நேர்மையாளர்களை ஊக்குவிப்போம்!
சமீப காலமாக சமூகத்தில் அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கும், லஞ்சக்குற்றத்திற்கும் உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம்,
தற்காலிக பணிநீக்கம்,
நீதி மன்ற விசாரணை என்று தண்டிக்கப்படுவதை நாள் தோறும் ஊடகத்தின் மூலமாக பார்க்க முடிகிறது.
ஏதோ இது சிறிய அளவில் தான் என்றில்லாமல் நாட்டின் அனைத்து துறைகளிலும் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுவதை காணும் போது சமூகத்தில் நேர்மையானவர்களே இல்லையா?என ஐயப்படும் சூழல் வெகுஜன நடுநிலையாளர்களை கவலையடைய வைத்துள்ளதை உணர முடிகிறது.
நேர்மை தவறி நடப்பதற்கு ஒரு விதத்தில் சுற்றியுள்ளவர்களும், சூழ்நிலைகளும்,
சட்டமும் தான் காரணம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.
கெம்கோ என்ற அரசு அதிகாரி 21 ஆண்டில்
40 முறை பணியிட மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காரணம் அவரிடம் காணப்பட்ட நேர்மை.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் பல முறை பணி மாற்றம் செய்யப்பட்டார்.அப்போது அவர் “என்னை பணி மாற்றம் தான் செய்ய முடியுமே தவிர என் இதயத்திலிருந்து நேர்மையை இட மாற்றம் செய்ய முடியாது” என்றார்.
யாருக்கும் அஞ்சாத மனோதிடம்,
எங்கேயும் சத்தியத்தை எடுத்துரைக்கும் சொல்லாற்றல், எந்த உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் பணியாத தன்மை கொண்ட இவர்களால் எந்த பணியிலும் நேர்மை தவறி நடந்திட கண நேரமும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை.
எனவே, மேல்மட்ட அதிகாரிகளும், சமூகமும் நேர்மையோடு நடக்கும் அதிகாரிகளை நேரில் கண்டு அவர்களிடம் காணப்படும் நேர்மையை மதிப்பதற்கும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதற்கும் தயங்குகின்ற போதும் சில நேரங்களில் நேர்மை தவறி நடந்திட வழி கோலுகிறது.
இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை அது எல்லாத் துறைகளிலும் நீதியோடும், வாய்மையோடும் வாழுமாறு கட்டளையிடுகிறது. அப்படி வாழ்பவர்களை ஊக்குவிக்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நேர்மையோடு நடக்கும் ஒருவனை ஊக்குவிக்கும் போது அதன் காரணமாக இச்சமூகம் மென்மேலும் அவனிடமிருந்து பல்வேறு நன்மைகளையும்,
நல்லுதவிகளையும் முழுமையாக அடைய முடியும் என்ற பேருண்மையை தனது வலியுறுத்தலின் மூலம் இஸ்லாம் உணரச் செய்கிறது.
وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (الحجرات:9)
“நேர்மையோடு வாழுங்கள்,
அல்லாஹ் நேர்மையாளர்களை நேசிக்கிறான்”.
அல்குர் ஆன்:
49:9
ஒவ்வொரு முஃமினும் சொர்க்கம் செல்லவே விரும்புவான்.அதிலும் உயர்ந்த சொர்க்கம்,
உயர்ந்த அந்தஸ்து என்றால் பேராவல் கொள்வான்.
அதிலும் உலகில் வாழ்ந்தவர்களிலேயே மிக உன்னதமானவர்களோடு சொர்க்கத்தில் மிக நெருக்கமாக உரையாடவும்,
உறவாடவும், உலவவும் வாய்ப்பு கிடைக்குமென்றால்...
