Tuesday 11 February 2014

வாழும்போதும்…வாழ்க்கைக்குப்பிறகும்….


 வாழும்போதும்வாழ்க்கைக்குப்பிறகும்….



 வலிமார்களின் அற்புதங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்ற, அல்லது சிந்தித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகம்ஒரு நாளும் அவர்களின் (வலிமார்களின்)  வாழ்க்கையே அற்புதமாய் மாறிப் போயிருந்ததைப் பற்றி சிந்தித்ததில்லை.

அவர்கள் நிகழ்த்திக்காட்டும் அற்புதங்களுக்குப் பின்னால், அந்த ஆற்றல் வழங்கப்படுவதற்குக் காரணமாய் அமைந்த அடிப்படை அம்சம் குறித்து ஒருபோதும் பேசியதுமில்லை.

இறைநேசச் செல்வர்கள் எனும் உயரிய நிலைக்கு அவர்களை அழைத்துச் சென்றது எது?

நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் எவ்வித அச்சமும், பயமும், கவலையும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்திடும் சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது எது?
இன்னும் இது போன்று இந்த உம்மத்திற்கு எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு, அற்புதம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையில் தரப் பட்டிருக்கும் பதில் ஒன்று தான்! அதுவும் ஒற்றை வார்த்தையில் தான்!

வாழ்வும் மரணமும் அது அல்லாஹ்வுக்காக மட்டுமே!” என்று.

இறைநேசர்களெனும் வலிமார்கள் இரண்டு விஷயங்களை அவர்கள் மிகவும் உயர்வாகக் கருதினார்கள். அதற்காகவே, தங்களின் வாழ்க்கையை அல்லாஹ்விற்காக சாதிக்கும் சாதனைத் தளமாக மாற்றியமைத்தார்கள்.

1.அல்லாஹ் தான் படைத்திருக்கின்ற கோடான கோடி படைப்புக்களில் தம்மை மனிதனாக படைத்தமையை..
2.அத்தகைய மனிதர்களில் மிகச் சிறப்பாக தம்மை தேர்ந்தெடுத்து, ஹிதாயத் எனும் நற்பேற்றினை வழங்கியமையை..

ஆகவே தான், தங்களின் வாழ்நாள் முழுவதும் இறைநேசத்தைப் பெற்றுத்தருகிற அத்துணைத் தளங்களிலும் தம்மை அல்லாஹ்விற்காக முழுமையாக ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.

எனவே தான், அல்லாஹ் அவர்கள்வாழும்போதும்  வாழ்க்கைக்குப் பிறகும்..” எல்லாவிதமான மனக் கலக்கத்திலிருந்தும், சஞ்சலத்திலிருந்தும், அச்சத்திலிருந்தும் நிம்மதிபெற்றவர்கள் என்றும், ஈருலகிலும் சோபனத்திற்குரிய, போற்றுதலுக்குரிய வாழ்க்கையை எய்தப் பெறுவார்கள் என்றும் அல்குர்ஆனில் (10:62,63.) உறுதி படக் கூறுகின்றான்.

இறைநேசச் செல்வர்களைப் போற்றிப் புகழ்கிற, உயர்த்திக் கூறுகிற இந்த முஸ்லிம் உம்மத்அற்புதமாய் மாறிப்போன அவர்களின் வாழ்க்கைப் பாதையில் பயணிக்க முன் வராததேனோ?”


இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வது

ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு மண்ணறையைப் பார்க்கிறார்கள்.

அது சமீபத்தில் இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.

தோழர்கள் அதுஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.

கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக

யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும் செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல் வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டார்! யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக!

            (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:234.)

அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் அவர்களின் கண் முன்னே இருந்து கொண்டிருந்தது.

ஆட்சித்தலைவராக இருந்து கொண்டு யுத்தத்திற்குச் சென்று விட்டு இப்போது தான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு அமீருல் முஃமினீனாக அங்கேயும் சிந்திப்பதற்கும் கவலைப் படுவதற்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.

ஆனாலும், மண்ணறையின் முன் நின்று அழுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்வதற்கும் அவர்களைத் தூண்டியது எது?

கொஞ்சம் பின்னோக்கிப் போய் உஹத் யுத்த களத்தை நம் மனக் கண் முன் கொண்டு வருவோம்.

உஹத் யுத்தம் முடிந்து, எதிரிகளெல்லாம் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருக்கிற தருணம் அது.

போரில் உயிர் நீத்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் நபித் தோழர்களோடு மாநபி {ஸல்} அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

தூரத்தில் ஓர் வெண்ணிற மேனி கொண்ட ஓர் உடல் செங்குருதியால் நனைக்கப்பட்டு, அசைவற்று கிடந்ததைக் கண்ணுற்ற பெருமானார் {ஸல்} அந்த உடலை நோக்கி ஓடிப் போகிறார்கள்.

பூமியில் புதைந்திருந்த முகத்தை திருப்பிப் பார்க்கின்றார்கள். அது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் புனித உடல். எதிரிகளால் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்ததை மாநபி {ஸல்} அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

தோழர்களை அழைக்கின்றார்கள் {ஸல்} அவர்கள். அப்படியே அவரை மடியில் கிடத்தி அழுதவர்களாகஅல்குர்ஆனின் (33:23) –ஆம் வசனத்தை ஓதியவர்களாகமுஸ்அபே! மக்காவில் வாழ்ந்த உம்முடைய ஆரம்ப கால வாழ்வை நான் நன்கறிவேன்! உம்மை விட அழகிய ஓர் வாழ்வை யாரும் வாழ்ந்ததாக நான் அறிந்திருக்க வில்லை! ஆனால், இன்றோ! தலையை மூடினால் கால் தெரிகிறது; காலை மூடினால் தலை தெரிகிறது! முழுமையான ஒரு கஃபன் துணி கூட இல்லை!

அல்லாஹ்வின் தூதர், நாளை மறுமையில் நீர் உயிர்த் தியாகி தான் என உமக்காக சாட்சி கூறுவார்!” என்று கூறினார்கள்.

பின்பு தோழர்களை நோக்கிமக்களே! அல்லாஹ்விற்காக வாழ்ந்து உயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள்! இவர்களிடம் வாருங்கள்! இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் சொல்லும் ஸலாத்திற்கு அவர்கள் பதில் தருகின்றார்கள்!” என்று கூறினார்கள்.

             (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:31.)

உண்மையில், தம் தோழர்களில் 70 நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இழந்திருந்தார்கள். அதையெல்லாம் விட தமது பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்ட நிலையில்

 பெருமானார் {ஸல்} அவர்கள்முஸ்அப் (ரலி) அவர்களின் புனித உடல் முன் நின்று அழுததுஎப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருந்த நிலையில் அல்லாஹ்விற்காக வாழும், வாழ்ந்து மரணிக்கும் ஓர் உன்னத வாழ்வை தேர்ந்தெடுத்த ஓர் உத்தமரை நினைவு கூர்ந்திடும் நோக்கில் தான்.

இங்கிருந்து தான் அலீ (ரலி) அவர்கள் பாடத்தையும், முன் மாதிரியையும் பெற்றார்கள்.

ஆனால், இன்றோ இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வதும், அவர்களைப் பற்றி பேசுவதும் பாவம் என நினைக்கும் அளவிற்கு தவறான சிந்தனையை சமூகத்தில் சிலர் விதைத்து விட்டனர்.

மேலே கூறப்பட்ட இரு வரலாற்றுச் செய்திகளும் நமக்கு உணர்த்துவது இது தான்இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வதும் நபி வழியே!”

இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை வாசிப்பது

அல்குர்ஆனில் அல்லாஹ் சுமார் 1000 வசனங்களின் மூலம் முன்னோர்களான நபிமார்கள், அவர் தம் சமுதாயத்தினர் வரலாறு குறித்தும், ஸாலிஹீன்களான இறைநேசர்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றான்.

சில போது வரலாற்றை துவங்குகிற போதும், சில போது வரலாற்றை முடிக்கிற போதும் திண்ணமாக, இவ் வரலாற்றில் அறிவுடையோருக்கு நல்ல பல சான்றுகளும், படிப்பினைகளும் இருப்பதாகக் கூறுகின்றான்.

கஹ்ஃப் குகை வாசிகள், மர்யம் அலைஹிஸ்ஸலாம், லுக்மான் அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவையில் இருந்த நல்லடியார், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார், துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம், யாஸீன் சூராவில் கூறப்படும் இளைஞரான இறைநேசர், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அலைஹிஸ்ஸலாம், சூரா மஆரிஜில் கூறப்படும் அஸ்ஹாபுல் உஃக்தூத்என ஈமானில் ஏற்றத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிற இறைநேசர்களின் வாழ்க்கையை அல்லாஹ் குர்ஆனில் கூறி வாசிக்கத் தூண்டுகின்றான்.

இறைநேசர்களின் வரலாறுகளை வாசிப்பதால் மாசடைந்த நம் இதயங்கள் தூய்மை பெறுகின்றன.

ஈமானின் நிலை உயர்வை அடைகின்றன. நல் அமல்களின் தரம் ஏற்றம் பெறுகின்றன.

1.வாய்மைக்கு சான்றாய் விளங்கிய பா யஸீது {ரஹ்}

பா யஸீதுல் பிஸ்தாமி {ரஹ்} அவர்கள் சிறு பிராயமாக இருக்கும் போது, அவர்களின் தாயார் பக்தாத் மாநகருக்கு கல்வி பயில அனுப்பி வைத்தார்கள்.

அவருக்கு செலவுக்கு 40 திர்ஹத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

வழியனுப்புகிற போதுஎக்காரணத்தைக் கொண்டும் வாழ்வில் எந்தத் தருணத்திலும் பொய் பேசிடக்கூடாது. உண்மையை பேசாமல் இருந்திடக்கூடாதுஎன்று உபதேசம் செய்து அனுப்பினார்கள்.

பக்தாதுக்குச் செல்கிற ஓர் வணிகக் கூட்டத்தோடு பயணமானார் பா யஸீத் {ரஹ்} அவர்கள்.

வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் வணிகக் கூட்டத்தை இடை மறித்து அவர்கள் கொண்டு வந்த சாதனங்களையும், பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

பா யஸீத் {ரஹ்} அவர்களிடம் திருடர்கள் உம்மிடம் என்ன இருக்கிறது எனக்கேட்டு மிரட்டினர். பா யஸீத் அவர்கள்என்னிடம் 40 தீனார் இருக்கிறதுஎன்று கூறினார்.

சிறுவன் ஏதோ பயந்து உளருகின்றான் என எண்ணி அவரிடம் இருந்து பறிக்காமல் விட்டு விட்டனர்.

வணிகக் கூட்டத்தினரை விட்டு விட்டு, பா யஸீதை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றனர். ஓர் குகைக்குள் சென்றனர். அங்கே அவர்களின் தலைவன் வீற்றிருந்தான்.

தன் சஹாக்களைக் கண்டதும் சிரித்தபடி ஓடோடி வந்து, என்ன? எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? வணிகக் கூட்டத்தார்களிடமிருந்து அத்தனை பொருட்களையும் கொள்ளையடித்து விட்டீர்களா? என்று கேட்டான்.

ஆம் தலைவா! ஆனால், ஒரு சிறுவன் மட்டும் தன்னிடம் 40 தீனார் உள்ளதாக கூறினான். ஏதோ சதித் திட்டம் தீட்டுகின்றானோ என எண்ணி நாங்கள் கையோடு அழைத்து வந்து விட்டோம்.

தலைவன் பா யஸீத் {ரஹ்} அவர்கள் அருகில் வந்து, “ நீ என்ன பைத்தியமா?” உன் பொருளையும் உன் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு நீ பொய் சொல்லி தப்பியிருக்கலாமே? ஏன் உண்மையை சொல்லி எங்களிடம் மாட்டிக் கொண்டாய்? என்று கேட்டான்.

அதற்கு பா யஸீத் {ரஹ்} அவர்கள்நான் இன்ன நோக்கத்துக்காக பக்தாத் பயணப்பட்டேன். என் தாயார் வழியனுப்புகிற போதுஎன் வாழ்வில் நான் எந்த நிலையிலும்  யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கி விட்டார்கள்.

என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்குப் பிரமாணத்தை முறித்து விடக்கூடாது என் நான் எண்ணினேன். ஆதலால் தான் நான் உண்மையைக் கூறினேன்என்றார்கள்.

அதைக் கேட்ட தலைவன்லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி.. உன் தாயாருக்குச் செய்த ஒப்பந்தத்தை முறிக்க நீ பயப்படுகின்றாய்? ஆனால், நாங்களோ அல்லாஹ்விடம் கொடுத்த பிரமாணத்தைப் பற்றி பயப்படாமல் இருக்கின்றோமே? அல்லாஹ்விற்கு கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்து விட்டோமே?  என்று கூறினான்.

பின்னர், தம் தோழர்களிடம்  கொள்ளையடித்த அத்துணை பொருட்களையும் அவரவர்களிடம் சென்று கொடுத்து விட்டு வாருங்கள்என்று கட்டளையிட்டான்.

! சிறுவனே! இப்போதே நான் அல்லாஹ்விடம் தவ்பா செய்து இந்த அழுக்காற்றிலிருந்து நான் தூய்மையாகின்றேன்என்றான்.

அப்போது அக்கொள்ளைக் கூட்டத்தில் ஒருவர்கொள்ளையடிப் பதில் எங்களுக்கு நீர் தான் தலைவர்! தவறிலிருந்து தவ்பாச் செய்வதிலும் நீர் தான் எங்களுக்கு தலைவர்! இதோ நாம் அனைவருமே அல்லாஹ்விடம் இந்த இழி பாவத்திலிருந்து மீள்வதற்கு தவ்பாச் செய்வோம்என்றார்.

அவர்களின் தவ்பாவும் அழகானது. அவர்களின் வாழ்க்கையும் அழகானது. அத்துனை பேரும் நல்லோர்களாக மாறினர்.

     (நூல்: அல்ஃப கிஸ்ஸ மினஸ் ஸாலிஹீன்,பாகம்:1,பக்கம்:284)

ஒருவர் பா யஸீதுல் பிஸ்தாமி {ரஹ்} அவர்களிடம் நீங்கள்பற்றற்றத் தன்மையை யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டார்.

நான் இந்த பக்தாத் நகரின் வீதியில் சுற்றித் திரியும் ஓர் வாலிபனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்றார்கள்.

இதைக் கேட்ட அவர் ஆச்சர்யமாக எப்படி? எனக் கேட்டார். அதற்கு பிஸ்தாமி {ரஹ்} “ஒரு நாள் ஒரு வாலிபர் என்னிடம் வந்து துறவறம் என்றால் என்ன? என்று கேட்டார்.

அல்லாஹ் நமக்கு அளித்தவைக்கு நன்றி செலுத்துவதும், நமக்கு வழங்காதவைகளுக்காக பொறுமையாய் இருப்பதும் தான் துறவறம்என்றேன்.
அதற்கு சட்டென அந்த வாலிபர்இந்த குணம் தான் பல்ஃக் வீதியில் சுற்றித்திரியும் நாய்க்கு கூட இருக்கின்றதேஎன்றார்.

அப்படியென்றால், துறவறம் என்றால் என்ன? என்று அந்த வாலிபரிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவ்வாலிபர்அல்லாஹ் நமக்கு வழங்காத அருட் கொடைகளுக்காக நன்றி செலுத்துவதும், அல்லாஹ் நமக்கு வழங்கிய வற்றை பிறருக்கு ஈந்து வாழ்வதும் தான் துறவறம்என்றார்.

(நூல்: அல் அவ்லியா லி இப்னு அபித்துன்யா, அஷ் ஷாஃபிஇய்யா லிஸ் ஸுப்கீ)

2.அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்களை மாற்றிய கனவு.

இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “என் ஆசிரியர் அஹ்மத் ஹஸன் அல் பாக்கூரி {ரஹ்} அவர்கள் என்னை அவசரமாக கூப்பிட்டழைத்ததாக ஒருவர் என்னிடம் சொன்னார்.

நான் அவர்களைக் காண அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் படுக்கையில் படுத்திருந்த அவர்கள் வேக வேகமாக எழுந்தார்கள். அழைத்த காரியம் மிகவும் அவசியமாக இருக்கும் எனக் கருதினேன்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயம் குறித்து பேசுவதற்காகத்தான் உம்மை நான் அழைத்துள்ளேன். நானே உம்மிடம் வரலாமென்று தான் நினைத்தேன். ஆனால், என் உடல் ஒத்துழைக்க வில்லை.என்றார்கள்.

பின்பு, என்னிடம்உமக்கும் அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கும்என்ன பிரச்சனை? எனக் கேட்டார்கள்.

அதற்கு நான்நான்  அம்ருப்னுல் ஆஸ் {ரலி} –மஸ்ஜிதின் ஃகதீப் அவ்வளவு தான் வேறொன்றும் எங்களுக்குள் இல்லைஎன்றேன்.

நான் அதைக் கேட்க வில்லை, அது தான் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியுமே? என்றார்கள்.

பின்ன வேறெதைப் பற்றிக் கேட்கின்றீர்கள்? என்றேன்.

நான் கனவில் கண்டதை அப்படியே கூறுகின்றேன். நீர் விளக்கம் சொல்லும் என்றார்கள்.

பின்பு கூறினார்கள்: “ கனவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். வாசலின் கதவை யாரோ தட்டுவது போல் உணர்ந்தேன். எழுந்து சென்று யார் என்று வினவினேன்.

 அதற்கு ஆட்சியாளர் வந்திருக்கின்றேன். என பதில் வந்தது. நான் வந்திருக்கும் ஆட்சியாளர் யார்? என்று கேட்டேன்.

அதற்கு கதவிற்கு அப்பாலிருந்துநான் தான் அம்ருப்னுல் ஆஸ் நாயகத்தோழர்என பதில் வந்தது.

கதவைத் திறந்தேன்! நபித்தோழர் ஒருவரின் வருகையால் நான் மெய்சிலிர்த்துப் போனேன்! அவர்களின் வருகையால் என் சரீரத்தில் நீண்ட நாட்களாய் பீடித்திருந்த நோய் நீங்கியது போன்று உணர்ந்தேன்.

இப்போது நீர் அமர்ந்திருக்கும் அதே இடத்தில் தான் அவர்களும் அமர்ந்திருந்தார்கள். “என் மீது உங்களின் மாணவர் கஸ்ஸாலி நீண்ட காலமாய் கொண்டிருக்கின்ற பகைமையுணர்வை நான் மன்னித்து விட்டதாக நீங்கள் கூறிவிடுங்கள்; ஏனென்றால், அவர் என் மஸ்ஜிதை மார்க்க அறிவால் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

 மேலும், இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட நான்கு இறையில்லங்களில் என் மஸ்ஜிதும் ஒன்றாகும். அங்கு தான் ரோமானியர்களை வெற்றி கொண்ட வெற்றியாளர்கள் ஒன்றினைந்தோம்.

மிஸ்ரில் இஸ்லாமிய தீபத்தை அங்கிருந்து தான் ஏற்றி வைத்தோம்.” என்று பேசி முடித்த அம்ர் {ரலி} அவர்கள் விடை பெற்று செல்வதை உணர்ந்த போது, பாங்கு சொல்லும் சப்தத்தை கேட்டேன்.

கண்விழித்துப் பார்த்த போது உண்மையில் முஅத்தின் பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார். எழுந்து உளூ செய்து பள்ளிக்குச் சென்றேன். தொழுதேன்.

உம்மை அழைத்து நீர் இங்கு வரும் வரை என்னால் சரியாக அமரக் கூட முடியவில்லை.

சரி இது தான் நடந்தது. உம்மிடம் சொல்லச் சொன்னதை நான் சொல்லி விட்டேன். பின்பு உமது விருப்பம் என்றார்கள்.

அங்கிருந்து விடை பெற்று நான் மஸ்ஜிதை நோக்கி விரைந்தேன். அந்தக் கனவை கேட்டதிலிருந்து என் மீது ஏதோ இடி விழுந்ததைப் போன்று எண்ணத் தோன்றியது.

என்னை வெறுத்தவனாக நான் நடந்து கொண்டு பள்ளியை நோக்கிச் சென்றேன். என் சிந்தை முழுக்க அது தான் ஆக்கிரமித்து இருந்தது. அம்ரு {ரலி} அவர்கள் குறித்து நான் கொண்டிருந்த மன முரண் இப்போது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஏனெனில், நான் அலீ {ரலி} அவர்களுக்கு எதிராக போர் புரிந்தவர்களை வெறுத்தேன்.

ஆனால், இப்போதோ இந்தக் கனவின் மூலம் நான் அம்ரு {ரலி} அவர்கள் குறித்து எண்ணியது எவ்வளவு மாபெரும் குற்றம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஒரு நபித்தோழர் மீது, அதுவும் அவருக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒன்றின் மீது நான் கொண்டிருந்த தவறான அபிப்பிராயத்திற்காக மனம் வருந்தினேன். அதற்காக அழுது புரண்டு தவ்பாச் செய்தேன்.

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களையும், அவர்களின் தகுதியையும் நான் விளங்கிக் கொண்டேன். அவரும், அவர்களுக்கு உதவியாக முஸ்லிம்களும் இல்லையென்றால் நிச்சயமாக, சத்தியமாக இந்த மிஸ்ரில் இஸ்லாம் பரவியே இருக்காது. நானும் முஸ்லிமாக இருந்திருக்க மாட்டேன். என்று நான் விளங்கிக் கொண்டேன்.

பின்னர் நபித்தோழர்கள் குறித்து வேறெதுவும் நான் ஒரு போதும் அபிப்பிராய பேதம் கொள்ளப் போவதில்லைஎன்று தீர்மானமாக உறுதி எடுத்துக் கொண்டேன்.

                (நூல்: ஸுஹ்பதுஸ் ஸஹாபா, பக்கம்:92,93,94,95.)

3.அல்லாஹ்வின் உதவியில் நனைந்த அபூ முஸ்லிமுல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் {ரஹ்} என்பது அவர்களின் இயற்பேராகும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனாலும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

நபிகளாரின் பரிசுத்த வாழ்வின் கடைசிக் காலத்திலே எமன் தேசத்தில் “அஸ்வத் அனஸீ” என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். தான் நபி என்ற பொய்யை மக்களிடம் திணித்து ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தித்தான்.

மக்களில் பலரும் அவன் பின்னால் அணிவகுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

இந்நேரத்தில், அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களின் ஈமானை அறிந்து கொண்ட அஸ்வத் அனஸீ, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு தூது விட்டான். ஆனால், அவர்கள் மறுத்து விட்டார்கள்.

ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க விரும்பிய அவன், நேராக அவரைச் சந்தித்து “நீ முஹம்மது {ஸல்} அவர்களை நபி என்று ஈமான் கொண்டிருக்கின்றாயா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் ஆம்! என்று பதில் கூறினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வத் அனஸீ மாபெரும் நெருப்புக் குண்டத்தை தயார் செய்து, நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் வீசியது போன்று அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டு விட்டான்.

ஆனால், அல்லாஹ் நெருப்பை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பூஞ்சோலையாக மாற்றியது போன்று, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களுக்கும் மாற்றிக் கொடுத்தான்.

அதிலிருந்து மிகச் சாதாரணமாக, சுகமாக வெளியே வந்ததைப் பார்த்த அஸ்வத் அனஸீயும், அவனை ஏற்றுக் கொண்ட மடையர்களும் திக்கித்துப் போய் நின்றனர்.

அவனின் நெருங்கிய தோழர்கள், ”அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நாடு கடத்திட வேண்டும். இல்லையென்றால், உம் பின்னால் இருக்கிற இந்தக் கூட்டம் உன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இருந்து தடம்புரண்டு அவரின் பின்னால் செல்ல ஆரம்பித்து விடுவர்.” என்று ஆலோசனை வழங்கினார்கள்.

எமனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். எனவே, எமனிலிருந்து வெளியானால் அடைக்கலம் புகும் இடம் அது மதீனாவாகத்தான் இருக்க வேண்டும். அங்கே தான், அண்ணலாரும் அவர் தம் அருமைத் தோழர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, எமனிலிருந்து மதீனா நோக்கி பயணம் மேற்கொண்டார் அபூ முஸ்லிம் அல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.

மதீனாவின் எல்லையை அவர் அடைகிற போது, அவர் தம் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் உதயமானதாக உணர்ந்தார்.

ஆனால், மதீனாவின் ஊருக்குள் நுழைந்த பின்னர் தான் அவருக்கு தெரிந்தது “நபித்துவத்தின் அத்தியாயம் அஸ்தமனமாகி விட்டது” என்று.

ஆம்! அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தை விட்டும் பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது அவர் தம் அருமைத் தோழர் அபூ பக்ர் {ரலி} அவர்கள் முஃமினீன்களின் தலைவராக அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று.

நேராக மஸ்ஜிதுன் நபவீயின் அருகே தங்களது ஒட்டகத்தை அமர வைத்து விட்டு, உளூ செய்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று தொழ ஆரம்பித்து விட்டார்கள்.

தம்மை படைத்த இறைவனோடு நீண்ட நேரம் உரையாடி விட்டு தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.
அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் உள்ளே நுழந்ததிலிருந்து அவர் தொழுது முடிக்கும் வரையிலான அத்தனையையும் பார்த்துக் கொண்டு அங்கே தான் உமர் {ரலி} அவர்களும் இருந்தார்கள்.

தொழுது முடித்ததும், நேராக அவருக்கு அருகாமையில் வந்த உமர் {ரலி} அவர்கள் “தோழரே! எங்கிருந்து வருகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “நான் எமனிலிருந்து வருகின்றேன்” என்றார்கள்.

தங்களின் வரவு நல்வரவாகட்டும்! அல்லாஹ்வின் விரோதி அஸ்வத் அனஸீ என்பவன் நம்முடைய நண்பர் ஒருவரை நெருப்பில் போட்டானாம்! அல்லாஹ் அவரை நெருப்பின் தீங்கிலிருந்து பாதுகாத்து விட்டான். ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார்? அவன் அவரை என்ன செய்தான்? இது குறித்து நீங்கள் ஏதும் அறிவீர்களா?” என்று உமர் {ரலி} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் அமைதியாக “அவரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் என்பதாகும்” என்றார்கள்.

அதற்குள் ஏதோ உமர் {ரலி} அவர்களின் மனதினுள் தோன்ற “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! சொல்லுங்கள்! நீங்கள் தானே அந்த எங்களின் நண்பர்!?” என்று கேட்டார்கள்.

ஆம்! என்று ஆராவாரம் இன்றி இன்முகத்துடன் பதில் கூறினார்கள்.

இதனைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்த உமர் {ரலி} அவர்கள் அபூ முஸ்லிம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.

பின்பு அவர்களை நேராக அபூ பக்ர் {ரலி} அவர்களிடம் அழைத்துச் சென்று, அவர் குறித்த அறிமுகத்தைக் கூறி அபூ பக்ர் {ரலி} அவர்களின் முன்னால் அமர வைத்தார்கள்.
“தனது நேசர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நடந்து கொண்டது போன்று முஹம்மத் {ஸல்} அவர்களின் உம்மத்தில் ஒருவருடன் நடந்து காட்டிய ஒருவரை என் வாழ்நாளிலேயே சந்திக்கும் நற்பேற்றினை வழங்கிய எல்லாம் வல்ல ஏகனாம் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!” என கண்ணீர் மல்க கூறினார்கள் அபூ பக்ர் ஸித்தீக் {ரலி} அவர்கள்.

(நூல்: தாரீக் லி இப்னி அஸாக்கிர், பாகம்:7, பக்கம்:315. ஸியர் அஃலா மின் நுபலா, பாகம்:4, பக்கம்:12. ஹில்யா, 5/129.)

எனவே, இறைநேசர்களின் வாழ்வை படிப்பவர்கள், வரலாற்றை வாசிப்பவர்களை அல்லாஹ் அறிவுடையோருக்கான, சிந்தனா சக்தி கொண்டோருக்கான அடையாளமாக கூறியிருக்கின்றான்.

எப்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் வாழ்வை அல்லாஹ் முன்மாதிரி என்று வருணிக்கின்றானோ, அது போன்றே அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம், ஃபிர்அவ்னின் மனைவி அன்னை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வாழ்வை யுக நாள் முடிவு வரை வரும் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரியான ஓர் வாழ்வாக நாம் அமைத்திருக்கின்றோம். (பார்க்க: அல்குர்ஆன்:66:11-12) என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த உயர்வான அந்தஸ்தை அவர்கள் அடையப் பெற்றது அவர்கள் கொண்டிருந்த இறை நேசத்தால் தானே!

ஏதோ வலிமார்களின் பெயரால், இந்த உம்மத்தில் சிலரால் மேற்கொள்ளப் படுகிற தவறான செய்கைகளால், நூதன கிரியைகளால் அனாச்சாரங்களால் ஒட்டு மொத்த இஸ்லாமிய வழிகாட்டுதலையும் புறக்கணிப்பது ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்திற்கு நல்லதல்ல.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற அனாச்சாரங்களை களைந்து, இறைநேசர்களை நினைவு கூர்வதும், அவர்களின் வாழ்க்கையை, வரலாற்றை வாசிப்பதும் நேசிப்பதும் வல்லோனாம் அல்லாஹ்வின் வழியென்றும், வழிகாட்டியாம் மாநபி {ஸல்} அவர்களின் நெறியென்றும் இந்த உம்மத்திடம் உரக்கக் கூறிடும் பொன்னான தருணம் இது!

இறைநேசர்களை நேசிக்கின்ற, நினைவு கூறுகின்ற, அவர்களின்  வாழ்க்கையை வாசிக்கின்ற நல்லோர்களில் ஒருவராக, உங்களையும், என்னையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!

“எங்களின் இறைவா! எங்களையும் எங்களை விட முந்தி நம்பிக்கை கொண்டுவிட்ட எங்கள் (முன்னோர்களையும்) சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் இதயங்களில் அவர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் ஏற்படுத்தாதே!”.

”எங்களின் அதிபதியே! நிச்சயமாக! நீ மிகவும் பரிவோடும், பெரும் கிருபையோடும் நடக்கக் கூடியவனாய் இருக்கின்றாய்!”.
                                             (அல்குர்ஆன்:59:10)

                   வஸ்ஸலாம்!          

 




 
    

5 comments:

  1. படித்த போதும் படித்ததற்குப் பிறகும் சுவை மாறா சிந்தனையாய் சூப்பர் கட்டுரை.

    ReplyDelete
  2. படித்த போதும் படித்ததற்குப் பிறகும் சுவை மாறா சிந்தனையாய் சூப்பர் கட்டுரை.

    ReplyDelete
  3. படித்த போதும் படித்ததற்குப் பிறகும் சுவை மாறா சிந்தனையாய் சூப்பர் கட்டுரை.

    ReplyDelete
  4. Alhamthulilah alhamthulilah allah kirubai seivanaha yanakum ulahathill valum muminhalukum Muslimhalukum

    ReplyDelete