Wednesday, 16 July 2025

மன்னித்து வாழ்வோம்! மாண்பாளன் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெறுவோம்!!

 

மன்னித்து வாழ்வோம்! மாண்பாளன்

அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெறுவோம்!!

கேரளாவின் பாலக்காடு கொல்லங்கோடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.

அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.

மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. ( நன்றி: பிபிசி தமிழ், 15/07/2025 )

2024 டிஸம்பரில் எமன் அதிபர் ரஷாத் அல் ஆலிமி நிமிஷாவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்றிஞர் (Attorney-General for India)ஆர் வெங்கட்ரமணி இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறியிருந்தார்.  

2025 ஜூலை 16 ம் தேதி அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

இந்த நிலையில், ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஹூதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை (16/07/2025) அன்று திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

 

நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று மாலை பத்ரிகையாளர்களை சந்தித்த கேரளாவைச் சேர்ந்த கிராண்ட் முஃப்தி ஏ பி அபூபக்கர் முஸ்லியார் யமனிலுள்ள மார்க்க அறிஞர்கள் மூலமாக தான் மேற் கொண்ட முயற்சியால் நிமிஷா வுக்கான தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார். அது பற்றிய் உத்தரவின் நகலையும் அவர் பதிரிகையாளர்களிடம் வழங்கியிருக்கிறார். 

நிமிஷா வழக்கு குறித்து சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, "கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் இருக்கிறது. தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்பு நடந்தது.

ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனைப்படி, ஹொடைடா மாநில தலைமை நீதிபதியும், ஏமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான, மரணமடைந்த மஹ்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த கலந்துரையாடலில் பங்கேற்க மஹ்தியின் சொந்த ஊரான தமருக்கு வந்திருந்தார். அவர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபி கட்டளையைப் பின்பற்றுபவர் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சூஃபி தலைவரின் மகன் என்பதும் நம்பிக்கை தருவதாக உள்ளது."

"மஹ்தியின் கொலை அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மஹ்தி வாழ்ந்த பிராந்தியத்தின் பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதனால்தான் இதுவரை அந்தக் குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.

முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. புகழ் பெற்ற அறிஞரும் சூஃபியுமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இன்றைய விவாதம் 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈட்டை (பெரும்பாலும் பணம்) ஏற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் இறுதி என்னவாகப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ( நன்றி: பிபிசி தமிழ், 15/07/2025 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சமாதான பேச்சுவார்த்தை முயற்சியை இலகுவாக்கித் தருவானாக!

ஒரு ஆலிம் தலையிட்டால்....

நிமிஷா வழக்கு பிரச்சினையில் கிராண்ட் முஃப்தி என்ன பேசியிருப்பார்கள்.

ஒரு ஆலிமாக மன்னிப்பின் மகத்துவம் குறித்து பேசியிருப்பார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அநீதிக்கு உள்ளானவன் மன்னிப்பதால் அவனுக்கு வழங்கி இருக்கும் சலுகைகளை ஞாபகப் படுத்தி இருப்பார்கள்.

நாளை மறுமையில் அவருக்கு கிடைக்க இருக்கும் உயர் அந்தஸ்துகள் குறித்து பேசி இருப்பார்கள்.

பொதுவாகவே உலமாக்கள் ஒரு பிரச்சினையில் தலையிட்டால் அது சுமூகமாகவே முடிந்திருக்கிறது என்பது தான் கடந்த கால வரலாறு.

ராஜீவ் காந்தி ஆட்சியில் ஷாபானு வழக்கில் இந்திய உலமாக்களின் தலையீடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நாமறிவோம்.

சமீபத்திய (2025) ஹஜ் பயணத்தின் போது தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு சவூதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது.

அப்போது, மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரிஜுஜு அவர்கள் தேவ்பந்த் உலமாக்கள் மற்றும் ஜம்மியத்துல் உலமா ஹிந்த் உலமாக்களை பயன் படுத்தி பேச்சு வார்த்தை நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிக்க இருந்த ஹஜ் பயணிகளுக்கு 20 சதவீத ஹாஜிகளின் ஹஜ் பயணத்தை சாத்தியமாக்கியது.

ஆகவே, உலமாக்களின் தலையீடு என்பது இந்த உம்மத்திற்கு நன்மையின் அணுகூலத்தையே அறுவடையாக பெற்றுத் தந்துள்ளது.

அந்த வகையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை விவகாரத்தில் நாம் நன்மையின் அணுகூலத்தையே அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம்.

பிறரிடம் ஒருவரை மன்னிக்குமாறு கோருவது பிழையா?

கிராண்ட் முஃப்தி அபூபக்ர் முஸ்லியார் அவர்களின் சமாதான பேச்சுவார்த்தை முயற்சியை சிலர் விமர்சிக்கின்றார்கள்.

கொலையாளிக்கு வக்காலத்து வாங்குகின்றார். தண்டிக்கப்பட தகுதியான ஒருவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார் என்று.

தவறான வழியில் கிராண்ட் முஃப்தி முயற்சி செய்யவில்லையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கியுள்ள இரு உரிமைகளில் ஒன்றை அதுவும் உயரிய ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்தை வாழ வைக்குமாறு தானே வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இது எப்படி அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு மாற்றமான செயலாகும்.

"மன்னிக்குமாறு கோரிக்கை வைப்பது" பிழை என்று விமர்சிப்பவர்கள் பின் வரும் அல்லாஹ்வின் கோரிக்கையை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (22)

உங்களிடையே பண்பு நலன்களும், வசதி வாய்ப்புகளும் உடையவர்கள், “தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்ய மாட்டோம்என்று சத்தியம் செய்ய வேண்டாம்.

