அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:- 10.
தூய்மையான உள்ளம் அமைப்போம்!!!
அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் 10 –ம் நாள் தராவீஹ்
தொழுகையை நிறைவு செய்திருக்கின்றோம். 9 –வது நோன்பை நோற்றிருக்கின்றோம்.
இன்றைய தராவீஹ் தொழுகையில் 11 –வது அத்தியாயமான
ஹூத் அத்தியாயத்தின் எஞ்சிய 74 வசனங்களும், 12 –வது அத்தியாயமான சூரா யூஸுஃபின்
111 வசனங்களும், 13 –வது அத்தியாயமான சூரா அர் ரஅதின் 18 வசனங்கள் என 203 வசனங்கள்
ஓதப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் பேச்சான குர்ஆனை ஓதுவதும், ஓதக் கேட்பதும்
பாக்கியமாகும். அதே அல்குர்ஆனை தொழுகையில் ஓதுவதும், ஓதக் கேட்பதும் மகத்தான பாக்கியமாகும்.
வாழ்நாளெல்லாம் சடைவில்லாமல் குர்ஆனை ஓதுவதற்கும்,
சலிப்பில்லாமல் குர்ஆனை ஓதக் கேட்பதற்கும் வல்ல ரஹ்மான் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்!
அலீ (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “எனக்கு அல்லாஹ்வுடன்
பேச வேண்டும் என்று ஆசை ஏற்பட்டால் உடனடியாக நான் தக்பீர் கட்டி இரண்டு ரக்அத் தொழுது
விடுவேன். என்னோடு அல்லாஹ் பேச வேண்டும் என்று நான் விரும்பினால் உடனடியாக குர்ஆனைத்
திறந்து ஓத ஆரம்பித்து விடுவேன்” என்று.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தொழுகையின் மீதும், குர்ஆன்
ஓதுவதின் மீது நமக்கு ஆசையைத் தந்தருள்வானாக! ஆமீன்!
இன்று ஓதப்பட்ட இறைவசனங்களில் ஹூத் (அலை), ஸாலிஹ்
(அலை) லூத் (அலை) இப்ராஹீம் (அலை) ஷுஐபு (அலை) மூஸா (அலை) யூஸுஃப் (அலை) என பல்வேறு
நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை அல்லாஹ் கூறியதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக,
யூஸுஃப் (அலை) அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நாம் இன்று தொழுகையில் ஓதியிருக்கின்றோம்.
அல்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாறுகளிலேயே “அழகிய
வரலாறு” என்று அல்லாஹ்வால் அடையாளப்படுத்தப்படும் புகழுச் சொந்தமான வாழ்வியலைக் கொண்டவர்கள்
யூஸுஃப் (அலை) ஆவார்கள். உன்னதமான பல்வேறு படிப்பினைகளைக் கொண்ட வரலாறாகவும் யூஸுஃப்
(அலை) அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை இந்த வரலாற்றை வாசிக்கும் போது உணர முடியும்.
அல்குர்ஆனில் சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பிறகு
தனியாக 100 க்கும் மேற்பட்ட விரிவுரைகள் எழுதப்பட்ட அத்தியாயம் சூரா யூஸுஃப் தான்.
அதில் இடம் பெறும் படிப்பினைகள் என்ன என்பதைத் தழுவி
எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் ஆயிரத்தைத் தாண்டும். உலகத்தின் அத்துனை அறிஞர்களின் சிந்தனைகளையும்,
பேனாக்களையும் ஆட்கொண்ட அத்தியாயம் சூரா யூஸுஃப் என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் இன்று ஓதப்பட்ட சூரா யூஸுஃபின் 23
–வது வசனத்தில் பாவமான ஒரு காரியத்தைச் செய்ய நிர்பந்திக்கப்படும் சூழல் ஏற்பட்டால்
ஒரு இறை நம்பிக்கையாளனின் உள்ளத்தின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து
பேசுகின்றான்.
وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ
الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي
أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ
“மேலும், (யூஸுஃப்) எவருடைய வீட்டில் இருந்தாரோ
அவள் அவரை ஆசை கொண்டு யூஸுஃபின் ஆசைக்கு மாறாக அழைத்து கதவுகளைப் பூட்டி விட்டு தம்
இச்சைக்கு விரைந்து வருமாறு அழைத்தாள். ஆனால், அதற்கவர் “அல்லாஹ் பாதுகாப்பானாக! நிச்சயமாக
எனது எஜமானனாகிய (உமது கண) வர் எனது தங்குமிடத்தை அழகாக்கி வைத்துள்ளார். நிச்சயமாக
அநியாயம் செய்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 23
)
இந்த நிகழ்வில் இரண்டு படிப்பினைகள் இருக்கின்றது.
1. நாளை அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்கிற அல்லாஹ்வைப் பற்றிய பயம்.
2. உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பது.
இந்த இரண்டு
தன்மைகளை நாம் கொண்டிருந்தால் சொர்க்கத்தை நமது இடமாக்கிக்கொள்ளலாம்.
அதில் முதலாவது
நாளை மறுமையில் இறைவன் முன் நின்று அவன் விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற
நிலையை பயப்படுவது. இரண்டாவது நமது உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பது. இந்த இரண்டு
பண்புகளும் நம் வாழ்வில் இடம் பெற்றிருந்தால் நம் செயல்களும், அமல்களும் எப்படி சீராகிவிடும்
என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
அதுமட்டுமல்ல இந்த
உயரிய பண்புகளின் மூலம் பாவங்களிலிருந்து நாம் எப்படி விலகுகின்றோம் தீமையை எப்படி
வெறுக்கின்றோம் அசிங்கங்களை எப்படிப் புறக்கணிக்கிறோம் என்பதும் நமக்கு தெளிவாகி
விடும்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
(40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
“எவர் தனது
ரப்பின் முன்னிலையில் நிறுத்தப்படுவதை அஞ்சி, தனது ஆன்மாவின் இச்சைகளை தடுத்துக்
கொண்டாரோ, அப்பொழுது நிச்சயமாக சுவனம் அதுவே அவரின் தங்குமிடமாகும். ( அல்குர்ஆன்: 79: 40-41 )
அல்லாஹ்வைப்
பற்றிய பயம் இல்லாத மனிதர்களையே ஷைத்தான் மிக எளிதாக வழிகெடுப்பான். அவர்களும்
ஷைத்தானுக்கு எளிதில் இரையாகி விடுவார்கள். மேலும், ஷைத்தான் செய்யத் தூண்டும் தீய செயல்களில் முழு ஈடுபாடு கொண்டு அதை அழகாகவும்
பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
أَفَمَنْ
زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا
எனவே, எவனொருவன்
அவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக்கப்பட்டு, அதை அவனும் அழகானதாகவும் கண்டானோ
அவனா? நற்செயல் செய்து கொண்டிருப்பவனுக்கு சமமாவான். ( அல்குர்ஆன்: 35 : 8 )
أَفَرَأَيْتَ
مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ
தன் மன இச்சையை தனக்கு கடவுளாக்கி கொண்டவனை நபியே உமக்கு தெரியுமா? மற்றொரு வசனத்தில் தனது மன இச்சையை கடவுளாக்கிக் கொண்டவனை விட மிகப்பெரிய
வழிகேடன் யார் இருக்க முடியும்? என்றும்
குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 45 : 23)
ஆகவே,
வாழ்க்கையில் நமக்கும் ஷைத்தானுக்கும், நமக்கும் நம் நப்ஸுக்கும் இடையே போராட்டம் நடக்கும் இந்தப் போராட்டமே மிகப்பெரிய
போராட்டம் ஆகும். இந்தப் போராட்டம் முடிவடையும் போது நம் மரணம் நிகழ்ந்திருக்கும்.
அதுவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுபவர்கள்
தான் நாளை மறுமையில் வெற்றியாளர்கள்.
மாறாக, யார்
இவ்வுலகில் மன இச்சையில் சிக்கி ஷைத்தானின் மாயவலையில் வீழ்கிறார்களோ அவர்கள் நாளை
மறுமையில் தோற்று விடுகிறார்கள்.
உள்ளத்தை தூய்மையாக வைத்தல்.
தஸ்கியதுன் நப்ஸ்
எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமை என்று
அல்லாஹ் கூறுகின்றான்.
وَنَفْسٍ
وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ
مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
ஆத்மாவின்மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன்நன்மைதீமைகளை
அதற்கறிவித்தவன்மீதும்சத்தியமாக! எவர் (பாவங்களைவிட்டும் தன்ஆத்மாவைப்)
பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி
அடைந்துவிட்டார். எவன் அதைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோஅவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்.
அல்குர்ஆன் 91: 7-10
அல்லாஹ்
முக்கியமான விஷயங்களை சொல்லும் போது அல் குர்ஆனில் பல ஸுராக்களில் சத்தியம்
செய்வான். ஆனால் இந்த ஸுராவில் மட்டும் தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை
தூய்மைப்படுத்துதல் பற்றி சொல்தற்காக 11 சத்தியம் செய்துள்ளான்.
இதேபோன்று இந்தளவு
அதிகமான சத்தியங்களை குர்ஆனில் வேறு எந்த இடங்களிலும் இறைவன் செய்ததில்லை. அப்படி
என்றால் தஸ்கியதுன் நப்ஸ் என்பது எவ்வளவு பெரிய ஒரு முக்கியமான விஷயம் என்பதை நாம்
விளங்கிக்கொள்ள வேண்டும்.
قال ابن
أبي حاتم: حدثنا أبي وأبو زرعة قالا حدثنا سهل بن عثمان، حدثنا أبو مالك – يعني
عمرو بن هشام – عن جويبر، عن الضحاك، عن ابن عباس قال: سمعت رسول الله – صلى الله
عليه وسلم – يقول في قول الله: (قد أفلح من زكاها) قال النبي – صلى الله عليه وسلم
- “ أفلحت نفس زكاها الله “
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி {ஸல்}
அவர்கள்
(قد أفلح من
زكاها)
இந்த இறைவசனத்தை
ஓதும் போது சொல்வார்கள் அல்லாஹ் எந்த உள்ளத்தை தூய்மை படுத்தினானோ அந்த உள்ளம்
வெற்றி பெற்று விட்டது" என.
وقال الطبراني:
حدثنا يحيى بن عثمان بن صالح، حدثنا أبي، حدثنا ابن لهيعة، عن عمرو بن دينار، عن
ابن عباس قال: كان رسول الله – صلى الله عليه وسلم – إذا مر بهذه الآية: (ونفس وما
سواها فألهمها فجورها وتقواها) وقف، ثم قال:” اللهم آت نفسي تقواها، أنت وليها
ومولاها، وخير من زكاها “.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஆயத்தை
(ونفس وما سواها فألهمها فجورها وتقواها)
ஓதும் போது நின்று
விடுவார்கள்,
பின்னர் இந்த துஆவை ஓதுவார்கள் "அல்லாஹ்வே! என்
உள்ளத்திற்கு இறையச்சத்தை வழங்கியருள்வாயாக! நீயே! அதன் பொறுப்புதாரியாவாய்! அதன்
எஜமானனும் ஆவாய்! மேலும் அதை தூய்மை படுத்துவதில் மிகச் சிறந்தவன் நீயாவாய்!.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களும் இது குறித்து நமக்கு உணர்த்துகிறார்கள்.
أَلَا
وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا
فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
உடலில்
இருக்கக்கூடிய ஒரு சதை துண்டு அது சீராகிவிட்டால் எல்லாம் சீராகிவிடும். அது
கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும் என்று கூறி அந்த சதை துண்டு தான் கல்பு -
உள்ளம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, (நூல்: புகாரி )
إِنَّ
اللَّهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلَا إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ
يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ
அல்லாஹூத்தஆலா
உங்களது உடல் அழகை பார்ப்பதில்லை; உங்கள் முக அழகை
பார்ப்பதில்லை;
அவன் உங்கள் உள்ளங்களைத் தான் பார்க்கின்றான்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம்,
எண் : 4650
حَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ
مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ
عَنْ أَبِيهِ عَنْ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ قَالَ
سَأَلْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبِرِّ وَالْإِثْمِ
فَقَالَ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ
أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ
நவ்வாஸ் இப்னு
சம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? நன்மை என்றால் என்ன?
என்று நான் கேட்டேன். அதற்கு நபி {ஸல்} அவர்கள் “அழகிய பண்பாடுகளும், நற்குணங்களும்
நன்மையாகும். “ உன்னுடைய உள்ளத்தில் எது உனக்கு உறுத்தலை ஏற்படுத்துகின்றதோ, மக்கள் எதை உன்னிடம்
உற்று நோக்கிப் பார்ப்பதை வெறுப்பாயோ அது தான் பாவம்” என்று பதில் கூறினார்கள். ( நூல்:
முஸ்லிம் )உள்ளத்தை குறை கூறுகின்றதோ, இதை நீ செய்கிறாயே
செய்யலாமா? உன்னுடைய உள்ளத்தை எது
உறுத்துகிறதோ குத்துகிறதோ அது பாவம் விட்டுவிடு என்று சொன்னார்கள்.
يقول
سفيان بن عُيَينة - رحمه الله -: "إذا وافَقتِ السَّريرة العلانية فذلك
العدل، وإذا كانت السريرة أفضل من العلانية فذلك الفضْل، وإذا كانت العلانية أفضَل
مِن السَّريرة فذلك الجور""صفوة الصفوة" (2: 234)
ஸுஃப்யான் இப்னு
உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் நல்லதை பேசுகின்றான், நல்லதின் பக்கம் அழைக்கின்றான்; அவனுடைய வெளிரங்கத்தைப்
போலவே அவனுடைய உள்ளமும் அப்படியே இருந்து விட்டால் அது நீதம். ஒரு மனிதன் பேசுவதை
விட அவன் வெளிப்படுத்துவதை விட அவனது உள்ளம் சிறப்பாக இருந்ததுவிட்டால் அதுவோ
மிகப்பெரிய சிறப்பு;
(அதாவது அவனுடைய செயலில் வெளிப்படக்கூடிய தக்வாவை விட அவன்
உள்ளத்தில் இருக்கக்கூடிய தக்வா சிறந்ததாக இருக்கிறது என்றால் அது மிகச் சிறப்பான நிலையாகும்.) ஒருவனின் வெளிரங்கம்
பெரிதாக இருக்கின்றது;
ஆனால் உள்ரங்கமோ கெட்டுப்போய் இருக்கின்றது என்றால் இது தான் மிகப்பெரிய அநியாயம்; மிகப் பெரிய அக்கிரமம்” ஆகும் என்று.
மாநபி {ஸல்} அவர்கள்
அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூப் ஃதப்பித் கல்பீ அலா தீனிக்க இறைவா உள்ளங்களை
புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக என்று
அதிகமாகப் பிரார்த்தனை புரிவார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே உள்ளங்கள்
புரளுமா?
என்று கேட்டேன். அதற்கு ஆம் அல்லாஹ் தான் படைத்த ஆதமுடைய
மக்கள் அனைவரின் உள்ளங்களும், வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன்
நினைத்தால் அவற்றை நேர்த்தியாக்குவான். நினைத்தால் அவற்றை பிறழச் செய்து விடுவான்
என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள். உம்மு சல்மா (ரலி) முஸ்னது அஹமத், தப்ஸீர் இப்னு மர்தவைஹி தப்சீர் தபரீ, தப்சீர், இப்னு கசீர் 2:24,25
மற்றுமோர்
அறிவிப்பில்.. எந்தவோர் உள்ளமும் அருளாளனின் விரல்களின் இரு விரல்களுக்கிடையே தான்
உள்ளன. அவன் அதை நேர்த்தியாக்க நினைத்தால் நேரத்தியாக்குவான். அதைப் பிறழச் செய்ய
நாடினால் பிறழச் செய்துவிடுவான். ஆயிஷா (ரலி) புஹாரி : 6617,6628, 7391, திர்மிதி 2226.
நபி யூஸுஃப் (அலை) அவர்களையே ஷைத்தான் கெடுப்பதற்கு முயற்சித்த போது
இறையச்சத்தில் பலவீனமாக இருக்கும் சாதாரண மக்களாகிய நாம் இறைவனிடம் அதிகம் பயந்து
கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக! எல்லா விதமான தீங்குகளில் இருந்தும்
ஒழுங்கீனமான செயல்களில் இருந்தும், மானக்கேடான காரியங்களில் இருந்தும், அல்லாஹ்விற்கும்
இறைத்தூதருக்கும் பிடிக்காத காரியங்களை செய்வதை விட்டும் நம்மை அல்லாஹ்
பாதுகாப்பானாக!
நமது உள்ளங்களைத் தூய்மைப் படுத்துவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
ماشاءالله
ReplyDeleteஜஸாகல்லாஹ் கைர்
ReplyDelete