இத்தகு நற்பாக்கியத்தை நேர்மையோடு வணிகம் செய்யும் ஒரு வியாபாரிக்கு நல்குவதாக மாநபி
(ஸல்)
அவர்கள் நவின்ற செய்தியை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:-
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ
وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (الترمذي)
“உண்மை பேசி நேர்மையுடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத்
(இறை வழியில் உயிர்த் தியாகம் செய்தோர்)
ஆகியோருடன் இருப்பார்”. ( அறிவிப்பாளர்: அபூஸயிதுல் குத்ரி (ரலி)
நூல்: திர்மிதி)
வணிகம் என்பது வெளிப்படையில் உலகியலைச் சார்ந்த ஒரு செயல் போல் காணப்பட்டலும் அதிலும் உண்மை, நேர்மை, நாணயம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டால் இறையன்பு கொண்ட தூயவர்களான நபிமார்கள்,
உண்மையாளர்கள், உயிர் தியாகிகள் ஆகியோருடைய தோழமை கிட்டும் என்கிற சோபனத்தை நபி
(ஸல்)
அவர்கள் “நேர்மை”யை ஊக்குவிக்கும் முகமாகச் சொன்னார்களென்றால் அது மிகையாகாது.
தாத்து ஜந்தல் எனும் குலத்தினர் வசிக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 500 பேர் கொண்ட படைப்பிரிவை காலீத் பின் வலீத் (ரலி) தலைமையில் நபி (ஸல்)
அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
நபி (ஸல்)
அவர்களின் கட்டளை
“அக்குலத்தின் தலைவன் அகீதர் இப்னு அப்துல் மாலிக் உயிருடன் பிடித்து கொண்டு வரப்பட வேண்டும்”
என்பதாக இருந்தது.
அதுபோல் அக்குலத்தின் தலைவன் நபி (ஸல்)
அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட போது அவன் விலையுயர்ந்த ஆடைகளையும்,
அதில் விலையுயர்ந்த தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் அணிந்திருந்தான்.
நபித்தோழர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு “இது என்ன பெருமையும் அகங்காரமும்?என் வியந்து போனார்கள். அதனைக் கேட்ட நபி
(ஸல்)
அவர்கள்:-
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
مناديل سعد بن معاذ
في الجنة خير من هذا
”சுவனத்தில் ஸஅத் இப்னு முஆதின் (ரலி)
கைக்குட்டை இதை விட மிகச் சிறந்தது எனக் கூறினார்கள்.
( صحيح البخاري)
இங்கே நபித்தோழர்கள் இதுவரை கண்டிராத மிக ஆடம்பரமான அணிகலனை கண்டு வியந்து ஆச்சர்யப்பட்டு நின்ற போது ஸஅத் இப்னு முஅத் எனும் சக நபித்தோழருக்கும் அவரின் கைக்குட்டை (கர்சீப்)க்கும் சுவனத்தின் அந்தஸ்தை நபிகளார் மிக உயர்வாய் கூறினார்கள் என்றால்...
ஸஅத் இப்னு முஅத் யார்?அவர் என்ன செய்தார்?
மதீனத்து அன்சாரிகளில் முதல் இஸ்லாமிய குடும்பம் இவருடையது.
அவ்ஸ் கோத்திரம் அப்துல் அஷ்ஹல் குடும்பம் தமது கோத்திரத்திலேயே இஸ்லாத்திற்காக அனைத்திலும் முன்னிலையில் நிற்பவர் இவரே ஸய்யிதில் அன்ஸார் - அன்ஸாரிகளின் தலைவர் என அண்ணல் நபி
(ஸல்)
அவர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்கள். பத்ர்,
உஹதில் கலந்து கொண்ட சிறப்பும் இவர்களுக்கு உண்டு.
திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலை அது.ஆம் பத்ர் யுத்தத்திற்கு ஆயத்தமாகுமாறு மாநபி (ஸல்)
அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள்.
அத்தோடு நின்று விடாமல் மூத்த ஸஹாபிகளை அழைத்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்கள்.உமர்
(ரலி),
அபூபக்கர் (ரலி) ஆகிய இருவரும் அழகிய முறையில் பேசியமர்ந்தார்கள்.
பின்பு மிக் தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் எழுந்து பனூ இஸ்ரவேலவர்கள்
(5ம் அத்தியாயம்
24ம் வசனத்தில்)
கூறியது போன்று ஒருக்காலும் நாங்கள் கூற மாட்டோம்.மாறாக நீங்களும் உங்கள் இறைவனும் போர் புரியுங்கள்.
நாங்களும் உங்கள் இருவருடன் இணைந்து போர் புரிவோம்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு காட்டிய வழியில் நீங்கள் செல்லுங்கள் நாங்களும் உங்களுடன் வருகின்றோம் என்றார்கள்.
நபிகளார் (ஸல்) அவர்கள் மிக்தாத் (ரலி)
அவர்களைப் பாராட்டினார்கள்.அவருக்காக துஆவும் செய்தார்கள்.
முஹாஜிர்களின் சார்பில் இம்மூவரும் பேசியமர்ந்த பின்னர் அன்சாரிகளின் அமர்விடத்தை நோக்கி “மக்களே எனக்கு ஆலோசனை வழங்குங்கள்” என்று கூறினார்கள்.
மதீனத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களின் அன்சாரிகளின் சார்பாக பேச எழுந்தார் ஸைய்யிதுல் அன்ஸார் ஸஅத் இப்னு மஆத் (ரலி)
தமது உரையில் நபி (ஸல்)
அவர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் நீங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் தெரிகிறதே?எனக் கேட்டார்.ஆம் என நபி
(ஸல்)
அவர்கள் பதிலளித்தார்கள்.
தமது பேச்சை தொடர்ந்தார் ஸஅத் இப்னு மஆத்
(ரலி)
“நாங்கள் உங்களை உண்மையாளர் என நம்பினோம்.ஆகவே உங்களை ஈமான் கொண்டோம்.மேலும் நீங்கள் கொண்டு வந்த தீனுல் இஸ்லாம் தான் சத்தியமென்று சாட்சி கூறினோம்”.
இதனடிப்படையிலேயே உங்களின் கட்டளைகளை செவிமடுத்தோம்.மேலும், அதற்கு கட்டுப்படுவதாய் ஒப்பந்தமும், உடன்படிக்கையும் செய்தோம்.
எனவே, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அதற்கு உறுதுணையாய் உங்களுடன் இருப்போம்.
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறோம் நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்.ஒருவரும் பின்வாங்க மாட்டோம்.
எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாய் இருப்போம்.
நிச்சயமாக! போரில் நாங்கள் உறுதியுடன் போராடுவோம்; உங்களுக்கு கண்குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களின் மூலம் வழங்கலாம்.அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை யுத்தகளம் நோக்கி அழைத்துச் செல்லுங்கள் என்று பேசியமர்ந்தார்.
ஸஅத் அவர்களின் பேச்சையும்,
அவரிடம் காணப்பட்ட ஆக்ரோஷமான உற்சாகத்தையும் கண்ட பெருமானார் (ஸல்)
அவர்கள் அக மகிழ்ந்தார்கள், ஆனந்தமடைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இதயத்தை குளிரூட்டினார் ஸஅத் இப்னு மஆத் (ரலி) அவர்கள். ( நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஷிஹாம் பக்கம்: 125,126 )
கந்தக் யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஒரு மாத காலத்திற்கு பின் அன்னார் வஃபாத்தானார்கள்.
அன்னாரின் நல்லடக்க இறுதி ஊர்வலத்தில் இப்பூமிக்கு இதற்கு முன் வருகை தராத எழுபதினாயிரம் வானவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள் என நபி
(ஸல்)
கூறியதாக ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கும் நபிமொழியொன்றை திர்மிதியில் காணலாம்.
عن جابر ، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن
معاذ.
”ஸஅத் இப்னு மஆத் (ரலி)
யின் மரணத்தால் அர்ஷ் நடுங்கியது என நபி (ஸல்)
அவர்கள் கூறிய நபிமொழியை முதவாத்திரான அதிகமான அறிவிப்புகளின் மூலம் காணலாம்.
حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما
حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله : "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن
معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".
நாங்கள் ஸஅத்ப்னு மஆத்
(ரலி)யின் உடலை சுமந்து சென்ற போது என்ன இலகுவாகக் கொண்டு செல்கிறார்கள் என முனாபிக்கள் விமர்சித்த போது வானவர்கள் ஜனாஸாவை சுமந்து வருகிறார்கள் என்று நபி
(ஸல்)
அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியை திர்மிதியில் பார்க்கலாம்.
