Thursday, 27 June 2013


வரலாற்றை வாசிப்போம்! வரலாறு படைப்போம்!

முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க உதவியாய் இருக்கின்ற மூன்றாவது காரணி
            மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வரலாற்றை உண்மை வடிவில் வெளிக்கொணர்வதின் மூலமே சாத்தியமாகும்.
            தனது சொந்த வரலாற்றைத் தெரிந்திடாத சமுதாயத்தை அழித்திடுவது மிகவும் எளிது என்பார் மாலிக் அல் ஷாபாஸ் எனும் பேரரிஞர்.
            ஒரு நிகழ்வு நடந்த காலத்தையும், அது பற்றிய விரிவான செய்திகளையும் எடுத்துச் சொல்வதற்கேவரலாறுஎனப்படும்.
            இதற்கு அரபியில்தாரீக்என்பார்கள்
            வரலாறுகள் சொல்லப்படுவதின் நோக்கம்
            முந்திய சமுதாயத்தினர் மற்றும் நபிமார்களின் நிலைமைகள், பண்பாடுகள், விழுமியங்கள், கலைகள், வாழ்க்கை முறைகள், உலகம் மற்றும் மார்க்கம் சம்பந்தமான அறிவுரைகளை அள்ளித்தரும் பயன்மிகு கலையே வரலாறு எனப்படும்.
நூல்: தத்கிரயே ஃபுனூன் பக்கம் - 7
            இஸ்லாத்திற்கும் வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.ஏனெனில் அல்குர்ஆனில் வரலாறுகளைக் கூறும் வசனங்கள் சுமார் 1000 இடம்பெற்றிருக்கின்றன.
            அல்லாஹ் கூறுகிறான்:
            (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகின்றோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைக்கின்றது.இறை நம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.
அல் குர் ஆன்: 11:120
            மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
            (நபியே) மக்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் அவர்களால் சிந்தித்து உரைக்கூடும்.
அல் குர் ஆன்: 7:176
மேற்கூறப்பட்ட இருவசனங்களும் வரலாற்றை ஒரு மனிதன் அறிந்து கொள்வதால் எற்படும் விளைவுகள், மாற்றங்கள் குறித்துப் பேசுவதை உணர்கிறோம்.
            எப்படியான வரலாற்றுக்கொல்லாம் சொந்தமான ஓர் சமூகம் இன்று பெருமையிழந்து காணப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது.
            இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாக அறிஞர் பெருமக்கள் மூன்று செய்திகளை மையப்படுத்துகின்றனர்.

1.      தாத்தாரியாக்கள் படையெடுப்பு
2.      சிலுவை யுத்தங்கள்
3.      ஸ்பெயினின் வீழ்ச்சி

v தாத்தாரியாக்களின் படையெடுப்பு முஸ்லிம்களின் நிலப்பரப்பையும், தலைமைபீடத்தையும் பறித்தது.
v சிலுவை யுத்தங்கள் இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைத்தது.
v ஸ்பெயின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் கல்வி, வரலாறு, பண்பாடு, ஆளுமைத்திறன் அனைத்தையும் அழித்தது.
எனவே, கடந்த கால வரலாற்றை வாசிக்கும் போது எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் உத்வேகம் இந்த சமூகத்திற்கு ஏற்படும்
ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், 160 கோடி முஸ்லீம்கள் என இன்றைய இஸ்லாமியர்களின் வளர்ச்சி மிளிர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்..
இப்பெருமைக்கு வித்திட்ட நிகழ்வையும், வித்திட்டவரையும், இறை நம்பிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அன்றொரு நாள்,

மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்த அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாரின் முக்கியப்பிரதி நிதிகள் 15 பேர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய தோடல்லாமல் தங்களுக்கு சன் மார்க்கத்தை கற்றுத்தர ஒருவரை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு வேண்டி நின்றனர்.
            தம் அருகே அமர்ந்திருந்த நபித்தோழர்களை நன்கு உற்று நோக்கிய நபி (ஸல்) அவர்கள் முஸப் இப்னு உமை (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள்.
