Wednesday 29 January 2014

நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்!!


             நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்!!




  நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும்.

வானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும்.


 நன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான்.

 நன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான்.
காரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்…

இந்த நன்றியுணர்வை படைத்த இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.


அது தான் ஒரு மனிதனின் ஈருலக வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும், எண்ணற்ற அருட்பேறுகளை அடையச் செய்திடும், என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.

படைத்தோனுக்கு நன்றி செலுத்துதல்.

      படைத்தோனுக்கு செலுத்தும் நன்றி என்பது நம்முடைய நாவு மற்றும் உள்ளம், உடல் உறுப்புக்கள் ஆகியவைகளுடன் தொடர்புடைய ஓர் இபாதத் வணக்கமாகும்.

      உள்ளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நன்றி என்பது “நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டுள்ள எல்லாவகையான சிறப்புக்களும், அருட்கொடைகளும் (அதை நாம் நம்முடைய முயற்சியின் மூலமாகவோ, அல்லது உழைப்பின் மூலமாகவோ பெற்றிருந்தாலும் சரியே!) அல்லாஹ்வினால் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும்.

 1.நாவினால் நன்றி செலுத்துவது


அல் ஃபகீஹ் அபுல் லைஸ்  அஸ் ஸமர்கந்தீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: நன்றியுணர்வோடு வாழ்வது என்பது ஒரு வணக்கமாகும். அல்லாஹ்வின் தூதர்களான நபிமார்கள், வானவர்கள், முன்னோர்களான நல்லோர்கள், பூமியில் வாழும் நல்லடியார்கள், சுவனவாசிகள் என இவர்களின் சிறப்பியல்புகளாக இப்பண்பு இருக்கின்றது என்று அல்லாஹ், அல்குர்ஆனின் பல இடங்களில் பேசுகின்றான்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு வயதான காலத்தில் வழங்கப்பட்ட குழந்தைப் பேற்றை நினைத்து நெகிழ்ந்து “ முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய மக்கள் செல்வங்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! திண்ணமாக! என்னுடைய இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவனாவான்.”  (அல்குர்ஆன்:14:39) என பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

இவ்வுலகில் பெரும் பேற்றை பெற்றவர்களான இறைத்தூதர்களான தூவூத் அலைஹிஸ்ஸலாம், ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் தங்களின் உயர்வான நிலையை நினைத்து மனம் மகிழ்ந்து “அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும்! அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரை விட, எங்களுக்கு ஏராளமான சிறப்பை வழங்கினான்.” (அல்குர்ஆன்:27:15) என உருகிப் பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தையும் பெறும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கப்பலில் ஏறிய பிறகு அல்லாஹ் கூறினானாம் “ நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக்கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!” (அல்குர்ஆன்:23:28)


சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும் இப்படிக் கூறுவார்களாம்: “அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மை படுத்திவிட்டான். மேலும், எங்களைப் பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆஹா! செயல்படக்கூடியவர்களுக்குத் தான் கூலி எவ்வளவு உயர்வானதாய் இருக்கின்றது!”                                      (அல்குர்ஆன்:39:74)

மற்றோர் இடத்தில்..
சுவனத்து இன்பங்களை அனுபவிக்கும் போது இப்படிக் கூறுவார்களாம்: “நம்மை விட்டும் கவலையை அகற்றிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய கண்ணியத்தை வழங்குபவனாகவும் இருக்கின்றான். அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.”                       (அல்குர்ஆன்:35:34,35)

மற்றோர் இடத்தில்..
சுவனத்து இன்பங்களை கண்ணாரக் கண்டதும் இப்படிக்கூறுவார்களாம்: “எங்களுக்கு இங்கே வருவதற்கான வழியினைக் காட்டிய அல்லாஹ்வுகே எல்லாப்புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்திராவிட்டால், நாங்கள் நேர்வழியை ஒரு போதும் அடைந்திருக்க மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம் அவர்களை அழைத்துக்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்கான சிறந்த பகரமாக இது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.”                             (அல்குர்ஆன்:7:43)   


            (நூல்:தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்:2, பக்கம்:350,351)

2.உள்ளத்தால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது

இன்றைக்கு எந்த ஒரு மனிதனிடத்தில் அவனுடைய வாழ்வின் முன்னேற்றத்தைக் குறித்து கேட்டாலும், அது என்னுடைய முயற்சியினால் வந்தது. என்னுடைய அறிவாற்றலால் வந்தது. என்னுடைய உழைப்பால் வந்தது எனக்கூறுவதை பார்க்கின்றோம்.

