நவீன பிரச்சனைகளும்…
இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்…
இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்…
நாம் வாழ்வது அறிவியல்
தொழில் நுட்பம் நிறைந்திருக்கின்ற காலம்.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால்
மனித சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவற்றின் வரவால் மானுட
சமுதாயத்தின் வாழ்வியல் முறையில், வாழ்க்கையில் மிகப்பெரிய
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
எப்பொழுதெல்லாம் வளர்ச்சியை
நோக்கி இந்த மானுட சமுதாயம் முன்னேறிச்செல்கிறதோ….
எப்பொழுதெல்லாம் மாற்றங்களை
நோக்கி இந்த மனித சமூகம் பயணிக்க தொடங்குகின்றதோ….
அப்பொழுதெல்லாம் காலத்தின்
சுழற்சியில் பல்வேறு நவீன பிரச்சனைகளை அது எதிர்கொள்கிறது.
எளிதில் மீண்டுவிடவும், வேகமாக அப்பிரச்சனைககளிலிருந்து வெளியேறிவிடவும் துடிக்கின்றது.
வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை
வெளிக்கொணர்கிற மனித அறிவால், அன்றாடம் தாம் சந்திக்கின்ற
பிரச்சனைகளிலிருந்து வெளியேறிடும் தீர்வுகளை கண்டுபிடிக்க இயலவில்லை.
தீர்வுகளை நோக்கிய
தேடலில் மனித சமூகம் அலைந்து கொண்டுதானிருக்கிறது.
எக்காலத்திலும் பிரச்சனைகளிலிருந்து
வெளியேறுவதற்கான தீர்வுகளின் தீர்க்கமான அறிவினை மனித சமூகத்தினால் பெற்றுக் கொள்ள
முடிவதில்லை.
இது தான் மானுட வரலாறு முழுவதிலும்
காணப்படுகிற மறுக்கமுடியாத உண்மை.
உலகில் எவராலும், எந்தவொரு மதத்தாலும் சொல்ல முடியாத தீர்வுகளையெல்லாம் இஸ்லாம்
மாத்திரமே மனித சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மனித சமூகத்தின் துவக்க
காலத்திலிருந்தே இந்த அரிய பணிகளை இஸ்லாம் மேற்கொண்டுள்ளதாக, மனித சமூகம் சந்தித்த பல பிரச்சனைகளில் தீர்வுகளை வழங்கியதாக அல்குர்ஆன்
எண்ணற்ற பல எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகிறது.
ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் இரண்டு மகன்களில் ஹாபீல் என்பவரை, காபீல் என்பவன்
பொறாமையால் கொலை செய்து விடுகின்றான். இது குறித்து அல்குர்ஆனின்
(5:26-29) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
பின்பு செய்வதறியாது
திகைத்து நின்றபோது, அல்லாஹ் காகத்தை அனுப்பி இறந்த மனித உடலை அடக்கம்
செய்வதெப்படி என வழி காட்டினான்.
ஏனெனில், அது
தான் முதன் முதலில் பூமியில் விழுந்த பிரேதம். காகத்தின் இச்செயலைக்
கண்ட காபீல் “அந்தோ என் துயரமே! இந்தக்
காகத்தைப் போன்று கூட நான் இல்லையே! (அவ்வாறு நான் இருந்திருந்தால்)
என்னுடைய சகோதரனுடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே!”
என அழுது புலம்பியதாக அல்லாஹ் (5:30) வசனத்தில்
குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் மனித சமூகத்திற்கு
நேர்வழிகாட்ட அனுப்பிவைத்த அத்துணை தூதர்களையும் ஏகத்துவ செய்திகளோடு, அன்றாடம் அந்த மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கான தீர்வையும்
கொடுத்தே அனுப்பினான்.
துல்கர்னைன் எனும்
இறைநேசர் குறித்த வரலாற்றை அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது, “பிரச்சனைகளோடு வாழ்ந்து வந்த மூன்று சமூக மக்களின் வாழ்க்கையில்
முக்கியமான, தீர்க்கமான தீர்வுகளை துல்கர்னைன் {அலை} மூலமாக வழங்கியதாக” குறிப்பிடுகின்றான்.
(பார்க்க:
அல்குர்ஆன்: 18: 84 – 98)
ஆக, மனித சமூகம் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே பிரச்சனைகளும் அவனைத்
தொடர ஆரம்பித்துவிட்டது.
தீர்வுகளை தேடத் துவங்கியதிலிருந்து
அனைத்துக் காலங்களிலும் அல்லாஹ் தான் இந்த மனித சமூகத்திற்கு தீர்வுகளை வழங்கி கௌரவித்துக்
கொண்டிருக்கின்றான்.
இந்த உலகம் அழியும்
நாள் வரை மனித சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற, சந்திக்கவிருக்கின்ற
அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுகளும் அவன் வசமே உள்ளது.
அவனுடைய கட்டளை, அவன் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களின் வழிகாட்டலால் அமைந்திருக்கின்ற இஸ்லாத்தின் மூலம் தான் நாம் வாழ்கிற
இந்த நவீன காலத்தைய பிரச்சனைகளின் தீர்வுகளை அடைந்து கொள்ள முடியும்.
நவீன பிரச்சனை – 1
கர்நாடக மாநிலம் பெல்காமைச்
சேர்ந்தவர் பிரவீன் இவரது மனைவி சவீதா இருவரும் அயர்லாந்தில் பணிபுரிந்தனர்.
கடந்த 21.10.2012, அன்று அயர்லாந்தின் பிரபல கால்வே மருத்துவமனையில் கருச்சிதைவு
காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
பல் மருத்துவரான சவீதா
தனது நான்கு மாத சிசு கருவிலேயே சிதைந்து போன நிலையில் இருப்பதை ஸ்கேனிங் மூலம் அறிந்து
கொண்டார்.
அது தமது உயிருக்கு
ஆபத்தை விளைவிக்கும் என்பதை மருத்துவராக இருப்பதால் உணர்ந்து கொண்ட அவர், மருத்துவமனை நிர்வாகத்திற்கு “கருவை கலைத்து
விடும்படி” விண்ணப்பித்தார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் கருக்கலைப்புச் செய்ய மறுத்து விட்டது.
மன்றாடினார், மருகினார் மருத்துவமனை நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
அயர்லாந்து ஒரு கத்தோலிக்க
கிறிஸ்தவ நாடு. கருக்கலைப்புக்கு சட்டத்தில் இடமில்லை எனக்
கூறி மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்து விட்டது.
இறுதியில், 27.10.2012, அன்று அவர் இறந்து விட்டார். கருவை அகற்றவில்லை என்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் சட்டவிரோதம்
என்று ஒற்றை வார்த்தையைக் கூறி ஓர் உயிரை பறித்து விட்டனர்.
வழக்கமாக மீடியாக்கள்
{BIAS} எனும் ஒரு பக்க சார்புடன்
நடந்து கொண்டன. இது போன்றதொரு செயல் இஸ்லாமிய நாட்டில் நடைபெற்றிருக்கு
மேயானால், இஸ்லாமிய பழமைவாதம்; இஸ்லாமிய
அடிப்படைவாதம் எனக் கூக்குரலிட்டிருப்பனர்.
மனித நேயத்திற்கு விரோதமானவர்களாக
இஸ்லாமியர்களும், ஷரீஆவின் சட்டங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கும்.
(இஸ்லாத்தின் நிலைப்பாடு இதுவல்லவே அதனால் மௌனமாகி விட்டிருந்தனர்)
ஆனால், அத்துணை மீடியாக்களும், ஊடகத்துறையினரும் வாய்மூடி, அதிக எதிர்ப்புக் காட்டாமல்
அப்படியே அடங்கிப்போயிருந்தனர்.
ஏற்கனவே சிதைந்து போயிருக்கின்ற
சிசுவைக்காட்டிலும், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற தாயைக் காப்பாற்றுவது
அவசியமா? இல்லையா? எனும் கேள்வி எழுவதும்,
இதே நிலை இறை நம்பிக்கையாளனான ஓர் முஸ்லிமுக்கு ஏற்பட்டால் அவனுக்கான
தீர்வு என்ன? இஸ்லாமிய வழிகாட்டல் என்ன? என்பதைக் காண நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.
நவீன பிரச்சனை – 2
கடந்த 16.12.2012, அன்று தில்லியின் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர்
6 – பேர் கொண்ட ஒரு கும்பலால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு,
தில்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி
பரிதாபமாக 29.12.2012, அன்று உயிரிழந்தார்.
அதன் பிறகு எழுந்த
வாதப் பிரதிவாதங்களையும், தேச மக்கள் கொதித்து எழுந்ததையும், அரசியல்வாதிகளின் நாடகங்களையும், சட்ட மேதைகளின் தடுமாற்றங்களையும்
நாம் ஓரளவு ஊடகத்தின் வாயிலாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
பாலியல் பலாத்கார குற்றத்திற்கு
இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென சகோதர சமய மக்களும்
அந்த தருணத்தில் முன் வைத்தது நமக்கெல்லாம் தெரிந்த செய்திதான்.
நவீன காலத்தைய நவீனமான
இவ்விரண்டு பிரச்சனைகளிலும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளென்ன?
தீர்வு – 1
புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த்
குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.
வந்த அந்தப் பெண்மணி
அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி
விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து
நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது,
அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு
மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து
கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமுற்றுள்ளேன்” என்று கூறினார்.
நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்றார்.
அப்படியானால் உமது
வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
குழந்தையை பெற்றெடுத்த
பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம்
வந்து “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று
கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ
சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட
பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அமுதூட்டும் காலம்
நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன்.
இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டது” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை
அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதன் பின்னர்
அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு
குழி தோண்டப்பட்டது.
பின்னர்
அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு
கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.
அப்போது, காலித்
இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள்.
பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது, காலித்
இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள். இதை அருகில்
நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம்
உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத்
தேடிக்கொண்டார்.
பொது நிதியை மோசடி
செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு
வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.
பிறகு
அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.
அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும்
செய்யப்பட்டார்.
(நூல்:
முஸ்லிம்,பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, மிஷ்காத்,கிதாபுல் ஹுதூத்,
பக்கம்:310)
குற்றவியல்
தண்டனைக்குரிய ஓர் தவறைச் செய்து விட்ட, ஒரு பெண் தானாக முன் வந்து குற்றத்தை
ஒப்புக்கொண்டு தண்டனை வழங்குமாறு வேண்டி நின்றபோது...
கருவுக்குள்
இருக்கும் சிசுவுக்கும் அப்பெண் செய்த குற்றத்திற்கும், தண்டனைக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்திருந்த நபி {ஸல்} அவர்கள், மூன்று முறை தவணை
வழங்கி தண்டனை வழங்குவதை தாமதப்படுத்தி, ஓர் உயிர் அநியாயமாக இறந்து விடக் கூடாது
என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.
இஸ்லாத்தைப்
பொருத்தவரையில் வேண்டுமென்றே ஓர் சிசுவை கொலை செய்வதும், சிசுவை கருவில்
அழிப்பதும், வறுமைக்குப் பயந்து சிசுக்கொலை செய்வதையும் தான் தடுத்துள்ளது.
அது பெரும்
பாவமென்றும், மறுமையில் மன்னிக்கப்பட முடியாத குற்றம் எனவும், விசாரணை மன்றத்தில்
முதல் கேள்வியாக தொக்கி நிற்கும் எனவும் அல்குர்ஆனின் மூலம் எச்சரிக்கின்றது.
ஆனால், சிசுவின்
கருவமைப்பே தாயின் உயிரை பறித்துவிடும் என அஞ்சுகிற இது போன்ற தருணங்களில்
“நிர்பந்தத்தின் சட்ட அமைப்பை பயன்படுத்த இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.
அல்லாஹ்
கூறுகின்றான்: “கட்டாய (நிர்பந்த) ச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ்
உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்கியிருக்கின்றான்.”
(அல்குர்ஆன்:6:119)
அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் என் உம்மத் – சமுதாயத்தினர் ஒன்றும் அறியாமலோ,
மறதியாகவோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ செய்கிற
செயல்களுக்காக குற்றம் பிடிப்பதில்லை.”
(நூல்:
இப்னுமாஜா, ஹதீஸ் எண்:4050)
தீர்வு – 2
இந்திய தண்டனைச் சட்டம்
பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு
ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு
ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.
பாலியல் பலாத்காரத்தால்
ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு
“இந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில்
ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ,
அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.
(நூல்:
முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச்
சட்டம், தீங்கியல் சட்டம். இந்த நூற்கள்
வழக்கறிஞர்களிடம் இருக்கும்)
நீதிமன்றத்தின் படியேறி
இந்தக் குற்றத்தை நிரூபிக்கும் முன்னமே சட்டத்தின் ஓட்டைகளை கற்றறிந்த கயவர்கள், காமக் கொடூரர்களை ஜாமீனிலோ அல்லது நிரபராதி என நிரூபித்தோ வெளியில்
கொண்டு வந்து விடுவார்கள்.
ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று,
சவூதியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதியாவின் ஆட்சியாளர்கள், அரசு
அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடி
“பாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்?
என்று ஆலோசனை நடத்தினார்கள்.
இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின்
படி “பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாக” அதிக பட்ச தண்டணையாக மரணதண்டனையை தீர்மானித்து, அதை அன்றைய
தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வா – மார்க்கத்தீர்ப்பு
வழங்கினார்கள்.
அந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அந்தச் சட்டம்
தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ,
மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக
முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:
அவர்கள் கொல்லப்பட
வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்;
அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்;
அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.
இது அவர்களுக்கு உலகில்
கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும்.
மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான
தண்டனை இருக்கின்றது.” (அல்குர்ஆன்:5:33)
ஒரு பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய
காரணமான வனாகவும் ஆகிவிடுகின்றான்.
மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனை “ஒரு மனிதனின் உயிர், மானம், பொருள்
ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்கள் விஷயத்திலும் வழங்கலாம்.
என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்:
அல் – மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75.)
நவீன பிரச்சனை – 3
அருணா ஷம்பக் 1966-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிற,
மும்பையில் உள்ள பிரபல்யமான “கிங் எட்வர்ட் மெமோரியல்”
எனும் மருத்துவமனயில் நர்ஸாக பணியில் சேர்ந்த அழகிய இளம்பெண்.
1973-ஆம் ஆண்டு
நவம்பர் 27-ஆம் தேதி மாலை நேரத்தில் அதே மருத்துவமனையில் தற்காலிக
துப்புரவு பணியாளராக பணியாற்றிய “சோகன்லால் பார்த வால்மீகி”
என்பவனால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, நாய்கட்டும் சங்கிலியால் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டு, மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் குழல்கள் சிதறடிக்கப்பட்டு, கண்பார்வை இழக்கப்பட்டு, கை கால்கள் இழுத்து,
சுயநினைவை இழந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் பணிபுரிந்த அதே மருத்துவமனையின்
அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு
வயது 25. நவம்பர் 29-ஆம் தேதிதான் இந்த
செய்தி பத்திரிக்ககளின் வாயிலாக நாட்டுமக்களின் கவனத்திற்கு வந்தது.
பிங்கி விராணி எனும்
ஓர் எழுத்தாளர் 2009-ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்திலே வழக்கு
ஒன்றை தொடுக்கின்றார்.
அதில், 1973-ஆம் ஆண்டிலிருந்து அருணா ஷம்பக் 2009 (தற்போது) வரை கிட்டத்தட்ட 36- ஆண்டுகளாய்
தான் எந்த மருத்துவமனையில் நர்ஸாக பணியில் சேர்ந்தாரோ அதே மருத்துவமனையில் ஒரு அறையில்
சுயநினைவின்றி கோமாவில் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.
இந்த இழிசெயலில் ஈடுபட்ட “சோகன்லால் பார்த வால்மீகி” என்பவனோ நீதிமன்றத்தால்
6 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றுவிட்டான்.
அருகில் இருந்து பார்க்க
வேண்டிய அருணாவின் குடும்பமோ, இவள் என் பிள்ளையே இல்லை
என கைவிரித்து விட்டனர். நீதிமன்ற ஆணையின் படி மருத்துவமனை நிர்வாகம்
அருணாவை கவனித்து வருகின்றது.
கண்பார்வை இன்றி, சுயநினைவை இழந்து ஒருகட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்திவரும்
இந்த பரிதாப நிலையிலிருந்து ஒரு மோட்சத்தை வழங்கும் விதமாக அருணா ஷம்பக்கை
“கருணைக் கொலை” செய்ய அனுமதிக்க வேண்டும் என்று
வழக்கு தொடர்ந்தார்.
(உலகளவில் கருணைக்
கொலைக்கு பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து
ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே அனுமதி உள்ளது.
ஆக்ஸிஜனை நிறுத்தியோ
அல்லது விஷ ஊசி போட்டோ இந்தக் கருணை கொலைகளை அரங்கேற்றுகின்றனர்.)
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்
ஆரம்பத்தில் மறுத்த போதும், தொடர்ந்து நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் அது குறித்து
வெளியில் அதிகம் பேசத்தொடங்கியதும், வழக்கு தொடர்ந்த அந்த எழுத்தாளர் மேல்முறையீடு
செய்ததாலும் வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிமன்றம் “கருணைக் கொலையை அனுமதிக்கலாம்”
என தீர்ப்பு வழங்கியதாக 17.12.2009 –ஆம் நாளைய செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தது.
தீர்வு – 3
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்
ஆரோக்கியமான வாழ்வை வல்ல ரஹ்மானிடம் வேண்டுமாறும், தீய, கொடிய நோய்களில் இருந்து அல்லாஹ்விடம்
பாதுகாவல் கோருமாறும், தள்ளாத முதுமை, பிறருக்கு பாரமாகிவிடுகிற வயது முதிர்ச்சி ஆகியவைகளில்
இருந்து காக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் வலியுறுத்துகின்றது.
அப்படி கடுமையான நோயுற்றிருக்கின்ற
ஒருவரை சந்திக்கச் சென்றால் அவருக்காக பிரார்த்திக்குமாறு கூறுகின்ற இஸ்லாம், அவரைப்
பாதித்திருக்கின்ற நோய் போன்றவை தம்மை பாதித்து விடக்கூடாது என கருணையாளன் அல்லாஹ்விடம்
கேட்குமாறு கட்டளையும் பிறப்பித்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
கூறினார்கள்: “நீங்கள் சந்திக்கச் சென்றிருக்கின்ற நோயாளி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை
நீங்கள் உணர்ந்தால் “அல்ஹம்து லில்லாஹில்லதீ, ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹீ, வ ஃபழ்ழளனீ
அலா கஸீரிம் மிம்மன் ஃகலக்க தஃப்ழீலா!”
“இவரைப் பீடித்துள்ள இந்த
நோயில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! அவன் படைத்த
எத்தனையோ படைப்பினங்களை விட என்னை மேன்மை படுத்தி இருக்கின்றான்!”
(நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண்:2430,
மிர்காத் ஷரஹ் மிஷ்காத், பக்கம்:1687.)
இதை நோயாளியின் காது பட ஓதிவிடக்
கூடாது, மனதால் ஓதிக் கொள்ள வேண்டும்.
அப்படியே, ஒருவர் கடுமையான
நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தம் சுற்றம், குடும்பம், என அனைவராலும் கைவிடப்பட்டு
வாழ்க்கை வெறுத்துப்போன நிலையில் இருந்தாலும், அல்லது துன்பங்களும், கஷ்டங்களும் வாட்டி
எடுத்தாலும் ஆக எப்படிப்பட்ட மோசமான ஒரு சூழ்நிலையை ஓர் இறை நம்பிக்கையாளன் சந்தித்தாலும்
ஒருபோதும் அவன் மரணத்தை வேண்டக்கூடாது.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நோயால் தாங்கமுடியாத சிரமம் ஏற்படுமேயானால்
அவர் மரணத்தை விரும்பிக் கேட்க வேண்டாம். அவர் விரும்பினால் இப்படிக் கேட்டுக் கொள்ளட்டும்!
யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை
நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை இவ்வுலகில் உயிர்வாழச் செய்வாயாக! நான் மரணமடைவதுதான்
நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை மரணமடையச் செய்வாயாக!
(நூல்: புகாரி, பாபு தமன்னீ
அல் மரீள அல் மவ்த்த, ஹதீஸ் எண்:5347.)
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “வானத்தில் உள்ளவர்களும்,
பூமியில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரை மாய்ப்பதற்கு முயற்சி
மேற்கொள்வார்களேயானால் நாளை மறுமையில் அல்லாஹ் அவர்கள் அனைவரையும் முகங்குப்புற நரகில்
தூக்கியெறிவான்.”
(நூல்: திர்மிதீ, பாபு அல்
ஹுக்மு ஃபித்திமாஃ, ஹதீஸ் எண்:1398.)
ஓர் உயிரைக் கொலை செய்வது
பெரும்பாவம் என்றும், நியாயமற்ற செயல் எனவும், ஓர் சமுதாயத்தையே கொலை செய்ததற்குச்
சமம் என்றும், நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாவம் என்றும், மறுமையில் இரட்டிப்பு
தண்டனை வழங்கப்படும் குற்றம் என்றும், அது ரஹ்மான் உடைய அடியார்களின் பண்பியல்களில்
கட்டுப்பட்டவையாக இருக்காது எனவும் அல்லாஹ் அல்குர்ஆனில் விமர்சனம் செய்கின்றான்.
(பார்க்க அல்குர்ஆன்:
17:32, 2:84, 25:68, 5:32, 4:92-93,)
கொலையில் நல்ல கொலை, கெட்ட
கொலை, கருணைக் கொலை என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. மூன்றே மூன்று காரணங்களுக்காக
மட்டுமே ஒரு மனிதனின் உயிர் கொல்லப் படுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இவையல்லாத மற்றெல்லா
கொலைகளுமே குற்றவியல் தண்டனைக்குறிய குற்றம் என இஸ்லாம் இயம்புகின்றது.
இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களால்
சில விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறி இருப்பதை இஸ்லாமிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது.
அதில் ஒன்று தான் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டோடு வைத்து முற்றுகையிடப்பட்டு கொல்லப்பட்டது.
முற்றுகையாளர்கள் உஸ்மான்
(ரலி) அவர்களின் வீட்டைச் சுற்றி வளைத்து முற்றிலுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்த அந்த சமயத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையாளர்களை நோக்கி “நீங்கள்
அறிந்திருக்க வில்லையா? நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “முஸ்லிமான ஒரு
மனிதன் இஸ்லாமானதற்குப் பின்னால் மதம் மறிப்போகும் போதும், திருமணம் மாகாத நிலையில்
விபச்சாரம் செய்கிற போதும், அநியாயமாக ஓர் உயிரை கொலை செய்கிற போதும் தவிர, இந்த மூன்று
காரணங்களுக்காகவே தவிர கொலை செய்யப்படக் கூடாது” என்று சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
என்று கூறிவிட்டு…
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நான் ஜாஹிலிய்யாவிலும் சரி, இஸ்லாத்திற்கு வந்த பிறகும் சரி ஒரு போதும் விபச்சாரம்
செய்தது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம்
நான் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்ததிலிருந்து மதம் மாறிப்போகவும் இல்லை.
நான் எந்த ஒரு ஆத்மாவையும்
அநியாயமாகக் கொலை செய்ததும் கிடையாது.
சொல்லுங்கள்! எதற்காக என்னை
கொல்ல வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றீர்கள்!””
(நூல்: திர்மிதீ, பாபு மா
ஜாஅ லா யஹில்லு தமு இம்ரயிம் முஸ்லிமின் இல்லா பி இஹ்தா சலாஸின், ஹதீஸ் எண்: 2158)
எப்போதுமே கிளர்ச்சியாளர்கள்
எதிரில் நிற்பவர்கள் யார் என்பதையோ, அவர்கள் சொல்வதில் எவ்வளவு நியாயம் உள்ளது என்றோ,
ஒரு போதும் சிந்திப்பதில்லை. அங்கேயும் அப்படித்தான் இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களை
மாபாதகர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்ற நிலையில் கொலை செய்து விட்டனர்.
ஆக ஒரு மனிதனுக்கு தன் உயிரை
மாய்த்துக் கொள்வதற்கோ, சிரமமும், கஷ்டமும் படுகின்றார் என்பதற்காக கொலை செய்து விடுவதற்கோ
அணுவளவு கூட அனுமதியோ அதிகாரமோ கிடையாது என ஆணித்தரமாக இஸ்லாம் கூறுகின்றது.
அல்லாஹ் வழங்குகின்ற அனைத்து
நிலைகளையும் பொருந்திப் போவதும், பொறுமையை மேற்கொள்வதும் தான் ஓர் இறை நம்பிக்கையாளனின்
உயரிய பண்பியலாக இஸ்லாம் வரையறுத்து தந்துள்ளது.
எனவே, மனித சமுதாயத்தின் அனைத்து
துறைகளிலும் எழுகின்ற எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும், இறை மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே மிகச் சிறந்த தீர்வுகளை
வழங்கி, மனித சமுதாயத்தின் தேடலுக்கான விடையை தந்து கொண்டிருக்கின்றது என்கிற பேருண்மையை
மனதினில் நிறுத்துவோம்.
மனிதனுக்கும், இந்த மண்ணுக்கும்
ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
அல்லாஹ் நம் அனைவருக்கும்
விளக்கத்தை தருவானாக!
ஆமீன்!! வஸ்ஸலாம்!!!
நவீன இப்னு பதூதாவா நீங்கள். அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மிக அற்புதமான ஆய்வு. அல்ஹம்து லில்லாஹ் இதற்காக நீங்கள் செலவழித்த நேரங்களை அல்லாஹ் கபூல் செய்வானாக. அப்போது ஏற்பட்ட சிரமங்களுக்கு அல்லாஹ் உயர்ந்த கூலியை தருவானாக.
ReplyDelete