 

அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 24: 22 )

وهذه الآية نزلت في الصدِّيق، حين حلف ألا ينفع مِسْطَح بن أثاثة بنافعة بعدما قال في عائشة ما قال، كما تقدم في الحديث. فلما أنزل الله براءةَ أم المؤمنين عائشة، وطابت النفوس المؤمنة واستقرت، وتاب الله على مَن كان تكلم من المؤمنين في ذلك، وأقيم الحد على مَن أقيم عليه -شَرَع تبارك وتعالى، وله الفضل والمنة، يعطفُ الصدِّيق على قريبه ونسيبه، وهو مِسْطَح بن أثاثة، فإنه كان ابن خالة الصديق، وكان مسكينًا لا مال له إلا ما ينفق عليه أبو بكر، رضي الله عنه، وكان من المهاجرين في سبيل الله، وقد وَلَق وَلْقَة تاب الله عليه منها، وضُرب الحد عليها. وكان الصديق، رضي الله عنه، معروفًا بالمعروف، له الفضل والأيادي على الأقارب والأجانب. فلما نزلت هذه الآية إلى قوله: { أَلا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ } أي: فإن الجزاء من جنس العمل، فكما تغفر عن المذنب إليك نغفر لك، وكما تصفح نصفح عنك. فعند ذلك قال الصديق: بلى، والله إنا نحب -يا ربنا -أن تغفر لنا. ثم رَجَع إلى مسطح ما كان يصله من النفقة، وقال: والله لا أنزعها منه أبدًا، في مقابلة ما كان قال: والله لا أنفعه بنافعة أبدًا، فلهذا كان الصدّيق هو الصديق [رضي الله عنه وعن بنته].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது வீசப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை அள்ளி வீசியவர்களில் அப்பாவியான சில முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். மேலும், அதனைத் தாமும் பரப்பிக் கொண்டுமிருந்தனர்.

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான மிஸ்தஹ் இப்னு உஸாஸா (ரலி) அவர்களும் இந்த விவகாரத்தில் பங்கு கொண்டவர்களில் ஒருவர்.

மிஸ்தஹ் இப்னு உஸாஸா (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மையானவர். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் மிஸ்தஹ் (ரலி) அவர்களின் குடும்ப செலவினங்களுக்கு பணம் கொடுத்து வந்தார்கள்.

இதை அறிந்து கொண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி மேல் நான் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு உதவி, உபகாரம் செய்ய மாட்டேன்!என்று கூறினார்கள்.

உடனடியாக, மிஸ்தஹ் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள்.

 

அல்லாஹ் இது குறித்து உடனடியாக மேற்கூறிய இறைவசனத்தை இறக்கியருளினான். இந்த இறைவசனம் இறக்கப்பட்டதும் அண்ணலாரின் திருச்சபைக்கு ஓடோடி வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! உன் மன்னிப்பை நான் விரும்புகின்றேன்! அவரின் மீதான வெறுப்பை அகற்றி, அவரை நான் மன்னித்து விட்டேன்.

உடனடியாக, மிஸ்தஹை அழைத்துச் சொன்னார்களாம் இனி ஒரு போதும் நான் உனக்கு வழங்கி வந்த செலவினங்களை நிறுத்த மாட்டேன்என்று. ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

أخرج البخاري في صحيحه عن أبي الدرداء – رضي الله عنه – قال: " كنت جالسا عند النبي صلى الله عليه وسلم , إذ أقبل أبو بكر آخذا بطرف ثوبه حتى أبدى عن ركبته , فقال النبي صلى الله عليه وسلم: أما صاحبكم فقد غامر , فسلّم وقال: إني كان بيني وبين ابن الخطاب شيء فأسرعت إليه ثم ندمت فسألته أن يغفر لي فأبى عليّ فأقبلت إليك , فقال صلى الله عليه وسلم: " يغفر الله لك يا أبا بكر " ثلاثا , ثم إن عمر ندم فأتى منزل أبي بكر فسأل أثمَّ أبو بكر؟ فقالوا: لا , فأتى إلى النبي صلى الله عليه وسلم فسلّم فجعل وجه النبي صلى الله عليه وسلم يتمعّر حتى أشفق أبو بكر فجثا على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أظلم (مرتين) فقال النبي صلى الله عليه وسلم: " إن الله بعثني إليكم فقلتم كذبتَ وقال أبو بكر صدق , وواساني بنفسه وماله فهل أنتم تاركوا لي صاحبي , هل أنتم تاركوا لي صاحبي " قال أبو الدرداء: فما أوذي بعدها " 3/ 1

அபுத்தர்தா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி {ஸல்} அவர்களின் அருகே அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் {ரலி} அவர்கள் தமது முழங்கால் தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தைத் தூக்கிப் பிடித்த படி நபிகளாரை நோக்கி வந்தார்கள். உடனே நபி {ஸல்} அவர்கள் உங்களது தோழர் வழக்காட வந்து கொண்டு இருக்கின்றார்.என்று சொன்னார்கள்.                               

அபூபக்ர் {ரலி} அவர்கள் நபியவர்களுக்கு ஸலாம் கூறி விட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனார் உமருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் ஏற்பட்டது. நான் கோபமாக அவரை நோக்கி விரைந்தேன். பிறகு என் செயலுக்காக நான் மனம் வருந்தி, என்னை மன்னிக்குமாறு அவரிடம் வேண்டினேன்.                            ஆனால், அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் நான் வந்தேன்என்று கூறினார். உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ”அபூபக்ரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக!என்று மூன்று முறை கூறினார்கள்.    

சிறிது நேரத்தில் உமர் {ரலி} அவர்கள், அபூபக்ர் {ரலி} அவர்களின் வீட்டிற்கு தாம் மன்னிக்க மறுத்ததற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கலாம்என்று சென்றிருந்தார்கள். வீட்டார்களிடத்தில் அபூபக்ர் {ரலி} இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். வீட்டார்கள் இல்லைஎன பதில் கூறினார்கள்.         

ஆகவே, உமர் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்கள் சமூகத்திற்கு வந்தார்கள்.    அப்போது மாநபி {ஸல்} அவர்களின் முகம் கோபத்தால் சிவந்து போயிற்று.              அப்போது, அபூபக்ர் {ரலி} அவர்கள் பயந்து போய் தங்களது முழங்காலின் மீது மண்டியிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தான் உமரை விட அதிகம் அநீதி இழைத்தவனாவேன்என இரு முறைக் கூறினார்கள்.              

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி மக்களே! அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். நீங்கள் நான் பொய்யன் என்று கூறினீர்கள். ஆனால், அபூபக்ர் {ரலி} அவர்களோ என்னைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்என்று கூறினார்; மேலும், சன்மார்க்கத்தை தூக்கி நிறுத்திடும் பணியில் தன்னையும், தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் அன்பொழுக நடந்து கொண்டார்.                    

அத்தகைய என் நண்பரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?” என்று இரு முறை சொன்னார்கள்.                          

அந்த நாளுக்குப் பிறகு ஒரு போதும் அபூபக்ர் {ரலி} அவர்கள் எவராலும் மன வேதனைக்குள்ளாக்கப் படவில்லை. ( நூல்:புகாரி, பாடம்: பாபு ஃபள்லி அபீபக்ர் {ரலி} பஅதன் நபிய்யீ {ஸல்}.)

وقال الفضيل بنُ عياض رحمه الله : " إذا أتاك رجلٌ يشكو إليك رجلاً فقل : يا أخي ، اعفُ عنه ؛ فإنَّ العفو أقرب للتقوى ، فإن قال : لا يحتمِل قلبي العفوَ ، ولكن أنتصر كما أمرَني الله عزّ وجلّ فقل له : إن كنتَ تحسِن أن تنتَصِر ، وإلاّ فارجع إلى بابِ العفو ؛ فإنّه باب واسع ، فإنه من عفَا وأصلحَ فأجره على الله ، وصاحِبُ العفو ينام علَى فراشه باللّيل ، وصاحب الانتصار يقلِّب الأمور ؛ لأنّ الفُتُوَّة هي العفوُ عن الإخوان " . [ أدب المجالسة لابن عبد البر 116 ]

ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: தோழனே! ஒரு மனிதர் உன்னிடம் வந்து இன்னொரு மனிதர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்என்று முறையிட்டால், முறையிடும் அந்த மனிதரிடம் சகோதரனே! தவறாக நடந்து கொண்ட அவரை நீ மன்னித்து விடு! ஏனெனில் அது தான் இறையச்சத்திற்கு நெருக்கமான செயல்என்று சொல்லி விடு.

அவர் மன்னிக்க எனக்கு மனம் வர வில்லை, கண்டிப்பாக நான் அவரை பழி வாங்குவேன் அல்லாஹ் எனக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கின்றான்என்று உன்னிடம் சொல்வாரேயானால்,

அவரிடம் உன்னால் அவர் உன்னிடம் நடந்து கொண்ட அதே முறையில் நடந்து கொள்ள முடியுமானால் நீ பழி வாங்கு. அப்படி உன்னால் முடியாது போனால் அவரை நீ மன்னித்து விடு! மன்னிக்கும் மனப்பான்மை என்பது விசாலமான வாசல் போன்றது.

 

அல்லாஹ் அப்படி மன்னித்து விடுபவர்களுக்கு அளவிட முடியாத பேறுகளை வழங்கி கௌரவிக்கின்றான். மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனால் மட்டுமே இரவில் நிம்மதியாக தூங்க முடியும். பழி வாங்கும் எண்ணம் கொண்டவனால் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது.

உண்மையில் வீரன் - ஆண்மகன் என்பவன் தன் சகோதரனின் தவறை மன்னிப்பவனே! என்று கூறி விடு!” ( நூல்: அதபுல் மஜாலிஸா லி இப்னி அப்துல் பர் (ரஹ்) )

ஆகவே, கிராண்ட் முஃப்தி அவர்களின் இந்த சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான செயல் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான செயல் அல்ல என்பதை நாம் மேற்கண்ட குர்ஆன் வசனம் ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது.

பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் வழங்கும் சட்ட ஆறுதலும்... சலுகை உரிமையும்...

நீதி செலுத்தி வாழ்வதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மருந்திடுகிறது.

இன்று உலகில் சமச்சீரற்ற குழப்பங்கள் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். 

இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى

இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது” ( அல்குர்ஆன்: 2: 178 ) இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ

எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது” ( அல்குர்ஆன்: 42: 41)

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. 

தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. இத்தோடு இஸ்லாம் நின்று விடவில்லை. 

மாறாக, அநீதிக்கு உள்ளானவனுக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையையும் வழங்குகிறது.

ஒன்று நஷ்டயீட்டைப் பெற்றுக் கொண்டு தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும் அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது. 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَى بِالْأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ

கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்” ( அல்குர்ஆன்: 2: 178 )

இன்னொன்று எந்தவொரு ஈட்டையும் பெறாமல் முழுமனதோடு தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும் அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

وَالَّذِيْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْىُ هُمْ يَنْتَصِرُوْنَ‏

அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.

وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ

ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்” ( அல்குர்ஆன்: 42: 39, 40, 43 )மன்னிப்பதை தான் வீரமிக்க செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

சட்ட ஆறுதலை தேர்ந்தெடுப்பதா? சலுகை உரிமையை பயன்படுத்துவதா?..

 

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.

அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. ( நூல்: புகாரி )

சுமாமா என்பவர் போர்க்கைதியாகப் பிடித்து வரப்பட்டு பள்ளிவாசல் தூணில் கட்டி வைக்கப்படுகின்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கொண்ட அணுகுமுறையைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

بَعَثَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ برَجُلٍ مِن بَنِي حَنِيفَةَ يُقَالُ له: ثُمَامَةُ بنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بسَارِيَةٍ مِن سَوَارِي المَسْجِدِ، فَخَرَجَ إلَيْهِ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: ما عِنْدَكَ يا ثُمَامَةُ؟ فَقَالَ: عِندِي خَيْرٌ يا مُحَمَّدُ؛ إنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ، وإنْ تُنْعِمْ تُنْعِمْ علَى شَاكِرٍ، وإنْ كُنْتَ تُرِيدُ المَالَ فَسَلْ منه ما شِئْتَ، فَتُرِكَ حتَّى كانَ الغَدُ، ثُمَّ قَالَ له: ما عِنْدَكَ يا ثُمَامَةُ؟ قَالَ: ما قُلتُ لَكَ: إنْ تُنْعِمْ تُنْعِمْ علَى شَاكِرٍ، فَتَرَكَهُ حتَّى كانَ بَعْدَ الغَدِ، فَقَالَ: ما عِنْدَكَ يا ثُمَامَةُ؟ فَقَالَ: عِندِي ما قُلتُ لَكَ، فَقَالَ: أطْلِقُوا ثُمَامَةَ.

فَانْطَلَقَ إلى نَجْلٍ قَرِيبٍ مِنَ المَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ المَسْجِدَ، فَقَالَ: أشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَشْهَدُ أنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، يا مُحَمَّدُ، واللَّهِ ما كانَ علَى الأرْضِ وجْهٌ أبْغَضَ إلَيَّ مِن وجْهِكَ، فقَدْ أصْبَحَ وجْهُكَ أحَبَّ الوُجُوهِ إلَيَّ، واللَّهِ ما كانَ مِن دِينٍ أبْغَضَ إلَيَّ مِن دِينِكَ، فأصْبَحَ دِينُكَ أحَبَّ الدِّينِ إلَيَّ، واللَّهِ ما كانَ مِن بَلَدٍ أبْغَضُ إلَيَّ مِن بَلَدِكَ، فأصْبَحَ بَلَدُكَ أحَبَّ البِلَادِ إلَيَّ، وإنَّ خَيْلَكَ أخَذَتْنِي وأَنَا أُرِيدُ العُمْرَةَ، فَمَاذَا تَرَى؟ فَبَشَّرَهُ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ وأَمَرَهُ أنْ يَعْتَمِرَ، فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ له قَائِلٌ: صَبَوْتَ! قَالَ: لَا، ولَكِنْ أسْلَمْتُ مع مُحَمَّدٍ رَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ، ولَا واللَّهِ، لا يَأْتِيكُمْ مِنَ اليَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حتَّى يَأْذَنَ فِيهَا النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ.:- الراوي : أبو هريرة | المحدث : البخاري

| المصدر : صحيح البخاري:- الصفحة أو الرقم: 4372 | خلاصة حكم المحدث : [ صحيح ]

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள்.

பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், சுமாமாவே என்று கேட்டார்கள்.

அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.

(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.

மறு நாள் வந்தபோது அவரிடம், சுமாமாவே! என்ன கருதுகிறாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்:

நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள்.

மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, நீ என்ன கருதுகிறாய்? சுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே சுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, //வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை// என்று நான் உறுதி கூறுகிறேன்.

மேலும், //முஹம்மது, அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்// என்று மொழிந்துவிட்டு,

முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.

ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக!

(இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை.

ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக!

 

உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.

உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டனர்என்று சொல்லிவிட்டு,

மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு சுமாமா (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள். ( நூல்: புகாரி )

இங்கு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பு, தண்டிப்பு ஆகிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பையே தேர்வு செய்கின்றார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.

மன்னிப்பதால்....?

மன்னிக்கும் மனோபாவம் பெற்றிருப்பவருக்கு அல்லாஹ் பல்வேறு வகையான நற்பேறுகளை வழங்கி கௌரவிக்கின்றான்.

1. இறையச்சம் உள்ளவராக அல்லாஹ் ஆக்குகின்றான்..

{ وَأَن تَعْفُواْ أَقْرَبُ لِلتَّقْوَى وَلاَ تَنسَوُاْ الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ } [ البقرة237 ] .

அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், நீங்கள் மன்னித்து (விட்டுக் கொடுத்து) வாழ்வது தான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்து கொள்ள மறந்து விட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 2:237 )

2. சொர்க்கத்திற்குரியவர்களாக ஆக்குகின்றான்.

{ وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ * الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاء وَالضَّرَّاء وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ } [ آل عمران 133-134 ] .

 

அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் ( செல்லும் பாதையில் ) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விசாலமானது.மேலும், இறையச்சமுடையோருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகையோர்கள் எனில், வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும், அவர்கள் ரோஷத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும், மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர் பண்பு கொண்டிருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.

3. கண்ணியம் உள்ளவர்களாக வாழச் செய்கின்றான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، قال الله تعالى : عَنْ رَسُولِ اللّهِ صلى الله عليه وسلم قَالَ : " مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ ، وَمَا زَادَ اللّهُ عَبْداً بِعَفْوٍ إِلاَّ عِزًّا ، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلّهِ إِلاَّ رَفَعَهُ اللّهُ " [ أخرجه مسلم ] .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: தர்மம் செய்பவரின் பொருளில் அல்லாஹ் ஒரு போதும் குறைவை ஏற்படுத்துவதில்லை. பிறரின் குற்றங்களை மன்னித்து வாழ்பவரை அதிக கண்ணியத்தோடே தவிர வாழ வைக்காமல் இருப்பதில்லை. பணிவோடு நடப்பவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.” ( நூல்: முஸ்லிம், அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) )

4. அளப் பெரும் கூலி வழங்கி கௌரவப்படுத்துகின்றான்.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: தீமைக்கு அது போன்ற தீமை தான் கூலியாகும். எனினும் எவர் மன்னித்து, சீர்படுத்திக் கொள்கின்றாரோ அவருக்கு கூலி வழங்குவது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. திண்ணமாக, அல்லாஹ் அநியாயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.

பெரும்பாலான இடங்களில் அல்லாஹ் மன்னிக்கும் மனோபாவத்தை குறிக்க அல் அஃப்வு” - العفو என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்.

அத்தோடு மாத்திரமல்லாமல் அஸ் - ஸஃப்ஹ்” – الصّفحஎன்ற வார்த்தையையும் இணைத்தே கூறுவான்.

الفرق بين العفو والصفح :

العفو والصفح متقاربان في المعنى فيقال :

صفحت عنه : أعرضت عن ذنبه وعن تثريبه ، كما يقال : عفوت عنه .

إلا أن الصفح أبلغ من العفو فقد يعفو الإنسان ولا يصفح .

فالصفح ترك المؤاخذة ، وتصفية القلب ظاهراً وباطناً ،

இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட நெருக்கமான ஒரே பொருளைக் கொடுத்தாலும் சற்று வித்தியாசம் இருக்கின்றது. அஃப்வை விட ஸஃப்ஹ் மிகவும் உயர்வானது என அல் ஹிஜ்ர் அத்தியாயத்தின் 89 –ஆம் வசனத்தின் விளக்கத்தில் அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்றார்கள்.

والعفو : هو التجاوُزُ عن الذنب وتَرْك العِقاب عليه ، وأَصله المَحْوُ والطمْس ، مأْخوذ من قولهم عَفَت الرياحُ الآثارَ إِذا دَرَسَتْها ومَحَتْها ، وكل من اسْتَحقَّ عندك عُقوبة فتَرَكتَها فقد عَفَوْتَ عنه ،

அஃப்வு என்றால் தண்டிக்கும் படியான ஒரு தவறைச் செய்கின்றவனை மன்னித்து அவனை தண்டிக்காமல் விட்டு விடுவதாகும்.

மன்னிக்கும் மனப்பான்மையால் வரலாறு படைத்த மனிதப் புனிதர்கள்!

1) ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்களின் மன்னிக்கும் மாண்பு.

உஹத் யுத்தகளத்தின் பரபரப்பான தருணம் அது

புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து முஸ்லிம்களை நிலை குலையச் செய்த அபாயகரமானச் சூழல், நாலா புறமும் முஸ்லிம்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

இப்போது, யுத்தகளம் முழுவதையும் எதிரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "

"سيرة ابن هشام" (2 / 86)وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .

 وكان النبي صلى الله عليه وسلم قد أَسَرَّ إلى حذيفة أسماء المنافقين ، وضبط عنه الفتن الكائنة في الأمة .

இந்த யுத்தத்தில் ஹுதைஃபா (ரலி) அவர்கள், தங்களது தந்தை ஹுஸைல் இப்னு ஜாபிர் (ரலி) அவர்களோடு களம் புகுந்திருந்தார்கள்.

இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹுஸைல் (ரலி) அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி தப்பி ஓடுகின்றான். அவனைத் துரத்திக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்கள் ஓடுகின்றார்கள்.

சற்று தூரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ஹுஸைல் (ரலி) அவர்களை எதிரியாகவும், தப்பி ஓடும் எதிரியை முஸ்லிமாகவும் தவறாக நினைத்துக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்களுக்குப் பின்னால், அவரைத் தாக்க துரத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதைக் கண்ணுற்று நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்தவர்களாக தோழர்களே! அவர் என் தந்தை, அவர் ஒரு முஸ்லிம்என உரக்க சப்தமிட்டவாறே பின்னால் ஓடினார்கள்.

யுத்தகளத்தின் களேபரத்தில் ஹுதைஃபாவின் குரல் நபித்தோழர்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. ஆம் நபித்தோழர்கள் ஹுதைஃபாவின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

ஹுஸைல் (ரலி) அவர்களின் தலை துண்டாக வீழ்ந்த அதே நேரத்தில், அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் உடைந்து தெறித்தது.

நபித்தோழர்கள் அருகே சென்று பார்க்கின்றார்கள். அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்கள்.

ஒரு முஸ்லிமை சக முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயமாக கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வோடு தலைகுனிந்தவர்களாக செய்வதறியாது விக்கித்து நின்றார்கள் நபித்தோழர்கள்.

இதே நேரத்தில் ஹுதைஃபா அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செய்வதறியாது விக்கித்து நிற்கும் தோழர்களை இரக்க மனதோடும், வாஞ்சையோடும் நோக்கிய ஹுதைஃபா (ரலி) அவர்கள் தோழர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்! நீங்கள் ஒன்றும் என் தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை! தவறுதலாகத்தான் செய்து விட்டீர்கள்! கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனான அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்! என்று உணர்வுகளை அடக்கி, உயர்ந்த எண்ணத்தோடு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, யுத்தகளம் நோக்கி எதிரிகளைத் தாக்க விரைந்து சென்றார்கள்.

யுத்தகளம் ஓய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஹுதைஃபா (ரலி) அவர்களை அழைத்து கட்டித்தழுவி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.

தந்தையை இழந்த மகனுக்கு தக்க நஷ்ட ஈட்டை வழங்குமாறு ஹுஸைலைக் கொன்ற நபித்தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகையை அண்ணலாரிடமே திருப்பித்தந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த தொகையை ஏழை முஸ்லிம்களுக்கு உங்கள் கரங்களாலே வழங்கி விடுங்கள்என்று கூறி நபி {ஸல்} அவர்களை நெகிழ வைத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹுதைஃபா (ரலி) அவர்களின் மீதான அன்பும், நேசமும் நபி {ஸல்} அவர்களுக்குப் பல்கிப் பெருகியது.

 

அன்றிலிருந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அந்தரங்கக் காரிய தரிசியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரகசியங்களைக் கட்டிக் காக்கும் உயரிய பணியின் தலைமைச் செயலராக நியமனம் பெற்றார்கள். இந்தச் செய்தியை அறிவிக்கும் நபித்தோழர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இந்த நிகழ்வுக்குப் பின்னர் அவரின் இறுதி காலம் வரை அவரின் வாழ்வு மிகவும் அழகானதாகவே அனைந்திருக்கக் கண்டோம்” என்று. ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…, ஸீரத் இப்னு ஹிஷாம், புகாரி )

2) இரு இளைஞர்களின் மன்னிக்கும் மாண்பு..

أتى شابّان إلى عمر وكان في المجلس، وهما يقودان رجلاً من البادية فأوقفوه أمام عمر بن الخطاب قال عمر: ما هذا، قالوا: يا أمير المؤمنين، هذا قتل أبانا، قال: أقتلت أباهم؟ قال: نعم قتلته، قال كيف قتلتَه؟

قال دخل بجمله في أرضي، فزجرته، فلم ينزجر، فأرسلت عليه حجراً، وقع على رأسه فمات.

قال عمر: القصاص.. قرار لم يكتب. وحكم سديد لا يحتاج مناقشة

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு இரண்டு வாலிபர்கள் நடுத்தர வயதுடைய ஒரு கிராமவாசியை கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் இவர் யார்? என்று கேட்க, இரு வாலிபர்களும் இவர் எங்கள் தந்தையைக் கொன்றுவிட்டார் என்றனர்.

அந்தக் கிராமவாசியிடம் இவ்விரு இளைஞர்களும் சொல்வது உண்மைதானா? என்று கேட்க, அந்த கிராமவாசி ஆம்என்று பதில் கூறினார்.

எப்படிக் கொலை செய்தீர்? ஏன் கொலை செய்தீர்? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

அவர், நான் தூரமான இன்ன பகுதியில் இருந்து ஒட்டகங்களை மேய்ச்சலுக்காக கொண்டு வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்திருக்கும் ஒரு ஒட்டகம் இவ்விரு வாலிபரின் தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து மேய்ந்திருக்கின்றது. நான் அதை கவனிக்கவில்லை.

பின்னர், நான் கவனித்ததும் அதை அங்கிருந்து விரட்ட எத்தனித்தேன். அதே நேரத்தில் இவ்விரு இளைஞர்களின் தந்தையும் விரட்டினார். அது நகர மறுக்கவே பெரிய கல்லொன்றை எடுத்து ஒட்டகத்தின் மீது வீசினார். அந்த இடத்திலேயே அது இறந்து போனது.

அவர் ஒட்டகத்தின் மீது எறிந்த அதே கல்லை எடுத்து அவர் மீது நான் எறிந்தேன். அது அவரின் தலையில் பட்டு அவரும் அதே இடத்தில் இறந்து போனார்என்றார். பெரிய அளவிலான விசாரணைக்கு ஏதும் சந்தர்ப்பம் கிடைக்காததால், குற்றவாளியும் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டதால் உமர் (ரலி) அவர்கள் குற்றம் செய்த அவருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கினார்கள்.

 

قال الرجل: يا أمير المؤمنين: أسألك بالذي قامت به السماوات والأرض، أن تتركني ليلة؛ لأذهب إلى زوجتي وأطفالي في البادية، فأُخبِرُهم بأنك سوف تقتلني، ثم أعود إليك، والله ليس لهم عائل إلا الله ثم أنا، قال عمر: من يكفلك أن تذهب إلى البادية، ثم تعود إليَّ، فسكت الناس جميعاً..

இந்த தீர்ப்பைக் கேட்ட அந்த கிராமவாசி: அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த பூமியும், வானமும் எந்த இறிவனின் ஆற்றலால் நிலை கொண்டிருக்கின்றதோ அந்த இறைவனை முன்னிருத்தி நான் உங்களிடம் கேட்கின்றேன்.

எனக்கு ஒரேயொரு நாள் அவகாசம் கொடுங்கள்! நான் என் மனைவி, மக்களை சந்தித்து விட்டு வருகின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! அல்லாஹ்விற்கு பிறகு அவர்களுக்கு என்னைத்தவிர வேறு யாரும் இல்லை!

நான் அவர்களிடம் சென்று அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான இதர அம்சங்களை செய்து விட்டு, நடந்த நிகழ்வுகளையும் கூறி நான் ஒரு மரண தண்டனை குற்றவாளி என்பதையும் எடுத்துக் கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்று மீண்டும் இங்கு வந்து விடுகிறேன். அதன் பின்னர் எனக்கு தண்டனையை வழங்குங்கள்!என்றார்.

அதற்கு, நீர் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி, நீர் ஊர் சென்று திரும்பும் வரை உம் சார்பாக எவராவது பொறுப்பேற்றுக் கொண்டால் உம்மை நான் அனுப்பி வைக்கின்றேன். நீரும் சென்று விட்டு வரலாம்! என்றார்கள்.

إنهم لا يعرفون اسمه، ولا خيمته، ولا داره، ولا قومه، فكيف يكفلونه، وهي كفالة ليست على عشرة دنانير، ولا على أرض، ولا على ناقة، إنها كفالة على الرقبة أن تُقطع بالسيف.

ومن يعترض على عمر في تطبيق شرع الله؟ ومن يشفع عنده؟ ومن يمكن أن يُفكر في وساطة لديه؟ فسكت الصحابة،

சபை முழுவதும் நீண்ட மவுனம் நிலவியது. அவரும் சபை முழுவதிலும் ஒரு பார்வை பார்த்தார்.

எவராவது நமக்கு பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டாரா? நம் அருமைக் குழந்தைகளையும், மனைவியையும் மரணிப்பதற்கு முன் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடலாமே! எனும் ஏக்கம் அந்தப் பார்வையில் தெரிந்தது.

சபையினரின் அமைதிக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. முன் பின் அறியாதவர், அவரின் பெயரோ, ஊரோ, கோத்திரமோ எதுவும் அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை இது ஒரு புறம்.

இவருக்குப் பதிலாக பொறுப்பேற்க இருப்பது ஒன்றும் தீனாரோ அல்லது திர்ஹம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவே! சென்றவர் திரும்ப வராவிட்டால் போவது உயிர் அல்லவா?

 

وعمر مُتأثر، لأنه وقع في حيرة، هل يُقدم فيقتل هذا الرجل، وأطفاله يموتون جوعاً هناك، أو يتركه فيذهب بلا كفالة، فيضيع دم المقتول؟

سكت الناس، ونكّس عمر رأسه، والتفت إلى الشابين، أتعفوان عنه؟ قالا: لا، من قتل أبانا لا بد أن يُقتل يا أمير المؤمنين، قال عمر: من يكفل هذا أيها الناس، فقام أبو ذر الغفاريّ بشيبته وزهده، وصدقه، قال: يا أمير المؤمنين، أنا أكفله،

உமர் (ரலி) அவர்களுக்கு, அந்த கிராமவாசியின் தவிப்பும் ஏக்கமும் நன்கு புலப்பட்டது. என்ற போதிலும் இறைஷரீஅத் சம்தப்பட்ட விஷயம் அல்லவா? ஆதலால் தலை மீது கைவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள்.

இரண்டு இளைஞர்களையும் நோக்கி இளைஞர்களே! இவரை மன்னிக்க முன்வருகின்றீர்களா? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.

எங்கள் தந்தையைக் கொன்றவனை நாங்கள் மன்னிக்க விரும்பவில்லை, மரண தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும்என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

சுற்றியிருந்த சபையினரை நோக்கிய உமர் (ரலி) அவர்கள் இவருக்கு யாராவது பொறுப்பேற்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அந்த அவையில் நிலவிய நிசப்தத்தை கலைத்தது அந்தக் குரல். ஆம்! நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! அமீருல் முஃமினீன் அவர்களே!என்று ஒலித்தது அந்தக் குரல்.

குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல! அஞ்சாநெஞ்சர் என்று அறியப்படுகிற அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள்.

قال عمر: هو قَتْل، قال: ولو كان قتلاً، قال: أتعرفه؟ قال: ما أعرفه، قال: كيف تكفله؟ قال: رأيت فيه سِمات المؤمنين، فعلمت أنه لم يكذب، وسيأتي إن شاء الله، قال عمر: يا أبا ذرّ، أتظن أنه لو تأخر بعد ثلاث أني تاركك! قال: الله المستعان يا أمير المؤمنين، فذهب الرجل، وأعطاه عمر ثلاث ليالٍ؛ يُهيئ فيها نفسه، ويُودع أطفاله وأهله، وينظر في أمرهم بعده، ثم يأتي، ليقتص منه لأنه قتل

அமீருல் முஃமினீன் அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை நோக்கி அபூதர் அவர்களே! நீங்கள் கொலைப்பழிக்கு பகரம் ஏற்றிருக்கின்றீர்கள் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவ, ஆம் நன்றாகத்தெரியும்!என்று பதில் கூறினார்கள்.

அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற உமர் (ரலி) அவர்களின் வினாவிற்கு, “இல்லை, தெரியாதுஎன்று பதிலளித்தார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் பின்னர் எந்த அடிப்படையில் நீர் பொறுப்பேற்றுக் கொண்டீர்? என்று வினவியதற்கு, “ அமீருல் முஃமினீன் அவர்களே! அவரின் முகத்திலே நான் இறைநம்பிக்கையாளர்களின் ஒளியைப் பார்த்தேன்! அவர் பொய் பேசமாட்டார், இன்ஷாஅல்லாஹ் சொன்னது போன்று ஊர் சென்று திரும்பி வருவார் என்று நான் விளங்கிக் கொண்டேன்என்று அபூதர் (ரலி) பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அவர் வரவில்லையென்றால் உம்மை விட்டு விடுவேன் என்று மட்டும் கருதி விடாதீர்கள்! இறைச்சட்டத்தின் முன் அனைவரும் எனக்கு சமமே!என்று கூறினார்கள். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான் அமீருல் முஃமினீன் அவர்களே! என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மூன்று நாள் அவகாசம் கொடுத்து மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குள் நீர் ஊர் சென்று மதீனாவிற்கு வந்து விடவேண்டும் என்று அந்த கிராமவாசியிடம் சொல்லி ஊர் சென்று வர அனுமதி கொடுத்தார்கள்.

وبعد ثلاث ليالٍ لم ينس عمر الموعد، يَعُدّ الأيام عداً، وفي العصر نادى في المدينة: الصلاة جامعة، فجاء الشابان، واجتمع الناس، وأتى أبو ذر، وجلس أمام عمر، قال عمر: أين الرجل؟ قال: ما أدري يا أمير المؤمنين، وتلفَّت أبو ذر إلى الشمس، وكأنها تمر سريعة على غير عادتها،

وقبل الغروب بلحظات، وإذا بالرجل يأتي، فكبّر عمر، وكبّر المسلمون معه،

அமீருல் முஃமினீன் அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் அஸர் தொழுகையின் நேரம் வந்தது. தொழுகைக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு, இகாமத்தும் கொடுக்கப்பட்டு தொழுகை முடிந்தும் விட்டது. ஆனால், இப்போது வரை அந்த கிராமவாசி மதீனாவுக்கு வரவில்லை.

தொழுகை முடிந்தது. வாதிகளான இரு வாலிபர்களும், அமீருல் முஃமினீன் அவர்களும் மற்றும் எல்லோரும் அங்கே கூடி மஸ்ஜிதுன் நபவியை ஒட்டியிருக்கிற பாதையை பார்த்தபடியே அமர்ந்திருக்கின்றார்கள்.

சற்று நேரத்தில் அபூதர் (ரலி) அங்கே வந்தார்கள். முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அபூதர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் முன் வந்து அமர்ந்தார்கள்.

அபூதர் (ரலி) அவர்களே! நீங்கள் பொறுப்பெடுத்த அம்மனிதரை எங்கே? என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.

சூரியனை திரும்பிப் பார்த்தவாறே, இன்றைக்கு மட்டும் எப்படி வழக்கத்திற்கு மாறாக இந்தச் சூரியன் விரைவாக மறையப்போகிறது என்று நினைத்தவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களைப் போன்று தான் நானும் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!என்றார்கள்.

சூரியன் அஸ்தமிக்கும் சற்றும் முன்பாக, மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி ஓர் உருவம் விரைந்து வருவதை மாநபியின் மஸ்ஜிதில் எதிர்பார்த்து குழுமியிருந்த அனைவரும் கண்டனர்.

அருகில் வர வர அனைவரின் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம், மகிழ்ச்சி, அபூதர் (ரலி) பிழைத்துக் கொண்டார் என்பதற்காக அல்ல. எந்த காரணத்தைக் காட்டி அபூதர் (ரலி) அவருக்காக பொறுப்பேற்றாரோ அதை அவர் உண்மை படுத்தி விட்டார் என்பதற்காக.

மாநபி மஸ்ஜிதின் முன்பிருந்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்க, சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் விண்ணுயர தக்பீர் முழக்கத்தை எழுப்பினர்.

فقال عمر: أيها الرجل أما إنك لو بقيت في باديتك، ما شعرنا بك، وما عرفنا مكانك، قال يا أمير المؤمنين، والله ما عليَّ منك ولكن عليَّ من الذي يعلم السرَّ وأخفى! ها أنا يا أمير المؤمنين، تركت أطفالي كفراخ الطير، لا ماء ولا شجر في البادية، وجئتُ لأُقتل، فوقف عمر وقال للشابين: ماذا تريان؟ قالا وهما يبكيان: عفونا عنه يا أمير المؤمنين لصدقه، قال عمر: الله أكبر، ودموعه تسيل على لحيته

ஆச்சர்யம் விலகாத பார்வையோடு நோக்கிய உமர் (ரலி) அவர்கள் ஓ! கிராமவாசியே! நீர் நினைத்திருந்தால் உம் ஊரிலேயே தங்கியிருக்கலாம், உம் ஊரையோ, உம் வீட்டையோ தெரிந்து கொள்ளாத எங்களை நீர் ஏமாற்றி இருக்கலாம்! ஆனாலும், சொன்ன நேரத்தில் நீர் வந்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டீர்! ஆனந்தப்படுத்தி விட்டீர்!என்று கூறினார்கள்.

அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்கும் எனக்குமான விஷயம் அல்லவே இது? எனக்கும் இரகசியத்தையும், பரகசியத்தையும் அறிந்து கொள்கிற எல்லாம் வல்ல இறைவனோடல்லவா தொடர்புள்ள ஓர் விஷயம் இது!எப்படி ஏமாற்ற முடியும் என்று கூறினார்.

அமீருல் முஃமினீன் அவர்களே! தண்ணீரும், மரமும் இல்லாத ஓர் ஊரிலே எப்படி தவித்துக் கொண்டிருக்கும் ஓர் பறவை தன் குஞ்சுகளுக்கு தன் இறகால் அரவணைத்து இரக்கம் காட்டுமோ அது போன்று அரவணைத்து அன்பு காட்டி. என் குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கின்றேன். எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்!என்று அந்தக் கிராமவாசி கூறினார்.

கண்களில் நீர் ததும்பி வழிந்தோடிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்கள் வாதிகளான இரு இளைஞர்களையும் நோக்கி இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன? கேட்க, பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் விம்மியவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் மன்னித்து விட்டோம்!என்று கூறினார்கள்.

இது கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர்என்று கூறினார்கள். அவர்களின் கண்களில் இருந்து நீர் தாடியை நனைத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.

இன்னொரு அறிவிப்பில் பின்வரும் செய்தி கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

وخشيت أن يقال لقد ذهب الوفاء بالعهد من الناس فسأل عمر بن الخطاب أبو ذر لماذا ضمنته؟؟؟ فقال أبو ذر : خشيت أن يقال لقد ذهب الخير من الناس فوقف عمر وقال للشابين : ماذا تريان؟ قالا وهما يبكيان : عفونا عنه يا أمير المؤمنين لصدقه.. وقالوا نخشى أن يقال لقد ذهب العفو من الناس

திரும்பி வந்து தமக்கு தண்டனை வழங்குமாறு வேண்டி நிற்கும் அந்த இடையரிடம் உமர் (ரலி) அவர்கள் "உமது செயல் வியக்க வைக்கிறது. நீர் விரும்பியிருந்தால் இங்கு வராமல் போயிருக்கலாம். ஆனாலும் நீர் குறித்த நாளில், குறித்த நேரத்தில் வந்து விட்டீர். உம்மை இங்கே இவ்வளவு தூரம் வரவைத்தது எது?" என்று வினவினார்கள்.

அதற்கவர், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டும் விடைபெற்று சிறிது நாட்கள் தான் ஆகிறது) "மக்களிடம் வாக்குறுதியை, ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அழகிய பண்பு இவ்வளவு விரைவில் இல்லாமல் போய் விட்டதே என்று பிறர் பேசும் நிலை வந்து விடுமோ? என்று நான் அஞ்சினேன் இதுவே நான் இங்கு வருவதற்கு காரணம்" என்றார்.

பின்னர், அபூதர் (ரலி) அவர்களை நோக்கிய உமர் (ரலி) அவர்கள் "முன்பின் தெரியாத ஒரு நபருக்கு எதற்காக நீர் உமது உயிரை பணயம் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டீர்?" என்று வினவினார்கள்.

அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டும் விடைபெற்று சிறிது நாட்கள் தான் ஆகிறது) "மக்களிடம் பிறருக்கு உதவும் உயரிய நல்ல பண்பு இவ்வளவு விரைவில் இல்லாமல் போய் விட்டதே என்று பிறர் பேசும் நிலை வந்து விடுமோ? என்று நான் அஞ்சினேன் இதுவே நான் அவருக்கு பொறுப்பேற்பதற்கு காரணம்" என்றார்கள்.

அங்கு நின்றிருந்த இரண்டு வாலிபர்களையும் நோக்கிய உமர் (ரலி) அவர்கள் "இளைஞர்களே! உங்கள் அபிப்பிராயம் என்ன? இப்போது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அவ்விருவரும் அழுதவர்களாக "நாங்கள் இருவரும் எங்களது தந்தையை கொலை செய்த அந்த மனிதரை மன்னித்து விட்டோம்" அவரிடம் காணப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் உன்னத பண்பை கொண்டிருப்பதற்காக" மேலும்,  (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டும் விடைபெற்று சிறிது நாட்கள் தான் ஆகிறது) "மக்களிடம் பிறரை மன்னித்து அரவணைக்கும்  பண்பு இவ்வளவு விரைவில் அருகிப் போய் விட்டதே என்று பிறர் பேசும் நிலை வந்து விடுமோ? என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்றார்கள்.

قال عمر : الله أكبر ، ودموعه تسيل على لحيته ..... جزاكما الله خيراً أيها الشابان على عفوكما ، وجزاك الله خيراً يا أبا ‏ذرّ يوم فرّجت عن هذا الرجل كربته ، وجزاك الله خيراً أيها الرجل لصدقك ووفائك...

 

(فذكرها الإتليدي في بداية كتابه: (نوادر الخلفاء) المشهور باسم: (إعلام الناس بما وقع للبرامكة مع بني العباس ص11). وذكرها لويس شيخو اليسوعي مؤسس مجلة المشرق في كتابه: (مجاني الأدب في حدائق العرب 4/230).

இந்த நால்வரின் நற்பண்புகளைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் "உரக்க தக்பீர் கூறி தாடி நனையுமளவிற்கு அழுதவர்களாக,  ஓ இளைஞர்களே! உங்களுடைய மன்னிக்கும் மனப்பான்மைக்காக அல்லாஹ் உங்கள் இருவருக்கும் நற்கூலி வழங்கியருள்வானாக! ஓ அபூதர்ரே! இன்றைய நாளில் நீர் சிரமத்தில் இருந்த ஒருவரின் சிரமத்தை துடைத்தெறிந்ததற்காக மறுமையில் உமக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! ஓ இடையரே! உம்முடைய உயரிய உண்மையான நடத்தைக்காக அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!" என்று கூறினார்கள். ( நூல்: மஜ்ஜானில் அதப் ஃபீ ஹதாயிக்கில் அரப் பாகம்: 4, பக்கம் 230, நவாதிருல் ஃகுலஃபாவு பக்கம்: 11 - இந்தச் சம்பவம் மேற்கண்ட இரு நூல்களைத் தவிர எந்தவொரு வரலாற்று நூலிலும் இடம் பெறவில்லை. 

எனினும் உமர் (ரலி) அபூதர் (ரலி) மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் எவ்வித இழப்பையும், ஏற்படுத்தாததோடு மார்க்க அம்சங்களில் எந்த ஒன்றோடும் முரண்படாததால் இந்தச் செய்தியை ஒரு வரலாற்று நிகழ்வாக பார்ப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என சமகாலத்து அறிஞர்கள் ஆய்வு செய்து சான்றளிக்கின்றார்கள். )

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் "மன்னிக்கும் மனம்" தானே முளைவிடும்.

மன்னிப்பு கடந்தகாலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தை ஆனந்தமாக மாற்றும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் மன்னிப்பதுதான் போரை விட வீரமானது. போர் உடல்களைத் தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு தான் மனதையே வெற்றி கொள்ளும்.

ஆகவே தான் மாநபி (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கை முழுவதும் மன்னிப்பின் தடங்களை பதிவு செய்தார்கள்.

ஆகவே, மக்களை மன்னித்து வாழ்வோம்! மாண்பாளன் அல்லாஹ்வின் மகத்தான பொருத்தத்தைப் பெறுவோம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் மன்னிக்கும் மனப்பான்மையை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment: