Thursday, 19 December 2019

வேர்களை வீழ்த்தத் துடிக்கும் முனை மழுங்கிய கோடாரிகள்!!!


வேர்களை வீழ்த்தத் துடிக்கும்
முனை மழுங்கிய கோடாரிகள்!!!





இந்திய கலாச்சாரத்தை இந்து விழுமியங்களின் அடிப்படையில் வரையறுத்திடும் சித்தாந்தமான இந்துத்துவாவின் சிந்தனை கொண்ட அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகிய இரு மூர்க்கத்தனமான தலைமையில் அமைந்திருக்கும் மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக 2019/மே ஆட்சியைப் பிடித்தது.

இந்திய தேசத்தின் சட்டத் திருத்த வரலாற்றில் ஆறு மாதங்களுக்குள்ளாக 31 சட்டத் திருத்தங்களை, சட்ட மாற்றங்களை, சட்ட ரத்துக்களை செய்து இந்தியாவின் மதச் சார்பின்மைக்கே சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது.

முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்று பயணித்துகுடியுரிமை திருத்த சட்ட(த்தை) (CAB) மசோதாவை கடந்த 11/12/2019 அன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, இரு அவைகளிலும் நிறைவேற்றி, 12/12/2019 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு 13/12/2019 நள்ளிரவு முதல் அமல் படுத்தியதாக அறிவித்து இந்திய ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இது நாள் வரைஊடுருவியுள்ளவர்கள், கரையான்கள், வெளியாட்கள் என்றெல்லாம் முஸ்லிம் சமூகத்தினரை முத்திரை குத்தி மக்களிடையே வெறுப்பு விஷத்தை மறைமுகமாக விதைத்து வந்த பிஜேபி அரசுகுடியுரிமை திருத்த சட்டத்தின்மூலம் நேரடியாகவே புறம் தள்ள முயற்சித்திருப்பதை உணர முடிகின்றது.

இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை தேடி முஸ்லிம்களை வைக்கும்குடியுரிமைப் பதிவேடு ஆவணம்” (CAA) என்கிற சட்டத்தை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரும் முடிவில் உறுதியாக பாஜக அரசு இருக்கின்றது.
தொடர்ந்து மதமாற்ற தடைச்சட்டம், பொதுசிவில் சட்டம், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற தடைச்சட்டம் என 2020 க்குள் இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையிலான சட்ட திருத்தங்களை, சட்ட மாற்றங்களை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கின்றது.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் அடையாளங்களையும், ஐகான்களையும் அழிப்பது அல்லது கைப்பற்றுவது ஆகியவை தான் பாஜக வின் அரசியல். அதை செயல்படுத்த எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதை உணத்துவது தான் இந்த குடியுரிமை திருத்த சட்டம் ஆகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டு மக்கள் இவ்வளவு எதிர்ப்பை, குறிப்பாக வட கிழக்கு மாநில மக்கள் இவ்வளவு எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என கனவிலும் கூட பாஜக எதிர்பார்க்கவில்லை.

இந்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு சர்வதேச அரங்கினுள் கூட ஒலித்துக் கொண்டு இருப்பதை நாம் ஊடகத்தின் வாயிலாக அறிகின்றோம்.

ஐ. நா., மற்றும் அமெரிக்காவின் மத அமைப்பு ஆணையம் ஆகியவை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

உலகின் பல நாடுகள் தங்களின் மக்களை இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என சுற்றறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மேற்குவங்கம், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, அஸ்ஸாம், மேகாலயா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் தன்களின் மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்தப் போவதில்லை என்றும், உடனடியாக இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், சமூக பிரபலங்கள், சகோதர சமய மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என ஒட்டு மொத்த தேசமும் தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள், புறக்கணிப்புகள், மறியல்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், எம்பி அசாதுதீன் ஒவைசி, இந்திய ஐக்கிய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் நான்கு எம்பிக்கள் உள்ளிட்ட மொத்தம் 60 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மத ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அரசமைப்பின் சட்டப்பிரிவு 14ன் கீழ் தவறு என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற அடையாளத்தை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்போது வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் அனைத்து அசாம் மாணவர்கள் யூனியன், அசாமின் எதிர்க்கட்சி தலைவர் டெபப்ரடா சைகியா, அசாம் கனா பரிஷத் போன்ற அசாமின் பல தரப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. 1986 அசாம் ஒப்பந்தத்தை மீறும் விதமாக இது அமைந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வாறான அணுகுமுறையை கடைபிடிக்க  வேண்டும் என்பதை இஸ்லாமிய வழிகாட்டுதலோடு அறிந்து கொள்ள வேண்டிய கடமையும் கடப்பாடும் இந்த உம்மத்திற்கு இருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன?

1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை 2016ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள்ளாகக் கடந்த அரசின் பதவிக் காலம் முடிவடைந்ததால் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது.

பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றவுடன் புதிதாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதால் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

மசோதாவில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள்

புதிய மசோதாவின்படி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி போதிய ஆவணம் இல்லை என்றாலும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை அளிக்கப்படுபவர்களுக்கு அவர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்டுள்ள சட்ட விரோதமாக குடியேறியதற்கான வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

மேலும், அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. எல்லைப்புற ஒழுங்குமுறை ஒப்பந்தத்துக்கு உட்பட்ட அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?

இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த மசோதாவுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மியான்மரிலிருந்து தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் இதில் விடுப்பட்டுள்ளார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.

தமிழகத்தின் 24 மாவட்டத்தில் 107 முகாமில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் 59716 பேர் இருக்கிறார்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரானது எனச் சுட்டிக் காட்டும் சு.வெங்கடேசன், இந்தச் சட்டத் திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது, அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் கொடுக்கிறது எனக் கூறியுள்ளார்.

இந்தியக் குடிமக்களிடம் மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால், சாதியின் பெயரால் பாரபட்சம் காட்டக் கூடாது என அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆம் பிரிவு சொல்கிறது. ஆனால், புதிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிட்ட மதத்தினருக்கும், குறிப்பாக தமிழ் இனத்திற்கும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்படுகிறது..

இலங்கையின் கோரப்பிடியில் இருந்து தப்பி தமிழகத்தில் அகதிகளாக குடியேறியவர்கள் பெரும்பாலும் இந்துக்கள். ஆனால், இந்த மசோதவில் அவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே, வடக்கில் இருக்கும் இந்துக்களுக்கு ஒரு நியாயம், தெற்கில் இருக்கும் இந்துக்களுக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அண்டை நாட்டைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டது என அரசால் இது நியாயப்படுத்தப்படுகிறது. அப்படியென்றால் மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள், பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் அகமதியா இஸ்லாமியர்கள் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனப் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் 2ஆம், 3ஆம் குடிமக்களாகத்தான் வாழ வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வாக்கர் கூறும் கொள்கையைப் பின்பற்றும் கட்சியாக பாஜக இருக்கலாம். ஆனால், பாஜக ஆட்சி செய்யும் மத்திய அரசு எல்லோருக்குமானது. அரசியலமைப்பு சொல்லும் அனைவரும் சமம் என்பதை மதித்து சட்டங்களை இயற்ற வேண்டும். மத, இனப் பாகுபாடு காட்டக் கூடாது. பாகுபாட்டிற்கு வழிவகை செய்யும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தங்கள் கடந்து வந்த பாதை ஓர் வரலாற்றுப் பார்வை…

1. CITIZENSHIP (AMENDMENT) ACT 1986 WEF 1ST JULY 1987

26 நவம்பர் 1949 லிருந்து 1 ஜூலை 1987 முன்பு வரை இந்திய மண்ணில் பிறக்கும் யாரும் குடிமகனாகலாம். (PURE JUS SOLI) இந்த சட்ட திருத்த்த்தின் படி 1 ஜூலை 1987க்கு பின் பிறந்த ஒருவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராயிருந்தால் மட்டுமே அவர் குடிமகனாக தகுதி உள்ளவர் ஆவார்.