மறுவருடம் மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 80ஆக உயர்ந்தது.முஸ் அப் இப்னு உமை (ரலி) அவர்களின் கண்ணியமும் உயர்ந்தது. தனிமையில் நபிகளாரை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற முஸ் அப் (ரலி) அவர்கள் இங்கிருந்து (மக்காவில் கஷ்டப்படுவைவிட மதீனாவில் வந்து ஏகத்துவப்பணியை தலை ஏற்று நடத்துமாறும், தாம் அதற்கு உறுதுணையாய் இருப்பதாகவும் கூறி மதீனாவிற்கு அழைத்தார்கள். பின்பு மதீனா சென்று அங்குள்ள பிரமுகர்களைச் சந்தித்து மாநபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுங்கள் என முஸ் அப் (ரலி) அவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்தார்கள்.
மறு ஆண்டு மதீனாவிலிருந்து வந்திருந்தவர்களின் எண்ணிக்கை முன்பைவிட இன்னும் கூடுதலாக இருந்தது.
அத்தோடு வந்திருந்தவர்களும், பிரமுகர்களும் மாநபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்ததோடு மாத்திரமில்லாமல், சத்திய தீனிற்கும், மாநபி (ஸல்) அவர்களுக்கும் என்னென்றும் பக்க பலமாக இருப்பதாக உடன்படிக்கையும் செய்து கொடுத்தார்கள்.அதன் பின்னர்தான் வல்லோனின் கட்டளைப்படி ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்டது. மாநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பிரவேசமானார்கள்.
அன்றிலிருந்து தான் இஸ்லாம் தன் ஒளிப்பிரவாகத்தை உலகெங்கும் பாய்ச்சியது.
இந்த உல்கெங்கும் இஸ்லாம் தன் ஆளுமையில் வழிநடத்திட வாய்ப்பை ஏர்படுத்திக் கொடுத்தவர் முஸ் அப் இப்னு உமை (ரலி) அவர்கள்.
            நபிகளாரின் தலைமையில் பல்வேறு வெற்றிகள் இறுதியாக ஹிஜ்ரி 8 ரமலான் பிறை 20ல் மக்கா வெற்றியுடன் இஸ்லாமிய ஆட்சி நபிகளாரின் தலைமையில் அமையப்பெற்றது.
ஹிஜிரி 11 ரபீயுல் அவ்வல் 12 திங்கட்கிழமை (கி.பி. 632) லுஹா நேரத்தில் மாநபி (ஸல்) அவர்களின் மறைவு இஸ்லாமிய உலகை அதிர்யுறச் செய்தது.
ஹிஜ்ரி 11 ரபீயுல் அவ்வல் பிறை 13 - 17 முதல் (கி.பி. 632) ஹிஜ்ரி 40 ரமளான் பிறை 17 வரை (கி.பி.661) நேர்வழி நின்ற நான்கு கலீபாக்களின் ஆட்சியும்,
            அதன் பின்னர் அமீர் முஆவியா (ரலி) அவர்கள் தலைமையாகவும், திமிஷிக் (டமாஸ்கஸ்)கை தலைநகரமாகக் கொண்டு ஹிஜ்ரி 41 (கி.பி. 661) முதல் ஹிஜ்ரி 132 (கி.பி.750) வரை 91 வருடங்கள் உமையாக்களின் ஆட்சியும்.
            ஹிஜ்ரி 132 (கி.பி. 750) முதல் பக்தாத்தை தலை நகரமாகக் கொண்டு (முதல் கலீஃபா அபுல் அப்பாஸ் ஸ்ஃபாஹ்) ஹிஜ்ரி 656 (கி.பி. 1258) வரை 524 வருடங்கள் அப்பாஸியாக்களின் ஆட்சியும் ஹிஜ்ரி 699 (கி.பி.1300) முதல் உஸ்மான் கான் காஜி தலைமையில் துவங்கப்பட்ட உஸ்மானியப் பேரரசின் ஆட்சிக்காலம் ஹிஜ்ரி 1341 (கி.பி. 1922) வரை நீடித்தது.
நூல்: ஓர் உலகளாவிய வரலாறு பக்கம் 94-110
இவ்வாறு உலகெங்கும் இஸ்லாமியர்கள் ஆளுமை புரிந்ததை வரலாற்றை வாசிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவும், இஸ்லாமியர்களும்..
1.      ஹிஜ்ரி 15 (கி.பி.636)ம் ஆண்டில் உமர் (ரலி) அவர்களால் அனுப்பப்பட்டதளபதி ஹகம் பின் ஆஸ் (ரலி) அவர்கள் இந்தியாவின் குஜராத்தையும், புரோச்சையும் வெற்றி கொண்டார்கள்.
2.      ஹிஜ்ரி 96 (கி.பி. 711)ம் ஆண்டு முஹம்மத் பின் காஸிம் அவர்கள் ராஜா தாஹிரை தோற்கடித்துசிந்துமற்றும்முல்தானைவெற்றி கொண்டார்.
3.      ஹிஜ்ரி 107 (கி.பி. 725)ம் ஆண்டு ஹிஷாம் பின் அப்துல் மாலிக் உமையாக்களின் ஆட்சிக் காலத்தில் ஜூனைத் பின் அப்துர் ரஹ்மான் முர்ரீ அவர்கள்மால்வாமற்றும் புரோச்ஆகிய இரு பெரும் நிலப்பரப்பை வெற்றிக் கொண்டார்கள்.
4.      ஹிஜ்ரி 160 (கி.பி. 776) ஆண்டு அப்பாஸிய கலீஃபாவான மஹ்தியின் உத்தரவின் பேரில் அப்துல் மலிக் பின் ஷிஹாய் அவர்கள் குஜராத்தில்பார்பத்எனும் நகரத்தை வெற்றி கொண்டார். தபவுத் தாபியீன்களில் ஒருவரான ரபீஉபின் ஸபீஹ் (ரஹ்) அவர்களும் இதில் பங்கேற்றார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் இன்றும் குஜராத்தில் உள்ளது.
5.      ஹிஜ்ரி 387 (கி.பி. 997) முதல் ஹிஜ்ரி 421 (கி,பி.1030) வரை ஆட்சி புரிந்த மஹ்மூத் கஜ்னவீ ஹிஜ்ரி 391 (கி.பி. 1001) முதல் ஹிஜ்ரி 418 (கி.பி. 1027)ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்லாகூர், முல்தான், பெஷாவர், ராவல் பிண்டி, நகர் கோட்காங்டா, கன்னோஜ், மதுரா, சோம்நாத்ஆகிய பகுதிகளை கைப்பற்ற பலதாக்குதல்களை மேற்கொண்டார். இறுதியில் பஞ்சாப்பும் சேர்ந்து முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்வந்தது.
6.      ஹிஜ்ரி 567 (கி.பி.1171) முதல் ஹிஜ்ரி 602 (கி.பி. 1206) வரை ஆட்சி புரிந்த முஹம்மத் கோரி எனும் கஜ்னவீய்யாக்களின் ஆளுநர் ஹிஜ்ரி 589 (கி.பி. 1193)ம் ஆண்டு ஜெய்சந்தை தோற்கடித்துடெல்லி, அஜ்மீர், கன்னோஜ்ஆகிய இடங்களில் இஸ்லாமியக் கொடியை பறக்க விட்டார்.
7.      அடிமை வம்சத்து மன்னர்களின் ஆட்சி (துருக்கி வம்சத்து குத்புத்தீன் ஐபக் - முஹம்மத் கோரி உருவாக்கிய ஆட்சிக்கே அடிமை வம்சத்து மன்னர்களின் ஆட்சி என்ப்படும்) 85 வருடங்கள் ஹிஜ்ரி 602 (கி.பி. 1206) முதல் 689 (கி.பி. 1290) வரை நடைபெற்றது. இதில் முதலாவது ஆட்சியாளர் குத்புத்தீன் ஐபக் அவர்கள்தான் டெல்லி ஜாமி மஸ்ஜிதையும், குதுப் மினாரையும் கட்டியவர்.
8.      ஹிஜ்ரி 689 (கி.பி. 1290) முதல் ஹிஜ்ரி 720 (கி.பி. 1320) வரை 33 வருடங்கள்கில்ஜீ மன்னர்களின் ஆட்சிநடைபெற்றது. இவர்களின் ஆட்சிக்கலத்தில்தான் குடிமக்களை நல்ல நிலையில் வைப்பது, போதையூட்டும் பெருட்கள் மீது கண்காணிப்பு மற்றும் விலைவாசியை குறைத்தது ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அரபீ, பார்ஸீ, துருக்கி, அப்கானி, தாத்தாரி, சீனம், இந்தி ஆகிய மொழிகள் கலந்து உர்தூ எனும் புதுமொழி உருவானது.
9.      ஹிஜ்ரி 720 (கி.பி. 1320) முதல் 815 (கி.பி. 1413) வரை துக்ளக் மன்னர்களின் ஆட்சி (கில்ஜியர்களுக்குப் பின் இந்தியாவில் குடியிருந்த துருக்கித் தலைவர்களுக்குதுக்ளக் மன்னர்கள்என்று பெயரிடப்பட்டது) 93 வருடங்கள் நடைபெற்றது.
10. ஹிஜ்ரி 815 (கி.பி. 1413) முதல் 855 (கி.பி. 1451) வரை ஸைய்யிது வம்சத்து மன்னர்களின் அரசாட்சி 37 வருடங்கள் நடைபெற்றது.
11.  ஹிஜ்ரி 855 (கி.பி. 1451) முதல் ஹிஜ்ரி 933 (கி.பி. 1526) வரை லோடி மன்னர்களின் அரசாட்சி 76 வருடங்கள் நடைபெற்றது.
மொகலாய பேரரசு நிறுவப்படுதல்:
ஹிஜ்ரி 923 முதல் ஹிஜ்ரி 933 வரை மக்களை கொடுமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த இப்ராஹிம் லோடியை அடக்க வருமாறு அவனுடைய மாநில ஆளுநரான தவ்லத்கான் லோடி என்பவர் காபூலின் முகல் (மொகலாய) மன்னரான ழஹூருத்தீன் முஹம்மத் பாபரை அழைத்தார். பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை பாபர் தோற்கடித்து டில்லியை வெற்றிகொண்டு மொகலாயப் பேரரசை நிறுவினார்.
ஹிஜிரி 933 (கி.பி. 1526) முதல் ஹிஜிரி 1253 (கி.பி. 1837) வரை போற்றத்தக்க 318 ஆண்டுகள் மொகலாய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
ஆங்கிலேயர்களின் தந்திரம்:
ஹிஜிரி 1221 (கி.பி. 1806) முதல் ஹிஜிரி 1253 (கி.பி) வரை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசர் முஈனுத்தீன் அக்பர் பின் ஷாஹ் ஆலம் என்பவரை ஆங்கிலேயர்கள் எணுகி ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் நன்கொடை தருவதாகக் கூறி தந்திரமாக ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
ஹிஜிரி 15 (கி.பி. 636)ல் ஹகம்பின் ஆஸ் (ரலி) அவர்களின் லட்சியத்தால் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆட்சி ஹிஜ்ரி 1253ல் இலட்சத்திற்காக தாரை வார்க்கப்பட்டது.
இறுதியாக இந்தியாவின் கடைசிப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹிஜ்ரி 1253 (கி.பி. 1837) முதல் ஹிஜ்ரி 1274 (கி.பி.1857) வரை அரசர் பஹாதுர் ஷா ழஃபர் பின் அக்பர் ஸானி என்பவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து ரங்கூனுக்கு நாடு கடத்தினர்.
இறுதியாக, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
நூல்: ஓர் உலகளாவிய வரலாறு பக்கம் 114-122
சுதந்திர போரும், முஸ்லிம்களும்..
கி.பி.1761 ஹைதர் அலி, மைசூர் ராஜாவை அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.அதன் பிறகு கி.பி.1782ம் ஆண்டு மாவீரர் திப்பு சுல்தான் அரசரானார்.தந்தை ஹைதர் அலியும், அரசர் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நான்கு போர்களை நடத்தியுள்ளனர்.உலக வரலாற்றில் முதன் முதலாக ராக்கெட்டை தயாரித்து ராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தியவர் என்ற பெருமையும் மாவீரர் திப்புவுக்கு உண்டு.
மாவீரர் திப்புவின் அமைச்சர் மீர்ஸாதிக்கின் துரோகத்தின் காரணமாக (கி.பி. 1796) ஹிஜ்ரி 1213ம் ஆண்டு துல்கஃதா பிறை 28 ஆங்கிலேயர்களால் திப்பு சுல்தான் ஷஹீத் ஆனார்.
v கி.பி. 1803 ஷாஹ் வலிய்யுல்லாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவீ (ரஹ்) அவர்கள் இந்தியாவைதாருல் ஹர்ப்’ - போராட்ட பூமி என ஃபத்வா-மார்க்கத்தீப்பு வழங்கினார்கள்.
v கி.பி. 1857 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஆங்கிலேயர்களை எதிர்த்து ஷாம்லி மைதானத்தில் போராடிய முதல் இந்திய சுதந்திரப் போராட்டம். இப்போரில் மகான் ஹாபிழ் ளாமின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஷஹீத் ஆனார்கள்.
v கி.பி. 1857 முதல் 1867 வரை ஷாம்லி யுத்தத்திற்கு பின் பத்து வருடகாலமாக லட்சக்கணக்கான உலமாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் பொய் வழக்கு போட்டு ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது.
v பல்வேறு போராட்டங்கள், கிளர்ச்சிகள், யுத்தங்கள், உயிரிழப்புகளுக்குப் பின் கி.பி. 1917ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதாக அறிவிப்பு செய்தனர்.
v பல்லாயிரம் ஆலிம்கள் பல இலட்சம் முஸ்லிம்களுடைய விலை மதிப்பற்ற உயிர்கள், அவர்கள் சிந்திய இரத்தங்கள், விதவைகளாக ஆக்கப்பட்ட அவர்களின் மனைவியர்கள், அநாதைகளாக்கப்பட்ட அவர்களின் வாரிசுகள், சூறையாடப்பட்ட அவர்களின் சொத்துகள் இத்தனைக்கும் பரிசாகத்தான் 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
விடியட்டும் கொண்டாடலாம் என்று காத்திருந்த முஸ்லிம்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் விடியவே இல்லை.
காரணம்:
அன்றிலிருந்த முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர்.இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் தியாகங்கள் இந்திய விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாறாக ஆக்கப்பட்டு விட்டது.
ஸ்பெயின் பேரரசு:
தாரிக் பின் ஜியாத் அவர்கள் ஹிஜ்ரி 92 ரஜப் மாதம் கி.பி.711ம் ஆண்டில் ஏழாயிரம் படை வீரர்களுடன் வலீத் பின் அப்துல் மலிக்கின் ஆளுமையின் கீழ் உந்துலூஸ் - ஸ்பெயினை வெற்றி கொண்டார்.தலைவர்களை நியமிக்கும் பனியை பனூ உமையாக்களின் கலீஃபாக்கள் செய்து கொண்டிருந்தனர்.
v ஹிஜிரி 132 (கி.பி. 750)ல் பனூ அப்பாஸிய்யாக்கள் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டனர்.
v ஹிஜ்ரி 138 (கி.பி. 755) முதல் ஹிஜிரி 172 (கி.பி. 788) வரை அப்துர் ரஹ்மான் பின் முஆவியா என்பவர் குர்துபாயை தலைமையகமாக கொண்டு ஆட்சியை நிறுவினார். ஸ்பெயினில் ஒரு முன்னேற்றமான நிலை இவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது. குர்துபாவின் ஜாமிஆ மஸ்ஜிதைக் கட்டியவரும் இவரே.
v ஹிஜ்ரி 172 (கி.பி. 788) முதல் ஹிஜ்ரி 180 (கி.பி. 796) வரை ஹிஷாம் பின் அப்துர் ரஹ்மான் அவர்களும்
v ஹிஜ்ரி 180 (கி.பி. 796) முதல் ஹிஜ்ரி 206 (கி.பி. 821) வரை அப்துர் ரஹ்மான் பின் ஹகம் அவர்களும்
v ஹிஜ்ரி 238 (கி.பி. 852)முதல் ஹிஜ்ரி 273 (கி.பி. 886) வரை ஆட்சி செய்த முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அவர்களின் ஆளுமையின் கீழ்தான் ஆட்சி விரிவாக்கப்பட்டது, கட்டிடங்கள் கட்டப்பட்டது, கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டது.
v ஹிஜ்ரி 273 (கி.பி. 886) முதல் ஹிஜ்ரி 275 (கி.பி. 888) வரை முந்திர் பின் முஹம்மத் அவர்களும்,
v ஹிஜ்ரி 275 (கி.பி. 888) முதல் ஹிஜ்ரி 300 (கி.பி. 912) வரை அப்துல்லாஹ் பின் முஹம்மத் அவர்களும்
v ஹிஜ்ரி 300 (கி.பி. 912) முதல் ஹிஜ்ரி 350 (கி.பி 961) வரை ஆட்சி புரிந்த அப்துர் ரஹ்மான் பின் முஹம்மத் அவர்களைஅமீருல் முஃமினீன்’ ‘கலீஃபாயே அஃலம்’ (பெரும் கலீஃப) ஆகிய பெயர்களில் அழைத்தனர். மிக்க மதி நுட்பசாலியாகத் திகழ்ந்த அவர் ஸ்பெயினை ஒரு பசுமையான சொர்க்கலோகமாக உருவாக்கினார். தற்போதைய ஐரோப்பாவின் முன்னேற்ற நிலை இவர்களின் முயற்சிக்குரிய பிரதி பலனாகும். இவர்களுக்குப் பிறகு 5 ஆட்சியாளர்கள் வந்தனர். பிறகு முறையான அரசாக எதுவுமில்லாமல் மாநிலங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிந்து சுயாட்சியின் முறை உருவானது.
v ஹிஜ்ரி 484 (கி.பி. 1091)ம் ஆண்டு ஆப்பிரிக்க தலைவர் மராபிதீன் யூஸூப் பின் தாஷ்கின் என்பவர் புகழ்பெற பல அரசர்களை பதவி நீக்கம் செய்து விட்டு ஸ்பெயினில் ஒரு அழகிய அரசை நிறுவினார். ஹிஜ்ரி 541 (கி.பி. 1147) வரை அவரின் குடும்பத்தினரிடமே ஆட்சி இருந்து வந்தது.
v ஹிஜ்ரி 541 (கி.பி. 1147)ம் ஆண்டு முவஹ்ஹிதீன்கள் அரசைக் கைப்பற்றி போற்றத்தக்க முறையில் ஆண்டார்கள். பிறகு தமக்கிடையே நடந்த உள் நாட்டுப் போரால் அழிந்து போயினர்.
v ஹிஜ்ரி 626 (கி.பி. 1229)ம் ஆண்டு குர்துபாவை கிறிஸ்தவர்கள் கைப்பற்றினர்.
v ஹிஜ்ரி 897 (கி.பி. 1492)ம் ஆண்டு ஸ்பெயின் முழுவதும் ஐரோப்பியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு 800 ஆண்டுகள் ஆட்சி செய்த மாட்சியை இஸ்லாமிய உலகம் இழந்தது.
நூல்: ஓர் உலகளாவிய வரலாறு
பைத்துல் முகத்தஸூம், சிலுவைப்போர்களும்.
மிக்க தூய்மையானவன்; தன் அடியாரை ஒர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை! அதன் சுற்றுப் புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில் தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக!
அல் குர் ஆன்: 17:1
இது தான் பைத்துல்முகத்தெஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றி அல்லாஹ் குறிப்பிடும் வசனம்.
நபி தாவூது (அலை) நபி சுலைமான் (அலை) ஆகிய இருவராலும் நிறுவப்பட்ட மஸ்ஜிதாகும்.
2000 மனிதர்கள் ஒன்று சேர்ந்து அசைத்தாலும், அசைக்க முடியாத கற்களை கொண்டு ஜின்களை வைத்து நபி சுலைமான் (அலை) அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.
பைத்துல் முகத்தஸ் என்பது, எப்படி மஸ்ஜிதின் பெயராக அழைக்கப்படுகிறதோ அவ்வாறே அந்த நகரத்தின் பெயராகவும் அழைக்கப்படுகிறது.
நபி தாவூது (அலை) நபி சுலைமான் (அலை) ஆட்சி செய்த புண்ணிய பூமியும் இதுவே.
நபி ஜகாரிய்யா (அலை) அவர்களுக்கு நபி யஹ்யா (அலை) மகளாகப் பிறக்கப்போகும் நன்மாராயத்தை அறிவித்த இடமும் இதுதான்.
நபி ஈஸா (அலை) அவர்கள் வாழ்ந்த இடமும் இங்கேதான்.
இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) தாவூத் (அலை), சுலைமான் (அலை), மர்யம் (அலை), மூஸா (அலை) ஆகீயோரின் அடக்கஸ்தலங்களும் இன்னும் ஏராளமான நபிமார்களின் அடக்கஸ்தலங்களும் அங்கேதான்.
நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றப்பயணம் - மிராஃஜ் சென்றதும், இறை நம்பிக்கையாளர்களின் முதல் கிப்லாவும் இதுதான்.
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவி இதற்கடுத்து இஸ்லாத்தில் புனிதம் நிறைந்த இடமாக கருதப்படுவதும் இதுதான்.இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்துவம் நிறைந்த இடமான இங்கிருந்து கி.பி.33ல் நபி ஈஸா (அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டது முதல் 1967ல் இஸ்ரேலிய யூதப்படைகள் கைப்பற்றியது வரையிலான வரலாறு.
வரலாற்று நூல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதை இங்கே தருகிறோம்.
v கி.பி. 69 -ல் ரோமானியச் சக்கரவர்த்தி இதனை வெற்றி கொண்டார்.
v கி.பி. 136-ல் ரோமானியப் பேரரசன் ஹிட்ரியன்ஈலியா கெப்பிட்டோலினா என இதற்குப் பெயர் சூட்டினார்.
v கி.பி. 336 -ல் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன.
v கி.பி. 614 -ல் பாரசீக மன்னர் இரண்டாம் குஸ்ரு வெற்றி கொண்டார்.
v கி.பி. 621 -ல் நபி (ஸல்) அவர்கள் இங்கிருந்து மிராஃஜ் சென்றார்கள்.
v கி.பி. 628-ல் ரோமினியப் பேரரசர் ஹெராக்ளியஸ் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தார். (சமீபமான பூமியிலுள்ள ரோம்வாசிகள் தோல்வியடைந்தனர். எனினும் விரைவில் வெற்றியடைவார்கள் (அல்குர் ஆன்:30:1,2,3) என்ற திருமறை வசனங்களின் படி இது நிகழ்ந்தது).
v கி.பி. 637 -ல் உமர் (ரலி) அவர்களின் கையில் இந்நகரை பெரிய மதகுரு ஸொஃரானியஸ் ஒப்படைத்தார்.
v கி.பி. 969 -ல் ஃபாத்திமியக் கலீஃபா முயிஸ் இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி. 1084ல் துர்க்கோமன் தலைவர் உர்தக் இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி.1098-ல் மீண்டும் ஃபாத்திமியக் கலீஃபாக்கள் வெற்றி கொண்டனர்.
v கி.பி. 1099-ல் சிலுவைப் போர் வீரர்கள் இதனை வெற்றி கொண்டனர். எழுபதாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் காரணமாக குதிரைகளின் முழங்கால் அளவு இங்கு இரத்த ஆறு ஓடியது.
v கி.பி. 1187ல் சுல்தான் ஸலாஹூத்தின் அய்யூபி (ரஹ்) அவர்கள் வெற்றி கொண்டார்கள். அது மிஃராஜ் இரவாக இருந்தது.
v கி.பி. 1219ல் இரண்டாம்ப்ரடெரிக்குடன் செய்த உடன்பாட்டின்படி கிறிஸ்தவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.
v கி.பி. 1239ல் முஸ்லிம்கள் மீண்டும் கைப்பற்றினர்.
v கி.பி. 1243ல் இது மீண்டும் கிறிஸ்தவர்களின் வசம் போனது.
v கி.பி. 1244ல் முஸ்லிம்கள் மீண்டும் கைப்பற்றினர்.
v கி.பி.1277ல் பெயரளவில் ஸிஸிலி அரசாங்கத்துடன் இது இணைக்கப்பட்டது.
v கி.பி. 1517ல் துருக்கி சுல்தான் முதலாம் சலீம் இதனை வெற்றிகொண்டார்.
v கி.பி. 1832ல் முஹம்மத் அலி பாதுஷா இதனைக் கைப்பற்றினார்.
v கி.பி. 1840ல் மீண்டும் துருக்கியின் வசம் போனது.
v கி.பி. 1918ல் பிரிட்டிஷ் மண்டேட் ஆட்சியின் வசம் போனது.
v கி.பி. 1948ல் ஜோர்தான் ஆட்சியின் கீழ்வந்தது. பயங்கரவாத இஸ்ரேல் நாடும் அப்போது தான் உருவானது.
v கி.பி. 1967ல் பைத்துல் முகத்தஸ் பறிபோனது.
நூல்: இலங்கை கண்டி மெளலானா ஸலாஹூத்தீன் அவர்கள் எழுதிய சிறு நூல் தொகுப்பு பாகம்:2, பக்கம்: 66-75
இதில் 1099ல் சிலுவைப்படை வீர்ரகள் ஏற்படுத்திய கோரமான தாக்குதல்கள்தான் இஸ்லாமிய உலகை சீர் குலைத்தது.
அதனைத் தொடர்ந்து தாத்தாரியாக்களும், ஐரோப்பியர்களும் ஸ்பெயினை வீழ்த்துகிற போது,
அங்கிருந்த நூல்நிலையங்களை சூறையாடினர்.நடுவீதியில் முஸ்லிம்களின் அரிய நூல்களை தீயிட்டு கொளுத்தினர்.எந்தளவு எனில் வீடு வீடாகச் சென்று நூல்களை அள்ளியெடுத்து வீதியில் போட்டு தீவைத்து கொளுத்தினர்.பல நாட்களாக அதன் சாம்பல் ஸ்பெயின் நகரெங்கும் காற்றில் பரவிக் கொண்டிருந்தது.சுமார் 20 லட்சம் கிதாபுகள் அழிக்கப்பட்டன்.
பைத்துல் ஹிக்மா அடியோடு அழிக்கப்பட்டது.
ஃபுராத் நதியில் தண்ணீரில் கிதாபுகளையும், அறிவியல் நூல்களையும் கொண்டு ஐரோப்பியர்கள் ஒரே நேரத்தில் 7 குதிரைகள் ஜோடியாக செல்கிற அமைப்பில் (இன்றைய நான்கு வழிச்சாலை போல) பாலம் அமைத்தனர்.
            சுமார் ஒன்பது மாதங்களாக ஃபுராத் நதியின் தண்ணீரின் கலர் கிதாபுகள் எழுதப்பயன்படுத்தப்பட்ட மையின் நிறமான கருப்பு கலரில் ஓடியது.
            மேலும், முஸ்லிம்களின் கைகளில் இருந்து கைநழுவிப்போன ஸ்பெயின் பேரரசின் குர்துபா ஜாமிஆ மஸ்ஜித் இன்று நூதன சாலையாக மாற்றப்பட்டு இதில் கட்டாயம் செருப்பு அணிந்துதான் செல்ல வேண்டும் என சட்டமியற்றியுள்ளனர்.
முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?..
பொதுவாகவே வரலாற்றை வாசிக்கின்ற இந்த முஸ்லீம் சமூகம் அதில் தர்க்கம் செய்து கொண்டும், விவாதம் செய்து கொண்டும் காலந்தள்ளுகிறது.
            யூசுப் (அலை) அவர்களுடைய வரலாற்றை வெகு அழகாக படம் பிடித்துக் காட்டும் குர் ஆன்அந்த பெண்ணின்பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.
            குகைத்தோழர்களின் வரலாற்றைக் கூறும் குர் ஆன் அவர்கள் எத்தனை பேர்?எத்தனை காலம் குகையில் தங்கினார்கள்?என்பதை துல்லியமாக கூறவில்லை.
ஆதம் (அலை) அவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிற குர் ஆன் ஓரிடத்தில் கூட ஹவ்வா (அலை) அவர்களைப் பற்றி கூறவில்லை.
படிப்பினை பெறவும், நேர்வழி பெறவும் எது இந்த சமூகத்திற்கு தேவையோ அதைப்பற்றி மட்டுமே குர் ஆன் நயம்பட வரலாறுகளைக் கூறுவதோடு, வரலாற்றுக்கான நியதிகளையும் அது வரையறுத்துத் தந்துள்ளது.
ஆனால் எவைகளையெல்லாம் வேண்டாமென குர் ஆன் விட்டு விட்டதோ அவற்றை ஆய்வு செய்வதிலேயே இஸ்லாமிய உம்மத் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது காலமெல்லாம்.
இன்றும் மத்ஹபை உண்டாக்கியவர்களாகவும், மத்ஹபின் விற்பன்னர்களாகவும் அறியப்படுகின்ற் நான்கு இமாம்களின் மன்னர்களுக்கெதிரான போராட்ட வாழ்க்கை இந்த உம்மத்தில் எத்துணை பேருக்கு தெரியும்?.
            முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து வரலாறுகளின் மறுபக்கமும் இந்த உம்மத்திற்கு தெரிய வேண்டும்.
            திரிபுகளற்ற, மாசற்ற உண்மையான வரலாற்றையும், மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட அனைத்து வரலாற்றையும் வெளிகொணர்வதோடு நின்று விடாமல், அதை வாசித்தும், உள்ளுணர்வோடும், உத்வேகத்தோடும் போராடிஇஸ்லாம் இந்த உலகத்தில் இழந்த பெருமையை மீட்டெடுத்து, மீண்டும்
ISLAM IS A UNIVERSEL RELIGIONஎனும் பெயராக்கத்தை உருவாக்குவோம்.
அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக! ஆமின்!
வஸ்ஸலாம்





1 comment:

  1. alhamdhulillah..arumayana thagavalgal maulana..
    allah thangal lmil barakath seyyatum

    ReplyDelete