ஹாஜிகளுக்கு நாம் செய்ய வேண்டிய துஆ!!!
ஒவ்வொரு ஆண்டும்
உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது. உலகில் ஹஜ் புனித பயணத்திற்கு அதிக யாத்திரிகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
இந்த ஆண்டு
இந்தியா முழுவதும் நடப்பாண்டில் 1.75 லட்சம் பேர் புனித ஹஜ்
பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதில் அரசின் ஹஜ்
கமிட்டி சார்பாக 1.40
லட்சம் பேரும், தனியார் பயண
ஏற்பாட்டாளர்கள் மூலம் 38
ஆயிரம் பேரும் இந்த முறை புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில்
இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 5,800 பேர் தங்களது
புனித ஹஜ் யாத்திரையை வரும் 26-ம் தேதி முதல் மேற்கொள்ள
உள்ளனர்.அதேபோல தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் 2,800 பேரும் ஹஜ் பயணத்தை தமிழகத்தில் இருந்து மேற்கொள்ள இருப்பது
குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.
அந்தவகையில்
நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக சென்னை மாவட்டத்தில் இருந்து 150 பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அல் மக்கா ஹஜ் சர்வீஸ், எம்.எஸ்.வேர்ல்டு டிராவல் சர்வீசஸ், முஷமில் எண்டர்பிரைசஸ்
நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் 18/05/2024 அன்று ஹஜ் பயணம்
மேற்கொண்டுள்ளனர்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவரின் பயணங்களையும் பாதுகாப்பானதாக
ஆக்கியருள்வானாக!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவரின் ஹஜ்ஜையும் ஹஜ் மப்ரூராக கபூல் செய்தருள்வானாக!
நம் அனைவருக்கும்
ஹஜ் உம்ரா நற்பேற்றை தந்தருள்வானாக!!
தற்போது நம்
குடும்ப உறவுகள்,
நம் நண்பர்கள், நம் மஹல்லாவாசிகள் என
ஹஜ்ஜுக்கு பயணம் (வழி) சொல்லி வருவார்கள்.
அவர்களுடனான மனக்
கசப்புகளை மறந்து மன்னித்து, அவர்களின் உடல்
நலத்திற்கும்,
அமல்களில் கவனத்திற்கும், ஹஜ் கிரியைகளின் கபூலியத்திற்கும் நாம் துஆச் செய்து வழியனுப்பி வைக்க கடமைப்
பட்டிருக்கின்றோம்.
பொதுவாகவே
அருகிலுள்ள ஊர்களுக்கு பயணம் சென்றாலே நம்மிடம் ஒரு முறைக்கு இரு முறையோ அல்லது பல
முறையோ சொல்லிச் செல்பவர்கள் மிகவும் தொலைதூரமாக, நீண்ட நாட்கள்,
உயரிய நோக்கம் ஒன்றிற்காக பயணம் சொல்லி வருவார்கள்.
இந்த நேரத்தில்
பயணம் சொல்லி வருபவர்களோடு நமக்கான கடமை என்ன என்பதை மார்க்கத்தின் வாயிலாக நாம்
அறிந்து கொண்டு செயலாற்ற கடமைப் பட்டிருக்கின்றோம்.
மாநபி (ஸல்)
அவர்களின் காலத்தில் ஒருவர் போருக்கு செல்வதற்காகவோ அல்லது தூர தேசங்களுக்கு
வியாபார நிமித்தமாக அல்லது வேறேதும் அலுவல் சம்பந்தமாகவோ மாநபி ஸல் அவர்களிடம்
பயணம் சொல்லி வந்தால் மாநபி ஸல் அவர்கள் பின்வருமாறு துஆச் செய்து வழியனுப்பி
வைப்பார்கள்.
இன்னும்
சொல்லப்போனால் சிலருக்கு தனித்துவமான உபதேசங்களைக் கூட சொல்லி அனுப்பி வைத்ததாக
நாம் வரலாற்று ஒளியில் பார்க்கின்றோம்.
