இஸ்லாம் கூறும்
விமர்சன நாகரிகம்!!!
இன்றைய உலகில் விமர்சனம் என்பதை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து விட முடியாது என்று கூறும் அளவிற்கு எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.
இங்கே எல்லோரும் விமர்சிக்கப்படுகின்றார்கள். எல்லாமுமே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.
தனிநபர் விமர்சனம், குடும்ப விமர்சனம், குழு விமர்சனம், சபை விமர்சனம், இயக்க விமர்சனம், ஜமாத் விமர்சனம், மஹல்லா விமர்சனம், அரசியல் விமர்சனம், ஆன்மிக விமர்சனம் என பல கிளைகள் கொண்ட மரம் போன்று சமூகத்தின் முற்றத்தில் வியாபித்திருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.
விமர்சனத்தை இங்கே பலர் பிறரை அழிக்கும் ஆயுதமாகவும், சிலர் காக்கும் கேடயமாகவும் பயன்படுத்துகின்றனர்.
விமர்சனம் இங்கே சிலரை வலிமை பெறச்செய்கிறது எனில், சிலருக்கு வலியையும், ஆறாத வடுவையும் ஏற்படுத்துகின்றது. சிலரை ஊக்கப்படுத்துகிறது எனில் சிலரை ஊனப்படுத்தி முடக்கி விடுகின்றது.
முன் வைக்கப்படும் விமர்சனத்தையும், விமர்சிப்பவரையும், விமர்சிக்கப்படுபவரையும் பொறுத்து சமூகத்தில் விளைவுகள் மாறுபடுகின்றது.
விமர்சனம் என்பது?
வானுயர வளர்ச்சியையும், அதள பாதாளத்தில் வீழ்த்துகிற வலிமையும் கொண்ட இந்த விமர்சனம் என்பது உண்மையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கும் உரிமைகளில் மிகவும் இன்றியமையாத உரிமையாகும்.
விமர்சனம் என்பது ஒரு மனிதனின் நிறைகளை மேம்படுத்த, குறைகளைக் களைந்து சீர்படுத்த உதவும் வலுவான ஓர் சாதனமாகும்.
விமர்சனம் என்பது ஒருவரின் கருத்தை, ஒருவரின் செயலாக்கத்தை, ஒருவரின் படைப்பை, தனி நபரை, அல்லது ஓர் அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும்.
விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்மறையான மதிப்பீட்டை பொதுவாக சுட்டிக்காட்டுகிறது.
விமர்சனம் என்பது ஒரு தரப்பினரை அழிக்கும் நோக்குடன், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதும் உண்டு.
விமர்சனம் என்பது சில போது ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தை, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம்.
அரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்ட அம்சங்களை நோக்கியும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
என்றாலும், மனிதனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.
சலுகையாக வழங்கப்பட்ட ஒரு உரிமையை ஏதோ கட்டாயக்கடமை போன்று இன்று மனித சமூகம் பாவித்து வருகின்றது.
விமர்சனம் ஏற்படக் காரணம் என்ன?
ஒருவரின் மீதோ ஒரு குழுவினர் மீதோ ஒருவரோ ஒரு குழுவினரோ விமர்சனம் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது அதை நாம் முழுமையாக விளங்கிக் கொண்டால் விமர்சனம் செய்வதில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
1. தமக்கு நெருக்கமானவர்கள் அவர்கள் செய்கிற எந்தவொரு காரியத்தையும் தமக்குத் தெரிந்தே செய்ய வேண்டும் என்று எண்ணும் போது பிறரை விமர்சனம் செய்யும் போக்கு ஏற்படுகின்றது.
وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ (20) لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ (21)
”(ஸுலைமான் (அலை) ) அவர் பறவைகளைப் பார்வையிடும் போது எனக்கு என்ன ஆயிற்று? ஹுத் ஹுதைக் காணவில்லையே! அல்லது அது காணாமல் போய்விட்டதா?” என்று கூறினார்.
நிச்சயமாக, நான் அதனைக் கடுமையான வேதனையாக வேதனை செய்வேன். அல்லது நிச்சயமாக, நான் அதனை அறுத்து விடுவேன். அல்லது என்னை விட்டும் அது எங்கு சென்றது என்கிற தெளிவான காரணத்தை என்னிடம் நிச்சயமாக கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்”. ( அல்குர்ஆன்: 27: 20,21 )
ஸுலைமான் (அலை) அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட ஹுத் ஹுத் திடீரென காணாமல் போனது குறித்து ஸுலைமான் (அலை) அவர்கள் பேசியதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.
2. பிறரை விட தம்மை உயர்வாகக் கருதும் போது…
“ நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தினர் மிகவும் தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும் போது நாங்கள் உம்மை ஈமான் கொள்வதா?” என்று கேட்டனர். ( அல் குர்ஆன்: 26: 111 )
3. எந்தவொன்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இல்லாத போது…
وَقَالَ فِرْعَوْنُ يَاأَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَاهَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَلْ لِي صَرْحًا لَعَلِّي أَطَّلِعُ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ
“அதற்கு ஃபிர்அவ்ன் என் சமூகத்தினரே! என்னைத்தவிர உங்களுக்கு வேறொரு இறைவன் இருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே, ஹாமானே! களிமண்ணின் மீது நெருப்பு மூட்டி எனக்கொரு உயர்ந்த கோபுரமொன்றை எழுப்புவாயாக! அதன் மீதேறி நான் மூஸாவின் இறைவனை எட்டிப்பார்க்க வேண்டும். மேலும், மூஸாவை நான் பொய்யராகவே கருதுகிறேன்” என்றான். ( அல்குர்ஆன்: 28: 38 )
4. தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும், இயலாமையும் மிகைக்கும் போது…
فَأَصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِي اسْتَنْصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُهُ قَالَ لَهُ مُوسَى إِنَّكَ لَغَوِيٌّ مُبِينٌ (18) فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا قَالَ يَامُوسَى أَتُرِيدُ أَنْ تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْأَمْسِ إِنْ تُرِيدُ إِلَّا أَنْ تَكُونَ جَبَّارًا فِي الْأَرْضِ وَمَا تُرِيدُ أَنْ تَكُونَ مِنَ الْمُصْلِحِينَ
“பின்னர் காலை நேரத்தில் பயந்தவராக மூஸா அங்கும் இங்கும் நோக்கிக் கொண்டு நகரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நேற்று அவரிடம் உதவி தேடியவன் இன்றும் உதவி தேடியவனாக அவரைக் கூவியழைத்தான்.
அப்போது, மூஸா அவனை நோக்கி “நிச்சயமாக, நீ தெளிவான அழிச்சாட்டியக் காரனாய் இருக்கின்றாய்” என்றார்.
பின்னர் அவர்களிருவருக்கும் பகைவனாய் இருக்கும் ஒருவரை அவர் பிடிக்க நாடிய போது மூஸாவின் கூட்டத்தைச் சார்ந்தவன் தன்னை மூஸா பிடிக்க வருவதாக எண்ணி “மூஸாவே! நேற்று ஒருவனை நீர் கொன்றது போன்று என்னையும் கொல்ல நாடுகின்றீரா? நீர் பூமியில் வம்பராக இருப்பதைத் தவிர வேறெதுவையும் நாடவில்லை. மேலும், சீர்திருத்துபவர்களில் உள்ளவராவதையும் நீர் நாடவில்லை” என்று கூச்சலிட்டான்”. ( அல்குர்ஆன்: 28: 18,19 )
5. தாம் நினைத்தது நடக்காத போது…
ياأيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون
இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஒரு பிரிவினரும் மற்றெந்த பிறிவினரையும் பரிகாசம் செய்யவேண்டாம், ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம், எந்தப்பெண்களும் மற்றெந்த பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாகயிருக்கலாம். ஒருவரையொருவர் குறித்துப் பேச வேண்டாம், ஒருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச்சூட்டி அழைக்கவேண்டாம்.இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.எவர்கள் இந்த நடவடிக்கையைக் கைவிடவில்லையோ அவர்கள் தான் கொடுமைக்காரர்கள்.”( அல்குர்ஆன்: 49:11 )
فقال ابن عباس : نزلت في ثابت بن قيس بن شماس كان في أذنه وقر ، فإذا سبقوه إلى مجلس النبي - صلى الله عليه وسلم - أوسعوا له إذا أتى حتى يجلس إلى جنبه ليسمع ما يقول ، فأقبل ذات يوم وقد فاتته من صلاة الفجر ركعة مع النبي - صلى الله عليه وسلم - ، فلما انصرف النبي - صلى الله عليه وسلم - أخذ أصحابه مجالسهم منه ، فربض كل رجل منهم بمجلسه ، وعضوا فيه فلا يكاد يوسع أحد لأحد حتى يظل الرجل لا يجد مجلسا فيظل قائما ، فلما انصرف ثابت من الصلاة تخطى رقاب الناس ويقول : تفسحوا تفسحوا ، ففسحوا له حتى انتهى إلى النبي - صلى الله عليه وسلم - وبينه وبينه رجل فقال له : تفسح . فقال له الرجل : قد وجدت مجلسا فاجلس! فجلس ثابت من خلفه مغضبا ، ثم قال : من هذا ؟ قالوا فلان ، فقال ثابت : ابن فلانة! يعيره بها ، يعني أما له في الجاهلية ، فاستحيا الرجل ، فنزلت
ஸாபித் இப்னு கைஸ் (ரலி) என்கிற நபிதோழர், அவரின் காதில் அடைப்பு ஏற்பட்டு செவித்திறன் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.எனவே, பள்ளியில் அவர் நுழைந்தால் நபி (ஸல்) அவர்களின் உறையாடலை நபி (ஸல்) அருலில் அமர்ந்து கேட்கும் விதமாக நபித் தோழர்கள் அவருக்கு வசதி செய்து கொடுப்பார்கள்.
