Thursday, 3 September 2020

 

நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மருந்துக்கு நிகரானது!!

 


 

ஐந்து மாதன்களுக்குப் பின்னர் ( சுமார் 160 நாட்கள்மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை ) பூட்டப்பட்டிருந்த இறையில்லங்கள் திறக்கப்பட்டு, கூட்டாக வணக்க, வழிபாடுகள் நடத்த ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுமதி அளிக்கப்பட்டு இறை நெருக்கத்தை நோக்கி மீண்டும் நாம் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நிலையை நீடிக்கச் செய்து நிரந்தரமானதாக ஆக்குவானாக!

மறுமை நாள் வரை இது போன்ற நெருக்கடியான நாட்களை, சூழ்நிலைகளை சந்திக்காமல் இந்த உம்மத்தையும், முழுமனித சமூகத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காத்தருள்வானாக!! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

சீனாவின் வூஹானில் 2019 டிசம்பர் கடைசி வாரத்தில் ஒலிக்கத்தொடங்கிய கொரோனா எனும் குரல் இன்று வரை எண்ணிலடங்கா இழப்புகளை சர்வதேச மனித சமூகத்தில் நிகழ்த்திக் கொண்டியிருப்பதை நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம். 

கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச மனித சமூகம் 6 குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்துள்ளது.

சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான், இன்புளுயன்ஸா, கொரோனா என ஆறு ஆபத்துகள் தான் அவை.

நாம் ஐந்து ஆபத்துகளில் இருந்து தப்பித்து விட்டோம். ஆனால், ஆறாவது ஆபத்து நம்மை பிடித்துக் கொண்டு விட்டது. மேலும், நாம் எதிர் கொள்ளும் கடைசி நோய்த் தொற்றாக இது இருக்கப்போவதில்லைஎன்று லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர் மேத்யூ பேலிஸ் அவர்கள் பிபிசி செய்திப்பிரிவுக்கு அதிர்ச்சிகரமான பேட்டியைத் தந்துள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகம் சந்திக்கும் கடைசி நோய்த்தொற்றாக இந்த கொரோனா நோய்த்தொற்றை ஆக்கியருள்வானாக!

கொரோனாவில் இருந்து, கொரோனா மூலம் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தார்களையும், நம் மஹல்லா வாசிகளையும், முழுமனித சமூகத்தையும் பாதுகாத்து அருள் புரிவானாக!! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

கொரோனாவை சாதாரண நிகழ்வாகக் கடந்து போக முடியவில்லை. கடந்து போகவும் முடியாது. ஏனெனில், கொரோனா உலகளவில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

பணக்காரர்களை ஏழையாக்கியிருக்கிறது, இது நாள் வரை கொண்டாடப்பட்ட பலரின் முகத்திரையை விலக்கியிருக்கிறது, அரசியல் செய்தவர்களை அம்பலப் படுத்தியுள்ளது, கையாலாகாதவர்களை அடையாளப் படுத்தியுள்ளது.

உண்மையானவர்களையும், பொய்யானவர்களையும், போலிகளையும், சந்தர்ப்பவாதிகளையும், சுயநலவாதிகளையும் பட்டியலிட்டு காட்டியிருக்கிறது. 

நல்லவர்களை, மனிதநேய மாண்பாளர்களை, இரக்க குணம் கொண்ட கொடையாளர்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. 

இப்படி நிறைய மாற்றங்களை ஏற்ற இறக்கங்களை, நல்லது கெட்டதுகளை சமூகத்தில் விளைவித்திருக்கிறது.

ஆதலால் தான் சொல்கிறேன்! கொரோனா என்பது சாதாரண ஒரு நிகழ்வல்ல!! அது முழு மனித சமூகத்திற்குமான மகத்தான படிப்பினை ஆகும் என்று.

உலகில் வேறெவருக்கும் படிப்பினைகள் பயன் தருகிறதோ இல்லையோ நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பயன் தரும். 

فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ (55)

நிச்சயமாக! படிப்பினை இறைநம்பிக்கை கொண்டோருக்கு பயனளிக்கக் கூடியதாகும்”.                                               ( அல்குர்ஆன்: 51: 55 )

எனவே, கொரோனாவையும், கொரோனாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்வுகளையும் சாதாரணமான ஒன்றாகக் கடந்து செல்லாமல் இறைவன் தந்த மகத்தான படிப்பினையாகக் கருதி சிந்தையில் நிறுத்தி, சீர் தூக்கிப் பார்த்து நம்முடைய வாழ்வை சீராக்குவோம். புதியதோர் பாதையில் பயணிப்போம்.

பிரதானமான படிப்பினை என்ன?

கொரானா என்ற இந்த வார்த்தை உலகில் நடமாடத் தொடங்கிய நாள் முதற் கொண்டு இந்த நொடிப்பொழுது வரை மனித சமூகம் அனைத்தும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த, எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிற நம்பிக்கையை, நம்பிக்கையான ஒரு வார்த்தையை இது வரை யாரும் தரவில்லை.

மருந்து இருக்கிறது, குணப்படுத்தி விடலாம் என்றோ, இதர இழப்புகளை சந்தித்தவர்களுக்கு இதில் இருந்து விரைவில் மீண்டு விடலாம் என்ற ஆற்றல் மிக்க நம்பிக்கையளிக்கும் வார்த்தை எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

உண்மையில், பாரமான இதயத்தை உயிர்ப்பிக்க கனிவான வார்த்தைகளே இன்றைய தேவையாகும். போராட்டமான காலகட்டங்களில் ஆறுதலான வார்த்தைகளே உந்து சக்தியாகும். நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளே மருந்துக்கு இணையானதாகும்.

எனவே, நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் மனித வாழ்வில் உண்டு பண்ணுகிற மாற்றங்களை, ஏற்றங்களை கண்டு வருவோம்! வாருங்கள்!!

போராட்டமான காலகட்டங்கள் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் உண்டு. அந்த கால கட்டங்களில் பிறரிடமிருந்து வரும் ஆறுதலான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் தான் அவர்களின் வாழ்க்கையை ஏற்றத்திற்கு கொண்டு வரும்.

அல்லாஹ்வின் முன்மாதிரி

மாநபி {ஸல்} அவர்கள் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையை முடித்துக் கொண்டு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்கின்றார்கள்.

அவர்களின் பாதங்கள் என்னவோ மதீனாவை முன்னோக்கித் தான் இருக்கின்றது. ஆனால், அவர்களின் எண்ணங்களும், நினைவலைகளும் மக்காவின் 13 ஆண்டு கால நிகழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தது.

சத்திய சன்மார்க்கத்திற்காக மாநபி {ஸல்} அவர்களும், மாநபித்தோழர்களும் பட்ட கஷ்டங்கள் மனதை ரணப்படுத்தியது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான அந்த பயணத்தில் அல் கஸஸ் எனும் அத்தியாயத்தையும், யூஸுஃப் அத்தியாயத்தையும் இறக்கியருளினான்.

அல் கஸஸ் அத்தியாயத்தின் முதல் 48 வசனங்களில் மூஸா (அலை) பிறப்பில் இருந்து ஃபிர்அவ்னை வெற்றி கொள்வது வரையிலான மூஸா (அலை) அவர்களின் போராட்ட காலங்களை நினைவு படுத்துகின்றான்.

அடுத்த 34 வசனங்களில் கெட்டவர்கள், ஈமானை நிராகரிப்பவர்களின் முடிவுகள் குறித்து விமர்சிக்கும் இறைவன் நிறைவாக 6 வசனங்களில் நல்லோர்கள், இறைவனை அஞ்சுபவர்களுக்கான மகத்தான வெற்றி குறித்து கூறி மாநபி {ஸல்} அவர்களுக்கு நம்பிக்கையூட்டினான்.

அத்தோடு நின்றுவிடாமல் அல்லாஹ் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறும் யூஸுஃப் அத்தியாயத்தையும் இறக்கியருளி மாநபி {ஸல்} அவர்களுக்கு தெம்பூட்டினான்.

ஆம்! எப்படி எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு யூஸுஃப் (அலை)  அதிகாரத்தைப் பெற்றார்களோ அதே போன்று மாநபி {ஸல்} அவர்களே உங்களையும் அல்லாஹ் ஒரு நாள் இது போன்று ஆக்குவான் என்பது போன்று வசனங்களின் வரிசையை அமைத்திருப்பான்.

யூஸுஃப் அத்தியாயத்தில் கூறப்படும் யூஸுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை கூறுகள் ஒவ்வொன்றும் மாநபி {ஸல்} அவர்களின் வாழ்க்கை கூறுகளுடன் ஒத்துப் போவதை நாம் உணர முடியும்.

இவ்விரண்டு அத்தியாயங்கள் மூலம் அல்லாஹ் வழங்கிய நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மாநபி {ஸல்} அவர்களை ஃபத்ஹ் மக்கா வரை மிகவும் உறுதியோடு அழைத்துச் சென்றது என்றால் மிகையல்ல.

ஏனெனில், எல்லோரும் தளர்ந்து போகிற வயதில் தான் மாநபி {ஸல்} அவர்கள் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றார்கள்.

 இறுதியாக எங்கிருந்து வெளியேற்றப் பட்டார்களோ அங்கேயே வெற்றியுடன் நுழையவும் செய்தார்கள்.

உஹத் யுத்தம் முஸ்லிம் உம்மத்திற்கு எல்லா காலத்திற்கும் தேவையான பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் மறைத்து வைத்திருக்கிற மாபெரும் புதையலாகும்.

ஹிஜ்ரி 3 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 15 –இல் சனிக்கிழமை அன்று நடைபெற்ற யுத்தமாகும். ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டு விட்ட வெற்றி, நபித்தோழர்களின் சிலரின் செயல்பாடுகளால் எதிரிகளின் வசம் மாறிப்போனது.

பத்ரில் எதிரிகள் அடைந்திருந்த அதே உயிரிழப்பு இப்போது முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஏற்பட்டிருந்தது.

மாபெரும் மாண்பாளர்களாய் அறியப்பட்டிருந்த ஹம்ஸா (ரலி), முஸ்அப் (ரலி), அபுத்தஹ்தாஹ் (ரலி) ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) போன்ற முக்கிய நபித்தோழர்கள் உட்பட 70 பேர் வீர மரணம் அடைந்திருந்தனர். 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உட்பட ஒட்டு மொத்த படை வீரர்களுக்கும் சிறிய மற்றும் பெறிய மற்றும் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் தடுமாறிப்போய், செய்வதறியாது திகைத்து நின்ற தருணமும் கூட. அல்லாஹ்விற்காக போராடுகிற நாம் ஏன் தோற்றுப் போனோம்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்படும்? என்பது போன்ற கேள்விகள் அவர்களின் ஆழ்மனதை துளைத்தெடுத்தன. தங்களுக்குள்ளாக ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களின் உள்ளத்து விசும்புதலை செவியேற்றான். அவர்களின் மனதை சாந்தப்படுத்துகிற ஆறுதல்களை ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 139 முதல் 179 வரை தொடர்ச்சியான 40 இறைவசனங்களை இறக்கியருளினான். அது மட்டுமல்ல பத்ரில் வெற்றியை கொடுத்த இறைவன் உஹதில் ஏன் தோல்வியை தந்தான் என்பதற்கான காரணத்தையும் விவரித்தான்.  

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ () إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ()

அல்லாஹ் கூறினான்: “நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

இப்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்றுபகர்கின்றவர்களை உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத்தான்!”.                           ( அல்குர்ஆன்: 3: 139 – 140 )

இதில் முதல் வசனத்தை அல்லாஹ் துவக்கும் போதேநம்பிக்கையூட்டும் விதமாக வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பான். “நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்என்று. 

பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? இறைவனின் நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளை கேட்டதின் பின்னால் அந்த சமூகம் வேறெந்த யுத்தங்களிலும் தோற்கவே இல்லை. வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி என கலீஃபா முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிகாலம் வரை தொடர்ந்தது.

நம்பிக்கையூட்டுங்கள்! இறைவனின் சோபனம் பெறுவீர்கள்!!

فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ ‏"‏ زَمِّلُونِي زَمِّلُونِي ‏"‏ ‏.‏ فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ ثُمَّ قَالَ لِخَدِيجَةَ ‏"‏ أَىْ خَدِيجَةُ مَا لِي ‏"‏ ‏.‏ وَأَخْبَرَهَا الْخَبَرَ قَالَ ‏"‏ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ‏"‏ ‏.‏ قَالَتْ لَهُ خَدِيجَةُ كَلاَّ أَبْشِرْ فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا وَاللَّهِ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَصْدُقُ الْحَدِيثَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ‏.

ஹிரா குகையில் மாநபி {ஸல்} அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் இறைவன் குர்ஆனை இறக்கியபோது அதனால் அதிர்ச்சியும், பயமும் கொண்டவர்களாக வீடு வந்து சேர்து தம் மனைவியிடம் என்னைப்போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று சொன்னார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் தம் அருமை மனைவியிடம் குகையில் நடந்த விபரங்களை சொன்னார்கள். பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி - அன்ஹா) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில்அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள்.

அன்னையவர்கள் செய்த இந்த காரியத்திற்கு அல்லாஹ் வழங்கிய பிரதி உபகாரம் என்ன தெரியுமா? இதோ பாருங்கள்...

عن أبي هريرة أنه أتى جبريلٌ النبيَّ

قال

 يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி {ஸல்} அவர்களின் திருச்சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதோ அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்களிடம் ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்னாருக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்தும், என் புறத்தில் இருந்தும் ஸலாம் சொல்லுங்கள். சுவனத்தில் முத்தாலான மாளிகை ஒன்று இவர்களுக்குண்டு. அங்கே, எவ்வித சப்தமோ வீண் தொல்லையோ இராது” என்ற நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லுங்கள்!என்றார்கள்.. (நூல் : புகாரி,பாகம் – 01, பக்கம் – 539)

கொரோனா மனித சமூகத்தில் ஏற்படுத்திய இழப்புகளில் மிகப் பெரிய இழப்பு “நம்பிக்கையிழப்பு” ஆகும்.

வேழையிழந்தவர்கள், வாழ்வாதாரம் இழந்தவர்கள் என ஒரு நீண்ட பட்டியலே சமூகத்தில் இருக்கிறது.

அவர்களைச் சந்திக்க நேர்கிற போது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்வோம்! 

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம்!!

11 comments:

  1. الحمدالله ماشاءالله

    ReplyDelete
  2. அழகு எது
    தேவைக்கு தோதுவாக பேசுவது
    கட்டுரை ஆசிரியர் சகோதர மெளலவி பஷீர் உஸ்மானி அவர்கள்
    காலத்திற்கேற்ப சிந்தனையை இணையத்தின் வழியே இதயத்தில் பதித்த விதம் அழகு
    கட்டுரையை படிக்கும் உறவுகள்
    உளமாற பஷீர் ஆலிம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள்
    அல்லாஹ் ஆயுள் ஆரோக்கியம்
    மன நிறைவு இவைகளில்
    அல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு
    அபிவிருத்தி செய்வானாக
    ஆமீன்....

    ReplyDelete
  3. Masha Allahசூழ்நிலைக்கு ஏற்ற பதிவு... بارك الله

    ReplyDelete
  4. வாரந்தோறும் இதுபோன்ற கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் மாஷா அல்லாஹ்...
    அல்லாஹ் தங்களுக்கு எல்லாவித அபிவிருத்திகளையும் தந்தருள்வானாக ஆமீன்... இப்படிக்கு மௌலவி அஹ்மத் யாசீன் பத்ரிய்யீ...

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுடைய கல்வி ஆற்றலை மென்மேலும் அதிகப்படுத்துவானாக ஆமீன்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹழ்ரத் அவர்களின் அருமையான கட்டுரை
    மாஷா அல்லாஹ்....

    ReplyDelete
  8. அருமை அருமை ஹஜ்ரத். ஆழிய துன்பத்தில் தேவை ஆறுதல் மட்டுமே. அதுவும் இறைநம்பிக்கையாளனுக்கு இறைவன் புறத்திலிருந்து வரும் ஆறுதல் தான் என்பதை அண்ணலார் வாழ்வின் அடிச்சுவடுகளிலிருந்து எம் மனதில் தடம் Uதிக்க செய்த வார்த்தைகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக.

    ReplyDelete
  9. அல்லாஹுஅக்பர்
    விலைமதிக்க முடியாத கருத்துக்களை விதைத்திருக்கிறார்
    இதற்காண கூலியை ஹழ்ரத் அவர்களுக்கு ரப்பபுல்ஆலமீன்
    தன்புறத்திலிருந்து நிறம்ப கொடுத்து கண்ணியப்படுத்துவானாக
    ஆமீன்

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். ஐந்து மாதங்களுக்கு பிறகு தங்களின் ஆக்கத்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சி. جزاكم الله خيرا كثيرا يا استاذ

    ReplyDelete