அதே போன்று
பொறுப்புதாரிகளாக யாரையேனும் எந்த ஊருக்காவது அனுப்பி வைத்தால் சில கட்டளைகளை கூறி
அதைச் செய்யுமாறு வலியுறுத்திய நிகழ்வுகளும் வரலாற்றில் நிரம்ப உண்டு.
எனினும், வழக்கமாக நாம் ஹாஜிகள் பயணம் சொல்லி வந்தால் "ஃபீ அமானில்லாஹ்"
என்று ஒற்றை வார்த்தையிலோ,
அல்லது அல்லாஹ் உங்கள் ஹஜ்ஜை மப்ரூரான, மஃக்ஃபிரத் நிறைந்த ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக" என்று கொஞ்சம் விரிவாகவோ
சொல்லி விட்டு எனக்கும்,
என் குடும்பத்தினருக்கும் மறக்காமல் துஆச் செய்யுங்கள் என்ற
கோரிக்கையை முன் வைத்து வழியனுப்பி வைக்கிறோம்.
இதைத் தாண்டி நாம்
அவருடைய விஷயத்தில் வலுவான,
வலிமையான, அவசியமான ஒரு துஆவைச்
செய்ய வேண்டும் என்ற மாநபி (ஸல்) அவர்களின் போதனையை வழிகாட்டலை நாம் மறந்து விடக் கூடாது.
நாம் முன்பே குறிப்பிட்டபடி
ஏதேனும் ஒரு பயண விஷயமாக நபி (ஸல்) அவர்களை அணுகி பயணம் சொல்கிற போது மாநபி (ஸல்) அவர்கள் மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டு அவைகளில்
அல்லாஹ் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நான் துஆச் செய்கிறேன் என்று
சொல்வதை வழமையாக வைத்திருந்தார்கள்.
عن سالم
بن عبد الله كَانَ ابي اي ابنُ عمرَ -رضِيَ الله عنهما- يَقُول لِلرَّجُل إِذَا
أَرَادَ سَفَرًا: ادْنُ مِنِّي حَتَّى أُوَّدِعَكَ كَمَا كَان رسولُ الله -صلَّى
الله عليه وسلَّم- يُوَدِّعُنَا، فَيقُول: «أَسْتَوْدِعُ الله دِينَكَ،
وَأَمَانَتَكَ، وَخَوَاتِيمَ عَمَلِكَ».
"என்னுடைய தந்தை
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால்
அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். “அருகில் வாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை
அனுப்பி வைக்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள்
(ஒருவரை வழியனுப்பும் போது) “உங்களுடைய மார்க்கத்தையும்
அமானிதத்தையும் செயல்களின் முடிவையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம்
வேண்டுகிறேன்”
என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: சாலிம்
பின் அப்தில்லாஹ்,
( நூல்: அஹ்மத் (4295) )
பயணத்தை மேற்கொள்ளும் ஒருவருக்கு பயணத்தில் இருக்கும்
காலத்திலும் சரி, பயணத்தில் இருந்து திரும்பும் போது சரி அவருடைய தீனும், அவரின் அமானத்
– நம்பகத்தன்மையும், அவருடைய நன்மையான செயல்களின் முடிவும் பாதுகாப்பானதாக அமைந்திட
வேண்டும். பயணத்தில் ஏற்படும் எந்தவொரு அசௌகர்யமான சூழலாலும் இம்மூன்றும் எந்த வகையிலும்
பாழ்பட்டு விடக்கூடாது என்பதில் மாநபி {ஸல்} அவர்கள் எவ்வளவு தூரம் கவலை கொண்டு துஆச்
செய்திருக்கின்றார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும்.
தீனுடைய பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது?
மாநபி ஸல் அவர்கள்
தங்களது ஒவ்வொரு நாளின் பிரார்த்தனையிலும் "தீனில் ஆஃபியத்தை"
கேட்டிருக்கின்றார்கள்.
