Thursday, 7 January 2021

 

என்னால் முடியா விட்டால் வேறு யாரால் முடியும்?

If not me then who?

 

2020 –ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு ஆண்டாக இருந்தது.

 

மனித சமூகம் சார்ந்த கல்வி, அரசியல், அதிகாரம், வேளாண், அறிவியல், விஞ்ஞானம், தொழில், ஆன்மிகம் என அத்துனை துறைகளிலும் முந்தைய ஆண்டை விட முன்னேற்றங்களும், உயர்வுகளும் நிகழும் என எதிர் பார்க்கப்பட்டது.

 

இளைஞர்களைக் கனவு காணத் தூண்டிய, இந்தியாவின் வல்லரசுக்கனவை வாழும் காலமெல்லாம் தமது நெஞ்சில் சுமந்து கொண்டு அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அயராது உழைத்த மறைந்த அப்துல் கலாம் (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னாரின் பிழைகளை மன்னித்து, அருள்புரிவானாக!) அவர்களின் வல்லரசு இலக்கும் 2020 –ஆம் ஆண்டாகவே இருந்தது.

 

சாமானிய, நடுத்தர, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிற மக்களின் எதிர்காலம், லட்சியம், இலக்கு, கனவு என பல்வேறு திட்டமிடல்களின் உறைவிடமாக 2020 –ஆம் ஆண்டு இருந்தது.

 

பல்வேறு அறிஞர்கள், மேதைகள், நிபுணர்கள், ஜோதிடர்கள் 2020 –ஆம் ஆண்டிற்கு ஆருடம் பல கூறினார்கள்.

 

Twenty twenty என கூறுவதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததாலோ என்னவோ எதிர்பார்ப்புகளும் மிகப் பிரம்மாண்டமாகவே இருந்தது.

 

ஆனால், 2020 –ம் ஆண்டு என்னவோ மிகவும் சோதனையான ஆண்டாகவே உலக மக்களைக் கடந்து சென்றிருக்கிறது.

 

தனிமனிதன், குடும்பம், பொருளாதாரம், ஆன்மிகம், தேசம், சர்வதேசம் என எல்லாமுமே ஒரு வித வறட்சிக்கு உள்ளாக்கப்பட்டதை நாம் அறிவோம்.

 

நம்மைக் கடந்து சென்றிருக்கும் 2020 –ம் ஆண்டு நம்மிடம் என்ன விதைத்துச் சென்றிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

 

சாதாரணமான மனிதர்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக அருள்மறை நமக்கு உணர்த்துகிறது.

 

அதனடிப்படையில் ஒரு சோதனையை இறை நம்பிக்கையாளர் கடந்து வருகிறான் என்றால் அவர் எப்படி வர வேண்டும்? எப்படி வருவார்? என்பது குறித்து அருள்மறை குர்ஆன் விரிவாகவே பேசுகின்றது.

 

1.   அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனையன்றி வேறு எவரும் அறிய மாட்டார். இன்னும் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவனே அறிவான். எந்த ஓர் இலையும் அவன் அறியாது உதிர்வதில்லை. பூமியின் இருள்களில் புதைந்து இருக்கும் வித்தும், பசுமையானதும், காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை”. ( அல்குர்ஆன்: 6: 59 )

 

2.   சோதனைகளின் மீதான நம் பார்வை…

 

1.   திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பே!!..

 

أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ

“நிச்சயமாக! அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ, அல்லது இரு முறையோ சோதிக்கப்படுகின்றார்களே ஏன் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவ்வாறிருந்தும் அவர்கள் தவ்பாச் செய்து மீளுவதுமில்லை, நல்லுணர்வு பெறுவதுமில்லை”.                              ( அல்குர்ஆன்: 9: 126 )

 

2.அல்லாஹ் எந்த ஒரு மனிதனையும் கொடுமைப்படுத்துவதில்லை

 

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ

அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே! அவர் சம்பாதித்த தீமையின் பலனும் அவருக்கே!”                    ( அல்குர்ஆன்: 2:286 )

 

3.      அல்லாஹ் நிர்ணயித்ததைத் தவிர வேறெதும் அணுகுவதில்லை

 

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ()

நன்மையோ, தீமையோ அல்லாஹ் எங்களுக்கு விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அணுகாது. அவன் தான் எங்களது பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”

 

4.      சோதனைகள் எல்லை தாண்டுவதில்லை...

 

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்                                          ( அல்குர்ஆன்: 2:155 )

 

மனித சக்திக்கு மீறிய சோதனைகளை இறைவன் தருவதில்லை, அந்த சோதனைகள் எவையுமே அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி எதையும் விளைவிக்கப் போவதில்லை, அப்படியே சோதனைகள் வந்தாலும் அதற்கென உள்ள எல்லைகளில் தான் சோதனை உண்டாகும் என்பதை மேற்கூரிய இறைவசனத்தில் அல்லாஹ் உணர்த்துகின்றான்.

 

இம்மூன்றும் தான் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையின் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களாகும். இவைகளை முற்றிலுமாக நம்பி வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் போது அவன் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

 

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()

 

தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போதுநிச்சயமாக, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!”                  ( அல்குர்ஆன்: 2:156,157 )

 

3. காலங்களின் மீது பழி போடக்கூடாது..

 

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

 

 இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்”.

 

'ஹதீஸ் குதுஸியில்' வருகிறது

"لا تسب الدهر وانا الدهر"

قد أخرجه الإمام مسلم في صحيحه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: لا تسبوا الدهر فإن الله هو الدهر.

ورواه البخاري بلفظ: يسب بنو آدم الدهر وأنا الدهر بيدي الليل والنهار.

 

"காலத்தை திட்டாதீர்கள் அல்லாஹ் தான் காலம்"  (காலங்களை படைத்தவன் )  புகாரியின் அறிவிப்பில் "ஆதமுடைய மக்கள் காலத்தை ஏசுகிறார்கள் நான் தான் காலத்தை படைத்தேன். இரவு பகல் மாறி வருவதை நானே நிர்ணயம் செய்தேன்" என்று வந்துள்ளது.

 

சோதனைகள் என்பது எல்லா காலத்திலும் எல்லோருக்கும் இறைவனால் நடைபெறுகிற ஓர் அம்சமாகும்.

 

மனித குலத்திலே மிகவும் உயர்வானவர்கள் நபிமார்கள் அத்தகைய நபிமார்களையே அல்லாஹ் சோதித்து இருக்கின்றான்.

 

உலகில் காலங்களில் சிறந்த காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் மாநபி {ஸல்} அவர்கள் வாழ்ந்த காலம்.

 

அவர்கள் வாழ்ந்த காலத்தில் தான் எவ்வளவு சோதனைகள், எவ்வளவு நெருக்கடிகள்

 

அப்படியென்றால் இறைவன் சோதனைகளை நமக்குத்தருவது எதற்காக?

 

ஒரு முஃமின் சோதனைகளைக் கடந்து வெளியே வருகிற போது முன்பை விட ஈமானிலும், வாழ்விலும் வழுவானவனாக, உயர்வானவனாக வர வேண்டும்.

முதலில் அவன் தன்னம்பிக்கை உள்ளவனாக தன்னை உயர்த்த வேண்டும், உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

 

1.   யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

 

சிறையிலிருந்து வெளியே வந்த யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசரின் முன்பாக நின்று முதலில் பேசிய வார்த்தையை குர்ஆன் பதிவு செய்திருக்கின்றது.

 

قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55) وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا

 

“இந்த நாட்டின் வளங்களின் மீது என்னை பொறுப்பு தாரியாக நியமியுங்கள்! நிச்சயமாக நான் அவற்றை பாதுகாப்பவனாகவும், அவை பற்றிய போதிய அறிவு படைத்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார். (அல்குர்ஆன்: 12: 55)

 

கொஞ்சம் நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இந்த யூஸுஃப் யார்? இவரின் கடந்த காலம் என்ன?

 

வரலாற்று அறிஞர்கள் கூறுவார்கள் சற்றேரக்குறைய 30 –ஆவது வயதில் யூஸுஃப் அலை அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார்கள்.

 

மிகச் சிறிய வயதில் பெற்றெடுத்த தாய் தந்தையரை பிரிந்ததிலிருந்து சிறையில் இருந்து வெளியே வருகிற வரை அவர் அடைந்த சோதனைகள் என்னென்ன?

 

தமக்கு முன்னால் இருக்கிற வாழ்க்கையை எப்படி மாற்ற வேண்டும் என்கிற வாய்ப்பை “என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் தான் முடியும்? என்ற தன்னனம்பிக்கையோடு துவங்கினார்.

 

அடுத்த வசனத்தில் அல்லாஹ் இப்படிக்கூறுவான்: “இவ்வாறே நாம் யூஸுஃபுக்கு இந்த பூமியில் தான் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ள வசதிகள் செய்து கொடுத்தோம்”. (அல்குர்ஆன்: 12: 56)

 

2.   அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்..

 

அபூபக்ர் (ரலி) அவர்களும் அப்து அம்ர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வியாபார விஷயமாக அப்து அம்ர் யமனுக்குச் சென்றிருந்தார்.

 

இந்த வேளையில் தான் அண்ணலார் ஏகத்துவ வசந்தத்தை ஏந்தி வந்திருக்கிற இறைத்தூதர் என தங்களைப் பிரகடனப்படுத்தினார்கள்.

 

அன்னை கதீஜா (ரலி), அலீ (ரலி), அபூபக்ர் (ரலி), ஜைத் (ரலி) இவர்களொடு நபிகளாரின் மூன்று பெண்மக்களும் ஏகத்துவ வசந்தத்தில் தங்களை இணைத்திருந்த தருணம் அது.

 

لقد أسلم في وقت مبكر جدا..

بل أسلم في الساعات الأولى للدعوة، وقبل أن يدخل رسول الله دار الأرقم ويتخذها مقرا لالتقائه بأصحابه المؤمنين..

فهو أحد الثمانية الذن سبقوا الى الاسلام..

عرض عليه أبوبكر الاسلام

 

யமனில் இருந்து திரும்பிய அப்து அம்ர், நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து தான் ஊரில் இல்லாத போது நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அண்ணலார் பற்றிய பேச்சு வரவே அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டு நேராக அப்து அம்ரை நபி {ஸல்} அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

 

அல்லாஹ்வின் மார்க்கம், வேத வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை என ஏகத்துவத்தின் உண்மை முகத்தை அப்து அம்ருக்கு அண்ணலார் விளக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

 

அண்ணலார் பேசி முடித்ததும் அவர்களின் கரம் பற்றி கலிமா ஷஹாதா கூறி எட்டாவது நபராக தம்மை இணைத்துக் கொண்டார் அப்து அம்ர்.

 

அப்து அம்ர் - அம்ரின் அடிமை இது இஸ்லாமிய நாகரீகத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெயர் என்று கூறிய அண்ணலார் அப்துர்ரஹ்மான்ரஹ்மானின் அடிமை என்று பெயர் சூட்டினார்கள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக ஏகத்துவ வெளிச்சம் மக்காவின் பெருவெளியில் பரவத் தொடங்கிய போது அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரும், அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் எனும் செய்தியும் பரவத்தொடங்கியது.

 

அன்று மிகப்பிரபல்யமாக இருந்த பெரும் வியாபாரிகளில், செல்வந்தர்களில் அப்துர்ரஹ்மான் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அப்து அம்ரும் ஒருவர்.

 

எப்படி தூதுத்துவத்தை கேள்விக்குரியாக்கினார்களோ, விவாதப் பொருளாக ஆக்கினார்களோ அதே போன்று அப்துர்ரஹ்மான் அவர்களின் பெயரையும் விவாதப் பொருளாக மாற்றினர் குறைஷிகள்.

 

அப்துர்ரஹ்மான் இது அன்று வரை குறைஷிகளால் அறியப்படாத பெயர். அப்துல் கஅபா, என்றும் அப்துல் உஸ்ஸா என்றும் அப்து அம்ர் என்றும் பெயர் சூட்டி அழைத்துப் பழகியவர்கள் அவர்கள். அபூபக்ர் அவர்களின் பெயர் கூட அப்துல் கஅபா என்று தான் இருந்தது நபி {ஸல்} அவர்கள் தான் அப்துல்லாஹ் என்று மாற்றினார்கள்.

 

விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அல்லாஹ் அல் இஸ்ராஃ அத்தியாயத்தின் 110 –வது வசனத்தை இறக்கியருளி ரஹ்மான் என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும் என்று பறை சாற்றினான்.

 

ஏகத்துவத்தின் வளர்ச்சி எல்லா முஸ்லிம்களையும் பாதித்தது போன்று அப்துர்ரஹ்மான் அவர்களையும் பாதித்தது. அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த முதல் குழுவில் அப்துர்ரஹ்மான் அவர்களும் இடம் பெற்றார்கள்.

 

பின்னர் மீண்டும் மக்கா திரும்பி அண்ணலாருடன் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் அடைந்த துன்பங்கள், பின்னடைவுகள் ஆகியவற்றிலும் பங்கு கொண்டு, ஊர் விலக்கம் செய்யப்பட்ட அணியிலும் இடம் பெற்றார்கள்.

 

இறுதியாக, எந்த இடமும் உலகத்தின் முடிவல்ல. அது பரந்து விரிந்த இப்பூமியின் இன்னொரு இடத்தின் எல்கை என்று உணர்த்துவது போல் அமைந்தது தான் மதீனாவை நோக்கிய அதிகாரப்பூர்வ ஹிஜ்ரத் பயணம்.

 

உஸ்மான் (ரலி) அவர்களைத் தவிர்த்து வெறெவரும் தங்களுடைய முழு பொருட்செல்வத்துடன் ஹிஜ்ரத் செய்யவில்லை.

 

அணிய ஒரு ஆடை கூட இல்லாத ஏழை முஸ்லிம்களும், வாழ்வாங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் எல்லாவற்றையும் துறந்து ஒன்றுமில்லாமல் அகதிகளாக, ஈமான் எனும் உயரிய செல்வத்தை மட்டுமே உடன் எடுத்துக் கொண்டு மதீனா நோக்கி ஒவ்வொருவராக, சில குழுக்களாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

 

அந்த அணியில் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

 

ஆம்! மக்காவின் பெரும் செல்வந்தராக, செல்வாக்கு மிக்க தலைவர்களான உத்பா, ஷைபா ஆகியோரின் மருமகனாக ( உத்பாவின் மகள் உம்மு குல்ஸூமையும், ஷைபாவின் மகளையும் மணம் முடித்திருந்தார்கள் ) வலம் வந்த அப்துர்ரஹ்மான் ஒரு சில திர்ஹத்தோடு, உடுத்திய ஆடையோடு, செல்வாக்கு, செல்வம் என அத்துனையையும் துறந்து ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எல்லாவற்றையும் துறந்து வந்த முஹாஜிர்களை அன்ஸார்களிடம் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

 

அன்ஸாரிகளும் அவ்வாறே மனமுவந்து முஹாஜிர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொண்டனர்.

 

அப்படி ஏற்படுத்தப் பட்ட சகோதர உறவின் மூலம் சகோதரர்களானார்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸஅத் இப்னு ரபீஉ (ரலி) அவர்களும்.

 

آخى الرسول -صلى الله عليه وسلم- بين المهاجرين والأنصار، فآخى بين عبد الرحمن بن عوف و سعد بن ربيع،فقال سعد لعبد الرحمن: { أخي أنا أكثر أهل المدينة مالا، فانظر شطر مالي فخذه، وتحتي امرأتان، فانظر أيتهما أعجب لك حتى أطلّقها وتتزوجها }.

 

இங்கே தான் தியாகத்திற்கும், உயர்ந்த எண்ணத்திற்குமான போட்டி ஏற்பட்டது. ஆம்! தம் சகோதரர் அப்துர்ரஹ்மானை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்ற ஸஅத் (ரலி) அவர்கள்சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களே! இதோ இது என் வீடு இதில் நீங்கள் சரிபாதியை எடுத்துக் கொள்ளுங்கள்! அதோ என் இரு தோட்டங்கள் அதில் நீங்கள் விரும்பும் ஒரு தோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதோ நான் மணம் முடித்திருக்கின்ற என் இரு துணைவியர்கள், இருவரில் எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்! இத்தா காலம் முடிந்ததும் நானே உங்களுக்கு மணம் முடித்து தருகின்றேன்! என்று அகம் மகிழ கூறினார்கள்.

 

فقال عبد الرحمن: { بارك الله لك في أهلك ومالك، دُلوني على السوق }.

 

எல்லாவற்றையும் சரி பாதியாகத் தரத் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னத ஆத்மாவை, மரியாதை கலந்த பார்வையோடு, புன்னகை பூத்த முகத்தோடு அக மகிழ்வோடு ஏறிட்டுப் பார்த்துஸஅதே! என் சகோதரரே! அல்லாஹ் உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உம் செல்வத்திற்கும் அபிவிருத்தியை நல்கட்டும்!

 

உம்முடைய எதையும் நிராகரிக்கும் எண்ணம் எமக்கில்லை, ஆனாலும், இந்த நோக்கத்திற்காக நான் இஸ்லாத்திற்கு வரவில்லை. எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு மதீனாவின் கடை வீதிக்குச் செல்லும் வழியை மட்டும் காட்டுங்கள்! அது போதும்என்றார்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்.

 

எதை வேண்டுமானாலும் தர முன்வந்து நின்ற ஸஅத் (ரலி) அவர்களின் தியாகத்தின் முன்பு எதுவுமே வேண்டாம் என்கிற பெருந்தன்மையும், அதன் பிண்ணனியில் இருந்த உயர்ந்த இலட்சியமும் வென்றது.

 

வரலாற்றில் முதன் முதலாக இங்கு தான் தியாகம் தோற்றுப் போனது.

 

மதீனாவின் புகழ்பெற்ற கடை வீதியான பனூகைனுகா கடை வீதிக்கு வழிகாட்டப்பட்டார். அல்லாஹ்வின் திருப்பெயரை முன் மொழிந்து கடை வீதிக்குள் நுழைந்த அவர் மாவு, நெய், பாலாடைக்கட்டி என சிறு வணிகம் செய்து லாபம் ஈட்டினார்.

 

உயர்ந்த எண்ணங்களோடும், இலட்சியத்தோடும் அவர்கள் சில திர்ஹத்தோடு வாழ்வைத்துவங்கிய போது அவர்களுக்கு வயது 37 அல்லது 40 தான். அவர்கள் இப்பூவுலகைப் பிரியும் போது 75 வயது.

 

சற்றேறக்குறைய 35 ஆண்டுகளில் மிகப் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார்கள். அல்லாஹ்வின் வணிகர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

 

فقال: { لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا }.

 

எந்தளவு அவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால், அவர்களே சொல்வார்களாம்: “ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியதுஎன்று

 

ما وعده الرسول -صلى الله عليه وسلم-: { عبد الرحمن بن عوف في الجنة }.

 

எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் நபிகளாரின் அருள் நிறைந்த வாயால் உலகிலேயே சுவனத்தைக் கொண்டு சோபனம் பெறும் பேற்றையும் பெற்றார்கள்.

 

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவர்.

 

அவர்கள் சத்திய சன்மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அவர்கள் பெற்றிருந்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

 

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: { أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم }.

 

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

 

باع في يوم أرضا بأربعين ألف دينار، ثم فرّقها في أهله من بني زهرة، وعلى أمهات المؤمنين، وفقراء المسلمين.

وقدّم يوما لجيوش الاسلام خمسمائة فرس، ويوما آخر الفا وخمسمائة راحلة.

وعند موته، أوصى بخمسن ألف دينار في سبيل الله، وأ،صى لكل من بقي ممن شهدوا بدرا بأربعمائة دينار،

 

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வஸிய்யத்தில் என் செல்வத்தில் 50000, தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள்என்று சொல்லி இருந்தார்களாம்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹயாத்தோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள். ஒரு போரின் போது 500 வாகனங்களையும், இன்னொரு போரின் போது 1500 வாகனங்களையும் அர்ப்பணித்தார்கள்.

 

மதீனாவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அடகு வைக்கப்பட்ட சுமார் 30000 வீடுகளை தன் சொந்தப் பணத்தில் மீட்டுக் கொடுத்தார்கள்.

 

ஒரு தடவை 700 ஒட்டகங்களையும், அவை சுமந்து வந்த வியாபாரப் பொருட்களையும் முஸ்லிம்களுக்கு தானமாக வழங்கினார்கள். பிரிதொரு முறை 500 குதிரைகள் சுமந்து வந்த பொருட்களை மக்களுக்கு வாரிக் கொடுத்தார்கள்.

 

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

 

 ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

 

ஸஅதே! என் சகோதரரே! அல்லாஹ் உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உம் செல்வத்திற்கும் அபிவிருத்தியை நல்கட்டும்!

 

உம்முடைய எதையும் நிராகரிக்கும் எண்ணம் எமக்கில்லை, ஆனாலும், இந்த நோக்கத்திற்காக நான் இஸ்லாத்திற்கு வரவில்லை. எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! எனக்கு மதீனாவின் கடை வீதிக்குச் செல்லும் வழியை மட்டும் காட்டுங்கள்! அது போதும்என்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை தான் இவ்வளவு மகத்தான வெற்றியை பெற வைத்தது. என் வாழ்க்கையை தீர்மானிக்க என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் தான் முடியும் என்ற கேள்விக்கணையோடு சில திர்ஹங்களோடு வாழ்வைத் துவக்கினார்கள். அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிகிற போது விட்டுச் சென்ற மேலான செல்வங்களில் மகத்தானதுதாஜிருல்லாஹ்அல்லாஹ்வின் வியாபாரி என்பதாகும்.

 

அவர்கள் வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தமையால் வாழ்க்கையிலும் வென்றார்கள். ஆம்! அன்றைய அரபுலகின் முடிசூடா மாபெரும் செல்வந்தராக, வணிகராக விளங்கினார்கள்.

 

ஆகவே, கடந்த காலங்களில் நம்மை கவலையுறச் செய்த காரியங்களில், சோதனைகளில், ரணங்களையும், கசப்புணர்வுகளையும் தந்த சம்பவங்களில் இருந்து நாம் பாடம் பெறுவோம்!.

 

சோதனைகளிலிருந்து பாடங்களை கற்று, வெற்றி வாகை சூட வேண்டுமென்ற தனியாத ஆர்வத்தோடு தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கையாண்டு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறிவோம்!

 

   வல்ல நாயன் நமக்கு துணை நிற்பானாக! ஆமீன்!

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். புதிய ஆண்டில் தன்னம்பிக்கையை விதைக்கும் உற்சாக டானிக்கை வழங்கியுள்ளீர்கள்.
    الحمد لله جزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم

    ReplyDelete
  2. அற்புதம் ஹஜ்ரத். வர்ணனை செய்ய வார்த்தைகளில்லை

    ReplyDelete