(2003 திருத்த்த்திற்கு பின் ஒரு பெற்ற்ரோர் இந்தியராக இருந்தாலும் இன்னொரு பெற்றோர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லாமல் இருத்தல் வேண்டும்) இதில் தூதரக அதிகாரிகளின் குழந்தைகள், பகை நாட்டவரின் குழந்தைகள் கணக்கில் எடுக்கப்படாது.ழ். இந்த சட்ட திருத்த்தின் படி ஒரு புகழ் வாய்ந்த வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றம் சந்தித்தது.

அது நமக்கு ஒரு தெளிவை கொடுக்குமானால் அதையும் தெரிந்து கொள்ளலாம். திபெத்தின் முன்னால் ஆட்சியாளரின் குடும்பம் டேராடூனில் வசிக்கிறது. இதில் அடுத்த மன்னராக தலாய் லாமாவால் 2004ல் அறிவிக்கப்பட்ட இளவரசரும் இருக்கிறார். இவர்கள் இந்தியாவில் தஞ்சம் இருக்கிறார்கள். இச்சிறுவனின் அக்கா 1986 ஏப்ரலில் இந்தியாவில் பிறந்தவர். இவரின் தாய் தந்தை (திபெத்தின் மன்னர், அரசி) இருவரும் வெளிநாட்டவர் என்பதால் இந்திய வெளியுறவுத்துறை இப்பெண்ணின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்த்து. நீதிமன்றத்தின் படியேறினார்.

1986 சட்ட திருத்த்த்திற்கும் அது விதித்த தேதிக்கும் முன்பே இவர் பிறந்தவர் ஆதலால் இவருக்கு குடியுரிமைய்ம் பாஸ்போர்ட்டும் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.இது இவருக்கு மட்டும்தான். இவரது இளைய சகோதர சகோதரிகளுக்கு கிடையாது.

ஏனெனில் அவர்கள் 1ஜூலை 1987க்கு பின் பிறந்தவர்கள். ஏனெனில் அவர்களின் பெற்றோரில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.

2. CITIZENSHIP AMENDMENT ACT 1992 : 1955 சட்டப்படி,

26 ஜனவரி 1950 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் பிறக்கிறார். அப்போது அவரின் தந்தை இந்திய குடிமகனாக இருந்திருந்தால் இவர் இந்திய குடிமகனாக தகுதி உள்ளவராகிறார். 1992ம் சட்டப்படி மேற்கண்ட நிபந்தனையில் தாயும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். முன்பே தாயை கருத்தில் கொள்ளாமல் போனது வியப்பே அல்லவா?
CITIZENSHIP (AMENDMENT) ACT 2003 :3 DEC 2004 ல் அமலுக்கு வந்த இத்திருத்த்த்தின் படி, இந்தியாவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்க, பெற்றோரில் ஒருவர் மட்டும் இந்தியராக இருக்கும் பட்சத்தில், இன்னொருவர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவராக இருக்க்க்கூடாது. அதே தேதிக்கு பின் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு ஒருவருட காலத்திற்க்குள் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால் அக்குழந்தை இந்தியனாகும் தகுதியை இழக்கும். இந்த ஒரு வருட காலத்திற்கு பின் பதிவு செய்ய விரும்புபவர்கள் மத்திய அரசின் சிறப்பு அனுமதியை பெறவேண்டும். அப்போது அக்குழந்தை பேரில் வேறு எந்த நாட்டு பாஸ்பொர்ட்டும் இல்லை என உறுதி கூற வேண்டும். மேலும் இச்சட்டம் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை கேட்பதை தடை செய்து அவர்கள் REGISTRATION மூலம் குடியுரிமை கேட்க வகை செய்கிறது. இந்திய வம்சாவளிக்கு என்றே குடியுரிமையை பெறும் வழியை சீர் செய்த்து இந்த 2003 திருத்தம்.

3. Citizenship (Amendment) Ordinance 2005:

எல்லா குடியுரிமை திருத்த சட்டங்களிலும் இச்சட்டம் மட்டுமே, இரு அவைகளும் இல்லாதபோது ஜனாதிபதியின்PROMULGATION OF ORDINANCE POWER படி இயற்றப்பட்ட்து. OVERSEAS CITIZEN OF INDIA என்று பதிவு செய்த ஒருவர் 5 வருடங்களுக்கு பின்னர் இந்திய குடிமகனாக விண்ணப்பிக்கலாம்.

ஆனால் விண்ணப்பிப்பதற்கு முன்இரண்டு வருடம் அவர் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். இது 2005 திருத்த்த்திற்கு பின் ஒரு வருடம் என குறைக்கப்பட்டது.

குடியுரிமையை பெறும் வழிகள்: பிறப்பினால் 2) வம்சாவளி பதிவின் மூலம் இந்திய குடிமகனாக ஏற்றுக்கொள்ளல் மூலம் இந்தியாவில் புதிய பகுதிகளை இணைப்பதின் மூலம் குடியுரிமையை இழத்தல் : துறத்தல், முடிவுக்கு வருதல், நீக்குதல் CITIZENSHIP (PONDICHERRY) ORDER 1962: 1954ல் பிரஞ்சு இடமிருந்து இந்தியாவில் சேர்ந்த பாண்டிச்சேரி இணைவினால் அப்பகுதி மக்களுக்கு விருப்பதின் பேரில் குடியுரிமையை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

குடியுரிமையை இழந்தால்..?

குடியுரிமை பறிக்கப்பட்டால் இந்தியக்குடிமகன் எனும் இழப்போடு ஒரு மனிதன் இழக்கும் பேரிழப்புகள். வாக்குரிமை, கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம், அரசியல் என  இன்னும்,ஏராளமான அம்சங்களை இழக்க நேரிடும்.
அரசியல் அமைப்பு எழுதப்பட்டபோது அது வழங்கிய 7 அடிப்படை உரிமைகள் இவைகளும் முழுமையாக பறிபோகும்.

அடிப்படை உரிமைகள் பிரிவு III- சரத் 12-35

1.
சமத்துவ உரிமை 2.சுத்ந்திர உரிமை 3.சுரண்டலுக்கெதிரான உரிமை 4.சமய உரிமை 5.பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் 6.அரசியல் அமைப்பிற்க்கு உட்பட்டு தீர்வு பெறும் உரிமை. 7 .சொத்துரிமை.

தற்பொழுது உள்ள அடிப்படைஉரிமைகள். அடிப்படை உரிமைகள் விளக்கும் சரத்துகள் உட்பிரிவுகள்
1.சமத்துவ உரிமை சரத் 14-18 சரத் 14,14(2),15,15(3,(4),16(1,2,3,4,5))17,18
2.
சுதந்திர உரிமை சரத் 19-22 சரத் 19,19(2),20,21,21
3.
சுரண்டலுக்குஎதிரான உரிமை சரத் 23-24
4.
சமய உரிமை சரத் 25-28 சரத் 25,26,27,278
5.
பண்பாடு மற்றும் கல்வி உரிமை சரத் 30 சரத் 30
6.
அரசியல் அமைப்பிற்க்கு உட்பட்டு திர்வு காணும் உரிமை சரத் 32

1.ஆட்க்கொணார்வு நீதிப் பேராணை
2.
நீதிப்பேராணை
3.
தடையறுத்தும் நீதிபேராணை
4,
நெரிமுறை உறுத்துப்பேராணை
5.
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை

1.   சமத்துவ உரிமை (இது வெளினாட்டவர்க்கும் பொருந்தும்)
சரத் 14
சட்டத்தின் ஆட்சி(சட்டத்தின் முன் அனைவரும் சம்மம்,சட்டத்தின் மூலம் சம்மான பாதுகாப்பு)
சரத் 14(2)
சாதி,சமய,இனம்,பால் வேறுபாடுகள் ஒருகுடிமகனை பொது இடங்களினை பயன்படுத்துவதற்க்கும், செல்வதற்க்கும் நுழைவதற்க்கும் கட்டுப்பாடு விதிக்க கூடாது.
சரத் 15
அரசு சாதி,சமய,இனம்,பால் தொடர்பாக அரசு எந்த்வொரு குடிமகனிடமும் பாகுபாடு காட்டக்கூடாது
சரத் 15(3)
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்ப்பாடு
சரத் 16
அரசு வேலைவய்ப்புகலில் வேலைவாய்ப்புகளில் சம உரிமை சரத் 16(1)அரசு அலுவலகங்க்களில் வேலை பெறுவதற்க்கு சம வாய்ப்பு.
சரத்16(2)
சாதி,சமய,இனம்,பால் பிறப்பு வம்சாவழி போன்ற எந்தவொரு காரணங்களுக்காகவும் எந்தவொருக் குடிமகனுக்கும் வேலைவாய்ப்பினை மறுக்க முடியாது.

எனவே, மீளாத்துயரின் பக்கம் அழைத்துச் செல்கிற குடியுரிமை பறிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

நெருக்கடியான இந்த நிலை நீங்க என்ன செய்ய வேண்டும்?

முதலாவதாக நம்மை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய தேசத்தில் 900 ஆண்டுகால ஆட்சி, அதிகாரத்தை அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் சமூகம்.

சுதந்திர இந்தியாவிற்காக உடமைகளையும், பொருள்களையும், உயிர்களையும் அர்ப்பணித்த ஓர் சமூகம்.

மனித நேயப்பணிகளிலும், பேரிடர் கால மீட்புப்பணிகளிலும், மருத்துவ அவசர தேவைகளிலும் மதங்கள் பாராது அர்ப்பணிக்கிற ஓர் சமூகம்.

அந்தச் சமூகத்தின் நிலைமை தலை கீழாக மாறிப்போனது ஏன்? முஸ்லிம் சமூகம் இவ்வாறான நிலைக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?

எதிரிகளையும், எதிர்ப்புகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிற நாம் எதிர்ப்புகள் ஏன் உருவானது? எதிரிகள் எப்படி உருவானார்கள்? என்பது குறித்து சிந்திக்க மறந்து விட்டோம்.

நமக்கு வழங்கப்பட்ட ஓர் நிஃமத் நம்மை விட்டும் போய் விடுகிறது, அல்லது இன்னொருவரின் கையில் சென்று விடுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன?

அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான்…..

ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ()
எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடைமுறையை மாற்றிக் கொள்ளாத வரை, நிச்சயமாக! அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட்கொடையையும் மாற்றுவதில்லை”.                                            ( அல்குர்ஆன்: 8: 53 )

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ

நீங்கள் (அல்லாஹ்வை) புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்”.   ( அல்குர்ஆன்: 47 : 38 )

எனவே, நமக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஒரு வகையில் நம்மால் ஏற்பட்டிருப்பது தான்.

நம்முடைய செயல்பாடுகளை நாம் முதலாவதாக சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக அல்லாஹ்விடம் முறையிட்டு மன்றாட வேண்டும்….

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள்.

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال
اللهم انصر خبابا
واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!
ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!
وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

ن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
 "وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

 இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!


தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.


மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

فَاسْتَقْبَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقِبْلَةَ ثُمَّ مَدَّ يَدَيْهِ فَجَعَلَ يَهْتِفُ بِرَبِّهِ 
 اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ
 فَمَا زَالَ يَهْتِفُ بِرَبِّهِ مَادًّا يَدَيْهِ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ حَتَّى سَقَطَ رِدَاؤُهُ عَنْ مَنْكِبَيْهِ

பத்ர் யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.


இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ ()

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.                                                                    ( அல்குர்ஆன் 08:09 )

இன்னும் பல்வேறு தருணங்களில் மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி, முறையிட்டு தங்களையும், தீனுல் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் சூழ்ந்திருந்த சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்.

 நான்காவதாக அநீதிக்கு எதிராக போராடுவது அவசியமாகும்..

அநீதிக்கு எதிராக போராடுவதையும், அநியாயத்தை தடுத்து நிறுத்துவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்பபடுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

அதற்கு அண்ணலார் உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்  என்றார்கள்.

அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது...நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர். என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார்அவன் நரகவாதியே! என்று பதில் கூறினார்கள்.                                                                                      (  நூல்: முஸ்லிம் )

உலக வாழ்வின் அலங்காரம் என்றும், சோதனை என்றும் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் வர்ணிக்கப்படுகிற பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே போராட அனுமதி இருக்கிறது எனும் போது அல்லாஹ்விற்கு உரிய, இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் மகத்துவத்தையும், மாண்பையும் ஏற்படுத்துகிற இறையில்லத்தை மீட்பதில் எந்தளவு ஒரு முஃமின் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

மூஸா {அலை} அவர்களை ஃபிர்அவ்ன் கொல்லப்போவதாக அறிவித்த போது..

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ

ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சார்ந்த தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர் ஃபிர்அவ்னை நோக்கி அல்லாஹ் தான் என் இறைவன் என்று கூறுகின்றார் என்பதற்காகவா அவரை நீர் கொன்று விடுவீர்?” என்று கேட்டார்.

                                                      ( அல்குர்ஆன்: 40: 28 )

நீதிக்கு ஆதரவான குரல்! தம் சொந்த சமூகத்தை எதிர்த்து

அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்து மூஸா {அலை} அவர்களிடம் பனூஇஸ்ரவேலர்கள் தர்க்கம் செய்த போது

قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ()

அவ்வாறு நுழைய அஞ்சிக்கொண்டிருந்த அம்மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் அம்மக்களை நோக்கி வலிமை வாய்ந்தவர்களை பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள் தான் வெற்றியாளர்களாய் திகழ்வீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்”.

                                                       ( அல்குர்ஆன்: 5: 23 )
அநீதிக்கு எதிரான போராட்டம்! ஆட்சியாளனை எதிர்த்து

ஃகிள்ரு {அலை} மூஸா {அலை} சந்திப்பின் போது பயணித்த கப்பலை ஃகிள்ரு {அலை} அவர்கள் சேதப்படுத்துவார்கள். மூஸா {அலை} அவர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்பார்கள்.

பின்னர், கப்பலை சேதப்படுத்தியதற்கான காரணத்தை ஃகிள்ரு {அலை} அவர்கள் கூறும் போது

أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا ()

அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்து கொண்டிருந்த சில ஏழைகளுக்கு உரியது. நான் அதை பழுதாக்கிட நாடினேன். ஏனெனில், அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு கப்பலையும் நிர்பந்தமாகப் பறித்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து பாதுகாக்கவே நான் கப்பலை சேதப்படுத்தினேன்”.  ( அல்குர்ஆன்: 18: 79 )

அநீதிக்கு எதிரான போராட்டம்! தம் சொந்த சமூகத்தை எதிர்த்து

யாஸீன் சூராவில் அல்லாஹ் அந்தாக்கிய்யா ஊர் மக்களிடம் மூன்று இறைத் தூதர்களை அனுப்பியது பற்றியும், அவ்வூர் மக்கள் அத்தூதுவர்களை மறுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை ஏசிப் பேசி துன்புறுத்த முயன்ற போது….

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ () اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ ()

நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின் பற்றுங்கள்! எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும் எவர்கள் நேர்வழியில் இருக்கின்றார்களோ அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்!என்றார்.               ( அல்குர்ஆன்: 36: 20 )

நகரத்தின் கோடியிலிருந்து வந்து அம்மக்களுக்கு அறிவுரை வழங்கினாரே அவர் ஹபீபுன் நஜ்ஜார் என்று அழைக்கப்படுகின்றார்.

அம்மக்களிடம் இருந்து அந்த இறைத்தூதர்களை காக்கும் பணியில் மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்தார்.

இறுதியில், அந்த இறைத்தூதுவர்களும், அவரும் பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. ஆம்! அவ்வூர் மக்கள் அவரையும், இறைத்தூதுவர்களையு அடித்தே கொன்று விட்டனர்.

பின்னர், அல்லாஹ் அம்மக்களை பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்தான்.

وَمَا أَنْزَلْنَا عَلَى قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ () إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ ()

அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை. ஒரே ஓர் உரத்த ஓசை தான்! அவர்கள் எல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகி விட்டனர்”.                             ( அல்குர்ஆன்: 36: 28, 29 )

தனியாகவோ, இருவராகவோ, கூட்டாகவோ சேர்ந்து நீதிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, அநீதிக்கு எதிராக போராடுவது என்பது முஸ்லிம் சமூகத்தின் இயல்புப் பண்புகளாகும் என்பதை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வீரியம் நிறைந்த போராட்டமாக இருக்க வேண்டும்....

  أَنَّ رَجُلا جَاءَ إِلَى النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو جَارَهُ ، فَقَالَ لَهُ النَّبِيُّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ يَشْكُو ، فَقَالَ لَهُ النَّبِيَّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ يَشْكُو ، فَقَالَ لَهُ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الرَّابِعَةَ يَشْكُوهُ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ لَهُ : شَكَوْتُ جَارِي إِلَى رَسُولِ اللَّهِ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ : اللَّهُمَّ الْعَنْهُ ، اللَّهُمَّ أَخِّرْهُ ، قَالَ : فَأَتَاهُ ، فَقَالَ : يَا فُلانُ ، ارْجِعْ إِلَى مَنْزِلِكَ فَوَاللَّهِ لا أُوذِيكَ أَبَدًا "

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவை வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று நபி (ஸல்) கூறினார்கள். மூன்றாம் தடவை (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் ''நீர் சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள்.

நீர் அவர்களிடம் விவரத்தை கூறு! மக்கள் அவரை சபிப்பார்கள், அல்லாஹ்வும் அவ்வறே செய்வான்'' என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, நீர் உம் வீட்டுக்கு திரும்பிச்செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காணமாட்டீர்! என்று கூறினார்.  ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அபூதாவூத் )

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகிறது, அநீதி இழைக்கப்படுகின்றது என நான்கு சுவற்றிற்குள் சப்தம் போடுவதால் எந்த வித பலனும் ஏற்படாது. முஸ்லிம் சமூகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றது. எவ்வாறெல்லாம் அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது என்று உலக அரங்கிற்கும், சகோதர மத அன்பர்களுக்கும் வீரியத்தோடும் உணர்த்த வேண்டும் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

ஐந்தாவதாக கடந்த கால முஸ்லிம் உம்மாவின் வரலாறுகளில் இருந்து பாடமும், படிப்பினையும் பெறுவது அவசியமாகும்…

இன்று நம் முன் இருக்கிற சூழ்நிலைகள் இரண்டு ஒன்று குடியுரிமையை பறித்து நம்மை வெளியேற்றி முஸ்லிம்கள் அல்லாத இந்தியாவாக ஆக்குவது, அல்லது முஸ்லிம்களை அடிமைகளாக, அகதிகளாக ஆக்கும் இந்தியா.

நம் முன்னோர்களான முஸ்லிம் சமூகம் இவ்விரண்டு நிலைகளையும் அடைந்து, அதை எதிர் கொண்டு அதைக் கடந்து, மகத்தான வெற்றி வாகையும் சூடி இருக்கின்றது.

அகதிகளாக ஆக்கப்பட்டு, பின்னர் குடியுரிமை பறிக்கப்பட்ட ஓர் சமூகம் உண்டென்றால் அது மாநபி {ஸல்} அவர்களும், சில நூறு நபித்தோழர்களும் தான்.

ஆம்! அகதிகளாக்கப்பட்ட வரலாற்றை ஊர் நீக்கம் என்று கூறி மிக எளிதாகவும், குடியுரிமை பறிக்கப்பட்ட வரலாற்றை நாம் ஹிஜ்ரத் என்று கூறியும் மிக எளிதாக கடந்து போய் விடுகின்றோம்.

ஆனால், அல்லாஹ் அந்த சமூகத்திற்கு அளித்த வெற்றி இருக்கின்றதே அது மகத்தான வெற்றியாகும்.

எந்த சமூகத்தை அகதிகளாகவும், குடியுரிமை அற்றவர்களாகவும் ஆக்க வேண்டும் என்று துடித்தார்களோ அவர்களின் கண் முன்னாலேயே அல்லாஹ் ஆளும் அதிகாரத்தை மக்கா வெற்றியின் மூலம் கொடுத்தான் என்பது வரலாறு.

எங்கே, ஒரு சமூகம் பலவீனப்படுத்தப்படுகின்றதோ அந்த சமூகத்தை பலப்படுத்துவதும் அவர்களுக்கு மகத்தான வெற்றி கொடுத்து ஆட்சியாளர்களாய் அழகு படுத்துவதும் அல்லாஹ்வின் பொறுப்பும் அழகிய நடைமுறையும் ஆகும்.

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ ()

மேலும், பூமியில் (ஃபிர்அவ்னால்) எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாகவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கிடவும் நாம் நாடியிருந்தோம்”.                                             ( அல்குர்ஆன்: 28: 5 )

زادت حيرة المشركين إذ نفدت بهم الحيل، ووجدوا بني هاشم وبني المطلب مصممين على حفظ نبى الله صلى الله عليه وسلم والقيام دونه، كائنًا ما كان، فاجتمعوا في خيف بني كنانة من وادى المُحَصَّبِ فتحالفوا على بني هاشم وبني المطلب ألا يناكحوهم، ولا يبايعوهم، ولا يجالسوهم، ولا يخالطوهم، ولا يدخلوا بيوتهم، ولا يكلموهم،
تم هذا الميثاق وعلقت الصحيفة في جوف الكعبة، فانحاز بنو هاشم وبنو المطلب، مؤمنهم وكافرهم ـ إلا أبا لهب ـ وحبسوا في شعب أبي طالب، وذلك فيما يقال : ليلة هلال المحرم سنة سبع من البعثة .

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு கினானா கிளையாருக்குச் சொந்தமான முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடிய மக்கத்து இணைவைப்பாளார்கள்இது வரை நாம் முஹம்மதுக்கு எதிராக எடுத்த எந்த நடவடிக்கைக்கும் முஹம்மதும், முஹம்மதின் தோழர்களும் உடன்படாததாலும், ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையார்கள் தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாலும் நாம் இவர்கள் விஷயமாக தீர்க்கமான ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நல்ல ஆலோசனைகள் வழங்கிட ஒத்துழைப்பு தாருங்கள் என்று தங்களுக்குள் கோரிக்கொண்டனர்.

இறுதியாக, ”ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு கருணை காட்டுவது, அவர்களின் சமரச பேச்சை ஏற்பது, இது போன்ற எந்த ஒரு தொடர்பையும் அவர்களோடு மேற்கொள்ளக் கூடாதுஎன தீர்மானமாக எழுதி கஅபாவில் தொங்க விடப்பட்டது.

ஹாஷிம், முத்தலிப் கிளையாரில் அபூலஹபைத் தவிர மற்ற நிராகரிப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் அபூதாலிப் பள்ளத்தாக்கில்  அகதிகளாக ஆக்கினர்.

மூன்றாண்டுகள் சொல்லெனா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் முஸ்லிம்கள்.

ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்இம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

                                            ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )

( பின் நாளில் ஹகீம் இப்னு ஹிஷாம் அவர்களும், அபுல் புக்தரீ அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் )

மாநபி {ஸல்} அவர்களுக்கு சகோதர சமயத்தவர்களிடம் இருந்து கிடைத்த உதவி போன்று இன்று முஸ்லிம் சமூகத்திற்கும் சகோதர சமயத்தவர்களிடம் இருந்து உதவி கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த உதவியை தக்க வைத்துக் கொள்வதோடு, இவர்களின் உதவியைக் கொண்டு மேலும் இந்த பிரச்சனையில் இருந்து விடபட அடுத்த கட்ட நகர்வை நோக்கி நாம் நகர வேண்டும்.

அடுத்து அகதிகளாகவும், குடியுரிமை பறிக்கப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்ட சமூகம் ஸ்பெயின் முஸ்லிம் சமூகம்.

உலகிற்கே அறிவொளி பாய்ச்சிய ஈடு இணையில்லா முஸ்லிம் சமூகம் அது.

ஆனால், கடைசி முஸ்லிம் ஒருவர் ஸ்பெயினைக் காலி செய்து வெளியேறிய ஆண்டுதான் கி.பி 1612.

இன்று அந்த ஸ்பெயினில் 1200 பள்ளிவாசல்கள், 4 சதவீத முஸ்லிம்கள்  வேகமாக இஸ்லாம் பரவும் ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று என்று கூறும் அளவுக்கு அல்லாஹ் இன்று ஸ்பெயினை ஆக்கியிருக்கின்றான்.

அடுத்து அகதிகளாகவும், குடியுரிமை பறிக்கப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்ட சமூகம் செச்சன்ய முஸ்லிம்கள்.

அந்த வரலாற்றை மற்றும் இங்கு விரிவாக குறிப்பிடுகின்றேன்.

வெளியேற்றுவது எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியது சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசவாதிகள்

உலகில் அதிகமான இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் யார் என்று கேட்டால் உடனே இப்படிப் பதில் கூறுவார்கள்: “யூதர்கள்என்று.

1940 - 1945 வருடங்களில் 1,85,403 யூதர்கள் கொல்லப்பட்டதாக யூதர்கள் சொல்கிறார்கள் (இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை -ஹேரி ஸ்டைன்).

ஆனால் உண்மையில் அதே காலக்கட்டத்தில் (1940-1945) மாபெரும் இனப்படுகொலை நடந்த இடம் செச்சன்யா . இது ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதி .

இங்கு அழிவுக்குள்ளானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் .அழிவை ஏற்படுத்தியவர்கள் ஜோசப் ஸ்டாலின் என்பவரை தலைவராக கொண்டிருந்த ரஷ்யர்கள் அல்லது பொதுவுடைமை தத்துவம் பேசுபவர்கள் .

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 இலட்சமாகும் . கம்யூனிஸ்டுகளின் கணக்கின் படி 4,78,479 ஆகும்.

                                  ( ஆதாரம்: Radiance News Week 11th Feb 2007 )

இத்தனை இலட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்தியை , இரும்புத்திரை போட்டு மூடிவிட்டார்கள் ரஷ்யர்கள்.

இந்த மாபெரும் இனச்சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 . இதை உலக செச்சன்யா நாள் ( World Chechn Day) என அழைக்கின்றார்கள்.

செச்சன்யாவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யூனிஸ தலைவர் . திடீரென ஒரு பழியை சுமத்தினார்.

அது முஸ்லிம்கள் இரண்டாவது உலக போரில் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஹிட்லரின் நாசிப்படைகளுக்கு உதவி செய்தார்கள் என்பதே ஆகும் . ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் அப்படி எதையும் செய்யவில்லை .

மாறாக , அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யப்படையுடன் இணைந்து ஹிட்லரை விரட்டி அடிக்க உதவி செய்தார்கள் .உண்மையில் ஜோசப் ஸ்டாலினுடைய கோபம் செச்சன்யா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஈமானில் உறுதியுடன் இருந்தார்கள் என்பதே.

அவர்கள் எல்லா நிலையிலும் ஸ்டாலின் போதித்த இறை மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதுதான்.

1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஷ்யாவினுடைய செம்படை செச்சன்யா பகுதிக்கு வந்து பல்வேறு பகுதிகளில் பரவி பறந்து நின்றது. செம்படை நாள் என்று அழைக்கப்படும் பிப்ரவரி 23 ஆம் நாள் மூளை முடுக்குகளில் இருந்த முஸ்லிம்களை எல்லாம் ஓர் இடத்தில் ( Local soviet building ) கூட்டத்தொடங்கினர்.

எல்லா முஸ்லிம்களும் தங்களுக்கு என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்திராமல் அப்பாவிகளாய் செம்படையினர் கூட சொன்ன இடத்தில் கூடினர் .

அன்று செம்படையினர் தங்களது நாளை கொண்டாடப்போகின்றனர் , அதனை நாம் கண்டு கழிக்கப்போகின்றோம் என்று நினைத்தே முஸ்லிம்கள் அங்கெ கூடினார்கள் . ஆனால் செம்படையினர் அங்கு தங்கள் நாளை கொண்டாடிடவில்லை.

மாறாக, ரஷ்யாவின் அதிகாரிகள் ( The Decree of The Presidum of the Supreme Soviet ) தந்த தீர்ப்பை படித்தார்கள்.

அந்த தீர்ப்பில், செச்சன்யாவை சேர்ந்த முஸ்லிம்களும் ( மக்கள் அனைவரும் ) இங்குஷ் என்ற பகுதியில் வாழ்ந்த மக்களும் ( முஸ்லிம்கள்) நாடு கடத்தப்பட வேண்டும்.காரணம் அவர்கள் ரஷ்யாவை முற்றுகை இட வந்த ஜெர்மானிய எதிரிகளுக்கு உதவி செய்தார்கள் எனக் குறிப்பிடபட்டிருந்தது .

இப்படித்தான் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டு அரச தீவிரவாதங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் .இன்று அமெரிக்காவின் பெரிய முயற்சியின் கீழ் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் . அன்று ரஷ்யா முஸ்லிம்களை துரோகிகள் என்று தூற்றி நாடு கடத்தியது .

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்று சொன்னால் பிப்ரவரி 23, 1944 ம் ஆண்டு முஸ்லிம்களை துரோகிகள் என்று அழைத்த ரஷ்யாதான், அதே மக்களை ஜெர்மானிய படைக்கு எதிராக ரஷ்ய ராணுவ படையோடு இணைந்து போராடினார்கள் என போற்றி, பாராட்டி பட்டங்களையும் பல பதக்கங்களையும் வழங்கியது. உண்மையைச் சொன்னால் சோவியத் ராணுவப்படை வீரர்கள் பெற்ற பதக்கங்களை விட , செச்சன்யா பகுதி மக்கள் வாங்கிய பதக்கங்கள் அதிகம்.

( source: World Chechenya Day Commemoration of Chechn, Holocaust by Dr.Habeeb Haris in Radiance )

ஆனால் செச்சன்யா பகுதியிலிருந்து ரஷ்யாவின் sembadaiyodu இணைந்து போராடிய இராணுவ வீரர்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் நாடு கடத்து என்றார்கள் .

எல்லா மக்களையும் துப்பாக்கி முனையில் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினார்கள் . அந்த சரக்கு ரயில் பெட்டிகளில் ஆடு மாடுகள் கூட பயணம் செய்ய மாட்டா. ரயில் பெட்டிகளில் ஏற மறுத்தவர்களை அங்கேயே சுட்டு பிணமாக்கினார்கள்.

வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் , பெண்கள் குழந்தைகள் என யாரையெல்லாம் எளிதாக ரயில் பெட்டிகளில் ஏற்ற முடியவில்லையோ அவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினார்கள் .

இதற்கு பட்டவர்த்தமான அத்தாட்சியும் உண்டு . ஹைபக் (Haibakh ) என்ற மலையடிவாரத்தில் வாழ்ந்த பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 700 பேர் அதே இடத்திலேயே கொலை செய்யப்பட்டார்கள் . இதற்கான ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன .

இதே போல் செச்சன்யாவின் பல மலையடிவாரங்களிலும் முஸ்லிம்கள் கொளுத்தப்பட்டார்கள் . அன்றைக்கு இருந்த அத்தாட்சிகள் அனைத்தையும் ரஷ்ய அரசு அழிக்க முயன்றாலும் இது குறித்த ஆவணங்கள் இன்றும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன .
அவற்றில் ஒன்றுதான் 1944 பிப்ரவரி 29 ஆம் நாள் ரஷ்யாவின் ரகசிய படியான NKVD இன் தலைவர் 'லாவரண்டி பெரியா (Lavrenti Beria) என்பவர் ரஷ்யாவின் சர்வதிகாரி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் . அதில் இப்படி குறிப்பிட்டிருந்தார் :

" செச்சன்யாவில் வாழும் மக்கள் , இங்குள்ள பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர்களை நாம் நாடு கடத்தி , மறு குடியேற்றம் செய்தது குறித்தது இந்த கடிதம் . இந்த மறு குடியேற்றம் பிப்ரவரி 23 ஆம் நாள் தொடங்கியது .

எல்லா மக்களையும் வெளியேற்றிவிட்டோம் என்றாலும் , மலைப்பகுதியில் மிக உயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை அப்படியே விட்டுவிட்டோம் .

மொத்தத்தில் 4,78,479 பேரை நாம் மொத்தமாக சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி அனுப்பினோம் . இதில் இங்குஷ் பகுதியை சேர்ந்த 91,250 பெரும் அடங்குவர் . 180 சிறப்பு ரயில்களில் இவர்களை அனுப்பினோம் .

இதில் 159 ரயில்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி தெளிவான ஆணையையும் நாம் தரவில்லை . ஆகவே இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் நமக்கு வசதியான இடங்களில் இறக்கிவிடப்படலாம் .

( source: Secret letter written to Stalin by Cheif of the NKVD )
            
சரக்கு ரயில் பெட்டிகளில் முஸ்லிம்களை ஏற்றி அந்த பெட்டிகளை சீல் வைத்துவிட்டார்கள். ஒரு சரக்கு ரயில் பெட்டியில் 50 பேர்தான் நிற்கமுடியும் என்றால் , அதில் 100 முதல் 150 பேர்களை ஏற்றி அடைத்தார்கள்.

பெண்கள் குழந்தைகள், வயோதிகர்கள் என்று பெட்டிக்குள் ஏறமுடியும் என்ற நிலையிலுள்ள யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை .

அவர்களுக்கு உணவு என்று எதையும் ஏற்பாடு செயவில்லை 'டை பாய்டு ' என்ற நோய் அனைவரையும் தொற்றிக்கொண்டது. நெருக்கம் பட்டினி , நோய் இவற்றால் அந்த முஸ்லிம்கள் துடியாய் துடித்தார்கள்.

பலர் பெட்டிக்குள்ளேயே மரணித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பெட்டிகளின் முத்திரையை சீலை உடைத்து இறந்தவர்களை எடுத்து வெளியே வீசினார்கள் .

இந்த ரயில் பெட்டி பயணம் செய்த இடங்களில் வாழ்ந்த சாதாரண மக்களிடமெல்லாம் ஒரு பொய் பிரச்சாரத்தை அப்போதே செய்துவைத்தார்கள். 

அது, "இந்த பெட்டிகளில் அடைத்து வெளிஎற்றப்படுவோர் அனைவரும் ரஷ்யாவின் எதிரியான ஜெர்மானிய படைகளுக்கு உதவி செய்தவர்கள் , அதனால்தான் தண்டிக்கபடுகிரார்கள்" என்பதாகும்.

இதனால் வழி நெடுகிலும் வாழ்ந்த மக்கள் யாரும் இவர்கள் பெட்டிகளிருந்து வீசிய முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முன்வரவில்லை .

தொடர்ந்து பயணம் செய்தவர்கள் எங்கேனும் இந்த ரயில் நிற்கும் . தங்களை இறக்கிவிடுவார்கள். அங்கெ இறந்தவர்களின் சடலங்களை எடுத்து அடக்கம் செய்யலாம் என எண்ணி பிணங்களை தங்களுடனேய வைத்துக்கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டார்கள். அதுவும் முடியவில்லை. எங்கேயும் அவர்களை இறக்கிவிடுவதாக தெரியவில்லை.

இதனால் ரயில் நிற்கும் இடங்களில் அவர்களே பிணங்களை இறக்கிடவும் செய்தார்கள் . இதனால் இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களை எடுத்து அடக்குவதற்கு செய்த முயற்ச்சிகள் அத்தனையும் தோற்றுப்போயின .

பல வாரங்கள் இப்படியே பயணித்த பிறகு அந்த முஸ்லிம்கள் இன்றைக்கு கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்க்கிஸ்தான், சைபீரியன் டிஜான் என்றழைக்கபட கூடிய இடங்களில் இறக்கிவிடப்பட்டார்கள்.

பயணத்தின் முடிவில் மிகச் சிலரே உயிர் வாழ்ந்தனர் . இவர்களுக்கும் உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு சேர இறந்தார்கள் . அவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

பல குடும்பங்கள் பிரிந்தன .அவர்கள் மீண்டும் சேரவே முடியவில்லை .அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் கடுமையான சட்டங்களை காட்டி அவர்களை அங்கேயும் தண்டித்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

இத்தனை கொடுமைகளுக்கும் பதிலாக வளமான வாழ்கையை வாக்களித்தார்கள் ரஷ்யர்கள். அனாலும் தாங்கள் கொண்ட இறை நம்பிக்கையில் எள்முனை அளவுகூட தளர்வைக் காட்டவில்லை செச்சன்யா முஸ்லிம்கள் .

இதை ரஷ்ய வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் சோலிங்ஸ்டின் இப்படி வர்ணித்தார்:  உலக வரலாற்றில் ஒரு சமுதாயம் தங்களின் சொந்த இடங்களிலிருந்து பிடுங்கி வீசப்பட்டது. கொடுமையும் குரூரமும் நிறைந்த பயணங்களுக்கு ஆட்படுத்தப்பட்டது . பயணத்தில் பெற்ற குழந்தைகளையும் பேணிவளர்த்த பெற்றோர்களையும் நல்லடக்கம்கூட செய்ய முயாமல் பிணங்களாக தூக்கி வீசவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது . அந்த சமுதாயத்தை இறுதியாக இறக்கிவிட்ட இடங்களிலும் அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.

சிறைச்சாலை, சிரச்சேதம் ஆகியவற்றால் அழிக்கப்பட்டது. அத்தனை கொடுமைகள், கொலைகள் இவற்றிற்கு இடையேயும் தாங்கள் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தது அந்த சமுதாயம்.

கொடுமைகளும் கொடூரங்களும் தங்களை தாக்கிடும் போதெல்லாம் அந்த சமுதாயம் கொள்கையில் உறுதியை காட்டியதே அல்லாமல் சிஞ்சிற்றும் விட்டுத்தரவில்லை

இந்த நிலையிலும் தங்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தியவர்களிடம் அவர்கள் யாசிக்கும் நிலையில் பேசியது இல்லை. தங்களுடைய உணர்வில், கொள்கையில் அவர்கள் எப்போதும் உடைந்து போகவில்லை.

ரஷ்யாவின் பயங்கரப்படைகள் அவர்கள் முன்னே அணிவகுத்து வந்தபோது, நெஞ்சை நிமிர்த்தி எதிர்ப்பை காட்டினார்களே தவிர வளைந்து கொடுத்து வாழ விரும்பவில்லை . அவர்களை தொடர்ந்து 30 வருடங்களாக கொடுமைப்படுத்திய அரசுகள் என்னென்னவோ செய்து பார்த்தன. ஆனால் அவர்கள் அந்த குரூர ஆட்சியாளர்களின் சட்டங்களை ஒரு போதும் அவர்கள் மதிக்கவில்லை.

அவர்கள் முன்னே அணிவகுத்து வந்த ராணுவங்களும் கூட அந்த சட்டங்களை மதிக்க வைக்க முடியவில்லை . அந்த சமுதாயம்தான் செச்சன்யா முஸ்லிம்கள் . வரலாற்றின் பக்கங்கள் இன்றும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கின்றன . வளைந்து கொடுக்காத ஒரு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களாய் அந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் "


( source: THE GULAG ARCHIPELAGO )

1953 இல் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் இறந்தான் . அதுவரை செச்சன்யா முஸ்லிம்கள் நிம்மதியற்ற வாழ்கை அநீதி ,அவமானம் மரணம் இவற்றையே சந்தித்தார்கள். ஸ்டாலினுடைய மரணத்திற்கு பின்னர் செச்சன்யா முஸ்லிம்கள் தாங்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி அளிக்க வேண்டும் என போராட தொடங்கினார்கள்.

அத்தோடு சோவியத் அரசின் கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் செய்தது கொடுமை என்பதை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நிவாரணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அழுத்தமாகப் போராடினார்கள் .
இவர்களின் இடைவிடாத போராட்டத்தின் பயனாக 1956 இல் கம்யூனிச கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் -மாபெரும் கூட்டம் சோவியத் அதிபர் குருச்சேவ் செச்சன்யா மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமைதான் என்பதை ஒப்புக்கொண்டார்,

இந்த தவறை அவர் ஏற்றுக்கொண்டவுடன் செச்சன்யா மக்கள் தங்களுடைய சொந்த இடம் நோக்கி பயணம் செய்தார்கள். இந்தப்பயனத்தின் போது புதைக்கப்பட்ட தங்கள் சொந்தபந்தங்களின் எலும்புகளை தங்களுடன் எடுத்துவந்தார்கள். அவற்றை தங்கள் மூதாதையர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் புதைக்க வேண்டும் என விரும்பினார்கள்.

இவர்கள் செச்சன்யா வந்து சேர்ந்தபோது தங்களுடைய குடியிருப்புகள் எல்லாம் ரஷ்ய மக்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டிருப்பதை பார்த்தார்கள் . ஆகவே அங்கே இன்னொரு போராட்டத்தை அவர்கள் தொடங்க வேண்டியதாயிற்று .அவர்கள் அங்கு வாழ்ந்தபோது ஏற்படுத்தி வைக்கபட்டிருந்த இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

இடிக்கப்பட்டைவகள் அல்லாமல் 800 பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு கிடந்தன . 400 மார்க்க கல்லூரிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருந்தன .பெரும்பாலான பள்ளிகளும் மார்க்க கல்லூரிகளும் மியூசியங்களாக மாற்றப்பட்டிருந்தன . செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

1978 க்கு பிறகுதான் அதாவது அவர்கள் நாடு கடத்தப்பட்டு 34 வருடங்களுக்கு பின்னரே அவர்களால் கௌகாஸ் பகுதில் 40 பள்ளிகளை திறக்க முடிந்தது . அதுபோது அவர்களிடம் 300 உலமாக்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தார்கள்.

செச்சன்யா முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் இருந்தது அவர்கள் தங்களுடைய வரலாற்றை நினைவாற்றல் வழியாகவே பாதுகாத்து வந்தனர் . முழுமையாக வரலாறு தெரிந்த ஒருவர் தனக்கு தெரிந்த வரலாற்றை தன்னுடைய சந்ததியிடம் ஒப்படைப்பார் . இப்படி அவர்களுடைய வரலாறும் கலாச்சாரமும் பாதுக்காக்கப்பட்டு வந்தன.


ஆனால், சோவியத் அதிபர் கம்யூநிசதலைவர் ஜோசப் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த வரலாற்று தடம் தடைப்பட்டது. இந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் செச்சன்யா மக்கள் மீண்டும் உழைகலானார்கள்.

இந்நிலையில் செச்சென்ய மக்களின் இடைவிடாத போராட்டத்தினால் அவர்களுக்குத் தன்னாட்சி உரிமை கிடைத்தது. இதனை செச்சென் இங்குஷ் தன்னாட்சி போது உடமை குடியரசு என ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு அழைத்தது.

அதன்பிறகு அவர்கள் இன்று வரை தங்களுடைய மறு வாழ்வை , தாவது தங்கள் வாழ்கையை புனரமைத்து கொள்ளும் பணிகளில் ஈடபட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்கை புனரமைப்பு என்பது அவர்களை பொறுத்தவரை இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு மற்றும் தங்களுடைய பூர்வீக வரலாறு ஆகியவற்றை மீண்டும் கட்டி எழுப்புவதுதான்.

செச்சன்யா முஸ்லிம்களின் தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்கையை வளப்படுத்திட விரும்புவதை விட இஸ்லாமிய ஒழுக்கங்களையும் இஸ்லாமிய வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதையே அதிகமாக விரும்புகின்றார்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்கையின் அனைத்து பகுதிகளை விட இறை நம்பிக்கையும் இஸ்லாமிய வாழ்கை முறையும்தான் முக்கியம் .

1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளின் கைகளில் மரண அடி வாங்கியது . ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளிடம் வாங்கிய அடியில் சோவியத் ரஷ்யா சுக்கு நூறானது . யூ.எஸ்.எஸ்.ஆர். என்ற ஒருங்கிணைந்த ரஷ்யா நொறுங்கி சோவியத் போது உடமை நாடுகள் என்றழைக்கப்பட கூடிய காமன் வெல்த் நேஷன்ஸ் என்றானது .

சோவியத் ரஷ்யாவிலிருந்து எஸ்டோனியா, லித்வேனியா ,லாத்வியா, ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய மாநிலங்கள் விடுதலை அடைந்துவிட்டதாக அறிவித்து தனி குடியரசாயின . இவையெல்லாம் தனி அரசுகள் என்று ரஷ்ய அரசும் அங்கீகரித்தது.

ஆனால் செச்சன்யாவின் எதிர்காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் செச்சன்யா, ரஷ்யர்களால் உதுமானிய பேரரசுடமிருந்து ,தனியாக பிரித்து எடுத்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட ஓர் இடமாகும். செச்சன்யா மற்ற மற்ற மாநிலங்களை போல் தானும் தனி குடியரசாக மாறியதாக அறிவித்தது . அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல தங்களுடைய விடுதலையையும் அங்கீகரிக்க வேண்டும் என கோரியது .

இதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட ரஷ்யா பின்னர் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தது . டிசம்பர் 10 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு சோவியத் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் செச்சன்யா மீது படை எடுத்தார்.

படைகள் கௌகாஸ் பகுத்திக்கு பரவின விமானப்படைகள் காரணமின்றி கௌகாஸ் பகுதி மற்றும் செச்சன்யா பகுதிகளில் குறைந்த சக்தி உள்ள அணு குண்டுகளையும் கொத்து வெடி குண்டுகளையும் வீசின . ரஷ்யாவின் இந்த அடாத செயலால் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பின மலைகளாக குவிந்தார்கள்.

தங்களுடைய தன்னாட்சியை அங்கீகரித்த ஒரு நாடே எந்த ஆயுதமும் இல்லாத தங்கள் மீது குண்டு மழைகளை பொழிவதை கண்ட முஸ்லிம்கள் நிலைகுலைந்தார்கள்.பின மலைகளாக குவிவதை தவிர வேறு வழி தெரியவில்லை

ஆனால் அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து போன பிற மாநிலங்களின் மீது ரஷ்யா படை எடுக்கவில்லை .குண்டு மழைகளை பொழியவில்லை . காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள் இல்லை . செச்சன்யா மீது குண்டு மழை பொழிந்ததற்கு காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.

ரஷ்யாவின் இந்த மிருக பலத்திற்கு எதிராக செச்சன்யா முஸ்லிம்கள் கையில் கிடைத்ததை கொண்டு போராடினார்கள் . ரஷ்ய படைகளை விரட்டி அடிப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் . ரஷ்ய படைகள் பின்வாங்கின .

1994 இல் தொடங்கிய இந்த போர் 1996 இல் முடிந்தது . பல்லாயிரக்கணக்கான் முஸ்லிம்கள் தங்களுடைய உயிரை தந்து ஷஹீதான பிறகு செச்சன்யா முஸ்லிம்கள் தங்களுடைய உடமைகளையும் வீடுகளையு இழந்த பிறகு 1996 இல் ஒரு முடிவு ஏற்பட்டது . ரஷ்ய படைகளின் தாக்குதலில் ஒரு தளர்வு ஏற்பட்டது .

இந்த அமைதியும் அதிக நாள் நீடிக்கவில்லை .1999 ஆம் ஆண்டு அப்போதைய ரஷ்யாவின் அதிபர் புடின் செச்சன்யா மீது மீண்டும் படை எடுப்பு நடத்தினார் . வழக்கம் போலவே எந்த காரணமும் சொல்லவில்லை . அந்த முஸ்லிம்களை சீரழித்தார் .சின்னாபின்னாமாக்கினார் .காரணம் கேட்டபோது தீவிரவாதிகளை தேடுவதாக கூறினார் . யார் தீவிரவாதிகள் என கேட்டபோது "ரஷ்ய அரசுக்கு எதிராக சிந்திப்பவர்கள் " எனக்கூறினார் .

செச்சன்யா முஸ்லிம்களிடம் தாங்களே அங்கீகரித்த விடுதலையையும் சுதந்திரத்தையும் மீறி அந்த மக்கள் மீது இப்படி தொடர்ந்து வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

( நன்றி: மு . குலாம் முகம்மது அவர்கள், ஆசிரியர் : வைகறை வெளிச்சம் )

நீதி நிலை நாட்டப்படவும், இறைநம்பிக்கையாளரின் உயிரை பாதுகாக்கவும் தொடர்ந்து துணிவுடன் போராடுவோம்!

இன்ஷா அல்லாஹ்! இனி வரும் காலங்களில் முஸ்லிம்களின் உயிரும், உடமையும், உரிமைகளும் இந்த தேசத்தில் பாதுகாக்கப்படலாம்.

4 comments:

  1. ماشاء الله بارك الله

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் சிறந்த சேவை
    அல்லாஹ் அருள் புரிவானாக
    ( இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை தேடி முஸ்லிம்களை வைக்கும் “குடியுரிமைப் பதிவேடு ஆவணம்” (CAA) என்கிற) இந்த இடம் மட்டும் எனக்கு விளங்கவில்லை

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்... சரியான நேரத்தில் தேவையான ஊக்கமும் ஊட்டமும் அளிக்க கூடிய செய்திகளை வரலாற்று நிகழ்வுகளை பாடங்களாகவும், செயல்படுத்த வேண்டிய படிப்பினைகளை பதிவிட்ட ஹஜ்ரத் அவர்களுக்கு பாராட்டுகள். உத்வேகமும் உறுதியும் படரச் செய்யும் பதிவு.ஜஸாக்கல்லாஹ் ஹைரன். அல்லாஹ் மேலும் உங்களுக்கு ஞானத்தை அதிகப்படுத்துவானாக

    ReplyDelete