Monday, 13 March 2017

இஸ்லாத்தை அழகு படுத்துவோம்!!!



இஸ்லாத்தை அழகு படுத்துவோம்!!!



அல்லாஹ்வின் நேசம் கிடைப்பதென்பது ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு இந்த வானம், பூமி இவ்விரண்டின் கருவூலங்கள் கிடைப்பதை விட மிக மேலான பாக்கியமாகும்.

ஓர் அடியானுக்கு அல்லாஹ்வின் நேசம் கிடைத்து விட்டால் அவனுக்கு கிடைக்கிற சோபனங்களும், வாழ்த்துக்களும் எண்ணிலடங்காதது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنِّي قَدْ أَحْبَبْتُ فُلَانًا فَأَحِبَّهُ قَالَ فَيُنَادِي فِي السَّمَاءِ ثُمَّ تَنْزِلُ لَهُ الْمَحَبَّةُ فِي أَهْلِ الْأَرْضِ فَذَلِكَ قَوْلُ اللَّهِ ( إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் ஓர் அடியானை நேசித்தான் என்றால் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன அடியானை நேசிக்கின்றேன் நீரும் நேசிப்பீராக! என்பான். அவரும் அல்லாஹ்வே நானும் அவரை நேசிக்கின்றேன் என்பார்.

பின்பு, வான் மண்டலத்தில் இருக்கிற அனைத்து வானவர்களையும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அழைத்து, அல்லாஹ் இன்ன அடியானை நேசிக்கின்றான். நீங்களும் இன்ன அடியானை நேசியுங்கள்! என்பார்.

அப்போது, அனைத்து வானவர்களும் நாங்களும் அந்த அடியாரை நேசிக்கின்றோம்! என்பார்கள்.

பின்பு அல்லாஹ் உலகில் வாழ்கிற சக மனிதர்களும் அந்த அடியானை நேசிக்கும் படி செய்து விடுகின்றான்என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறி விட்டுதிண்ணமாக, எவர் இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்கின்றாரோ அவர்களுக்காக கருணைமிக்க இறைவன் மக்களின் உள்ளங்களில் நேசத்தைத் தோற்றுவிப்பான்என்ற ( அல்குர்ஆன்: 19: 96 ) இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.                                                  ( நூல்: திர்மிதீ )

வானவர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிற, வானவர்களின் தலைவரும், மிகச் சிறந்தவருமான ஜிப்ரயீல் (அலை) அவர்களின் நேசமும், வான் மண்டலத்தில் இருக்கிற எண்ணிலடங்கா வானவர்களின் நேசமும் ஓர் அடியானுக்கு கிடைத்தால் அந்த அடியானுடைய இந்த உலக வாழ்வும், மரணத்திற்கு பின் உண்டான மண்ணறை வாழ்வும், மறுமை வாழ்வும் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

அல்லாஹ் தான் யாரையெல்லாம் நேசிப்பான் என்று அல்குர்ஆனில்இன்னல்லாஹ யுஹிப்பு” “வல்லாஹு யுஹிப்புஎன்று பல இடங்களில் பல அம்சங்களுடனும், நற்பண்புகளுடன் தொடர்பு படுத்தி கூறுகின்றான்.

அப்படியான நற்பண்புகளில், அம்சங்களில் ஒன்று…..

وَأَحْسِنُوْا إِنَّ اللهَ يُحِبُ المُحْسِنِيْنَ

இஹ்ஸான்எனும் வழிமுறையைக் கடைபிடியுங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் முஹ்ஸின்களை நேசிக்கின்றான்”.                            ( அல்குர்ஆன்: 2: 195 )

இஹ்ஸான் என்பதற்கு ஒரு செயலை அதன் முழு அழகோடு செய்து முடிப்பதற்கு சொல்லப்படும். அப்படி அழகுற செய்பவர் முஹ்ஸின் என்று அழைக்கப்படுவார்.

எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் அவரின் வாழ்க்கையின் ஒட்டு மொத்த பகுதியிலும் இஹ்ஸான் எனும் உயரிய நற்பண்பை பேண வேண்டும்.

தன் வாழ்க்கையின் ஒட்டு மொத்த பகுதியை இஹ்ஸான் எனும் உயரிய நற்பண்போடு வாழத் துவங்கும் அடியார் அதை முதலில் தன்னிடம் இடம் பெற்றிருக்கும் இஸ்லாத்தில் இருந்து துவங்க வேண்டும்.

ஆம்! அவரின் இஸ்லாம் முதலில் அழகு பெற வேண்டும். வாருங்கள்! இஸ்லாம் அழகு பெற அல்குர்ஆனும், ஸுன்னாவும் காட்டித்தருகிற பாதையில் பயணித்து நாமும் அழகு பெறுவோம்!!!

أن النبي صلى الله عليه وسلم قال
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
 حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ التِّرْمِذِيُّ وَغَيْرُهُ عن أبي هريرة رضي الله عنه،

ஓர் அடியானின் இஸ்லாம் அவனுக்கு தேவை இல்லாத காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும் போது அழகு பெறுகின்றதுஎன்பதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்:திர்மிதீ )

أخرج الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال
 « إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلَامَهُ فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ بِمِثْلِهَا

உங்களில் எவருடைய இஸ்லாம் அழகு பெறுமோ அப்போது அவர் செய்கிற ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை நன்மைகள் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு தீமைக்கும் அது போன்ற பாவம் மட்டுமே எழுதப்படும்என மாநபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                            ( நூல்: முஸ்லிம் )

 ( للذين أحسنوا الحسنى وزيادة ) والحسنى هي الجنة والزيادة النظر إلى وجه الله تعالى

எவர்கள் அழகிய முறையில் நன்மைகள் புரிகின்றனரோ, அவர்களுக்கு கூலி நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டாது! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர், அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்”. ( அல்குர்ஆன்: 10: 26 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர்الحسنى என்பது சுவனத்தையும், زيادة என்பது அல்லாஹ்வை பார்ப்பதையும் குறிக்கும் என்று விளக்கம் தருகின்றார்கள்.


மேன்மக்களின் வாழ்விலிருந்து…..

أخرج ابن أبي الدنيا عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ مرسلًا عن رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه قال
  أَوَّلُ مَنْ يَدْخُلُ مِنْ بَابِ الْمَسْجِدِ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَدَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ رَضِيَ الله عَنْه، فَقَالَ لَهُ رَجُلٌ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَذَا وَكَذَا فَأَيُّ عَمَلٍ لَكَ أَوْثَقُ تَرْجُو بِهِ؟ قَالَ
 إِنّي لَضَعِيفٌ وَإِنَّ أَوْثَقَ مَا أَرْجُو بِهِ لَسَلَامَةُ الصَّدْرِ وَتَرْكُ مَا لَا يَعْنِينِي
وأصله في الصحيح

முஹம்மத் இப்னு கஅபுல் குறழீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் முன்பாக திரண்டிருந்த சபையொன்றில்இன்று இந்த வாசலில் யார் முதலில் நுழைகின்றாரோ அவர் சுவனவாசி என்று மஸ்ஜிதுன் நபவீயின் முன் வாசலை காண்பித்துக் கூறினார்கள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதில் இருந்து மாநபித்தோழர்கள் அனைவரின் பார்வையும் அங்கு நோக்கி இருந்தது.

உள்ளே ஒருவர் நுழைகின்றார்! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! ஆம்! யூதபாதிரியாக இருந்து அல்லாஹ்வின் தூதரின் கரம்பிடித்து சத்திய சன்மார்க்கத்தை ஏற்ற அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் தான் அந்த சோபனத்தைத் தட்டிச் சென்றார்கள்.

சபையில் இருந்த ஒருவர் எழுந்து, நேராகச் சென்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள் சொன்ன சோபனத்தைச் சொல்லி விட்டுஉங்களுக்கு இந்த சோபனம் கிடைப்பதற்கு உங்களிடம் இடம் பெற்றிருக்கின்ற எந்த அம்சத்தை காரணமாக கூறுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள்நான் வயது முதிர்ந்தவன், உடல் பலவீனமானவன் ( என்னால் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் அல்லவா நான் அவைகளைக் காரணமாக கூறமுடியும் ) என்றாலும் மாநபி {ஸல்} அவர்கள் கூறிய சோபனத்தைப் பெறுவதற்கு காரணமாக என்னிடம் காணப்படுகிற இரண்டு அம்சங்களை ஆதரவு வைக்கிறேன்.

1. எப்போதும் என் உள்ளத்தை எந்தச் சலனமும் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன். 2. எனக்கு தேவை இல்லாத, அவசியம் இல்லாத எந்த ஒன்றிலும் நான் தலையிடுவதில்லை, அவைகளில் பங்கு கொள்ளாமல் விட்டு விடுவேன்என்று பதில் கூறினார்கள்.                     ( நூல்: இப்னு ஹிப்பான் )

و قَالَ وَهْبُ بْنُ مُنَبِّهٍ: كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلانِ بَلَغَتْ بِهِمَا عِبَادَتُهُمَا أَنْ مَشَيَا عَلَى الْمَاءِ، فَبَيْنَمَا هُمَا يَمْشِيَانِ فِي الْبَحْرِ إِذَا هُمَا بِرَجُلٍ يَمْشِي فِي الْهَوَاءِ فَقَالا لَهُ: يَا عَبْدَ اللَّهِ بِأَيِّ شَيْءٍ أَدْرَكْتَ هَذِهِ الْمَنْزِلَةَ؟ فَقَالَ: بِيَسِيرٍ مِنَ الدُّنْيَا
 فَطَمْتُ نَفْسِي عَنِ الشَّهَوَاتِ وَ كَفَفْتُ لِسَانِي عَمَّا لا يَعْنِينِي، وَ لَزِمْتُ الصَّمْتَ. فَإِنْ أَقْسَمْتُ عَلَى اللهِ أَبَرَّ قَسَمِي، وَ إِنْ سَأَلْتُهُ أَعْطَانِي”

வஹப் இப்னு முநப்பஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”பனூ இஸ்ரவேலர்களில் இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டதின் காரணமாக தண்ணீர் மீது நடக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

ஒருமுறை இருவரும் கடல் நீரின் மீது ஒரு நாள் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் காற்றின் துணை கொண்டு இருவரையும் கடந்து பறந்து கொண்டிருந்தார்.

இருவரும் அம்மனிதரை அழைத்து அல்லாஹ்வின் அடியாரே! எந்த இபாதத்தின் மூலம் இந்த அந்தஸ்தை அடைந்தீர்!” என்று கேட்டனர்.

அதற்கவர், “இந்த உலகத்தை மிகவும் இலகுவாக நான் கருதினேன். மனோ இச்சைகளை விட்டும் என் ஆன்மாவை திருப்பி இருந்தேன். தேவையில்லாத எந்த ஒரு விஷயத்தை பேசுவதில் இருந்தும் என் நாவை தடுத்து வைத்திருந்தேன்.

பெரும்பாலும் நான் மௌனத்தையே கடைபிடித்தேன். இதன் காரணத்தால் அல்லாஹ்வின் மீது நான் சத்தியமிட்டு கூறினால் அல்லாஹ் அதை நிறைவேற்றித் தருகின்றான். அவனிடத்திலே எதையாவது விரும்பி நான் கேட்டால் அவன் எனக்கு கொடுத்து விடுகின்றான்என்று அவர் கூறினார். ( நூல்: ஜாமிவுல் உலூமி வல் ஹிகம் லிஇமாமி இப்னு ரஜப் அல் ஹம்பலீ (ரஹ்).. இப்னு அபித்துன்யா (ரஹ்)… )

 دخل على أبي دجانة وهو مريض ، وكان وجهه يتهلل . فقيل له : ما لوجهك يتهلل ؟ فقال : ما من عمل شيء أوثق عندي من اثنتين : كنت لا أتكلم فيما لا يعنيني ، والأخرى فكان قلبي للمسلمين سليما

ஜைத் இப்னு ஸாலிம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூதுஜானா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவர்களை நான் நலம் விசாரிக்கச் சென்றேன்.

அப்போது, அவரின் முகம் ஒளியால் இலங்குவதைக் கண்டேன். அபூதுஜானா அவர்களே! இவ்வளவு சிரமமான நோயின் போதும் கூட உங்களின் முகத்தில் நோய்க்கான எந்தவொரு அறிகுறியும் இன்றி ஒளியால் இலங்குகின்றதேஎன்ன காரணம் என்று கேட்டேன்.

அதற்கவர்கள், அநேகமாக இந்த நிலைக்கு நான் வருவதற்கு என்னிடம் இருக்கும் இரு உயரிய பண்புகள் தான் காரணம் என உறுதியாகக் கூற முடியும். 1. தேவையில்லாத எந்தவொன்றையும் நான் பேசுவதில்லை. 2. அனைத்து முஸ்லிம்கள் விஷயத்தில் என் இதயத்தில் நான் எப்போதும் நல்லதையே நினைப்பேன்என்று பதில் கூறினார்கள்.                   ( நூல்: அல் Zஜ்லா லிஇமாமி அல் ஃகதாபி )

ذَكَرَ ابْنُ الجَوْزِيِّ: أَنَّ حَسَّان بن أَبِي سِنَانٍ -التَّابِعِيَّ مِن أَكَابِرِ الأَبْدَالِ- مَرَّ بِغُرْفَةٍ فَقَالَ: مَتَى بُنِيَتْ هَذِهِ؟، ثُمَّ أَقْبَلَ عَلَى نَفْسِهِ فَقَالَ: (يَا نَفْسُ) تَسْأَلِينَ عَمَّا لَا يَعْنِيكِ؟! لأُعَاقِبَنَّكِ بِصَوْمِ سَنَةٍ فَصَامَهَا

இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அப்தால்களில் ஒருவரான தாபிஈ ஹஸ்ஸான் இப்னு அபீ ஸினான் (ரஹ்) அவர்கள் ஒரு தெரு வழியாக நடந்து செல்கையில் ஒரு மாளிகையை கடந்து சென்றார்கள்.

அப்போது, அவர் மனதிற்குள்இந்த மாளிகை எப்போது கட்டப்பட்டது? ( நாம் இந்த வழியாகத்தானே செல்கின்றோம் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே? )  என்று நினைத்தார்களாம்.

சற்று நொடியில் உடனே தங்களின் நெஞ்சுப்பகுதியை நோக்கி ஆன்மாவே! உனக்கு அவசியம் இல்லாத ஒன்றைப் பற்றி நீ ஏன் கேட்கின்றாய்? உன்னை நான் ஓர் ஆண்டு நோன்பு நோற்று தண்டிப்பேன்என்றார்கள். அது போன்றே அவர்கள் ஓர் ஆண்டு நோன்பும் நோற்றார்கள்.                         ( இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்)…. )

قال عمرو بن قيس الملائي
 مر رجل بلقمان والناس عنده فقال له : ألست عبد بني فلان ؟ قال : بلى . قال : الذي كنت ترعى عند جبل كذا وكذا ؟ قال : بلى . فقال : فما بلغ بك ما أرى ؟ قال : صدق الحديث ، وطول السكوت عما لا يعنيني

அம்ர் இப்னு கைஸுல் மலாஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ”அறிவு ஞானக்கடல் லுக்மான் {அலை} அவர்கள் மக்களோடு அமர்ந்து உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அவையைக் கடந்து சென்ற ஒருவர் லுக்மான் {அலை} அவர்களை நோக்கிநீர் இன்ன குடும்பத்தாரிடம் அடிமைப் பணி செய்தவர் தானே? இன்ன மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் தானே? என்று கேட்டார்.

அதற்கு, லுக்மான் {அலை} அவர்கள்ஆம்என்று பதில் கூறினார்கள். அப்போது, அவர்எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் இப்படி இப்படி எல்லாம் இருந்த நீர் எப்படி இவ்வளவு உயர்வான அந்தஸ்தைப் பெற்றீர் என்பது தான்என்றார்.

அதற்கு லுக்மான் {அலை} அவர்கள்உண்மை பேசுதலும், எனக்கு தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடாமல் அமைதி காத்ததும் தான் என்னுடைய இந்த உயர்வுக்கு காரணம்என்று பதில் கூறினார்கள்.   ( நூல்: இப்னு அபித்துன்யா )

وقال مُوَرِّق العِجْلي
أمرٌ أنا في طلبه منذ كذا وكذا سنة ، لم أقدر عليه ، ولست بتارك طلبه أبدا ، قالوا
 وما هو ؟ قال : الكف عما لا يعنيني .
رواهما ابن أبي الدنيا

முவர்ரிக்குல் இஜ்லீ (ரஹ்) அவர்கள் நான் நீண்ட நெடுங்காலமாக ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். அது இது வரை கிடைக்கவும் இல்லை, அது கிடைக்கும் வரை நான் தேடுவதை விடப்போவதும் இல்லைஎன்று தங்களின் சபையில் இருந்தவர்களிடம் கூறினார்கள்.

சபையில் இருந்த மக்கள் இமாம் அவர்களே! அப்படி என்ன அது? என்று கேட்க, “எனக்கு தேவையில்லாத எந்த ஒன்றிலும் தலையிட விடாமல் என்னை பாதுகாக்கும் அம்சம் தான் அதுஎன்று பதில் கூறினார்கள்.

                                               ( நூல்: இப்னு அபித்துன்யா )

رُوِيَ عَنْ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ قَالَ لَعِكْرِمَةَ: اخْرُجْ يَا عِكْرِمَةُ فَأَفْتِ النَّاسَ، وَ مَنْ سَأَلَكَ عَمَّا لَا يَعْنِيهِ فَلَا تُفْتِهِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இக்ரிமா (ரலி) அவர்களிடம்இக்ரிமாவே! நீர் என்னிடம் தேவையான அள்வு மார்க்கக் கல்வி பயின்று விட்டீர்! இனி நீர் மக்களுக்கு மார்க்கத்தீர்ப்பு வழங்கலாம்! ஆனால், ஒரு நிபந்தனை தேவை இல்லாத, அவசியம் இல்லாத ஏதேனும் ஒரு விஷயம் குறித்து யாரேனும் மார்க்கத்தீர்ப்பு கேட்டால் நீர் வழங்கிட வேண்டாம்!” என்று கூறினார்கள்.

தேவையில்லாத, அவசியமில்லாத பேச்சுக்களைப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள்….

தொழில்நுட்பம் வளராதிருந்த விமான சேவையின் துவக்க காலத்தில் விமானம் ( டேக் ஆஃப் ) உயரே எழும்பும் போதும், விமானம் ( லாண்டிங் ) தரையிறங்கும் போதும் ஏற்படுகிற விபத்துகள் எதனால் என்பது தெரியாமலே இருந்தது.

இந்நிலையில், விமான சேவையை மேற்பார்வையிடும் ஃபெடரல் விமான நிர்வாக அமைப்பு ( Federal Aviation Adminstration – FAA ) 1981 –இல் “ஸ்டெரையில் காக்பிட்” ( Sterile Cockpit ) என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது.

ஸ்டெரையில் என்பது கிருமிகள் இல்லாத, மாசு நீக்கப்பட்டது என்று பொருள். காக்பிட் என்பது பைலட்கள் அமரும் இடம். அதாவது விமான ஓட்டிகள் அமர்ந்து இருக்கும் இடம் எவ்வித மாசும் இல்லாமல் இருந்தால் விபத்துகள் இல்லாமல் விமான பயணம் அமையும் என்பது கோட்பாட்டின் நோக்கம்.

அதாவது, விமானத்தை செலுத்தும் போது முக்கிய தருணங்களில் விமானத்தை செலுத்தத் தேவையான அத்தியாவசிய பேச்சைத் தவிர வேறெதுவும் பேசக்கூடாது என்ற கோட்பாடு.

10,000 அடி உயரத்திற்கு கீழே விமானம் பறக்கும் தருணங்கள் முக்கியமானவை ஏனெனில், ஒன்று விமானம் ( டேக் ஆஃப் ) உயரே எழும்புகிறது அல்லது விமானம் ( லாண்டிங் ) தரையிறங்குகின்றது என்று அர்த்தம் மீறி பேசி, விபத்துக்குள்ளாகாமல் இறங்கினால் பணி நீக்கம் உறுதி என்பது தான் FAA –வின் நிலைப்பாடு.

இந்த “ஸ்டெரையில் காக்பிட்” ( Sterile Cockpit ) உருவாக 1974 –ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் விமான விபத்து தான் அடிப்படை காரணம்.

9/11/1974 அன்று காலை அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான சார்ல்ஸ்டன் நகரில் இருந்து வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ஷார்லட் என்ற ஊருக்கு “ஈஸ்டர்ன் ஏர் பஸ் 212” பறந்து கொண்டிருந்தது.

ஷார்லெட்டில் அன்று பனி மூட்டம் கூட. ஷார்லெட் விமான நிலையத்தில் இறங்கிக் கொண்டிருந்த விமானம் திடீரென்று ரன்வேக்கு சற்று முன்பாக விழுந்து விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த 72 பேரும் உயிர் இழந்தனர்.

ஆரம்பத்தில் விபத்துக்கான காரணமாக பனி மூட்டம் தான் என சொல்லப்பட்டது. பின்னர், விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்த தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ( National Transportation Safety Board – NTSB ) தன் அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கையில் இருந்ததைக் கண்ட மொத்த உலகமும் ஸ்தம்பித்தே போனது. ஆம்! விபத்துக்கு காரணம் பனி அல்ல, பைலட்டுகள் நாக்கிலிருந்த சனி! தான்.

பைலட்டுகள் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு விமானத்தை தரையிறக்க முயன்றதால் விபத்து என்பது ஆய்வில் தெரிய வந்தது.

அப்படி என்ன பேசியிருப்பார்கள் வெட்டியாக, விமானிகள் உரையாடலைப் பதிவு செய்யும் கருவியில் ( Cockpit Voice Recorder ) பதிவானது.

அரசியல் கதைகளை பேசியவாறும், செகண்ட் ஹாண்ட் கார் வாங்குவது பற்றி பேசியவாறும் விமானத்தை தரையிறக்கி இருக்கின்றனர்.

( ஆதாரம்: தமிழ் ஹிந்து நாளிதழ் 11/3/17 சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ”வெட்டிப் பேச்சுக்களை வெட்டி வையுங்கள்” என்ற கட்டுரையிலிருந்து…. )

தேவையில்லாத சில நிமிட பேச்சுகள் விலை மதிப்பிட முடியாத 72 உயிர்கள் பலியாகுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

روى ابن أبي شيبة عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
أَكْثَرُ النَّاسِ ذُنُوبًا، أَكْثَرُهُمْ كَلَامًا فِيْمَا لَا يَعْنِيْهِمْ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அதிகமாக பாவம் செய்யும் மனிதர்கள் யாரெனில், தேவையில்லாமல் அதிகம் பேசுபவர்களே!” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                ( நூல்: இப்னு அபீ ஷைபா )

وروى الترمذي عن أنس بن مالك رضي الله عنه أن رجلًا من الصحابة توفي، فقال رجل: أبشر بالجنة، فقال رسول الله صلى الله عليه وسلم
 « لَا تَدْرِيْ لَعَلَّهُ تَكَلَّمَ بِمَا لَا يَعْنِيْهِ، أَوْ بَخِلَ بِمَا لَا يُغْنِيهِ »

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பங்கெடுத்திருந்த ஓர் ஜனாஸாவில் இறந்து போன நபித்தோழர் குறித்து ஒருவர் ”சுவனத்தைக் கொண்டு நீர் சோபனம் பெறுவீராக!” என்று கூறினார்.

அது கேட்ட நபி {ஸல்} அவர்கள் நீர் அப்படி சொல்ல வேண்டாம்! ஏனெனில், அவர் அவருக்கு தேவையில்லாத ஏதாவது ஒன்றை பேசியிருக்கலாம்; மேலும், அவருக்கு தேவை இல்லாத சாதாரணமான ஒன்றில் கஞ்சத்தனம் செய்திருக்கலாம்” என்று கூறினார்கள்.

இன்னும், சில அறிவிப்புக்களில் இறந்து போன அந்த நபித்தோழர் ஷஹீத் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.                                 ( நூல்: திர்மிதீ )

சில போது வருத்தப்பட நேரிடும்….

وروى الإمام محمد بن الحسن الشيباني تلميذ الإمام أبي حنيفة النعمان في كتابه
الآثار خبراً عن عمر ،
 قال أخبرنا أبو حنيفة عن علي بن الأقمر قال: كان عمر بن الخطاب رضي الله عنه يطعم الناس بالمدينة وهو يطوف عليهم بيده عصا، فمر برجل يأكل بشماله، فقال: يا عبد الله كل بيمينك، قال: يا عبد الله إنها مشغولة، قال فمضى، ثم مر به وهو يأكل بشماله، فقال: يا عبد الله كل بيمينك، فقال: يا عبد الله إنها مشغولة، فتركه ومضى، ثم مر به ثالثة فرآه يأكل بشماله، فقال
 يا عبد الله كل بيمينك، قال: يا عبد الله إنها مشغولة، قال عمر: وما شغلها؟ قال: أصيبت يوم مؤتة، قال: فجلس عمر رضي الله عنه عنده يبكي، فجعل يقول: من يوضئك ؟ من يغسل رأسك وثيابك؟ من يصنع كذا وكذا؟ فدعا له بخادم وأمر له براحلة وطعام وما يصلحه وما ينبغي له

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸன் அஷ்ஷைபானி (ரஹ்) அவர்கள் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் வாயிலாக உமர் (ரலி) அவர்கள் குறித்த ஒரு நிகழ்வை பதிவு செய்கின்றார்கள்.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் மதீனா நகர மக்களுக்கு விருந்தொன்று கொடுத்தார்கள்.

அந்த விருந்தில் உமர் (ரலி) அவர்கள் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, ஒருவரைக் கடந்து சென்ற அவர்கள் அப்படியே நின்று விட்டார்கள். ஆம்! அங்கே ஒருவர் இடது கையால் சாப்பிடுக் கொண்டிருந்தார். அவரின் அருகே சென்ற உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் அடியாரே! வலது கையால் உண்பீராக! என்றார்கள்.

அதற்கவர், உமர் (ரலி) அவர்களிடம்அல்லாஹ்வின் அடியாரே! அந்த கை ஏற்கனவே வேறு ஒரு பயன்பாட்டில் இருக்கிறதுஎன்று பதில் கூறினார்.

இதற்குப் பிறகும் உமர் (ரலி) அவர்கள் இரண்டாவது முறையாக அந்த மனிதரை இடது கையால் சாப்பிடுவதைக் காணவே, முன்பு போல அருகே அமர்ந்து கூறினார்கள். அவரும் முன்பு போலவே பதில் கூறினார்.

மூன்றாவது முறையாக, கோபத்தோடு அப்படி என்னத்தான் அந்த வலது கையில் வைத்திருக்கின்றீர்? என்று நின்று கொண்டே கேட்டார்கள்.

கையோடு சேர்த்து மூடியிருந்த துணியை அகற்றிய அவர் உமர் (ரலி) அவர்களிடம்அல்லாஹ்வின் அடியாரே! மூத்தா யுத்தகளத்தில் அல்லாஹ்வின் பாதையில் போராடிய போது எதிரி ஒருவனால் இந்தக் கை சிதைக்கப்பட்டு விட்டது. என்னால் வலது கையை பயன்படுத்த முடியாதுஎன்று அந்தப் பகுதியைக் காட்டி கூறினார்கள்.

அதைப் பார்த்து நிலைகுலைந்த உமர் (ரலி) அவர்கள் அவர் அருகே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பின்பு ஒருவாராக தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டுஅல்லாஹ்வின் அடியாரே! உமக்கு தேவையான பணிவிடைகளை செய்து கொடுப்பது யார்? உமக்கு ஆடை அணிவித்து விடுவது யார்? உம்மை குளிக்க வைப்பது யார்? உம்முடைய இதர வேலைகளைச் செய்வது யார்? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டே அழுது புலம்பினார்கள்.

அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் தங்களின் பணியாளரை அழைத்து அந்த மனிதருக்கு தேவையான வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுக்கச் சொன்னார்கள். மேலும், தேவையான உணவும், வாகனமும் கொடுத்து அனுப்பி வைக்கச் சொன்னார்கள். அவரின் மன்னிப்பைப் பெறுவதற்காக வேண்டி”.

        ( நூல்: அல் ஆஸார் லிஇமாமி முஹம்மது ஹஸன் அஷ்ஷைபானி )

ஒரு சொல்… ஒரு கண்ணாடி…

فقال ابن عباس: نزلت يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ   في ثابت بن قيس بن شماس كان في أذنه وقر، فإذا سبقوه إلى مجلس النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أوسعوا له إذا أتى حتى يجلس إلى جنبه ليسمع ما يقول، فأقبل ذات يوم وقد فاتته من صلاة الفجر ركعة مع النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فلما انصرف النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أخذ أصحابه مجالسهم منه، فربض كل رجل منهم بمجلسه، وعضوا  فيه فلا يكاد يوسع أحد لاحد حتى يظل الرجل لا يجد مجلسا فيظل قائما، فلما انصرف ثابت من الصلاة تخطى رقاب الناس ويقول: تفسحوا تفسحوا، ففسحوا له حتى انتهى إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وبينه وبينه رجل فقال له: تفسح. فقال له الرجل: قد وجدت مجلسا فأجلس! فجلس ثابت من خلفه مغضبا، ثم قال: من هذا؟ قالوا فلان، فقال ثابت: ابن فلانة! يعيره بها، يعني أما له في الجاهلية، فاستحيا الرجل، فنزلت.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்.

 இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” எனும் ( அல்குர்ஆன்  :49: 11 ) இறைவசனம் பின் வரும் வரலாற்றுப் பிண்ணனியில் இறக்கியருளப்பட்டது.

நபித்தோழர் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலி) அவர்கள் செவிப்புலன் குறைபாடு கொண்டவராக இருந்தார்கள். இந்த குறைபாட்டை அறிந்திருந்த மற்ற நபித்தோழர்கள் மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு ஸாபித் (ரலி) வந்தால் மாநபி {ஸல்} அவர்களின் உரையாடலை கேட்கும் பொருட்டு வழிவிட்டு வசதி செய்து கொடுப்பார்கள்.
அவரும் மாநபி {ஸல்} அவர்களுக்கு அருகாமையில் அமர்ந்து உரைகளை செவிமடுப்பார்.

ஒரு நாள் அதிகாலைத் தொழுகையில் பங்கெடுக்க வந்த ஸாபித் (ரலி) அவர்கள் ஒரு ரக்அத்தை தவற விடுகின்றார்கள். கடைசி வரிசையில் நின்று தொழுகின்றார்கள்.

 மாநபி {ஸல்} அவர்கள் தொழுது முடித்ததும், உடனடியாக தோழர்களை நோக்கி உரையாற்ற ஆரம்பித்தார்கள். மாநபித்தோழர்களும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சபையை பூர்த்தியாக்கினர்.

விடுபட்ட ஒரு ரக்அத்தை முடித்துக் கொண்டு வந்த ஸாபித் (ரலி) அவர்கள் சபை முழுவதும் நிரம்பி விட்டதைக் காண்கின்றார்கள்.

சபையின் கடைசிப் பகுதியில் இருந்து ஒவ்வொருவரிடமும் “எனக்கு நபியின் அருகாமையில் அமர வசதி ஏற்படுத்தி தாருங்கள்” என்று கூறிக்கொண்டே நபித்தோழர்கள் ஏற்படுத்திக் கொடுத்த வழியின் வாயிலாக மாநபி {ஸல்} அவர்களின் சமீபமாக வந்து விடுகின்றார்கள்.

ஸாபித் (ரலி) அவர்களுக்கும் மாநபி {ஸல்} அவர்களுக்கும் இடையே ஒரேயொரு நபித்தோழர் மாத்திரம் தான் இருந்தார் அவரும் வழிவிட்டு விட்டால் மாநபி {ஸல்} அவர்களின் அருகே அமர்ந்து உரையை செவிமடுக்க இயலும் என்ற சூழ்நிலை.

அவருக்கு அருகே சென்று “எனக்கு நபியின் அருகாமையில் அமர வசதி ஏற்படுத்தி தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கவர், ( ஸாபித் (ரலி) அவர்களின் குறைபாடு பற்றி அறியாதிருக்க கூடும் ) உங்களுக்கு கிடைத்த இடத்திலேயே அமர்ந்து கேளுங்கள்!” என்றார்.

எல்லோரும் வழி விட இவர் மட்டும் வழிவிட மறுத்து விட்டாரே எனும் கோபத்தோடு அவருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார்கள். அதிகாலையின் இருள் படிந்திருந்ததால் வழிவிட மறுத்தவர் யார் என்பதை ஸாபித் (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள இயலவில்லை.

சற்று நேரத்தில் அதிகாலை இருள் விலகி, ஒளி படர ஆரம்பிக்கும் போது முன்னாள் இருப்பவரை அடையாளம் கண்டு கொண்ட ஸாபித் (ரலி) அவர்கள் “அவரின் தாயார் ஜாஹிலிய்யாக் காலத்தில் கொண்டிருந்த நடைமுறையைச் சுட்டிக் காட்டி “ஓ! இந்த பெண்மணியின் மகன் தானே நீர்!” என்று சப்தமாகக் கேட்டு விட்டார்கள்.

சபையில் இருந்த மற்றெல்லா மாநபித்தோழர்களின் காதுகளில் அவர்கள் கேட்ட கேள்வி விழுந்ததும் மொத்தமாக எல்லோரும் அந்த நபித்தோழரைப் பார்க்க, அந்த நபித்தோழருக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் வெட்கத்தால் தலை குனிந்தார். அப்போது தான் வல்ல அல்லாஹ் இந்த இறைவசனத்தை இறக்கியருளினான்.                                  ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

தேவையில்லாத, அவசியமில்லாதவைகளில் ஈடுபடக்கூடாது என்றதும் பேசுவது மட்டும் தான் நமக்கு ஞாபகம் வருகின்றது. ஆனால், மனித உடலின் அனைத்துப் பாகங்களையும் தேவையில்லாத, அவசியமில்லாத அனைத்தில் இருந்தும் விலக்கி வைக்க வேண்டும் என்பதை பின் வரும் நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَحْيُوا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَسْتَحْيِي وَالْحَمْدُ لِلَّهِ، قَالَ لَيْسَ ذَاكَ، وَلَكِنَّ الاسْتِحْيَاءَ مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ: أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى، وَالْبَطْنَ وَمَا حَوَى، وَلْتَذْكُرْ الْمَوْتَ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ اسْتَحْيَا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நாங்கள் வெட்கப்படத்தானே செய்கின்றோம்!” என்று கூறினோம்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீங்கள் சொல்வது போன்று அல்ல, நான் சொல்கிற வெட்கம் என்பது! “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என்றால் நீங்கள் தலையையும், அதைச் சுற்றியுள்ள இதர உறுப்புக்களையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

வயிற்றையும், வயிற்றுக்கு மேலும் வயிற்றுக்கு கீழும் இருக்கிற உறுப்புக்கள் அனைத்தையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.

மேலும், மரணத்தையும், மண்ணறை வாழ்வையும் நினைவு கூர்வதும், மறுமை வாழ்விற்காக இவ்வுலக மோகத்தை விட்டு விடுவதும் தான்என்று பொருள் ஆகும்.

மேலும், எவர் மேற்கூறிய அம்சங்களை சரிவரச் செய்கின்றாரோ அவர்அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்பட்டு விட்டார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          ( நூல்: திர்மிதீ )

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் நமக்கு தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும், பேசுவதில் இருந்தும், இதர உடல் உறுப்புக்களை பயன்படுத்துவதில் இருந்தும் பாதுகாத்து அருள்வானாக!

அவனுடைய எல்லா வகையான ரஹ்மத்துகளையும், பரக்கத்துகளையும் பெற்ற மேன்மக்களாக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!!

9 comments:

  1. 1981ல் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாட்டை 1974 ல் நடந்த விபத்தில் எப்படி பயன்படுத்தியிருக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. 11/03/2017 தேதியிட்ட தமிழ் தி இந்து நாளிதழில் வெளியான வெட்டிப் பேச்சுக்களை வெட்டி வையுங்கள் எனும் கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள்! இன்னும் சொல்லப்போனால் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் தான் இந்த தலைப்பின் கீழ் நான் மேற்கண்ட கட்டுரையை வடிவமைத்தேன்.

      Delete
    2. 11/03/2017 தேதியிட்ட தமிழ் தி இந்து நாளிதழில் வெளியான வெட்டிப் பேச்சுக்களை வெட்டி வையுங்கள் எனும் கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள்! இன்னும் சொல்லப்போனால் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் தான் இந்த தலைப்பின் கீழ் நான் மேற்கண்ட கட்டுரையை வடிவமைத்தேன்.

      Delete
    3. 11/03/2017 தேதியிட்ட தமிழ் தி இந்து நாளிதழில் வெளியான வெட்டிப் பேச்சுக்களை வெட்டி வையுங்கள் எனும் கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள்! இன்னும் சொல்லப்போனால் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் தான் இந்த தலைப்பின் கீழ் நான் மேற்கண்ட கட்டுரையை வடிவமைத்தேன்.

      Delete
    4. 11/03/2017 தேதியிட்ட தமிழ் தி இந்து நாளிதழில் வெளியான வெட்டிப் பேச்சுக்களை வெட்டி வையுங்கள் எனும் கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள்! இன்னும் சொல்லப்போனால் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் தான் இந்த தலைப்பின் கீழ் நான் மேற்கண்ட கட்டுரையை வடிவமைத்தேன்.

      Delete
  2. 1981ல் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாட்டை 1974 ல் நடந்த விபத்தில் எப்படி பயன்படுத்தியிருக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. விமானிகள் உரையாடலைப் பதிவு செய்யும் கருவி( Cockpit Voice Recorder ) வெறுமெனே பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. இந்த விபத்து நடந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் டேக் ஆஃப் மற்றும் லாண்டிங் சமயத்தில் கட்டாயம் பேசக்கூடாது என்கிற சட்டத்தை FAA கோட்பாடாக மாற்றியது. இந்த கோணத்தில் இதை நீங்கள் அணுகினீர்கள் என்றால் எந்த முரண்பாடும் தோன்றாது. ஜஸாக்கல்லாஹு கைரா சகோதரரே!

      Delete
    2. விமானிகள் உரையாடலைப் பதிவு செய்யும் கருவி( Cockpit Voice Recorder ) வெறுமெனே பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. இந்த விபத்து நடந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் டேக் ஆஃப் மற்றும் லாண்டிங் சமயத்தில் கட்டாயம் பேசக்கூடாது என்கிற சட்டத்தை FAA கோட்பாடாக மாற்றியது. இந்த கோணத்தில் இதை நீங்கள் அணுகினீர்கள் என்றால் எந்த முரண்பாடும் தோன்றாது. ஜஸாக்கல்லாஹு கைரா சகோதரரே!

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! இன்று உலகில் பல்வேறு பிரச்சனைகளை மனிதர்கள் சந்திப்பதற்கு காரணமே தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதால் தான். அதை தவிர்த்தாலே அருமையான வாழ்வை பெறமுடியும். தங்களின் ஆக்கம் உயரிய படிப்பினையை வழங்கியுள்ளது உஸ்தாத்! جزاكم الله خيرا كثيرا يا أستاذ

    ReplyDelete