Thursday, 10 February 2022

அல்லாஹு அக்பர்.. வெறும் வார்த்தையல்ல!! இறைநம்பிக்கையாளர்களின் பேராயுதம்!!!

 

அல்லாஹு அக்பர்..

வெறும் வார்த்தையல்ல!!

இறைநம்பிக்கையாளர்களின் பேராயுதம்!!!

 


ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்கலாமா?

சீருடை விதிகள் அதற்கு இடம் தறுமா? சீருடை விதிகள் அனுமதி மறுத்தாலும், அதைத் தாண்டி ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு சட்டப்படி உரிமை உண்டா?

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் விவாதமாகி, இன்று நாடு தழுவிய அளவில் விவாதமாயிருக்கும் கேள்விகள் இவை.

உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.

எங்கே தொடங்கியது பிரச்னை?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கியது இந்தப் பிரச்னை.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசின் PU கல்லூரியில் (Pre-university College) 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி (கல்லூரிக்குள் நுழையலாம்) மறுக்கப்பட்டது. வருகைப்பதிவேடுகளிலும் ஆப்சென்ட் என மார்க் செய்யப்பட்டது. மேலும், கட்டாய விடுப்பு கடிதம் பெறப்பட்டது.

இந்த மாணவிகள் பள்ளியின் சீருடை அணிந்து, அதற்கு மேல் ஹிஜாப் அணிந்திருந்தனர். டிசம்பர் 27 அன்றுதான் முதன்முதலில் அணியத் தொடங்கியிருந்தனர். அதற்கு முன் அவர்கள் ஹிஜாப் அணியவில்லை.

இதற்காக அந்த மாணவிகள் சொன்ன காரணம், ``கல்லூரியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெளியிலிருந்தும் நிறைய ஆண்கள் வருகின்றனர். எனவேதான் ஹிஜாப் அணிகிறோம். இதுகுறித்து ஏற்கெனவே எங்கள் பெற்றோர் மூலம் பள்ளி தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்களே அணிந்துகொண்டோம்.

76 முஸ்லிம் மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில் நாங்கள் 8 பேர் மட்டும்தான் ஹிஜாப் அணிகிறோம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; இதைத் தடைசெய்ய கல்லூரிகளில் எந்த விதிமுறையும் இல்லாதபோது எங்கள் உரிமையை ஏன் தடைசெய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு..,

இதற்கு அந்தக் கல்லூரியின் தலைமையாசிரியர் சொன்ன பதில், ``இந்தப் பள்ளியின் 37 ஆண்டுகால வரலாற்றில் யாரும் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்ததில்லை. இதை அனுமதிப்பது மாணவர்களிடையேயான சமச்சீர் தன்மையை பாதிக்கும் என்பதால் நாங்கள் தடைசெய்தோம்.என்கிறார்.

மேலும், இந்த 8 மாணவிகளும் பள்ளி சீருடையை அணிந்து அதற்கு மேல்தான் ஹிஜாப் அணிகிறார்கள் என்பதால் அதை விதிமீறல் என்றுகூடச் சொல்லமுடியாது எனவும் மாணவிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. ஆனால், பிரச்னை இந்த 8 பேரோடு மட்டும் நிற்கவில்லை.

பிறகு என்ன நடந்தது?

உடுப்பியில் இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போதே, கர்நாடாவின் சிக்மக்ளூர் மற்றும் மங்களூரில் வேறு இரண்டு கல்லூரிகளில் ABVP அமைப்பைச் (பா.ஜ.க-வின் மாணவர்கள் அணி) சேர்ந்த இந்து மாணவர்கள் சிலர்,

காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர். இதையடுத்து, அந்தக் கல்லூரிகள் காவித்துண்டு மற்றும் ஹிஜாப் இரண்டையும் ஒரு சேரத் தடை செய்தன.

இப்படி முதலில் ஒரு பள்ளியில் தொடங்கிய பிரச்னை, பிற கல்லூரிகளுக்குப் பரவவும், அவை மாநிலம் (சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது.) முழுவதும் விவாதங்களைக் கிளப்பவும் கர்நாடகா அரசு உடனே செயலாற்றவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் என எந்தவொரு விதிமுறையும் அங்கு இல்லை. மாறாக, அதை அந்தந்தப் பள்ளிகளோ அல்லது மாவட்ட கல்லூரி வளர்ச்சி குழுக்களோ அதை முடிவு செய்யலாம் என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முன்புவரை அரசின் நிலைப்பாடு.

ஹிஜாப்பை வகுப்புகளுக்குள் அனுமதிப்பது குறித்து ஆராயவும், விதிமுறைகள் வகுக்கவும் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிக்கை அளிக்கும் வரையில், இதற்கு முன் இருந்த நிலையே தொடரவேண்டும் என்றது.

இந்த நடவடிக்கை பிரச்னையைத் தணிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமானது.

இதுவரைக்கும் உடுப்பி கல்லூரியில் புதிதாக ஹிஜாப் அணிந்த மாணவிகளைத் தடை செய்ததை மட்டும் பார்த்தோம் அல்லவா? இது அப்படியே வேறு கதை.

அதே உடுப்பி மாவட்டத்தில், குந்தாபூர் நகரில் உள்ள மற்றொரு கல்லூரியில் ABVP அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், பிப்ரவரி 2-ம் தேதி காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, முன்பு பார்த்தைப் போலவே இங்கேயும் காவித்துண்டுகள் மற்றும் ஹிஜாப் ஆகிய இரண்டும் தடைசெய்யப்பட்டன.

ஆனால், இங்கு பாதிக்கப்பட்டது புதிதாக ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் அல்ல; ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளிகளுக்கு வந்தவர்கள். இங்கு ஹிஜாப் அணிந்துகொள்ள கல்லூரி விதிமுறைகளும் அனுமதிக்கின்றன.

இவர்களில் சுமார் 20 மாணவிகள் பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிக்குள் நுழைவதை தலைமையாசிரியர் தடை செய்ததும், அதையடுத்து மாணவிகள் அவர்களிடம் கெஞ்சுவதுமான வீடியோதான் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

சட்டம் சொல்வது என்ன?

முதலில் 8 மாணவிகள் தடைசெய்யப்பட்டதைப் பார்த்தோம் அல்லவா? அந்த மாணவி ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இஸ்லாமின் அடிப்படை கூறுகளில் ஒன்றாக ஹிஜாப் இருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி (சட்டப்பிரிவு 14 & 25) அதை அணிய தனக்கு உரிமை வழங்கி இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்மீதான விசாரணை 08/02/2022 அன்று தொடங்கியது.

``நான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்தவன்; அரசியலமைப்புச் சட்டம்தான் எனக்கு பகவத் கீதை; எனவே என் உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் இந்த வழக்கை விசாரிப்பேன்என்று கூறியே வழக்கு விசாரணையைத் தொடங்கியிருந்தார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தீக்‌ஷித்.

மாணவிகள் தரப்பில், ``கல்வியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் அதுவரையிலாவது ஹிஜாப் அணிய அனுமதிக்கவேண்டும்எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு தரப்பிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஆடையை அணியக்கூடாது எனவும், ஆடைக்கட்டுப்பாடுகளில் பிரச்னை இருந்தால், அதை கல்லூரி வளர்ச்சி குழுக்களிடம்தான் முறையிடவேண்டும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், மாணவிகள் பொதுவெளியில் ஹிஜாப் அணியும்போது ஏற்படாத பிரச்னை, ஏன் பள்ளி வளாகங்களில் மட்டும் ஏற்படுகிறது என மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிதிபதி. வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக 09/02/2022 அன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 09/02/2022 அன்று மதிய அமர்வில் மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கியது. வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த பின்னர் நீதிபதி தீக்‌ஷித் அவர்கள். பல நீதிபதிகள் கொண்ட (பெஞ்ச்) அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாக தீர்ப்பளித்தார். விரைவில் இந்த வழக்கு பெஞ்ச் க்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்து நல்ல தீர்ர்ப்பு வரும் என நாம் அனைவரும் எதிர் பார்ப்போம்.

இதுவரையிலுமான சட்டம் என்ன?

மாணவியின் மனு குறிப்பிடுவதுபோலவே, சட்டப்பிரிவு 25 அனைத்து மதத்தினரும் தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை அனுமதிக்கிறது. அதேசமயம், சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசை அனுமதிக்கிறது.

தற்போது இந்த ஹிஜாப் சர்ச்சையைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லை. இரண்டு கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மட்டுமே நம் முன் இருக்கின்றன.

ஒன்று, 2016-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வின் போது, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்தது குறித்த வழக்கு.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், மாணவிகள் முஸ்லிம் முறைப்படி ஆடை அணிவதற்கு தடை இல்லை எனவும், ஒருவேளை இது தேர்வு முறைகேடுகளில் ஈடுபட உதவலாம் என CBSE நினைத்தால், மாணவிகளை சோதனையிட்டுக்கொள்ள வழிசெய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது.

இதேபோல 2018-ம் ஆண்டு பள்ளிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்வது குறித்த வழக்கில் (வேறு நீதிபதி), தனிநபர்களின் உரிமையைவிடவும், பள்ளியின் விதிமுறைகளே முதன்மையாகப் பின்பற்றப்படவேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

ஆனால், அதேசமயம் ஹிஜாபை காரணம் காட்டி, கல்வி மறுக்கப்படுவது என்பது சட்டப்பிரிவு 21-A-க்கு (கல்வி பெறும் உரிமை) எதிரானது என்கின்றனர் கல்வி மற்றும் சட்ட நிபுணர்கள். ( நன்றி: ஜீ நியூஸ்.காம் ஆங்கிலம், Feb 09, 2022, 21:54 PM, விகடன்.காம் 07 Feb 2022 1 PM,  09 Feb 2022 7 AM )

சங்கிகளின் சூழ்ச்சியும்முஸ்கான் கானின் வீரமும்

இங்கே, கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அதே நாளில் (08/02/2022) அன்று நீதிமன்றத்தையும், நீதிபதியையும் திசை திருப்பும் பொருட்டாக, வழக்கமாக சங்கிகள் கையில் எடுக்கும் ஆயுதம் போராட்டம், சம்பந்தப்பட்ட விவகாரத்தை இன்னும் பெரிதாக்கி கலவரமாக மாற்றும் தந்திரத்தை கையில் எடுத்தனர். இதற்கும் முன்பாக அப்சல்குரு, யாகூப் மேமன் ஆகியோரின் விவகாரங்களில் இதே நடைமுறையைத் தான் இவர்கள் கையாண்டனர். அதற்கு பலனும் கிடைத்தது. ஆனால், இந்த முறையோ அவர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

 அவர்களின் இந்த கயமைத்தனமான சூழ்ச்சியை முறியடித்தவர் வீரமங்கை முஸ்கான் கான் ஆவார்.

08/02/2022 அன்று  Karnataka's Mandya pre-University college –ல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் முஸ்கான் கான் (/பெ ஹுஸைன் கான்) கல்லூரிக்கு அசைண்ட்மெண்ட் (ஆய்வுக்கட்டுரை) கொடுப்பதற்காக வருகின்றார். கல்லூரிக்குள் அவர் ஹிஜாபோடு நுழைகிறார். நுழைந்த மறுவிநாடியே அங்கே காவித்துண்டுடன், காவிக்கொடியுடன் தயாராக நிற்கும் ஃபாசிஸ சங்கிகள் ஜெய் சிரி ராம் என பெரும் சப்தமெழுப்புகின்றார்கள். ஹிஜாப் அணிய விரும்பினால் பாகிஸ்தானுக்குப் போ என்றும் கத்துகின்றார்கள்.

ஆனால், அந்த வீரமங்கை முஸ்கான் கான் கம்பீரமாக வீர நடை போட்டுஅல்லாஹு அக்பர்என விண்ணுயர தக்பீரை முழங்கிக் கொண்டே முன்னேறி வருகின்றார். இடையில் ஊடக நண்பர்கள் கேட்ட கேள்விக்குஹிஜாப் அணியாதே! என்று சொல்ல இவர்கள் யார்? என் உரிமையில் தலையிட இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? என சிங்கமென கர்ஜித்தவாறு, மீண்டும் தக்பீரை முழங்கியவாறே கல்லூரி வளாகத்திற்குள் நுழைகின்றார்.

நாடுமுழுவதும் இந்த வீடியோ வைரலாகி ஒரே நாளில் தேசமெங்கும் வாழ்கிற சகோதர சமய மக்களும் கூடஅல்லாஹ் அக்பர்என் சகோதரிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்வதை அனுமதிக்க மாட்டோம்என சமூக ஊடகங்களில் தங்களின் ஆதரவுக் குரல்களையும், ஃபாசிஸத்திற்கெதிரான கண்டனக் குரல்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்று கேள்வியால் துளைத்தெடுத்தனர்.

குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்.பி வெங்கடேசன் அவர்களும், விசிக வின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களும் மிக அருமையாக தங்களின் கண்டனத்தைப் பதிவும் செய்தனர். முத்தாய்ப்பாக அல்லாஹு அக்பர் என்று கூறி தன்னுடைய கண்டனத்தை முடித்து வைத்திருப்பார் தொல். திருமா எம்.பி அவர்கள்.

அத்தோடு திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, .யூ.முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆகிய அரசியல் கட்சிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஃபாசிஸ பாஜக அரசைக் கண்டித்து பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

கொண்டாடப்பட வேண்டிய வீரமங்கைகள்

கடந்த காலங்களில் தேசிய அளவில், குறிப்பாக வடமாநிலங்களில் சங்கிகளின் கையில் சிக்கி அவர்களின் ஆயுதங்களுக்கு இரையாகி கொல்லப்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்தில்முஸ்கான் கான்எழுப்பிய கம்பீர தக்பீர் முழக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாய் அமைந்திருக்கிறது.

ஜம்இய்யத்உலமா- யேஹிந்த் அமைப்பு 5 லட்சம் பரிசு வழங்கி கௌரவித்து இருக்கின்றது.

தமுமுக அமைப்பின் தலைவரும் எம்.எல். வுமான ஹெஜ். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஃபாத்திமா ஷேக் விருது வழங்கி கௌரவிப்பதாக அறிவித்து இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அனைத்து சகோதர சமய மக்களையும் ஹிஜாபுக்கு ஆதரவான குரலாக முஸ்கான் ஒலிக்க வைத்துள்ளார்.

ஹிஜாபுக்கு ஆதரவாக சங்கிகளுக்கு எதிராக மிக அழுத்தமான தன் உணர்வை பிரதிபலித்த இந்தியாவின் முதல் பெண் இவர் தான். சர்வதேச அளவில் இவர் மூன்றாமவர்.

நஜ்மா கான்..

பங்களாதேஷைச் சார்ந்த நஜ்மா கான் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வருகின்றார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் படித்து வந்தார். ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக பள்ளி நிர்வாகம் அவரைத் தனிமைப்படுத்தியது. பாகுபாடு காட்டியது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை தன் அனுபவத்தை சர்வதேச அளவில் 22 மொழிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டு சென்றார். மேலும், 2013 –ல் பிப்ரவரி 1-ம் தேதியை ஹிஜாப் நாளாக, பர்தா குறித்த விழிப்புணர்வை ஊட்டும் நாளாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்காக பல்வேறு நிகழ்ச்சியை நடத்தினார். இதன் பயனாக நியூயார்க் சட்டமன்றம் 2017 –ல் கோரிக்கையை ஏற்றது. 2021 –ம் ஆண்டு பிலிப்பைன் அரசும் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இன்று சர்வதேச அளவில் பிப்ரவரி 1-ம் தேதி ஹிஜாப் நாளாக 116 நாடுகள் அறிவித்து கொண்டாடுகின்றது.

தவக்குல் கார்மன்..

ஏமன் நாட்டைச் சார்ந்த தவக்குல் கார்மன் எனும் இஸ்லாமியப் பெண்மணியின் பெயரை பிரபல டைம் மாத இதழ் 2011 –ஆம் ஆண்டிற்கான (Person Of The Year) சிறந்த பெண்மணிக்கான விருதுக்கு பரிந்துரை செய்தது. அதே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கான அவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இஸ்லாமிய ஹிஜாப் முறையைப் பேணி உலக நாடுகளின் தலைவர்கள், தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் ஆகியோர் முன்பு அந்தப் பரிசை பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கிய அப்பெண்மணியை உலக ஊடகங்களின் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒரு நிருபர் இப்படிக் கேட்டார்: நீங்கள் ஏன் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களின் அறிவாற்றலுக்கும், உயர்ந்த சிந்தனைக்கும் பொருந்துகின்றது?” என்று..

சற்று நிதானமான பார்வையுடன் தவக்குல் கார்மன் இப்படிப் பதில் கூறினார்: ஆதி மனிதன் ஆடையில்லாதவனாகவே இருந்தான். அவனின் அறிவுப் பெருகப் பெருக ஆடைகளை அணிய ஆரம்பித்தான்.

நான் இன்றைக்கு யார்? என்ன உடுத்தியிருக்கின்றேன்? என்பது என் சமூகம் எத்தனை தூரம் அறிவிலும், நாகரீகத்திலும் முன்னேறி இருக்கிறது என்பதற்கான அடையாளமே தவிர பின்னடைவுக்கானதல்ல.ஆடைக் குறைப்பே மனிதனை மீண்டும் ஆதிகாலத்திற்கு அழைத்துச் செல்லும் பின்னடைவாகும்.என்று.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனியொரு பெண்ணாக நின்று சங்கிகளை கதற விட்ட முஸ்கான் கானை கபூல் செய்வானாக! பொருந்திக் கொள்வானாக! வாழும் காலமெல்லாம் தீனில் நிலைத்திருக்கச் செய்வானாக!

ஹிஜாபின் மேல் ஏன் இவ்வளவு வன்மம்..?

இஸ்லாம் பெண்களை ஹிஜாப்பர்தா அணியச் சொல்லி நிர்பந்திக்கின்றது. இதன் மூலம் பெண்களின் தனிமையையும், சுதந்திரத்தையும் பறிக்கின்றது. கல்வி கற்று சிறந்து விளங்குவதை தடுக்கின்றது என்று கூறி தான் ஹிஜாபை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் சமூக செயற்பாட்டாளர்களின் முயற்சியால் இந்தப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது.

பெண் கல்வியாளர்கள் அன்றும்..

குர்ஆன் அறிவிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கிய பெண் அறிஞர்கள்: ஆயிஷா, ஹப்ஸா, உம்மு மைமூனா, உம்மு தர்தா, உம்மு சல்மா, உம்மு ஹபீபா. (ரலியல்லாஹு அன்ஹுன்ன)

அம்ரா பின்த் அப்துர்ரஹமான் (ரஹ்) என்பவர் நபிமொழிக் கலையில் மாபெரும் வல்லுநர். இந்தப் பெண்ணிடம் நபிமொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) கூறியுள்ளார்கள்.

அப்துல் மாலிக் இப்னு மர்வான் (ரஹ்) ஸ்பெயின் முதல் இந்தியா வரை ஆட்சி நடத்தியவர். இவர் கல்வி கற்றது யாரிடம் தெரியுமா? உம்மு தர்தா எனும் பெண் அறிஞரிடம்..!

கரீமா அல் மர்வாசிய்யா எனும் பெண் மாபெரும் கல்வி மேதையாக விளங்கினார் என்று ஐரோப்பிய அறிஞர் கோல்ஸீஹர் கூறுகிறார். (Goldziher,Muslim Studies Part 2, 366)

உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் மூலம் சான்றிதழுடன் கூடிய பட்டப் படிப்புகளைத் தொடங்கியவர்களே இரண்டு முஸ்லிம் பெண்கள்தாம். பாத்திமா அல் ஃபிஹ்ரி, அவருடைய சகோதரி மர்யம் ஆகிய இரண்டு பெண்கள் கி.பி. 859ஆம் ஆண்டில் மொராக்காவோவில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினர். அது படிப்படியாக பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

இன்றும் அல்காராவின் பல்கலைக்கழகம்(Al Qaraouine University) என்னும் பெயருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்கூட இதற்குப் பிறகுதான்- 1096-இல்தான் தொடங்கப்பட்டது.

அந்த முஸ்லிம் பெண்கள் உருவாக்கிய பல்கலைக்கழகத்தில்
மார்க்கக் கல்வியுடன் வானவியல் (Astronomy), புவியியல், மருத்துவம் என அனைத்துக் கல்வியும் கற்றுக்கொடுக்கப்பட்டன.

பெண் கல்வியாளர்கள் இன்றும்...

இஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).

முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.

கல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.

இது போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் "இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)" நிறுவப்பட்டுள்ளது. 

ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.

உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவுஜீவிகளாக எகிப்தின் ஜைனப் கஸ்ஸாலி, அமெரிக்காவின் லூயி லாமா அல்பரூக்கி, மாபெரும் பெண் அறிஞர் மர்யம் ஜமீலா, கனடாவின் தலைசிறந்த கல்வியாளரான ஷாஹினா சித்தீகி,
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கதீஜா ஹப்பாஜு எனத் தொடங்கி
ஏராளமான முஸ்லிம் பெண் கல்வியாளர்கள் வரலாற்றில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் கதீஜா ஹப்பாஜு 1995-இல் சீனாவில் நடந்த
ஐநா பெண்கள் மாநாட்டில் முஸ்லிம் பெண்கள் சார்பாகக் கலந்துகொண்டவர்.
பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போக பல்வேறு நாடுகளில் இராணுவ வீராங்கனைகளாக, பதக்கங்களை வாங்கிக் குவிக்கும் விளையாட்டு வீராங்கனைகளாக, விமானிகளாக, பெரும் அறிஞர்களாக ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றார்கள்.

எனவே, இவர்களின் ஹிஜாபுக்கு எதிரான பித்தலாட்டப் பிரச்சாரம் பிசுபிசுத்துப் போனது. அதை கை கழுவி விட்டு அடுத்த பொய்ப் பிரச்சாரத்தைக் கையில் எடுத்தார்கள்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

இப்போது இதை கையில் எடுத்தவர்கள் சர்வதேச நாடுகளின் தலைவர்கள். பிரதமர்கள். அரசுகள்.

ஓரிரு இடங்களில் ஹிஜாபை அணிந்து கொண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை சுட்டிக் காட்டி ஹிஜாப் – பர்தா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் தருவதாக இருக்கின்றது என்று கூறி ஹிஜாபுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.

அதன் விளைவாக சர்வதேச அளவில் ஹிஜாபை பல்வேறு வடிவங்களில், பல்வேறு இடங்களில் அணிய பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் சமீபமாக பக்கத்து நாடான இலங்கையிலும் ஹிஜாபுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டது.

ஆப்பிரிக்க நாடுகளான சாட், கேபோன், காங்கோ, ப்ரேஸ்ஸலவில் ஆகிய நான்கு நாடுகளில் நாடு முழுவதிலும் எந்த இடத்திலும் ஹிஜாப் அணியக்கூடாது என தடை போட்டிருக்கின்றது.

2010 –ல் பிரான்ஸ் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. மீறி அணிந்தால் 32,000 அமெரிக்க டாலர்கள் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

2015 –ல் கேமரூன் நாடு தன் நாட்டின் வட கோடி பகுதியில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதித்தது.

2012 –ல் பெல்ஜியம், 2007 –ல் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது.

2010 –ல் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் குறிப்பிட்ட சில மாகாணங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என தடை விதித்தன.

இது போக ஸ்வீடன், நார்வே, கொசாவோ, லாட்வியா, ஆஸ்திரியா, டென்மார்க், பல்கேரியா, சீனா, பல்கேரியா, பால்கன், சுவிட்சர்லாந்து, தஜிகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முகத்திரையுடன் கூடிய ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளன.

விதி விலக்காக மாஸ்கோ, அயர்லாந்து ஆகிய நாடுகள் ஹிஜாபை தடை செய்ய மறுத்து விட்டன.

பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கும் நாடான செனகல் நைஜீரியாவின் போக்கோ ஹராம் எனும் தீவிரவாத அமைப்பின் தாக்குதல்களை காரணம் காட்டி ஹிஜாப் அணிவதை முற்றிலுமாக தடை செய்ய முயற்சித்து வருகிறது.

இன்னும் சில நாடுகளில் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்க முடியாமல் ஹிஜாபை தடை செய்ய முடியாமல் இருக்கவும் செய்கிறது.

ஆனால், ஓரிரு தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றை காரணம் காட்டி இப்படி தடை செய்திருந்தாலும் அந்தக் குற்றச்சாட்டுகளும் காரணங்களும் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே அவர்களின் ஹிஜாபுக்கு எதிரான இரண்டாவது பிரச்சாரம் நமநமத்துப் போனது.

தற்போது இந்திய நாட்டின் ஃபாசிஸ்டுகள் மத அடையாளத்துடன் பள்ளி கல்லூரிக்கு வருவதை அனுமதிக்க முடியாது என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கின்றது.

ஆனால், இந்த தேசத்தின் அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் (சட்டப்பிரிவு 14 & 25) ஆகிய பிரிவுகளுக்கும், சட்டப்பிரிவு 21-A-க்கு (கல்வி பெறும் உரிமை) எதிரானதாக இது அமைந்துள்ளது.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்த நாட்டின் நான்கு தூண்கள் என வர்ணிக்கப்படும் மிக உன்னதமான அந்தப் பக்கங்ளில் இதற்கான முழு சுதந்திரமும், உரிமையும் மத அடையாளங்களைப் பின் பற்றலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேசத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மத அடையாளமான காவி உடையுடன் சட்டமன்றம் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் வலம் வர அனுமதி இருக்கிறது.

ஹரியானா மாநில சட்டமன்ற கூட்டத்தில் ஆடையே அணியாத நிர்வாண சாமியார் பங்கேற்றுப் பேச அனுமதி இருக்கிறது.

ஆண்டு தோரும் ஆயுத பூஜை அன்று காவல் நிலையம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பூஜை செய்ய அனுமதி இருக்கிறது.

சீக்கியர்கள் டர்பண் அணியவும், கத்தி வைத்துக் கொள்ளவும் அனுமதி இருக்கிறது.

பொட்டு வைப்பது, ருத்ராட்ச மாலை அணிவது, சாமிக்கு நேர்த்திக் கடன் வைத்து கழுத்தில் மாலை அணிவது பூணூல் போடுவதற்கு அனுமதி இருக்கிறது.

அத்தனை அரசு அலுவலகங்களிலும் கோவில் கட்ட, பூஜை செய்ய, சாமி போட்டோக்கள் வைத்து பூஜிக்க அனுமதி இருக்கின்றது.

ஆனால், முஸ்லிம் பெண்கள் மட்டும் மத அடையாளத்துடன் வரக்கூடாதாம்? இது என்ன நியாயம்? இது ஜனநாயக நாடா? இல்லை இந்து ராஷ்டிரமா?

உண்மையில் இவர்களின் நோக்கம் இதுவல்ல. இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் இவர்கள். சர்வதேச அளவில் இஸ்லாமோ ஃபோபியா மன நோயாளிகள் ஆவார்கள். தேசிய அளவில் 100 ஆண்டுகால சதித்திட்டத்தோடு வெறி கொண்டு அலையும் சங்கிகள், ஃபாசிஸ்டுகள் ஆவார்கள். 

11/09/2011 அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருவாக்கப்பட்ட கருத்தியல் தான் இந்த இஸ்லாமோ போபியா.

இஸ்லாம் பற்றிய பீதியும், அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும்,  காழ்ப்புணர்வும் உலகளாவிய அளவில் வாழும் மக்களின் மனங்களில் அவ்வப்போது  விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பிண்ணனியில் உருவாக்கப் பட்ட  கருத்தாக்கமே இந்த இஸ்லாமோ போபியா.

இன்று இஸ்லாமோ போபியா சர்வதேச அளவில் ஆலமரம் போன்று படர்ந்து,  அடர்ந்து வியாபித்திருக்கின்றது என்றால் மிகையல்ல.

154 க்கும் மேற்பட்ட அச்சு ஊடகங்கள்,100 க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்கள்,  வலைதளங்கள், சினிமா கம்பெனிகள் என இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் பணியில் இலட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து  வருகின்றனர் இதை உருவாக்கியவர்கள்.

இதை உருவாக்கி, கருவாக்கி அனைத்தின் பின்னாலும் இருந்து இயக்குபவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பாவின் முன்னாள் மற்றும் இந்நாள்  ஆட்சியாளர்கள்.

இதற்கு அடிப்படை காரணம் ஒன்றும் உண்டு. Europe and Islam நூலில் The Fall of Civilization and Growing Crescent  வளரும் பிறையும்  நாகரிகத்தின்  வீழ்ச்சியும்  எனும்  தலைப்பில்  21 –ஆம் நூற்றாண்டின்  அரை இறுதிப்பகுதியில்  இஸ்லாம் ஐரோப்பாவின்

 தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம் பெறுவது சாத்தியம் என்கிறார் மோசே சாபிச் என்கிற ஆய்வாளர்.

இதே அளவு கோலைத்தான் மற்றெல்லா நாடுகளின் நிலையாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய தேசத்திலும் 2049 க்குள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆள்வார்கள். எனவே கையில் கிடைக்கும் முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹரித்துவார் சாமியார்கள் மாநாட்டில் சாமியார்கள் வெறுப்பை உமிழ்ந்த செய்தியை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

எனவே தான் இன்று முஸ்லிம் சமூகம் உலகளாவிய அளவிலும், தேசிய,  பிராந்திய மாநில அளவிலும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

இஸ்லாமோ போபியா மூலம் விதைக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பீதியும்  அச்சமும், முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் தற்போது அதன் கோர  விளைவுகளை முஸ்லிம் உம்மத் மீது காட்டத் தொடங்கி உள்ளனர்..

1.   முஸ்லிம்களை இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றுவதில் இருந்தும் தூரமாக்க வேண்டும்..

وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (109)

வேதம் அருளப்பட்டவர்களில் பலர்  நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்கு தெளிவாகி விட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக இவ்வாறு செய்ய முனைகின்றனர்”.

 ( அல்குர்ஆன்: 2: 109 )

2.  முஸ்லிம் பெண்களை ஷரீஆவின் நீரோட்டத்தில் இருந்து விலக்கி, தேசிய மற்றும் ஆபாச நீரோட்டத்தில் திருப்பி விட வேண்டும்...

அதாவது தங்களை பெண் சமூகத்தின் பாதுகாவலர்களாக அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் பாதுகாவலர்களாக சித்தரிக்கும் இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் பெண்களை கற்பழித்தனர். உயிரோடு தீயிட்டு கொழுத்தினர். கருவுற்றிருக்கும் பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூலாயுதத்தால் கீறிக் கிழித்தனர். தற்போது முஸ்லிம் பெண்களின் கருவில் இந்து ஆணின் விந்துத்துளி இருக்க வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டி லவ் ஜிஹாத் செய்து வருகின்றனர்.

இவைகள் போதாதென்று முஸ்லிம் பெண்கள் ஷரீஆவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வந்து இவ்வுலகத்தின் ஆசாபாசத்திலும், மோகத்திலும் வீழ்ந்து ஈமானை இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.  

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவி விட வேண்டுமென இவர்கள் விரும்புகின்றார்கள். அத்தகையோருக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை உண்டு. அல்லாஹ் அறிகின்றான். நீங்கள் இதை அறிவதில்லை”.                                    ( அல்குர்ஆன்: 24: 19 )

இவர்களின் திட்டங்களும், சதிகளும், சூழ்ச்சிகளும், முயற்சிகளும் ஒரு போதும் நிறைவேறாது. வட்டார பாஷைகளில் சொல்ல வேண்டுமானால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ ۚ

உண்மையில் தீய சூழ்ச்சிகளும், திட்டங்களும் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும்”. ( அல்குர்ஆன்: 35: 43 )

وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ ﴿٤٦﴾

அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்க்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியதாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சமம் அல்லாஹ்விடம் இருக்கின்றது”. ( அல்குர்ஆன்: 14: 46 )

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ                                                

அவர்கள் சதித்திட்டங்கள் தீட்டினார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக தகுந்த திட்டங்களை தீட்டினான். மேலும், இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரிலும் வல்லவன் ஆவான்”.                    ( அல்குர்ஆன்: 3: 54 )

3. இறுதியாக் கொல்வதற்கு கூட இவர்கள் துணிந்து விடுவார்கள்..

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9)

உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!  வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! மேலும், பார்க்கின்றவர் மீதும்,  பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!

அது எத்தகைய தீக்குண்டமெனில், அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரி பொருள் இருந்தது. அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து இறை நம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த அக்கிரமச் செயல்களைப் பார்த்து ரசித்த வண்ணம் இருந்தார்கள்.

அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் தீக்குண்டத்தார்கள் பகைமை பாராட்டிக் கொள்ள காரணம் இதைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.

யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தான்!”       ( அல்குர்ஆன்: 85: 1- 9 )

இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நடைபெற்ற வியப்பின் விளிம்பிற்கே அழைத்துச் செல்லும் வினோதமான வரலாறாகும்.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை கடவுளாக அறிவித்து, தன்னை வணங்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்த ஓர் அரசனின் பிரதேசத்தில் ஈமான் கொண்டிருந்த ஒரு சிறுவனின் மரணத்தின் மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் முஸ்லிமானார்கள் 

قد آمن الناس كلهم. فأمر بأفواه السكك فَخُدّت فيها الأخاديد، وأضرمت فيها النيران، وقال: من رجع عن دينه فدعوه وإلا فأقحموه فيها. قال: فكانوا يتعادون فيها ويتدافعون

அப்போது, அரசன் பெரிய கிடங்குகள் தோண்டச் சொல்லி அதில் நெருப்பு மூட்டுமாறு கட்டளைப் பிறப்பித்து, “யார் யாரெல்லாம் தங்களது ஈமானை கைவிட வில்லையோ அவர்களைப் பிடித்து இவற்றில் வீசியெறியுங்கள்! அல்லது இந்த நெருப்பில் இறங்குங்கள் என்று அவர்களை நிர்ப்பந்தியுங்கள்! என்று தம் சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.

فجاءت امرأة بابن لها ترضعه، فكأنها تقاعست أن تقع في النار، فقال الصبي: اصبري يا أماه، فإنك على الحق".

அவர்களும் அவ்வாறே செய்தனர். அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கைக் கொண்ட அத்துனை பேர்களும் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டார்கள். 

இறுதியாக, ஒரு பெண்மணி வந்தாள். பால்குடி பருவத்தில் உள்ள தன் குழந்தையை கையில் சுமந்தவாறு தீக்குண்டத்தின் வாசல் அருகே தயங்கிய படி நின்ற போது, அந்தக் குழந்தை சொன்னது: “தாயே! பொறுமை காத்திடு! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய் என்று. ( நூல்: இப்னு கஸீர்,  ரியாளுஸ்ஸாலிஹீன்,  பாபுஸ் ஸப்ர், ஹதீஸ்எண்: 30 )

ஷரீஆ சார்ந்த சட்டங்கள் என்பது சாதாரணமான ஒன்றல்ல சாமானியமாக விட்டு விடுவதற்கு!!.. 

ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

 إِنَّهُمْ لَن يُغْنُوا عَنكَ مِنَ اللَّهِ شَيْئًا ۚ وَإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۖ وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ

 هَٰذَا بَصَائِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُوقِنُونَ 

“{ நபியே! } இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான ஷரீஆவில் உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கின்றோம்! எனவே, நீர் அதனையே பின்பற்றுவீராக! அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின் பற்றாதீர்!

அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர இயலாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோருக்கு அல்லாஹ் தோழனாவான்.

இந்த ஷரீஆ என்பது அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றன”.                         ( அல்குர்ஆன்: 45: 18,19,20 )

இன்ஷா அல்லாஹ்…. உயிர் போகும் வரை எதிர்த்துப் போராடுவோம்!...

ஃபிர்அவ்னின் ஒடுக்கு முறையும்… முஸ்லிம்களின் போர்க்குணமும்

அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா (அலைவெளிப்படுத்திய போதுஅவன் வழங்கிய அற்புதப் படைப்பான அழகிய கண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டுஅந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து..

 

فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70) قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71)

 

நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ரப்பாக ஏற்றுக் கொண்டோம் என்று உரக்கக் கூறினார்கள். அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு என்று இப்போது தெரிந்து விட்டது. இப்போது, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும், பேரீச்சம் மரத்தின் கம்பங்களில் அறைந்து உங்களை கொல்லப்போகின்றேன், அப்போது தெரியும் யாருடைய வேதனை மிகக்கடுமையானது என்று”.

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (72) إِنَّا آمَنَّا بِرَبِّنَا

அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்த சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னே நடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து கொள். அதிகபட்சம் இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.   ( அல்குர்ஆன்: 20: 59 – 73 )

எவ்வளவு பெரிய அடக்குமுறையை ஃபிர்அவ்ன் அவர்களின் மீது கட்டவிழ்த்து விட்டான். கொடுமை நிறைந்த சித்ரவதைகளை செய்திடுவேன் என மிரட்டினான்.

இஸ்லாத்தால் கவரப்பட்ட அடுத்த வினாடியில், முஸ்லிமாக வாழ ஆரம்பித்து ஒரு வினாடி தான் ஆகியிருந்தது. அவர்களின் வாயில் இருந்து வந்த பதில் எவ்வளவு வீரியம் நிறைந்ததாய் அமைந்திருந்தது!?”

ஆகவே, ஹிஜாப் என்பது ஒழுக்க வாழ்வின் அடையாளம் என்று உரக்கச் சொல்வோம்!

ஹிஜாப் என்பது பெண்ணினத்தின் ஆளுமைக்கான அடையாளம் என்று உரத்து முழங்குவோம்!

ஹிஜாப் என்பது கண்ணியமான வாழ்வின் அணிகலன் என்று விண் முட்ட முழங்குவோம்!

ஹிஜாபின் மீதான எத்தகைய விமர்சனங்களையும் அழகிய முறையிலும், தேவை ஏற்படின் சட்டத்தின் மூலமும், எதிர் கொண்டு உலகாளும் ஓர் ஒப்பற்றச் சமுதாயமாய் மிளிர்வோம்!

வல்ல ரஹ்மான் இஸ்லாமியப் பெண்மணிகளின் இதயத்தை தூய இஸ்லாத்திற்காக, இறைமார்க்கத்தின் கட்டளைகளை ஏற்று வாழ்வதற்காக திறந்து வைப்பானாக!  ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்...

அல்லாஹு அக்பர்.. வெறும் வார்த்தையல்ல!!

இறைநம்பிக்கையாளர்களின் பேராயுதம்!!! எனும் தலைப்பிலான இரண்டாவது தொடர் இன்று இரவு அல்லது நாளை காலை 09;00 மணிக்கு பதிவு செய்யப்படும்!

9 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ்
    நல்ல பதிவு

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ். தங்களின் அதீத ஆர்வம், முயற்சி பாராட்டுக்குரியது. அல்லாஹ் தங்களுடைய அனைத்து காரியங்களிலும் பரகத் செய்வானாக! ஆமீன் யாரப்பல்ஆலமீன்

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

      Delete
  5. இவ்வளவு விபரங்களை துல்லியமாக சேகரித்து பதிவு செய்து இருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது உஸ்தாத். جزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete