Thursday 23 January 2014

உலகம் வியந்து போற்றும் அரசியலாளர்!!




        உலகம் வியந்து போற்றும் அரசியலாளர்!!




மனிதன் எப்போது இப்பூமியில் வாழத்துவங்கினானோ அப்போதே “நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் வரலாறும் தொடக்கம் பெற்றது.                                                               அதாவது, ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்களின் கலாச்சாரத்தை, நாகரீகத்தை, பண்பாட்டை தவறாமல் தங்களின் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.

 அது அப்படியே பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.              
ஆனால், இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய கலாச்சாரமும், பண்பாடும், நாகரீகமும் ஏனைய அத்துணை கலாச்சாரத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும், நாகரீகத்திலிருந்தும் வேறுபட்டிருப்பதைக் காணமுடியும்.                                                    ஏனெனில், ஏனைய நாகரீகங்களும் கலாச்சாரங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.                                         
ஆனால், இஸ்லாமிய கலாச்சாரமும், நாகரீகமும், பண்பாடும் அகில உலகங்களின் அதிபதியான அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது.
எனவே தான், ”மனித சமூகத்தை மாண்பாளர்களாகவும், பண்பாடுள்ளவர்களாகவும் மாற்றிக்காட்டிடும் மகத்தான ஆற்றல் எப்போதுமே இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு” என்று நம்மால் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லமுடியும்.                இதன்அடிப்படையில், இஸ்லாம் வழங்கியிருக்கின்ற “அரசியல்” குறித்தான நாகரீகத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை மீள் பார்வை செய்வது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனின் மீதும் கடமையாகும்.   


அண்ணலாரின் அரசியல் பிரவேசம்….

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மதீனாவில் அடியெடுத்து வைத்த அடுத்த நொடிமுதல் அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அரசியல் பிரவேசம் துவங்கப்பெறுகின்றது.                                அங்கிருந்து தான் ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்குமான நியதிகளை சட்டதிட்டங்களை, ஒழுக்கவிழுமியங்களை அண்ணலார் துவக்கினார்கள்.                                            
 மக்காவில் வாழ்கிற வரை அப்படியான ஒரு சூழ்நிலை கைவரப்பெற்றிருக்கவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லாமல் இருந்தது.                                                      ஆனால், மதீனா வந்த பின்பு தான் உலகாளும் ஓர் அரசியல் நெறியை உருவாக்கிட முடிந்தது. முதல் பிரச்சனையாக அகதிகள் பிரச்சனை ”சகோதரத்துவம்” எனும் கொள்கைப் பிடிப்பால், அன்புச் சங்கிலியால் அடியோடு மாற்றியமைத்தார்கள்.                           
 இன்றும் கூட அகதிகள் உரிமைகள் தொடர்பான சர்வதேச் சட்டங்களில் 80 விழுக்காடு இஸ்லாமியச் சட்டங்கள் தான் பேணப்படுகின்றன.                                               
 அடுத்து, பல்வேறு கொள்கை கொண்டவர்களோடும், பல்வேறு இனத்தவர்களோடும் வாழவேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்ட போது, அவர்களை அழைத்து இணக்கமான பல ஒப்பந்தங்களை உருவாக்கி, இஸ்லாமிய ஆளுமையின் கீழ் சிறுபான்மை மக்களாக வசிப்போரின் உரிமையை ஸ்திரப்படுத்தினார்கள், சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்கள்.                            
 அவ்வப்போது, முஸ்லிம்களின் வாழும் உரிமையை அசைத்துப் பார்த்த எதிரிகளோடு, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் யுத்தகளங்களைச் சந்தித்து இராணுவ கோட்பாடுகளையும், யுத்தகள நியதிகளையும் யார்த்துத் தந்தார்கள்.                                
 சமூகத்தில் காணப்பட்ட வறுமையை ஒழித்திடும் நோக்கில் ஜகாத் எனும் ஏழைவரி, ஸதக்கா எனும் தான தர்மம், உழைத்துவாழ வேண்டும் என்ற உன்னத எண்ணங்களைத் தூவி ஒழித்துக் காட்டினார்கள்.                                                   
 மலிந்து கிடந்த குற்றங்கள், தீமைகள் ஆகியவற்றை அடியோடு அகற்றிட ஆழமான சட்டங்களை வகுத்தார்கள்.                   
 ”அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு” என்பதை உறுதி படுத்தினார்கள்.                            
 இவைகளையெல்லாம் ஏறத்தாழ வெறும் பத்தே ஆண்டுகளில் வகுத்துத்தந்து “அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம்” எனும் கொள்கையோடும், “அல்லாஹ்வின் சட்டங்களுக்கே கட்டுப்பட வேண்டும்” என்கிற கோட்பாட்டோடும், அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி அதன் முதல் ஆட்சியாளராய், முன்மாதிரி ஆட்சியாளராய் வாழ்ந்து காட்டினார்கள்.

1.சட்டம் அது தன் கடமையைச் செய்யும்.

 ஒரு முறை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஜுபைர் இப்னுல் அவ்வாம் {ரலி} அவர்களுக்கும், பத்ரில் கலந்து கொண்ட அன்ஸாரித்தோழர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்சனை இது தான், கிணற்றுக்கு அருகே ஜுபைர் {ரலி} அவர்களின் தோட்டமும், சற்றுத் தள்ளி அன்ஸாரித் தோழரின் தோட்டமும் இருந்தது.                                                       
 முதலில் யார் தண்ணீர் பாய்ச்சுவது என்பது தான் தகராறு வரை அவர்களை அழைத்து வந்தது. கடைசியில் இருவரும் வழக்கை மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்தனர்.                            வழக்கை விசாரித்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஜுபைர் {ரலி} அவர்களிடம் “முதலில் உங்களின் தேவைக்கு நீங்கள் சிறிது நீர் பாய்ச்சுங்கள்; பின்பு அவருக்கு நீர் பாய்ச்சும் உரிமையை விட்டுக் கொடுத்து விடுங்கள்.” என்று கூறினார்கள்.                  
அதற்கு அந்த அன்ஸாரித் தோழர்  நபிகளாரின் தீர்ப்பில் திருப்தியடையாமல் கோபத்தில் “அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய மாமி மகன் என்பதற்காக ஜுபைருக்குச் சாதகமாக நீங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள்.” என்றார்.                               அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முகத்தின் நிறமே மாறிவிட்டிருந்தது. கோபத்தின் அறிகுறிகள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வெளிப்பட்டன.                             
 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழகியதொரு தீர்வை அவருக்கு வழங்கினார்கள்.                                          
 ஆனால், அவர் அதை ஆட்சேபித்தார். ஆகவே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} மறுபடியும் “ஜுபைரே! உங்களின் தோட்டத்திற்கு எவ்வளவு நீர் தேவைப்படுகின்றதோ, அந்த அளவுக்கு நீரைப் பாய்ச்சுக்கொள்ளுங்கள்.                                         
அதன் பிறகு தண்ணீர் ,வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து வையுங்கள். {பிறகு விட்டு விடுங்கள்} ” என்று கூறி, ஜுபைர் {ரலி} அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கி னார்கள்.                   இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஜுபைர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களின் இந்த வழக்கு விவகாரமாகத்தான் இந்த இறைவசனம் “ {முஹம்மதே!} உம் இறைவனின் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆக மாட்டார்கள்.” (அல்குர்ஆன்:4:65) இறங்கியது”. இந்த ஹதீஸை உர்வா பின் ஜுபைர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:680. (புகாரி, பாடம், கிதாபுல் முஸாக்காத், பாபு ஷுர்பில் அஃலா கப்லல் அஸ்ஃபல்)

முதலில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நியாயமாகவே தீர்ப்பளித்தார்கள். ஆனால், அவர் ஆட்சேபித்தார். அதன் காரணமாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கினார்கள்.


2.சமநீதி.

ஆயிஷா {ரலி} அவர்கள் கூறினார்கள்:
 “மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிய போது அது குறைஷிகளுக்கு பெரும் கவலையாகிப் போனது.           
 அப்போது அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா {ரலி} அவர்களைத் தவிர வேறு யார் அந்தப் பெண்ணிற்காக, அல்லாஹ்வின் தூதரிடம் துணிந்து பரிந்து பேச முடியும்? என்று சொன்னார்கள்.                                           
 அவ்வாறே உஸாமா {ரலி} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் பரிந்து பேசினார்கள்.                           
 அப்போது, தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா அதை நிறைவேற்றாமல் விட்டு விடுமாறு நீர் பரிந்துரைக்கின்றீர்? என்று கேட்டு விட்டு, பிறகு எழுந்து நின்று, மக்களுக்கு முன்…  “மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) சமூக மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, அவர்களிடையே உள்ள உயர்குலத்தார் திருடி விட்டால் அவர்கள், அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள்.           அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடி விட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப் படுத்துவார்கள்.                    அல்லாஹ்வின் மீது ஆணை! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.                                            
மற்றொரு அறிவிப்பில், உர்வா பின் ஸுபைர் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “மக்காவை வெற்றி கொண்ட போது  மக்ஸூமி குலத்துப் பெண்மணி ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} என்பவர் திருட்டுக் குற்றம் புரிந்து விட்டார்.                                                
 அவர் அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். நபி {ஸல்} அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும் படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது.                              
 (அந்தப் பெண்மணியைப் பற்றி) “அப் பெண்மணி அழகிய முறையில் தவ்பாச் செய்திருந்தாள்; திருமணமும் செய்து கொண்டாள். அதன் பிறகு அப்பெண்மணி எங்களிடம் வந்து செல்வாள்.                    
 நான் அப் பெண்மணியின் தேவையை அறிந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் முறையிட்டுள்ளேன்” என்று ஆயிஷா {ரலி} அவர்கள் கூறினார்கள்.

 (நூல்: புகாரி, பாடம், பாபு இகாமத்தில் ஹுதூதி அலஷ் ஷரீஃபி வல் வளீஇ, பாபு ஷஹாதத்தில் காதிஃபி வஸ் ஸாரிக்கி வஸ் ஸானீ)

@அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி வெளியே சென்றாள். அப்போது அச் சிறுமியின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான்.                                                              
 உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அச் சிறுமி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டாள்.                                    
 அச் சிறுமியிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”இன்னார் உன்னைத் தாக்கினாரா? என்று இரண்டு முறை (யாரோ இரு நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி) கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையால் சைகை செய்தாள்.                    மூன்றாம் முறையாக அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார்? என்று கேட்ட போது, அவள் கீழ் நோக்கி (ஆம் என்று கூறும் விதமாக) தாழ்த்தி தலையால் சைகை செய்தாள்.          ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி {ஸல்} ஆணை பிறப்பித்தார்கள். அவனை அழைத்து வந்து விசாரித்த போது அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆகவே, இரு கற்களுக்கிடையில் வைத்து அவனது தலையினை நசுக்கிக் கொல்லுமாறு நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்.

         (நூல்:புகாரி, பாடம்,பாபு இதா கதல பிஹஜரின் அவ் பிஅஸா)

3.நேர்மை

ஹுனைன் யுத்தத்தில் ஏராளமான கனீமத் பொருட்கள் வெற்றிப் பொருட்களாகக் கிடைத்தன. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அதைத் தாராளமாக பங்கு வைத்தார்கள்.                                 நபி {ஸல்} அவர்களின் கொடைத்தன்மையை கண்ட மக்கள், முஹம்மது {ஸல்} அவர்கள் வறுமையைக் கண்டு அஞ்சாமல் வாரி வாரி வழங்குகின்றார் என்று பேசிக்கொண்டனர்.                        
 இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டு அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்து அரபிகளும் பொருட்களைக் கேட்டுப் பெருவதற்காக திரண்டு  நபி {ஸல்} அவர்களிடம் வந்தனர்.                               
 நபிகளாரை பலவந்தமாக தள்ளிச் சென்று, ஒரு மரத்தில் சாய்த்தனர். நபிகளார் அணிந்திருந்த போர்வையால் நபிகளாரை இறுக்கி “எங்களுக்கும் பங்கு கொடுங்கள்” என்று விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள்.                                                   
 அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “மக்களே! எனது போர்வையை என்னிடம் கொடுத்து விடுங்கள்.                            திஹாமா (எனும்) ஊருடைய மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் கால்நடைகள் இருந்தாலும் அதையும் உங்களுக்கே நான் பங்கிட்டுக் கொடுத்து விடுவேன்.                                       
  பின்பு, நான் கஞ்சனாகவோ, கோழையாகவோ, பொய்யனாகவோ இல்லையென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”                        பிறகு தங்களது ஒட்டகத்திற்கு அருகே சென்ற நபிகளார் ஒட்டகத்தின் திமிலில் இருந்து சில முடிகளைப் பிடுங்கி மக்களை நோக்கி உயர்த்திக் காண்பித்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுடைய கனீமா பொருளில் இருந்து குமுஸ் – ஐந்தில் ஒரு பகுதியைத்தவிர இந்த முடியின் அளவு கூட எனக்காக நான் வைத்துக் கொள்ளவில்லை.                                              
 எனினும், நான் எனக்காக எடுத்துக் கொண்ட அந்த பங்கையும் கூட உங்களுக்கே நான் வழங்கிவிட்டேன்” என்று கூறினார்கள்.                இன்ன பிற கனீமத் பொருட்களையும் தம்மிடம் ஒன்று சேர்க்குமாறு ஸைத் பின் ஸாபித் {ரலி} அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கட்டளையிட, ஒன்று சேர்க்கப் பட்டதும் மக்களை அங்கே வரவழைத்து, மீதமிருந்த அத்தனை பொருட்களையும் மக்களுக்கு பங்கிட்டு முடித்தார்கள்.”

                                      (நூல்:ரஹீக் – தமிழ், பக்கம்:513.)  


@அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
 “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இப்னுல் லுதபிய்யா {ரலி} அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஜகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள்.                                
 அவர் ஜகாத் வசூலித்து விட்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அவரிடம் கணக்கு கேட்டார்கள்.                               
  அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு வழங்கப்பட்டது; (என்று ஒரு பண முடிப்பையும்) இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு” (என்று ஒரு பண முடிப்பையும் காட்டி) என்று சொன்னார்.                                                 
 உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ நீங்கள் உங்கள் கூற்றினில் உண்மையாளராக இருந்தால், நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும், உங்கள் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத்தேடி அன்பளிப்பு வருகின்றதா என்று பாருங்கள்” என்று சொன்னார்கள்.                                                                பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று “அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, இறைவனைப் போற்றிய பின் கூறுகின்றேன்:                 
 “அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றிற்கு உங்களில் சிலரை நான் அதிகாரிகளாக நியமிக்கின்றேன்.                ஆனால், அவர் அப்பணியை முடித்து விட்டு, இது உங்களுக்கு. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகின்றாரே! அவர் வாய்மையானவராக இருந்தால் தம் தந்தையின் வீட்டிலும், தம் தாயின் வீட்டிலும் அமர்ந்து கொண்டு தன்னைத்தேடி அன்
பளிப்பு வருகின்றதா? என்று பார்க்கட்டுமே!                              ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யாரும் இது போன்ற (பொதுச் சொத்) திலிருந்து எதையும் முறையின்றி எடுத்திட வேண்டாம்.                                                  
 அப்படி எடுப்பவர் மறுமை நாளில் அதைச் சுமந்தபடியே அல்லாஹ்வின் திருச் சமூகத்தில் வருவார்.                   
 அறிந்து கொள்ளுங்கள்! அன்றைய நாளிலே அல்லாஹ்வின் சந்நிதானத்தில் கத்தும் ஒட்டகத்துடனும், மாட்டுடனும், ஆட்டுடனும் ஒருவர் வருவதை நிச்சயம் நான் அறிந்து வைத்திருக்கின்றேன்” என்று உரையாற்றினார்கள்.                                             பின்னர் நபிகளாரின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவிற்குத் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “ (அல்லாஹ்வே) நான் (சத்தியத்தை) எடுத்துரைத்து விட்டேனா? என்று கேட்டார்கள்.

          (நூல்: புகாரி, பாடம்: முஹாஸபத்தில் இமாமி உம்மாலஹு)


4.ஒழுங்கு

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் முன்பாக மக்கள் வந்து நிற்பதற்கு முன்னால், ஒவ்வொரு செயலின் ஆரம்பமும் முடிவும் எங்கு கொண்டு போய் ஒரு மனிதனை நிறுத்திவிடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள்.                             
 அந்த காரியங்களின் பல பரிமாணங்களை வகைப்படுத்தினார்கள். அவைகளின் தீங்குகளைக் கூறி அந்தச் செயல்களைச் செய்வதை விட்டும் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.            
 எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்காறுகளையும், ஒழுக்க விழுமியங்களையும் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்குமாறு போதித்தார்கள்.                               
 அதன் பிறகே சட்டமியற்றினார்கள்; அல்லது அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எல்லைகளாக வகுத்தார்கள்.

1.மது ஒரு மாபெரும் தீமை.
உஸ்மான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “மது அருந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில், அது அனைத்து வகையான பாவங்களுக்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறை நம்பிக்கையும், மது அருந்துவதும் ஒரு மனிதனிடத்தில் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்றை மற்றொன்று அகற்றிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                (நூல்: நஸாயீ)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “ நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                       (நூல்:ஸில்ஸிலா அஸ் ஸஹீஹ்,ஹ.எண்:677.)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
 “மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது.                                                 
 அவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்.                    அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்.            
 இதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால், அவனுக்கு மறுமையில் “ரத்ஃகத்துல் ஃகிபாலை” குடிக்க வைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.                 
 அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன? என்று வினவினார்கள்.                
 அதற்கு நபி {ஸல்} அவர்கள் “அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்” என்றார்கள்.
                       (நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118)

 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் {ரலி} அறிவிக்கின்றார்கள்:
 “மது அருந்துபவர்கள் நோயுற்றுவிட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
         (நூல்:தஃக்லீக் அத் தஃலீக் லி இப்னி ஹஜர்,பாகம்:5,பக்கம்:126.)

 அப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1.மதுவைக் தயாரிப்பவர். 2.தயாரிக்க உதவுபவர். 3.அதைக் குடிப்பவர். 4.அதனை ஊற்றிக் கொடுப்பவர். 5.அதனைச் சுமந்து செல்பவர். 6.அதற்கு துணை போனவர். 7.அதனை விற்பவர். 8.அதனை வாங்குபவர். 9.அதனை அன்பளிப்புச் செய்பவர். 10.அதை விற்பனை செய்பவர்.”
            (நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹ.எண்:5091)

மதுவைப் பற்றியுண்டான இந்த அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் நபிகளார் முன்வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அல்லாஹ்வும் தன் திருமறையின் மூலம் மதுவின் விபரீதங்களை விளக்கிக் கொண்டிருந்தான். ஆரம்பமாக, அல்லாஹ் 2:219-ம் வசனத்தை இறக்கியருளினான். மக்களில் பாவமென கருதியவர்கள் விட்டனர். பின்னர் இரண்டாம் கட்டமாக, அல்லாஹ் 4:43-ம் வசனத்தை இறக்கியருளினான். இஷாத் தொழுகைக்குப் பின்னர் சிலர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். ஆனால், முன்பை விட மக்கள் இப்போது மதுவை விட்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ் 5:90,92,93. ஆகிய இறைவசனங்களை இறக்கியருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மது தடை செய்யப் பட்டதாக அறிவித்த போது அம்மக்கள் மதீனாவின் வீதிகளில் மதுப்பானைகளைக் கொட்டினார்கள். அதன் காரணமாக தெருக்களில் மது ஆறு ஓடியதாகக் கூட வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.

 அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “நன்கு புளித்த மது எங்களிடம் இருந்து வந்தது; அபூதல்ஹா, அபூ அய்யூப் {ரலி} ஆகியோருக்கும், இன்னும் சிலருக்கும் அதிலிருந்து நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்;                               அப்போது என்னருகே ஒருவர் வந்து, “மதுபானங்களை அருந்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடை செய்து விட்டார்கள்” என்று கூறினார்.                                
 உடனே, அங்கிருந்தோர் அனைவரும் மதுபானங்கள் வைத்திருந்த குடுவைகளையும், மண்பாண்டங்களையும் அப்படியப்படியே கவிழ்த்துக் கொட்டி விடுமாறு கூறிவிட்டனர்.                                  இச்சட்டம் வந்ததும் அவர்களில் எவருமே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அம்மனிதர் தெரிவித்த செய்தியை அவமதிப்பும் செய்யவில்லை.
                          
                     (நூல்:புகாரி,பாடம்:பாபு ஸப்புல் கம்ரி ஃபித்தரீக்கி)

 இதன் பின்னர் மிக மிகச் சொற்பமானவர்களே மது குடித்ததற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் தண்டிக்கப் பட்டனர்.

 அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “மது அருந்திய குற்றத்திற்க்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும், செருப்பாலும் அடித்திடும்படி அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்”

 அபூஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “மது அருந்திய மனிதர் மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவர்கள் “இவரை அடியுங்கள்” என்றார்கள்.                 எங்களில் சிலர் கையால் அடித்தனர்; இன்னும் சிலர் செருப்பால் அடித்தனர்; இன்னும் சிலர் முறுக்கப்பட்ட தமது துணியால் அடித்தனர். தண்டனை முடிந்து அவர் திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மை கேவலப்படுத்துவானாக! என்று சாபமிட்டனர். அப்போது அண்ணலார் {ஸல்} அவர்கள் “இவ்வாறு கூறி இவருக்கெதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள்” என்றார்கள்.

 (நூல்:புகாரி, பாடம்:பாபு மாஜாஅ ஃபீ ளர்பி ஷாரிபில் கம்ரி, பாபு அள் ளர்பி பில் ஜரீதி வன் நிஆல்.)

2.திருட்டு ஒரு மாபெரும் குற்றம்.

இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரிகின்றபோது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் அதைச் செய்ய மாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருட மாட்டான்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

             (நூல்:புகாரி, பாடம்:பாபு அஸ் ஸாரிக்கு ஹீன யஸ்ரிக்கு)

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
 “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சூரியக் கிரகணத் தொழுகை தொழுது முடித்த பின் மக்களை நோக்கி “இப்போது நரகம் எனக்கு கண் முன் காட்டப்பட்டது. அதன் ஜுவாலை என்னைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காக சற்று பின் நகர்ந்து கொண்டேன். அந்த நரகத்தில் ஸாஹிபுல் மிஹ்ஜன் தடியைக் காட்டித் திருடுபவன் தனது குடலை இழுத்துச் செல்வதைப் பார்த்தேன்.”
                                                    (நூல்:முஸ்லிம்)

உப்பாதா இப்னு அஸ் ஸாமித் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
 “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கள் ஒவ்வொருவரிடமும்  பைஅத் {உறுதி மொழி} பெறும் போது ”திருடமாட்டோம்” என்று எங்களைக் கூறச் சொல்லி உறுதிமொழி வாங்கினார்கள்”

                            (நூல்:தஃப்ஸீர் குர்துபீ, பாகம்:9, பக்கம்:403)

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “அல்லாஹ்வின் சாபம் திருடனின் மீது உண்டாகட்டும்! அவன் விலை மதிப்புமிக்க தலைக்கவசத்தையும் திருடுகின்றான்; அதனால் அவன் கை வெட்டப்படுகின்றது. அவன் விலை மலிவான கயிற்றையும் திருடுகின்றான்; அதனாலும் அவன் கை வெட்டப்படுகின்றது”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

           (நூல்:புகாரி, பாடம்:லஅனஸ் ஸாரிக்கி இதா லம் யுஸம்மி)

3.விபச்சாரம் ஒரு மாபாதகச் செயல்.

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “அந்நியப் பெண்களைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரமாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                  (நூல்:புகாரி, பாடம்:ஸினல் ஜவாரிஹி தூனல் ஃப்ர்ஜ்)

மஃகல் பின் யஸார் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
 “இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவது, அவருக்கு அனுமதி இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

        (நூல்:ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹதீஸ் எண்:5045.)

இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “ஓர் ஆண், அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தால் அங்கு நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                       (நூல்: அஹ்மத், திர்மிதீ)

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “எனது இன்றைய நாளிற்குப் பிறகு எந்தவொரு ஆணும், அவனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத பெண்களிடம் வர வேண்டாம்.” என்று கூறினார்கள்.

                                    (நூல்:அஹ்மத், ஹதீஸ் எண்:6559)

 ஸஹ்ல் பின் ஸஅத் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “எவர் தம் இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ள நாவிற்கும், தம் இரு கால்களுக்கு மத்தியில் உள்ள மர்ம உறுப்பிற்கும் என்னிடம் (தவறான வழியில் அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று) உத்தரவாதம் அளிக்கின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.”
                               (நூல்:புகாரி, பாபு ஹிஃப்ளுல் லிஸான்)


 விபச்சாரம் அது எத்தகைய பார தூரமான காரியம் என்பதிலிருந்து மக்களை தடுக்கும் முன், அதன் மிக அருகே அழைத்துச் செல்கிற அத்துணை வழிகளையும், வாசல்களையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்களின் முற்றத்தில் போட்டுடைக்கின்றார்கள்.        அதே காலகட்டத்தில் அல்லாஹ் முஃமின்கள் பார்வை விஷயத்தில் பேணவேண்டிய விழுமியங்களையும், ஹிஜாப் என்னும் ஒழுக்கத்தையும், கற்பொழுக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்ற நியதிகளையும், படிப் படியாக இறக்கியருளினான். அடுத்த படியாக, விபச்சாரம் என்பது ஒரு நல்ல முஃமினின் பண்பாடாக இருக்கமுடியாது என்று அறிவித்தான். இறுதியாக, விபச்சாரம் அது மாபாதகச் செயல் அதன் அருகே கூட நெருங்கிடாதீர்கள் என 17:32-ம்  விபச்சாரம் செய்வது தடைசெய்யப்படுவதாக மாநபி {ஸல்} அவர்கள் அறிவித்தார்கள். அதன் பின்னரே விபச்சாரம் புரிபவனுக்கான தண்டனை என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு எல்லையாக வகுத்தார்கள்.

 இப்படித்தான், பொருளாதாரக் குற்றங்கள், கொலைக் குற்றங்கள்,மனித உரிமை மீறல் குற்றங்கள், மோசடிக்குற்றங்கள், அரசுத் துறைச் சார்ந்த குற்றங்கள் என ஒவ்வொன்றையும் அணுகினார்கள்.              இறுதியாக, குடிமக்கள் அனைவரும் தூய்மையான நிலையில் வாழ்ந்திடும் ஓர் சூழலை உருவாக்கி, மாசு மருவற்ற, குற்றங்கள் குறைந்த ஓர் உன்னத  ஆட்சிமுறை கொண்ட பூமியாக அரேபிய தீபகற்பத்தை மாற்றிக் காட்டினார்கள்.                                      
 இந்த காரணங்களை இங்கே வரிசைப் படுத்திட காரணம் இன்று உலகம் முழுவதிலும், கொலை, கொள்ளை, கள்ளக்காதல், விபச்சாரம், மது போன்ற தீமைகளால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும், அதை சரி செய்ய இயலாமல் ஆட்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம்.                                         
 ஒழுக்க விழுமியங்களை கொண்டிராத ஓர் மக்களை  வழி நடத்துவதில் எப்போதுமே ஓர் ஆட்சியாளன் வெற்றி பெற முடியாது என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

 அன்றோடு முடிந்திடவில்லை, இந்த தூய்மையான வாழ்க்கை முறை இன்றும் இஸ்லாமிய நாடுகள் மற்ற நாடுகளை விட குற்றங்கள் குறைந்த பூமியாகவும், ஒழுக்கமான குடிமக்களைக் கொண்ட ஒரு தேசமாகவும் விளங்குவதைப் பார்க்க முடிகின்றது.

அதிகமாக குற்றங்கள் நடக்கும் முதல் 10 முக்கிய நாடுகளின் நடைபெற்ற குற்றங்களின் வருடக் கணக்குகள் உங்களின் பார்வைக்கு…

1.அமெரிக்கா – 11,877,218.
2.பிரிட்டன் – 6,523,706.
3.ஜெர்மனி – 6,507,394.
4.ஃபிரான்ஸ் – 3,771,850.
5.ரஷ்யா – 2,952,370.
6.ஜப்பான் – 2,853,739.
7.தென்ஆப்ரிக்கா – 2,683,849.
8.கனடா – 2,516,918.
9.இத்தாலி – 2,231,550.
10.இந்தியா – 1,764,630
(பார்க்க:www,mapsofworld/world-top-ten-countries-with-highest-reported-crime-rates.htm)
ஒரு வருட காலத்தில், மேற்கண்ட ஒவ்வொரு நாட்டிலும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையின் அளவு இதுவென்றால், ஒட்டு மொத்த நாடுகளில் ஒரு வருடத்தில் எத்தனைக் குற்றங்கள் நடக்கும் என்பதை எளிதில் நாம் கணித்திடலாம்.

ஆனால், அண்ணலார் உருவாக்கிய ஒழுக்கலாறுகளும், விழுமியங்களும் கொண்ட சட்டங்கள் அம்மக்களை எப்படி உருவாக்கியதென்றால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட, உணர்ச்சிவேகத்திலிருந்து விடுபட்டவுடன், இறை நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எப்படியாவது இந்த அழுக்கிலிருந்து தம்மை தூய்மைப் படுத்திட வேண்டுமென்ற ஆவலில், அண்ணலாரின் அவைக்குள் நேர்மையுள்ளத்தோடு வந்து நின்று,தாம் செய்ததிற்கு எந்த சாட்சியும், தம்மைத் தவிர இல்லை என்கிற போதும் தாமாக முன் வந்து ஒப்புக்கொண்டார்கள்.                                  
 மாஇஸ் இப்னு மாலிக் என்பவர் ஒரு முறை அண்ணலார் முன்வந்து நின்று தாம் விபச்சாரம் செய்ததாக ஒப்புக்கொண்ட வரலாறும், இன்னொரு முறை, குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு ஒரு பெண்மணி இதே போன்று தாம் விபச்சாரக் குற்றம் புரிந்ததாக அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து , விண்ணப்பித்த காட்சிகளை, இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இது உலக வரலாற்றில் வேறு எங்குமே பார்க்க முடியாத, கேள்விப்பட்டிராத காட்சிகளாகும்.

 பார்க்க:புகாரி, பாடம்:ஹல் யகூலுல் இமாமு லில் முகிர்ரி லஅல்லக லமஸ்த அவ் ஃகமஸ்த. மிஷ்காத்,  பாடம்,                    பக்கம்:)


5.குடிமக்கள் மீதான அரசின் அக்கறை.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
 “என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவர்களின் மீது கடன் இருக்கும் நிலையில் ஷஹீதாகக் கொல்லப்பட்டு விட்டார்கள்.              கடன் வழங்கியவர்கள் திருப்பிக் கேட்டு எனக்கு நெருக்கடி தந்தார்கள். உடனே, நான் அண்ணலாரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன்.                                               அல்லாஹ்வின் தூதர் {ஸல்} என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களை அழைத்துப் பேசினார்கள்; என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, மீதியுள்ள கடனை தள்ளுபடி செய்யும்படி வேண்டிக் கொண்டார்கள்.                               
 ஆனால், அவர்களோ நபி {ஸல்} அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் (அவர்களைச் சென்று வருமாறும், நாம் அழைக்கும் போது வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறினார்கள்) என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை, கனிகளைப் பறித்து தரவுமில்லை. மாறாக, ”ஜாபிரே! உம்மிடம் நான் நாளை வருவேன்” என்றார்கள். மறுநாள் கலையில், எங்களின் தோட்டத்திற்கு வந்தார்கள்.                    
 பேரீச்ச மரங்களுக்கிடையில் சுற்றிவந்து, அதன் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்) திற்காக பிரார்த்தித்தார்கள். பின்பு நபிகளார் சென்று விட்டார்கள்.                                       
 நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களின் கடனை முழுமையாக நிறைவேற்றினேன். எங்களுக்கு கடன் கொடுத்தவர்களுக்குப் போக சிறிதளவு கனிகள் கிடைத்தது.               
 பிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர்கள் சபையில் அமர்ந்திருந்த போது சென்று நடந்தவைகளைக் கூறினேன்.                 
 அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அங்கு அமர்ந்திருந்த உமர் {ரலி} அவர்களை நோக்கி “உமரே! கேளுங்கள்” என்றார்கள்.                                                  
 அதற்கு உமர் {ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதை நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம்.” என்றார்கள்.
                (நூல்:புகாரி:பாபு இதா வஹப தைனன் அலா ரஜுலின்)

@அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 “உகல், உரைனா ஆகிய குலத்தார் சிலர் மதீனாவிற்கு வந்து, மாநபி {ஸல்} அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினர்.              பின்பு, அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால் தரும் கால் நடைகளை வைத்து வாழ்பவர்கள். எங்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது.                                        
 ஆகையால், எங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்” வேண்டி நின்றார்கள்.                             
 அப்போது, அண்ணலார் “பத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், ஒரு மேய்ப்பாளரையும் அவர்களுக்கு வழங்கினார்கள்”.
              (நூல்:புகாரி, பாடம்:பாபு கிஸ்ஸத்தி உகலின், வஉரைனா)

  @ இது போன்று தங்களின் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் ஆட்சியாளர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம், மக்கள் கூறிய போது அவர்களின் நலனில் அக்கறையோடு நடந்து கொண்ட ஏராளமான நிகழ்ச்சிகள் வரலாற்றில் காணக் கிடைக்கின்றன.


6.அரசின் மீதான குடிமக்களின் அக்கறை.

அரசிற்கு எப்பொழுதெல்லாம் நிதி நெருக்கடி ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அரசிற்கு ஒத்துழைக்குமாறும், உதவிகள் புரியுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அப்பொழுதெல்லாம் மக்கள் தனி நபராக, குடும்பம் சகிதமாக. கோத்திரம் வாரியாக நெருக்கடிகளை நீக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், மக்களின் அரசின் மீதான இந்த அக்கறையைக் கண்டு மனம் பூரித்துப் போய், அல்லாஹ்விடம் அவர்களின் செல்வ வளத்திற்காக பிரார்த்தித் திருக்கின்றார்கள்.
   

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த புதிதில், கடுமையான வறட்சி நிலவியது.                           மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. மக்கள் யூதன் ஒருவனின் பிஃர ரூமா எனும் கிணற்றிலிருந்து ஒரு முத் விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் வாங்கிக் கொண்டிருந்தனர்.                                               
 ஆனால், போதுமான நிதி இல்லாததால் மக்களின் குறைபாடுகளை களைவதற்கு முடியாமல் போன போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “விலையில்லாமல் தண்ணீரை மக்கள் பெறுவதற்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்குமே, என தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.                         
உஸ்மான் {ரலி} அவர்கள் 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை வாங்கிக் கொடுத்தார்கள்.                
 மீண்டும் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே, மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் வாங்கி மதீனா நகரெங்கும் வாழும் அத்துணை மக்களும் பயன்பெரும் பொருட்டு அதை அர்ப்பணித்தார்கள்.

                     (நூல்:ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:185,186.)

“அல்லாஹ்விற்காக அழகிய கடன் கொடுப்பொர் யார் இருக்கின்றார்கள்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பன்மடங்காக அவர்களுக்குத் திரும்ப வழங்கி விடுவான்; அல்லாஹ் தான் செல்வத்தை பெருக்கவும், குறைக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்ப கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்:2:245) எனும் இறைவசனம்,  வறுமையால் மக்கள் வாடிக்கொண்டிருந்த தருணத்தில் இறக்கியருளப் பெற்றது.                                 
 அந்த இறைவசனம் இறங்கிய அந்தச் சபையில் அமர்ந்திருந்த அபுத்தஹ்தாஹ் எனும் நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் நம்மிடமிருந்தும் கடன் பெருவானா?” என ஆச்சர்யமாகக் கேட்டார்கள்.                                                  
  அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ஆம்” என்றார்கள். உடனே, அபுத்தஹ்தாஹ் {ரலி} அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது தோட்டத்தை எனது இறைவனுக்காக நான் கடன் தந்துவிட்டேன்” என்றார்கள்.                                   
 அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “அந்த தோட்டத்தில் 600 பேரீத்த மரங்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அதை ஏழைகளுக்கும், வறியோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்”

                           (நூல்: அல் இஸ்தீஆப், பாகம்:3, பக்கம்:102.)

ஒரு முறை யுத்தகளத்திற்குச் செல்ல நிதியுதவி செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். மக்களில் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நபிகளாரிடம் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர்.                                  அப்போது அங்கே அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் {ரலி} அவர்கள் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என் பொருளாதாரத்தில் சரி பாதியை இதோ அல்லாஹ்விற்காக வைத்துள்ளேன்” என்றார்கள்.                 அதைக் கேட்ட அண்ணலார் “நீர் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததிலும், உன் குடும்பத்திற்காக மீதப் படுத்தி வைத்திருப்பதிலும் அல்லாஹ் அபிவிருத்தியை நல்குவானாக!” என்று துஆச் செய்தார்கள்.
       (நூல்:அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:1559. உஸ்துல் ஃகாபா, 1/523.)

@இதே போன்று ஒரு சந்தர்ப்பத்தில் அதீ இப்னு ஹாத்தம் {ரலி} அவர்கள் தம்முடைய கோத்திரத்தின் சார்பாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சமூகத்தில் பெருமளவு நிதியைக் கொண்டு வழங்கியதாக உமர் {ரலி} அவர்களின் வாயிலாக முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப் பட்டுள்ளது.                                     
 மற்றொருமுறை, அபீ அவ்ஃபா {ரலி} அவர்களின் தந்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தமது குடும்பத்தார்களின் சார்பாக நிதியுதவி செய்த செய்தி அபீ அவ்ஃபா {ரலி} அவர்களின் வாயிலாக புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆக அரசியல் சாசனத்தை உருவாக்கியதிலும், நேர்மையான அரசியலமைப்பை நிறுவியதிலும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மற்றுமொரு புதிய விதியை உண்டுபண்னினார்கள்.             
   ஆம், ”நேர்மையான ஆட்சிமுறையும், அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒழுக்கமான நடைமுறையையும் இறைவழிபாடாகும்” என முன் மொழிந்தார்கள்.                                     
 அடக்குமுறை, அராஜகம், ஆதிக்கக்குணம், மனித நேயமற்ற இழிகுணங்கள், சதி, சந்தர்ப்பவாதம், சூழ்ச்சி, கயமைத்தனமான குணங்களே மிகைத்து நிற்கிற ஓர் துறையில்,  எந்தப்பாவமும் பாவமே அல்ல என்ற மனப்பாங்கு கொண்ட சாக்கடை களத்தில், புரட்சிகரமான மாற்றத்தை மாநபி {ஸல்} அவர்கள் ஏற்படுத்தினார்கள்.              
  அரசியல் துறையை எந்த அளவுக்கு ஏற்றப் படுத்தினார்கள் என்றால் “ நேர்மையான ஓர் ஆட்சியாளன் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இளைப்பாருவான்” என்று உயர்த்திக்கூறினார்கள்.

 மைக்கேல் ஹெஜ்.ஹார்ட் எனும் ஓர் எழுத்தாளன், தான் ஒரு கிருஸ்துவனாக இருந்தும், கிருஸ்துவ உலகு தன்னை எதிர்க்கும் என்று நன்கு தெரிந்திருந்தும் உலகத்தில் மாற்றம் ஏற்படுத்திய தலைசிறந்த நூறு நபர்களில், முஹம்மத் {ஸல்} அவர்களை முன்னிலை படுத்துவதற்கு ”அண்ணலார் ஓர் தலைசிறந்த அரசியலாளர்” என்பதும் ஒரு காரணமாகும்.

உலகத்தில் தத்துவ ஞானியாக அதிகம் மதிக்கப்படுகிற தெக்கார்தே எனும் அறிஞர் “மனித மேன்மையை அளக்கும் அத்தனை மதிப்பளவைகளாலும் எடை போட்டுப் பார்த்தாலும், முஹம்மத் அவர்களை விட மேன்மையான மனிதர் ஒருவர் உண்டா?” என்று கேட்கத்தோன்றுகின்றது.” என்று வியந்து பாராட்டுகின்றார்.            
உலகமே வியந்து போற்றுகின்ற ஓர் அரசியலாளராக, அரசியல் மாண்பாளராக, அரசியல் கலாச்சாரப் பாதுகாவலராக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விளங்குகின்றார்கள்” என்பது தான் பேருண்மையாகும்.

அண்ணலாரின் அரசியல் முன் மாதிரியை, முன்னெடுத்துச் சென்று அரசியலில் முத்திரை பதிக்கும் ஓர் உன்னத சமுதாயமாக வலம் வர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக! ஆமீன்! ஆமீன்!
                            வஸ்ஸலாம்!

மேலும், அதிகப்படியான தகவல்களுக்கு நம்முடைய முந்தையப் பதிவான “அண்ணல் நபி {ஸல்} அவர்களின் அரசியல் பண்புகள்” எனும் தலைப்பைப் பார்க்கவும்.

சங்கைக்குரிய உலமாப் பெருமக்களே! நம்முடைய வலைப்பகுதிக்கு வருகை தருகின்ற அனைத்து உலமாக்களும் அரபி வாசகங்களையும், பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ்.. ஃபிப்ரவரியில் இருந்து மேற்கொள்ளப்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இன்ஷா அல்லாஹ்.. வருகிற 25.1.2014, சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில், கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, திருவிதாங்கோடு, ஜீலானி பள்ளி சமீபத்தில் ”மா பெரும் மீலாது மாநாடு”  காயல் மஹ்லரா அரபிக்கல்லூரின் பேராசிரியர் எஸ். அப்துர்ரஹ்மான் ஃபாஸில் அஹ்ஸனி அவர்கள் தலைமை தாங்க, திருவை வட்டார & மாவட்ட உலமாக்கள் மற்றும் உமராக்கள் முன்னிலை வகிக்க,                                            
 கோவை அ. அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஸ்ரத் “அகில உலகங்களின் அருட்கொடை அண்ணல் நபி {ஸல்} எனும் தலைப்பிலும், மஹ்லரா பேராசிரியர், கே. எம். காஜா முஹ்யித்தீன் பாகவீ ஹஸ்ரத் “அண்ணலாரைப் புகழும் அல்லாஹூ” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர். அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அன்போடு அழைக்கின்றோம். வர இயலாதவர்கள் விழா சிறக்க துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                               இவண்,
            கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
                                   &
                என்.எஸ்.எம். பஷீர் அஹ்மத் உஸ்மானி
   (தலைமைஆசிரியர், மதரஸா சிராஜுல் ஹுதா, ஆளூர், நாகர்கோவில்)


4 comments:

  1. அருமை.தங்களின் முயற்சியை அல்லாஹ் கபூல் செய்வானாக...ஆமீன்

    ReplyDelete
  2. பலவழிகளிலும் யோசித்து முயற்சித்து எழுதியுள்ளீர்கள். மிக நீளமான கட்டுரை; கொஞ்சம் சுறுக்கி இருக்கலாம்.

    ReplyDelete
  3. பலவழிகளிலும் யோசித்து முயற்சித்து எழுதியுள்ளீர்கள். மிக நீளமான கட்டுரை; கொஞ்சம் சுறுக்கி இருக்கலாம்.

    ReplyDelete