வாழ்கின்ற போதும் சீரும் சிறப்போடும் வாழ்ந்து மரணத்திற்குப் பிறகும் நற்பேருடன் நல்லடக்கம் செய்யப்பட்டு நாளை மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்தை அடையவிருப்பவதாக நபி
(ஸல்)
அவர்களால் கூறப்பட்ட அந்த மாண்பாளரின் எத்தகைய செயல் இப்பாக்கியத்தை அடைய வைத்தது என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
மதீனாவுக்கெதிராக எதிரிகள் யாரேனும் தாக்குதல் தொடுக்க வந்தால் முஸ்லீம்களோடு ஒன்றிணைந்து போராடுவோம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள் பனூகுறைழாக்கள்
(யூதர்கள்).
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோடும்,
சன்மார்க்க இஸ்லாத்தோடும் யாரெல்லாம் பகைமை பாராட்டிக் கொண்டிருந்தார்களோ அத்தனை கூட்டத்தாரையும் ஒன்றிணைத்து முஸ்லீம்களுக்கெதிராக ஒரு பெரும் படையை குறைஷிகள் திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கிற முக்கியமான கட்டத்தில் பனூகுறைழாக்கள் அண்ணலாருக்குத் துரோகம் செய்தார்கள். முஸ்லீம்களுடன் நல்ல உறவுடன் இருக்கும் பொழுதே எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டார்கள்.அவர்களுக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தார்கள்.
தீனுல் இஸ்லாத்தை சத்திய நெறியாக ஏற்று பல்வேறு துன்பங்களை அனுபவித்த, ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய நபித்தோழர்களோடு எப்படி எதிர் கொள்வது எதிரிகளை? என்று ஆலோசனை நடத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்)
அவர்கள்.
பாரசீகத்தைச் சார்ந்த தோழர் ஸல்மான் அல்ஃபார்ஸி
(ரலி)யின் ஆலோசனையை ஏற்று மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டினார்கள் முஸ்லீம்கள்.
சில முக்கிய இடங்களில் காவலுக்கும் நின்றார்கள். மதீனா முழுவதும் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தி எதிரிகளின் மூச்சுக்காற்று கூட புகாத அளவு முழுக்க தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் இறைத்தூதர் (ஸல்)
அவர்கள்.
யூதர்களின் சூழ்ச்சியும், குறைஷிகளின் தந்திரமும் அண்ணலாரின் அரணுக்கு முன்னால் அசைவற்று நின்றன. எதிர் பார்த்து வந்த எதுவும் நடைபெறாததால் ஏமாற்றத்துடனும், தோல்வி முகத்தோடும் மதீனவை ஆக்கிரமிக்க முடியாமல் பெரும் கவலையோடும் எதிரிகள் திரும்பி போய் விட்டார்கள்.
வஞ்சகர்கள் பனூ குறைழாக்களின் வஞ்சத்தை அண்ணலாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இவர்கள் மதீனாவில் குடியிருப்பது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் ஆபத்துதான் எனக் கருதினார்கள்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையை அறிவித்தார்கள் அண்ணல் நபி
(ஸல்)
அவர்கள்
பனூ குறைழாக்கள் வசித்த கோட்டையை முற்றுகையிட்டனர் முஸ்லீம்கள்.நீண்ட நாட்கள் நீடித்தது முற்றுகை.இறுதியில் ஒரு நிபந்தனையோடு வழிக்கு வந்தார்கள் பனூ குறைழாக்கள். நிபந்தனையைக் கேட்ட அண்ணலார் (ஸல்) சரி என ஆமோதித்தார்கள்.
“தங்களுடைய இந்த விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்லும் நடுவராக ஸ அத் இப்னு முஅத்
(ரலி)
தான் இருப்பார் என்றார்கள் பனூ குறைழாக்கள்.
உலகமே அல்லாஹ்வின் தூதரிடம் தான் நீதிக்காக் தவமிருந்த காலம் அது.
நபியாக அனுப்பப்படும் முன்னரே மக்கத்து குறைஷிகளின் நடுவராக நீதிமானாக விளங்கியவர் தாஹா நபி
(ஸல்).
ஹஜ்ருல் அஸ்வதை யார் நிறுவுவது எனும் பிரச்சனையில் நபி (ஸல்)
அவர்களிடம் தஞ்சம் புகுந்தனர் குறைஷிகளின் தலைவர்கள்.
ஆனால்,
இங்கே, பனூ குறைழாக்கள் நபி
(ஸல்)
அவர்களின் பாசறையில் பயின்று வரும் ஒருவரை முன் மொழிந்து இவர் தான் நடுவர் அவரின் தீர்ப்பையே ஏற்போம் எனசூளுறைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். ஒரு பெரும் அமைதி,
நீண்ட மெளனம் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவர் ஸ அத் பின் மு அத்
(ரலி)
பனூ குறைழா கோத்திரமும் அவ்ஸ் கோத்திரமும் நல்ல உறவுடன் இருந்த காலம், வியாபரத் தொடர்பும் அவர்களை ஒன்றினைத்து வைத்துருந்தது. எனவே ஸ அத்
(ரலி)
அவர்களை நியமித்தால் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பார் என்று யூதர்கள் பலமாக நம்பினார்கள்.
ஸஅத் (ரலி)ன் குடும்பமும் அவ்வாறே செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த முற்றுகையின் போது ஸ அத்
(ரலி)
அங்கே இருக்கவில்லை.அகழ் தோண்டி மதீனாவை பாதுகாக்கும் போதுஎதிரிகளின் அம்பு காயப்படுத்திய ரணத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார்.
நபித் தோழர் ஒருவர் முற்றுகையிட்ட இடத்திற்கு அழைத்து வந்தார் ஸ அத்
(ரலி)
அவர்களை.சபையெங்கும் நீண்ட அமைதி.பெரும் மெளனம், அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே ஸ அத்
(ரலி)
அவர்களின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது.
மெளனத்தை கலைத்தார்...
நீண்ட அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்...
ஆம்! அவர் அளித்த தீர்ப்பு தன் கோத்திரத்தாரின் நண்பர்களான பனூ குறைழாவுக்கு எதிராக இருந்தது
- அதாவது மரண தண்டனை அளிக்குமாறு தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்கள் ஸ அத் இப்னு மு அத் (ரலி)
அவர்கள்.
தன் முன் கொண்டு வரப்பட்ட முக்கியமான இந்த விவகாரத்தில் அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்துவிடக் கூடாது என தீர்மானம் எடுத்து தீர்ப்பு கூறினார்கள் ஸ அத் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃதை (ரலி)
நோக்கி மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்.
لقد
حكمت فيهم بحكم الله من فوق سبع سموات ( الرحيق المختوم)
”முஆதே! ஏழு வானங்களுக்கு மேலுள்ள (அல்லாஹ்) வனின் தீர்ப்பைக் கொண்டு அவர்கள் விஷயத்தில் நீர் தீர்ப்பளித்தீர்”
ஒரு புறம் குடும்பத்தினரின் ஆசை!
ஒருபுறம் வர்த்தக நண்பர்களின் விருப்பம்!
மறுபுறம் மாண்பாளர் முஹ்ஹமத்
(ஸல்)
அவர்களும் சத்திய மார்க்கம் இஸ்லாமும்....
அவர் நீதியை தேர்ந்தெடுத்தார்! நேர்மையை கடைபிடித்தார் அவரின் நேர்மையை உரசிப்பார்க்க வந்த சோதனையை நீதியால் சோபனமாக்கினார்!
மாநபி (ஸல்)
அவர்கள் நேர்மையாளர்களை ஊக்குவிப்பதோடு
மாத்திரம் நின்றுவிடவில்லை.
நேர்மைக்கு எதிரான செயல்களை செய்தோர்களை கண்டித்து நேர்மையாளர்களாய் வாழ முற்படுமாறு ஆர்வப்படுத்தினார்கள்.
முஸ்லிம் ஷரீஃபில் அபூ ஹூமைத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஅதிஸ் ஸாஇதீ
(ரலி)
அவர்கள் வாயிலாக ஒரு செய்தியை இமாம் முஸ்லிம் (ரஹ்)
அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் நஜ்த் பகுதியைச் சேர்ந்த் இப்னு லுத்ஃபிய்யா என்பவரை ஜகாத் வசூலிக்க அனுப்பினார்கள். சிறிது நாட்களில் திரும்பி வந்த அவர் ஒரு பையை நீட்டி இது உங்களுக்குறியது; ஜகாத் வசூலித்த பணம், இன்னொரு சிறிய பை போன்ற பொட்டலத்தைக் காட்டி இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனக்குறியது என நபி (ஸல்)
அவர்களிடம் கூறினார்.
உடனே, முகம் மாறிய நிலையில் கோபமாக மிம்பரின் மீது ஏறிய மாநபி (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள், பின்பு நிச்சயமாக அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக நியமித்த பணிகளில் ஒரு பணியினை (ஜகாத் வசூலிப்பதை) நிறைவேற்ற நான் ஒருவரை நியமித்தேன். அவர் வந்து கூறுகிறார்.இது உங்களுக்கு;மற்றொன்று தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று.
அவர் கூறுவது உண்மையாக இருந்தால் அவர் தன் தந்தையின் வீட்டிலோ, தாயின் வீட்டிலோ அமர்ந்திருக்கட்டும்
(அவர் சொன்ன அந்த அன்பளிப்பு அவரது வேலைக்காக கொடுக்கப்பட்டதாகும்) அவருக்காக கொடுக்கப்பட்டதல்ல. ஆகவே அவர் அதை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்கள்.
இங்கே நேர்மையை பாதிக்கிற ஒரு காரியத்தை செய்த அந்த நபித்தோழரை கண்டித்ததோடு,
ஏனைய முஸ்லிம்களும் இதுபோன்று நேர்மையை பாதிக்கிற எந்த ஒரு காரியத்திலும் இறங்கிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே மாநபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்.
தனது சொல்லிலும், செயலிலும் நேர்மையுடையவராக ஒருவர் இருந்து அவர் பொய்யான நடவடிக்கையை மேற்கொள்ளாமலிருந்தால் அவருடைய அறிவு நீண்ட நெடுங்காலம் வரை அவருக்குப் பயன் தந்து கொண்டே இருக்கும். அவருடைய முதிர்ந்த வயதிலும் அவருக்கு ஆபத்தோ அறிவுத் தடுமாற்றமோ ஏற்படாது.
நேர்மையாளனாய் ஒரு மனிதன் வாழும்போது ஏராளமான நன்மைகளை அடையப் பெறுகிறான்.
வியாபாரத்தில் நேர்மை..
கொடுக்கல் வாங்கலில் நேர்மை..
குடும்ப வாழ்க்கையில் நேர்மை..
தனி மனித வாழ்வில், பொது வாழ்வில் நேர்மை..
நீதி நிர்வாகத்தில் நேர்மை..
என்று மனிதனோடு தொடர்புள்ள அனைத்து துறைகளிலும் மனிதன் நேர்மையை கையாள வேண்டும்.
சத்தியத்தை எடுத்துரைப்பதில் நேர்மை:
ஸ்பெயினின் கலீஃபாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஹகம் அவர்கள் ஒரு சமயம் மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவர் அபூ முஹம்மத் யஹ்யா அந்த லூஸி
(ரஹ்)
அவர்களை அழைத்து தலைமை நீதிபதியாக வந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
“நான் குர் ஆனையும், ஹதீஸையும் கற்றது பணம் சம்பாதிக்க அல்ல, மாறாக இந்நாட்டில் கல்வியைப் பெருக்க வேண்டும்.அதன் மூலம் நேர்மையான மக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நான் கல்வி கற்றேன் எனக் கூறி நீதிபதி பதவியை ஏற்க மறுத்து விட்டார்கள்.
ஒரு தடவை கலீஃபா தமது சொந்தப்பிரச்சனை ஒன்றுக்காக மார்க்க அறிஞர்களின் சபையை ஒன்று கூட்டினார்.அங்கே யஹ்யா (ரஹ்)
அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
இமாம் அவர்களே!
நேற்று நான் நோன்பை முறித்து விட்டேன்.அதற்கான Gகஃப்பாரா - குற்றப்பரிகாரம் என்ன?என்று யஹ்யா (ரஹ்)
அவர்களை நோக்கி வினவினார் கலீஃபா.
1. ஓர் அடிமையை விடுவித்தல்
2. அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல்
3. இரண்டு மாதம் - 60 நாட்கள் தொடர் நோன்பிருத்தல்
இம்மூன்றில் ஒரு வழியில் பரிகாரம் தேட வேண்டும் என அறிவுறுத்துகின்றான்.
கேள்வி நேரடியாக துணிவு படைத்த ஹல்ரத் யஹ்யா(ரஹ்)அவர்களை நோக்கி கேட்கப்பட்டதால் மற்ற அறிஞர்கள் மெளனமாய் இருந்தார்கள்.
தொடர்ந்து 60 நாட்கள் நோன்பு வைப்பது தான் தங்கள் குற்றத்திற்கான பரிகாரம் என கலீஃபா அவர்களிடம் தெரிவித்தார்கள்.
அரசவையை விட்டு வெளியே வந்ததும் ஏனைய உலமாக்கள் எளிதான இரண்டு பரிகாரங்களைக் கூறாமல் ஏன் கலீஃபாவுக்கு கடுமையான பரிகாரத்தை தேர்ந்தெடுத்துக் கூறினீர்கள்?என்று வாதம் செய்தனர்.
உடனே, யஹ்யா அவர்கள் “ஓர் அடிமையை விடுவிப்பதோ, அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பதோ நாடாளும் ஓர் ஆட்சியாளருக்கு பெரிய காரியமே அல்ல.
அறுபது நாட்கள் நோன்பிருக்கும் போதுதான், தான் செய்த குற்றத்தின் தன்மை தெரியும். இல்லையேல் இறைவன் விஷயத்தில் கலீஃபா நேர்மை தவறிடும்,
நெறிபிறந்திடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆகையால் தான் அத்தகைய பரிகாரத்தை தேர்ந்தெடுத்தேன்” என்றார்கள்.
இந்த உம்மத்தின் நற்பெரும் நான்கு இமாம்களும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியாளர்களின் கடும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.எனினும் அவர்கள் ஒரு போதும் நேர்மை தவறி நடந்திட முற்பட்டதில்லை.
அறிவுலக மாமேதை அபூ ஹனீஃபா (ரஹ்)
அவர்கள் ஆட்சியாளர் மன்ஸீர் அவர்களால் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கிலாஃபத் -ராஷிதாவுக்குப் பின்னர் ஆட்சியாளர்களின் நேர்மை கேள்விக்குறியானதை உணர்ந்த இமாம் அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறையை மறுசீரமைப்பு செய்ய ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த அமைப்பில் தமது மாணவர்களையே உறுப்பினர்களாக ஆக்கினார்கள்.
ஒருமுறை இவ்வமைப்பில் பணியாற்றுகிறவர்களின் புலமையைப் பற்றி இமாம் அவர்கள் “மொத்தம்
36 பேர் இவ்வமைப்பில் உள்ளனர். இவர்களில்
28 பேர் நீதிபதிகளாகவும்
6 பேர் பத்வா வழங்கும் முஃப்தீயாகவும் 2 பேர் நீதிபதிகளையும், முஃப்தீக்களையும் உருவாக்கும் ஆற்றல் படைத்தோர் என்று குறிப்பிட்டார்கள்”.
( நூல்: அஹ்காமுல் குர் ஆன் பாகம்:1, பக்கம்:81 நன்றி:
இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழ் நூல் : பாகம்
2)
எனவே, மனித சமூகம் அச்சமற்று வாழும் சூழ்நிலை உருவாக வேண்டுமானால்..
நேர்மையாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்!
நேர்மையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்!
நேர்மையாளர்களாய் வாழ மனித சமூகம் முன்வர வேண்டும்!
நேர்மையாளர்களில் ஒருவராக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!
ஆமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! எங்களைப் போன்ற பல ஆலிம்களின் பணிவான வேண்டுகோளுக்கிணங்க தாங்கள் மிஹ்ராப் விளக்குகளைதொடர்ந்து இருப்பதற்கு மிகுந்த நன்றியினை தெரிவிக்கிறோம். தாங்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து எழுதும் ஜும்ஆ குறிப்புகளை நூற்றுக்கணக்கான ஆலிம்கள் படித்து குறிப்பெடுத்து அதை மக்களுக்கு பரப்புரை செய்கிறார்கள். அவர்களில் நானும் ஒன்று. அல்லாஹ் தங்களின் நேரத்தில் பரகத்தை ஏற்படுத்தி இந்த மகத்தான சேவையை தொய்வின்றி செய்யும் பாக்கியத்தை தங்களுக்கு நல்குவானாக! ஆமீன். جزاكم الله خيرا كثيرا
ReplyDelete