பெற்றோர்களுக்கான கடமையும், எச்சரிக்கையும்…
குழந்தைச் செல்வங்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குகிற மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும்.
குழந்தைச் செல்வங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்வின் அலங்காரமாகவும், கண்களின் குளிர்ச்சியாகவும் ஆக்கியிருக்கின்றான்.
இன்னும் சொல்லப்போனால் குழந்தைச் செல்வங்களின் மூலமே தனியொரு மனிதன் குடும்பத்திலும், சமூகத்திலும், சமுதாயத்திலும் அறியப்படுகின்றான். மதிக்கப்படுகின்றான்.
எனவே, அந்த மகத்தான அருட்கொடையை பெற்றவர்கள் ஆரம்பமாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம். அல்ஹம்து லில்லாஹ்!!
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான கடமைகள் குறித்தான வழிகாட்டல் அழகாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஜும்ஆவில் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்களுக்கு இஸ்லாம் வலியுறுத்திக் கூறும் பிரதானமான ஒரு கடமை குறித்தும், தவிர்க்க வேண்டிய கடுமையான எச்சரிக்கை குறித்தும் பார்க்க இருக்கிறோம்.
குழந்தைகளின் நலவுகளுக்காக பிரார்த்தித்தல்..
பெற்றெடுத்த குழந்தைகளுக்காக பிரார்த்தனை – துஆ செய்வதை இஸ்லாம் பெற்றோர்களின் மீதான கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.
குர்ஆன் கூறும் கட்டளை…
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! உன்னை அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர் ( அல்குர்ஆன் 25 : 74 )
இறைத்தூதராக, இறைவனின் நண்பராக திகழ்ந்த இப்ராஹீம் {அலை} அவர்கள் இந்த விஷயத்தில் மிகப்பெரிய முன்மாதிரியாக திகழ்கின்றார்கள் என்பதை அவர்கள் கேட்ட பின்வரும் பிரார்த்தனைகள் நமக்கு உணர்த்துகின்றன.
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (128)
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). ( அல்குர்ஆன் 2 : 128 )
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ (40)
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) ( அல்குர்ஆன் 14 : 40 )
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ (124)
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான். ( அல்குர்ஆன் 2 : 124 )
ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் இருந்து பனூ இஸ்ரவேலர்களுக்கு 3000 க்கும் மேற்பட்ட நபிமார்களையும், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் இருந்து ஈருலக சர்தார் நம் உயிரினும் மேலான மாநபி {ஸல்} அவர்களையும் வழங்கியருளினான்.
எனவே, நம் துஆக்கள் நம் சந்ததிகளின் வாழ்க்கையை தளிர்க்கச் செய்வதாக அமைய வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிராக சாபமிட வேண்டாம்…
وَعَن جَابرٍ
قال: قَال رسُولُ اللَّهِ ﷺ
لا تَدعُوا عَلى أَنْفُسِكُم، وَلا تدْعُوا عَلى أَولادِكُم، وَلاَ تَدْعُوا عَلَى أَمْوَالِكُم، لا تُوافِقُوا مِنَ اللَّهِ سَاعَةً يُسأَلُ فِيهَا عَطاءً، فيَسْتَجيبَ لَكُم رواه مسلم.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)'' என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர் :, நூல் : முஸ்லிம் 5736)
குழந்தைகள் தவறு செய்யும் போது சில தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகின்றார்கள். சாபமிடுகின்றார்கள்.
இப்படி சாபமிடுகிற பெண்கள் தான் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு பக்குவான வார்த்தைகளில் கூறி முயற்சிக்க வேண்டும்.
كان صلى الله عليه وسلم يتعهد النساء بالموعظة كما يتعهد الرجال، وكثيرا ما كان يذكرهن باعوجاجهن وأمراضهن ويطلب منهن تحصين أنفسهن وعلاج دائهن، ففي يوم الأضحى أو الفطر قال لهن: يا معشر النساء تصدقن فإني أريتكن أكثر أهل النار، فقلن: وبم يا رسول الله؟ قال: تكثرن اللعن، وتكفرن العشير، وما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது "நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, "பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். "நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள். ( நூல் : புகாரி 304 )
عَنْ أبِي هُرَيْرَةَ رَضْيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَتَكَلَّمْ في المَهْدِ إِلَّا ثَلَاثَةٌ: عِيْسَى ابْنُ مَرْيَمَ، وَصَاحِبُ جُرَيْجٍ، وَكَاْنَ جُرَيْجُ رَجُلاً عَابِدَاً، فَاتَّخَذَ صَوْمَعَةً فَكَاْنَ فِيْهَا، فَأتَتْهُ أُمُّهُ وَهُوَ يُصَلِّي، فَقَالتْ: يَا جُرَيْجُ!، فَقَالَ: يَارَبِّ! أُمِّي وَصَلَاتِي؟، فَأقْبَلَ عَلَى صَلَاتِهِ، فَانْصَرَفَتْ. فَلَمَّا كَاْنَ مِنَ الغَدِ أتَتْهُ وَهُوَ يُصَلِّي، فَقَالتْ: يَا جُرَيْجُ!، فَقَالَ: أيْ رَبِّ! أمِّي وَصَلَاتِي؟، فَأقْبَلَ عَلَى صَلَاتِهِ، فَلَمَّا كَاْنَ مِنَ الغَدِ أتَتْهُ وَهُوَ يُصَلِّي، فَقَالتْ؟ يا جُرَيْجُ! فَقَالَ: أيْ رَبِّ! أمِّي وَصَلَاتِي؟ فَأَقْبَلَ عَلَى صَلَاتِهِ، فَقَالتْ: اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى يَنْظُرَ إلَى وُجُوْهِ المُوْمِسَاتِ. فَتَذَاكَرَ بَنُو إِسْرَائِيلَ جُرَيْجَاً وَعَبِادَتَهُ، وَكَاْنَتِ امْرأَةٌ بَغِيٌّ يُتَمَثَّلُ بحُسْنِهَا، فَقَالتْ: إِنْ شِئْتُمْ لَأفْتِنَنَّهُ! فَتَعَرَّضَتْ لَهُ، فَلَمْ يَلْتَفِتْ إِلَيْهَا، فَأَتَتْ رَاعِياً كَاْنَ يَأوِي إِلى صَوْمَعَتِهِ، فَأَمْكَنَتْهُ مِن نَّفْسِهَا فَوَقَعَ عَلَيْهَا، فَحَمَلَتْ. فَلَمَّا وَلَدَتْ قالتْ: هُوَ مِنْ جُرَيْجٍ، فَأتَوْهُ فَاسْتَنْزَلُوْهُ وَهَدمُوا صَوْمَعَتَهُ وَجَعلُوا يَضْرِبُوْنَهُ، فَقَالَ: مَا شَأْنُكُمْ؟، قَالُوا: زَنَيْتَ بِهَذِهِ البَغِيِّ فَوَلَدَتْ مِنْكَ. قَالَ: أَيْنَ الصَّبِيُّ؟! فَجَاؤُوا بِهِ فَقَالَ: دَعُوْنِي حَتَّى أُصَلِّي، فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ أَتَى الصَّبِيَّ فَطَعَنَ في بَطْنِهِ وَقَالَ: يَا غُلَامُ! مَنْ أبوْكَ؟! قَالَ: فُلَانٌ الرَّاعِي!!، فَأقْبَلُوا عَلَى جُرَيْجٍ يُقَبِّلُوْنَهُ، وَيَتَمَسَّحُوْنَ بِهِ، وَقَالوا: نَبْنِي لَكَ صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ، قَالَ: لَا، أَعِيْدُوْهَا مِنْ طِيْنِ كَمَا كَاْنَتْ فَفَعَلُوا.
هَذَا حَدِيْثٌ صَحِيْحٌ، مُتَّفَقٌ عَلَيْهِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் "ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) "அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறிக் கொண்டார்.
(பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், "இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்துவிடாதே!'' என்று துஆ செய்தார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு "இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள்.
உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, "குழந்தையே! உன் தந்தை யார்?'' என்று கேட்டார். அக்குழந்தை, "(இன்ன) இடையன்'' என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், "தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறிவிட்டார்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( நூல் : புகாரி 3436 )
கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜுரைஜ் என்பவரின் தாய் "இறைவா! இவனை விபச்சாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்துவிடாதே!'' என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். எனவே, குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக வார்த்தைகளை வெளியிட வேண்டும் என இந்த நபிமொழி நம்மை எச்சரிக்கின்றது.
கொரோனா காரணத்தால் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள், மதரஸா என எதுவும் திறக்கப்படாமல் இருக்கும் இந்த கால கட்டத்தில் நம் வீட்டு குழந்தைகள் நம்மை மிகவும் சோதிப்பார்கள். நாம் நம்முடைய சந்ததிகளின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டுமே தவிர அவர்களின் வாழ்வை பாதித்து விடும் அளவுக்கு சாபமிட்டு விடக்கூடாது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மையும் நம் சந்ததிகளையும் பொருந்திக் கொள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteகாலத்திற்கேற்ப தற்போது சுருக்கமான ஜும்ஆவுக்காக சுருக்கமான பயான் குறிப்புகளை வழங்கி உதவியுள்ளீர்கள்.
பசியில்லா மேலப்பாளையத்தை தாங்கள் உருவாக்கியது போல் பயனுள்ள பயான் செய்யும் உலமாக்களையும் தங்களது ஆக்கங்களால் வழங்கி வருகிறீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்! جزاكم الله خير الجزاء يا استاذ
வறுமையில்லா மேலப்பாளையம்
Delete