ஆனால், உண்மையில்  இது நன்றி மறந்த பேச்சாகும். அல்லாஹ்வை மறந்த உணர்வின் வெளிப்பாடாகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உங்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்.
 பின்னர், உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்து விடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக் கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள்.
பிறகு அந்த கஷ்ட காலத்தை உங்களை விட்டும் அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் சிலர் (அதை நீக்கியதற்காக செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்; அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக! சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள்! விரைவில் அதன் விளைவை அறிந்து கொள்வீர்கள்.                              (அல்குர்ஆன்:16:53-55)

இறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்களாம்: “அல்லாஹ்வே நீ எனக்கு ஏராளமாக உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய்! உனக்கு எப்படி நான் நன்றி செலுத்த வேண்டும்? அதற்கு அல்லாஹ் “தாவூதே! நீர் இப்போதே நமக்கு நன்றி செலுத்தியவறாவீர்” என்றானாம்.”                           (நூல்:தஃப்ஸீர் அல் குர்துபீ,1/398)

ஒரு சமயம் முஹம்மத் இப்னு முன்கதிர் {ரஹ்} அவர்கள், தங்களது நண்பர் அபூ ஹாஸிம் {ரஹ்} அவர்களைச் சந்தித்து “அபூ ஹாஸிம் அவர்களே! என்னை நிறைய மக்கள் அடிக்கடி வந்து சந்திக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களை நான் யாரென்றே அறியேன்.
ஆனாலும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்காக துஆ செய்கின்றார்கள். நான் நெகிழ்ந்து போகின்றேன். ஆதலால், நான் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன்.” என்றார்கள்.
அதற்கு, அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள் “உம் திறமையால் தான் இவ்வாரெல்லாம் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்; உம் கல்வியால் தான் உமக்கு மரியாதை தருவதாக நீர் கருதிவிடாதீர்கள். ஏனெனில்,
அல்லாஹ் குர்ஆனில் ”எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் மக்களின் உள்ளங்களில் அன்பைத் தோற்றுவிப்பான்.” (அல்குர்ஆன்:19:96) என்று கூறுகின்றான்.
உமக்கு முன்னால் வாழ்ந்த பல முன்னோர்களுக்கும் இது போன்று நடந்துள்ளது. ஆகவே, மக்களின் உள்ளத்தில் உம் மீதான பிரியத்தை ஏற்படுத்தியது அல்லாஹ் தான் என்று உம் இதயத்தில் இருத்துவீராக! இதற்காக அல்லாஹ்விற்காக நீர் நன்றி செலுத்துவீராக!” என்று கூறினார்கள்.
             (நூல்:அத்துலாலுல் ஸம்ரதிய்யா, பாபு அஷ் ஷுக்ர்)

இப்னுல் கைய்யூமுல் ஜவ்ஸீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “மனதால் நன்றிசெலுத்துவது என்றால் நம்மை படைத்தது முதல் வாழ்வில் எத்தனையோ அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்; வழங்குவான். அவை அனைத்தும் அல்லாஹ் தான் வழங்கியிருக்கின்றான் என்று உறுதியாக  நம்புவதும், நினைப்பதுமாகும்.       (நூல்:அல் அத்கியாஃ, பக்கம்,127)

3.உடல் உறுப்புக்களால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது.

அல்லாஹ் வழங்கியுள்ள கண், காது, கை, கால் போன்ற இன்னும் இருக்கின்ற ஏனைய உறுப்புக்கள் அனைத்தையும் அவனுக்குப் பிரியமான வழிகளில் பயன்படுத்துவதும், அவன் விலக்கியிருக்கின்ற வழிகள் அனைத்திலிருந்தும் பகிரங்கமாகவும், இரகசியமான நிலையிலும் விலகியிருப்பதாகும். என்று ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாமா இப்னு ஹஜர் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எப்படி நாவாலும், உள்ளத்தாலும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டுமோ, அது போன்றே உடலாலும் வெளிப்படுத்த வேண்டும்.
 நன்றி செலுத்துவதில் பூரணமானது உடலால் செய்யப்படும் அமல்களே ஆகும். ஏனெனில், அல்லாஹ் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தினர்களை நோக்கி “ தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள்! என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர் தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.” (அல்குர்ஆன்:34:13) என்று கூறுகின்றான்.                               (நூல்: ஃபத்ஹுல் பாரீ,3/398)

ஒரு முறை அப்துர்ரஹ்மான் இப்னு ஜரீர் என்பவர்கள் தங்களோடு மகனையும் அழைத்துக் கொண்டு தாபியீ அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் {ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
 நீண்ட நேரம் உரையாடிவிட்டு அபா ஹாஸிம் அவர்களே! நன்றி செலுத்துவதைப் பற்றி நிறைய உரைகளை உலமாக்கள் ஆற்றுகின்றனர்.
 ஆனால், அதன் உண்மையான வடிவம் தான் என்ன? அனைத்து உறுப்புக்களின் வாயிலாகவும் நன்றி செலுத்த வேண்டும்” என்றார்கள் அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள்.
அப்படியா? கொஞ்சம் விவரமாகத்தான் கூறுங்களேன். கண்களின் நன்றியுணர்வை எப்படி வெளிப்படுத்துவது?

பிறரிடம் நீர் நல்ல விஷயங்களைப் பார்த்தால் அதை நீ சொல்லிவிடு, பிறரிடம் நீர் தீய விஷயங்களைப் பார்த்தால் அதை எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிடு. என்றார்கள் அபூஹாஸிம்.

காதுகளின் மூலம் நன்றி செலுத்துவது எப்படி? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “நீர் நல்ல விஷயங்களைக் கேட்டால் பாதுகாத்துக் கொள்ளும்; கெட்ட விஷயங்களைக் கேட்டால் விட்டுவிடுவீராக” என்றார்கள்.

கைகளின் நன்றி எது? என்று அவர் கேட்டார். அதற்கு அபூ ஹாஸிம் {ரஹ்} “அல்லாஹ் தடுத்திருக்கின்ற எதையும் அவைகளால் செய்யாதே! அல்லாஹ்வின் கடமைகளைச் செய்ய விடாமல் அவைகளைத் தடுக்காதே!” என்றார்கள்.

வயிற்றின் நன்றி எது? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “அதன் அடிப்பகுதியை உணவால் நிரப்புவீராக! அதன் மேல்பகுதியை அறிவால் நிரப்புவீராக!” என்றார்கள்.

மர்ம உறுப்பின் நன்றி என்ன? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர!” (அல்குர்ஆன்:23:5,6.) எனும் இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
                      (நூல்:தாரீகே திமிஷ்க் லிஇப்னி அஸாக்கிர்)

உபைத் இப்னு உமைர் {ரஹ்} அவர்கள் அன்னை ஆயிஷா {ரலி} அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் நடந்த மிக ஆச்சர்யமான விஷயத்தை எங்களுக்கு சொல்லமுடியுமா? என்று கேட்டார்கள்.

இதைக் கேட்டதும் அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அழுது விட்டார்கள். பின்பு சொன்னார்கள்.

 ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னுடன் தங்கிய ஓர் இரவில் நடு நிசியில் எழுந்தார்கள்; ஆயிஷாவே! என்று அழைத்து “என் இறைவனை வணங்க எனக்கு அனுமதி வழங்குவாயா?” என்று கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக! உங்களின் நெருக்கத்தையும், உங்களுக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியை தருமோ அதையும் நான் மிக நேசிக்கின்றேன்.” என்றேன்.

பின்பு எழுந்தார்கள், உளூ செய்தார்கள், தொழுதார்கள். அழுதார்கள், அமர்ந்து அழுதார்கள், பூமியில் முகத்தை புதைத்து அழுதார்கள். அவர்களின் தாடி நனையுமளவுக்கு அழுதார்கள்.

அப்போது பிலால் {ரலி} தொழுகைக்காக அழைக்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அழுகின்றீர்கள்?  நீங்கள் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக இருக்கின்றீர்களே! என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “பிலாலே! நான் என் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும்? இப்போது தான் எனக்கு அல்குர்ஆனின் (3:190-191) வசனங்கள் இறக்கியருளப்பட்டது. யார் இந்த வசனங்களை ஓதிவிட்டு சிந்திக்காமல் இருக்கின்றாரோ அவர் நாசமடைந்து போய்விடுவார்.” என்று கூறினார்கள்.

                 (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:574)


அல்லாஹ் புகழும் சிறப்புப் பண்பு.

“ நிச்சயாக! இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அவர் ஒரு போதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியில் அவரை செலுத்தினான்.”                                       (அல்குர்ஆன்:16:120)

“திண்ணமாக! நூஹ் நன்றியுள்ள ஓர் நல்லடியாராகத் திகழ்ந்தார்.                                              (அல்குர்ஆன்:17:3)

”அதற்கு அல்லாஹ் மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விடவும் உம்மை நான் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். எனவே, உமக்கு  நான் வழங்கியிருப்பதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்துவோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான்.
                                                  (அல்குர்ஆன்:7:144)

 ”நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக பொருந்திக் கொள்கின்றான்.”                                        (அல்குர்ஆன்:39:7)



அடியார்களுடன் நன்றியுணர்வுடன் நடப்பது.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது போன்று, அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் கடமையாகும்.
”எவர் மக்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள மாட்டார்களோ, அத்தகையவர்கள் அல்லாஹ்வின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளமாட்டார்கள்” என அருமை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                            (நூல்:திர்மிதீ)

“எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                                                        (நூல்:திர்மிதீ)

“ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் உபகாரம் செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு கைரன்” என்று கூறுவாரானால், அவர் நல்ல முறையில் வாழ்த்துச் சொல்லி விட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                             (நூல்:திர்மிதீ)

ஆனால், இன்று உலகத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு உபகாரம் செய்தவரை உதாசீனப்படுத்துகின்ற காட்சியை சாதாரணமாக கண்டுவருகின்றோம்.

ஒரு காலத்தில் இவண் உயர ஏணியாய், வாழ்க்கையில் கரை சேர்க்கும் துடுப்பாய், இருந்தவர்களை எட்டி உதைக்கும் பாவியாய் மாறிப்போனதை அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து வருகின்றோம்.

அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு செய்த முதல் வஸிய்யத்தே “எனக்கு நீ நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்; உன் பெற்றோருக்கும் நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்.” (அல்குர்ஆன்:31:14) என்பது தான்.

ஆகவே, நம்முடைய அடியார்களுடனான தொடர்புகளில் முதலில் நாம் நம்முடைய பெற்றோர்களிடத்திலிருந்து துவங்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்க்கையில், தங்களுக்கு பக்கபலமாய், ஆதரவாய் உபகாரியாய் இருந்தவர்கள் எவருக்கும் பிரதி உபகாரம் செய்யாமல் இருந்ததில்லை. அவர்கள் எதிரிகளாக இருந்த போதிலும் சரியே!

அல்லாஹ் கேட்கின்றான்: “ நபியே! உம் இறைவன் உம்மை ஒரு போதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட சிறந்ததாய் இருக்கும்; மேலும், உம் இறைவன் விரைவில்  நீர் திருப்தி அடைந்திடும் அளவிற்கு உமக்கு வழங்குவான். அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடமும் தந்தான் இல்லையா?” (அல்குர்ஆன்:93:3-6)

இங்கே அல்லாஹ் நபிகளாரை தங்களின் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கச் சொகின்றான். அங்கே புகலிடம் தந்தவர்கள், அரவணைத்தவர்கள், ஆதரவளித்தவர்கள் என அத்துணையையும் எண்ணிப் பார்க்குமாறு தூண்டுகின்றான்.

அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிக அறிவேன்” என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

(நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா)

இதே போன்று நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மரணத்தின் போதும் மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால், மண்ணறையில் புரள வில்லை. அப்பாஸ் {ரலி} அவர்களுக்கு செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரமாக…

(நூல்:இஸ்தீஆப், 2/76. இப்னு கஸீர், தவ்பா 80-ம் வசனத்தின் விளக்கம்)

நபி {ஸல்} அவர்களிடம் பத்ரில் கைதிகளாக பிடிக்கப் பட்ட குஃப்ஃபார்கள் விடுதலை சம்பந்தமாக, குறைஷ் தலைவர்கள் பேச வந்த போது இப்போது முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன். ஏனெனில், ஷுஃபே அபூ தாலிபில் அண்ணலாரை சமூக பகிஷ்கரிப்பு செய்து வைத்திருந்த போது அவரின் குதிரை மீதேற்றி ஊர் முழுக்க சுற்றிவந்தார்கள். மக்காவில் தொங்கவிடப்பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தவர்களில் அவரும் ஒருவர்.                (நூல்: ரஹீக்)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூபக்ர் {ரலி} அவர்கள் குறித்து கூறும் போது, நான் இந்த உலகத்தில் எனக்கு உபகாரம் செய்த அனைவரின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து விட்டேன். ஆனால் அபூபக்ர் {ரலி} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் நாளை மறுமையில் வழங்குவான் என குறிப்பிட்டார்கள்.                 

                         (நூல்:புகாரி, பாபு ஃபள்லி அபீபக்ர் {ரலி}..)

ஆகவே, அல்லாஹ்வின் விஷயத்திலும், அடியார்கள் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்பவனே சிறந்த ஓர் இறை நம்பிக்கையாளனாவான்.

மனிதனை நன்றிமறந்தவனாக மாற்றும் விஷயத்தில் ஷைத்தான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றான்.

“அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்ல விடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப்புறமாகவும் இடப்புறமாகவும், அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நீ நன்றி செலுத்துவோராக காணமாட்டாய்.”                                      (அல்குர்ஆன்:7:16,17)


கோபர்ட் கில்லி அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக புகழ் பெற்றவர். ஆனால், தனது சிறுவயதில் வறுமையுடன் போராடினார். தனது 13-வது வயதில் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் போடுவது என பகுதி நேர வேலை செய்து வந்தார்.

ஆனாலும் வருமானம் போதவில்லை. ஒருமுறை கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து போய், உண்ண உணவில்லாமல் திண்டாடினார். ஒரு ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பசியமர்த்திவிடலாம் என்று நினைத்தார்.

ஆனால், அதற்கான வழிதான் கிடைக்கவில்லை. ஒருவாறாக, தான் பேப்பர், பால் போடுகிற வீடுகளில் பிச்சையெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, ஒரு வீட்டின் கதவை தட்டினார். கதவைத் திறந்தது அவர் வயதில் இருந்த ஒரு சின்னப்பெண்.

அந்தப் பசியிலும் அவரின் சுயமரியாதை விழித்துக் கொண்டது. போயும் போயும் ஒரு சின்னப் பெண்ணிடம் பிச்சைக் கேட்பதா? என்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு “எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார். அந்த சின்னப்பெண் அவரின் கண்ணில் அவரின் பசியை விளங்கிக் கொண்டார்.

உள்ளே சென்ற அவள் ஒரு கோப்பை நிறைய பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் பாலை அருந்தியவர், “இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். தன் கவுரவத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல்.

அந்தச் சிறுமி நாங்கள் ஒன்றும் பால் வியாபாரம் செய்யவில்லை; உன் கண்னில் பசியின் கோரம் தெரிந்தது. அதனால் தான் பாலைக் கொடுத்தேன், காசுக்கு அல்ல என்றாள்.

காலம் தான் எத்தனை முகங்களுடையது. கோபர்ட் டாக்டர் படிப்பை முடித்தார். டாக்டராக பிரபலமான போது, மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றை நிறுவி, அதன் தலைமை மருத்துவரானார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நோயாளியாக வந்து சேர்ந்தார். அவள் நோயின் தீவிரம் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

ஒரு நாள் அவள் வார்டில் நுழைந்த டாக்டர் கோபர்ட், அவளது கேஷ் சீட்டைப் பார்த்தார். அவள் கொடுத்திருந்த முகவரியை பார்த்ததும் அப்படியே ஷாக்காகிப் போனார். அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் முகவரி குறித்து விசாரித்தார். தாம் அந்த முகவரியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். அப்போதே தமது மருத்துவ குழுவினர்களை அழைத்து, ”அப்பெண்மணிக்கு எத்தகைய உயர்சிகிச்சை செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள். உடனே செய்யுங்கள். அவருக்கு தேவையான அத்துணை வசதிகளையும் செய்து கொடுங்கள்.” என்று உத்தரவிட்டார்.

அவருக்கு அளித்த ராஜ சிகிச்சையில் நோய் நீங்கி முழுமையாக குணமானாள். தலைமை டாக்டர் வந்து சென்றது முதலே, தமக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறையை அப்பெண்மணியும் அறிந்துவைத்திருந்தாள்.

ஆனாலும், தமக்கான பில் எவ்வளவு வருமோ என்கிற கவலையில் இருந்த போது, நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம் என தலைமை மருத்துவர் கூறிவிட்டார்” என்று நர்ஸ் ஒருவர் கூறிவிட்டு, பில்லை நீட்டினார்.

பில்லை வாங்கிய அந்தப் பெண் அந்தச் சீட்டில் தலைமை டாக்டர் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தாள். அதில் “இந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான பில் 40 வருடத்திற்கு முன்பே ஒரு கோப்பை பாலில் தீர்க்கப்பட்டு விட்டது.”  என்று எழுதியிருந்தது.
அப்போது தான் அந்தப் பெண்னுக்கே அந்த தலைமை டாக்டர் யார் என்பது தெரியவந்தது. அவர் பசியின் கொடுமையில் சிக்கித் தவித்த போது கொடுத்த ஒரு கோப்பை பாலுக்கு இப்படி நன்றியுணர்வோடும் ஒருவரால் நடந்து கொள்ளமுடியுமா? என வியந்தவாறு அப்பெண்மணி வீட்டிற்குச் சென்றாள்.

                  (நன்றி:தினத்தந்தி குடும்பமலர்,4.8.2013, பக்கம்:11)

நன்றியுணர்வோடு வாழ்ந்திட அனுதினமும் அல்லாஹ்விடம் முறையிடுவோம்! ஏனெனில், அதுவும் கூட அல்லாஹ்வின் ஒரு அருட்கொடைதான்.

முஆத் பின் ஜபல் {ரலி} அவர்களை ஏமனுக்கு நபிகளார்  அனுப்பிய போது, அவர்களிடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் “அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக!” என்று பிரார்த்திக்குமாறு வஸிய்யத் செய்தார்கள்.

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் நன்றியுணர்வாடு வாழ்ந்திட உதவிபுரியுமாறு பிரார்த்தித்ததை அல்குர்ஆனின் 27:19-வது வசனம் கூறுகின்றது.

உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குள் நுழந்தார்கள். அங்கே ஒருவர் அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்ற அவருக்கு ஆச்சர்யம் அவர் ”அல்லாஹ்வே! என்னை குறைவான எண்ணிக்கை கொண்டவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக! (அல்லாஹும் மஜ்அல்னீ மினல் அகல்லீன்) என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் துஆ கேட்டு முடிந்ததும், அவரை அழைத்து உமர் {ரலி} அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 40-வது வசனத்திலும், ஸபா அத்தியாயத்தின் 13-வது வசனத்திலும், ஸாத் அத்தியாயத்தின் 24-வது வசனத்திலும்” கூறியிருப்பதைத் தான் நான் என் துஆவில் கேட்டேன் என்றார்.

உடனே உமர் {ரலி} அவர்கள் “ நீர் உண்மையைத் தான் உரைத்தீர்” என்று கூறினார்கள்.

                     (நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:121)

அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடைகளையும் அள்ளித்தருகின்ற நன்றியுணர்வை நமதாக்குவோம்.

நன்றியுணர்வை வெளிப்படுத்தி நல்லதொரு வாழ்வை அமைத்திடுவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும் நன்றியுணர்வுள்ளவர்களாக ஆக்கியருள்புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!





































          
       

4 comments:

  1. அற்புதமான செய்திகள். கட்டுறையை கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete