Thursday, 26 February 2026

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 10. அழைப்புப் பணியின் மகத்துவமும்... அழைப்பாளனின் பண்புகளும்...

 

அருள் மறைச்சாரல் - தராவீஹ் சிந்தனை:- 10.

அழைப்புப் பணியின் மகத்துவமும்...

அழைப்பாளனின் பண்புகளும்...



பத்தாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஒன்பதாம் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், இன்றைய நாளில் நாம் செய்த தான தர்மங்களையும், இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்கி வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து வணக்க, வழிபாடுகளில் இன்பத்தோடு ஈடுபட அருள்புரிவானாக! ஆமீன்!

இன்றைய தொழுகையில் சூரா ஹூதின் 84 வசனங்களும், அழகிய வரலாறு என அல்லாஹ் வர்ணித்து கூறும் சூரா யூசுஃப்பும், சூரா அர் ரஅதின் 18 வசனங்களும் மொத்தமாக 213 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் பல்வேறு இடங்களில் ஐந்து நபிமார்கள் நபி ஹூத் (அலை), நபி ஸாலிஹ் (அலை), நபி ஷுஐபு (அலை), நபி லூத் (அலை), நபி யூசுஃப் (அலை) ஆகியோர் செய்த அழைப்புப் பணி குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சிலாகித்து கூறுகின்றான்.

தாம் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்டு வந்த இரண்டு இளைஞர்களிடம் கனவுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்பாக ஏக இறைவனின் ஏகத்துவ அழைப்பை அந்த இரண்டு இளைஞர்களிடமும் நபி யூசுஃப் அலை அவர்கள் விடுத்த முறைமையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எடுத்துக் கூறி, அழைப்புப் பணிக்கு நபி யூசுஃப் அலை அவர்கள் அளித்த முன்னுரிமையை அல்லாஹ் பதிவு செய்துள்ளான்.

37 வது வசனம் முதல் 40 வது வசனங்கள் வரை நபி யூசுஃப் அலை அவர்களின் ஏகத்துவ பிரச்சாரம் இடம் பெற்றுள்ளது.

یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟

சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா? ( அல்குர்ஆன்: 12: 39 )

தமக்கு கிடைத்த சிறிய இடைவெளியில் கூட இறைவனை அறிமுகப் படுத்திய நபி யூசுஃப் அலை அவர்களின் அழைப்புப் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

திருக்குர்ஆனில் அழைப்புப் பணி குறித்து, “உத்வு இலா ஸபீலி ரப்பிக்”, “வலா தல்பிஸுல் ஹக்க பில் பாதில்”, “தஃமுரூன பில் மஃரூஃபி வதன்ஹவ்ன அனில் முன்கர்”, யஃமுரூன பில் மஃரூஃபி வ யன்ஹவ்ன அனில் முன்கரி" இகாமத்துத் தீன்எனப் பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

அழைப்புப் பணியில் அண்ணல் நபி ..

நபி அவர்களின் அழைப்புப் பணி பல்வேறு வடிவங்களில், பல்வேறு கோணங்களில் அமைந்திருந்ததை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

 

மதி நுட்பமான முறையில் அழைப்புப் பணியை மேற்கொண்டு நபி அவர்கள் இந்த சன்மார்க்கத்தை ஒருவர் இருவரில் தொடங்கி ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் மனிதர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார்கள். 23 ஆண்டுகளில்.

சில போது நபி அவர்களின் போதனை , சில போது நபி அவர்களின் நற்பண்பு, சில போது நபி அவர்களின் கனிவு, சில போது நபி அவர்களின் மன்னிக்கும் குணம், சில போது நபி அவர்களின் தயாளம் என்று பல்வேறு காரணங்களால் இஸ்லாம் அன்றைய உலகின் மக்களைக் கவர்ந்தது. இதயத்தில் இடம் பெற்றது.

அல்லாஹ்வும் அழைப்புப் பணிக்கான பல்வேறு அம்சங்களை அல்குர்ஆனில் அப்படித் தானே அடையாளப் படுத்துகிறான்.

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். ( அல்குர்ஆன்: 16: 125 )

1. சோபனமும் நன்மாராயமும் கூறுவது.

2. அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது.

3. மதிநுட்பமாகவும், விவேகமாகவும் செயல் படுவது.

4.அழகிய உபதேசங்களை கூறுவது.

5. மிக அழகிய முறையில் தர்க்கம் செய்வது.

6. கடந்த கால மக்களின் வரலாறுகளை நினைவு படுத்துவது.

7. நற்பண்புகளால் மக்களை கவர்வது.

என அழைப்புப் பணியை மேற்கொள்ள பல்வேறு அம்சங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த காலகட்டத்திற்கு எது பயன்படுமோ அவைகளை பயன்படுத்தி அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

நபி அவர்கள் ஸுமாமாவை வென்றது ஒரு வகை தஃவா என்றால், அதீ இப்னு ஹாத்திமை வென்றது வேறு வகை தஃவா இருவரும் இரு தேசத்தின் மன்னர்களாக இருந்தவர்கள்.

நபி அவர்கள் இக்ரிமா இப்னு அபீ ஜஹ்லை வென்றெடுத்தது ஒரு வகை தஃவா என்றால், அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத் ஆகியோரை வென்றெடுத்தது வேறு வகை தஃவா. இம்மூவரும் இஸ்லாத்தை தகர்க்க வேண்டும் என்று சதா சிந்தித்தவர்கள். அதற்காக உழைத்தவர்கள்.

 

நபி அவர்கள் ஹிந்தாவையும் மன்னித்தார்கள், வஹ்ஷியையும் மன்னித்தார்கள், பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசியையும் மன்னித்தார்கள், சாவி தர மறுத்த உஸ்மான் இப்னு தல்ஹாவையும் மன்னித்தார்கள் மன்னிப்பு ஒன்று தான். ஆனால் மன்னிப்பின் வடிவங்கள் வெவ்வேறு. ஒவ்வொன்றும் ஒரு வகை தஃவா.

அபூதர் கிஃபாரி, வாயில் இப்னு ஹுஜ்ர், ஜரீர் இப்னு அப்துல்லாஹ், ஆகியோரின் வருகையின் போது மாநபி அவர்கள் வெளிப்படுத்திய நற்பண்புகள் வெவ்வேறு. பெருங்கொண்ட சமூகத்தின் பிரதிநிதிகள் இவர்கள்.

ஸகீஃப் கோத்திரம், தவ்ஸ் கோத்திரம் இருவேறு கோத்திரத்தாரின் வேண்டுகோள்களுக்கு மாநபி அவர்கள் செவி சாய்த்த விதம் வெவ்வேறு. 

ஆகவே நபி அவர்கள் தஃவா அழைப்புப் பணிக்கு என்று பல்வேறு ஹிக்மத்களை கையாண்டார்கள். முடிவில் இஸ்லாத்தை அங்கு கொண்டு போய் சேர்க்க முடிந்தது. பல்வேறு பயன்களை பெறவும் முடிந்தது.

அழைப்புப் பணியில் உச்சத்தை தொட்ட நபித்தோழர்கள்!!

அரஃபாப் பெருவெளியில் மாநபி அவர்கள் இட்ட கட்டளை "இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எடுத்துக் கூறிவிடுங்கள்!

இன்னொரு அறிவிப்பில்... என்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதை எத்தி வைத்து விடுங்கள்!இந்த கட்டளை மாநபித்தோழர்களை இஸ்லாமிய உலகிற்கு புதியதோர் தியாகத்தை அறிமுகம் செய்வதற்கு அழைத்துச் சென்றது.

ஆம்! அல்லாஹ்வின் கட்டளையும், மாநபி அவர்களின் ஆணையும் மாநபித் தோழர்களை சில போது உணர்வுகளைத் தியாகம் செய்யத் தூண்டியது. உணர்வுகளைத் தியாகம் செய்தார்கள்.

சில போது உறவுகளைத் தியாகம் செய்யத் தூண்டியது. உறவுகளைத் தியாகம் செய்தார்கள்.

சில போது செல்வங்களைத் தியாகம் செய்யத் தூண்டியது. செல்வங்களைத் தியாகம் செய்தார்கள்.

சில போது வீடு, வாசல், சொத்து சுகங்களைத் தியாகம் செய்யத் தூண்டியது. அப்படியே தியாகம் செய்தார்கள்.

ஏன்? சில போது உயிர்களைக் கூட தியாகம் செய்யத் தூண்டியது. உயிர்களை கூட தியாகம் செய்தார்கள்.

ஆனால், இப்போது அவர்களுக்கு முன்னால் இடப்பட்ட கட்டளை நன்மைகளைத் தியாகம் செய்யுமாறுத் தூண்டியதுஅல்லாஹ்வின் கட்டளை, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆணை அது எவைகளை இழக்கத் தூண்டினாலும் கொஞ்சம் கூட தயக்கமின்றி தியாகம் செய்யத் துணிந்தவர் நபித் தோழர்கள், இப்போதும் அதை செயல் படுத்த ஆயத்தமானார்கள்.

 

ஆம்! அல்லாஹ்வின் ஆலயமாம் திருக் கஅபாவில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்கும் கிடைக்கிற நன்மைகளை, மாநபி ப் பள்ளியில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்கும் கிடைக்கிற நன்மைகளை, அவர்கள் பெரிதும் விரும்பிய நபி அவர்களின் அண்மையை, நெருக்கத்தை, ஆண்டு தோறும் ஹஜ், உம்ரா செய்கிற வாய்ப்பை இன்னும் இதர நன்மைகளை தியாகம் செய்ய துணிந்தார்கள்.

எதற்காக? உங்களுக்கும், எனக்கும் இன்னும் கறுப்பருக்கும், வெள்ளையருக்கும் ஈமான் கிடைக்க வேண்டும், இஸ்லாமிய வாழ்க்கை நெறி கிடைக்க வேண்டும் என்பதற்காக.

அன்று அவர்கள் இந்த தியாகம் செய்ய துணிந்திருக்கா விட்டால் உலகின் 232 நாடுகளில் 180 கோடி முதல் 240 கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் வாழ்கின்றார்கள். உலகில் நடமாடும் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்கிற இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வரலாறு இப்படிச் சொல்கிறது...

من أكثر من مائة ألف صحابي حضروا حجة الوداع مع النبي صلى الله عليه وسلم، لم يدفن في المدينة المنورة منهم إلا عشرة آلاف، فأين ذهب الباقون؟

لقد فهموا معاني الشهادة 

{لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ} [البقرة: 143]،

 ومعنى تبليغ الرسالة «بلغوا عني ولو آية»، ومعنى الأمر الإلهي في الدعوة إلى الإسلام 

{ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ} [النحل: 125]، 

فانطلقوا في الآفاق ينشرون دعوة الله ويبلغونها للعالمين.- أكثر من ثمانين بالمئة من المسلمين اليوم ليسوا من العرب، فمن الذي حمل لهؤلاء الدِّين من مكة والمدينة وطار به إلى أندونيسيا والصين والهند شرقاً وفرنسا وبريطانيا وكندا غرباً؟. إن أجدادك قد فعلوا ذلك عندما فهموا قول الله

{وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ} [فصلت: 33

فذهبوا إلى تلك البلاد تجاراً وصنَّاعاً وفاتحين، والآن جاء دوري ودورك. إن الدعوة إلى الإسلام هي مسؤولية المسلمين، وسيسألهم الله عنها يوم القيامة: هل بلَّغتم رسالتي ؟ 

{فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ} [الأعراف: 6].

ஆம்! மாநபி அவர்களின் இறுதிப் பேருரையில், அரஃபாஃப் பெருவெளியில் பங்கெடுத்த நபித்தோழர்களின் எண்ணிக்கை 1,24,000 ஆனால், மதீனா ஜன்னத்துல் பகீவு மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 10000 தான்.

ஷாம், இராக், ஸிரியா, ஃபலஸ்தீன், பஸரா, திமிஷ்க், எகிப்து ஆகிய பகுதிகளில் சுமார் 30,000 நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்படிருக்கின்றார்கள்.

மீதமுள்ள நபித்தோழர்கள் எங்கே சென்றார்கள்? என்னவானார்கள்? அவர்களின் அடக்கஸ்தலம் எங்கே இருக்கின்றது? இப்படியான ஒரு தேடலை முன் வைத்தோமானால் விடை இப்படித் தான் கிடைக்கும்.

ஆம்! அரஃபாப் பெருவெளியின் உரை முடிந்து அடுத்த நாள் ஹஜ்ஜுடைய கிரியைகள் முடிந்ததும் தத்தமது வாகனங்கள் எத்திசை நோக்கி நின்றனவோ அத்திசையில் வாகனத்தை செலுத்தினார்கள்.

உலகின் எட்டு திசைகளுக்கும் இஸ்லாம் என்கிற ஏக இறைவனின் ஏகத்துவ ஜோதியை நிரப்பினார்கள்.

நமது இந்திய திரு நாட்டின் தமிழகத்திற்கும் அந்த சத்திய நபித்தோழர்கள் அந்த ஏகத்துவ ஜோதியை எடுத்து வர மறக்கவில்லை.

அதன் ஓர் அடையாளம் தான் கோவளம் கடற்கரையில் அடங்கப்ப பட்டிருக்கும் ஸைய்யிதினா தமீமுல் அன்ஸாரி (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைப்புப் பணியில் காட்டிய உறுதி, அபூபக்ர் (ரலி) அஸ்அத் இப்னு ஸர்ராரா (ரலி), முஸ்அப் இப்னு உமைர் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ (ரலி), அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) காலித் இப்னு வலீத் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அழைப்புப் பணியில் காட்டிய ஆர்வம், அல்லாஹ் அழைப்புப் பணிக்கு வழங்குகின்ற சன்மானங்கள் இவைகள் தாம் அந்த சத்திய நபித்தோழர்களை இவ்வாறான தியாகத்தை மேற்கொள்ளத் தூண்டியது.

அழைப்புப் பணி காலத்தின் கட்டாயம்!

اُدْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125: 16 النحل).

‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அல்குர்ஆன்: 16: 125 ).

அழைப்புப் பணி செய்பவரே முஃமின் ஆவார்!

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنْ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ (مسلم).

 

எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள், அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லைஎன நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).

அழைப்புப் பணி தஃவா செய்வது?

அழைப்புப் பணி தஃவா செய்வது பர்ழுஅய்ன்அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். 

மற்றும் சில அறிஞர்கள் இல்லை இது பர்ழுகிஃபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்என்பர்.

தஃவா - அழைப்பு ப்பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாகவும், சிலபோது பர்ழுகிபாயாவாகவும் உள்ளது. 

உதாரணமாக, ஒரு இடத்தில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. 

இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.

மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா - அழைப்புப் பணி பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.

எது எப்படியிருப்பினும் தஃவா அழைப்புப் பணி செய்வது பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. 

நபி அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை இன்று ஓதப்பட்ட சூறா யூசுப்பின் 108-வது வசனம் உறுதி படுத்துகிறது.

قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ( 108: 12 يوسف)

 

‘(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (அல்குர்ஆன்: 12: 108 )

அழைப்பாளரின் பண்புகளும்.. மாண்பும்!

செயலுடன் கூடிய அழகான வார்த்தை:

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ (33: 41 فصلت)

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்)?” (அல்குர்ஆன்: 41: 33 )

நல்வாழ்த்துக்கு சொந்தக்காரர்!

عن بْنِ مِلْحَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ …إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَيَرْجِعُ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي مِنْ سُنَّتِي (سنن الترمذي).

நிச்சயமாக மார்க்கம் (இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை மறுபடியும் அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில் எனக்குப் பின் எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை சீராக்குபவர்கள் தான் அவர்கள்என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மில்ஹா (ரலி) தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார். ( நூல்: திர்மிதி ).

செவ்வகை ஒட்டகங்களை விட சிறப்பானதாகும்:

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ …… فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ (البخاري).

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்என நபி அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள். ( நூல்: புகாரி ).

கண்டும் காணாமல் இருப்பது தகாத செயல் ஆகும்!

عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَثَلُ القَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالوَاقِعِ فِيهَا، كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ المَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ، فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا، فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا، وَنَجَوْا جَمِيعًا "

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )

தன்னால் முடிந்தவரை அழைப்புப்பணி....

தஃவா - அழைப்புப்பணி என்றதும் அதற்கு பெரிய அளவிற்கு முயற்சிகள் செய்ய வேண்டும், பயான் செய்ய வேண்டும், என்றே நம்மில் பலர் எண்ணுகின்றோம்.

ஆனால், தன்னால் முடிந்தவரை அழைப்புப்பணி செய்பவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது கூட அழைப்புப் பணி தான் என்று அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இரண்டு சம்பவங்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன.

وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ (13) إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ (14) قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنْزَلَ الرَّحْمَنُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ (15) قَالُوا رَبُّنَا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ (16) وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ (17) قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ (18) قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ أَئِنْ ذُكِّرْتُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (19) وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ (20) اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ (21) وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ (22) أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ (23) إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ (24) إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ (25) قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ (27)

ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.

அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். 

அவர் வந்து தமது சமூகத்தவர்களைப் பார்த்து;“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் எந்த கூலியும் கேட்கவில்லைஎன்றார். அப்போது ஊர்மக்கள் நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.

என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இல்லாத இந்த தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்என்றார். ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டதுஇப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். ( அல்குர்ஆன்: 36: 13-29 )

(அவருடைய பெயரை ஹபீபுன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகளின் அறிஞர்கள் கூறுகின்றனர்.) 

இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற ஹபீபுன்னஜ்ஜார் அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.

நபி மூஸா (அலை) ஃபிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது ஃபிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். 

وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَنْ يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَنْ يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ (26) وَقَالَ مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ (27) وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ وَإِنْ يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِنْ يَكُ صَادِقًا يُصِبْكُمْ بَعْضُ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ (28)

மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன், ஒரு கட்டத்தில் நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்என்றான்.

இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?" என்று கேட்டார். ( அல்குர்ஆன்: 40: 28-44 )

தொடர்ந்து ஃபிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் இருந்து ஃபிர்அவ்னை பின் வாங்கச் செய்தார் என்று அல்லாஹ் மேற்சொன்ன நிகழ்வில் குறிப்பிடுகின்றான்.

சமூகத்தில் யாரேனும் ஒருவர் ஒரு ஆலிமோ, ஒரு ஜமாஅத் நிர்வாகமோ, மஹல்லா இளைஞர்களோ தஃவா - அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக நம்மில் பலரும் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, நிகழ்ச்சியைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அழைப்புப் பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பளித்து, பக்கபலமாக இருப்பது போன்ற அனைத்து முயற்சிகளும் தஃவா - அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் இடம் பெறக் கூடியவையே.

ஆரம்பத்திலேயே வெற்றி கிடைத்திடாது...

அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா (அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான வழிகாட்டுதலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்த ஹாரூன் (அலை) அவர்கள்...

وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِنْ قَبْلُ يَاقَوْمِ إِنَّمَا فُتِنْتُمْ بِهِ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي

இதற்கு முன்னதாகவே ஹாரூன்(அலை) அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே! இச்சிலையை வணங்கி நீங்கள் வழி தப்பி விட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் அருளாளனாகும். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்.” ( அல்குர்ஆன்: 20: 90 )

قَالَ يَاهَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي

காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். தூர் சீனா மலையில் இருந்து கோபத்தோடு திரும்பி வந்த மூஸா(அலை) அவர்கள் ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்ய முற்பட்டீரா?” (20: 92,94) என்று கண்டித்துக்கூறி அவரின் தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்தார். அப்போது ஹாரூன் அலை அவர்கள் மூஸா அலை அவர்களிடம்..

قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ وَلَا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னைப் பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) என்னுடைய விரோதிகள் சிரிக்குமாறு செய்துவிடாதீர். இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னைச் சேர்த்து விடாதீர் என்று கூறினார். ( அல்குர்ஆன்: 7:150 )

எனவே, தவறான திசையில் சென்று கொண்டிருப்பவர்களை நேர் வழியின் பால் கொண்டு வருகிற முயற்சியில் சில போது தொய்வு ஏற்படும். ஆனால், அதுவே இறுதியானது என்று நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. அல்லாஹ் அந்த மக்களை நேர்வழியில் செலுத்துவான் என்ற நம்பிக்கையில் நம் தஃவா அழைப்புப் பணியை தொடர வேண்டும்.

No comments:

Post a Comment