اَللَّهُمَّ
إِنِّيْ أَسْأَلُكَ اْلعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَ دُنْيَايَ
وَأَهْلِيْ وَمَالِِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ،
اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِىْ، وَعَنْ يَمِيْنِيْ
وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ
تَحْتِيْ
யா அல்லாஹ்! எனது
மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும்
மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை
மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும்
இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு
கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக்
கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.( நூல்: அபூதாவூத் )
اَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،
وَبَارِكْ لِيْ فِيْ ِرزْقِيْ.
யா அல்லாஹ்! என்
மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ
விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக!. ( நூல்: மஜ்மஃ ஸவாயித் )
வஹீயை எழுதியவருக்கு தீனில் நிலைத்திருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
عَنْ
أَنَسٍ رضى الله عنه قَالَ : كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ وَقَرَأَ
الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ ، فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم
فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ يَقُولُ : مَا يَدْرِى مُحَمَّدٌ إِلاَّ مَا
كَتَبْتُ لَهُ ، فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ ، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ
الأَرْضُ فَقَالُوا : هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ
مِنْهُمْ نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقُوهُ ، فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا فَأَصْبَحَ
وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ ، فَقَالُوا : هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ
نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ فَأَلْقَوْهُ ، فَحَفَرُوا لَهُ
وَأَعْمَقُوا لَهُ فِى الأَرْضِ مَا اسْتَطَاعُوا ، فَأَصْبَحَ قَدْ لَفَظَتْهُ
الأَرْضُ ، فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ فَأَلْقَوْهُ .
رواه
البخاري ( 3421 ) ومسلم ( 2781
).
அனஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கிறிஸ்தவராக
இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். "அல்பகரா" மற்றும்
"ஆலு இம்ரான்" ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்காக (வஹிய்யி எனும் வேத அறிவிப்பை) எழுதி வந்தார். அவர் மீண்டும் கிறிஸ்தவராகவே
மாறிவிட்டார். பிறகு அவர் (மக்களிடம்) "முஹம்மதுக்கு நான் எழுதித் தந்ததைத்
தவிர வேறெதுவும் அவருக்கு தெரியாது" என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ்
அவருக்கு மரணத்தை அளித்தான் அவரை மக்கள் புதைத்து விட்டனர்.
ஆனால் (மறுநாள்)
அவரை பூமி துப்பிவிட்டு இருந்தது. உடனே (கிறிஸ்தவர்கள்), "இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலையாகும். அதாவது, எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி
எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்" என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு)
மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது.
அப்போதும், "இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு
வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டு விட்டனர்"
என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு மிக ஆழமான குழியை அவருக்காகத்
தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும்
துப்பிவிட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனை
தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர். ( நூல்:- புகாரி,
முஸ்லிம் )
عن سهل
بن سعد الساعدي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم التقى هو والمشركون،
فاقتتلوا، فلما مال رسول الله صلى الله عليه وسلم إلى عسكره، ومال الآخرون إلى
عسكرهم، وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل يدعى قزمان، لا يَدَع لهم
شاذَّة ولا فاذَّة إلا اتَّبعها يَضرِبها بسيفه.
فقيل:
ما أجزأ منا اليوم أحدٌ كما أجزأ فلان! فقال رسول الله صلى الله عليه وسلم: ((أمَا
إنه من أهل النار)).
فقال
رجل من القوم: أنا صاحبُه، قال: فخرج معه كلما وقف وقف معه، وإذا أسرع أسرع معه،
قال: فجُرِح الرجل جُرْحًا شديدًا، فاستعجل الموتَ، فوضع نَصْل سيفه بالأرض
وذُبَابه بين ثَدْيَيه، ثم تَحامَل على سيفه، فقتَل نَفْسَه، فخرج الرجل إلى رسول
الله صلى الله عليه وسلم فقال: أشهد أنك رسول الله، قال: ((وما ذاك؟))، قال: الرجل
الذي ذكرت آنفًا أنه من أهل النار، فأَعظَم الناس ذلك، فقلت: أنا لكم به، فخرجت في
طلبه، ثم جُرِح جرحًا شديدًا، فاستعجَل الموتَ فوضع نَصْل سيفه في الأرض وذُبابَه
بين ثدييه ثم تَحامَل عليه فقتل نفسه، فقال رسول الله صلى الله عليه وسلم عند ذلك:
((إن الرجل يعمل عملَ أهل الجنَّة فيما يبدو للناس، وهو من أهل النار، وإن الرجل
ليعمل عملَ أهل النار فيما يبدو للناس، وهو من أهل الجنة
(உஹது போரின் போது) நபி
(ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதரைப்
பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே
மகத்தானவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.
(அவரைப் பற்றி நபியவர்கள்
ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர்
பின்தொடர்ந்தார். அந்த மனிதரோ (எதிரிகளுடன்) போராடிக் கொண்டு இருந்தார்.
இறுதியில் அந்த
மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக
இறந்துவிட விரும்பி,
தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து)
கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். வாள் அவரின்
தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி (ஸல்)
அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார்.
ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார்
மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். (உண்மையில்) அவர்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள்
தீர்மானிக்கப்படுகின்றன’
என்றார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ( நூல்: புகாரி )
அழகிய முடிவு...
இருபது வயதே
நிறைந்த இளம் பெண் ஸுஜுதில் இருக்கும் போது இவ்வுலகத்தை விட்டு பிரிந்த நிகழ்வு
அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாகும்.
அவரது கணவர் “நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் ஆணையத்தில்” பணிபுரிகின்றார் அவருக்கு
தனது மனைவியின் இத்திடீர் பிரிவு கடும் திடுக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது மனைவியை
பொறுத்த வரையில் தன்னை நன்மையான காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்கின்ற, இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்ற, அல்குர்ஆனை மனனமிட்டு
வரக்கூடிய ஒரு சிறந்த பெண்ணாவாள்.
ஒவ்வொரு நாள்
காலையிலும் தனது கணவருடன்,
தான் கற்கும் பல்கலைகழகத்திற்குச் செல்வது அவளது வழமை.
அன்றும் தனது கணவருடன் செல்வதற்கு ஆயத்தமாகி லுஹாத் தொழுகையை தொழுது வருவதாக
கணவரிடம் கூறிவிட்டு தொழுகைக்குச் செல்கிறாள். ஆனால் அது அவள் தொழும் இறுதித்
தொழுகை என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கணவர் வேறு
அலுவல்களில் ஈடுபட்டுவிடுகின்றார், நீண்ட நேரமாகியும் மனைவி
திரும்பாததை பார்த்து மனைவி தொழுத இடத்திற்கு வருகின்றார்.
மனைவியின் ரூஹ்
ஸுஜுதிலே பிரிந்திருப்பதைக் கண்டு திடுக்குறுகின்றார். இந்த நிகழ்ச்சி சவூதியில்
ரியாத்தில் நடந்தது. (
நன்றி: ஸப்க் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிஜ்ரி 1433-8-26 ல் வெளியான செய்தி )
எவ்வளவு அழகிய
மரணம் அவரை வந்தடைந்தது.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) குறிப்பிட்டார்கள்: “ஒரு அடியான் எந்நிலையில் மரணிக்கின்றானோ அதே நிலையில் தான் நாளை மறுமையில்
எழுப்பபடுவான்”.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம்).
தொழுகையில் ஸுஜுத்
என்பது அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக இருக்கும் நிலையாகும், இந்நிலையில் உயிர் கைப்பற்றப்படுவதென்பது எவ்வளவு உயரிய பாக்கியமாகும்.
அமானிதம் குறித்த பாதுகாப்பு ஏன் முக்கியத்துவம்
பெறுகிறது?.
நாம் வாழும் இந்த
காலத்தில் அமானிதம் என்பது மிகவும் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. இன்னும்
சொல்லப்போனால் அமானிதம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு பலர் இருந்து
கொண்டிருக்கின்றனர்.
அமானிதம் என்பது
பல்வேறு வகைகளில் இருப்பதாக இஸ்லாம் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறது
அவை அனைத்தையும்
இரண்டு வடிவங்களில் குர்ஆன் நமக்கு அழகு பட விவரிக்கிறது
ஒன்று, இறைவனுடன்,
இறைத்தூதருடன் இறை மார்க்கத்துக்கு அமானிதம் பேணுவது.
إِنَّا
عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ
أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْأِنْسَانُ إِنَّهُ كَانَ
ظَلُوماً جَهُولاً.
நிச்சயமாக
"(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள்,
பூமி, மலைகள் ஆகியவற்றிடம்
வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது
விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக
அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். (அல்குர்ஆன்: 33: 72 )
இரண்டு இறை
அடியார்களுடன் அமானிதம் பேணுவது.
إِنَّ
اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا
حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا
يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا
(இறைநம்பிக்கையாளர்களே!
உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம்
நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில்
நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும்
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும்
இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ்
செவியுறுபவனாகவும்,
உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4: 58 )
முதல் வகை
அமானிதத்தை படைப்புகளில் பெரிய, வலுவான படைப்புகளிடம்
ஏற்றுக் கொள்ளுமாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்டுக் கொண்ட போது அவைகள் அதன் கண
பரிமாணத்தை உணர்ந்து ஏற்க மறுத்து விட்டன. ஆனால், மனிதனோ ஏற்றுக் கொண்டு மாறு செய்து கொண்டிருக்கின்றான்.
வெற்றியாளனின் பண்பு..
எனினும், பூமியில் வாழும் அடியார்களில் வெற்றி பெற்ற இறை அடியார்கள் என்று அடையாளப்
படுத்தும் அல்லாஹ் அவர்களுக்கென சில பிரத்யேக பண்புகளை வரிசைப்படுத்துகின்றான்.
அதில் ஏழாவது பண்பாக அல்லாஹ் அமானத்தை குறிப்பிடுகின்றான்.
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
அவர்கள்
(தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து கொள்வார்கள். (
அல்குர்ஆன்: 23: 8
)
அமானித மோசடி செய்பவரை அல்லாஹ் மனித சமூகத்தின் திரளான கூட்டத்தில் அடையாளப்படுத்துவான்..
عَنِ
ابْنِ عُمَرَ رَضِىَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ:- الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ هَذِهِ
غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை
வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு இது
இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ( நூல் : புகாரி )
அமானித மோசடி செய்பவர் முஸ்லிமே கிடையாது..
عَنْ
أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- مَرَّ عَلَى
صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً فَقَالَ
« مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ ». قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ
اللَّهِ. قَالَ « أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ
مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّى
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை
விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து)
உணவுக்குச் சொந்தக்காரரே இது என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்
அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது என்று கூறினார். அதற்கு
அவர்கள் மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்கவேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி), ( நூல் : முஸ்லிம் )
அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும்
போது அவர்களை கடக்கவிடாமல் இந்த அமானிதம் தடுக்கப்படுவார்கள்.
فَيَأْتُونَ مُحَمَّدًا -صلى الله عليه وسلم- فَيَقُومُ فَيُؤْذَنُ
لَهُ وَتُرْسَلُ الأَمَانَةُ وَالرَّحِمُ فَتَقُومَانِ جَنَبَتَىِ الصِّرَاطِ
يَمِينًا وَشِمَالاً فَيَمُرُّ أَوَّلُكُمْ كَالْبَرْقِ
… பின்னர் மக்கள் முஹம்மத்
(ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி
கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது அமானத் - நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும்
(நரகத்தின் மீதுள்ள ஸிராத் எனும்) அப்பாலத்தின் இருபுறங்களிலும் வலம் இடமாக
நின்றுகொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக்
கடந்துசெல்வார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல் : முஸ்லிம் )
அமல்களின் முடிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
إنَّ الرَّجُلَ لَيعمَلُ الزَّمانَ الطَّويلَ بعمَلِ
أهلِ الجنَّةِ ثمَّ يختِمُ اللهُ له بعمَلِ أهلِ النَّارِ فيجعَلُه مِن أهلِ
النَّارِ وإنَّ الرَّجُلَ لَيعمَلُ الزَّمانَ الطَّويلَ بعمَلِ أهلِ النَّارِ ثمَّ
يختِمُ اللهُ له بعمَلِ أهلِ الجنَّةِ فيجعَلُه مِن أهلِ الجنَّةِ‘
‘ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே வருவார்.
பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும். ஒரு மனிதர் நீண்ட காலம்
நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்து கொண்டே வருவார். பிறகு அவரது செயல்
சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும்’’ என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
( நூல்: முஸ்லிம் )
عن أبي عبدالرحمن عبدالله بن مسعودٍ رضي الله عنه قال: حدثنا
رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق: ((إن أحدكم يجمع خلقه في بطن
أمه أربعين يومًا - نطفة
ثم يكون علقةً مثل ذلك، ثم يكون مضغةً مثل ذلك، ثم يرسل إليه
الملك فينفخ فيه الروح، ويؤمر بأربع كلماتٍ: بكَتْبِ رزقه وأجله وعمله، وشقي أو
سعيدٌ، فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها
إلا ذراعٌ، فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل
أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراعٌ، فيسبق عليه الكتاب، فيعمل بعمل أهل
الجنة فيدخلها))؛ رواه البخاري
உங்களில் ஒருவர்
தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப்
போன்றே (40
நாள்கள்) அந்தக் கரு ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு
அதைப் போன்றே ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு
வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த
மனிதனின் வாழ்வாதாரம்,
வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு
அவனுள் உயிர் ஊதப்படும்.
இதனால் தான்
அல்லாஹ்வின் மீதாணையாக! ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார்.
இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே ‘விரிந்த இரண்டு கைகளின்
நீட்டளவு’
அல்லது ‘ஒரு முழம்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி
அவரை முந்திக் கொள்ள,
அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச்
சொர்க்கத்தில் புகுந்து விடுவார்.
(இதைப் போன்றே) ஒருவர்
சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும்
சொர்க்கத்திற்கும் இடையே ‘ஒரு முழம்’
அல்லது ‘இரண்டு முழங்கள்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை
முந்திக்கொள்ள,
அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால்
நரகத்தினுள் புகுந்துவிடுவார். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ( நூல்: புகாரி )
عن أبي
هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: ((أتدرون ما المفلس؟))
قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع فقال: ((إن المفلس من أمتي يأتي يوم
القيامة بصلاة وصيام وزكاة، ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا
وضرب هذا، فيعطى هذا من حسناته وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يقضى ما
عليه أخذ من خطاياهم فطرحت عليه، ثم طرح في النار)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப்
பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன்
வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு
சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது
இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து
சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக்
கொடுக்கப்படும்..அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள்
தீர்ந்துவிட்டால்,
(அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில
எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில்
தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )
ஆகவே தான் மாநபி {ஸல்} அவர்கள்
தங்களுடைய பிரார்த்தனையில் அமல்களின் முடிவு நல்லதாக அமைய அதிகம் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
اَللَّهُمَّ
إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ
وَآخِرَهُ، وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
யா அல்லாஹ்!
நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம்
நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு,
அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும்
சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.( நூல்:
தப்ரானி )
எனவே,
ஹாஜிகளுக்கு இந்த மூன்று அம்சங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்
என்று மாநபி {ஸல்} அவர்களின் வழியில் நின்று துஆச் செய்து வழியனுப்பி வைப்போம்!!
சரியான மெசேஜ்,
ReplyDeleteதேவையான நேரத்தில்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த நேரத்தில் நல்ல செய்தியை நல்ல தகவலை கொடுத்தமைக்கு அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக
ReplyDeleteபொருத்தமான நாட்களில் பொருத்தமான அருமையான பதிவு உஸ்தாத். جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖👍
ReplyDelete