Thursday, 31 March 2022

அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-1. தூய்மையான உணவை உண்போம்!!!

 

அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-1.

தூய்மையான உணவை உண்போம்!!!


அல்ஹம்துலில்லாஹ்!! 1 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த முதல் நோன்பை நோற்கும் ஆவலில் இருக்கின்றோம். எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது தராவீஹ் தொழுகையை கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் சூரத்துல் பகரா ஆரம்பிக்கப்பட்டு 11/4 ஜுஸ்வு ஓதப்பட்டிருக்கின்றது. 176 வசனங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் பகரா அத்தியாயத்தின் 172 –ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளனின் உணவுக் கொள்கை குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும், இதே அத்தியாயத்தில் 57 –ம் வசனத்தில் பனூ இஸ்ரவேலர்களை நோக்கியும், 168 ம் வசனத்தில் ஒட்டு மொத்த மனித சமூகத்தை நோக்கியும் இதே உணவுக் கொள்கை குறித்து எல்லாம் வல்ல அல்லாஹ் அறை கூவல் விட்டிருப்பதை பார்க்க முடிகின்றது.

அந்த உணவுக் கொள்கை “தூய்மையான உணவை உண்ணுங்கள்” என்பது தான்.

இதே கொள்கையை அல்லாஹ் இறைத்தூதர்களிடமும் போதித்ததாக 23-ம் அத்தியாயமான அல் முஃமினூன் அத்தியாயத்தின் 51 –ம் வசனம் அறிவுறுத்துகின்றது.

மனிதன் அமைதியாக இயங்க அவசிய மானது வலுவான, தரமான ஆரோக்கியம். அந்த  ஆரோக்கியத்தின் ஆதாரமே ‌ உணவுகள் தான். அந்த உணவுகள் தான் மனித வளத்தை மேம்படுத்தும்.

மனித வளம் மேம்படுவதற்குச் சாதகமான சூழ்நிலை அமைய இஸ்லாம் சில உணவு முறைகளை‌  அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது இஸ்லாம்.

மனிதவளம் குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)

1.   ஹலாலான உணவை உண்போம்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை”. (முஸ்லிம்)

حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை”. (முஸ்லிம்)

அதிக சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைக் குறித்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: அவருடைய தலை முடி கலைந்துள்ளது. உடலில் புழுதி படிந்துள்ளது. வானை நோக்கி கரங்களை ஏந்தியவாறு, ‘என் இறைவா..! என் இறைவா..!என்று இறைஞ்சுகின்றார். (ஆயினும் அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) இறைவன் எப்படிஅந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? அவனது உணவு ஹராம். அவனது பானம் ஹராம். அவனது உடை ஹராம். ஹராமிலேயே வளர்ந்திருக்கின்றான். பின் எப்படி அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?” (புகாரி)

وسأل رجل سفيان الثوري عن فضل الصف الأول فقال: ( انظر كسرتك التي تأكلها من أين تأكلها؟ وقم في الصف الأخير، وكأنه رحمه الله رأى من الرجل استهانة بهذا الأمر، فأحب أن ينبهه إليه؟ لأنه أهم مما سأل عنه )

ஸுப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார்: அறிஞரே! கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவதா? என்று கேட்டார்.

ஸுப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்)  கூறினார்கள்: நீ உண்ணும்ரொட்டித் துண்டு ஆகுமான வழிமுறையின் மூலம் (ஹலால்) கிடைத்ததா? அல்லது தவறான வழிமுறையின் மூலம் (ஹராம்) கிடைத்ததா? என்பதில் கவனம் செலுத்து. அவ்வாறெனில் வரிசையில் எங்கு நின்று தொழுதாலும் பிரச்சினை இல்லை”

இப்படித்தான் வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் எடுப்பவர்கள் உணவு விஷயத்தில் ஹலாலா? ஹராமா? என கவனமெடுக்கத் தவறி விடுகின்றோம்.

قَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا

ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்: இறைத்தூதரே! எனது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்! என்று வேண்டி நின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸஅதே! தூய்மையானவற்றை மட்டும் உண்ணுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்என்று கூறிவிட்டு. இந்த முஹம்மதின் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! “நிச்சயமாக ஒரு அடியான் தன் வயிற்றிலே இரு கவள ஹராமான உணவை உட்கொண்டு விடுகின்றான். அதன் காரணமாக அவனுடைய நாற்பது நாள் அமல்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று கூறினார்கள்.”.

நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்று முதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார்.  அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம்தான் காரணம் ஆகும்.

2. ஆரோக்கியம் தரும் உணவை உண்போம்.

நாளொரு நோயும் பொழுதொரு உபாதைகளும் பெருகிவரும் தற்காலத்தில் பெரும்பாலான நோய்களை விட்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கு அதிகமான மருத்துவர்கள் சிபாரிசு செய்வது உணவுக்கட்டுப்பாடுதான்.

       நல்லதும் கெட்டதும் நம் முன் எப்போதும் அணிவகுத்து நிற்கும். எதைத்தேர்ந்தெடுப்பதென்பது தான் இந்த உலகில் வாழும் காலங்களில் நமக்கான சவால் ஆகும். அந்த வகையில் தற்போது நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் ஆயிரக்கணக்கான வகை உணவுகள் இருக்கின்றன. பெரும்பாலும் துரித வகை உணவுகளையும், கொழுப்புச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளையும், சரியாக வேகாத அசைவ உணவுகளையும் உண்டு வருகின்றோம்.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 29 )

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு 

செல்லாதீர்கள். (  அல்குர்ஆன்:  2: 195 )

3. அளவாக, தேவைக்கு உண்போம்.

عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي

 நபி {ஸல்} அவர்கள் கூற, நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள். ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை  நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்தும் அளவிற்கு  சில  கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய வயிற்றில்  மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு  பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக) இருக்கட்டும். ( நூல்: ஸுனன் திர்மிதீ )

وفي رواية للبخاري: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا، فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ 

إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு மனிதர் அதிகமான அளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வயிறு புடைக்க சாப்பிடுவார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் புனித இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து அவர் குறைவாக உண்ணும் பழக்கமுடையவராகிவிட்டார். அவரின் உணவுப் பழக்கம் அடியோடு மாறி - அளவோடு உணவு உண்பவராக ஆகிவிட்டார். இந்த நபரின் இந்த மாற்றம் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் {ஸல்} அவர்கள் இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்.  இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான் என்று கூறினார்கள். (  நூல்: புகாரி )

  இந்த ஹதீஸிற்கு விளக்கம் இவ்வாறு எழுதப்படுகிறது. அதாவது இறை மறுப்பாளன் தன் மனம் விரும்பும் எல்லா உணவுகளையும் விதிவிலக்கில்லாமல் புசிப்பான். ஆனால், இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவார். அப்போது தான் இபாதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் - அதிகமாக உண்பதால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு இலகுவாயிருக்கும்.                                         (  நூல்: ஃபத்ஹுல்பாரி )

عبد الله بن عمر: روى البخاري بسنده عن نافع قَالَ: كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ، فَأَكَلَ كَثِيرًا، فَقَالَ :يَا نَافِعُ! لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ، سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ

"الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

 البخاري

ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் எப்போது உணவு சாப்பிட்டாலும் ஒரு ஏழை ஒருவரை அமர்த்தி உணவு உண்பார்கள். ஒரு நாள் இப்னு உமர் (ரளி)  அவர்களுடன் சாப்பிட ஒரு ஏழை ஒருவரை ஹள்ரத் நாபிஃ (ரளி) அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு உணவு பரிமாறிவிட்டு தானும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்கள். இப்னு உமர் (ரளி) அவர்கள் ! அவர்களுடன் சாப்பிட்ட நபர் அளவுக் கதிகமாக சாப்பிட்டார். வயிறுபுடைக்க சாப்பிட்டார். சாப்பிடுவதில் வரைமுறை இல்லாத நிலையை மேற்கொண்டார். அவர் சாப்பிட்டு முடித்து வெளியே சென்ற பின் ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் ஹள்ரத் நாபிஃ (ரளி) அவர்களைப் பார்த்து கூறினார்கள்.  வயிறார உணவு கொடுப்பதில் எனக்கு இருவேறு கருத்து கிடையாது.  ஆனால், நீர் அழைத்து வந்த நபர் வயிறார சாப்பிடவில்லை. வயிறு புடைக்க வரைமுறைகளின்றி சாப்பிடுபவராக உள்ளார். இனிமேல் இந்த நபரை எனது இல்லத்துக்கு அழைத்து வராதீர். காரணம் அண்ணலார் (ஸல்) அவர்கள்  இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான் எனக்கூற நான் கேள்விப்பட்டுள்ளேன் என்று கூறினார்கள்.                             (  நூல்: புகாரி )

பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.

1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)

2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)

3. E.N.T. Diseases (காது. மூக்கு,தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)

4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)

5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)

6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)

7. Diabetese (நீரழிவு நோய்)

8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)

9. Depression (மன அழுத்தம்)

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

4. உணவு உண்பதில் வீண் விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.

வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ “

அல்லாஹ் உங்களிடம் இருந்து வெளிப்படும் செயல்களில் மூன்றை வெறுக்கிறான். அவர் சொன்னார். இவர் சொன்னார். அப்படி சொல்லப்பட்டது. இப்படி சொல்லப்பட்டது. என்று கூறுவதையும், பொருள்களை வீணாக்குவதையும், அதிகமாக கேள்வி கேட்பதையும் இறைவன் வெறுக்கின்றான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என முஃகீரா இப்னு ஷுஅபா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி )

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.                   ( அல்குா்ஆன்: 7: 31 )

وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا (26) إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا (27)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாகஉள்ளனர். ஷைத்தான்தனதுஇறைவனுக்குநன்றி கெட்டவனாக இருக்கிறான்.                            ( அல்குா்ஆன்: 17: 26, 27 )

வீண் விரயம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்றும் ஆதலால் வீண் விரையம் செய்யக்கூடாது என்றும் இறைவன் மேற்கண்ட வசனங்களில் தெரிவிக்கின்றான்..

உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான அளவை அறிந்து மீதம் ஏற்படாதவாறு நமது சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வது முஸ்லிம்களின் மீது அவசியமாகும். மீதம் வந்தால் கூட அதை வீண் விரயம் செய்யாது பிறருக்கு வழங்கி விட வேண்டும். உணவு மீதமாகும் என்பதைத் தெரிந்து கொண்டே கூடுதலாக சமைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் அது வீண் விரயம் செய்த குற்றத்தில் சேரும்.

இதையும் கவனத்தில் கொள்வோம்!

உயிரினங்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் தனது உணவையோ, இரையையோ வீணடிப்பதில்லை.

ஆனால், மனிதன் மட்டுமே உணவுப் பொருள்களை வீணடிக்கிறான். உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் கடந்த வருடம் 850 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியின் கொடுமையை அனுபவித்து வந்துள்ளனர். அதாவது 10 பேரில் ஒருவர் உணவு இன்றி தவித்துள்ளனர். 2017-ம் ஆண்டு 821 மில்லியனாக இருந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.

ஆனால், எவ்வித சிரமும் இன்றி அல்லாஹ் நமக்கு உணவளித்து வருகின்றான். உண்ட உணவுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, வழிபட்டு வாழ்வோம்!

நாம் உண்ணும் உணவை ஹலாலாகவும், தூய்மையானதாகவும், போதுமானதாகவும், விரயமில்லாமலும் ஆக்குவோம்!!!

3 comments:

  1. அருமை,ஜஸாகல்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete
  2. الحمدالله. بارك الله فيك يا أخي الكريم مرحبا

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் பதிவுகள் அருமை

    ReplyDelete