The question of increasing marriage age for girls care or unsafe?
பெண்ணின் திருமண வயது – 21
அக்கறையா? ஆபத்தா? ஓர் அலசல்!
கடந்த 2020 சுதந்திரதின
உரையின் போது “இந்த
அரசாங்கம் மகள்கள், சகோதரிகளின்
ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து அவர்களைக்
காப்பாற்றுவதற்காக அவர்களுக்குச்
சரியான வயதில் திருமணம்
செய்வது அவசியம். மேலும்
பெண்களுக்கான திருமண வயதை
18 –ல் இருந்து 21 –ஆக
உயர்த்துவது தொடர்பான திட்டம்
பற்றி நாட்டின் பிரதமர்
மோடி குறிப்பிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக
கடந்தாண்டு பட்ஜெட் உரையில்
“பெண்களின் திருமண வயதை
உயர்த்துவது தொடர்பாக ஆய்வு
செய்ய ஒரு குழு
அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், சமதா கட்சியின்
முன்னாள் தலைவர் ஜெயா
ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் உறுப்பினர் வீ.கே.
பால்,
மத்திய சுகாதார அமைச்சகம்,
சட்ட அமைச்சகம், பெண்கள்
& குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள்
அடங்கிய 10 பேர் கொண்ட
குழு அமைக்கப்பட்டது.
பெண்களின் ஆரோக்கியம்
உள்பட பல்வேறு அம்சங்களை
ஆய்வு செய்த அக்குழு
பெண்கள் அமைப்புகள், சமூக
செயற்பாட்டாளர்களுடன் பலகட்ட
கலந்துரையாடல்களை நடத்தி
தனது அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்பித்தது.
தற்போது பெண்ணுக்கான
திருமண வயதை 21 –ஆக
மாற்றம் செய்யும் வகையில்
தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
மேலும் நடப்பு
குளிர்கால கூட்டத்தொடரிலேயே மசோதாவை
நிறைவேற்றவும் மத்திய அரசு
பரிசீலித்து வருவதாக ஊடகங்கள்
தெரிவிக்கின்றன. ( நன்றி, விகடன்
17/12/2021 )
குழு 21 –ஆக
உயர்த்துவதற்கு சொன்ன காரணங்கள்…
கடந்த ஆண்டு
ஜூன் மாதம் அமைக்கப்பட்ட
இந்த பணிக்குழு ஒரு
பெண் தன்னுடைய முதல்
கர்பத்தின் போது குறைந்த
பட்சம் 21 வயதில் இருக்க
வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
குழந்தை பிறப்புக்கு
பிந்தைய தாய் – சேய்
ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
பெண்களின் இறப்பு விகிதத்தை
குறைக்க முடியும். பெண்களின்
சுய,
பொருளாதார, சமூகப்பங்களிப்பை மேம்படச்செய்ய
முடியும்.
மேலும், அவர்கள்
அளித்துள்ள அறிக்கையில் நடைமுறையில்
உள்ள “குழந்தை திருமணத்
தடைச்சட்டம் 2006 உள்பட திருமணச்
சட்டங்கள் ( இந்திய கிறிஸ்தவ
திருமணச் சட்டம் 1872, பார்சி
திருமண மற்றும் விவாகரத்து
சட்டம் 1936, முஸ்லிம் தனிநபர்
சட்டம் (ஷரீஅத்) விண்ணப்ப
சட்டம் 1937, சிறப்பு திருமண
சட்டம் 1954, இந்து திருமண
சட்டம் 1955, வெளிநாட்டு திருமண
சட்டம் 1969 ஆகிய ) அனைத்திலும்
திருத்தம் கொண்டு வர
வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தேசத்தின் திருமணச் சட்டத்தின் பரிமாணம்…
குஜராத்தைச் சேர்ந்த மலபாரி என்ற செயற்பாட்டாளர், 'சமய
நம்பிக்கை என்ற பெயரில் சிறுவயதுக் குழந்தைகளுக்கு நடக்கும் திருமணங்களைத் தடுக்க
ஆங்கிலேய அரசு வலுவான ஒரு சட்டத்தை உருவாக்கவேண்டும்' என்று
தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 1891-ல் இதுதொடர்பாக ஒரு சட்டமுன்வரைவை
உருவாக்கியது ஆங்கிலேயே அரசு. ஆணுக்கு 18 வயது நிறைவடைந்தபிறகும் பெண்ணுக்கு 12 வயது
நிறைவடைந்தபிறகுமே திருமணம் செய்விக்கவேண்டும் என்றும் அந்த வரைவில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. திலகர் உள்ளிட்ட பலரும் இந்த வரைவை எதிர்த்து
எழுதினார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடவேண்டாம் என்று பிரிட்டிஷ்
தலைமையும் கண்டித்ததால் அந்த வரைவை கைவிட்டார்கள் இந்தியாவை நிர்வகித்த பிரிட்டிஷ்
அதிகாரிகள்.
அதேநேரத்தில் குழந்தைத் திருமணத்தால் பெண்கள்
பாதிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என்ற குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.
1913-ல் மீண்டும் திருமண வயதை
சட்டப்பூர்வாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆச்சார்யா போன்றவர்களின் கடும் எதிர்ப்பின்
காரணமாக அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணுரிமை
சார்ந்த குரல்கள் தீவிரமடைந்தன. குழந்தைப்பருவத்தில் திருமணம் செய்வதால் பெண்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. 1929-ல்
ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா என்ற ஆங்கிலேயர் திருமணம் செய்ய பெண்ணுக்கு 14 வயதும்
ஆணுக்கு 18 வயதும் நிறைந்திருக்கவேண்டும் என்ற சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தார். கடும்
எதிர்ப்புக்கிடையில் 1929 செப்டம்பர் 28-ம் தேதி அந்த வரைவு சட்டமானது. சார்தாவால்
உருவாக்கப்பட்ட இந்தச் சட்டமே காலப்போக்கில் பெயர் மருவி சாரதா சட்டம் என்றானது.
1929-ல். திருமண வயதை வரையறுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது, இதில், பெண்களுக்கான திருமண வயது, 14 ஆகவும், ஆண்களுக்கு, 16 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த சட்டம், பின்னாளில் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் திருமண வயது, 18 எனவும், ஆண்களுக்கு, 21 ஆகவும் உயர்த்தப்பட்டது.
அதற்குப் பிறகு திருமணம் குறித்த சட்டங்கள் ஒன்றன்பின்
ஒன்றாக மேலே குறிப்பிட்டபடி நாட்டில் இயற்றப்பட்டன. ( நன்றி,
விகடன் 17/12/2021, தினமலர், 16/01,2021 )
ஆதரவும்.. எதிர்ப்பும்..
ஆதரிப்பவர்கள் கூறும் காரணங்கள்..
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உட்பட பலர் இந்த மசோதாவை வரவேற்றுள்ளனர்.
பெண்களின் திருமண வயதை உயர்த்தும்போது அவள் முறையாகக் கல்வி
பெற்று முதிர்ச்சி அடைந்திருப்பாள். சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்
பக்குவத்தைப் பெறுவாள். மேலும் முதிர்ச்சி பெற்ற பெண்ணை, ஆண்
திருமணம் செய்யும்போது அவனும் பல பலன்களை பெறுவான். அப்படியான தம்பதிகள் மூலம்
நல்ல குழந்தைகள் சமூகத்துக்குக் கிடைப்பார்கள். பெண்களின் திருமண வயதை
சட்டப்பூர்வமாக உயர்த்தும் முடிவென்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது"
என்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி.
பெண்களுக்கு 17 வயது ஆகும்போதே மாப்பிள்ளை பார்த்து வைத்துவிட்டு 18 வயது
ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் அவர்கள் இளம்தாயாக மாற
நேரிடுகிறது. மேலும் அவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடும் ஏற்படுகிறது. கல்வித் தகுதி, கனவு
என எதுவும் இல்லாமல் போகிறது. திருமண வயதை உயர்த்தும்போது பெண்களுக்கு உலக அனுபவம்
கிடைக்கும். நிச்சயம் வரவேற்கக்கூடிய விஷயம்..." என்கிறார் பாட்டாளி மக்கள்
கட்சியின் பொருளாளர் திலகபாமா.
என்னைப் பொறுத்தவரை 18 வயது என்பது படிக்கவேண்டிய வயது. இந்தப்
பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பக்குவமடையாதவர்களாகவலே
இருப்பார்கள். இன்று நிறைய பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாகவே நடக்கின்றன.
அதைத்தாங்கும் அளவுக்கு இந்த வயதில் பெண்களின் உடல்நிலை இருப்பதில்லை. 21 வயதில்
திருமணம் செய்யும்போது பெண்கள் பட்டப்படிப்பை முடித்துவிடமுடியும். அதன்மூலம்
தன்னம்பிக்கை கிடைக்கும். உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும். முதிர்ச்சியும்
ஏற்படும்" என்கிறார் ஆசிரியை சுகிர்தராணி. ( நன்றி: விகடன் )
பெண்ணின் திருமண வயதில்
அக்கறை காட்டினால் மட்டும் போதுமா?
"பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பெண் தன்
வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்யும் உரிமைமீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே
இருக்கும். இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமையை இது
பறித்துவிடும். அரசு இந்த நடவடிக்கையைக் கைவிடவேண்டும்" என்று அனைத்திந்திய
ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அத்தோடு நின்று விடாமல்
தஞ்சாவூரில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில கூட்டத்தில், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன
தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ``பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த
நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதனால் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு
எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. பெண்கள் மீது மத்திய பா.ஜ.க அரசுக்கு
உண்மையாகவே அக்கறை இருந்தால், ஊட்டச்சத்துக் குறைப்பாடுகளின் காரணமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின்
ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அனைத்துப் பெண்களுக்கும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சமமான ஊதியம் கிடைக்க
நலத்திட்டங்களை வகுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள். ( நன்றி: விகடன், 21/12/2021 )
பெண்ணின்
திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்துவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, இடதுசாரிகள், ஓவைசி கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த பரிந்துரையை எதிர்த்து
பாராளுமன்றத்தில் முஸ்லிம் லீக் ஒத்திவைப்பு நோட்டீசை அளித்தது.
இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த மேல்சபை
எம்.பி. அப்துல் வகாப் கூறும்போது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில்
அங்கீகரித்துள்ளது. இது
அத்துமீறல் செய்வதற்கான முயற்சி என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன
என்றார்.
சமாஜ்வாடி
கட்சியை சேர்ந்த சபிக்குர் ரகுமான் கூறும்போது, இந்தியா ஏழை நாடாகும். ஒவ்வொருவருக்கும் தனது மகளை முன்னதாக
திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இருக்கும். இதனால் வயதை உயர்த்தும் முடிவுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏ.ஐ.எம்.ஐ.எம்.
தலைவர் ஓவைசி கூறும்போது, மத்திய அரசின் இந்த முடிவு
கண்டனத்திற்குரியது. இது விமர்சனம் அளிக்கக்கூடியது என்றார். மேலும், இதுகுறித்து தனியார் செய்தி ஏஜென்சியிடம் பேசிய ஓவைசி, பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பின்னணியில் இருப்பவர்களைப் பற்றி
தெரிந்து கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும், ஒரு
இந்திய குடிமகன் 18 வயதில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம் , பிரதமர்களை
தேர்ந்தெடுக்கலாம் மற்றும் எம்பி எம்எல்ஏக்களைதேர்ந்தெடுக்கலாம், ஆனால்
வாழ்க்கைத்துணையை மட்டும்ம் தேர்ந்தெடுக்க முடியாது என்பது நகைப்புக்குரியது
என்றும், ஆண்களுக்கான 21 வயது வரம்பையே 18 வயதாக குறைக்க வேண்டும் என தான் கருதுவதாகக் கூறினார். ( நன்றி: மாலைமலர், ஒன் இந்தியா தமிழ், டிசம்பர் 18, 2021, )
ஆய்வுக்குழுவினர் மற்றும் ஆதரவு தெரிவிப்பவர்கள் கூறும்
காரணங்கள் ஏற்புடையதா?
இது தொடர்பாக, பிபிசியிடம் பேசிய
வழக்குரைஞர் அஜிதா, "ஒரு
சட்டை எல்லோருக்கும் பத்தாது" என பழமொழி உண்டு. மிகவும் ஏற்றத்தாழ்வுமிக்க இந்திய
சமூகத்தில் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதில் பல்வேறு விஷயங்களையும் பார்க்க
வேண்டும்.
பெண் கல்வி, அவர்களுக்கான
வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு, இதனை அரசு உறுதி செய்ய வேண்டும். விவசாய கூலி வேலை
செய்யும் பெண்கள் பெரும்பாலானோர் ஒற்றை குடிசையில் வாழ்கின்றனர்.
16-17 வயதுள்ள பெண்களை ஒற்றை குடிசையில் வைத்திருப்பது
அவர்களின் தனிவாழ்வை பாதிக்கக்கூடியதாக உள்ளது. எனவே, அவர்களுக்கு வாழ்விடத்துக்கான உரிமையை உறுதி செய்ய
வேண்டும்.
21 வயது வரை அப்பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி
வைத்திருக்கிறோமா என்றால், 14 வயதுக்கு
மேல் அவர்களின் கல்வியையே உத்தரவாதப்படுத்த முடியாது. இந்தியாவில் 50
சதவீதத்தினருக்கு மேல் ஏழ்மையில்
இருக்கின்றனர். சமச்சீரற்ற ஒரு நாட்டில் இவற்றை கவனத்தில் கொண்டார்களா என்பதைப்
பார்க்க வேண்டும்.
தங்களின் மதிப்பை மட்டுமே கவனத்தில் கொள்ளும் அரசாக மத்திய அரசு இருக்கிறது.
பெண்ணியவாதிகள் குழந்தைகளை வளர்க்க விரும்புவதில்லை என கூறும் ஒரு கட்சியின்
அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் இது என்பதுதான், இது தேர்தலுக்கான நோக்கமா என கேள்வி கேட்க வைக்கிறது.
இளம்வயது
பெண்களிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை பிரச்சினைகளை
தீர்க்க சமூக நல திட்டங்களையும் உணவு பாதுகாப்பையும் நோக்கி நகர்வதே தீர்வாக
இருக்கும் எனக்கூறுகிறார் ரவீந்திரநாத்.
"மருத்துவ ரீதியான காரணங்களை
சொல்வது ஏமாற்றும் திட்டம். இந்தியாவில் 50 சதவீத கர்ப்பிணி
பெண்கள் ஏன் ரத்தசோகையுடன் உள்ளனர்? அதனை ஏன் சரிசெய்யவில்லை.
பேறுகால இறப்புகளை ஏன் தடுக்கவில்லை. பிரசவத்தின் போதும், அதற்கு பின்னும் ஏற்படும் ரத்தப்போக்கினாலேயே பெண்கள் இறக்கின்றனர்.
18 வயதுக்குக் கீழ்
உள்ள பெண்களிடையே ரத்தசோகையை சரிசெய்யாமல், எப்படி 21 வயதில் மட்டும் சரிசெய்வார்கள்?
சிறு வயதிலிருந்தே
ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை கொடுக்க
வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திருமணத்திற்கு உதவித்தொகை, தாலிக்குத் தங்கம்,
மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் திட்டம் போன்று, அனைத்து மாநிலங்களிலும்
செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்தினால் பெண்கள் படிப்பு முடியும் வரை
பெற்றோர்கள் காத்திருப்பார்கள். உயர்கல்வி வரை படிப்பு இலவசம் என்பதை திறம்பட
செயல்படுத்த வேண்டும்.
பெண்
குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பையும் புரதச்சத்து சரியான விகிதத்தில்
கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட காலமாக நிலவும் பாலின அசமத்துவமும், பெண் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததும் தான் இப்பிரச்சினைக்குக்
காரணம். ( நன்றி: பி.பி.சி தமிழ், 18/12/2021 )
உலக நாடுகளில் திருமண வயது...
இன்று உலகின் பல
நாடுகளிலும் திருமண வயதென்பது 18 ஆக மாறி வருகிற இதே
நேரத்தில் உலகின் பல நாடுகளில் இதை விடக் குறைந்த வயதில் திருமணம்
அனுமதிக்கப்பட்டே உள்ளது. பல நாடுகளில் பெண்ணின் திருமண வயது 12 ஆக உள்ளது.
