்கு நீ ஒன்று கூட்டினாயா?” (நவூது பில்லாஹ்..) என்று கடுமையாக பேசினான்.

அத்துனை கிளையார்கள் முன்னிலையிலும் நபி {ஸல்} அவர்களை அவமானப் படுத்தியதோடல்லாமல், மிகக் கேவலமாக சபிக்கவும் செய்தான் அபூலஹப்.

ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைந்திருந்த அண்ணலார் ஒரு வார்த்தை அல்லது தனது ரப்பிடம் ஒரு மன்றாட்டம் அவ்வளவு தான் அபூலஹபின் கதை முடிந்திருக்கும் ஆனால், நபிகளாரின் மன வலிமை, உள ஆளுமை அங்கிருந்து அமைதியாக வெளியேற வைத்தது.

அம்மக்கள் நபிகளாரை ஊர் விலக்கம் செய்ததைக் கூட அல்லாஹ் கண்டித்து இறைவசனத்தை இறக்கிட வில்லை. ஆனால், அபூலஹபின் சாபத்தை கண்டித்து அதே வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் ஓர் அத்தியாயத்தையே இறக்கியருளினான்.

காரணம் அண்ணலாரின் உள ஆளுமையை அதிகமாகவே உரசிப்பார்த்தது அந்த வார்த்தை தான்.

அண்ணலாரின் மன ஆளுமையும், அமைதியும் எவ்வளவு ஆழமானது என்பதை வல்ல அல்லாஹ் இறைமறை வசனத்தை இறக்கி வைத்து, அல்ல அல்ல ஓர் அத்தியாயத்தை இறக்கி வைத்து இந்த யுகம் இருக்கும் காலமெல்லாம் அது ஓதப்பட்டுக் கொண்டே இருக்கும் ஓர் எற்பாட்டை அல்லாஹ் செய்தான்.

எல்லா வழிகளிலும் அண்ணலாரை அசைத்துப் பார்த்த இறை விரோதிகள் அடுத்து மிக முக்கியமான ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தார்கள்.

ஆம், ”முறையே அண்ணலாரின் மூன்று பெண்மக்கள் மக்காவின் பிரபல்யமான நபர்களின் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தனர். அந்த திருமண உறவைத் துண்டித்து விவாகரத்து வழங்கி வீட்டுக்கு அனுப்பி விட்டால், நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரத்தில் பின்னடைவு ஏற்பட்டு இஸ்லாத்தை விட்டு விடுவார்கள்என்று கருதி வேகமாக களமிறங்கினார்கள்.

குறைஷிகளின் கூட்டம் ஒன்று அபூலஹபைத் தேடிவந்தது. அபூலஹபின் இருமகன்கள் நபிகளாரின் இருமகள்களை திருமணம் செய்திருந்தனர். உத்பா என்பவன் ருக்கையா அவர்களையும், உதைபா என்பவன் உம்மு குல்ஸூம் அவர்களையும் மணம் முடித்திருந்தனர்.

தேடிவந்த குறைஷித் தலைவர்கள் தங்களது திட்டத்தை அபூலஹபிடம் தெரிவித்த போது மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக அங்கீகரித்தான் அபூலஹப். அடுத்து மணமுறிவு பெற்று இருவரும் நபிகளாரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜைனப் அவர்களை அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி மகனான அபுல் ஆஸ் இப்னு அர்ரபீஉ (பின் நாளில் முஸ்லிமானார்கள்) அவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

குறைஷிகளின் கயவர் கூட்டம் அடுத்து அபுல் ஆஸ் அவர்களைத் தேடி வந்தது. தங்களது திட்டத்தை அவரிடம் விவரித்து விட்டு, அபூலஹபின் வானளாவிய சாதனையைச் சொல்லி நீரும் உமது மனைவியை மணவிலக்கு கொடுத்து முஹம்மதின் வீட்டுக்கு அனுப்பி விடும்என்றனர்.

அது கேட்ட அபுல் ஆஸ்எனக்கு என் மாமனாரின் போக்கு பிடிக்கவில்லை தான், அதற்காக என் மனைவியை மண விலக்கு அளிப்பதில் சத்தியமாக எனக்கு துளி அளவு கூட விருப்பம் இல்லை என்று கூறி அவர்களை விரட்டி விட்டார்.

ருகைய்யா, உம்மு குல்ஸூம் ஆகியோரின் மணமுறிவு விவகாரம் அண்ணலாருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சந்தோஷத்தையே தந்தது.

ஆம்! இறைநிராகரிப்பில் மூழ்கியிருந்த அவர்களுக்கு தம் மகள்கள் இருவரும் மனைவியராய் இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்ந்தார்கள். என்ற போதிலும், அப்போது வரை அது சம்பந்தமான இறைச் சட்டம் எதுவும் இறக்கியருளப்பட வில்லை. எனவே, இப்போது ஜைனபையும் விவாகரத்துச் செய்து விட்டால் அதுவும் நன்றாகவே இருக்கும் என நபி {ஸல்} அவர்கள் கருதினார்கள்.

இந்த உள ஆளுமையின் பரிசாக அல்லாஹ் உஸ்மான் (ரலி) அவர்களை அண்ணலாரின் அருமை மருமகனாக தேர்வு செய்து தந்தான். மேலும், அபுல் ஆஸ் அவர்களுக்கு ஈமானை வழங்கி ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்வை அவர்களோடு தொடரச் செய்தான்.

இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், தலைவர்கள் வழி தவறி நடந்திட அடிப்படைக் காரணமே தங்கள் வீட்டு சூழ்நிலைகள் தாம்.

ஆனால், எதிரிகள் எய்த ஆயுதத்தையே காக்கும் கேடயமாக பயன் படுத்தும் மகோன்னதமான உள ஆளுமையை அண்ணலார் {ஸல்} அவர்கள் பெற்றிருந்தார்கள்.

2. நிலைகுலையாத தன்மை.

தொட்டுத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்தால் அவமானங்களில் சிக்குண்டு, பெருமானார் {ஸல்} அவர்கள் தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்து பின்வாங்கி விடுவார்கள் என்ற தப்புக்கணக்கோடு அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாகினர்.

அது தான் ஊர்விலக்கம். அதுவரை எந்த நபியின் சமூகமும் செய்யத்துணியாத ஓர் ஆணவச்செயலை செய்து (புண்ணியத்தை) பாவத்தை தேடிக்கொண்டனர்.

இக்காலகட்டத்தில் அண்ணலாருக்கும், முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய பரவுதலுக்கும் பெரும் அரணாய் விளங்கிய அன்னை கதீஜா (ரலி), அபூதாலிப் ஆகியோரின் மரணம் சம்பவிக்கவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை கவலை மேகங்கள் ஆட்கொள்ள ஆரம்பித்தன.

தோல்விகள், அவமானங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் எனும் இப்பட்டியலில் ஈடு செய்ய முடியாத இந்த இழப்பும் இடம் பெற்றது.

قال بن إسحاق ولما هلك أبو طالب نالت قريش من رسول الله صلى الله عليه وسلم من الأذى ما لم تكن تنال منه في حياة عمه أبي طالب فخرج رسول الله صلى الله عليه وسلم إلى الطائف يلتمس النصرة من ثقيف والمنعة بهم من قومه ورجاء أن يقبلوا منه ما جاءهم به من الله عز وجل فخرج إليهم وحده.


ஒரு வழியாக அதிலிருந்து மீண்டெழுந்து தாயிஃபை நோக்கி பயணமானார்கள் நபி {ஸல்} அவர்கள். ஆனால், தாயிஃபின் தலைவர்களோ குறைஷிகளுக்கு ஒன்றும் நாங்கள் சளைத்தவர்களல்லர் என்பது போல் நடந்து கொண்டனர்.

கொடூரமான கொலைவெறித்தாக்குதல் நடத்தினர். அகிலத்தார்களின் அருட்கொடையை குருதியைக் கொட்டும் மடையாக மாற்றினர்.

وقد روى البخاري تفصيل القصة ـ بسنده ـ عن عروة بن الزبير، أن عائشة رضي الله عنها حدثته أنها قالت للنبى صلى الله عليه وسلم : هل أتى عليك يوم كان أشد عليك من يوم أحد ؟ قال : ( لقيت من قومكِ ما لقيت، وكان أشد ما لقيت منهم يوم العقبة، إذ عرضت نفسي على ابن عبد يالِيل بن عبد كُلاَل، فلم يجبني إلى ما أردت، فانطلقت ـ وأنا مهموم ـ على وجهي، فلم أستفق إلا وأنا بقَرْنِ الثعالب ـ وهو المسمى بقَرْنِ المنازل ـ فرفعت رأسي فإذا أنا بسحابة قد أظلتني، فنظرت فإذا فيها جبريل، فناداني، فقال : إن الله قد سمع قول قومك لك، وما ردوا عليك، وقد بعث الله إليك ملك الجبال لتأمره بما شئت فيهم . فناداني ملك الجبال، فسلم عليّ ثم قال : يا محمد، ذلك، فما شئت، إن شئت أن أطبق عليهم الأخشبين ـ أي لفعلت، والأخشبان : هما جبلا مكة : أبو قُبَيْس والذي يقابله، وهو قُعَيْقِعَان ـ قال النبي صلى الله عليه وسلم : بل أرجو أن يخرج الله عز وجل من أصلابهم من يعبد الله عز وجل وحده لا يشرك به شيئا ) .

இரத்தம் வழிந்தோட வீதியில் பெருமானார் வந்த போது, வானவர்களின் விசும்பல் இதோநபியே! நீங்கள் விரும்பினால் இம்மக்களை இருமலைகளுக்கு இடையே வைத்து நசுக்கி விடுகின்றோம்என்றனர்.

அதற்கு அண்ணலார், “வேண்டாம்! ஒரு போதும் நான் இதை விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுகிற இணைவைக்காத ஓர் சமூகத்தை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்என்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில்..”இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இவர்களின் அடுத்த தலைமுறை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்என்றார்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு..

என்ன ஓர் மன ஆளுமை!? அல்லாஹ்வே நெகிழ்ந்து போனான். தாயிஃபை நாடிய அல்லாஹ்வின் தூதருக்காக இதை விட சிறந்த இடமாக மதீனாவை அல்லாஹ் பரிசாக வழங்கினான்.

மனிதர்களின் துரு பிடித்த இதயக்கதவுகளை திறந்து ஏகத்துவ ஒளியை பாய்ச்சிட துடித்த அல்லாஹ்வின் தூதருக்காக ஜின்களின் இதயக்கதவுகளை திறந்திடச் செய்தான்.

قال ثم إن رسول الله صلى الله عليه وسلم انصرف من الطائف راجعاً إلى مكة حين يئس من خير ثقيف حتى إذا كان بنخلة قام من جوف الليل يصلي فمر به النفر من الجن الذين ذكرهم الله تبارك وتعالى وهم فيما ذكر لي سبعة نفر من جن أهل نصيبين فاستمعوا له فلما فرغ من صلاته ولوا إلى قومهم منذرين قد آمنوا وأجابوا إلى ما سمعوا فقص الله خبرهم عليه صلى الله عليه وسلم قال الله عز وجل " وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن " . إلى قوله تعالى " ويجركم من عذاب أليم " وقال تبارك وتعلى " قل أوحي إلي أنه استمع نفر من الجن " . إلى آخر القصة من خبرهم في هذه السورة .

அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே நினைவு கூர்ந்து பாரும்!) ஒரு போது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக!

நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த அந்த இடத்திற்கு அவை வந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்! பின்னர் ஓதி முடித்த போது அந்த ஜின்கள் தங்கள் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்றனர்; சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தை செவியுற்றோம்! அது தனக்கு முன்பு வந்த வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாய் இருக்கிறது.

சத்தியத்தின் பக்கமும், நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது! எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! மேலும், அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்! மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை பாதுகாப்பான்என்றனர்.

பைத்தியக்காரர், கவிஞர், சூனியக்காரர் என்ற அவப்பெயர்களை சூட்டி, அகமகிழ்ந்த சூத்திர தாரிகளின் முகங்களை அனுதினமும் உள வலிமையோடு எதிர் கொண்டு நடமாடிய அண்ணலாரை ஆறுதல் படுத்த வானவர்களின் ஸலாம், உரையாடல், நபிமார்களின் சந்திப்பு என மிஃராஜ்விண்ணுலகப் பயணத்தைக் கொடுத்து கௌரவித்தான்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ()

இத்தனைக்கும் மேலாக, தன் லிகாவைதரிசனத்தைப் பரிசாகத் தந்து அண்ணலாரைப் பரவசப்படுத்தினான் வல்ல அல்லாஹ்.

( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், தபகாத் இப்னு ஸஅத், அல் இஸாபா )

நபித்துவத்தின் 11, 12, 13, ஆகிய மூன்று ஆண்டுகள் முஸ்லிம்களுக்கும், அண்ணலாருக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில், எழுச்சி, உயர்வு, ஏற்றம் என அடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்கத் துவங்கியிருந்தனர்.

ஹிஜ்ரத் எனும் வசந்தம் சாமரம் வீசத்தொடங்கி, இஸ்லாமிய அழைப்பு உலகின் பெரும் பெரும் அரசுகளின் வாசற்கதவுகளைத் தட்டத் துவங்கிய அருமையான பொழுதுகளின் ஆரம்ப நாட்களில்….

புதிதாய் ஓர் பிரச்சனையை தந்தனர் இறைவிரோதிகள். இப்போது குடைச்சல் தந்தவர்கள் உள்ளிருந்தனர். எதிரிகளை முகத்துக்கு நேராக சந்தித்தே பழகிய நபிகளாருக்கு முதன் முதலாய் முதுகுக்குப் பின் தன் எதிரியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆம், பசுந்தோல் போர்த்திய புலியாய் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸுலூல் எனும் நயவஞ்சகன் உலக முஃமின்களின் அன்னை, நபிகளாரின் தனிப் பெரும் அன்புக்கு பாத்தியமான துணைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு மலங்களை அள்ளி வீசினான்.

ஒரு வார்த்தை அல்லது ஒரு பிரசங்கம் போதும், நபித்தோழர்களை இறையில்லத்தில் ஒன்று கூட்டி ஓரிடத்தில் அமரவைத்துஇதோ என் மனைவியின் மீது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளது. என் மனைவி பரிசுத்தமானவள்என்று அறிக்கை விட்டிருக்கலாம்.

அப்படி அறிக்கை விட்டாலும், அப்படியே ஏற்றுக்கொள்கிற மனோபாவத்தையும் நம்பகத்தன்மையும் கொண்டவர்களாகவே அண்ணலார் அந்த மேன்மக்களை உருவாக்கி இருந்தார்கள்.

அல்லது ஒரு பிரார்த்தனை செய்து வல்ல ரஹ்மானிடத்தில் முறையிட்டு இருந்தால் போதும் ஒரு வசனத்தை அல்ல ஓராயிரம் வசனத்தைக் கூட அல்லாஹ் இறக்கியருளி இருப்பான்.

ஆனால், உள ஆளுமையின் சிகரத்தின் உச்சியில் வீற்றிருந்த பெருமானார் {ஸல்} அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

உலக வரலாறு இனி எப்போதும் இது போன்ற மன வலிமை நிறைந்த ஓர் மாமனிதரை காணப்போவதில்லை என்று அறுதியிட்டுக் கூறுவது போல் அமைந்திருந்தது அண்ணலாரின் வதனத்தில் இருந்த வந்த வார்த்தைகளின் பிரவேசம்..

வரலாறு அதை கல்வெட்டாய் பதிந்து வைத்திருக்கின்றது.

இதோ அந்த வார்த்தைகள்…..

அவதூறு மலங்கள் மக்களிடையே உலவ ஆரம்பித்து அண்ணலாரின் காதுகளுக்கு எட்டிய போது, தம் அருமைத் துணைவி ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அண்ணலார் {ஸல்} அவர்கள்

قال اما بعد يا عائشة فانه قد بلغني عنك كذا وكذا فان كنت بريّة فسيبرئك اللّه وان كنت ألممت بذنب فاستغفرى اللّه ثم توبى إليه فان العبد إذا اعترف بذنب ثم تاب تاب اللّه عليه

ஆயிஷாவே! உம்மைப் பற்றி இன்னின்னவாறெல்லாம் மக்கள் பேசுவதாக நான் கேள்விபட்டேன். உண்மையில் நீ குற்றமற்றவள் என்றால் அல்லாஹ் உம் விஷயத்தில் உம்மை நிரபராதி என்று நிரூபிப்பான். ஒருவேளை, மக்கள் கூறும் குற்றத்தில் நீ ஈடுபட்டிருந்தாயானால் அல்லாஹ்விடத்தில் நீ தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற்றுக் கொள்! ஏனெனில், ஓர் அடியான் தவறொன்று செய்து, பின்பு அதற்காக தன் இறைவனிடம் மன்றாடி பாவமீட்சி கேட்கிறான் எனில் அல்லாஹ் மன்னிக்கிறான்என்றார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

ودعا رسول اللّه صلى اللّه عليه وسلم علىّ بن أبى طالب واسامة بن زيد حسين استلبث الوحى يستشيرهما في فراق اهله - فامّا اسامة فاشار عليه بالذي يعلم من براءة اهله وفي رواية وبالذي يعلم بهم في نفسه من الود فقال اسامة يا رسول اللّه « 2 » أهلك ولا نعلم الا خيرا - واما علىّ فقال لم يضيق اللّه عليك والنساء سواها كثيرة وان تسئل الجارية تصدقك - فدعا بريرة فقال أى بريرة هل رأيت من شيء يربيك من عائشة قالت له بريرة والّذي بعثك بالحق ما رايت عليها امرا قط أغمصه عليها اكثر من انها جارية حديثة السن تنام عن عجين أهلها فتأتى الداجن فتاكله

அடுத்து தங்களின் அறிவையும் வயதையும் விட கீழ் நிலையில் இருந்த உஸாமா (ரலி), அலீ (ரலி) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பரீரா (ரலி) ஆகியோரிடம் வந்து ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து கருத்து கேட்டார்கள்.

فقال يا معشر المسلمين من يعذرنى من رجل قد بلغني أذاه في أهل بيتي فو اللّه ما علمت على أهلي الا خيرا ولقد ذكروا رجلا ما علمت عليه الا خيرا وما يدخل على أهلي الا معى

அவர்கள் அனைவரும் நல்லவிதமாகவே கருத்துக் கூறவே, மக்களை ஒன்று கூட்டிமுஸ்லிம்களே! என் குடும்பத்தார் விஷயத்தில் அளவு கடந்து நடந்து விட்டவர்கள் விவகாரத்தில் எனக்காக உங்களில் யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள்.

நான் அறிந்தவரை என் மனைவி மிகவும் நல்லவர். என் அல்லாத எவரோடும் இணைத்துக் கூறும் அளவிற்கு மோசமான குணம் கொண்டவர் இல்லை. அவரை நான் நல்லவராகவே கருதுகின்றேன்.

மேலும், உங்களில் சிலரிடம் நான் அவர்களைப் பற்றி விசாரித்த வரையில் அவர்களும் எம் துணைவியர் குறித்து நல்லதையே கூறியிருக்கின்றனர்என்றார்கள்.

( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ லி இமாமி ஸனாவுல்லாஹ் உஸ்மானீ அல் ஹனஃபீ அல் மள்ஹரீ )

பின்பு, அல்லாஹ் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து இறைவசனங்களை இறக்கியருளும் வரை தன்னை அல்லாஹ்வின் ஒரு அடியானாகவே நிலை நிறுத்தி, மக்களோடு மக்களாக காத்திருந்தார்கள்.

எந்த அளவுக்கு உள ஆளுமையில் அண்ணலார் {ஸல்} அவர்கள் முழுமை பெற்றிருந்தார்கள் என்பதை மேற்கூரிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

    அல்லாஹ் விளக்கத்தை தருவானாக! ஆமீன்!

அண்ணலாரின் உள ஆளுமையை பறைசாற்றுகிற எண்ணிலடங்கா சான்றுகள் வரலாறு முழுவது பரவி, விரவிக் கிடக்கின்றன என்றாலும் இத்தோடு நிறுத்தி மேலான உங்களின் பார்வைக்கு தந்திருக்கின்றேன்.

இன்னும் இரு வகையான ஆளுமைத் திறன் குறித்து பதிவிட பாக்கி இருக்கிறது. உலமாக்களாகிய நீங்கள் விரும்பினால் இன்ஷா அல்லாஹ்.. அடுத்த வாரத்தோடு பதிவிட்டு இந்த தலைப்பை முழுமை செய்கிறேன்.

இல்லையெனில்வேறு தலைப்புகளில் பதிவிடலாம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

                        வஸ்ஸலாம்!!!


No comments:

Post a Comment