ஒரு நாள் தொழுகைக்கு தாமதமாக வந்தார்கள். தொழுது முடித்ததும் நபித்தோழர்கள் தத்தமது இடங்களில் அமர்ந்து கொண்டார்கள், அவர்களுக்கு பின்னால் இருந்து வழிவிடுங்கள், வழிவிடுங்கள், என்று சொல்லிக் கொண்டெ முன்னால் அமர்ந்திருந்த் ஒருவரிடம் வந்து விட்டார்கள்.. முன்னால் அமர்ந்திருந்த அவரிடம் ஸாபித் (ரலி) வழி விடுங்கள், என்றார்கள்-அதற்கவர் இடம்தான் கிடைத்துவிட்டதே இடத்தில் உட்காருங்கள் என்று கூறிவிட்டார்.
கோபத்துடன் அவ்விடத்தில் அமர்ந்துகொண்டார்கள் ஸாபித் (ரலி)
அதிகாலை நேரத்தின் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியதும், முன்னால் அமர்ந்திருவர் யார்? என அக்கம் பக்கத்திலிருந்த்வர்களிடம் விசாரித்துவிட்டுஓ! நீ இன்னாருடைய மகனா?அறியாமை காலத்தில் அம்மனிதரின் தாயார் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி கோட்டார்கள்.
அந்த சபையினர் அனைவரும் அம்மனிதரை நோக்க அம்மனிதர் வெட்கத்தாலும், அவமானத்தாலும் தன் தலையை தாழ்த்திக்கொண்டார். அப்போதுதான் மேற்கண்ட வசனம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் பின்னர் ஸாபித் (ரலி) அவர்கள் இனி எப்போதும் நான் யாரையும்.அவமதிப்பு செய்யமாட்டேன்.என்று உறுதிபூண்டார்கள். ( திர்மிதி 3892 )
இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன எனினும் உதாரணத்திற்கு இந்த ஐந்து காரணங்களை கூறியிருக்கின்றோம்.
இப்படி எல்லாம் விமர்சிக்கக் கூடாது…
1. ஆபாசமாக விமர்சிக்கக் கூடாது..
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ ()
”இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை” ( அல்குர்ஆன்: 24:19 )
2. மனம் வருத்தப்படும்படி விமர்சிக்கக் கூடாது..
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا ()
“மேலும், நம்பிக்கை கொண்டிருக்கிற ஆண்கள், பெண்கள் அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கின்றார்கள்.” ( அல்குர்ஆன்: 33: 58 )
பொது விவகாரங்களில் தவறு செய்பவர்களை விமர்சிக்க தயங்கக் கூடாது..
முஸ்லிம் ஷரீஃபில் அபூ ஹூமைத் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஅதிஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் வாயிலாக ஒரு செய்தியை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியைச் சேர்ந்த் இப்னு லுத்ஃபிய்யா என்பவரை ஜகாத் வசூலிக்க அனுப்பினார்கள். சிறிது நாட்களில் திரும்பி வந்த அவர் ஒரு பையை நீட்டி இது உங்களுக்குறியது; ஜகாத் வசூலித்த பணம், இன்னொரு சிறிய பை போன்ற பொட்டலத்தைக் காட்டி இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனக்குறியது என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.
உடனே, முகம் மாறிய நிலையில் கோபமாக மிம்பரின் மீது ஏறிய மாநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள், பின்பு நிச்சயமாக அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக நியமித்த பணிகளில் ஒரு பணியினை (ஜகாத் வசூலிப்பதை) நிறைவேற்ற நான் ஒருவரை நியமித்தேன். அவர் வந்து கூறுகிறார்.இது உங்களுக்கு;மற்றொன்று தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று.
அவர் கூறுவது உண்மையாக இருந்தால் அவர் தன் தந்தையின் வீட்டிலோ, தாயின் வீட்டிலோ அமர்ந்திருக்கட்டும் (அவர் சொன்ன அந்த அன்பளிப்பு அவரது வேலைக்காக கொடுக்கப்பட்டதாகும்) அவருக்காக கொடுக்கப்பட்டதல்ல. ஆகவே அவர் அதை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்கள்.
இங்கே நேர்மையை பாதிக்கிற ஒரு காரியத்தை செய்த அந்த நபித்தோழரை விமர்சித்ததோடு, ஏனைய முஸ்லிம்களும் இதுபோன்று நேர்மையை பாதிக்கிற எந்த ஒரு காரியத்திலும் இறங்கிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே மாநபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
விமர்சனத்தை எதிர் கொள்ளும் போது நிதானம் மிகவும் அவசியம்…
ولما أراد أبو سفيان الانصراف أشرف على الجبل ثم صرخ بأعلى صوته إن الحرب سجال يوم بيوم اعل هبل، فقال النبي صلى الله عليه وسلم: قم يا عمر فأجبه، فقال: الله أعلى وأجل، لا سواء قتلانا في الجنة وقتلاكم في النار، قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم، فقال النبي صلى الله عليه وسلم: أجيبوه، قالوا: ما نقول؟ قال قولوا: الله مولانا ولا مولى لكم.
உஹத் யுத்தக்களம் மாநபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியை கமீஆ என்பவன் பரப்பிவிடுகிறான். காரணம் தனித்து விடப்பட்டிருந்த நபி (ஸல்) அவர்களை குறிவைத்து சில இணைவைப்பாளர்கள் அம்பெய்ய முனைந்ததை பார்த்த தல்ஹா (ரலி) அவர்கள் சிங்கமென சீறிப்பாய்ந்து எறியப்பட்ட அம்புகளையெல்லாம் தமது உடலை கேடயமாக பயன்படுத்தி தாங்கிக்கொண்டார்கள்.
இந்தக் காட்சியை கண்ணுற்ற அபூபக்கர் (ரலி) அபூ உபைதா (ரலி) இருவரும் முன்னேறிச் சென்று நபி (ஸல்) அவர்களை காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.கிட்டத்தட்ட 35 அல்லது 39 காயங்களுடன் மயக்கமுற்ற தல்ஹா (ரலி) கீழே சாய்ந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் உஹதை பற்றி பேசுகிற சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் “அன்றைய தினம் (உஹத்) முழுவதும் நபி (ஸல்) அவர்களை பாதுகாக்க நம்மையெல்லாம் தல்ஹா இப்னு உபைதுல்ல்லாஹ் (ரலி) அவர்களையேச் சாரும்” என்று கூறுவார்கள்.
உஹதில் நபிகளாரைச் சுற்றி நடைபெற்ற இத்தாக்குதலையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டமிட்ட கமீஆ மாநபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வதந்தியை பரப்பி விட்டான்.
உஹத் யுத்தம் முடிந்து மகிழ்ச்சிப் பெருக்கோடு திரும்பிக்கொண்டிருந்த அபூ சுஃப்யான், முஸ்லிம்களின் நிலையை அறிய மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை நோக்கி “உங்களில் முஹம்மத் உயிரோடு இருக்கின்றாரா? உங்களில் அபூபக்கர் உயிரோடு இருக்கின்றார?உங்களில் உமர் உயிரோடு இருக்கின்றார?என்று உணர்ச்சியை தூண்டும் விதமாகவும், கோபமூட்டும் விதமாகவும் கூவினார்.
நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்க வேண்டாமென தடுத்து விட்டார்கள்.ஆனால் முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததைக்கண்ட அபூ சுஃப்யான் தமது வீரர்களை நோக்கி “என் மக்களே!அறிந்து கொள்ளுங்கள், இவர்களையே நீங்கள் கொன்று வீட்டீர்கள்; அது போதும் என்றார்.
உமர் (ரலி) அவர்கள் அபூ சுஃப்யானுடைய இந்த ஏளனப்பேச்சை கேட்டு கொதிப்ப்டைந்து பதில் கூற முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கரங்களைப்பற்றி இழுத்தார்கள்.ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்வது போல் அது அமைந்திருந்தது.
அபூ சுஃப்யான் மீண்டும் கூறினார்: “ஹூபுல் சிலைக்குத்தான் கண்ணியமும் உயர்வும்” இப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை பதில் கூறுமாறு பணித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் “ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கொன்று விட்டதாக கூறினாயோ அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள்” மேலும், அல்லாஹ் தான் உயர்ந்தவன், கண்ணியமானவன்! என்று வீராவேசத்துடன் பதில் கூறினார்.
இதைக் கேட்டு சினமுற்ற அபூ சுஃப்யான் “இந்த வெற்றி எவ்வளவு மகிழ்ச்சியானது பத்ரில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பகரமாய் ஆகிவிட்டது போரென்றால் இப்படித்தான்” என்று பதில் கூறினார்.
அதற்கு உமர் (ரலி) “ஒருக்காலும் சமமாக முடியாது; உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருப்பர். எங்களில் கொல்லப்பட்டவர் மேலான சுவனத்தில் இருக்கின்றார்கள்! என்று பதிலடி தந்தார்கள்.
இதைக் கேட்டதும் அபூ சுஃப்யான் உமரே! இங்கே வாரும் என்றார்.நபிகளார் செல்லுமாறு உமருக்கு அனுமதி வழங்கியதும் அபூ சுஃப்யான் உமர் (ரலி) அவர்களிடம் உமரே ஒரு உண்மையை என்னிடம் சொல்ல வேண்டும்.
உண்மையில் எங்கள் வீரர்கள் முஹம்மதைக் கொன்று விட்டார்களா? இல்லையா? என்று கேட்டார்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் அவர்களை கொல்லவில்லை.இப்போதும் அவர்கள் உமது பேச்சை கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்றார்கள்.
இதைக் கேட்ட அபூ சுஃப்யான் “இப்னு கமீஆ வை விட நீர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருக்க நான் காண்கிறேன்” (நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம் 150)
விமர்சிப்பவர்கள் எப்போதும் நம்மோடு ஆரோக்கியமான நிலையில் அணுகுவார்கள் என்று கருதிவிடக் கூடாது.சிலபோது நம் சிந்தைக்கே புலப்படாத வழிகளிலெல்லாம் நம்மை ரோஷமூட்டுவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்ய முயன்று அது நமக்கே பாதகமாக மாறிவிடும் போது அதைக் கண்டு ஏளனமாக சிரிப்பார்கள்.
எனவேதான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! என் நிலை கண்டு ஏளனப் புன்னகையை வெளிப்படுத்தும் எதிரிகளை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்திப்பார்கள், மேலும், உம்மத்தினரையும் பிரார்த்திக்குமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.
மேற்கூறிய சம்பவத்தில் அபூ சுஃப்யான் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்ட போது கொந்தளித்த உமர் (ரலி) அவர்களை மாநபி (ஸல்) அவர்கள் நிதானத்தை கையாளுமாறு போதிக்கிறார்கள். அதன் பின்னர் மாநபியே பதிலடி கொடுக்க வாய்ப்பளித்தார்கள்.நிதானத்திற்குபின் வெளிவந்த உமரின் வார்த்தைகள் எப்படி அமைந்திருந்தது?
உமர் (ரலி) உடனுக்குடன் பதில் கூறியிருப்பார்களேயானால் மீண்டும் ஓர் போரிடும் சூழல் உருவாகி இருக்கும்.
ஒருவரைக் குறித்து இன்னொருவர் விமர்சிக்கிறார் என்றால் மூன்றாம் நபர் அதை எவ்வாறு கடந்து போக வேண்டும்?....
1. முதலில் விமர்சிக்கப்படும் நபர் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் அவர் குறித்து நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ ()
“நீங்கள் இதைக் கேள்வியுற்ற சமயத்தில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களில் உள்ளவர்களைப் பற்றி நன்மையானதையே எண்ணி “இது தெளிவான அவதூறு தான்” என்று கூறியிருக்க வேண்டாமா?. ( அல்குர்ஆன்: 24: 12 )
2. அந்த விமர்சனத்தை தூக்கிக் கொண்டு திரியக்கூடாது.
إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ (15)
“இதனை நீங்கள் சிலரிடமிருந்து சிலர் உங்கள் நாவுகளின் மூலம் எடுத்துக் கொண்டு, உங்களுக்கு எது பற்றி அறிவு இல்லையோ ( தெரிய வில்லையோ ) அந்த விஷயத்தை, உங்கள் வாய்களால் கூறிக் கொண்டிருந்த பொழுது, இந்த செயலை நீங்கள் மிக இலேசான ஒன்றாக எண்ணி விட்டீர்கள்; ஆனால், அல்லாஹ்விடத்தில் இதுவோ மிகப்பெரிய ஒன்றாகும்”.
3. அது இட்டுக்கட்டாக இருக்கும் என்று தெரிந்தால் அது இட்டுக்கட்டு தான் என்று உங்களிடம் கூறியவரிடம் கூறிவிட வேண்டும்.
وَلَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُمْ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ (16)
”நீங்கள் இதனைக் கேள்வி பட்ட போது “இது பற்றி பேசுவது நமக்குத் தகுதி இல்லை. அல்லாஹ்வே! நீயே பரிசுத்தமானவன். இது மகத்தான பெரும் அவதூறு ஆகும் என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? ( அல்குர்ஆன்: 24: 15,16 )
இந்த மூன்று இறைவசனங்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து விமர்சிக்கப்பட்ட போது அவைகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்ட முஃமின்கள் குறித்து அவர்கள் எவ்வாறு நடந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் வழிகாட்டுகின்றான்.
பிறர் விமர்சிக்கின்ற அளவிற்கு நம் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்…
حدثنا سعيد بن عفير قال: حدثني الليث قال: حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن علي بن الحسين رضى الله تعالى عنهما أن صفية زوج النبي ﷺ أخبرته ح حدثنا عبد الله بن محمد حدثنا هشام أخبرنا معمر عن الزهري عن علي بن الحسين كان النبي ﷺ في المسجد وعنده أزواجه فرحن ، فقال لصفية بنت حيي لا تعجلي حتى أنصرف معك وكان بيتها في دار أسامة فخرج النبي ﷺ معها فلقيه رجلان من الأنصار فنظرا إلى النبي ﷺ ثم أجازا ، وقال لهما النبي ﷺ تعاليا إنها صفية بنت حيي قالا سبحان الله يا رسول الله قال إن الشيطان يجري من الإنسان مجرى الدم وإني خشيت أن يلقي في أنفسكما شيئا.
நபி {ஸல்} அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) "இஃதிகாஃபி"ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி {ஸல்} அவர்களும் எழுந்தார்கள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது
அப்போது அன்சாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி {ஸல்} அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர்.
அப்போது நபி {ஸல்} அவர்கள், "சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)" என்று கூறினர்.
நபி ஸல் அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்றோ, அல்லது "எதையேனும் போட்டுவிடுவான்" என்றோ சொன்னார்கள்.
நல்ல மனிதர் ஒருவரின் மீது இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை இட்டுக்கட்டி விமர்சனமாக தொடுத்தால்….
ஒருவரின் மீது இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை இட்டுக்கட்டி விமர்சனமாக தொடுத்தால் இருவகையான தீங்குகள் ஏற்படும்.
1. சம்பந்தப்பட்ட நபரின் துஆ விமர்சித்தவரின் வாழ்க்கையை பாழாக்கி விடும்.
2. சம்பந்தப்பட்ட அந்த நபர் பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணித்தவராக இருப்பின் அவர் மூலம் சமூகம் அடைந்து வந்த நன்மைகள் நின்று விடும்.
وعن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه
وسلم-: (وَدَعْوَةُ الْمَظْلُومِ
تُحْمَلُ على الْغَمَامِ وَتُفْتَحُ لها أَبْوَابُ السماء
وَيَقُولُ
الرَّبُّ عز وجل وعزتي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِين).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீடு உடனடியாக மேகத்தைக் கடக்கிறது. அதற்காக வானலோகத்தின் வாசல்களும் திறக்கப்படுகிறது. அந்த முறையீட்டுக்குப் பதில் தரும் முகமாக அல்லாஹ் “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ இப்போதே உன் முறையீட்டுக்குப் பதில் தருகின்றேன்” என்று கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )
وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: (دعوة المظلوم مستجابة وإن كان فاجرا ففجوره على نفسه).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்கின்றான். அவன் பாவியாக இருந்தாலும் சரியே!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )
وعن جابر بن
سمرة، رضي الله عنهما .
قال: شكا أهل الكوفة سعداً، يعني: ابن أبي وقاص - رضي الله عنه -
إلى عمر بن الخطاب - رضي الله عنه - فعزله واستعمل عليهم عمارًا، فشكوا حتى ذكروا
أنه لا يحسن يصلي، فأرسل إليه فقال: يا أبا إسحاق، إن هؤلاء يزعمون أنك لا تحسن
تصلي .
فقال: أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله
صلى الله عليه وسلم لا أخرم عنها أصلي صلاة العشاء فأركد في الأوليين، وأخف في
الأخريين، قال: ذلك الظن بك يا أبا إسحاق، وأرسل معه رجلاً - أو رجالاً - إلى الكوفة يسأل
عنه أهل الكوفة، فلم يدع مسجداً إلا سأل عنه، ويثنون معروفًا
حَتَّى أَتَوْا مَسْجِداً لِبَنِي عَبْسٍ.
فَقَالَ رَجُلٌ يُقَالُ لَهُ: أَبُو سعدَةَ: أَمَا إِذْ نَشَدْتُمُوْنَا بِاللهِ، فَإِنَّهُ كَانَ لاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَسِيْرُ بِالسَّرِيَّةِ.
فَقَالَ سَعْدٌ: اللَّهُمَّ إِنْ كَانَ كَاذِباً فَأَعْمِ بَصَرَهُ، وَعَجِّلْ فَقْرَهُ، وَأَطِلْ عُمُرَهُ، وَعَرِّضْهُ لِلْفِتَنِ.
قَالَ: فَمَا مَاتَ حَتَّى عَمِيَ، فَكَانَ يَلْتَمِسُ الجُدُرَاتِ، وَافْتَقَرَ حَتَّى سَأَلَ، وَأَدْرَكَ فِتْنَةَ المُخْتَارِ، فَقُتِلَ فِيْهَا
قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ يَتَعَرَّضُ لِلإِمَاءِ فِي السِّكَكِ، فَإِذَا سُئِلَ كَيْفَ أَنْتَ؟
يَقُوْلُ: كَبِيْرٌ مَفْتُوْنٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ.
مُتَّفَقٌ عَلَيْهِ .
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூஃபாவில் ஆளுநராக இருந்தார்கள். அப்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மீது கூஃபா நகர மக்கள் விமர்சனம் ஒன்றை ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார்கள்.
அதாவது, ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்கும் போது சரியாக தொழ வைப்பதில்லை என்றும், குறிப்பாக மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் போது நீண்ட அத்தியாயங்களை ஓதுகின்றார்கள்” என்பது தான் அந்த விமர்சனம்.
உடனடியாக வந்த இந்த விமர்சனம் உண்மைதானா என்று கண்டறிய ஒரு குழுவை நியமித்தார்கள்.
அந்த குழு கூஃபா விரைந்து சென்று மக்களிடையே விசாரித்தது. கூஃபா நகர மக்களும், அவர் இமாமாக பணியாற்றும் மஸ்ஜிதின் மக்களும் ஸஅத் (ரலி) அவர்கள் குறித்து நல்லதையே கூறினார்கள்.
பனூஅபஸ் எனும் பள்ளியில் அந்தக் குழு விசாரித்த போது, அங்கிருந்த உஸாமா இப்னு கதாதா ( அபூஸஅதா ) என்பவர் எழுந்து ”ஆளுநர் ஸஅத் அவர்கள் எங்களுக்கு மத்தியில் சமத்துவமாகப் பங்கு வைப்பதில்லை, தீர்ப்பளிப்பதில் நீதியாக நடந்து கொள்வதும் இல்லை, எங்களோடு யுத்தகளங்களுக்கு வருவதும் இல்லை” என்று குற்றம் சுமத்தினார்.
உண்மை கண்டறியும் குழுவினர் அதிர்ச்சியோடு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து வருமாறு அனுப்புனீர்கள். ஆனால், அங்கு ஒருவர் இன்னின்னவாறு புதுசாக விமர்சனங்களை வைக்கின்றார் என்று கூறினார்கள்.
உடனடியாக மதீனாவிற்கு வருகை தருமாறு ஸஅத் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
கடிதம் கிடைக்கப்பெற்ற ஸஅத் (ரலி) அவர்கள் மதீனா வந்தடைந்தார்கள்.
அமீருல் முஃமினீன் முன்பாக வந்து நின்றார்கள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள்.
அமீருல் முஃமினீன்: ஸஅதே! நீங்கள் அழகிய முறையில் தொழ வைக்கவில்லையாமே அப்படியா?
வாய் நிறைய புன்னைகை பூத்தவாறு ஸஅத் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்! அம்மக்களுக்கு நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழ வைத்தது போன்றே முந்திய இரண்டு ரக்அத்தில் சற்று நீட்டியும் கடைசி ரக்அத்களில் சுருக்கமாகவும் தொழ வைத்தேன்” என்று கூறினார்கள்.
அடுத்த படியாக உமர் (ரலி) அவர்கள் அபூஸஅதா எழுப்பிய மூன்று விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டார்கள்.
இதைச் செவியுற்ற ஸஅத் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றவராக “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்குப் பாதகமாக நான் மூன்று பிரார்த்தனைகளைச் செய்கின்றேன்” எனக்கூறிவிட்டு...
யாஅல்லாஹ்! உனது அடியார் உஸாமா இப்னு கதாதா என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் பொய்யுரைத்திருந்தால், அவர் பிரபல்யத்திற்காகவும், அதைக் கொண்டு இன்பம் அடைவதற்காகவும் கூறியிருந்தால் ”அவரின் ஆயுளை நீ நீளமாக்குவாயாக!, அவருக்கு வறுமையை நீ நீடித்துவிடுவாயாக!, அவரைக் குழப்பங்களுக்கு மத்தியில் வாழ வைப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உஸாமா இப்னு கதாதா தங்களது கடைசி காலத்தில் “தமது இரு புருவங்களும் கண்களின் மீது விழுந்து தொங்கும் அளவிற்கு முதுமை அடைந்தார். மேலும், கடுமையான வறுமை ஏற்பட்டு, வீதியில் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு பாதையில் செல்லும் பெண்களை சில்மிஷம் செய்து, அவமாரியாதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும், இது குறித்து அவரிடம் ஏன் இந்த வயதில் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டால் “ஸஅத் அவர்களின் மனவருத்தமும், துஆவும் தான் என்னுடைய இந்த கேவலமான நடவடிக்கைகளுக்கு காரணம்” என்று பதில் கூறுவார்.
முக்தார் எனும் ஆட்சியாளரின் காலத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் கடுமையான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்தார்.
( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் ஃகாபா )
எல்லாவற்றையும் விசாரித்து முடித்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் “ஸஅதே! உடனடியாகச் சென்று கூஃபாவில் மீண்டும் கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொள்வீராக!” என்றார்கள்.
இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள் கோபத்தோடு அமீருல் முஃமினீன் அவர்களே! “எனக்கு ஒழுங்காக தொழ வைக்கத் தெரியவில்லை என்று விமர்சித்த மக்களுக்கா என்னை தலைமையேற்றிடச் செல்லுமாறு ஆணையிடுகின்றீர்கள்? இல்லை, இனி ஒரு போதும் அங்கே செல்ல மாட்டேன் என்று கூறி வாழ்நாளின் இறுதி வரை மதீனாவிலேயே இருந்து விட்டார்கள்.
இல்லாத ஒன்றை, செய்யாத ஒன்றை விமர்சனமாக முன் வைத்ததால் துஆ ஒப்புக்கொள்ளப்படும் பாக்கியம் நிறைந்த, சிறந்த போர் வீரரான, சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட நல்ல, சிறந்த பரக்கத்தான ஒரு மனிதரை கூஃபா நகர மக்கள் இழந்தனர். ( நூல்: உஸ்துல் காபா )
விமர்சனம் மற்றும்
விமர்சித்தலின் எல்லையை அடையாளம் கண்டோம்! அதற்குள் பயணித்து வாழும் நஸீபையும்,
விமர்சிப்பதில் இருந்து தவிர்ந்து வாழும் தௌஃபீக்கையும், பிறர் விமர்சிப்பதில்
இருந்து பாதுகாப்பையும் அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்குவானாக! ஆமீன்!! ஆமீன்!!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
فتبارك الله احسن الخالقين مرحبا
ReplyDeleteAlhamdulillah siranda vaartaigal allah ungalukku neenda hayattai tarattum
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
ReplyDeleteஅனைத்து ஆலிம் சகோதரர்களுக்கும் தங்களது ஆக்கம் ஒவ்வொரு வார ஜும்ஆவுக்கும் மிகப்பெரிய பயனைத் தருகிறது.. என்பதே என் விமர்சனம்.
baarakallah
ReplyDeleteJumma kuripi poduga ustath
ReplyDeleteJumma kurippu anuppunga Hazrat
ReplyDelete