இத்தாலியில் 14 வயது
என்றும் ஜப்பானில் 15 வயதாகவும்
டென்மார்க்கில் 16
வயதாகவும் மற்றும் பல நாடுகளில் 18 வயதாகவும் உள்ளன. ஐரோப்பாவின் எஸ்டோனியாவில் பெற்றோரின் அனுமதியுடன் 15
வயதிலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சட்டப்பூர்வ திருமண வயது 18, ஆனால்
பெற்றோர் அனுமதியுடன் 16, 17 வயதிலும், கரீபிய தீவு நாடான ட்ரினிடாட் டொபாகோவில்
சட்டப்பூர்வ திருமண வயது 18 எனினும் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனி
சட்டம் அமலில் உள்ளது. இஸ்லாமிய ஆண் 16 வயதிலும், பெண் 12 வயதிலும், இந்து ஆண் 18
வயதிலும், பெண் 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
சீனாவில் 20 வயதாகவும், அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் திருமண வயது வேறுபடுகின்றது. Masschusetts மாகாணத்தில் நீதிமன்ற அனுமதியுடன் 12 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும், சில மாகாணங்களில் திருமண வயது 18 என்றிருந்தாலும் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இதில் சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, பெரும்பாலான
உலக நாடுகள் திருமண வயதாக 18 ஆகவும், பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியோடு அதற்கும்
குறைவான வயதுள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டம் இயற்றி அனுமதி
வழங்கியுள்ள போது மத்திய அரசின் இந்த சட்ட நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக
முஸ்லிம் சமூகத்தின் பெருமளவிலான எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்க முடியும்.
குறைவான மகப்பேறு உண்டாகும் வரையிலான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று அரசு
கருதுவதாக ஏற்படும் எண்ணத்தை மறுப்பதற்கில்லை.
மேலும், நாடு
முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் நோக்கத்தோடு இயங்கும் மத்திய அரசு இந்த
ஒரு சட்டத்தின் மூலமாக திருமணம் சம்பந்தமாக ஏற்கனவே இருக்கும் சிறப்புச்
சட்டங்களோடு 6 சட்டங்களில் திருத்தம் செய்யவோ, முற்றிலும் ரத்து செய்யவோ
வாய்ப்பிருக்கின்றது என்று உறுதியாக ஏற்படுகிற எண்ணத்தையும் மறுக்க முடியவில்லை.
சந்தேகமும்... கேள்வியும்..
மிக இள வயது
திருமணத்தால் பல பாதிப்புக்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும்,
நடைமுறையில் உள்ள 18 வயதை மாற்றத் தேவை இல்லை. ஏனெனில், பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம். தனது சக்திக்கு மீறிய பொறுப்பை சுமக்கும்
நிலைக்கும் அவள் ஆளாகலாம். ஆனால், பக்குவம் வர வேண்டும்
எனவே, 21க்கு முன்னர் திருமணம் செய்யக் கூடாது என்கிற காரணம் ஏற்புடையதல்ல.
18-19-20 வயதில் வராத பக்குவம் 21
ஆனதும் வருமா? பக்குவம் வர வேண்டும்
என்றால் இன்று சில பேருக்கு நாற்பதிலும் வராது. சில ஆண்களுக்கு 60 இல் கூட பக்குவம் வருவதில்லை. எனவே, பக்குவத்தைக் காரணம்
காட்ட முடியாது.
நிர்ப்பந்த நிலை:
21 க்குக் கீழ்
திருமணம் செய்ய முடியாது எனும் போது பல பிரச்சினைகள் உள்ளன. ஏழை மற்றும் வறுமை சூழ்ந்த குடும்பங்களில் தாயை இழந்து பாட்டியின்
பராமரிப்பில் வாழும் பெண் பிள்ளைகள் பலர் உள்ளனர். பருவம் அடைந்ததும் திருமணம்
செய்வித்து தனது கடமையை நிறைவு செய்ய பாட்டி விரும்புவாள். போதிய பாதுகாப்பில்லாத
இது போன்ற பெண் பிள்ளைகள்தான் அடுத்தவர்களின் சீண்டுதல்களுக்கு ஆளாகுகின்றனர்.
இத்தகைய நிலையில் உள்ள பெண் பிள்ளைகள் அன்புத் தேடலில் காதல் வயப்படுவதும்
அதிகமாகும். இத்தகைய நிலையில் உள்ள பிள்ளையை 21 வரை வைத்துப் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாகும்.
திருமணத்திற்கு வயதெல்லை போடும் மத்திய அரசு
கள்ளக்காதலுக்கும்,
விபச்சாரத்திற்கும், கற்பழிப்புக்கும் எதிராக ஏன் சட்டம்
இயற்றவில்லை?
இள வயதுத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படத் தக்கதல்ல. என்றாலும், முற்றாகத் தடுப்பதென்பது சமூகத்திற்குப் பாதிப்பை உண்டு பண்ணும். எனவே, தேவையுடையவர்களைக் குறைந்த வயதிலும் திருமணம் செய்வதற்கான வாயப்புக்களை வழங்கும் விதத்தில்தான் சட்டம் அமைவது ஆரோக்கியமானதாகும்.
இஸ்லாத்தில் திருமண வயது...
இஸ்லாத்தைப்
பொறுத்த வரையில் திருமணத்திற்கான வயதாக எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. பருவம்
அடைந்திருக்க வேண்டும்,
இல்லறத்தில் ஈடுபடும் உடல் நிலை இருக்க வேண்டும். ஒரு பெண்
பிள்ளையை அவளது தந்தை காரண காரியங்களுடன் பருவ வயதை அடைய முன் திருமணம்
செய்விக்கலாம். ஆனால்,
பெண் பெரியவளான பின்னர்தான் இல்லறத்தில் இணைய வேண்டும்.
மேலும்,
மனப்பொருத்தமில்லாத பெண்ணை பலவந்தமாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இஸ்லாம்
தடை விதிக்கின்றது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا
النِّسَاءَ كَرْهًا
“இறைநம்பிக்கை
கொண்டவர்களே! பெண்களை கட்டாயப்படுத்தி நீங்கள் அனந்தரமாக்கிக் கொள்வது உங்களுக்கு
ஆகுமானதல்ல”. ( அல்குர்ஆன்: 4: 19 )
மேலும், திருமண
வரையறைகளைப் பற்றி பேசும் போது பெண்களைத் தான் மணந்து கொள்ள திருக்குர்ஆன்
சொல்கின்றதே தவிர சிறுவர் சிறுமியர் திருமணம் குறித்தான எவ்வித கட்டாயத்தையும் கூறவில்லை.
وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ
وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
“இன்னும் உங்களில்
ஆணோ, பெண்ணோ திருமணம் ஆகாதவருக்கு அவ்வாறே திருமணம் ஆகாத உங்களுடைய ஆண் அடிமைகள்,
பெண் அடிமைகளில் இருந்து நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து
வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருப்பின் அல்லாஹ் தனது அருளால் அவர்களைச்
செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். அல்லாஹ் வழங்குவதில் மிக்க விசாலமானவன்.
யாவற்றையும் முற்றும் அறிந்தவன்”. ( அல்குர்ஆன்: 24: 32 )
وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى
يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
“மணமுடித்துக்
கொள்ள வசதி இல்லாதவர்கள் அல்லாஹ் தனது அருளினால் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கும்
வரை பத்தினித்தனமாய் அவர்கள் காத்திருக்கட்டும்!” (
அல்குர்ஆன்: 24: 33 )
மேலும், பருவ வயதை
அடையாத பெண்கள் திருமணம் பற்றி குறிப்பிடும் போது இந்த ஒரு வசனம் மட்டுமே அது
பற்றி பேசுகின்றது. இதுவும் கட்டாயமாக ஒவ்வொரு இஸ்லாமியரும் செய்ய வேண்டிய அனுமதியாக
கூறவில்லை. மாறாக, ஏதேனும் அவசியம் அல்லது நிர்பந்த நேரத்தில் மட்டுமே
அனுமதியாகும்.
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ
ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ
தலாக் விடப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்
பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது, மாதத்தீட்டு ஏற்படாத பெண்கள் 03 மாதம் இத்தா இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. (65:4)
இதன் மூலம் பருவ
வயதை அடைய முன்னரும் திருமணம் செய்யலாம் என்பதை அறியலாம். ஆனால், அவர்கள் இல்லறத்தில் ஈடுபட உடல் ரீதியாக பெண் பெரியவளாக வேண்டும்.
மிகக் குறைந்த
வயதில் திருமணம் செய்வதை இஸ்லாம் ஊக்குவிப்பது
போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி இதை வைத்து இஸ்லாத்தைப் பிற்போக்கானதாகக் காட்ட
முற்படுவதையும் ஏதோ முஸ்லிம்கள் மட்டும்தான் குறைந்த வயதுத் திருமணத்தை
அனுமதிப்பது போன்றும் காட்ட முயற்சிப்பது அடிப்படையில் தவறான ஒன்றாகும்.
ஏனெனில், இந்திய
தேசத்தில் நம் முன்னோர்களும், இஸ்லாத்தை விமர்சிக்கும் பலரும் மிகக் குறைந்த
வயதில் திருமணம் செய்தவர்களே!
தேசத்தந்தை
என்றும் மகாத்மா என்றும் அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தி 1883 இல் தனது 13
ஆம் வயதில் 13 வயதான கஸ்தூரி
பாயை மணந்தார். 1897
இல் மகாகவி பாரதியார் தனது 14 ஆம் வயதில் 7
வயதான செல்லம்மாவை மணந்தார். ஈ.வே.ரா. பெரியார் 1898 இல் தனது 19
ஆம் வயதில் 13 வயது நாகம்மாவை
மணந்தார். 1906
இல் டாக்டர் அம்பேத்கார் தனது 15 ஆம் வயதில் 09
வயது இராமா பாயை மணந்தார்.
இவ்வாறு இள வயதுத்
திருமணம் செய்தவர்களை விமர்சிக்காதவர்கள் இதை விட 1000 வருடங்களுக்கு முன்னர் 09 வயது ஆயிஷா(ரலி)
அவர்களுடன் மாநபி {ஸல்} அவர்கள் இல்லறத்தில் இணைந்ததை விமர்சிப்பதும், முஸ்லிம்கள்
மாத்திரமே இளவயது திருமணங்களை ஊக்குவிக்கின்றார்கள் என்பது போன்ற தோற்றத்தை
உருவாக்குவதும் ஏற்புடையதல்ல.
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ
حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ
“மேலும்,
அநாதைகளின் பொருளின்பால் அவர்கள் திருமணப்பருவத்தை அடையும் வரை எது அழகோ
அதனைக் கொண்டே தவிர அனுபவிக்க நீங்கள் நெருங்காதீர்கள்”. ( அல்குர்ஆன்: 6: 153 )
وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ
آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا
تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا
‘திருமணப் பருவத்தை அடையும் வரை
அநாதைகளைச் சோதித்துப் பாருங்கள். அவர்களிடம் (நிர்வகிக்கும்) திறமையை நீங்கள்
உணர்ந்தால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள்
பெரியவர்களாகிவிடுவார்கள்; என்பதற்காக வீண்விரயமாகவும், விரைவாகவும் அதனை உண்டு விடாதீர்கள்.” (அல்குர்ஆன்: 4: 6)
மேற்கூறிய இரண்டு
வசனங்களின் கருத்தைப் பார்க்கும் போது பருவ வயதை அடைந்தால்தான் ஒரு பெண் திருமண
வயதை அடைவாள் என்பதை விளங்கலாம். எனவே, பருவ வயதை அடைந்தால் சட்ட
ரீதியாக அவள் திருமணத் திற்குத் தகுதியானவளாகின்றாள்.
عَنْ
عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ
قَالَ لَنَا رَسُولُ
اللَّهِ ﷺ
يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ
مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ
لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ؛ فَإِنَّهُ لَهُ
وِجَاءٌ.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் ஆற்றல் உள்ளவர் திருமணம் புரிந்து கொள்ளட்டும்! ஏனெனில், திருமணம் பார்வை ( அங்கும் இங்கும் அலைவதை விட்டும் ) யைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தை ( காம இச்சையினால் சுதந்திரமாகத் திரிவதை விட்டும் ) ப்பாதுகாக்கின்றது.
மேலும், திருமணத்தின் பொறுப்பைச் சுமக்க ஆற்றல் இல்லாதவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்! ( நூல்: முஸ்லிம்)
திருமணத்திற்கான தகுதி ( உடல் வலுவும், பொருளாதார வசதியும் ) வந்து விட்டால் தாமதிக்காமல் உடனடியாக இஸ்லாமிய வழிகாட்டலின் படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
عن علي
رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم قال : " يا علي ! ثلاث لا تؤخرها
: الصلاة إذا أتت ، والجنازة إذا حضرت ، والأيم إذا وجدت لها كفؤا . (رواه الترمذي)
“மூன்று
காரியங்கள் பிற்படுத்தப் படாது” என நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”1. தொழுகை அதற்கான
நேரம் வந்து விட்டால். (தொழுவதற்கும்) 2. ஜனாஸா ஆஜராகி
விட்டால். (தொழுது அடக்கம் செய்யவும்) 3. பருவ வயதை அடைந்த
பெண்ணுக்குத் தகுந்த வரண் கிடைத்து விட்டால். (திருமணம் முடித்து வைப்பதற்கும்) ( நூல் திர்மிதீ)
மேலும், குறைந்த
வயதில் திருமணம் செய்தவர்கள் பக்குவம் பெற்றவர்களாக முடியாது என்று சொல்வதும்
ஏற்புடையதல்ல.
ஆயிஷா (ரலி) அவர்கள்...
09 வயதில்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடன் வாழ்வைத் துவங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
எவ்வளவு பக்குவம் பெற்றவர்களாக சிறந்து விளங்கினார்கள் என்று வரலாறு வாகாய் பதிவு
செய்து வைத்திருக்கின்றது.
பிக்ஹ் சட்டக்கலை, ஹதீஸ்கலைகளில்
அன்னையவர்கள் தன்னிகரற்று விளங்கினார்கள். பெரும்பெரும்
நபிமணித்தோழர்கள்
எல்லாம் அரிய விஷயங்கள் பலவற்றை அன்னையவர்களிடம் கேட்டுத்
தெளிவு பெறறனர்.
عن
أبي موسى قال : ما أشكل علينا أصحاب رسول الله صلى الله عليه
وسلم حديث قط فسألنا عائشة إلا وجدنا عندها منه علما . رواه الترمذي
அபூ மூஸா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபி தோழர்களான எங்களுக்கு நபியின் எந்த ஒரு ஹதீஸில் சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்கான விளக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வோம்.
( நூல். மிஸ்காத். பக்கம். 574
)
சுமார் 2210 ஹதீதுகளை
அறிவித்திருக்கிறார்கள். அவை அனைததும் சட்டம் சார்ந்தவை.
இவர்களுக்கு அரபி
மொழியில் சிறந்தபுலமை இருந்தது. இவர்கள் சிறந்த கவிஞராகவும்
இருந்தனர்.
இவர்கள் மருத்துவத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஏழைகளுக்கு
இலவசமாக மருந்து வழங்கி வந்தனர்.
நபி {ஸல்} அவர்களின்
எல்லா துணைவியரிலும் மிகக்குறைந்த வயதினை அன்னை ஆயிஷா
ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றிருந்தாலும் ஞானம், இறையச்சம்,
வழிபாடு, ஈகை, வீரம்,
உலகப்பற்றற்ற தன்மை, ஆத்மீகப் பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளிலும் மற்றெல்லோரை விடவும் முன்னணியில் இருந்தனர்.
கலீபாக்களின் ஆட்சிக்
காலத்தில்
அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக்
கொள்ளப்பட்டன.
சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த
கல்வி ஞானத்தைப்
பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக
இருந்தார்கள்.
அன்னை ஆயிஷா
ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு இஸ்லாமியத்
தாய்க்குலத்திற்கு அழகிய முன்மாதிரியான வாழ்வாகும். நற்கருமங்களை விரைந்து செய்வதிலும், அறிவு ஞான வேட்கையிலும்,
தமது இனிய கணவரது இதயத்தை இன்புறச் செய்வதிலும் அன்னையவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை நம்மினத்துத் தாய்க்குலம் கைக்கொள்ளுமாயின் இம்மையிலும், மறுமையிலும் அவர்களது
வாழ்வு
சிறப்புற்றோங்கும்.
அன்னையவர்கள்
ஹிஜ்ரி 58
ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம்
வயதில்ரமளான் மாதம் 17 ஆம் நாள்
மரணமடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸாத் தொழுகையினை நபிமணித் தோழராம்
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறைவேற்றி வைத்தனர்.
இதர உம்முஹாத்துல்
முஃமின்களான –
அண்ணலாரின் அருந்துணைவிகளுடன், அன்னையாரும் இரவு நேரத்தில் ஜன்னத் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர். (ஸர்கானி,
பாகம் – 03, பக்கம் – 234)
ஃபாத்திமா
(ரலி) அவர்கள்…
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் நுபுவ்வத் 10 – ஆம் ஆண்டு அன்னை கதீஜாவை இழந்தார்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத்
சென்ற போது தனது மகளை, ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் மணம் முடித்து வைத்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு வயது
பதினெட்டு. ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்கு இருபத்தி மூன்று வயதாகும். இன்னொரு ரிவாயத்தில்
ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு 15 வயது,
அலீ (ரலி) அவர்களுக்கு
23 வயது என்றும் இருக்கின்றது. மிகவும் எளிமையான முறையில் ஹிஜ்ரி – 2 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் தனது மகளுக்கு
மரக் கட்டில், தலையணை, போர்வை, திரிகை, நீர் சேகரிப்பதற்கான பாத்திரம் போன்ற பொருட்களை
அன்பளிப்புச் செய்தார்கள். பாத்திமா நாயகியார் அவர்கள் தனது வேலைகளை, அதாவது மாவு அரைத்தல், ரொட்டி சுடுதல், நீர் அள்ளுதல், வீடு பெருகுதல் போன்ற வீட்டு வேலைகளை தாமே செய்து
கொண்டார்கள்.
தந்தையின் மனதிலும், கணவன் கண்ணிலும் நிறைவாக வாழ்ந்தார்கள்.
இவரிடம் இறையச்சம், நாணம், பொறுமை, எளிமை, தருமம், பக்தி, பற்றற்ற வாழ்வு போன்ற நற்பண்புகள்
நிறைந்தவராகக் காணப்பட்டார்கள்.
عن
عَلِيٍّ رضي الله عنه، أَنَّ فَاطِمَةَ رضي الله عنهِا أَتَتِ النَّبِيَّ صلى الله
عليه وسلم تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا
أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ، فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ رضي
الله عنها، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عائشة رضي الله عنها،
قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ، فَقَالَ:
"عَلَى مَكَانِكُمَا". فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا، حَتَّى
وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي، فَقَالَ: "أَلاَ أَدُلُّكُمَا
عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا -أَوْ أَوَيْتُمَا
إِلَى فِرَاشِكُمَا- فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا
وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ
خَادِمٍ".
ஒரு முறை, கைபர் யுத்தத்தில்
எதிரிகளிடம் இருந்து ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதை அறிந்த பாத்திமா
(ரலி) தங்கள் தந்தையை அணுகி, “அருமை தந்தையே! நான் வறுமையில் வாடி வருகிறேன். வீட்டு வேலை
செய்வதற்கு கூட முடியாமல் பலவீனமாக உள்ளேன். எனவே எனக்கு உதவியாக ஓர் அடிமைப்
பெண்ணை தந்து உதவுங்கள்” என்று
கேட்டுக்கொண்டார்கள்.
தன் மகளின் வறுமையை அறிந்து நபிகளார் வேதனை அடைந்தார்கள். இருந்தாலும், “அருமை மகளே! இதெல்லாம் அற்பமான இந்த உலகின்
ஆதாயங்கள். எந்த நேரத்திலும் இவை அழிந்து விடும். மேலும் இது போரில் கலந்து
கொண்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பொருள். நபிகளின் மகள் என்பதால் உனக்கு
தந்து விட முடியாது. மகளே! இதைவிட நிம்மதியைத் தரக்கூடிய சிறந்த செயல் ஒன்றைச்
சொல்லித் தரவா என்று வினவி, ஒவ்வொரு இரவிலும் நீ
தூங்கச் செல்லும் போது சுபுஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹமதுலில்லாஹ் 33 தடவை, அல்லாஹ் அக்பர் 34 தடவை ஓதி விட்டு தூங்கச் செல். உன் பிரச்சினைகள் அனைத்தும்
தீர்ந்து நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும்” என்றார்கள்.
لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة نزل على أبي أيوب رضي
الله عنه سنةً أو نحوها، ثم انتقل إلى منازل حارثة بن النعمان رضي الله عنه، فلما
تزوج عليٌ فاطمة قال رسول الله صلى الله عليه وسلم لعلي أطلب منزلاً، فطلب علي
منزلاً فأصابه مستأخرا عن النبي صلى الله عليه وسلم قليلا، فبنى بها - أي تزوجها
- فيه، فجاء النبي صلى الله عليه وسلم إليها فقال: إني أريد أن أحوُلك إليّ،
فقالت لرسول الله: فكلِمْ حارثة بن النعمان أن يتحول عني، وكانت لحارثة بن
النعمان منازل قرب منازل النبي عليه السلام بالمدينة، وكان كلما أحدث رسول الله
صلى الله عليه وسلم أهلاً تحول له حارثة بن النعمان عن منزلٍ بعد منزل، فقال
النبي صلى الله عليه وسلم: لقد استحييت من حارثة بن النعمان مما يتحول لنا عن
منازله.
فبلغ
ذلك حارثة فتحول وجاء إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله إنه بلغني
أنك تحول فاطمة إليك، وهذه منازلي وهي أسقب بيوت بنـي النجار بك، وإنما أنا ومالي
لله ولرسوله، والله يا رسول الله المالُ الذي تأخذ مني أحبُ إليّ من الذي تَدَع،
فقال رسول الله: صدقت، بارك الله عليك
فحوّلها رسول الله
إلى بيت حارثة.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்பத்தில் சில மாதங்களாக
அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள்.
அது அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே அதிக எண்ணிக்கையில்
வீடுகளைக் கொண்டிருந்த ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களிடம் தங்களின் சிரமம் குறித்து சொல்லி, மஸ்ஜிதுன் நபவீக்கு அருகே இருக்கிற வீடுகளில் ஒன்றை தாம்
தங்கி இருக்கும் வீட்டை பெற்றுக் கொண்டு, பகரமாகத் தருமாறு கோரினார்கள்.
அதற்கு, ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தங்களுடைய
வீடுகளில் பெருமானாருக்கு எது பிரியமாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு
கூறி, தங்களின் ஒரு வீட்டைக் கொடுத்தார்கள்.
இந்நிலையில், அன்னை ஃபாத்திமா (ரலி)
அவர்களுக்கும், அலீ (ரலி)
அவர்களுக்கும் திருமணம்
நடைபெற்றது.
பாத்திமா (ரலி) அவர்களது வீடு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது.
ஒரு தடவை பாத்திமா
(ரலி) அவர்களிடம் அண்ணலார் ”உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது!” என்று கூறினார்கள்.
தந்தையே! ஹாரிஸா
இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் வீடு உங்களுக்கு அருகில் தானே இருக்கின்றது. எனது
வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும் படி தாங்கள்
அவரிடம் கூறுங்களேன்!” என பாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது “இதற்கு முன்பொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளேன். இப்பொழுது
மீண்டும் அவ்வாறு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது! என்றார்கள் நபி {ஸல்} அவர்கள். அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தந்தையின்
சுயமரியாதையை நாம் கெடுத்து விடக்கூடாது என்று கருதி அங்கிருந்து மௌனமாக சென்று
விட்டார்கள்.
ஹாரிஸா இப்னு
நுஃமான் (ரலி) அவர்களுக்கு, நபி {ஸல்} அவர்கள் இவ்வாறு கூறியச் செய்தி எட்டியதும், உடனே ஓடோடி அண்ணலாரின் சமூகம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, பாத்திமா (ரலி) அவர்களுடைய வீடு உங்களுக்கு அருகில் இருக்க
வேண்டும், என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது! இதோ
எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்! இவற்றை விட வேறு எந்த
வீடும் தங்களுக்கு அருகில் இல்லை” இவற்றில் எதை
விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின்
தூதரே! என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதரான உங்களுக்கும் உரியனவே! அல்லாஹ்வின் மீது
ஆணையிட்டுக் கூறுகின்றேன்! இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான்
விரும்புகின்றேன்!” என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டு
மகிழ்ந்த அண்ணலார்,
“நீர் உண்மையையே கூறுகின்றீர்! என்று கூறி ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுக்கு வாழ்வின் பரக்கத் -
அபிவிருத்திக்காக துஆவும் செய்தார்கள். அவ்வாறே தங்கள் விருப்பப்படி ஃபாத்திமா
(ரலி) அவர்களுக்காக வீட்டை மாற்றிக் கொண்டார்கள். ( நூல்: தபகாத்துல் குப்ரா லி
இமாமி இப்னு ஸஅத் (ரஹ்).. )
இந்த வரலாற்று நிகழ்வுகள் மூலம், கடுமையான வறுமையிலும் நிதானமாக இருக்கும் மனநிலை, யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலை ஆகியவற்றை ஃபாத்திமா (ரலி) அவர்கள் கொண்டிருந்தார்கள்
என்பதை விளங்க முடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் இந்த உலகை விட்டும்
விடைபெற்ற போது மிகவும் கலங்கித் துடித்தார்கள். இத்தனை பாசங்கள் கொண்ட அவர்களின்
தந்தை உலகை விட்டும் விடைபெற்ற ஆறு மாத காலத்தின் பின் அவரும் வபாத்தாகி
விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் ஹிஜ்ரத்தின் பின் பத்தாம்
ஆண்டு ரமழான் மதம் தனது 29 –ஆம் வயதில் வபாத்தானார்கள். அவரின்
வேண்டுகோளின்படி இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
எனவே, தற்போது நடைமுறையில் இருக்கிற சட்டப்பூர்வ திருமண
வயதான 18 –ஐ மாற்றாமல் அதையே தொடர்ந்து அமலில் வைத்திட அரசு ஆவண
செய்யுமாறு நாம் கேட்டுக் கொள்வதோடு, 21 வயது வரை தாமதித்து திருமணம்
செய்வதால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடும் சமூக ஆர்வலர்களின் சமூக சீர்கேடுகள்,
ஒழுக்கமற்ற உறவு முறைகள், மருத்துவ ஆபத்துகள்,
மகப்பேறு மற்றும் கர்ப்பப்பை உயிரிழப்புகள் போன்ற குரல்களை அரசு செவி
சாய்த்து கேட்க வேண்டும் என்றும் நாம் இந்த உரையின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், இது விஷயத்தில் தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர்
அவர்களும் இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெருமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தருமாறு கேட்டுக்
கொள்கின்றோம்.
ماشاء الله காலத்துக்கு ஏற்ற விஷயங்கள்
ReplyDeleteஅல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரக்கத் செய்வானாக ஆமீன்
மிக நேர்த்தியான கட்டுரை காலத்திற்கேற்ற அருமையான சிந்தனை அல்லாஹுத்தஆலா தங்களுக்கு கல்வியிலும் பொருளாதாரத்திலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDeleteExcellent. It's very important massage
ReplyDeleteBaarakallah
ReplyDeleteஎவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் மிக மிக விஷயங்கள் அருமையான கருத்துக்களாக வரலாற்று செய்திகளாக மிம்பர் மிளிர்கிறது
ReplyDeleteமாஷா அல்லாஹ்
வாழ்துக்களும் துஆ வும் 💞💞